குருடனுக்குக் குருடன் கோல் கொடுத்தல்

 

 

குருடனுக்குக் குருடன் கோல் கொடுத்து வழிகாட்டல்

-----

 

     புறக்கண்களை இழந்த குருடனுக்கு வழிநடத்த ஒரு கோல் வேண்டும். "கோல் கொடுத்தல்" என்பது, குருடருக்குப் பற்றுக் கோடு கொடுத்தல், கோலால் குருடனை வழிநடத்துதல் என்பதைக் குறிக்கும்.

 

     இங்கே குருட்டுத் தனம் என்பது,  அறிவுக் குருட்டையும் குறிக்கும். அறிவுக் குருடு உள்ளவனுக்கு நல்லறிவு புகட்டுவதை, "குருடனுக்குக் கோல் கொடுத்தல்" என்பர்.

 

     புறக் கண் குருடாக ஒருவனுக்கு இருக்குமானால், நல்ல மருத்துவர் ஒருவரால் பார்வையைப் பெற்றுக் கொள்ளலாம். குருட்டினை நீக்க முடியாதவன் போலி மருத்துவனாக இருக்கலாம். அல்லது, நீக்க முடியாத குருட்டுத் தன்மை உள்ளதாகக் கொள்ளலாம்.

 

     அதுபோல, அறிவுக் குருடாக ஒருவன் இருப்பானேயானால், அறிவுக்கண் சிறந்து உள்ள நல்ல குரு ஒருவரால், அவன் அறிவைப் பெற்று, அறியாமை என்ற பார்வைக் குறையைப் போக்கிக் கொள்ளலாம். போலிகள் எப்போதுமே முதலில் நம்பத் தகுந்தவையாகத் தான் தோற்றம் அளிக்கும். அறிவில் சிறந்து விளங்காத ஒருவன் தனது சுகவாழ்வைக் கருதி, குருவாக வேடம் இடுவதும் உண்டு என்பதை,"பொய் வேடம் பூண்பர் பொசித்தல் பலனாக" என்பார் திருமூல நாயனார்.

 

     அகத்தே தவ உணர்வோடு, புறத்தே தவவேடமும் வேண்டத் தக்கது தான். ஆனால், அகத்தே தவ உணர்வு இன்றிப் புறத்தே கொள்ளும் வேடம் பயனில்லாமல் போகும் என்கின்றார் திருமூல நாயனார்.

 

ஆடம்பரம் கொண்டு அடிசில் உண்பான் பயன்

வேடங்கள் கொண்டு வெருட்டிடும் பேதைகாள்!

ஆடியும் பாடியும் அழுதும் அரற்றியும்

தேடியும் காணீர் சிவன் அவன் தாள்களே.  --- திருமந்திரம்.

 

இதன் பொருள் ---

 

     முயலாது வைத்து வயிறு வளர்த்தலையே பயனகாகக் கருதித் தவத்தவரது பலவகைப்பட்ட வேடங்களைப் புனைந்து, அவற்றாலே பகட்டையும் மிகக் காட்டி உலகத்தாரை அஞ்சுவித்துத் திரிகின்ற அறிவிலிகளே!  உலகத்தாரின் வேறுபட்ட வேடத்தைக் கொண்ட நீங்கள், அந்த வேடத்திற்குப் பொருந்துமாறு, உண்மை அன்பால் ஆடியும், துதிப்பாடல்கள் பலவற்றைப் பாடியும், அழுதும், `சிவன் எங்கேனும் காணப்படுவானோ` என்று தேடியும் நின்று, சிவனது திருவடிகளைக் காணும் பேற்றைப் பெறுங்கள். அதுவே பயன் உடையது ஆகும்.

 

         இதனால், உள்ளத்தில் தவ உணர்வு சிறிதும் இல்லாமல், புறத்தே வேடம் கொண்டு திரிவது, உலகத்தாரை வெருட்டுவதற்கு மட்டுமே பயன்படும். இது அஞ்ஞானத்தின் வெளிப்பாடு.

 

இழிகுலத்தோர் வேடம் பூண்பர் மேல் எய்த;

வழி குலத்தோர் வேடம் பூண்பர்தே ஆகப்

பழிகுலத்து ஆகிய பாழ் சண்டர் ஆனார்;

கழி குலத்தோர்கள் களையப் பட்டோரே. --- திருமந்திரம்.

 

இதன் பொருள் ---

 

     தாழ்ந்த குலத்தில் பிறந்தவர்கள் சிலர், ஒழுக்கத்தால் உயர்வு எய்த நினையாமல், எளிதில் மேன்மையைப் பெறுதல் பொருட்டுத் தவவேடத்தைப் புனைந்து கொள்வர். உயர்ந்த குலத்தில் பிறந்தவர்கள் சிலரும் அக்குலத்திற்கு ஏற்ற ஒழுக்கம் உடையவராய் நிற்கமாட்டாமையால், அக்குலத்தன்மை அழியப்பெற்று அந்நிலை நீங்கி, தம்மைக் கடவுளராக வைத்துப் பிறரால் போற்றப்படும் மிக உயர்ந்த நிலையைப் பெறுதற் பொருட்டுத் தவவேடத்தைப் புனைந்து கொள்வர். இவ் இருசாராரும், தொன்றுதொட்டே பழிபாவங்களைச் செயது பாழ்பட்டுவரும் கொடியவர்கள் ஆவர். இவர்கள், நாட்டில் பிற இனத்தவரோடு கூடி வாழ்வதற்குப் பொருத்தம் இல்லாதவர்கள். எனவே, இவர்கள் களையப்பட வேண்டியவர் ஆகின்றனர்.

