அறிவின் பயன் என்ன?

 


அறிவின் பயன்என்ன?

-----

 

     திருவாரூரைத் தலைநகராகக் கொண்டு மனுநீதிச் சோழன் ஆட்சி புரிந்து வந்தான். சிறந்த கல்வி அறிவும், கேள்வி ஞானமும் உடைய அப் பெருமகன்,  நல்ல உலகியல் அனுபவமும் பெற்றிருந்தான். ஒர் அரசன் எவ்வளவு நல்லவனாய் இருப்பினும், குடிகளின் குறைகளை அறிந்து உடனுக்கு உடன் போக்க வேண்டும்  என்று நினைக்க வேண்டும். அப்படி அரசாட்சி புரிந்து வந்தவன் இந்தச் சோழன் என்பதை, "மண்ணில் வாழ்தரு மன்உயிர்கட்கு எ(ல்)லாம்

கண்ணும் ஆவியும் ஆம் பெருங் காவலான்" என்று காட்டுகிறார் தெய்வச் சேக்கிழார் பெருமான். இந்நிலவுலகில் வாழ்கின்ற நிலைபெற்ற உயிர்கட்கு எல்லாம் கண்ணெனவும் உயிரெனவும் காத்துவரும் பெரிய காவலை உடையவனாக அவன் இருந்தானாம்.

 

     பெரிய மனிதர்களைப் பார்க்கச் சென்ற அனுபவம் இருந்தால் இதனைப் புரிந்து கொள்ளலாம்.  நீங்கள் எப்படிப்பட்டவர்களாய் இருந்தாலும், காரிலே சென்று அந்தப் பெரிய மனிதர்கள் வீட்டு வாயிலில் இறங்கினால், அதிகத் தொல்லை இல்லாமல் அவர்களைப் பார்த்து விடலாம். வசதிக் குறைவு உடையவர்களாய் நீங்கள் இருந்து,  நடந்து சென்று பெரிய மனிதர்களைப் பார்க்கப் போனால் கிடைக்கின்ற அனுபவங்கள் பல. வெகு தூரம் நடந்து, பெரிய மனிதர்களைப் பார்க்கப் போகிறோம் என்ற ஆர்வத்துடன் சென்ற உங்களை அவர்கள் வீட்டு வாயிலில்,  “நாய்கள் ஜாக்கிரதை!" என்று தொங்கும் ஒரு பலகை முதலாவதாக உங்களை வரவேற்கும்.  உள்ளே இருப்பவர்கள் யார் என்பதை அறிவுறுத்தும் பலகையுடன் இந்தப் பலகையையும் கண்டு,மெல்ல உள்ளே நுழையப் பார்க்கின்ற உங்களைக் காவலாளி தடுத்து நிறுத்தி விடுவான். எத்தனை மணி நேரம் காத்திருந்தாலும், இறுதியில் பெரிய மனிதரைக் காண்பது குதிரைக் கொம்பாகவே முடியும்.

 

     இத்தகைய ஒரு நிலை தனது நாட்டு மக்களுக்கு ஏற்படக் கூடாது என்பதற்காக மனுநீதிச் சோழன் ஒரு புதிய வழியைக் கையாண்டான். காட்சிக்கு எளியன், கடும் சொல்லன் அல்லனேல், மீக்கூறும் மன்னன் நிலம்" என்பார் திருவள்ளுவ நாயனார். நேரில் காண்பதற்கு எளிமையானவனாகவும், கடுஞ்சொல் பேசுபவன் அல்லவனாகவும் இருப்பான் என்றால், நாட்டவர் மன்னனை மேன்மையாகக் கூறிப் போற்றுவர். குடிமக்கள் அனைவரும் தன்னை வந்து எப்பொழுது வேண்டுமானாலும் கண்டு, தம் குறைகளை எடுத்துச் சொல்லலாம் என்று கட்டளை இட்டாலும் போதாது. ஏனென்றால், மன்னனைக் காண உள்ளே செல்பவர்கள் பலவிதமான தடைகளைத் தாண்டித் தான் சொல்லவேண்டி இருக்கும். சாதாரண குடிமக்களால், அத்தனை தடைகளையும் தாண்டி உடனடியாக மன்னனைப் பார்ப்பது என்பது அவ்வளவு எளிது அல்ல.

 

     இன்றைய ஆட்சியாளர்களைப் பார்ப்பது எவ்வளவு கடினமானது என்பதை வைத்தே இதனைப் புரிந்து கொள்ளலாம். தடை செய்ய எத்தனையோ பேர் இருப்பார்கள். அவர்கள் உங்களைத் தடை செய்தவதற்கும் ஒவ்வொரு காரணம் கற்பிக்கப்படும். 

 

     அரசாட்சி புரிபவன் கண்ணால் பேச வேண்டும். காதல் பார்க்க வேண்டும், அருள் வழியில் குடிமக்களை ஆளவேண்டும். அவ்வாறு ஆட்சி புரிபவனே அரசன் என்பார் குமரகுருபர அடிகள்.

 

"கண்ணில் சொ(ல்)லி,செவியின் நோக்கும் இறைமாட்சி

புண்ணியத்தின் பாலதே ஆயினும்,- தண்அளியால்

மன்பதை ஒம்பாதார்க்கு என்ஆம்? வயப்படை மற்று  

என்பயக்கும்?ஆண்அல் லவர்க்கு."  


என்பது "நீதிநெறி விளக்கம்"  என்னும் நூலின் வாயிலாக அடிகளார் அறிவிப்பது.

 

இதன் பொருள் ---

 

     கண் பார்வையினால் தனது கருத்தைப் பிறர்க்குச் சொல்லி, நேரில்  கண்டது போலச் செவியினால் செய்திகளை அறியும் மன்னனுடைய பெருமையான செயல், புண்ணியத்தோடு பொருந்தியது. என்றாலும், குளிர்ந்த அருளோடு பொருந்திக் குடிமக்களை ஆளாத அரசர்க்கு, அந்த அரசாட்சி முறை பயன் தராது. போர்க் கருவிகளும் பயன் தராது.

 

     அரசன் என்பவன் குடிகளின் குறைகளையும், அமைச்சர் முதலானோர் கூறும் அறிவுரைகளையும் செவி கொடுத்துக் கேட்கவேண்டும்,  கண்ணால் பார்க்கவேண்டும். அரச போகத்தில் மயங்கி இருந்தால் அவன் மன்னன் இல்லை, கொடுங்கோலன் ஆவான் என்கிறார் குமரகுருபர அடிகள்.

 

முடிப்ப முடித்து,பின் பூசுவ பூசி,

உடுப்ப உடுத்து,உண்ப உண்ணா,- இடித்துஇடித்துக்

கட்டுரை கூறில் செவிக்கொளா கண்விழியா

நெட்டு உயிர்ப்போடு உற்ற பிணம்.    --- நீதிநெறி விளக்கம்.

 

இதன் பொருள் ---

 

     சூடத்தக்க மலர் முதலியவைகளைச் சூடிக் கொண்டு, பின்னர் பூசத்தக்க நறுமணப் பண்டங்களைப் பூசிக்கொண்டு, உடுக்கத்தக்க ஆடைகளை உடுத்துக் கொண்டு, உண்ணத்தக்க நெய் உணவுகளை உண்டு கொண்டு, உயிர் இருப்பது போலக் காட்டி, அமைச்சர் முதலியோர் அறிவுரை கூறினாலும் அவற்றைச் செவி கொடுத்துக் கேளாமலும், கண் திறந்து பார்க்காமலும் இருக்கும் அரசர்கள், பெருமூச்சு எறிகின்ற பிணத்துக்குச் சமம் ஆவார்.

