இன்று உள்ளார் நாளை இல்லை

 

 

இன்று உள்ளார், நாளை இல்லை.

-----

 

     திருக்குறளில், "நிலையாமை" என்னும் ஓர் அதிகாரம். நிலையாமையாவது, தோற்றம் உடைய எவையும் நிலைத்து இருக்கும் தன்மை இல்லாதன என்பது. அறிவு மயங்கிய இடத்தில் பாம்பு தாம்பு (கயிறு) போலும், மிக்க கோடையில் கானல், நீர் போலும் தோற்றம் தந்து, இல்லாமல் போவது. இவ்விதம் தோன்றுவன யாவும், அழிந்து போகும் நிலையை உடையன என்பதை உணர்ந்து, பொருள்களிடத்தில் பற்று வைத்தல் கூடாது என்பதை உணர்த்த, முதலில் நிலையாமையை எடுத்துக் கொண்டார் நாயனார்.

 

     இந்த அதிகாரத்துள் ஆறாவதாக வரும் திருக்குறளில், "நேற்று இருந்த ஒருவன், இன்று இல்லை என்று சொல்லும் நிலையாமையையே பெருமையாக உடையது இந்த உலகம்" என்கின்றார் நாயனார்.

 

நெருநல் உளன் ஒருவன் இன்று இல்லை என்னும்

பெருமை உடைத்து இவ் உலகு.

 

என்பது நாயனார் அருளிய திருக்குறள்.

 

     திருக்குறளுக்கு, அதன் பெருமையை உலகறியச் செய்ய, பாடல் வடிவிலேயே விளக்கமாக எழுந்த நூல்கள் சிலவற்றை அறிந்து, அவற்றை அரிதின் முயன்றே தேடி, கிடைத்தவற்றைத் தொகுத்து வழங்குவதைப் பணியாகக் கொண்டு உள்ளேன். திருக்குறளை நன்கு ஓதி உணர்ந்த பெரியவர்கள், சில புராண நிகழ்வுகளை திருக்குறளுக்கு ஒப்புக் காட்டிப் பாடி அருள்செய்து உள்ளனர்.

 

     இத் திருக்குறளுக்கு விளக்கமா, கமலை வெள்ளியம்பலவாண முனிவர் பாடி அருளிய, "முதுமொழி மேல் வைப்பு" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...

 

முனைநாள் இருந்த கண்ணன், முக்கணற்கு ஆட்பட்ட

வனசரனால் மாயும் மறுநாள் ---  எனலால்

நெருநல் உளன் ஒருவன் இன்று இல்லை என்னும்

பெருமை உடைத்து இவ் உலகு.         

 

         வனசரன் --- வேடன். கண்ணபிரான் ஒரு சோலையில் யோகநித்திரை செய்திருக்கையில், மறைவில் நின்ற வேடன் ஒருவன் அவரது கால் பெருவிரலை, ஒரு பறவை என்று நினைத்து அம்பு செலுத்த, அதுபட்டுக் கண்ணபிரான் இறந்துபட்டார் என்பது வரலாறு. இராமாவதாரத்தில் மறைந்து நின்று அம்பு எய்து தன்னைக் கொன்ற திருமாலை, வாலி வேடனாகப் பிறந்து, கிருஷ்ணாவதாரத்தில் கொன்றான் என்பாரும் உண்டு. வாலி பரம சிவபக்தன். இதனை நினைந்து முக்கண்ணற்கு ஆட்பட்ட வனசரன் என்றார் போலும். யாருக்கும் உடம்பு அநித்தியம் என்பது இதனால் புலப்படும்.

 

     அடுத்து, இத் திருக்குறளுக்கு விளக்கமாக, "திருப்புல்லாணி மாலை" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...

 

ஒன்றில்லை உன்செயல் அல்லால்,

     நெருநல் உளன்ஒருவன்
இன்று இல்லை என்னும் பெருமை

     உடைத்துஇவ் வுலகுதனில்
கொன்று இல்லை என்னுங் கொலை பொய்யுள்ளேன்,

     புல்லைக் கோ! எனைஆள்,
நன்றுஇல்லை ஆயின் நிலையில்லை,

     ஆளின் நரகுஇல்லையே.

