பூமி பாரங்கள் --- 5





பூமி பாரங்கள் --- 5
----


     அடுத்து, ஆழ்வார்கள் "பூமி பாரங்கள்" பற்றி அறிவிப்பதை அறிவோம்...

     வாழவேண்டிய முறையின் வாழாதவனும் உண்ணுகின்றான். இதனால் அவனுக்கு மட்டுமே நன்மை. உடல் மட்டும் கொழுக்கின்றது. அறிவு சிறுக்கின்றது. முறை அறிந்து வாழ்பவனும் உண்ணுகின்றான். இவனது உடல் வளர்வதோடு, அறிவும் வளர்கின்றது. நல்லவன் உண்ணும் உணவால் அவனுக்கு மட்டும் அல்லாது பிறருக்கும் நன்மை உண்டாகின்றது.

     அப்படிப் பார்க்கும்போது, யாருக்கும் பயன்படாமல், பூமிக்குப் பாரமாக உள்ள ஒருவன் உடுக்கின்ற உடையும், குடிக்கின்ற நீரும் கூடப் பாவம் செய்தவையோ என்று அச்சப்படுகின்றார் "பெரியாழ்வார்". அவருடைய "திருமொழி"யைப் பார்ப்போம்.

"உரக மெல் அணையான் கையில் உறை
     சங்கம் போல் மட அன்னங்கள்
நிரைகணம் பரந்து ஏறும் செங்
     கமல வயல் திருக்கோட்டியூர்
நரக நாசனை நாவில் கொண்டு அழை
     யாத மானிட சாதியர்
பருகு நீரும் உடுக்கும் கூறையும்
     பாவம் செய்தன தாம் கொலோ?".

     முற்பிறவிகளில் செய்த வினையின் பயனை நுகர்வதற்கு இந்த உடம்பு வருகின்றது. வினைகளை அனுபவிப்பதோடு, வினைகளையும் பெருக்குகின்றோம். விளைவு துன்பமே. துன்பத்தை அனுபவிப்பது நரகம் ஆகும். அந்த நரகத்தை நாசம் செய்வது இறைவன். அதற்கு அவனது திருநாமங்களை வாயாரப் புகழவேண்டும். இறைவனது "பொருள் சேர் புகழைப் புரிந்தார் மாட்டு, இருள்சேர் இருவினை சேராது" என்றார் திருவள்ளுவ நாயனார். நரக நாசனாகிய பெருமாளின் திருநாமங்களை நாவால் அழையாத மானிடர்கள் உடுக்கின்ற உடையும், குடிக்கின்ற நீரும் பாவம் செய்தவையோ என்று ஐயுறுகின்றார் ஆழ்வார்.

     புண்ணியவானிடத்தில் சேரும் உடையும் அவன் குடிக்கின்ற நீரும் புண்ணியம் செய்தவை என்று பொருள்.

     இந்தப் பூமிபாரங்கள் விலங்காகப் பிறக்காமல், மனிதனாகப் பிறந்து, மனிதனானவன் உண்ணுகின்ற சோற்றை உண்ணுகின்றனவே. வேண்டாம், வேண்டாம். அவர்கள் உண்ணும் சோற்றை விலக்கிவிட்டு, அவர்கள் வாயிலே புல்லைத் திணியுங்கள் என்கின்றார் பெரியாழ்வார். அவருடைய திருமொழியைச் சிந்திப்போம்.


"ஆமையின் முதுகு அத்திடைக் குதி
     கொண்டு, தூ மலர் சாடிப் போய்த்
தீமை செய்து இளவாளைகள் விளை
     யாடும் நீர்த் திருக்கோட்டியூர்
நேமி சேர் தடங்கையினானை
     நினைப்பு இலா வலி நெஞ்சு உடைப்
பூமிபாரங்கள் உண்ணும் சோற்றினை
     வாங்கிப் புல்லைத் திணிமினே".

     தொண்டரடிப் பொடி ஆழ்வாரும் இதையே வலியுறுத்திப் பாடினார்.

"வண்டினம் முரலும் சோலை,
     மயிலினம் ஆலும் சோலை,
கொண்டல் மீது அணவும் சோலை,
     குயிலினம் கூவும் சோலை
அண்டர்கோன் அமரும் சோலை,
     அணி திருவரங்கம் என்னா
மிண்டர் பாய்ந்து உண்ணும் சோற்றை
     விலக்கி நாய்க்கு இடுமின் நீரே."