 

     மனுநீதிச்  சோழன், தனது மக்களுக்குக் கண்ணும் ஆவியும் ஆக இருப்பவன். மக்கள் மீது அன்பு கொண்டவன். அவர்கள் யாதொரு குறையும் இல்லாமல் வாழவேண்டும் என்னும் கருத்து உடையவன். எனவே, அரண்மனையின் வாயிலில் ஒரு மணியைக் கட்டித் தொங்கவிட்டான். குறை உடையவர்கள் யாருடைய தயவையும் எதிர்பாராமல் அந்த மணியை அடித்தால்,மன்னன் வெளியே வந்து அவர்கள் குறையைக் கேட்டு அறிந்து தீர்க்க முடியும்.

 

     ஆனால், அந்த மணியால் எந்தப் பயனும் விளையவில்லை. செங்கோல் மன்னனாகிய அவன் கட்டிய மணி அடிப்பாரின்றிப் பல காலம் உறங்கியது. மனுநீதிச் சோழனுக்கு, குலத்தை விளக்க ஒரே ஒரு மகன் இருந்தான். அளவில்லாத கலைஞானத்தைக் கற்ற அவன், தந்தைக்கு ஏற்ற மைந்தனாய்ப் பண்பாடு மிக்கவனாய் இருந்தான். அந்த மைந்தனைப் பற்றி, தெய்வச் சேக்கிழார் பெருமான்,

 

"அளவு இல்தொல் கலைகள் முற்றி,

            அரும்பெறல் தந்தை மிக்க

உளமகிழ் காதல் கூர

            ஓங்கிய குணத்தால் நீடி,

இளவரசு என்னும் தன்மை

            எய்துதற்கு அணியன் ஆகி,

வளர்இளம் பரிதி போன்று

            வாழுநாள் ஒருநாள் மைந்தன்."

 

இதன் பொருள் ---

 

     எண்ணிறந்த பழைய கலைகள் அனைத்தையும் முழுமையாக நன்கு கற்றவனாய்ப், பெறுதற்கரிய  தந்தையாரது மேம்பட்ட மனம் மகிழ்தற்குக் காரணமான உயர்ந்த நற்குணங்கள் பலவும் நிறைந்தவனாய், இளவரசு என்று சொல்லுதற்குரிய பருவத்தை அடைந்தவனாய், வளர்கின்ற இளங்கதிரவனையொத்து வாழ்கின்ற நாள்களில், ஒருநாள் அம் மைந்தனானவன்.

 

"திங்கள்வெண் கவிகை மன்னன்

            திருவளர் கோயில் நின்று

மங்குல்தோய் மாட வீதி

            மன்இளம் குமரர் சூழக்

கொங்குஅலர் மாலை தாழ்ந்த

            குங்குமம் குலவு தோளான்

பொங்கிய தானை சூழத்

            தேர்மிசைப் பொலிந்து போந்தான்."

 

இதன் பொருள் ---

 

     திங்களைப் போலும் வெள்ளிய குடையை உடைய மனுநீதிச் சோழனின் பொலிவு மிக்க அரண்மனையினின்றும் புறப்பட்டு, மேகம் சூழ்ந்த உயர்ந்த மாடங்களை உடைய வீதியின்கண் அரசிளங்குமரர்கள் தன்னைச் சூழ, நறுமணம் மிக்க மலர்மாலைகள் தன் மார்பில் தவழுமாறு அணிந்து, குங்குமக் குழம்பு தோய்ந்த தோள்களை உடைய அம் மன்னன் மகன், மிகுந்த சேனைகள் தன்னைச் சூழ்ந்து வரத் தேரின்மீது ஏறிச் சிறந்த தோற்றப் பொலிவுடன் வந்தான்.

 

     ஒரு நாள் அந்த அருமை மைந்தன் மணிகள் கட்டிய பெரிய தேரின்மேல் ஏறிக்கொண்டு, அரசர்கள் உலாவப் போகின்ற பெரிய வீதியிலே சென்று கொண்டிருந்தான். நால்வகைப் படைகளும் அவனைச் சூழ்ந்து சென்றன. இந்த உலகமானது எதிர்பாராத நிகழ்ச்சிகளே நடைபெறுகின்ற இயல்பை உடையது. அரசவீதியில் தேரில் ஏறி, அனைத்து விதமான பாதுகாவல்களோடு சென்ற அரசகுமாரன் எவ்வகையான தீங்கும் நேரும் என்று எதிர் பார்க்கவே இல்லை.

 

     ஆனாலும் விதி யாரையும் விட்டு வைப்பது இல்லை.  திடீரென்று ஒரு பசுக்கன்று அவனுடைய தேர்ச் சக்கரத்தின் இடையே புகுந்து அகப்பட்டு, இறந்துபோய் விட்டது. 

 

"தனிப்பெருந் தருமம் தான் ஓர்

            தயா இன்றித் தானை மன்னன்

பனிப்புஇல் சிந்தையினில் உண்மைப்

            பான்மை சோதித்தால் என்ன

மனித்தர் தன் வரவு காணா  

            வண்ணம் ஓர் வண்ணம் நல்ஆன்

புனிற்று இளம் கன்று துள்ளிப்

            போந்தது அம் மறுகின் ஊடே." --- பெரியபுராணம்.

 

இதன் பொருள் ---

 

     ஒப்பு உயர்வு அற்ற பெரிய அறக்கடவுள், எள்ளளவும் தயவு என்பது இல்லாமல், நால்வகைச் சேனைகளையும் உடைய மனுநீதிச் சோழனின் சலிப்பற்ற திண்ணிய மனத்திலுள்ள உண்மைத் தன்மையைச் சோதிக்க வந்தாற்போல, மனித இனத்தவர் எவரும் தன் வரவை அறியாதவாறு, ஒப்பற்ற அழகினதாய நல்ல பசுவினுடைய ஈன்றணிமை உடைய ஒரு இளங்கன்று ஒன்று அவ்வீதியினிடத்தே துள்ளிச் சென்றது.

 

     தேர்க்காலில் அகப்பட்ட பசுவின் கன்று இறந்து  பட்டது என்பதை அறிந்து, உடனே தேரை நிறுத்தி, கீழே இறங்கிய அரச குமாரன், இக்கொடுமையைக் கண்டு பெரிதும் மனம் வருந்தினான். செய்வது அறியாது மயங்கி நின்றுவிட்டான் மனுவின் மைந்தன்.

 

     இந்நிலையில், கன்றை இழந்த தாய்ப் பசு வேகமாய் ஒடிச் சென்று, அரண்மனை வாயிலில் கட்டி இருந்த மணியைத் தன் கொம்புகளால் இழுத்து அடித்துவிட்டது. நீண்ட காலமாக உறங்கிக் கிடந்த மணி ஒலிக்கக் கேட்டுப் பதறிக்கொண்டு வெளியே வந்தான் மன்னன். மன்னனுக்கு நேர்ந்த பழியின் ஓசையோ என்று ஐயப்படும்படி அம்மணி ஒலித்தது.