 

     இக் காலத்தில் எளிதாக சுகபோக வாழ்க்கையை அனுபவிக்க ஏதுவாக உள்ளது போலித் தவ வேடமே ஆகும். உண்மைத் தவசிகள் பிச்சை ஏற்று வாழ்வர். ஆனால், போலித் தவவேடத்தார் ஆடம்பர வாழ்க்கையை மேற்கொண்டு HI-TECH சாமியார்களாக வாழ்ந்து கொண்டு இருப்பர்.

 

பொய்வேடம் பூண்பர் பொசித்தல் பயனாக;

மெய்வேடம் பூண்போர் மிகுபிச்சை கைக்கொள்வர்;

பொய்வேடம் மெய்வேடம் போலவே பூணினும்

உய்வேட மாகும் உணர்ந்தறிந் தார்க்கே. --- திருமந்திரம்.

 

இதன் பொருள் ---

 

     சிலர் எந்தத் தொழிலும் செய்யாது சோம்பி இருந்து வயிறு வளர்க்கக் கருதியே பொய்யாகத் தவ வேடத்தைப் புனைந்து கொள்வர். (அவர்கள் இல்வாழ்வாரை மருட்டியும், வெருட்டியும், உண்டு வாழ்வர்.) மெய்யாகவே தவவேடத்தைப் பூண்பவர் இல்வாழ்வார் அன்போடு அழைத்து இடும் உயரிய பிச்சையையே ஏற்பர். தோற்றத்தில் பொய்வேடமும் மெய்வேடம் போலவே பூணப்பட்டாலும், உணர்வோடு கூடாத பொய்வேடம் அவர்க்கு கெடுதற்கு ஏதுவாய வேடமாகவே அமையும்.) எனவே, தவத்தினது பெருமையை உணர்ந்து அதனைப் பூண்டு நிற்போர்க்கே அது அவர் உய்தற்கு ஏதுவான வேடமாகும்.

 

     எனவே, இவ்வாறு போலி வேடம் புனைந்து கொண்டு உலாவுபவர்களைக் குருவாக மதித்து, ஏற்றுக் கொண்டால், அறிவு விளங்கப் பெறாமல், போலிக் குருவானவன் பிறவித் துன்பத்திலே விழுவதைப் போலத் தானும் பிறவித் துன்பத்திலே விழுவான்.

 

     குருட்டுத் தன்மை உடைய இரண்டு குழந்தைகள் கூடிக் கண்ணைமூடி ஆடும் ஒருவகை விளையாட்டை விளையாடி, அதனால் இரண்டும் பாழும் குழியில் விழுந்து அழுந்தினாற்போலப் பக்குவம் இல்லாத சிலர் தமது அறியாமையைப் போக்கும் ஆற்றலுடைய நல்ல குருவைக் கொள்ளாமல், அவ் ஆற்றல் இல்லாத போலிக் குருவைக் குருவாகக் கொண்டு, அவர் அருள் வழங்க பெறுதலைச் செய்யின், இருவரும் பிறவித் துன்பத்தில் வீழ்ந்து அழுந்துவார்கள்.

 

     வேதங்களிலும் அருள் நூல்களிலும் இலைமறை காயாகப் பல உண்மைகள் சொல்லப்பட்டு உள்ளன. அவற்றினைத் தக்கவரைச் சார்ந்து இருந்து, ஓதி, அவற்றில் சொல்லப்பட்டுள்ள உண்மைப் பொருளை உணர்ந்து தெளிய வேண்டும். தக்கோர் கிடைப்பது இறையருளால் மட்டுமே முடியும். நாமாகத் தேடினால் நல்ல குரு வாய்க்கமாட்டார். குருட்டினை நீக்காத குருவை நமது தெளிந்த அறிவு இன்மையால் கொள்வோம்.

 

குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்

குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வார்

குருடும் குருடும் குருட்டு ஆட்டம் ஆடிக்

குருடும் குருடும் குழிவிழும் ஆறே.      

 

என்பார் திருமூல நாயனார்.

 

     குருட்டுத் தன்மை என்பது இங்கே ஆணவ மலத்தின் மறைப்பால் உண்டான அஞ்ஞானம் அல்லது அறியாமையைக் குறிக்கும். பக்குவம் இல்லாத சிலர் தமது அறியாமையைப் போக்கும் ஆற்றலுடைய நல்ல குருவைக் கொள்ளாமல், அவ் ஆற்றல் இல்லாத போலிக் குருவை (அவரது ஆடம்பரமான வேடத்தை மட்டுமே கண்டு அறிவு மயக்கம் கொண்டு) குருவாகக் கொண்டு, அவர் அருள் வழங்குவதாக எண்ணிக் கொண்டு,  அறுதியில் இருவருமே பிறவித் துன்பத்தில் வீழ்ந்து அழுந்துவார்கள்.

