அறக்கருணை - மறக்கருணை

 

 

அறக்கருணை - மறக்கருணை

-----

 

     பள்ளியில் பாடம் நடத்தி, நல்வழி காட்டி ஏதும் அறியாச் சிறுவர்களை ஆளாக்கும் ஆசிரியர் எளிய உடையில் எளிமையாகத்தான் தோன்றுவார். அவர் அன்போடு பாடங்களை நடத்தி, கல்வி அறிவு புகட்டுவார். நன்றாகப் பயிலும் மாணவர்களைப் பாராட்டி மகிழ்வார். அவருடைய எளிமையின் அருமையை உணர்ந்து கொள்ளாத மாணவர்கள் அவரையும், அவர் புகட்டும் கல்வியின் நலத்தையும் அறிந்து கொள்ளாமல், பாராமுகமாக வகுப்பில் இருந்தால், அவர்களை நல்வழிப்படுத்த, தக்க தண்டனையை வழங்குவார். அந்தத் தண்டனையானது, அவர்களை வகுப்பில் இருந்து நீக்குவதற்கு அல்ல. அவர்கள் நல்ல மாணவராகத் திகழ்வதற்கே.

 

     நல்ல மாணவர்களைப் பாராட்டித் தட்டிக் கொடுத்து, அவர்களை மேலும் நல்ல மாணாக்கராக்க ஆசிரியர் காட்டுவது அன்பு. அல்லாத வழியில் ஒழுகும் மாணவர்களைத் தண்டித்துத் திருத்துவதும், அவர்கள் நல்வழிப்பட வேண்டும் என்று கொண்ட அன்பே காரணம் ஆகும்.

 

     அதுபோலத்தான், நம்மை ஈன்றெடுத்த தாயும் தந்தையும். தவறு கண்ட இடத்தில், தாய் அடித்தால், தந்தை வந்து அணைப்பார். தந்தை அடித்தால், தாய் வந்து அணைப்பாள். அடித்த கையே அணைக்கவும் செய்கின்றது.

 

     இது போன்றதுதான் இறைவன் புரியும் அறக்கருணையும், மறக்கருணையும் என்கின்றது "சிவஞானசித்தியார்" என்னும் சித்தாந்த சாத்திரம்.

 

தந்தையாய் பெற்ற தத்தம்

         புதல்வர்கள் தம்சொல் ஆற்றின்

வந்திடா விடில், உறுக்கி,

         வளாரினால் அடித்து தீய

பந்தமும் இடுவர்; எல்லாம்

         பார்த்திடில் பரிவே ஆகும்;

இந்த நீர் முறைமை அன்றோ-

         ஈசனார் முனிவும் என்றும்? --- சிவஞானசித்தியார்.

 

இதன் பொருள் ---

 

     தந்தையும் தாயும் தாம் பெற்றெடுத்த மக்கள் தம் சொல்படி நடக்கவில்லை என்றால், அம்மக்களைச் சொல்லால் கடிந்தும், வளாரினால் அடித்தும், அதற்கும் பணியாத போது கட்டி வைத்தும் அவர்களைத் திருத்த முயல்வார்கள். வெளிப்பார்வைக்குச் சினத்தால் தண்டிப்பது போல் தோன்றினாலும், ஆராய்ந்து பார்க்கும்போது, தாய்தந்தையர்களின் இந்தச் செயல்கள்யாவும் தம் மக்களிடத்து அவர்கள் கொண்ட அன்பினால் விளைந்தனவே ஆகும். அவ்வாறே இறைவன் உயிர்களை ஒறுப்பதும்.

 

     நல்வழி நடப்பார்க்கு நல்லருள் புரிவது "அறக்கருணை" எனப்படும். அல்லாத வழியில் நடப்பாரை, அவர் வினையின் வழியே தண்டித்துத் திருத்தி அருள் புரிவது "மறக்கருணை" ஆகும். இவ்விரண்டுமே இறைவன் உயிர்கள் மீது வைத்த பெருங்கருணை காரணமாக நிகழ்வது ஆகும்.