 

பழிப் பறை முழக்கோ?ஆர்க்கும்

            பாவத்தின் ஒலியோ?வேந்தன்

வழித்திரு மைந்தன் ஆவி

            கொளவரும் மறலி ஊர்திக்

கழுத்துஅணி மணியின் ஆர்ப்போ?

            என்னத் தன் கடைமுன் கேளாத்

தெழித்து எழும் ஓசை மன்னன்

            செவிப்புலம் புக்க போது.      --- பெரியபுராணம்.

 

இதன் பொருள் ---

 

     இவ்வாறு முழக்கிய ஆராய்ச்சிமணியின் ஒலியானது, மன்னனுக்குப் பழி வருதலை அறிவிக்கும் ஒரு பறையினது ஒலியோ?, அல்லது உயிரைப் பிணித்து நிற்கும் பாவமே ஒரு வடிவெடுத்து வந்தால் போன்றதோரு ஒலியோ?, அல்லது மனுவேந்தன் வழிவந்த அத் திருமைந்தனின் உயிரைக் கொள்ள வருகின்ற இயமனின் ஊர்தியான எருமைக் கடாவின் கழுத்தில் கட்டிய மணியின் ஒலியோ? எனக் கேட்டார்  ஐயுற்றுக் கூறுமாறு, தன் தலைவாயிலில் இதுவரை கேளாத இவ்வாராய்ச்சி மணியின் ஓசையானது மனுவேந்தனின் காதில் புகுந்தது. 

 

     வெளியே வந்த மன்னன், மணியின் பக்கத்தில் மக்கள் யாரையும் காணவில்லை. இரண்டு கண்களிலும் நீர் வழிய நிற்கின்ற பசுவைத்தான் கண்டான். தனக்கு நேர்ந்த துயரத்தை எடுத்துச் சொல்லப் பசுவுக்குப் பேசும் திறன் இல்லை. எனவே, பக்கத்தில் நின்ற அமைச்சர்களை, "நீங்கள் அமைச்சர்களாய் உள்ள நாட்டில் இப்படியும் ஒரு கொடுமை நேரலாமா?" என்று கேட்பவனைப் போல. இகழ்ச்சியோடு ஒரு பார்வை பார்த்தான்.

 

     மன்னன் நோக்கத்தைக் கண்டு அஞ்சி நின்ற அமைச்சர்களுள் முதிய அமைச்சன் ஒருவன், “அரசே! உம்முடைய புதல்வன், உமது அனுமதியோடு, மணிகள் கட்டிய பெரிய தேரின்மேல் ஏறி அளவில்லாத படைகள் புடை சூழ அரசர்கள் உலாப் போகின்ற தெருவிலே செல்லும்பொழுது, இளைய ஒரு பசுக்கன்று, தேர்ச் சக்கரத்தின்  நடுவே புகுந்து இறந்து விட்டது! இங்கு வந்து இம்மணியை அடித்த தாய்ப்பசு தான் இது," என்று கூறினான்.

 

     அமைச்சருடைய வார்த்தைகளைக் கேட்ட மன்னன் விடம் தலைக்கேறியது போல வேதனை மிகுந்து, ஒன்றும் புரியாதவனாய், "மன்னுயிர்களை எல்லாம் காத்து அறவழி ஆட்சி செய்ய வேண்டிய என்னாலேயே இக்கொடுமை நிகழ்ந்தது என்றால், என்ன செய்து இப் பழியைப் போக்கிக்கொள்ள முடியும்?" என்று வருந்தத் தொடங்கினான்.

 

     மன்னவன் துயரத்தைக் கண்ட அமைச்சர்கள் அவன் திருவடிகளில் விழுந்து வணங்கி, "அரசே! நீங்கள் சிந்தை மிக நொந்து வருந்துவதால் என்ன பயனைப் பெற முடியும்? பசு வதை செய்தவர்கள் செய்ய வேண்டிய கழுவாயைச் (பிராயச்சித்தம்) செய்ய உடனே ஏற்பாடு செய்வதே அறமாகும்" என்றார்கள். இந்த விடையைக் கேட்ட மன்னன், அமைச்சர்களைப் பார்த்து சீறத் தொடங்கி விட்டான். "பசு வதை நடை பெற்றதற்குக் கழுவாய் தேடி, அதனால் எனது மகனுடைய பாவத்தைப் போக்கி விடலாம் என்று நீங்கள் கூறுவது நகைப்பையே உண்டாக்குகிறது! அப்படிச் செய்துவிட்டால் இளைய கன்றை இறந்து வருந்தி அலறுகின்ற இத் தாய்ப்பசுவின் வருத்தத்துக்கு அது மருந்தாகிவிடுமா? என்னுடைய மகன் செய்த இக்கொலைக்குக் கழுவாய் தேடும் முறையைச் செய்துவிடலாம். ஆனால், இதே போன்ற ஒரு கொலையை அரசன் மைந்தன் அல்லாத மற்றொருவன் செய்துவிட்டால் அவனைப் பிடித்துக் கொலைக்குக் கொலை என்று சொல்லி,அவன் உயிரை வாங்குவேனானால், என்னுடைய செங்கோல் முறைமை என்ன ஆகும்? ‘பழைய மனுவின் நீதி முறை இப்புதிய மனுவால் அழிக்கப்பட்டது!’ என்ற பழியை எனக்கு வாங்கித் தரும் நீங்களா அமைச்சர்கள்?" என்று கூறிக் கோபித்தான். அமைச்சர்கள் வார்த்தையை அவன் ஏற்றுக்கொள்ளவில்லை.

 

"என்மகன் செய் பாதகத்துக்கு

            இருந் தவங்கள் செய இசைந்தே,

அன்னியன் ஓர் உயிர் கொன்றால்

            அவனைக் கொல்வேன் ஆனால்,

தொன் மனுநூல் தொடை மனுவால்

            துடைப்பு உண்டது எனும் வார்த்தை

மன்உலகில் பெற மொழிந்தீர்

            மந்திரிகள் வழக்கு என்றான்."

 

இதன் பொருள் ---

 

     என்னுடைய மகன் செய்த பசுக் கொலையாகிய இப்பாவத்திற்கு அதற்கு உரிய தீர்வாக அவனைக் கொலை செய்யாது,  பிறபிற தீர்வுகளைச் செய்து, இதுபோன்றதொரு பாவச்செயலை வேறொருவன் செய்ய அவன் உயிரைக் கொலை செய்வேன் ஆயின், தொன்று தொட்டு வந்த மனுநூலில் விதித்த ஒழுக்கமானது, இம்மனுச் சோழனால் கெடுக்கப்பட்டது என்னும் சொல், நிலைபெற்ற இவ்வுலகத்தில் வழங்குமாறு கூறினீர். இவ்வாறு பிறழக் கூறுதல் அமைச்சர்களுக்கு வழக்கம் என்று கூறினான்.

 

     மனிதனுக்கு ஆறாவது அறிவு என்னும் ஒன்றைத் தனிப்பட்ட முறையில் தந்துள்ளான் இறைவன். அதுவே பகுத்தறிவு என்னும் மன அறிவு. ஏனைய விலங்குகளுக்கு இல்லாத இந்த அறிவால் மனிதன் என்ன செய்ய வேண்டும்?உடம்பில் எந்த உறுப்பில் வலி ஏற்பட்டாலும் கண்ணீரைச் சொரிந்து அழும் உறுப்புக் கண்தான்.  தனக்கு வலி இல்லை, ஆகவே தான் வருந்த வேண்டாம்என்று கண்  நினைப்பது இல்லை.பிற உயிர்கள் படுகின்ற துயரத்தைக் கண்டு வருந்தாதவன்அறிவுடையவன் ஆகமாட்டான். அந்தஉயிர்களினுடைய துன்பத்தைப் போக்க முயல்வதுதான் அறிவுடையவன் செய்ய வேண்டியகடமையாகும்.