     திருவரங்கத்தின் வண்டுகளின் கூட்டங்கள் சோலைகளில் ரீங்காரம் செய்கின்றன. மயில் கூட்டங்கள் நடனமாடுகின்றன. மேகங்கள் மேலே வந்து அணைந்து நிற்கின்றன. குயில் கூட்டங்கள் ஒன்றை ஒன்று இனிமையான குரலில் கூவி அழைக்கின்றன. தேவாதி தேவனான சர்வேசுவரன் நித்தியவாசம் செய்கிறான். சம்சாரத்திற்கு ஆபரணமாகவுள்ள (இப்படிப்பட்ட பெருமைகளையுடைய) "திருவரங்கம்" என்று வாயால் சொல்லாத, நன்றி இல்லாத மூர்க்கர்கள், மேல் விழுந்து சாப்பிடும் சோற்றை விலக்கி, நீங்கள் நாய்க்குப் போடுங்கள்.

     இறைவன் திருநாமத்தை இடையறாது எண்ணுவோம். பரகதியை அடைவோம்.

பூமி பாரங்கள் --- 4



                                                           பூமி பாரங்கள் --- 4


     அடுத்து, நான்காவதாக, "பூமி பாரம்" என்று யாரை நமக்குக் காட்டுகின்றார் திருவள்ளுவ நாயனார் என்று பார்ப்போம்.

     "நன்றியில் செல்வம்" என்னும் அதிகாரம். அதாவது, ஈட்டியவனுக்கும், பிறர்க்கும் பயன்படாத செல்வத்தை நன்றியில் செல்வம் என்றார் நாயனார்.

     காரணம், "செல்வத்துப் பயனே ஈதல்" என்பது புறநானூறு. "அறமாவது ஈதல். பொருளாவது தீவினை விட்டு ஈட்டல்" என்றார் ஔவையாரும்.

திருக்குறளைக் காண்போம்....

"ஈட்டம் இவறி இசை வேண்டா ஆடவர்
தோற்றம், நிலக்குப் பொறை".

இதன் பொருள் ---

நாம் பிறரை வி, செல்வத்தை நிறையச் சேர்த்து பெரிய செல்வந்தன் ஆவோம் என்று எண்ணி, செல்வத்தைச் சேர்ப்பதிலேயே ஈடுபாடு கொண்டு, புகழை விரும்பாத மக்களின் பிறப்பானது நிலுத்துக்குச் சுமை.

     புகழ் என்பது இம்மைக்கும் மறுமைக்கும் பயன் தருவது. அது ஈட்டிய பொருளை இல்லாதார்க்குத் தந்து உதவுவதால் பெறப்படுவது. பொருளைத் தந்து புகழைப் பெற்று வாழ விரும்பாமல், மற்றவர்களைக் காட்டிலும் அதிகமாகச் செல்வத்தை ஈட்டவேண்டும் என்பதையே குறிக்கோளாகக் கொண்டு பொருள் சேர்த்து, தானும் அனுபவிக்காது, பிறர்க்கும் பயன் தராது வாழ்ந்து மடிந்து போகும் மக்களை பூமி பாரமாகக் காட்டினார் திருவள்ளுவ நாயனார். செல்வத்தை மிகவாகப் பாடுபட்டுச் சேர்த்து வைத்தவர் யாரும் அதை முழுமையாக அனுபவிக்கவில்லை என்பதே உலகியலில் நாம் காணுவது.

     திருக்குறளின் பெருமைகளை விளக்க வந்த "முருகேசர் முதுநெறி வெண்பா" என்னும் நூலில் ஒரு பாடல், இத்திருக்குறளின் பெருமையைப் பின்வருமாறு விளக்கும்.

"மாழ்கிநிதி நல்காநால் வாணிகர்மாண் டார்கடலுள்
மூழ்கிநிதி யோடு முருகேசா - வாழ்வுமிகு
ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்
தோற்றம் நிலக்குப் பொறை".

இதன் பொருள் ---

     முருகேசா - முருகப் பெருமானே, நிதி நல்கா நால் வாணிகர் - திருக்கோயில் திருப்பணிக்கும் பொருளைக் கொடாத நான்கு வாணிகர்களும், கடலுள் நிதியோடு மூழ்கி மாழ்கி மாண்டனர் - கடலுள் செல்வத்தோடு மூழ்கி வருந்தி இறந்தார்கள். வாழ்வு மிக - வாழ்வு மிகுதிப்படுமாறு, ஈட்டம் இவறி - சேர்த்து வைப்பதையே விரும்பிப் பற்றுள்ளம் கொண்டு, இசை வேண்டா ஆடவர் தோற்றம் - புகழை விரும்பாத மக்கள் பிறந்து வாழ்தல், நிலக்குப் பொறை - நிலத்திற்குச் சுமையாகும்.

