மூடர்க்கு அறிவு நூல்களைச் சொல்லி அவமானப் படாதே

 

 

மூடர்க்கு அறிவு சொல்லி அவமானப் படாதே

-----

 

     நன்றாய்ப் படித்து எல்லாம் தெரிந்திருந்தும் கூட, "தம் அறிவுரைகளை மூடர்கள் ஏற்றுக் கொள்வார்கள் அல்லது ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்" என்று அறிந்து கொள்ளாமல், மூடர்கள் இருக்கும் இடம் சென்று அறிவுநூல்களைச் சொன்னால், அம்மூடர்கள் எவ்வாறு, ‘இவர்கள் படித்தவர்கள்: ஆதலால், இவர்களுக்கு மதிப்புக் கொடுத்து இவர்கள் கூறும் அறிவுரைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும்' என்று தெரிந்துகொள்வார்கள்.

 

      Human beings want to be sure of everything. We tend to believe that our opinions are very well-informed and valid, even though we often don't know why we think the way we do. It's not uncommon for these characteristics to outweigh reason itself. If learned men force instruction into the ears of the ignorant and thereby incur disrespect, the fault is their own. Why blame others, when, with all their wide learning, they know do not know the nature of those others?

 

     "புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற், நல்லவையுள் நன்கு செலச் சொல்லுவார்" என்னும் திருக்குறள் வழி, "அறிவு உள்ளவர் கூடி இருக்கும் உயர்ந்த இடத்தில் நன்கு உள்ளம் கொள்ளுமாறு சொல்லுவதில் வல்லவர், அறிவில்லார் கூடி இருக்கும் தாழ்ந்த இடத்தில், மறந்தும், கேட்போர் உள்ளம் கொள்ளாமல் பேசாது ஒழிக" என்று அறிவுறுத்தினார் திருவள்ளுவ நாயனார்.  

 

     "வெள்ளைக் கோட்டியும் விரகினில் ஒழிமின்" என்கின்றார் சிலப்பதிகாரத்தை அருளிய இளங்கோ அடிகள். அறிவில்லாதார் கூட்டத்தை விட்டு நீங்கும் உபாயத்தை அறிந்து நீங்குங்கள் என்பது அவர் கூறும் அறிவுரை.

 

     வரருசி என்பவர், பிரமதேவனிடத்தில், "நூற்றுக் கணக்கான வேறு துக்கங்களைத் தந்தாலும் தருக. மூடர்க்கு உபதேசம் புரிதலை மாத்திரம் என் தலையில் எழுதாதே, எழுதாதே!" என்று  ஒரு வரத்தை வேண்டினார்.

 

     "Give not that which is holy unto dogs. Neither cast ye your pearls before swine, lest they trample them under their feet and turn again and rend you."  --- St. Mathew.

 

கற்றன கல்லார் செவிமாட்டிக் கையுறூஉம் 

குற்றம் தமதே, பிறிதுஅன்று, --- முற்று உணர்ந்தும் 

தாம்அவர் தன்மை உணராதார், தம்உணரா 

ஏதிலரை நோவது எவன்.  

 

என்பது,  இந்த அரும்பொருளை வைத்து, "நீதிநெறி விளக்கம்" என்னும் நூலில் குமரகுருபர அடிகள் பாடிய பாடல்..

 

இதன் பொருள் ---

 

     தாம் கற்றன --- (நூல்களைப் படித்தவர்கள்) தாம் படித்து உணர்ந்ததை, கல்லார் செவிமாட்டி --- படிக்காத மூடர்களுடைய காதில் நுழைப்பதனால், கையுறூஉம் குற்றம் தமதே --- தமக்குப் பொருந்தும் அவமானக் குற்றம் தம்முடையதே, பிறிது அன்று --- வேறொருவரால் உண்டாவது அல்ல; முற்றும் உணர்ந்தும் --- எல்லாம் தெரிந்திருந்தும், அவர் தன்மை உணராதார் --- அம் மூடர்களுடைய மூடத்தன்மையை உணராதவர்கள், தம் உணரா ஏதிலரை நோவது எவன் --- தம்மைக் கற்றவர்கள் என்று உணர்ந்து கொள்ளாத அந்த மூடர்களை நொந்து கொள்வதால் என்ன பயன்? (பயன் ஒன்றும் இல்லை).