 

     திருவள்ளுவ நாயனார் பிறருடைய துன்பத்தை ஒருவன் தன்னுடைய துன்பம் போல நினைக்க வேண்டும் என்றோ, சொல்ல வேண்டும் என்றோ கூறவில்லை. தன்னுடைய துன்பம் போலப் போற்றவேண்டும் என்று கூறுகிறார். அதாவது, தனக்கு ஒரு துன்பம் நேர்ந்துவிட்டால் எவ்வாறு ஒருவன் எல்லா முயற்சிகளையும் செய்து அதனைப் போக்க முயல்கிறானோ, அவ்வளவுக்குப் பிறரது துன்பத்தைப் போக்கமுயன்று பார்க்கவேண்டும். துன்பத்தைப் போக்க முடியவில்லையானால் அதனை அனுபவித்துத்தான் தீர்க்கின்றான். அதேபோலப் பிறர் படும் துயரத்தைப் போக்க முடியவில்லையானால், முடியவில்லை என்று சாக்குப் போக்குச் சொல்லி இருந்துவிடாமல்,அத்துயரைத் தானும் பங்கிட்டு அனுபவிக்க வேண்டும். இதுவே, அறிவின் பயன் பற்றித் திருவள்ளுவ நாயனார் கூறும் முறை.

     இதனை மனத்தில் கொண்ட மனுநீதிச் சோழன், “எந்த உயிரையும் கொல்ல மனிதனுக்கு உரிமை இல்லை. அவ்வாறு கொன்றால், அவனைக் கொல்வதே முறையாகும். இந்தப் பசு மனம் அழிந்து வருந்தும் துயரத்தைப்போக்க முடியாத நானும் இப்பசு அனுபவிக்கும் துயரை அனுபவிப்பதே அறமாகும்," என்ற கருத்தைக் கூறினான்.

"என மொழிந்து 'மற்று இதனுக்கு

     இனி இதுவே செயல்! இவ் ஆன்

மனம் அழியும் துயர் அகற்ற 

     மாட்டாதேன், வருந்தும் இது

தனது உறு பேர் இடர் யானும் 

     தாங்குவதே கருமம்,’ என

அனகன் அரும்பொருள் துணிந்தான்; 

     அமைச்சரும்அஞ்சினர், அகன்றார்!"        --- பெரியபுராணம்.

 

இதன் பொருள் ---

 

     என்று மேற்கூறியவாறு கூறி, இனி இத் தீச் செயற்குச் செய்யக்கடவதாகிய செயல் இதுவே ஆகும் என்று கருதியவன்,இப்பசுவின் மனம் வருந்துதற்கு ஏதுவான துன்பத்தை நீக்க மாட்டாதவனாகிய யான், வருந்திக் கொண்டிருக்கும் இப்பசுவினது மிகப் பெரும் துயரத்தை அடைவதே தக்கதாம் என்று கூறி, அம் மனுவேந்தனும் அச்செயற்கு உறுதி பூண்டனன். அதுகண்ட அமைச்சர்களும் அஞ்சி அவ்விடத்தினின்றும் நீங்கினர்.


       பிறர் படும் துயரத்தைப் போக்க முடியாத ஒருவன், அவ்வுயிரின் துயரத்தைத் தானும் ஏற்று அனுபவித்தால் ஒழிய, ஒருவன் தன்னை மெய்யறிவு உடையவன் என்றுகூறிக்கொள்ள முடியாது என்பதே திருவள்ளுவ நாயனார் காட்டும் வாழ்க்கை நெறி. இதை  மறந்துவிட்டு எவற்றை எல்லாமோ நாம் இன்று 'அறிவு' என்று சொல்லிக் கொண்டு திரிகிறோம் "மற்றோர் உயிரின் நோயைத் தன் நோய் போலப் போற்றி அனுபவிக்காவிட்டால், அறிவு பெற்றதனால் பயன் என்ன?" என்னும் பொருளில்,


"அறிவினால் ஆகுவது உண்டோ ? பிறிதின் நோய்

தன் நோய்போல் போற்றாக் கடை ?"

 

என்கிறார் திருவள்ளுவ நாயனார்.

 

இதன் பொருள் ---

 

     பிற உயர் படும் துன்பத்தைத் தான்படும் துன்பத்தைப் போல மதித்து நடந்து கொள்ளாதபோது, தான் பெற்ற அறிவினால் பயன் விளைவது உண்டோ?

 

     திருவள்ளுவ நாயனார் கூறும் ஒப்பற்ற குறிக்கோள் வாழ்க்கையை மேற்கொண்டு ஒழுகிய  மனுநீதிச் சோழன் தன்னுடைய ஒரே மகனை அதே தேர்க்காலின் கீழே கிடத்தி, அவன்மீது தேரைச் செலுத்தி முறை செய்தான்.  கன்றை இழந்த பசுவைப் போலத் தானும்மகனை இழந்து துயர் அடைந்தான். இவ்வாறு செய்ததாலேயே அவனுக்கு இயற்பெயர்மறைய,  "மனுநீதி கண்ட சோழன்" என்னும் காரணப்பெயர் நிலைத்து விட்டது.

 

 

 

 

குறிஞ்சிக் கிழவன்

 


 

 

குறிஞ்சிக் கிழவன்

-----

 

     நக்கீரதேவர் பாடிய "திருமுருகாற்றுப்படை", "பழமுதிர் சோலை மலை கிழவோனே" என்று முடியும். 'கிழவன்' என்ற சொல்லுக்கு இப்போது வழங்கும் பொருள் வேறு. கிழவன் என்பதற்கு உரியவன் என்றுதான் பொருள். ஒரு பெண்ணின் கணவனை, 'கிழவன்' என்று சொல்வார்கள். அவ்வாறே மனைவியை 'கிழவி' என்பார்கள். “செல்லான் கிழவன், இருப்பின் நிலம் புலந்து இல்லாளின் ஊடி விடும்" என்பது திருக்குறள். "நிலத்திற்கு உடையவன், தானே நிலத்திற்குப் போய்க் கவனிக்காமல் வீட்டில் இருந்தால், தன்னைக் கவனிக்காத கணவனிடம் மனைவி ஊடல் கொள்வது போல நிலம் விளைவு தராமல் போய்விடும்" என்பது இதன் பொருள். இதில் "கிழவன்" என்ற சொல் உரியவன் என்ற பொருளில்தான் வந்திருக்கிறது. மலைகளுக்கு உரியவன் முருகன். குறிஞ்சி நிலத்துக்கு உரியவனாகையால் "குறிஞ்சிக் கிழவன்" என்று முருகனை அழைப்பார்கள்.