 

     நான்கு வேதங்களையும், அவற்றின் அங்கமாக உள்ள ஆறு அங்கங்களையும் கற்றவர்களாக மட்டும் அல்லாமல், அவற்றின் பொருளைக் கற்றோர்பால் கேட்டு உணர்ந்தவர்களாகவும் இருந்த முனிவர் நால்வர்க்கு, அஞ்ஞானம் நீங்கி மெய்ஞ்ஞானம் தலைப்படவில்லை. இறைவனை உணர்ந்து, மனம் அமைதி பெறவில்லை. இறைப் பொருளை உணர்ந்து கொள்வது என்பது வெறும் நூலறிவாலும், அது குறிக்கும் சடங்குகளாலும் முடியாது. சரியை, கிரியை என்னும் இருநிலைகளையும் கடந்து, யோகம் என்னும் தியான பாவனை வேண்டும். யோக நிலையில் நின்றால், ஞானத்தைப் பெறலாம். ஞானம் என்பது இறைவனை அறியும் அறிவு. சொல்லும், நினைவும் கடந்த நிலையில், வேதங்களுக்கும் எட்டாத நிலையில், எல்லாமாகாவும், அல்லாததுமாகவும், இருக்கின்ற பொருளை, "சும்மா இரு, சொல் அற" என்ற நிலையில் இருந்து உணர முடியும் என்பதைக் காட்ட, தானும் யோக நிலையில் ஞானகுருவாக இருந்து, சின்முத்திரையைக் காட்டி அருள் புரிந்தார் சிவபெருமான். இது பக்குவப்பட்ட நல்லான்மாக்களுக்கு இறைவன் தானானகவே புரியும் "அறக்கருணை" எனப்படும்.

 

     கமலாட்சன், வித்யுன்மாலி, தாராகாட்சன் என்ற மூன்று அசுர வேந்தர்கள் சிறந்த சிவனடியார்களாக இருந்தார்கள்.. இவர்கள் இரும்பு, வெள்ளி, பொன் என்ற உலோகங்களால் ஆன மூன்று புரங்களில் வாழ்ந்தார்கள். சிவனடியார்களாக இருந்தாலும், தாம் பெற்ற வரபலத்தினால் தருக்குக் கொண்டு, அர்களும், அவர்களைச் சார்ந்தவர்களும் தேவர்களைத் துன்புறுத்தி வந்தார்கள். திரிபுர வாசிகளின் சிவபக்தி குலையுமாறு திருமால் புத்தாவதாரம் எடுத்து, நாரதரைச் சீடராகப் பாடச் செய்து திரிபுர நகர்களில் தெய்வம் இல்லை என்று பிரசாரம் புரிந்தார். திரிபுரத் தலைவர்கள் மூவர் மட்டும் உறுதி குலையாது சிவபக்தியில் சிறந்து இருந்தார்கள். திரிபுர வாசிகள் சிவபக்தி குலைந்தார்கள்.  தேவர்கள் சிவபெருமானிடம் திரிபுரத்தை அழிக்குமாறு முறையிட்டார்கள். சிவபெருமான், திரிபுரங்களை அழித்தார். பெருந்தவராய் இருந்து சிவனடியே சிந்தித்து வந்த மூவரும் தாரகாட்சன், வித்யுன்மாலி, கமலாட்சன் ஆகிய மூவரும், தமது செருக்கு நீங்கி, யாதொரு தீமையும் இன்றிப் பெருமான்பால் வந்து பணிய, நீலகண்டர் அவர்களைத் துவாரபாலகராக அருளி, தேவர்களை அரவரிடத்திற்கு அனுப்பி வெள்ளிமாமலைக்கு எழுந்தருளினார்.

 

     தீயவர்களாகிய திரிபுரவாசிகளைத் திருத்தி ஆட்கொண்டது, இறைவனுடைய "மறக்கருணை" ஆகும்.

 

     இதிலிருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால், நன்னெறியில் ஒழுகும் ஒருவர் மீது கருணை காட்டுவது அன்பு. அந்த அன்பு காரணமாகவே, தீநெறியில் ஒழுகுபவரையும் திருத்தி ஆட்கொள்ளத் துணைபுரிகின்றது என்னும் உண்மை ஆகும்.