 

இதன் பொருள் ---

 

     திருப்புல்லாணி என்னும் திவ்விய தேசத்தில் எழுந்தருளி உள்ள மன்னவன் ஆகிய திருமாலே! உனது திருவருள் அல்லால் நிலை ஒன்றும் இல்லை. நேற்று இருந்தான் ஒருவன், இன்று இல்லை என்று சொல்லப்படும் பெருமையை உடைய இந்த உலகத்தில், ஓர் உயிரையும் கொல்லவில்லை என்று சொல்லுகின்ற கொலைக்கு ஒத்த பொய்யினை உடையவன் நான். என்னை நீ ஆண்டருள்வாய். உனது திருவருளாகிய நன்மை எனக்கு வாய்க்கவில்லையானால், எனது உயிருக்கு நிலை இல்லை. நீ என்னை ஆட்கொண்டு அருள் புரிவாயானால், எனக்கு நரகத் துன்பம் இல்லைமல் போகும்.

 

     கொன்றில்லை --- ஓருயிரையும் கொல்லவில்லை.  புல்லைக்கோ --- திருப்புல்லாணி மன்னவனே. ஆளின் நரகில்லை --- நீ அடியேனை ஆண்டுகொண்டால் எனக்கு நரகமில்லை.

 

     பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளமை காண்க...

 

இன்றுநன்று நாளைநன்று

     என்றுநின்ற இச்சையால்

பொன்றுகின்ற வாழ்க்கையைப்

     போகவிட்டுப் போதுமின்;

மின்தயங்கு சோதியான்

     வெண்மதி விரிபுனல்

கொன்றைதுன்று சென்னியான்

     கோடிகாவு சேர்மினே.    ---  திருஞானசம்பந்தர்.

 

இதன் பொழிப்புரை ---

 

     இன்றைய நாள் நல்லது. நாளைய நாள் நல்லது என்னும் இச்சையால் காலங் கடத்திப் பெருமானை வழிபடாது அழிந்து ஒழிகின்ற வாழ்க்கையை விட்டு, (மெய் வாழ்வினை அடைய) வாருங்கள். மின்னல் போன்ற ஒளியினனும், வெண்மதி, கங்கை, கொன்றை ஆகியவற்றை திருமுடியில் சூடியவனுமாகிய சிவபிரான் உறையும் திருக்கோடிகா என்னும் திருத்தலத்தைச் சென்று அடைவீர்களாக.

 

 

இன்று உளார் நாளை இல்லை எனும் பொருள்

ஒன்றும் ஓராது உழிதரும் ஊமர்காள்!

அன்று வானவர்க் காக விடம்உண்ட

கண்டனார் காட்டுப் பள்ளிகண்டு உய்ம்மினே.--- அப்பர்.  

 

இதன் பொழிப்புரை ---

 

     (வாயிருந்தும் இறைவனை வாயாரத் துதித்து வழிபடாமல் வாழுகின்ற) ஊமர்களே! இன்றைக்கு இருப்பவர் நாளைக்கு இல்லை என்பதமன் பொருள் ஒன்றும் உணராது உழலுகின்றவர்களே! அன்று தேவர்களைக் காத்து அருளுதல் பொருட்டு விடத்தை உண்டு அருளிய திருக்கழுத்தினை உடைய சிவபரம்பொருள் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி உள்ள திருக் காட்டுப்பள்ளி என்னும் திருத்தலத்தினைக் கண்டு வழிபட்டு உய்தி பெறுவீர்களாக.

 

வென்றிலேன் புலன்கள் ஐந்தும்,

     வென்றவர் வளாகந் தன்னுள்

சென்றிலேன், ஆதலாலே

     செந்நெறி அதற்குஞ் சேயேன்,

நின்று உளே துளும்புகின்றேன்,

     நீசனேன், சனே, !

இன்று உளேன், நாளை இல்லேன்,

     என்செய்வான் தோன்றினேனே.      --- அப்பர்.

 

இதன் பொழிப்புரை ---

 

     எல்லோரையும் ஆண்டு அருள் புரியும் பெருமானே! அடியேன் ஐம்புலன்களையும் வென்றேன் அல்லேன். ஐம்புலன்களையும் வென்ற சான்றோர்கள் உடைய சூழலிலும் சென்றேன் அல்லேன். ஆதலால் (செம்மை நெறி அறியாத சிதடரொடும் கூடி இருந்து) அந்நெறிக்கு அப்பாற்பட்டவனாய்க் கிடந்து, உள்ளூர வருந்துகின்றேன். இன்று உயிருடன் இருக்கும் நான், நாளை உயிருடன் இருப்பேன் என்ற உறுதி இல்லை. (உடம்பை எடுத்து வந்து, அதனால்) ஒரு பயனும் அடையாமல், எதற்காகத் தோன்றினேன் நான்?

