ஆத்திசூடி --- 14. கண்டு ஒன்று சொல்லேல்

 

 

 

                                          14. கண்டு ஒன்று சொல்லேல்.

 

     (பதவுரை) கண்டு --- (ஒன்றைக்) கண்டு, ஒன்று --- வேறொன்றை, சொல்லேல் --- சொல்லாதே.

 

     (பொழிப்புரை) கண்ணால் கண்டதற்கு மாறாகச் சொல்லாதே.

 

     பொய்ச் சாட்சி சொல்லக் கூடாது. கண்ணால் கண்ட உண்மைக்கு மாறாகப் பொய் சொல்லக் கூடாது.

 

     "பொய்" என்னும் சொல்லுக்கு, மாயை, போலியானது, உண்மை அல்லாதது, நிலையாமை, உள்துளை, மரப்பொந்து, செயற்கையானது என்று பொருள் உண்டு.

 

     "நிலையாமை" என்று சொல்லவே, பொய்யானது நிலைத்து இருக்காது என்பது தெளிவாகும்; என்றாவது ஒரு நாள் வெளுத்துப் போகும் என்று அறியலாம்.

 

     போலியானது என்று சொல்லவே, உண்மையைப் போன்று புனைந்து சொல்லப்படுவது "பொய்" என்பதும், அது உள்ளத்தில் உள்ள வஞ்சகத்தின் விளைவாக உண்டானது என்றும் தெரிந்து கொள்ளலாம்.

 

     சொல்வன்மையினால் பொய்யை உண்மை போலக் காட்டலாம் என்பதைக் காட்டுகின்றது,  "வெற்றிவேற்கை" என்னும் "நறுந்தொகை".

 

"பொய்யுடை ஒருவன் சொல் வன்மையினால்

மெய் போலும்மே; மெய் போலும்மே".

"மெய்யுடை ஒருவன் சொல மாட்டாமையால்

பொய் போலும்மே; பொய் போலும்மே".

 

     பொய்யைச் சொல்லுகின்ற ஒருவன், தனது சொல்வன்மையால், பொய்யையும் மெய்யாகக் காட்டி விடுவான்.

 

     சொல்ல விரும்பும் கருத்துகளை ஒருவனால் சரியாக எடுத்துச்சொல்லும் வல்லமை இல்லையானால், அவனால் எந்தக் கருத்தையும் நிலை நாட்ட இயலாது. அவன் உண்மையைச் சொன்னாலும் பொய்யாகவே கருதப்படும்.

 

     பொருளிலே தான் உலகம் உள்ளது என்பதை, வள்ளல் பெருமான் ஒரு பாடலில் காட்டி உள்ளார்.

 

பொருளிலே உலகம் இருப்பது, ஆலினால்,

     புரிந்துநாம் ஒருவர்பால் பலகால்

மருவினால், பொருளின் இச்சையால் பலகால்

     மருவுகின்றான் எனக் கருதி

வெருவுவர் என நான் அஞ்சி, எவ்விடத்தும்

     மேவிலேன், எந்தை! நீ அறிவாய்,

ஒருவும் அப் பொருளை நினைத்தபோது எல்லாம்

     உவட்டினேன் இதுவும் நீ அறிவாய்.

 

     எனவே, பொருளால்தான் எல்லாம் ஆகும் என்னும் அறிவு மயக்கம் கொண்டு மக்கள் வாழ்வது அறியவரும். பொருள் கருதியே உலகில் பொய்யர்கள் இயங்குகின்றனர் என்பதைப் பின்வரும் பாடலால் அறிந்துகொள்ள முடிகின்றது.

 

பூசாரி பொய்யும், புலவோர் உரைத்த பொய்யும்,

காசுஆசை வேசியர்கள் கற்ற பொய்யும் --- கூசாமல்

தட்டார் உரைத்த பொய்யும், சவளிக்கடைப் பொய்க்குக்

கட்டாவே கால்வாசி காண்.

 

என்று "விவேகசிந்தாமணி" கூறும்.