     திருக்கோயில் திருப்பணிக்கு பொருளைக் கொடாத நான்கு வணிகர்களும் தம்முடைய பொருளோடு கடலிலே மூழ்கி வருந்தி மாண்டார்கள். செல்வம் சேர்த்தலையே விரும்பிப் பற்றுள்ளம் கொண்டு புகழை விரும்பாத மனிதர்களுடைய பிறப்பானது நிலத்திற்குச் சுமையாகும் என்பதாம்.

நான்கு வணிகர்கள் கதை

     யவன நாட்டிலே ஆதித்தபுரத்திலே விச்சுவவசு என்னும் பெயருடைய வணிகன் ஒருவன் இருந்தான். அவனுக்கு நான்கு மக்கள் இருந்தனர். அவர்கள் பொருளைப் பெருக்கிச் சிறப்புடன் வாழ்ந்திருந்தார்கள். ஆதித்தேசுவரர் திருக்கோயில் திருப்பணியின் பொருட்டு ஓர் அந்தணன் அவர்களிடம் பொருள் வேண்டினான். பொருளுதவி செய்வதாகக் கூறி அலையச் செய்தார்களே அன்றிக் கொடுக்கவில்லை. கொடுக்காத தீவினையினால் அவர்கள் கடலில் சென்றபொழுது பெருங்காற்றால் கப்பல் கவிழ்ந்தது. செல்வத்தோடு மூழ்கி இறந்தார்கள். அவர்கள் நிலவுலகிலே வாழ்ந்திருந்தது நிலத்திற்குச் சுமையாக முடிந்தது.

     ஆக இவ்வாறான பூமி பாரங்கள் பிறக்காமல் இருப்பதே அவர்களுக்கும் நல்லது. உலகமக்கள் பிறருக்கும் நல்லது. "தோன்றின் புகழொடு தோன்றுக, அஃது இல்லார், தோன்றலின் தோன்றாமை நன்று" என்று, இதையெல்லாம் தொகுத்து நமக்கு வழங்கினார் திருவள்ளுவ நாயனார்.

     நன்மைக்கு உரிய குணங்கள் இல்லாத ஒருவன் பிறத்தல் தேவையில்லை. பிறந்து விட்டால் நல்லவனாகவே வாழவேண்டும். அப்படிப்பட்டவன் தான் சிறந்த இறை அன்பனாகவும், அடியானாகவும் வாழமுடியும் என்பதைத் திருநாவுக்கரசு நாயனார் பின்வரும் பாடலில் காட்டினார்.

குலம்பொல்லேன், குணம்பொல்லேன், குறியும் பொல்லேன்,
குற்றமே பெரிதுஉடையேன், கோலம் ஆய
நலம்பொல்லேன், நான்பொல்லேன், ஞானி அல்லேன்,
நல்லாரோடு இசைந்திலேன், நடுவே நின்ற
விலங்கு அல்லேன், விலங்கு அல்லாது ஒழிந்தேன் அல்லேன்,
வெறுப்பனவும் மிகப் பெரிதும் பேச வல்லேன்,
இலம் பொல்லேன், இரப்பதே, ஈய மாட்டேன்,
என் செய்வான் தோன்றினேன் ஏழையேனே.

இதன் பொருள் ---

     சார்ந்த கூட்டத்தால் நான் தீயவன் ஆக உள்ளேன்; குணத்தாலும் தீயவனாக உள்ளேன்; குறிக்கோளாலும் தீயாவனாக உள்ளேன். குற்றமாகிய செயலே பெரிது உடையவன் நான்; நலம் பயத்தற்குரிய சிவவேடத்தாலும் தீயவன். எல்லாவற்றாலும் நான் தீயவனே. நான் ஞானியல்லேன்; நல்லவர்களோடு கூடிப் பழகுகின்றவன் இல்லை; பாவச் செயல்களை உடைய மக்கட்கும் அஃதில்லாத பிற உயிர்கட்கும் இடைநிற்கின்ற ஒரு சார் விலங்கும் அல்லேன்; மன வுணர்வு பெற்றும் அம் மன உணர்வால் பயன் கொள்ளாமையின் விலங்கல்லாது ஒழிந்தேனும் அல்லேன்; வெறுக்கத்தக்க பொய் குறளை கடுஞ்சொல் பயனில்சொல் என்பனவற்றையே மிகப் பெரிதும் பேசும் ஆற்றல் உடையவன். பிறப்பாலும் நான் நல்லவன் இல்லை. என்செயலால் அதுவும் பொல்லாதவனாக இகழப்பட்டேன். பிறர்பால் இரப்பதனையே மேற்கொண்டு, என்பால் இரப்பவர்க்கு யாதும் ஈய மாட்டேன். இந்நிலையில் எப்படி வாழ்ந்து ஈடேற வேண்டும் என்ற அறிவு சிறிதளவும் இல்லாத நான் என்ன செய்வதற்காக மனிதனாகத் தோன்றினேன்.