 

மணமென மகிழ்வர் முன்னே,

    மக்கள்தாய் தந்தை சுற்றம்,

பிணமெனச் சுடுவர் பேர்த்தே,

    பிறவியை வேண்டேன் நாயேன்;

பணையிடைச் சோலைதோறும்

    பைம்பொழில் விளாகத் தெங்கள்

அணைவினைக் கொடுக்கும் ஆரூர்

    அப்பனே! அஞ்சி னேனே..   ---  சுந்தரர்.

.

இதன் பொழிப்புரை ---

 

     வயல்களின் நடுவே உள்ள சோலைகளில் எல்லாம், பசிய இளமரச் சோலைகளை உடைய விளையாடுமிடங்களில், மக்கட்குத் தங்குமிடங்களைத் தருகின்ற திருவாரூரில் எழுந்தருளி உள்ள எனது தந்தையே! உலகில் தாய், தந்தை, சுற்றத்தார் என்போர் முன்பு (இளமையில்) தமது மக்கட்குத் திருமணம் நிகழாநின்றது என மகிழ்வார்கள். பின்பு, அவர்தாமே, தமது மக்கள் இறந்தபட்டபோது, அவர்ளை, `பிணம்` என்று சொல்லி, ஊரினின்றும் அகற்றிப் புறங்காட்டில் கொண்டுபோய் எரியிடை இட்டு நீங்குவர்.  ஆதலின், இத் தன்மைத்தாகிய பிறவியை அடியேன் விரும்புகின்றிலேன். நிலையில்லாத உடம்பினை உடைய பிறவியில் வீழ்வதற்கு அடியேன் அஞ்சுகின்றேன்.

 

அடப்பண்ணி வைத்தார், அடிசிலை உண்டார்,

மடக்கொடி யாரொடு மந்தணம் கொண்டார்,

இடப்பக்கமே இறை நொந்தது இங்கு என்றார்,

கிடக்கப் படுத்தார், கிடந்து ஒழிந்தாரே  ---  திருமந்திரம்.

    

இதன் பொழிப்புரை:

 

     உணவு சமைத்தற்கு வேண்டுவனவற்றை ஈட்டிக் கொணர்ந்து வைத்த தலைவர், சமைத்து ஆன பின்பு அவ்வுணவை உண்டார். பின் தம் இல்லக்கிழத்தியாரொடு தனிமையில் இருந்து சிலவற்றை உசாவுதல் செய்தார். இடையே, "உடம்பில் இடப் பக்கம் சிறிது நோகின்றது" என்று சொல்லி, அது நீங்குதற் பொருட்டு ஓய்வு கொள்ளப் படுத்தார். படுத்தவர் படுத்துவிட்டவரே ஆயினார்; மீள எழுந்திருக்கவில்லை.

 

நன்று உளேன் அல்லேன், யார்க்கும்

     நல்லறம் புரியேன், அன்றிக்

கொன்று உளேன், அற்றம் பார்க்கும்

     கூற்றுவன் விடுவான் அல்லன்,

இன்று உளேன் நாளை இல்லேன்

     யமன் வரும்போது வெள்ளி

மன்று உளே இருந்த சொக்கே!

     வழக்கு நீ என் சொல் வாயே?     ---  மதுரை அந்தாதி.

 

இதன் பொருள் ---

 

         வெள்ளியம்பலத்தில் கால்மாறித் திருநடம் புரியும் சொக்கநாதப் பெருமானே! நன்மை எதுவும் என்னிடம் இல்லை. யாருக்கும் நல்ல அறத்தினை நான் புரிந்ததும் இல்லை. அல்லாமல், பல உயிர்களைக் கொன்று உள்ளேன். இன்று உயிரோடு இருக்கின்றேன். நாளை இருக்கப் போவது இல்லை. வாழ்நாள் முடிவு பார்த்து இருக்கும் கூற்றுவன் என்னை விட்டுவிடப் போவது இல்லை. (இவ்வாறு பயனற்ற வாழ்க்கையை வாழுகின்ற நான்) இயமன் வருகின்றபோது, உன்னிடத்தில் முறையிட, என்னிடத்தில் என்ன வழக்கு உள்ளது. நீயே சொல்லி அருள்வாயாக.