 

     போலி மருத்துவரால் நோயானது தீராது. ஆனாலும், போலி மருத்துவரும் உண்மை மருத்துவர் போலவே காணப்படுவார்.  அது போல, போலியான குருமார்களும் தமது கோலத்தால் குருவைப் போலவே தோன்றுவார்கள். அவர்களது தோற்றம் நமது அறிவை மயக்கும். ஆனால், அவர்களால் அறிவுத் தெளிவைப் பெற முடியாது.

 

     பக்குவம் உடையார்க்கு இறையருளால் உண்மைக் குருவின் அருள் கிடைக்கும். மாணவரது பக்குவத்திற்கு ஏற்ப, அவர் மெய்ப்பொருளை உணர்த்துவார். மாணவரின் நிலைக்கு ஏற்ப ஆசிரியர் பாடம் நடத்துவது போல.

 

     கண்ணுள்ளவன் குருட்டு ஆட்டம் ஆடினாலும் கூட, அவன் குழி ஏதாவது இருக்குமோ என்று தன்னைச் சுதாரித்துக் கொண்டே ஆடுவான். குழியில் விழாமலும் இருப்பான். ஆனால் கண்ணே இல்லாத ஒருவன் அந்த ஆட்டத்தை ஆட முற்பட்டால், அது கேட்டிலேயே முடியும்.

 

     குருடனுக்குக் குருடன் கோல் கொடுத்தது என்பதைப் பற்றி "தண்டலையார் சதகம்" விளக்குவதைச் சிந்திப்போம்....


 

அருள்மிகுத்த ஆகமநூல் படித்துஅறியார்!
     கேள்வியையும் அறியார்! முன்னே
இருவினையின் பயன்அறியார்! குருக்கள் என்றே
     உபதேசம் எவர்க்கும் செய்வார்!
வரம்மிகுத்த தண்டலைநீள் நெறியாரே!
     அவர் கிருபா மார்க்கம் எல்லாம்
குருடனுக்குக் குருடன்கோல் கொடுத்துவழி
     காட்டிவரும் கொள்கை தானே.

 

இதன் பொருள்....

 

     வரம் மிகுத்த தண்டலை நீள் நெறியாரே! --- நன்மை மிக்க திருத்தண்டலை என்னும் திருத்தலத்தில் நீள்நெறியில் கோயில் கொண்டு எழுந்தருளி இருப்பவரே! அருள் மிகுத்த ஆகமநூல் படித்து அறியார் --- (இறைவன்) அருள் மிகுந்துள்ள ஆகம நூல்களைக் கற்று அறியாதவராகவும், கேள்வியையும் அறியார் --- (பெரியோர்கள் வாயிலாக அருள் நூல்களின் நுண்பொருளை) கேட்டதன் மூலமாகவும் அறிவில்லாதவராகவும், முன்னே இருவினையின் பயன் அறியார் --- முன்செய்த நல்வினை தீவினைகளின் பயனை அறியாதவராகவும் இருந்தும், குருக்கள் என்றே எவர்க்கும் உபதேசம் செய்வார் --- ஆசிரியர் என்று தன்னைக் காட்டிக் கோலத்தால் மட்டுமே காட்டிக் கொண்டு சிலர் எல்லோருக்கும் உபதேசம் செய்கின்றனர், அவர் கிருபா மார்க்கம் எல்லாம் --- இப்படிப் பட்டவர்கள் சொல்லுகின்ற அருள்நெறி அனைத்தும், குருடனுக்குக் குருடன் கோல் கொடுத்து வழிகாட்டி வரும் கொள்கை தானே --- கண்ணில்லாத ஒருவனுக்கு, கண்ணில்லாத இன்னொருவன் கோல் கொடுத்து வழிகாட்டுவதைப் போலவே அமையும். குருடன் ஒருவனுக்கு, கண்பார்வை உள்ள இன்னொருவன் கோலைக் கொடுத்து வழிநடத்திச் செல்வதுதான் இயல்பு. குருடன் அப்போதுதான், வழி நடப்பதில் சிரமம் இல்லாமல் இருப்பான்.

 

     "அவர்களை விட்டுவிடுங்கள், அவர்கள் குருடருக்கு வழிகாட்டுகிற குருடராய் இருக்கிறார்கள்; குருடனுக்குக் குருடன் வழிகாட்டினால் இருவரும் குழியிலே விழுவார்களே என்றார்".    ----- (மத்தேயு)

 


No comments:

Post a Comment

பொது --- 1030. விட்ட புழுகுபனி

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்   விட்ட புழுகுபனி (பொது)   முருகா!  விலைமாதர் கூட்டுறவால் எனது அறிவு மயங்காமல் காத்து அருள்.            ...