 

         ஏற்றுக்கொள்ளும் தகுதி உடையவர்களுக்கே தாம் அறிந்த அறிவுநூற் பொருள்களைக் கூறுதல் வேண்டும் என்பது கருத்து.

 

     இது குறித்துப் பிற நூல்களில் உள்ள கருத்துக்களைக் காண்போம்....

 

     பெருமைக்கு உரிய அறிவு நூல்களின் பொருளைக் கேட்டாலும், கீழ்மக்களின் மனமானது, தான் விரும்பிய வழியில்தான் செல்லும் என்கின்றது நாலடியார்.

 

கப்பி கடவதாக் காலைத்தன் வாய்ப்பெயினும்

குப்பை கிளைப்பு ஓவாக் கோழிபோல், - மிக்க

கனம்பொதிந்த நூல்விரித்துக் காட்டினும், கீழ்தன்

மனம்புரிந்த வாறே மிகும்.                ---  நாலடியார்.

 

இதன் பொருள் ---

 

     கப்பி கடவதா காலை தன்வாய்ப் பெயினும் குப்பை கிளைப்பு ஓவாக் கோழிபோல் --- நொய்யரிசியைத் தவிடு போகத் தெள்ளி, வேளை தவறாமல் கொடுத்து வந்தாலும், குப்பையைக் கிளறித் தின்னுவதை விடாத கோழியைப் போல், மிக்க கனம்பொதிந்த நூல் விரித்துக் காட்டினும் கீழ் தன்மனம் புரிந்தவாறே மிகும் --- மிக்க பெருமை நிறைந்த அறிவு நூல் உண்மைகளைப் பொருள் விளக்கி அறிவுறுத்தினாலும், கீழ்மகன் காதில் அது ஏறாது. அவன் தனக்கே இயல்பான இழிதொழில்களைச் செய்துகொண்டுதான் இருப்பான்.

 

     பால் சோற்றின் அருமையை, அதைச் செய்யும் அகப்பை உணராததுபோல, நல்ல நூல்களின் அருமையை அறிவில்லாதவர்கள் உணராது இகழ்வார்கள் என்கின்றது நாலடியார்.

 

அருளின் அறம் உரைக்கும் அன்புடையார் வாய்ச்சொல்

பொருளாகக் கொள்வர் புலவர்; - பொருள் அல்லா

ஏழை அதனை இகழ்ந்து உரைக்கும், பால்கூழை

மூழை சுவையுணரா தாங்கு.              --- நாலடியார்.

 

இதன் பொருள் ---

 

     அருளின் அறம் உரைக்கும் அன்புடையார் வாய்ச்சொல் பொருளாகக் கொள்வர் புலவர் --- (தாம் உணர்ந்து கொண்ட மெய்ப்பொருள் நூல் உண்மைகளைப் பிறரும் அனுபவித்து உணரவேண்டும் என்னும்) கருணை காரணமா, அன்புடைய பெரியயோர் கூறும் வாய்மொழிகளின் பெருமையை அறிவுடையோர் பெரும்பயன் உடையதாக மதித்து ஏற்றுக் கொள்வர்; பாற்கூழை மூழை சுவையுணராதாங்கு, பொருளல்லா ஏழை அதனை இகழ்ந்துரைக்கும் --- ஆனால் அகப்பையானது, தன்னைக் கொண்டு கிளரப்பட்ட பால் சோற்றின் சுவையை உணராதது போல, அறிவில்லாதவர்கள் பெரியோர்கள் கூறும் மொழிகளை இகழ்ந்து பேசுவார்கள்.

 

     சொல்லுகின்ற பாட்டின் பொருளை உணரக் கூடிய அறிவுடையார்  இல்லாத இடத்தில், பாட்டினைச் சொல்லப் புகுந்தால், அதன் பொருளை அறியும் அறிவில்லாதவர், அதனை மதிக்காததோடு, இகழவும் செய்வர் என்பதால் அது துன்பத்தைத் தரும் என்பதை, "பொருள் உணர்வார் இல்வழிப் பாட்டு உரைத்தல் இன்னா" என்கின்றது "இன்னா நாற்பது" என்னும் நூல்.