 

நேற்றுளார் இன்று மாளா

     நின்றனர், அதனைக் கண்டும்

போற்றிலேன் நின்னை, அந்தோ!

     போக்கினேன் வீணே காலம்,

ஆற்றிலேன், அகண்டா னந்த

     அண்ணலே! அளவில் மாயைச்

சேற்றிலே இன்னம் வீழ்ந்து

     திளைக்கவோ? சிறிய னேனே.  ---  தாயுமானவர்.

 

இதன் பொழிப்புரை ---

 

     நேற்றைப் பொழுதில் நோய் நொடி ஏதுமின்றி நன்றாக வாழ்ந்திருந்த ஒருவர், எதிர்பாரா வண்ணம் திடும் என இன்று மாண்டு ஒழிந்தார். இத்தகைய உலக நிலையாமையினைக் கண்ணாரக் கண்டும், இறைவனே! உனது திருவடியினை (ஒப்பற்ற தனித் தமிழ்ப் பாமாலைகளைக் கொண்டு) போற்றி வழிபடுதல் இல்லாமல்,  ஐயோ! வீணாகக் காலத்தைப் போக்குகின்றேன். இன்னமும் அடியேனால் இத்தகைய இழிநிலையினைப் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது. எல்லையற்ற பேரின்பப் பெருமையை உடைய பரம்பொருளே! அறிவில் சிறியவன் ஆகிய அடியேன், அளவில்லாத பிறப்பு இறப்புகட்கு உட்பட்டு மாயாகாரியம் ஆகிய சேற்றிலே, இன்னமும் வீழ்ந்து துன்பத்தில் அழுந்தவோ?

 

நேற்று உள்ளார் இன்று இருக்கை நிச்சயமோ?

     ஆதலினால், நினைந்த போதே

ஊற்று உள்ள பொருள் உதவி, அறம் தேடி

     வைப்பது அறிவுடைமை அன்றோ?

கூற்று உள்ளம் மலையவரும் தண்டலையா

     ரே! சொன்னேன்! குடபால் வீசும்

காற்றுஉள்ள போது எவரும் தூற்றிக்கொள்-

     வது நல்ல கருமம் தானே?      ---  தண்டலையார் சதகம்.

 

இதன் பொருள் --- 

 

     மார்க்கண்டேயருக்காக எமனுடைய மனம் கலங்க வந்து அருளிய திருத்தண்டலை இறைவரே!  யாவரும் மேலைக்காற்று வீசும்போதே தூற்று வேண்டுவதைத் தூற்றிக்கொள்வது நல்ல நல்ல செயல் ஆகும் அன்றோ? நேற்று இருந்தவர் இன்று இருப்பது உறுதி அல்லவே? ஆகையால், உள்ளத்தில் எண்ணம் உண்டான போதே, வருகின்ற பொருளைப் பிறர்க்கு உதவி, அறத்தைச் சேர்த்து வைத்துக் கொள்வது அறிவுடைமை ஆகும் அல்லவா?

 

     இராமபிரானோடு போருக்குப் புறப்பட்ட இந்திரசித்தன், அழிவில்லாத தேர் ஒன்றினை ஊர்ந்து போர்க்களத்திற்குச் செல்லவேண்டும் என்று நினைந்து, இலக்குவனுடன் நடந்த போரில் "அறம்  வெல்லும்,  பாவம் தோற்கும்"  என்ற படிப்பினையை அவன் உணர்ந்திருந்தமையால், போர்க்களம் புகுதலை விடுத்து, தனது தந்தையாகிய இராணவனனிடம் வந்து, "சீதையினிடத்தில் நீ கொண்டுள்ள ஆசையை விட்டுவிடுவாயானால், இராமலக்குமணர் சீற்றம் தணியும். நீ செய்த தீமையையும் அவர்கள் பொறுத்துக் கொள்வர். உன்மேல் வைத்த அன்பினால் இதனைச் சொல்கின்றேன். இராமலக்குமணருக்கு அஞ்சி அல்ல" என்று அறிவுரை கூறுகின்றான். இந்திரசித்தனைச் சினந்து இராவணன் கூறுவதாக, கம்பநாட்டாழ்வார் பாடியருளிய பாடல்...