 

     பக்தர்களிடம் இருந்து கூட்டாகப் பணத்தைப் பெற்றுக் கொண்டு, ஒரே அர்ச்சனையில் பணியை முடித்து விட்டதாகக் கோயில் பூசாரிகள் பொய் கூறுகின்றனர். இன்னதைச் செய்தால் இன்னது கிடைக்கும் என்றும் போலியாக மக்களை நம்ப வைத்துப் பணம் பண்ணுகின்றனர். அறிவால் நிரம்பாமல், கற்றவர் போல் நடித்துத் திரியும் போலிப் புலவர்கள் பொய் கூறுகின்றனர். தங்கள் நடிப்புத் தொழிலுக்கு ஏற்பப் பலரிடமும் பணத்தைப் பறிப்பதற்குப் பசப்புச் சொற்களையும், பொய்யான சொற்களையும் வீசிச் சிக்கவைக்கும் வேசியர்களின் பொய் ஒருபுறம். பொற்கொல்லர்கள், தங்களிடம் கொடுக்கும் பொன்னில் சிறிதேனும் எடுத்துக் கொண்டு, விரும்பும் அளவு செம்பு சேர்த்து, சேதாரம் என்றும், செய்கூலி என்றும் கூசாமல் பொய் சொல்லுகின்றனர். இந்தப் பொய்கள் யாவும், சவுளிக் கடைக்காரர்கள் சாயம் போகும் துணிகளைக் கெட்டிச் சாயம் உள்ளது என்றும், அழுத்தம் அற்ற துணியை அழுத்தம் உள்ள துணி என்றும். இன்னும் பற்பல விதமாகக் கூறுகின்ற பொய்களுக்குக் கால் பங்கும் இணை ஆகா.

 

     கோயில் பூசாரிகள், போலிக் கவிஞர்கள், பொற்கொல்லர்கள் கூறுகின்ற பொய்யால் பொருள் நட்டம் மட்டுமே உண்டாகும். ஆனால், சவுளிக்கடைக்காரர் கூறுகின்ற பொய்யால் பொருள் இழப்போடு, அவமானமும் உண்டாகும். எனவே, சவளிக் கடைக்காரர்கள் கூறுகின்ற முழுப் பொய்க்கு, முன்னர் கூறியவர்கள் பொய்யானது கால்பங்கே ஆகும்.

 

     பணம் பண்ணுவதற்காகவே எப்படி எப்படி எல்லாம் பொய் சொல்லுகின்றார்கள் என்பதை எண்ணிப் பார்க்க நெஞ்சம் நடுங்குவதும் உண்மைதான். பொருள் கருதிக் கூறுகின்ற இவ்விதமான பொய்கள் எல்லாம் துன்பத்தில் கொண்டு விடும் என்று அறிவுறுத்துகின்றார் பட்டினத்தடிகள்.

 

“நாப்பிளக்கப் பொய்யுரைத்து, நவநிதியம் தேடி,

நலம் ஒன்றும் அறியாத நாரியரைக் கூடி,

பூப்பிளக்கப் பொய்யுரைத்து, புற்றீசல் போலப்

புலபுலெனக் கலகலனப் புதல்வர்களைப் பெறுவீர்!

காப்பதற்கும் வழி அறியீர்! கைவிடவும் மாட்டீர்!

கவர் பிளந்த மரத்துளையில் கால் நுழைத்துக் கொண்டே,

ஆப்பு அதனை அசைத்துவிட்ட குரங்கு அதனைப் போல

அகப்பட்டீர், கிடந்து உழல அகப்பட்டீரே.

 

இதன் பொருள் ---

 

     நாக்கு வெடிக்கும்படியாகப் பொய்களைப் பேசி, நவநிதியை ஒப்ப ஏராளமாகப் பொருள்களைச் சம்பாதித்து, நன்மை என்பது ஒன்றையும் அறியாத பெண்களைச் சேர்ந்து இன்புற்று இருந்து, பூமியானது பிளவுபடும்படி வெளிப்படுகின்ற புற்றில் இருந்து புறப்படுகின்ற ஈசல்களைப் போலப் புலபுல எனவும், கலகல எனவும் பிள்ளைகளைப் பெற்று விடுகின்றீர்கள். அவைகளைக் காப்பாற்றும் வித்தை அறிந்துகொள்ள மாட்டீர்கள். கைவிடவும் மாட்டீர்கள். இரண்டாகப் பிளந்துள்ள மரத்துளையில் காலை நுழைத்துக் கொண்டு, அதில் பொருத்தப்பட்டுள்ள ஆப்பினை அசைத்து, அசைத்துப் பிடுங்கிவிட்டுத் துன்புறுகின்ற குரங்கினைப் போல இவ்வுலகத்தில் அகப்பட்டுக் கொண்டீர்கள். துன்பத்தில் உழன்றுகொண்டு இருக்கின்றீர்கள்.