     வள்ளல் பெருமானின் இதே கருத்து அமைந்து திருவருட்பாப் பாடல் ஒன்றையும் இங்கே சிந்தித்தல் நன்மை பயக்கும். திருவருட்பாப் பாடல் இதோ....

குலத்திடையும் கொடியன்,ஒரு குடித்தனத்தும் கொடியேன்,
குறிகளிலும் கொடியன்,அன்றிக் குணங்களிலும் கொடியேன்,
மலத்திடையே புழுத்தசிறு புழுக்களிலும் கடையேன்,
வன்மனத்துப் பெரும்பாவி, வஞ்சநெஞ்சப் புலையேன்,
நலத்திடைஓர் அணுஅளவும் நண்ணுகிலேன், பொல்லா
நாய்க்குநகை தோன்றநின்றேன், பேய்க்கும்மிக இழிந்தேன்,
நிலத்திடைநான் ஏன்பிறந்தேன், நின்கருத்தை அறியேன்,
நிர்க்குணனே நடராஜ நிபுணமணி விளக்கே.

இப்பாடலின் பொருள்....

     நிர்க்குண நடராசப் பெருமானாகிய நிபுண மணியே! குலம் குடித்தனங்களிலும் குறி குணங்களிலும் நேர்மை இல்லாதவனாகிய நான் மலத்தில் புழுக்கும் சிறு புழுக்களினும் கடையவன். வன்மையான மனத்தை உடைய பெரும்பாவி நான். வஞ்சம் நிறைந்த நெஞ்சினை உடைய புலைத் தன்மை கொண்டவன் நான். நன்மை தரும் செயல்களில் சிறிதும் நாட்டம் இல்லாதவன் நான். பொல்லாத நாயும் கண்டு நகைக்கத் தக்க கீழ்மையில் உள்ளவன் நான். பேயினை விடவும் இழிந்த நிலையில் உள்ள நான், இந் நிலவுலகத்தில் பிறந்த காரணம் தெரியவில்லை.  என்னை இந்தப் பிறப்பில் கொண்டு சேர்த்த உனது திருவுள்ளம் என்ன என்றும் நான் அறியேன்.

பூமி பாரங்கள் --- 3




                                                பூமி பாரங்கள் --- 3

     அடுத்து திருவள்ளுவ நாயனார் யாரை நமக்கு  "பூமி பாரம்" அடையாளப் படுத்துகிறார் என்று பார்ப்போம்...

     கண்ணோட்டம் என்னும் அதிகாரம். கண்ணோட்டம் என்றால் கருணை அல்லது இரக்கம் என்று பொருள். Compassion என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும். இது மனிதனுக்கு இருக்கவேண்டிய இன்றியமையாத பண்பு. இது உலக வாழ்வுக்கு, உலக நடைக்கு அமைய வேண்டியது. உலக நடை என்பது, இல்லாதவருக்குத் தம்மால் இயன்றதைக் கொடுத்து உதவவேண்டும் என்னும் எண்ணம், புறந்தருதல் என்பதாகிய பிறரைக் காத்தல், பிழைத்தன பொறுத்தல் என்னும் மன்னிக்கும் குணம் ஆகியவற்றைக் குறிக்கும்.

     இந்தக் குணங்கள் இல்லாதவர்கள் பூமிக்குப் பாரமாக விளங்குவர் என்கிறார் நாயனார். திருக்குறளைக் காண்போம்...

"கண்ணோட்டத்து உள்ளது உலகுஇயல், அஃது இலார்
உண்மை நிலக்குப் பொறை".