 

வென்றிலன் என்ற போதும்,

     வேதம் உள்ளளவும் யானும்

நின்றுளன் அன்றோ, மற்று அவ்

     இராமன் பேர் நிற்கும்ஆயின்?

பொன்றுதல் ஒரு காலத்தும்

     தவிருமோ? பொதுமைத்து அன்றோ?

இன்று உளார் நாளை மாள்வர்;

     புகழுக்கும் இறுதி உண்டோ?   --- கம்பராமாயணம், இந்திரசித்து வதைப் படலம்.

 

இதன் பொழிப்புரை ---

 

     போரில் நான் வெற்றி பெறவில்லையாயினும்; வெற்றி பெற்ற) அந்த இராமன் பேர் நிலைத்து இருக்குமானால்,  அவனால் வெற்றி கொள்ளப் பெற்ற நானும் வேதம் இருக்கின்ற காலம் வரையில் நிலைபெற்றுள்ளவன் ஆவேன் அல்லவா? இறத்தல் என்பது ஒரு காலத்தும் தவிரக் கூடியது அல்ல. அது எவ்வுயிர்க்கும் பொதுவானது. இன்று இருப்பவர்கள் நாளைக்கு இறப்பார்கள் தான். ஆனால் புகழுக்கும் அத்தகைய இறுதி உள்ளதா? இல்லையே.

 

     இராமன் பரம்பொருளானால், அப் பரம்பொருளே இராவணனை வெல்வதற்கு மண்ணில் பிறப்பெடுத்து வென்றது என்றால், அதற்காக அதன் பெயர் வேதம் உள்ளவும் நிற்குமானால், அவனோடு சேர்ந்து என் பெயரும் நிற்குமல்லவா என்கின்றான் இராவணன். நிலையாமையை அவன் உணர்ந்தே உள்ளான்.

 

புல்நுனிமேல் நீர்போல் நிலையாமை என்று எண்ணி,

இன்னினியே செய்க அறவினை ; - இன்இனியே

நின்றான், இருந்தான், கிடந்தான், தன் கேள்அலறச்

சென்றான் எனப்படுத லால்.    ---  நாலடியார்.

 

இதன் பொழிப்புரை ---

 

     பனிக் காலங்களில் புல் நுனியில் முத்து முத்தாக நிற்கும் பனியின் துளியானது நங்கி இருக்கும். அந்தப் பனி நீரானது வெய்யில் வர வர ஆவியாகிப் போகும். அதுபோலவே, இந்த உடம்பும் ஒரு நாள் மறைந்து போகும். எனவே, இந்த உடம்பு உள்ளபோதே, இப்பொழுதே அறச் செயல்களைச் செய்யுங்கள். இல்லையென்றால், இப்போது நன்றாகத் தான் இருந்தான்; நோய் என்று படுத்தான். சுற்றத்தார் கதறி அழும்படியாக இறந்து போனான் என்று உலகத்தார் சொல்லப்படுகின்ற நிலை வந்துவிடும்.

 

மணமகனே பிணமகனாய்,

         மணப்பறையே பிணப்பறையாய்,

அணியிழையார் வாழ்த்தொலி போய்,

         அழுகை ஒலியாய்க் கழியக்

கணம் அதனிற் பிறந்து இறும் இக்

         காயத்தின் வரும்பயனை

உணர்வு உடையார் பெறுவர், உணர்வு

         ஒன்றும் இலார்க்கு ஒன்றும் இலை.  ---  தி.வி. புராணம், பழியஞ்சின படலம்.

 

இதன் பொழிப்புரை ---

 

     மணப் பிள்ளையே உயிர் கழிந்த பிணமாகவும், மண நிகழ்வில் முழங்கிய வாத்தியமே, இப்போது சாவுப் பறையாகவும், அணியப்பட்ட கலன்களையுடைய மங்கல மகளிரின் வாழ்த்தொலியே அழுகை ஒலியாகவும் மாறி முடிய, கணப்பொழுதில் தோன்றி மறையும் இவ்வுடலினால் ஆகக் கூடிய பயனை, அறிவுடையார் அடைவர். அறிவு சிறிதும் இல்லாதவர்க்கு அப்பயன் எய்துதல் சிறிதும் இல்லை.

 

காயம்ஒரு புற்புதம்! வாழ்வு மலை சூழ்தரும்

     காட்டில் ஆற்றின் பெருக்காம்!