 

     குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் ஐவகை நிலங்களிலேயும் முதல் நிலம் என்று சொல்வது குறிஞ்சி. அது காலத்தினால் முதன்மையானது, பழமையானதும் கூட. உலகம் தோன்றுவதற்கு முன்னால் எங்கேயும் தண்ணீர் நிரம்பியிருந்தது. உலகம் தோன்றியபோது முதலில் மலைதான் தன் தலையை நீட்டியது. கல் தோன்றிய பிறகே மண், ஆறு, ஊர், கடற்கரை யாவும் தோன்றின. முதலில் தோன்றிய மலைக்குத் தெய்வம் முருகன் என்று தமிழர் வைத்தார்கள்.  "சேயோன் மேய மைவரை உலகமும்" என்று தொல்காப்பியம் சொல்கிறது. சேயோன் என்பதற்குச் சிவந்த நிறம் உடையவன் என்று பொருள். சிவந்த நிறம் உடைய முருகன் மலையையும் மலையைச் சார்ந்த இடத்தையும் விரும்பி, அங்கே தங்கி இருக்கிறான்.

 

      "விண்பொரு நெடுவரைக் குறிஞ்சிக் கிழவ" என்று திருமுருகாற்றுப்படையில் வருகிறது. 'வானை முட்டும் உயர்ந்த மலைகளையுடைய குறிஞ்சி நிலத்துக்கு உரியவனே' என்பது பொருள். ஆகவே, நக்கீரதேவர் இரண்டு இடங்களில் முருகனைக் "கிழவன்" என்று சொல்கிறார். 

 

     ஆனால், இன்றைக்கு, திருமணமான ஒரு பெண்ணிடம் போய், "உனது கிழவன் வந்துவிட்டானா?" என்று கேட்டால், "கிழவன் என்று யாரைச் சொல்கிறீர்கள்?" என்று கேட்பாள்.  "உனக்கு உரியவனாகிய உன் கணவனைத்தான் சொல்கிறேன்" என்றால் அவளுக்குக் கோபம் வந்துவிடும். "என் கணவரைக் கிழவன் என்கிறீர்களே! நான் ஒன்றும் இரண்டாம் தாரமாக வாழ்க்கைப்படவில்லை. என்னைவிட அவருக்கு இரண்டு வயதுதான் அதிகம்.  எனக்குப் பதினெட்டுதான் ஆகிறது. அவரைக் கிழவன் என்று சொல்லாதீர்கள்" என்று கோபிப்பாள்.'கிழவன்' என்ற சொல்லுக்கு 'வயதானவன்' என்ற பொருள் பிற்காலத்தில் வந்துவிட்டது. அதுதான் அவள் கோபிப்பதற்குக் காரணம். 

 

     வடக்கே திருவேங்கட மலை இருக்கின்றது. அங்கே வேங்கடேசப் பெருமாள் எழுந்தருளியிருக்கிறார். அங்கே முருகன்தான் எழுந்தருளியிருக்கிறான் என்று சிலர் சொல்வார்கள். இல்லை என்று சிலர் மறுப்பார்கள். அதைப் பற்றி நமக்குக் கவலை இல்லை. அங்கே திருமால் இருக்கிறார். முருகனும்தான் இருந்தான். முருகன் திருக்கோயில் அங்கே இருக்கவேதான் அருணகிரிநாதர் அங்கு சென்று முருகனை வழிபட்டு, ஆறு திருப்புகழ்ப் பாடல்களைப் பாடி இருக்கிறார். அங்கே எழுந்தருளியிருக்கும் திருமாலை நாம் எல்லோரும் வேங்கடேசுவரன் என்று சொல்கிறோம். வைணவர்கள் சீநிவாசன் என்று சொல்வார்கள். ஆனால் வடநாட்டிலிருந்து வருகிறவர்கள் எல்லோரும், "பாலாஜி, பாலாஜி" என்றுதான் சொல்லுவார்கள். பாலாஜி என்பது, பாலன் என்ற பொருளுடையது. அப்பெயர் முருகனுக்கே உரியது. குழந்தைப் பெருமானாகிய முருகன் திருவேங்கட மலையில் பழங்காலம் முதற்கொண்டே ஆட்சி பெற்று வந்திருக்கிறான் என்பதற்கு இந்தச் சொல்லும் ஒரு சான்று. 

 

     முருகன், உருவத்தில் மாத்திரம் இளையவன் அல்ல. பல வகைப்பட்ட அவன் செயல்களும் குழந்தைக்கு உரியனவாக உள்ளன. குழந்தைப் பருவத்துக்குரிய இலக்கணங்கள் சில உண்டு. குழந்தை தொட்டிலில் படுத்து விளையாடும். தொட்டிலில் இட்டுத் தாலாட்டும் பருவம் குழந்தைப் பருவம்.தொட்டில் பருவம் என்றது குழந்தைப் பருவத்தைக் குறிக்கிறது. பச்சிளம் பாலகன்தான் தொட்டிலில் படுத்து விளையாடுவான். 

 

     தொட்டிலில் படுத்துத் தூங்குவது குழந்தையின் லட்சணம். பால் குடிப்பது குழந்தையின் இயல்பு. அப்படியே அழுவதும் குழந்தையின் லட்சணம். ஒரு வீட்டில் குழந்தை பிறந்திருக்கிறது என்றால் பழைய காலத்துத் தாய்மார்கள் அந்த வீட்டுக்குப் போய் "குழந்தை அழுததா?" என்று விசாரிப்பார்கள. இப்பொழுது இருக்கிற நாகரிகப் பெண்களுக்கு இப்படிக் கேட்டால் கோபம் வரும். அவர்கள் 'குழந்தை அழுகிறதா' என்று கேட்கிறார்களே; அமங்கலமான கேள்வி அல்லவா? அப்படிக் கேட்கலாமா? என்று அதன் கருத்தைப் புரிந்துகொள்ளாமல் அவர்கள் கோபித்துக் கொள்வார்கள். வயதானவர்கள் அழுவது துக்கத்துக்கு அறிகுறி. ஆனால் குழந்தை அழுவது சுகத்திற்கு அறிகுறி. குழந்தை அழுதால்அதன் சுவாசப் பைகள் நன்றாக இயங்கும். உடம்பு வேலை செய்ய வேண்டுமானால் சுவாசப்பை நன்றாக வேலை செய்ய வேண்டும். குழந்தை அழுதால் சுவாசப்பை விரிந்து சுருங்கி வேலை செய்ய ஆரம்பிக்கிறது. குழந்தையின் அழுகை ஆரோக்கியத்தைக் காட்டுகிறது.

 

     குழந்தை என்பதற்குரிய முக்கிய இலக்கணங்கள் மூன்று; தொட்டில் விளையாட்டு, பால் குடித்தல், அழுகை, உலகத்திலுள்ள எல்லாப் பச்சிளம் குழந்தைகளுக்கும் இவை இயல்பு. முருகப்பெருமான் எப்போதும் குழந்தை உருவத்தில் இருப்பவன் அல்லவா? உருவத்தில் மட்டும் குழந்தை அல்ல. செயலிலும் குழந்தை என்பதற்குரிய இந்த மூன்று இலக்கணங்களும் அவனிடம் இருக்கின்றன. "குருத்தைப் போலுள்ள அந்தப் பச்சிளம் குழந்தையை கிழவன் என்று உலகத்தார் சொல்கிறார்களே" என்று அருணகிரிநாதர் அருமையாகச் சொல்கிறார்.