இதன் பொருள் ---

     உலக இயக்கம் அல்லது ஒழுக்கம் என்பது (ஒருவரது குற்றத்தை மறந்து) கருணை புரிவதால் நிகழ்கின்றது. ஆதலால்,  உள்ளத்தில் கருணை இல்லாதவர் உயிர் வாழ்ந்து கொண்டு இருத்தல் இந்தப் பூமிக்குச் சுமை.

     திருக்குறளின் பெருமைகளை விளக்க வந்த நூல்களுள் "முருகேசர் முதுநெறி வெண்பா" என்பதும் ஒன்று. மேற்குறித்த திருக்குறளை விளக்கும் ஒரு பாடல் அந்நூலில் இருந்து....

"ஓவில்உழ வன்வேண்ட உக்கிரனார் இந்திரன்கொண்
மூவைவிடு வித்தார் முருகேசா - தாவல்இலா
கண்ணோட்டத்து உள்ளது உலகியல் அஃதுஇலார்
உண்மை நிலக்குப் பொறை".

இதன் பொருள் ---

     முருகேசா --- முருகப் பெருமானே, ஓவில் உழவன் வேண்ட --- ஒழிதல் இல்லாத வேளாளன் ஒருவன் வேண்டிக் கொள்ள, உக்கிரனார் --- உக்கிர பாண்டியன், இந்திரன் கொண்மூவை விடுவித்தார் --- இந்திரனுடைய மேகங்களைச் சிறையில் இருந்து விடுவித்தார். தாவல் இலா --- அழிதல் இல்லாத, உலகியல் --- உலக நடையானது, கண்ணோட்டத்து உள்ளது --- கருணை என்னும் அருள் நிலையிலே உள்ளது. அஃது இலார் --- கண்ணோட்டமாகிய அருள் இல்லாதவர்கள், உண்மை --- நிலவுலகில் இருத்தல், நிலக்குப் பொறை --- நிலத்திற்குச் சுமையாகும்.

     வேளாளன் வேண்டிக் கொள்ள உக்கிர பாண்டியன் இந்திரனுடைய மேகங்களைச் சிறையிலிருந்து விடுதலை செய்தான். உலகநடையானது அருளுடைமையோடு விளங்குதலில் தான் உள்ளது. அருளில்லாதவர்கள் உலகத்திலே இருப்பது நிலத்துக்குச் சுமையாகும் என்பதாம்.

உக்கிரபாண்டியன் கதை

     ஒரு காலத்திலே சேர சோழ பாண்டியர் என்னும் மூவேந்தர்களுடைய நாட்டிலே மழையில்லாமல் போய்விட்டது. அகத்தியருடைய அறிவுரைப்படி மூவரும் இந்திரனுடைய அவைக்குச் சென்றார்கள். சேரனும் சோழனும் இந்திரன் காட்டிய இருக்கைகளிலே இருந்தார்கள். உக்கிரபாண்டியன் மட்டும் இந்திரனுடைய இருக்கையிலே ஏறி இந்திரனோடு ஒன்றாக இருந்தான். இதனைப் பார்த்த இந்திரனுக்குச் சினம் உண்டாகியது. சேர சோழர்களுடைய செய்தியை வினவி அவர்களுடைய நாடுகளிலே மட்டும் மழை பெய்யச் செய்தான். இருவரையும் அனுப்பிய பிறகு உக்கிரபாண்டியனுடைய செருக்கை அடக்கவேண்டும் என்று எண்ணினான். இந்திரன் பாண்டியனுக்குச் சிறப்புச் செய்வான் போலத் தூக்க முடியாத மாலை ஒன்றைக் கொண்டு வரச் செய்து, அதனைப் பாண்டியனுடைய கழுத்திலே போட்டான். பாண்டியன் அம்மாலையை மலர்மாலை போலத் தாங்கிக் கொண்டு இந்திரனை மதியாமல் இருந்தான். பிறகு, தன்னுடைய நாட்டை அடைந்தான். ஒருநாள் இந்திரனுடைய புட்கலாவருத்தம் முதலிய நான்கு முகில்கள் பொதிய மலைச் சாரலில் மேயக்கண்டு அவைகளைச் சிறையிலிட்டான். இதனை உணர்ந்து இந்திரன் உக்கிரபாண்டியனை எதிர்த்துப் போரிடத் தொடங்கினான். போரில் பாண்டியனை வெல்ல முடியவில்லை. அதனால் தோற்றோடினான். பிறகு "உன்னுடைய நாட்டிலேயும் மழை பெய்யச் செய்கிறேன், அன்பு கூர்ந்து எனது மேகங்களைச் சிறை விடுக" என்று செய்தியனுப்பினான். அச்சமயத்தில் வேளாளன் ஒருவன் இந்திரன் பொருட்டுப் பிணை நின்று வேண்டிக் கொண்டான். உக்கிரபாண்டியனும் அருள் கொண்டு முகில்களைச் சிறையிலிருந்து விட்டுவிட்டான்.