  கருணைதரு புதல்வர்கிளை மனைமனைவிஇவையெலாம்

     கானல் காட்டும் ப்ரவாகம்!

 

மேயபுய பலவலிமை இளமைஅழகு இவை எலாம்

     வெயில்மஞ்சள்! உயிர் தானுமே,

  வெட்டவெளி தனில்வைத்த தீபம் எனவே கருதி,

     வீண்பொழுது போக்காமலே.

 

நேயம் உடனே தெளிந்து அன்பொடு உன் பாதத்தில்

     நினைவு வைத்து, இருபோதினும்

  நீர்கொண்டு மலர்கொண்டு பரிவுகொண்டு அர்ச்சிக்க

     நிமலனே! அருள்புரி குவாய்

 

ஆயும் அறி வாளர்பணி பாதனே! போதனே!

     அண்ணல்எம தருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!           ---  அறப்பளீசுர சதகம்.

 

 இதன் பொருள் ---

 

     நிமலனே --- தூயவனே!,  ஆயும் அறிவாளர் பணி பாதனே --- ஆராந்த அறிவினை உடையவர்கள் பணிந்து வணங்கும் திருவடிகளை உடையவனே!  போதனே --- அறிவு வடிவானவனே! அண்ணல் --- தலைவனே! எமது அருமை மதவேள் - எமது அரிமதவேள் என்பான், அனுதினமும் மனதில் நினைதரு --- எக்காலத்தும் உள்ளத்தில் வழிபடுகின்ற,  சதுரகிரிவளர் அறப்பளீசுர தேவனே --- சதுர கிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!

 

     காயம் ஒரு புற்புதம் --- இந்த உடம்பு ஒரு நீர்க்குமிழியைப் போன்றது; வாழ்வு மலை சூழ் தரும் காட்டில் ஆற்றின் பெருக்கு ஆம் --- இந்த வாழ்க்கையானது மலையைச் சுற்றியுள்ள காட்டிலே ஓடுகின்ற ஆற்று வெள்ளம் ஆகும்;  கருணை தரு புதல்வர் கிளை மனை மனைவி இவையெலாம் கானல் காட்டும் பிரவாகம் --- அன்புக்கு உரிய மக்கள், உறவினர், தேடிய வீடு,  மனைவி ஆகிய இவைகளெல்லாம் கானல் நீர் காட்டுகின்ற வெள்ளம்; மேய புய பல வலிமை இளமை அழகு இவையெலாம் வெயில் மஞ்சள் --- பொருந்திய தோள் வலிமை, இளமை, அழகு, ஆகிய இவை எல்லாம் காலையிலும் மாலையிலும் காணப்படும்  மஞ்சள் நிறமுள்ள இளவெயில்; உயிர் தானுமே வெட்ட வெளியில் வைத்த தீபம் --- இந்த உடலில் தங்கி உள்ள உயிரும் திறந்த வெளியில் ஏற்றப்பட்ட விளக்கு; எனவே கருதி --- என்றே நினைத்து,  வீண் பொழுது போக்காமல் --- வாழ்நாளை வீணே கழிக்காமல்,  தெளிந்து --- அறிவுத் தெளிவை அடைந்து,  உன் பாதத்தில் நேயமுடனே அன்பொடு நினைவு வைத்து --- உன் திருவடிகளில் நட்பு பூண்டு, உள்ளன்புடன் நினைந்து, இரு போதினும் நீர் கொண்டு மலர்கொண்டு பரிவுகொண்டு அர்ச்சிக்க அருள் புரிகுவாய் --- காலை மாலை ஆகிய இரு வேளைகளிலும் நீரையும் பூவையும் கொண்டு அன்புடன் வழிபட அருள் புரிவாய்.

 

          விளக்கம் --- நீரிலே தோன்றுகின்ற குமிழானது மிகவும் அழகாக இருக்கும். ஆனால், எப்போது அது அழியும், எப்படி அழியும் என்று தெரியாது. அதுபோலவே, இந்த உடம்பானது தொடக்கத்தில் மிகமிக வனப்பாகவும் எடுப்பாகவும் மிடுக்காகவும் இருக்கும். ஆனால், நாளாக நாளாக, நம்மை அறியாமலே முதுமை வந்து சூழும். உடம்பானத் எப்போது அழியும் என்பதும் தெரியாது. எப்போதும் இருக்கும் என்று கருதியே, அதை அழகு செய்வதும், உண்டி முதலியவற்றால் அதை வலிமை பெறச் செய்வதுமாகவே இருக்கின்றோம். 