 

     "கல்லாதவர் இடைக் கட்டுரையின் மிக்கதோர் பொல்லாதது இல்லை ஒருவற்கு" --- கல்வியறிவு உடையவர் இல்லாத இடத்தில், அறிவு நூல்களை விளக்கிக் கூறும் கட்டுரையைப் பார்க்கிலும் தீமை தரும் செயல் வேறொன்றுமில்லை. என்கின்றது "பழமொழி நானூறு" என்னும் நூல்.

 

ஓர்த்த கருத்தும் உணர்வும் உணராத

மூர்க்கர்க்கு யாதும் மொழியற்க, - மூர்க்கன்தான்

கொண்டதே கொண்டு விடான் ஆகும், ஆகாதே

உண்டது நீலம் பிறிது.                --- பழமொழி நானூறு.

 

இதன் பொருள் ---

 

     ஓர்த்த கருத்தும் --- ஆராய்ந்து வைத்த கருத்தும், உணர்வும் --- உண்மையை அறியும் அறிவும், உணராத மூர்க்கர்க்கு யாதும் மொழியற்க --- அறியாத மூர்க்கர்களுக்கு ஒரு பொருளையும் சொல்லாது ஒழிக. நீலம் உண்டது பிறிது ஆகாது --- நீல நிறத்தை உண்டபொருள் வேறொரு நிறத்தைக் காட்டுதல் முடியாது. (அதுபோல), மூர்க்கன் தான் கொண்டதே கொண்டு விடான் ஆகும் --- மூர்க்கன் தான் மேற்கொண்டதனையே மனத்தின்கண் கொண்டு விடான்.

 

         மூர்க்கர்கள் பிறர் கூறுவனவற்றைக் கேட்டுத் திருந்தார். ஆராய்ந்த கருத்தும், ஆராயும் அறிவும் உடையார் அறிவுடையோர் ஆவர். பிறர் கூறுங்கால் அவர் கருத்தின் உண்மையையும் தம் கருத்தின் உண்மையையும் ஆராய்ந்து செம்மை உடையதனை மேற்கொள்ள வேண்டும். எனவே, உண்மையை ஆராயும் உணர்வு, அறிவுடையோர்க்கு இன்றியமையாதது. நீலம் உண்ட பொருள் தன்னை அடுத்த பொருளையும் நீலமாக்குதல் போல, மூர்க்கன் தான் கொண்ட தவறுடைய பொருளையே பிறருக்கும் போதிக்க முற்படுவான்.

 

பூத்தாலும் காயா மரமும் உள, மூத்தாலும்

நன்கு அறியார் தாமும் நனியுளர், - பாத்தி

விதைத்தாலும் நாறாத வித்து உள, பேதைக்கு

உரைத்தாலும் தோன்றாது உணர்வு. --- பழமொழி நானூறு.

 

இதன் பொருள் ---

 

     பூத்தாலும் காயா மரமும் உள --- பூத்தாலும் காய்க்கப் பெறாத பாதிரி முதலாகிய மரங்கள் உள்ளன, மூத்தாலும் நன்கு அறியார் தாமும் நனி உளர் --- வயது முதிர்ந்தாலும் நல்ல நூல்களை அறியாதவர்கள் தாம் மிகுதியும் உள்ளனர்; பாத்தி விதைத்தாலும் நாறாத வித்து உள --- எரு இட்டு வரம்பு கட்டப்பட்ட பாத்தியில் விதையினை விதைத்தாலும் முளைக்காத விதைகளும் உள்ளன. (அவைபோல), பேதைக்கு உரைத்தாலும் உணர்வு தோன்றாது --- அறிவில்லாதவனுக்கு அறிவுரைகளைச் சொன்னாலும், உண்மை உணர்வு அவனுக்குத் தோன்றாது.

 

பூவாதே காய்க்கும் மரமும் உள, மக்கள் உ(ள்)ளும்

ஏவாதே நின்று உணர்வார் தாம் உளரே---தூவா

விரைத்தாலும் நன்று ஆகா வித்து எனவே, பேதைக்கு

உரைத்தாலும் தோன்றாது ணர்வு.        --- நல்வழி.