     பகைவனே ஆனாலும், அவன்பாலும் உள்ளத்தில் கருணை இல்லாதவன் இந்த பூமிக்குப் பாரமாகவே கருதப்படுவான். தனது வலிமையைக் காட்டுவது பெருமை அல்ல. யாரிடத்தும் கருணையைக் காட்டுவதே பெருமை.

பூமி பாரங்கள் --- 2



                                                            பூமி பாரங்கள் --- 2


     "வெருவந்த செய்யாமை" என்னும் அதிகாரத்தில் வரும் ஒரு திருக்குறள். மக்கள் அஞ்சுவதும், தன்னைச் சார்ந்தோர் அஞ்சுவதும், தானே அஞ்சுவதும் ஆகிய செயல்களைச் செய்யாமல் இருத்தல் பற்றி வந்த அதிகாரம் இது. திருக்குறள் இதோ...

"கல்லார்ப் பிணிக்கும் கடும் கோல், அது அல்லது
இல்லை நிலக்குப் பொறை".

இதன் பொருள் ---

     நீதிநூல் முதலியவற்றைக் கல்லாதாரைத் தனக்குச் சுற்றமாகக் கூட்டுவது கொடுங்கோன்மை. அந்தக் கூட்டம் அல்லாமல் வேறு பாரம் இந்த நிலத்துக்கு இல்லை.

     அநீதியையே பயிலவேண்டும் என நினைக்கும் ஒருவன் அதற்கு ஏதுவாகத் தன்னோடு ஒரு கூட்டத்தை வைத்து இருப்பான். அக் கூட்டமானது அவனது இழி செயல்களுக்கு அறிவு நிலையிலும், செயல் வடிவிலும் துணையாக இருக்கும். இந்தக் கூட்டம்தான் பூமிக்குப் பாரமாக விளங்குவது என்கிறார் நாயனார். காரணம், ஒருவனை நல்வழிப்படுத்த எண்ணுவது அறிவு சார்ந்த நிலை. தீமைக்குத் துணை போவது அறிவு அல்லாத நிலை.

     இது வாழ்வியலின் ஒரு அங்கமான அரசியலுக்கும் பொருந்தும் என்பதால், அரசியல் பகுதியில் நாயனார் கூறினார்.

பின்வரும் பாடல்களையும் காண்க....

"கொடுங்கோல் மன்னர் வாழும் நாட்டில்
கடும்புலி வாழும் காடு நன்றே.
சான்றோர் இல்லாத் தொல்பதி இருத்தலின்
தேன்தேர் குறவர் தேயம் நன்றே".

     இவ்வாறு "வெற்றிவேற்கை" என்னும் நூலில் பாடியவர் வேறு யாரும் அல்ல. கொற்கையைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்தவராகிய அதிவீரராம பாண்டியர் தான்.

         "நீதியில்லாத அரசர் வாழுகின்ற நாட்டைப் பார்க்கிலும், கொடிய புலி வாழுகின்ற காடு நல்லது.  அறிவொழுக்கங்களால் நிறைந்த பெரியோர் இல்லாத பழைமையான நகரத்தில் இருப்பதைப் பார்க்கிலும், தாம் உண்பதற்கு உரிய தேனைத் தேடி அலைகின்ற குறவர்கள் வசிக்கும் மலைப்பக்கத்தில் இருப்பது நல்லது" என்கின்றார்.

"முடிப்ப முடித்துப் பின் பூசுவ பூசி
உடுப்ப உடுத்து உண்ப உண்ணா - இடித்துஇடித்துக்
கட்டுரை கூறில் செவிக்கொளா கண்விழியா
நெட்டு உயிர்ப்போடு உற்ற பிணம்".   