 

     "நீரில் குமிழி, நீர் மேல் எழுத்து" என்பார் பட்டினத்தடிகள். "நீர்க்குமிழிக்கு நிகர் என்பர் யாக்கை" என்பார் அருணகிரிநாதர்.

 

ஐந்துவகை ஆகின்ற பூதபே தத்தினால்

         ஆகின்ற ஆக்கை, நீர்மேல்

     அமர்கின்ற குமிழி என நிற்கின்றது என்ன,நான்

              அறியாத காலமெல்லாம்

புந்திமகிழ் உறஉண்டு உடுத்து, ன்பம் ஆவதே

              போந்தநெறி என்று இருந்தேன்,

    பூராயமாக நினது அருள் வந்து உணர்த்த இவை

                 போனவழி தெரியவில்லை..

 

என்று அருளினார் தாயுமானார்.

 

     எனவே, இந்த வாழ்க்கையைக் காட்டாற்றுக்கு உவமைப் படுத்தினார். வாழ்க்கை நிலையானது அல்ல. காட்டாற்றிலே எப்போது வெள்ளம் வரும், எப்போது வடியும் என்று சொல்லமுடியாது. வெள்ளம் வந்ததும் விரைவில் வற்றி விடும்.

 

     மனைவி, மக்கள், உறவு, செல்வம் இவை எல்லாம் உள்ளது போலத் தோன்றி அழியக் கூடியவையே. வேனில் காலத்தில், நண்பகல் வேளையில், திறந்த வெளியிலே நீர்ப்பெருக்கு உள்ளது போலத் தோன்றும். ஆனால், நெருங்கிச் சென்று பார்த்தால் இருக்காது. இதனைக் கானல் நீர் என்பர். இது பொய்த் தோற்றமாதலால் "பேய்த்தேர்" என்றும் சொல்லப்படும்.

 

     காலையிலும் மாலையிலும் உண்டாகும் இளவெயிலை மஞ்சள் வெயில் என்பது வழக்கம். நிலையாமை கருதி இவ்வாறு சொல்லப்பட்டது.

 

     திறந்த வெளியில் ஏற்றப்பட்ட விளக்கானது எப்போது அணையும் என்று சொல்லமுடியாது போ, உடம்பிலே உள்ள உயிரானது எப்போது நீங்கும் என்று நிச்சயித்துக் கூற முடியாது.

 

     எனவே, வாழ்நாளை வீணாக்காமல், இளமையிலேயே, இறைவனுக்கு ஆட்பட்டு, உள்ளன்போடு, பூவும் நீரும் கொண்டு வழிபட்டு உய்ய வேண்டும்.

 

மன்றம் கறங்க, மணப்பாறை ஆயின,

அன்று அவர்க்கு ஆங்கே பிணப்பறையாய், -பின்றை

ஒலித்தலும் உண்டாம் என்று உய்ந்துபோம் ஆறே

வலிக்குமாம் மாண்டார் மனம்.   ---  நாலடியார்.

 

இதன் பொழிப்புரை ---

 

     பேரவை முழுதும் ஒலிக்கும்படி,  திருமண மேளங்கள் முழங்கும். வாழ்த்தொலியும் முழங்கும். திருமண நாளன்று திருமண மக்களுக்கு அத்திருமணக் கூடத்திலேயே, சாவு மேளமாய்ப் பின்பு ஒலித்தலும் நேரும் அழுகுரல் ஒலிக்கும் என்பதை உணர்ந்து அறிவுடையோர் உள்ளமானது, இத்தகைய துயரங்களில் எல்லாம் இருந்து விடுபட்டு, அறவழியிலே துணிந்து நிற்கும்.

 

         மணப்பறையே பிணப்பறையாகவும் மாறுமாதலின், யாக்கையின் நிலையாமை கருதி உடனே அறம் செய்க.

 

 


No comments:

Post a Comment

பொது --- 1084. முழுமதி அனைய

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் முழுமதி அனைய (பொது) முருகா!  திருவடி அருள்வாய். தனதன தனன தனதன தனன      தனதன தனன ...... தந்ததான முழுமதி ய...