 

     பொருளாசை கொண்டு இப்படிப் பொய்யைச் சொல்லி வாழ்வதால், பொருள் நில்லாமல் நீங்குவது மட்டும் அல்லாமல், உண்பதற்கு உணவும் இல்லாமல் போய்விடும் என்பதை உணர்த்த, "பொய் சொன்ன வாய்க்குப் போசனம் கிட்டாது" என்னும் பழமொழி உண்டாயிற்று. இந்தப் பழமொழிக்கு விளக்கமாக, "பழமொழி விளக்கம்" என்று வழங்கப்படுகின்ற "தண்டலையார் சதகம்" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்..

 

கைசொல்லும் பனைகாட்டும் களிற்றுஉரியார்

     தண்டலையைக் காணார் போலப்

பொய்சொல்லும் வாயினர்க்குப் போசனமும்

     கிடையாது! பொருள் நில்லாது!

மைசொல்லும் கார் அளிசூழ் தாழைமலர்

     பொய்சொல்லி வாழ்ந்தது உண்டோ?

மெய்சொல்லி வாழாதான் பொய்சொல்லி

     வாழ்வதில்லை! மெய்ம்மை தானே!

 

இதன் பொருள் ---

 

     சொல்லும் பனைகாட்டும் கைக் களிற்று  உரியார் தண்டலையைக் காணார் போல --- கூறப்படும் பனையைப் போலும் துதிக்கையினை உடைய யானையின் தோலைப் போர்த்தவரான சிவபெருமான் எழுந்தருளி இருக்கும் திருத்தண்டலை என்னும் திருத்தலத்தைக் கண்டு வழிபடாதவருக்கு, உணவு கிடைக்காததைப் போல,

பொய் சொல்லும் வாயினர்க்குப் போசனமும் கிடையாது--- பொய் கூறும் வாயார்க்கு உணவும் கிடைக்காது, பொருள் நில்லாது --- பொய்யைச் சொல்வதால் அவரிடத்திலே உண்டான பொருளும் அழியும், மை சொல்லும் கார் அளி சூழ் தாழை மலர் பொய் சொல்லி வாழ்ந்தது உண்டோ --- மேகம் சூழ்ந்ததைப் போலக் கரிய வண்டினத்தால் சூழப்பட்ட தாழைமலர் பொய் சொல்லி வாழ்வு பெற்றதா?  (இல்லை. ஆகையால்) மெய் சொல்லி வாழாதான் பொய் சொல்லி வாழ்வது  இல்லை --- உண்மையைப் பேசி வாழாதவன் பொய் சொல்லி வாழப் போவது இல்லை, மெய்ம்மை தான் --- இது உண்மையே ஆகும்.

 

     திருமாலும் பிரமனும் தம்முள் பிணங்கித் தாமே பரம்பொருள் என்று செருக்குக் கொண்டபோது, சிவபெருமான் கொண்டருளிய ஒளிமலை வடிவத்தின் அடியைத் திருமாலும் முடியை நான்முகனும் காணச் சென்றனர். தான் கொண்ட அன்னப் பறவை வடிவத்தைக் கொண்டு மேலும் பறந்து செல்ல முடியாமல் சோர்வுற்று நின்ற பிரமன், சிவபிரான் முடியினின்றும் விழுகின்ற தாழை மலரைக் கண்டான். அது  சிவபிரான் முடியைப் பிரமன் கண்டதாக அவன் வேண்டுகோளின்படி சிவபிரானிடம் பொய்ச் சான்று கூறியது. தாழை மலர் பிரமதேவனைப் பாதி வழியில் தான் கண்டது. சிவபரம்பொருளின் திருமுடியைப் பிரமதேவன் கண்டதாகக் காணவில்லை. ஆனால் கண்டதற்கு மாறாகப் பொய் சென்னதால், மணம் நிறைந்த தாழம்பூவானது சிவபெருமானுக்கு ஏற்புடையதாகக் கொள்ளப்படவில்லை. தாழம் பூவானது பொய் சொல்லி, வாழ்வு இழந்தது.

 

     பிரமன் பொய்யைச் சொன்னான் என்பதை, நமது கருமூலம் அறுக்கவந்த திருமூல நாயனார் கூறுமாறு காண்க...