     "நீதிநெறி விளக்கம்" என்னும் நூலில், குரமகுருபர அடிகள் பாடிய பாடல் இது. இதன் பொருள் ---

     சூடத் தக்க மலர் முதலியவைகளை சூடிக் கொண்டு, பூசத் தக்க மணப்பொருள்களைப் பூசிக் கொண்டு, உடுக்கத்தக்க பட்டு, பீதாம்பரம் முதலியவற்றை உடுத்துக் கொண்டு, உண்ணத்தக்க நெய் உணவுகளை உண்டுகொண்டு, உயிர் இருப்பது போல் காட்டி, அமைச்சர் முதலியோர் பலமுறை நெருக்கிக் கூறும் அறவுரைகளைக் காது கொடுத்துக் கேளாமலும், அவர்களைக் கண்ணெடுத்துப் பாராமலும் இருக்கும் அரசர்கள், பெருமூச்சோடு கூடிய பிணம் போன்றவர்கள்.

     முடிப்பதும் பூசுவதும் உடுப்பதும் உண்பதுமான செயல்களெல்லாம் உயிரிருப்பது போல் காட்டுகின்றன. ஆனால் கேளாமையும் பாராமையும் உயிரில்லாதது போல் காட்டுகின்றன. உயிருக்கு முதன்மையான தன்மை அறிவே. ஆதலால், அதன் செய்கைகளான கேட்பதும் பார்ப்பதும் இல்லாத அரசர்களைப் `பிணம்’ என்றே கூறல் வேண்டினார். ஆனால் இறந்த பிணத்தில் இருந்து, சிறிது வேறுபடுத்திக் காட்டுவதற்கா, நெட்டுயிர்ப்போடு உற்ற பிணம் என்றார்.  பிணத்திற்கு பேச்சு மூச்சு இருக்காது. இந்த நடைப்பிணத்திற்கு, மூச்சு உண்டு.

பூமி பாரங்கள் --- 1.




பூமி பாரங்கள் - 1.
---------

     "சோற்றுக்குக் கேடும் பூமிக்கு பாரமுமாக உள்ளவனே" என்று நாட்டுப்புற வழக்கு ஒன்று உள்ளது.

     வயிறு புடைக்க உண்பதற்கே உடம்பைச் சுமந்து, பிறருக்குப் பயன்படாமல் வாழுகின்ற மனிதர்களுக்காக எழுந்த வழக்கு தான் இது.

     பூமிக்கு பாரமாக விளங்குவதாக யாரையெல்லாம் திருவள்ளுவ நாயனார் அறிவிக்கின்றார் என்று பார்ப்போம்...

1.    புறங்கூறாமை என்னும் அதிகாரத் தலைப்பு. இந்த அதிகாத் தலைப்புக்குப் பொருள்...  காணாதவழி பிறரை இகழ்ந்து உரையாமை. புறம் பேசுகின்ற குற்றமானது மனத்தை அடியாகக் கொண்டு வரும். மனத்தால் பிறரை இகழவேண்டும் என்ற எண்ணம் அமைந்து விட்டால், அவர் இல்லாத இடத்தில் அவரைப் பற்றி இகழ்ந்து பேசும் தீயகுணம் அமையும். இது கூடாது என்பதால், புறங்கூறாமை என்பதை வலியுறுத்தினார் திருவள்ளுவ நாயனார். திருக்குறளைப் பார்ப்போம்...

"அறன் நோக்கி ஆற்றும் கொல் வையம்?  புறன் நோக்கிப்
புன்சொல் உரைப்பான் பொறை".

இதன் பொருள் ---

     பிறர் இல்லாத இடம் பார்த்து, அவரைப் பழித்துப் பேசுகின்றவனது உடல் பாரத்தை, இந்த நிலமகளானவள், இக் கொடியனையும் தாங்குவது எனக்குத் தருமம் போலும் எனக் கருதித் தாங்குகின்றாள் போலும்.

     இவனும் இந்தப் பூமியிலே பிறந்துவிட்டானே, இவனையும் தாங்குவது எனது கடமை என்று பூமித் தாயானவள் பொறுத்துக் கொள்வாளாம். இப்படி ஒருவன் இருந்து என்ன பலனும் இல்லை. அவன் இறந்தாலும் இழக்கப் போவது எதுவும் இல்லை.

     புறங்கூறுவது பாவம் என்பதைத் திருநாவுக்கரசு நாயனார் ஒரு தேவாரப் பாடலில் காட்டியுள்ளார்.

"பேச்சொடு பேச்சுக்கு எல்லாம் பிறர்தமைப் புறமே பேசக்
கூச்சிலேன், ஆதலாலே கொடுமையை விடுமாறு ஓரேன்,
நாச்சொலி நாளும் மூர்த்தி நன்மையை உணர மாட்டேன்,
ஏச்சுளே நின்று மெய்யே என்செய்வான் தோன்றினேனே".