 

இதன் பொருள் ---

 

     பூவாதே காய்க்கும் மரமும் உள --- பூவாமலே காய்க்கின்ற மரங்களும் உண்டு; (அதுபோல) மக்கள் உள்ளும் ஏவாதே நின்று தாம் உணர்வார் உளர் --- மனிதர்கள் உள்ளும், சொல்லாமலே தாமே அறிந்து செய்ய வல்லவரும் உண்டு ; தூவா விரைத்தாலும் நன்று ஆகா வித்து என --- தூவி விரைத்தாலும் முளைத்துப் பயன்படாத விதைபோல, பேதைக்கு உரைத்தாலும் உணர்வு தோன்றாது --- மூடனுக்கு (எடுத்து விளங்கச்) சொன்னாலும் (அதனை அறியும்) அறிவு (அவனிடத்து) உண்டாகாது.

 

பூத்தாலும் காயா மரமும்உள, நன்றுஅறியார்

மூத்தாலும் மூவார்,  நூல்தேற்றாதார் - பாத்திப்

புதைத்தாலும் நாறாத வித்துஉள, பேதைக்கு

உரைத்தாலும் செல்லாது உணர்வு.       --- சிறுபஞ்சமூலம்

 

இதன் பொருள் ---

 

     பூத்தாலும் காயா மரமும் உள --- பூத்திருந்தாலும் காய்க்காத மரங்களும் உண்டு, (அதுபோல) நன்று அறியார் மூத்தாலும் மூவார் --- நன்மையறியாதவர் ஆண்டுகளால் முதிர்ந்தாலும், அறிவினால் முதிர்ச்சி அடையமாட்டார்; நூல் தேற்றாதார் --- அறிவு நூல்களைக் கற்றுத் தெளியாதவர் (அத்தன்மையரே ஆவர்); பாத்தி புதைத்தாலும் நாறாத வித்து உள --- பாத்தி கட்டிப் புதைத்தாலும் முளைக்காத வித்தும் உண்டு, (அது போல) பேதைக்கு உரைத்தாலும் உணர்வு செல்லாது --- அறிவில்லாதவனுக்கு  நன்மையை எடுத்துக் கூறினாலும் அறிவு தோன்றாது.

 

உறுதியை உரைத்தனன், உணர்வு இலாதவன்

வறிது எனை இகழ்ந்தனன், வருவது ஓர்கிலன்,

இறும் வகை நாடினன், யாது ஒர் புந்தியை

அறிவு இலர்க்கு உரைப்பவர் அவரில் பேதையோர்.

                                      --- கந்தபுராணம், சூரன் அமைச்சியல் படலம். 

   

இதன் பொருள் ---

 

     (சூரபதுமன் தன்னை இகழ்ந்து பேசியது குறித்து, சிங்கமுகன் தனக்குள் எண்ணியது) நன்மை தருவதை நான் சொன்னேன். நல்லுணர்வு இல்லாத இவன் என்னை வீணாக இகழ்ந்தான். பின்னால் வரப்போவதை இவன் ஆராயவில்லை. அழிந்து போகும் வகையையே இவன் நாடுகின்றான். அறிவில்லாதவர்க்கு நல்ல புத்தியைப் புகட்டுகின்றவர்கள், அவரை விடவும் அறிவில்லாதவரே ஆவர்.

 

உய்த்தனர் தேன் மழை உதவிப் போற்றினும்

கைத்திடல் தவிருமோ காஞ்சிரங் கனி,

அத்தகவு அல்லவோ அறிவு இலாதவன்

சித்தம் அது உணர் வகை தெருட்டுகின்றதே.

                                                  --- கந்தபுராணம். சூரன் அமைச்சியல் படலம்.

 

இதன் பொருள் ---

 

     எட்டிப் பழத்தை, தேனில் தோய்த்துப் பாதுகாத்தாலும் அதன் கசப்புத் தன்மையில் மாறாது. அதைப் போன்றதுதான், அறிவில்லாத இவனுக்கு, அறிவைத் தெளிவிக்க முயல்வதும். (என்று சிங்கமுகன் எண்ணினான்)

 


No comments:

Post a Comment

தொடர்ந்து வருவது அருளே - பொருள் அல்ல

தொடர்ந்து வருவது அருளே - பொருள் அல்ல. -----        உலகத்தில் வாழத் தெரியாதவர்கள் யார் ?  வாழத் தெரிந்தவர்கள் யார் ?  என்று கேட்டால் ,  பணத்த...