 

அடிமுடி காண்பார் அயன்மால் இருவர்,

படி கண்டிலர், மீண்டும் பார்மிசைக் கூடி

அடி கண்டிலேன் என்று அச்சுதன் சொல்ல,

முடிகண்டேன் என்று அயன் பொய் மொழிந்தானே.    --- திருமந்திரம்.   

 

     மனிதனுக்கு வாய் வாய்த்தது இறைவனை வாழ்த்தவும், உண்மையே பேசவுமே. "வாயே வாழ்த்து கண்டாய், மதயானை உரி போர்த்துப் பேய் வாழ் காட்டு அகத்து ஆடும் பிரான் தன்னை வாயே வாழ்த்து கண்டாய்" என்றார் அப்பர் பெருமான். இறைவனை வாழ்த்தாமல், பொருளுக்காகப் பிறரையே அண்டி நின்று இச்சகம் பேசித் திரிபவர், ஏழ்மையில்தான் உழலுவாரகள் என்பதைக் காட்ட, "எந்தை நினை வாழ்த்தத பேயர் வாய் கூழுக்கும் ஏக்கற்று இருக்கும் வெறுவாய்" என்றும், இறைவனது பொருள்சேர் புகழை எப்போதும் வாழ்த்துபவர்கள், வறுமையில் வாடமாட்டர் என்பதை, "ஐய! நின் சீர் பேசு செல்வர் வாய் நல்ல தெள்ளமுது உண்டு உவந்த திருவாய்" என்றும் அருளினார் வள்ளல் பெருமான்.

 

     எனவே, பொருள் கருதி, உள்ளத்தில் வஞ்சத்தை வைத்து, பொய் சொல்லி வாழ்வதால் நன்மை ஏதும் விளைவதில்லை. மாறாக, உண்மையே சொல்லி வாழ்ந்தால், நன்மைகள் பலவும் விளைந்திடும், மனிதரில் தேவனாகவும் மதிக்கப்படுவர் என்கின்றது, "விவேக சிந்தாமணி".

 

மெய்அதைச் சொல்வார் ஆகில்

     விளங்கிடும் மேலாம் நன்மை,

வையகம் அதனைக் கொள்ளும்,

     மனிதரில் தேவர் ஆவார்,

பொய்அதைச் சொல்வார் ஆகில்,

     போசனம் அற்பம் ஆகும்,

நொய்யவர் இவர்கள் என்று

     நோக்கிடார் அறிவு உள்ளோரே.

 

     இதன் பொருள் ---

 

     உண்மையையே பேசுகின்ற ஒருவரிடம் நன்மகளை யாவும் ஒளி பெற்று விளங்கும். அவர்களை மேன்மையானவர் என்று இந்த உலகம் ஏற்றுக் கொள்ளும். அன்றியும், அவர்கள் மனிதர்களில் தேவரைப் போன்று விளங்குவர். பொய்யைச் சொல்வார்களேயானால், அவர்களுக்கு உண்ண உணவு கிடைக்காது. அறிவுடைய மக்கள், பொய்யைச் சொல்பவர்களை அற்பர் என்று எண்ணித் தமது கண்களால் பார்க்கவும் மாட்டார்கள்.

 

     எனவே, கண்ணால் காண்பது ஒன்றாகவும், சொல்லுவது ஒன்றாகவும் இருத்தல் கூடாது; கண்டதையே சொல்லவேண்டும் என்பதை வலியுறுத்த, ஔவைப் பிராட்டியார், "கண்டு ஒன்று சொல்லேல்" என்று அறிவுறுத்தினார்.

ஆத்திசூடி --- 13. அஃகம் சுருக்கேல்

 

 

13. அஃகம் சுருக்கேல்.

 

     பதவுரை --- அஃகம் --- (நெல் முதலிய) தானியங்களை, சுருக்கேல் --- குறைத்து விற்காதே.

 

     மிகுந்த இலாபத்துக்கு ஆசைப்பட்டுத் தானியங்களை, அளவு குறைத்து விற்காதே.