இதன் பொருள்---

     பேசும்போதெல்லாம் பிறரைப் புறம் கூறும் செயலை நீங்காதேனாய் , கொடுமையை நீக்குமாறு அறியேனாய் , சிவபெருமானுடைய பெருமையை நாவினாலே சொல்லி அவன் செய்யும் நன்மையை உணரமாட்டேனாய் , இகழ்ச்சிக்கு இடமாகிய இந்த உடம்பில் இன்னும் இருந்து கொண்டுள்ளேன் . யாது செய்வதற்காகப் பிறந்தேன் நான்?

     ஏன் நாயனார் இப்படிப் பாடினார் என்பதற்கும் ஒரு காரணம் உண்டு. "புறம் கூறிப் பொய்த்து உயிர் வாழ்தலின், சாதல் அறம் கூறும் ஆக்கம் தரும்" என்றார் திருவள்ளுவ நாயனார் மேலும். ஒருவனைப் புறத்தே இகழ்ந்து பேசி வாழ்வதைக் காட்டிலும், அப்படிப்பட்டவன் இறந்துவிட்டான் என்றால், அந்தச் சாவானது அவனுக்கு அறநூல்களில் சொல்லப்பட்டுள்ள ஆக்கத்தைத் தரும் என்றார். அவன் உயிரோடு இருந்தான் என்றால் மேலும் புறம் கூறுவதாகிய பாவச் செயலைச் செய்துகொண்டே இருப்பான். பாவச் செயல் தவிர்க்கப் படவேண்டும் என்றால், ஒன்று, அவன் புறங்கூறுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். அல்லது இறந்து போகவேண்டும்.

     எனவே, புறம் பேசுபவன் பூமிக்குப் பாரமாக உள்ளவன் என்பதை அறியலாம்.

     மனிதானாகப் பிறந்து மனித உணர்வு இல்லாமல், விலங்குத் தன்மையினும் கீழாக வாழுகின்றவர்களைப் பார்த்து, "பூமி பாரங்கள்" என்று அறிமுகம் செய்தவர், பெரியாழ்வார்.

     திருவள்ளுவர், இப்படிப்பட்ட மனிதர்களுக்கு உரிய அடையாளங்களைக் காட்டி, அவர்களைப் "பொறை" என்றார்.

     பொறை என்ற சொல்லுக்கு, பாரம், சுமை, கனம், கல், சிறு குன்று, பொறுமை, அடக்கம், கர்ப்பம் வலிமை என்றெல்லாம் பொருள் இருந்தாலும், "பொறையுடைமை" என்னும் அதிகாரத்தில் பொறுமையைப் போற்றிய திருவள்ளுவநாயனார், "பொறை" என்று காட்டுவது எல்லாம், சுமை அல்லது பாரத்தையே குறிக்கும்.

     அடுத்தவரின் உயர்வை, நலத்தைப் போற்றிக் கொள்ளவேண்டும். பொறுத்துக் கொள்ளும் நற்குணம் ஒருவனிடம் இருக்கவேண்டும். முடிந்தால், அவரைப் போல் உழைத்து உயரவேண்டும். நல்ல குணம் வாய்க்கப் பெறாதவர்கள், பொறாமை காரணமாக, பிறரிடம் எதையாவது ஒரு குற்றத்தைக் கற்பித்து, அவரைப் பற்றிக் கோள் சொல்லி (புறம் பேசி) எப்படியாவது உயர்ந்த நிலையில் இருப்பவரைத் தனது நிலைக்குத் தாழ்த்தவேண்டும் என்று பெரிதும் முயல்வார்கள். சில நேரங்களில் வெற்றியும் பெறுவார்கள். அந்த வெற்றி நிலைத்து இருக்காது.

     அடுத்தவரைப் பற்றி எப்போதும் கோள் சொல்லுகின்றவர்கள் இருப்பதால், அவருக்கோ, பிறருக்கோ நன்மை ஏதும் இல்லை. தானும் உருப்படாமல், பிறரையும் உருப்பட வைக்காமல், ஒருவன் வாழ்வது, இந்த பூமிக்குப் பாரம் என்றார் திருவள்ளுவ நாயனார்.

பொது --- 1126. பட்டாடைக்கே

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் பட்டு ஆடைக்கே (பொது) முருகா!  திருவடியில் அணுக வரம் அருள்வாயே தத்தா தத்தா தத்தா தத்தா      தத்தா தத்தத் .....