 

     உமாதேவியாரின் முலைகளிலே ஊறின பாலை அருந்தியவன் முருகன். அவன் சரவணப் பொய்கையில் மலர்ந்திருக்கிற தாமரையாகிய தொட்டிலில் படுத்து விளையாடினான்; தூங்கினான். ஆகவே,அவன் தொட்டிலில் படுக்கும் குழந்தையாக உள்ளவன்.தனக்குப் பால் கொடுப்பதற்காக, கார்த்திகைப் பெண்கள் ஆகிய ஆறு பேரும் இன்னமும் வரவில்லையே என விரும்பி அழுதான்.

 

      நம் வீட்டில் பிறந்த குழந்தை அழுதால் அதன் குரல் அடுத்த வீட்டுக்குக் கூடக் கேட்பதில்லை. உடல் வலிமை அல்லாத தாய்க்குப் பிறப்பதனால் அதன் தொண்டை பலமற்று இருக்கும்; நெஞ்சு இறுகி இருக்கும். ஆனால் முருகன் என்னும் குழந்தை வலிமையற்ற குழந்தை அல்ல.  உயர்ந்த இமய மலையில் அழகான சரவணப் பொய்கையில், தாமரை மலராகிய தொட்டிலின் மீது படுத்து அழும்போது, அந்த அழுகை ஒலி மலைகளில் முட்டி மோதி எதிரொலிக்கிறது. கடல் அலைகளின் மீது முட்டி மோதி எதிரொலிக்கிறது. சூரபதுமன் என்னும் அசுரனுடைய காதில் இந்தக் குழந்தையின் அழுகை ஒலி பட்ட மாத்திரத்தில், அவன் தன்னைக் கொல்ல யமன் வந்து விட்டானோ  என்று அலற ஆரம்பித்து விடுகிறான்.ஒரு முறை அழுதவுடனே கடல் அழ ஆரம்பித்துவிட்டது. இரண்டாவது முறை அழுதவுடனே, அதன் எதிரொலிபோல் மலை அழ ஆரம்பித்துவிட்டது. அடுத்த முறை அழுதவுடனே அதன் எதிரொலி போலச் சூரபதுமன் அழ ஆரம்பித்துவிட்டான்.

 

     இப்படிப் பால் குடித்துத் தொட்டிலில் தூங்கி அழும் பச்சிளங் குழந்தையைக் கிழவன் என்று சொல்வதில் ஓர் அழகு இருக்கிறது. கிழவன் என்ற சொல்லுக்கு இப்போது இரண்டு பொருள்கள் உண்டு. "உரியவன்" என்பது ஒன்று. "முதியவன்" என்பது ஒன்று. 

 

     இந்தப் பாட்டில் "திருந்தப் புவனங்கள் ஈன்ற பொற்பாவை திருமுலைப்பால் அருந்தி" என்னும் பகுதி முருகனது ஒரு திருவிளையாடலைக் குறிக்கிறது. “சரவணப் பூந்தொட்டில் ஏறி" என்பது இரண்டாவது திருவிளையாடல். "அறுவர் கொங்கை விரும்பி" என்பது மூன்றாவது திருவிளையாடல். "கடலழக் குன்றழச் சூரழ விம்மி அழும், குருந்தை" என்பது நான்காவது திருவிளையாடல். இப்படி இந்த நான்கு அடிகளிலும் நான்கு திருவிளையாடல்கள் அடங்கி இருக்கின்றன. 

 

     பாவை என்பது பதுமை. பெண்களைப் பதுமைபோல இருக்கிறார்கள் என்று சொல்வது மரபு. அழகும் மெருகும் குறையாமல் பதுமை இருப்பது போல, அழகிய பெண்கள் இருப்பதால் அப்படிச் சொல்கிறார்கள். உமாதேவியார் எப்போதும் எழில் பொருந்திய முகத்தோடு வாட்டம் இன்றி மெருகு குறையாமல் செக்கச் செவேல் என்று பொன்னிறம் பெற்றவளாக இருக்கிறாள். அதனால் அவளைப் பொற்பாவை என்கிறார். பொற்பாவை - பொன்னாலான பதுமை. என்வே, கௌரி என்று அழைக்கிறோம்.

 

"உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம் உணர்வு உடையோர்

மதிக்கின்ற மாணிக்கம் மாதுளம் போது மலர்க்கமலை

துதிக்கின்ற மின்கொடி மென்கடிக் குங்கும தோயமென்ன

விதிக்கின்ற மேனி அபிராமி என்றன் விழுத்துணையே"

 

என்று அபிராமிபட்டர் பாடுகிறார். உமாதேவியார் குங்குமத்தைப் போன்ற சிவந்த திருமேனி உடையவள். "குங்கும தோயம் என்ன விதிக்கின்ற மேனி அபிராமி" அவள். சிவன், "செம்மேனி எம்மான்" ஆவான். "பவளம் போல் மேனி" என்றார் அப்பர் பெருமான். இவ்விருவருக்கும் குழந்தையாகிய முருகனை, "செய்யன் சிவந்த ஆடையன்" என்று நக்கீரதேவர் பாடுகிறார். சிவந்த மேனியை உடைய முருகப் பெருமானை ஈன்ற அந்தப் பொற்பாவைதான் இந்தப் புவனங்கள் எல்லாவற்றையும் ஈன்றாள். புவனம் என்பது உலகம். இந்த உலகத்தை எல்லாம் ஈன்றவள் பொற்பாவையாகிய எம்பெருமாட்டி. அவள் தனக்கு ஒரு பயனைக் கருதாமல், உயிர்கள் திருந்த வேண்டும், ஒழுங்குபட வேண்டுமென்று என்று படைத்தாள்.

 

     உயிர்கள் உலகத்தில் வாழ வேண்டுமானால் தனியாக இருந்தால் இயலாது. அவை எப்போதும் ஏதேனும் ஒன்றோடு சேர்ந்தே இருக்கும். ஒன்று, அவை பாசத்தோடு இணைந்து இருக்க வேண்டும். இல்லாவிட்டால் பதியோடு இணைந்திருக்க வேண்டும். பாசத்தோடு இணைந்திருக்கிற வாழ்க்கையே உலக வாழ்க்கை. பதியோடு இணைந்து இன்புறும் வாழ்க்கையே முத்தி. பாசத்தோடு இணைந்திருக்கும் உயிர் பதியோடு இணையவேண்டுமானால் பல பிறவிகள் எடுத்து எடுத்துத் திருந்த வேண்டும். உயிர்கள் யாவும் திருந்த வேண்டும் என்பதற்காகவே பராசக்தி தனு, கரண புவன போகங்களை அவற்றுக்குப் படைத்துக் கொடுத்திருக்கிறாள்.