 

     பண்டைக் காலத்தில் பண்டமாற்று முறையே வழக்கில் இருந்தது. அவ்வாறு பண்டங்களை மாற்றும்போது, தனது ஆக்கத்தை மட்டுமே கருதி, பெறுகின்ற பண்டத்துக்கு ஏற்ற அளவு, தனது பண்டத்தை அளந்து கொடுக்காமல், அளவு குறைத்துக் கொடுப்பது புகழையோ, புண்ணியத்தையோ தராது. அச் செயல் பழிக்கு இடமாகி, பாவத்தையே பெருக்கும் என்பதால் ஔவைப் பிராட்டியார் இவ்வாறு அறிவுறுத்தினார்.

 

     இக் காலத்தில் இச் செயல் மிகவும் மலிந்து காணப்படுவது. எடைக் கருவிகளில் எப்படியெல்லாம் மாற்றங்களைக் கொண்டு வந்து, எடை குறைவாகப் பொருள்களைக் கொடுத்து, தாம் விரும்பிய விலையைப் பெறலாம் என்று செயல்படுபவர்கள் உண்டு. அது முறையற்றது என்பதால், அரசாங்கமே, WEIGHTS AND MEASURES    என்று ஒரு முறையை வகுத்து, அதைச் செம்மையாகச் செயல்படுத்தும் அமைப்பையும் உருவாக்கி வைத்துள்ளது. எல்லாவற்றையும் மீறி, எவ்விதத்திலாவது, அஃகம் சுருக்குகின்ற செயல் அரங்கேறிக் கொண்டுதான் உள்ளது.

 

     பிறர் பொருளையும், தம்முடைய பொருள் போலப் பாதுகாத்துச் செய்தால், அதுவே, வியாபாரம் செய்வாருக்கு, நல்ல வியாபாரம் சிறக்கும். இதனால் நடுநிலையோடு பொருந்தி வாணிகம் செய்தல் வேண்டும் என்பது தெளிவு. இந்த நடுவுநிலைமை என்பது அறமன்றத்தில் உள்ளோர்க்கும் பொருந்தி இருத்தல் வேண்டும் என்பதை வலியுறுத்தி,

 

வாணிகம் செய்வார்க்கு வாணிகம், பேணிப்

பிறவும் தம போல் செயின்.

 

என்னும் திருக்குறளை அருளிச் செய்தார் நாயனார்.

 

     பிறர் பொருளையும் தமது பொருள் போலப் பேணிச் செய்தால், வாணிகம் செய்வார்க்கு நடுநிலையான நல்ல வாணிகம் ஆகும். கொடுப்பது குறைவாகவும், பெறுவது மிகையாகவும் இருத்தல் கூடாது. கொடுக்கின்ற பொருளுக்கைத் தக்கதைப் பெறுதல் வேண்டும்.

 

     வாணிகத்தைத் தொழிலாக உடையவர், தமது தொழில் நன்றாக வாய்க்கப்பெற, உலகில் உள்ள பொருள்களைக் கொண்டு நீண்ட நாள் நன்றாக வாழவேண்டுமானால், தாம் பிறர் இடத்துக் கொள்ளும் பொருளுக்குச் சரியாக, குறைவு இல்லாமலும், தீய பொருள் அல்லாமலும், உள்ள பொருளையே கொடுத்தல் வேண்டும். அப்படிக்கு அல்லமால், நிரம்பப் பொருளைப் பெற்றுக்கொண்டு, குறைவாகப் பொருளை நிறுத்துத் தருதல் அடாது. பார்வைக்கு (SAMPLE) நல்ல பொருளைக் காட்டி, நம்பவைத்து, கலப்படப் பொருளைக் கொடுப்பதும் அல்லாது, எடையிலும் தவறு இழைத்தல் கூடாது. அவ்வாறு செய்தால், அவரது வாணிகம் மட்டும் அல்லாது, அவருக்கு முன்னிருந்த பொருளும் அழிந்து போகும்.

 

"நட்பிடை வஞ்சம் செய்து,

            நம்பினார்க்கு ஊன்மா றாட்டத்து

உட்படக் கவர்ந்தும், ஏற்றோர்க்கு

            இம்மியும் உதவார் ஆயும்,

வட்டியின் மிதப்பக் கூறி

            வாங்கியும், சிலர்போல் ஈட்டப்

பட்டதோ, அறத்தாறு ஈட்டு

            நம்பொருள் படுமோ என்னா".

 

எனத் திருவிளையாடல் புராணத்தில், மாமனாக வந்து வழக்கு உரைத்த படலத்தில் காட்டியுள்ளது உணர்க.

 

 இதன் பதவுரை ---

 

     நண்பர்களிடத்தும் கூட வஞ்சனை புரிந்தும், நம்பி ஒரு பொருளைத் தன்னிடத்தில் வைத்தவர் உயிர் மயங்குமாறு அப்பொருளைக் கவர்ந்தும், இரந்தவர்க்கு இம்மியளவும் கொடுத்து உதவாமலும், வட்டியை வரம்பு இல்லாமல் சொல்லி அங்ஙனமே வாங்கியும், சிலர் தேடுதல் போலத் தேடப்பட்ட பொருள் இது அல்ல. அறநெறியில் நின்று ஈட்டிய நமது பொருள் அழியுமோ? அழியாது.

            

     நண்பர் ஆயினார் மாட்டும் வஞ்சனை புரிந்து, அவரது பொருளைக் கவர்தல் கூடாது. நம்பி ஒரு பொருளை வைத்தவர்க்கு, அவரது உயிர் மயங்குமாறு அப்பொருளைக் கவர்தல் கூடாது. தம்மிடத்தில் வந்து இரந்தவர்க்கு இம்மி அளவும் கொடாதவராயும் இருத்தல் கூடாது. வட்டியில் வரம்பின்றிச் சொல்லி வாங்குதல் கூடாது. இவ்வாறு கூடாதவற்றைத் தள்ளி அறவழியில் ஈட்டிய பொருளானது அழியாது நிலைத்து இருக்கும் என்பது கருத்து.

 

            பூம்புகார் நகரத்து வணிகர்கள் நேர்மைக்கும் நாணயத்திற்கும் பெரய பெற்றவர்களாக விளங்கினார்கள்; மிகச் சரியான விலைக்கே பொருள்களை விற்றார்கள்; கூடுதலான விலைக்குப் பொருள்களை விற்பது தவறான செயல் என்று கருதி வாழ்ந்தார்கள். இது, 28.05.2021 அன்று கல்வித் தொலைக்காட்சி வழி நான் அறிந்த செய்தியாகும். அவ்வாறே பட்டினப்பாலை என்னும் நூல் கூறுவது காண்க.

 

"கொடுமேழி நசை உழவர்

நெடுநுகத்துப் பகல்போல

நடுவுநின்ற நல் நெஞ்சினோர்

வடு அஞ்சி, வாய்மொழிந்து,

தமவும் பிறவும் ஒப்ப நாடி,

கொள்வதூஉம் மிகைகொளாது,

கொடுப்பதூஉம் குறைகொடாது,

பல்பண்டம் பகர்ந்து வீசும்"     --- பட்டினப்பாலை.

 

     வாணிகம் கொள்வினையையும் விற்பனையையும் ஒப்பக் கருதப்பட வேண்டும். பொய்க்கும் கொள்ளைக்கும் இடந்தருதல் கூடாது. மொத்த வணிகர் (WHOLESALER), சில்லறை வணிகர் (RETAILER), கொள்வோர் (CONSUMER) ஆகிய முத்திறத்தார்க்கும் தீதும் கேடும் இல்லா நல்வாணிகம் இதுவே ஆகும்.

 

     பொருள் மீது கொண்ட பற்றுக் காரணமாக, அதைக் கவர்தல் வேண்டி, தமது உடம்பையே வாணிகம் செய்பவர்கள் விலைமாதர்கள்.  விலைமாதர்களைப் போன்று, தம்மை நாடி வருபவர்களின் பொருளைப் பறிப்பதையே தொழிலாக இருத்தல் கூடாது. அதனால், நாடி வந்தவர் முதலில் அழிந்து, அதனால் வந்த பாவத்தால் தாமும் பின்னாளில் அழிந்து போவர்.

 

            எனவே, ஒருவன் தனது ஆக்கத்தை மட்டுமே கருதி, தருகின்ற பொருளின் அளவைச் சுருக்காதே என்பதற்கு, "அஃகம் சுருக்கேல்" என்று அருளினார் ஔவைப் பிராட்டியார்.


063. இடுக்கண் அழியாமை - இன்னாமை இன்பம்

  திருக்குறள்  பொருட்பால்  அ. அரசியல் அதிகாரம் 63 -- இடுக்கண் அழியாமை இந்த அதிகாரத்துள் வரும் பத்தாம் திருக்குறளில், "ஒருவன் தொழில் ச...