 

     பள்ளிக் கூடம் போகமாட்டேன் என்று அடம் பிடிக்கிற குழந்தைக்கு அதன் தாய் அந்தக் குழந்தை பள்ளிக்கூடம் போய் நன்றாகப் படித்து, வாழ்க்கையிலே சிறப்புற்று விளங்க வேண்டுமென்ற அன்போடு விளையாட்டுப் பொம்மைகளை வாங்கிக் கொடுத்து, தோழர்களையும் சேர்த்துவிட்டு, அது மகிழ்ச்சியோடு பள்ளிக் கூடம் போய், படித்து  த் திருந்த வேண்டுமென்று விரும்புகிறாள். உலகத்திலுள்ள உயிர்களுக்குத் தாயாகிய எம்பெருமாட்டி, இறப்பினாலும் பிறப்பினாலும் துன்பப்படுகின்ற உயிர் பூமிக்கு வந்து இன்ப துன்பங்களைத் துய்த்து, நல்வினைகளைச் செய்து ஞானம் பெற்றுப் பிறப்பை அறுக்க வேண்டுமென்ற கருணையினால் தனு கரண புவன போகங்களைத் தருகிறாள். அகிலம் யாவையும் பெற்றவள் எம்பெருமாட்டி. அவளை,  "ஆத்தாளை, எங்கள் அபிராம வல்லியை,அண்டம் எல்லாம் பூத்தாளை" என்றும் "பூத்தவளே!  புவனம் பதினான்கையும் பூத்த வண்ணம் காத்தவளே" என்றும் அபிராமிபட்டர் துதிக்கிறார். உலகத்தை எல்லாம் அவள் தந்தவள். பரமேசுவரன் வேறு, பராசக்தி வேறு அல்ல. ஆண்டவனிடம் இருக்கிற அருட்சக்தி எதுவோ அதுவேதான் விரிந்து அம்பிகையாகிறது. பரப்பிரம்மம் ஆகிய பரமசிவன் சிறிதும் ஆடாது, அசையாது இருந்தால் ஒன்றும் நடவாது. அவனது அருட்சக்தி வெளிப்பட்டு இயங்கினால்தான் யாவும் நடைபெறும்.

 

     ஆதியும் அந்தமுமாக இருக்கிற பரமேசுவரன் உலகத்திற்கு அருள் செய்வதற்காகக் கந்தப் பெருமானை அருளினான். ஐந்து முகக் கடவுள் ஆறுமுகக் கடவுளின் மூலம் தன் கருணையை மிகுதியாகப் பரவச் செய்தான். சரவணபவன் உலகத்துக்கு வரும்போது உலகத்துக்கு மூலகாரணமாக இருக்கின்ற ஐம்பூதங்களின் முத்திரையைப் பெற்றே வந்தான். ஐந்து பூதங்களின் சம்பந்தம் உண்டாகிவிட்டது.  பராசக்தியில் இருந்து சிவபெருமான் தனித்து நின்றபோது அவன் கண்களிலிருந்து முருகன் வெளிப்பட்டதனால் முருகனுக்கு பூரணத்துவம் ஏற்படவில்லை. இறைவியின் அருள் சேராவிட்டால் ஒன்றும் நடவாது. உலகத்தில் காதலர் இருவர் கருத்தொருமித்து இருப்பதுவே இன்பம். பரமேசுவரனே படைத்தாலும் அது வெறும் ஞானமயமாகத்தான் இருக்கும். அது செயல் புரிய வேண்டுமென்றால், பராசக்தியின் அருள் வேண்டும்.

 

     வெறும் பொன்னாக இருப்பதனால் பயன் இல்லை. அது பயன்பட வேண்டுமென்றால் ஆபரணமாக வேண்டும் அல்லது நாணயமாக அடிக்க வேண்டும். வெறும் ஈயத்தைப் பாத்திரத்தில் பூச முடியாது. ஈயம் பூச வேண்டுமென்றால் சிறிது நவாசாரம் சேர்க்க வேண்டும். அதைப் போலப் பரமேசுவரனுடைய கண்களினின்று வெளிப்பட்ட ஆறு பொறிகளிலிருந்து உண்டான குழந்தைகளால் உலகத்திற்குப் பயன் ஏற்பட வேண்டுமென்றால் எம்பெருமாட்டியின் அருள் தொடர்பு வேண்டும். அன்னை வரவில்லையே என்று முருகப் பெருமான் சரவணப் பொய்கையில் காத்துக் கொண்டிருந்தான். ஆறு குழந்தையாக இருந்து விளையாடினான். பிரிந்த பொருள் எதுவும் உலகத்தைக் காக்காது. ஒன்றுபடுவது, கூடுவது, இன்பத்தைத் தரும். எந்த இன்பமானாலும் பிரிந்திருந்தால் இன்பம் இல்லை. முருகன் ஆறு குழந்தையாகப் பிரிந்திருக்கிற வரைக்கும் உலகத்துக்குப் பயன்படவில்லை. எம்பெருமாட்டி வந்து அணைத்தபோதுதான் ஆறுமுகமும், பன்னிரு திருக்கரங்களும் உடைய ஒரு குழந்தை ஆனான். அவனுக்குக் "கந்தன்" என்றே பேர் புனைந்தாள் அம்மை. அப்பொழுது உலகத்திற்குப் பயன்படுகிற நிலை வந்தது. எம்பெருமாட்டி கந்தனுக்குப் பால் கொடுத்தாள். திருந்தப் புவனங்கள் ஈன்ற பொற்பாவையின் திருமுலைப் பாலை அருந்தினான் கந்தன். எம்பெருமாட்டியின் தனங்களிலே வாய் வைத்துப் பால் அருந்தவில்லை. திருஞானசம்பந்தப் பெருமானுக்கு உமாதேவி தன் திருமுலைப் பாலைப் பொற் கிண்ணத்தில் கறந்து அதில் சிவஞானத்தைக் குழைத்து அருத்தினாள். எம்பெருமாட்டி உலகிலுள்ள மற்ற தாய்மார்களைப் போலக் கருவுற்றுக்  குழந்தையைப் பெறுபவள் அல்ல. தன்னுடைய கருணைத் திருநோக்கத்தால் உலகம் முழுவதையும் ஈன்றும், அவள் இன்னும் கன்னியாகவே இருக்கிறாள். இது உலக இயலுக்கு விரோதமாகத் தோன்றும். எம்பெருமாட்டியின் தனம் குழந்தை வாய் வைத்துப் பால் குடிப்பதற்கோ, போகத்திற்கோ உரியது அல்ல.

 

"ஆதி நாயகன் கருணையாய் அமலமாய்ப் பரம

போத நீரதாய் இருந்ததன் கொங்கையில் பொழிபால்

ஏது இலாததோர் குருமணி வள்ளம் மீது ஏற்றுக்

காதல் மாமகற்கு அன்பினால் அருத்தினள் கவுரி"

 

என்று கந்த புராணம் கூறுகிறது.

 

     கவுரி ஆகிய எம்பெருமாட்டியின் தனங்கள் ஆதிநாயகனுடைய கருணையே உருவமாக இருப்பவை; அமலமாய் இருப்பவை; பரிசுத்தம் சிறிதும் குறைவு இல்லாதனவாய், மலம் இல்லாதனவாய் உள்ளவை: பரமபோதமாய் உள்ளவை.  போதம் என்பது ஞானம்; உயர்ந்த ஞானம் எதுவோ, அதுவே மயமானவை அவை. ஆதலால்தான் எம்பெருமாட்டி தந்த முலைப்பால்,ஞானப்பால் ஆயிற்று. அதையே திருஞானசம்பந்தர் உண்டார். ஞானப் பசியை ஆற்றுகின்ற பாலை, பிறப்பு இறப்புப் பிணியைப் போக்குகின்ற பாலைக் குற்றமில்லாத இரத்தினக் கிண்ணத்தில் ஏற்று, கந்தப் பெருமானாகிய தன் மகனுக்கு கவுரி ஊட்டினாள் என்று கந்தபுராணம் கூறுகிறது.

 

     அந்தக் குழந்தை, இமயமலைச் சாரலிலே, தருப்பைக் காட்டின் நடுவில் அமைந்திருந்த சரவணப் பொய்கையில் அழகாக மலர்ந்திருந்த தாமரைகளையே தொட்டிலாகக் கொண்டு விளையாடினான். சரவணப் பூந்தொட்டில் ஏறி அறுவர் கொங்கை விரும்பி முருகன் அழுதான். பசி எடுத்தவனைப் போல அழுதான். அது,பிறருக்கு அருள் செய்யவேண்டும், தனக்குத் தொண்டு செய்து பிறர் நன்மை அடைய வேண்டும் என்ற கருணையாகிய பசி. கருணைப் பசி எடுத்த குழந்தை உலகியலை ஒட்டிப் பாலுக்காக அழும் குழந்தையைப் போல விம்மி விம்மி அழுதான். சரவணப் பொய்கையில் தாமரையாகிய தொட்டிலில் விளையாடிக் கொண்டிருந்த முருகனுக்கு முதலில் கார்த்திகை மாதர்களே பால் கொடுத்து வளர்த்தார்கள். பிறகுதான் உமாதேவி வந்து வாரி அணைத்து, ஆறுமுகமும், பன்னிரு திருக்கரங்களும் உடைய ஆறுமுகநாதனாக உருவம் ஏற்ற முருகப் பெருமானுக்கு, தன் கொங்கையில் ஊறிய பரமஞானமாகிய பாலைப்  பொற் கிண்ணத்தில் கறந்து அருத்தினாள் என்பது வரலாறு. இது தோத்திர நூல் ஆனதால் முன் பின்னாகச் சொல்லப்பட்டது.

 

     சூரபதுமன் என்ற அரக்கன் தேவர்களுடைய அரசைக் கைப்பற்றி, அவர்களைச் சிறையில் இட்டான். உலகிலுள்ள உயிர்கள் துன்பம் உறும் வண்ணம் கொடுமை ஆட்சி புரிந்து கொண்டிருந்தான். அவனை அடக்குவார் யாரும் இல்லாததால் அவன் பலம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டிருந்தது. சரவணப் பொய்கையில் தாமரைத் தொட்டிலில் படுத்து அழுகிற குழந்தையின் அழுகையைக் கேட்டவுடன் அவன் உடம்பு நடுங்க ஆரம்பித்து விட்டது. 'நம் வாழ்நாளையே குலைக்கவந்த குழந்தையின் அழுகுரல் போலல்லவா இருக்கிறது?' என எண்ணியவன் அழ ஆரம்பித்துவிட்டான். 

 

     சூரபதுமனுக்குத் தம்பியான தாரகனுக்கு மாயைகள் பல புரியத் துணையாக இருந்த கிரவுஞ்ச மலையும் அழத் தொடங்கியது.குழந்தை விம்மி அழ அழ,இவர்களும் அழ ஆரம்பித்து விட்டார்கள். அதைக் கேட்ட மாத்திரத்தில், 'பெரும்பாவியாகிய சூரபன்மனுக்கு ஒளிய இடம் கொடுக்கப் போய் நாம் அழிந்து போகப் போகிறோமே!’ என்று கடல் அழ ஆரம்பித்தது.

 

     எந்த நூலை எடுத்துக் கொண்டாலும், அந்த நூலின் முடிவில் அந்த நூலைப் படிப்பவருக்கு என்ன பயன் உண்டாகும் என்று சொல்வது வழக்கம். இது பாராயண நூல்களுக்குப் பொருந்தும். வடமொழியில் 'பலசுருதி'என்று சொல்வார்கள். திருஞானசம்பந்தப் பெருமானும், சுந்தரமூர்த்தி நாயனாரும் தம் திருப்பதிகங்கள் எல்லாவற்றுக்கும் அப்படிச் சொல்லியிருக்கிறார்கள். அப்பர் பெருமான் ஒரு சில திருப்பதிகங்களுக்கு அவ்வாறு சொல்லி உள்ளார். ஒன்பதாம் திருமுறைப் பாடல்களுக்கும் சொல்லப்பட்டு உள்ளது. ஆழ்வார்கள் அருளிச் செயல்களுக்கும் அவ்வாறே உள்ளது. திருமுருகாற்றுப் படைக்கு எந்தவிதமான பயனும் சொல்லப்படவில்லை. பிற்காலத்தில் திருமுருகாற்றுப்படயின் அனுபவத்தை உணர்ந்த புலவர்களில் யாரோ ஒருவர் அந்தப் பத்துப் பாடல்களையும் பாடி அவற்றோடு சேர்த்திருக்கிறார்.

 

"நக்கீரர் தாம்உரைத்த நன் முருகாற்றுப்படையைத்

தற்கோல நாள்தோறும் சாற்றினால்,- முற்கோல

மாமுருகன் வந்து,மனக்கவலை தீர்த்து அருளித்

தாம் நினைத்த எல்லாம் தரும்"

 

என்று நக்கீரரை மரியாதையாகச் சொல்வதால் அவற்றைப் பாடியவர் வேறு ஒருவரே என்று தெரிகிறது. தம்மைச் சொல்லிக் கொள்ளும்போது நக்கீரர் என்று மரியாதையாக அவரே சொல்லிக் கொள்ளமாட்டார். அந்தப் பாடல்கள் மிகவும் இனிமையாக, உள்ளம் குழைந்து பாடிய பாடல்களாக உள்ளன.

 

     "என்றும் இளையவனாய் குழந்தை வேலனை, இளங்குருத்தை, பச்சிளம் பாலகனை,  தலைவன் என்று சொல்கிறது என்று பாடும் இப்பாட்டில் அருணகிரியார் முருகனது அவதாரத்தையும், அவனது திருவிளையாடல்களையும் மிக அலங்காரமாகப் பாடியுள்ளார்.

 

"திருந்தப் புவனங்கள் ஈன்றபொற்பாவை திருமுலைப்பால்

அருந்தி,சரவணப் பூந்தொட்டில்ஏறி,அறுவர்கொங்கை

விரும்பி,கடல்அழ,குன்று அழ,சூர்அழ,விம்மிஅழும்

குருந்தைக் குறிஞ்சிக் கிழவன் என்றுஒதும் குவலயமே!"

 

இதன் பொருள் ---

 

     ஆன்மாக்கள் ஆணவ மலத்தினின்றும் தீங்கித் திருந்தி உய்யுமாறு உலகங்கள் யாவையும் பெற்று அருளியவளும், பொன்னால் செய்த பதுமையைப் போன்றவரும் ஆகிய உமாதேவியாரது தெய்வீகமான முலைகளில் இருந்து பெருகிய ஞானப்பாலைப் பருகி, சரவணப் பெய்கையில் உள்ள தாமரை மலர் ஆகிய தொட்டிலின் மீது ஏறி, கார்த்திகைப் பெண்கள் ஆகிய ஆறு தாய்மார்களுடைய திருமுலைப்பாலை உண்ண விருப்பம் கொண்டு, கடல் அழவும், கிரவுஞ்சமலை அழவும், சூரபதுமன் அழவும், தானும் விம்மி அழுத இளங்குழந்தையை, இந்த உலகமானது குறிஞ்சி நிலத்திற்குத் தலைவன் என்ற சொல்லும்.

063. இடுக்கண் அழியாமை - 04. மடுத்தவாய் எல்லாம்

 திருக்குறள்  பொருட்பால்  அ. அரசியல் அதிகாரம் 63 -- இடுக்கண் அழியாமை இந்த அதிகாரத்துள் வரும் நான்காம் திருக்குறளில், "பாரம் சுமக்கையி...