 

     திருவாசகத்தில், "திருச்சாழல்" என்னும் பகுதி. சாழல் என்பது மகளிர் விளையாடல்களுள் ஒன்று. இரண்டு கட்சியாய்ப் பிரிந்து விளையாடுவது. இவ்விளையாட்டில் பாடப்படும் பாடல், ஒரு திறத்தாரது கொள்கைக்குத் தடையாய் உள்ள வினாவை மற்றொரு திறத்தார் வினாவுவதும், அதற்கு அவர்கள் விடை சொல்வதுமாய் அமையும். இரு திறத்தார் சார்பிலும் ஒவ்வொருவர் முன்வந்து வினாவுவதும், விடை இறுப்பதும் செய்வர்.

 

     இந்தப் பகுதிக்கு, "சிவனுடைய காருண்ணியம்" என்று பெரியோர் தலைப்புக் கொடுத்துள்ளனர். சிவனுடைய கருணை விளக்கம் குறித்துப் பாடப்பட்டுள்ள பகுதி இது. திருச்சாழல் என்னும் பகுதியில் வரும் ஒரு பாடல், இறைவனுடைய அறக்கருணை, மறக்கருணை குறித்து விளக்குவதாக அமைந்துள்ளது.

 

நன்றாக நால்வர்க்கு

     நான்மறையின் உட்பொருளை

அன்று ஆலின் கீழ் இருந்து

     அங்கு அறம் உரைத்தான் காண் ஏடீ!

அன்று ஆலின் கீழ் இருந்து அங்கு

     அறம் உரைத்தான் ஆயிடினும்

கொன்றான்காண் புரம் மூன்றும்

     கூட்டோடே சாழலோ.

 

இதன் பொருள் ---

 

     ஏடீ --- தோழியே!, அன்று --- அக் காலத்தில், ஆலின் கீழ் இருந்து --- கல்லால மரத்தின்கீழிருந்து, நால்வர்க்கும் --- சனகாதி நான்கு முனிவர்களுக்கும், நான்மறையின் உட்பொருளை --- நான்கு வேதங்களுள் சொல்லப்பட்ட கருத்துகளையே, நன்றாக --- விளக்கமாக, அறம் உரைத்தான் --- அறமாக உபதேசம் செய்தான்.

 

         அன்று ஆலின்கீழ் இருந்து --- அக் காலத்தில் கல்லாலின் கீழே இருந்து, அறம் உரைத்தான் ஆயிடினும் --- நான்கு வேதங்களுள் சொல்லப்பட்ட கருத்துகளையே அறமாக உபதேசம் செய்தானாயினும், புரம் மூன்றும் --- முன்பு தன்னை வழிபட்டிருந்து பின்பு மறந்தவர்களது முப்புரங்களையும், கூட்டோடே கொன்றான் --- முற்றிலும் எரித்து அழித்தனன்.

 

     நால்வர்க்கு அருள் புரிந்தது அறக்கருணை. மூவர்க்கு அருள் புரிந்தது மறக்கருணை. அன்பு காட்டுவது, அறச்செயலுக்குத் துணை புரிவது மட்டுமல்லாது, மறச் செயலை மாற்றுவதற்கும் தான் என்பது இதனால் விளங்கும். அன்பு பாவத்தையும் மாற்றும் வல்லமை பெற்றது என்பதை, திருவள்ளுவ நாயானர் விளக்குவதைக் காண்போம்...

 

     திருக்குறளில் "அன்புடைமை" என்னும் அதிகாரத்துள் வரும், ஆறாம் திருக்குறளில், "அன்பு என்னும் பண்பு அறத்திற்கு மட்டுமே துணையாக நிற்கும் என்பர் அறியாதவர். ஆனால் பகையை நீக்குவதற்கும் அதுவே துணையாக விளங்கி நிற்கும்" என்கின்றார் நாயனார்.

 

அறத்திற்கே அன்பு சார்பு என்ப அறியார்,

மறத்திற்கும் அஃதே துணை.

 

என்பது நாயனார் அருளிய திருக்குறள்.

 

     இத் திருக்குறள் கருத்தைப் பின்வரும் பாடல்கள் விளக்கி நிற்பது காணலாம்....

 

மறுமனத்தன் அல்லாத மாநலத்த வேந்தன்

உறுமனத்தன் ஆகி ஒழுகின், - செறுமனத்தார்

பாயிரம் கூறிப் படைதொக்கால் என்செய்ப

ஆயிரம் காக்கைக்கு ஓர் கல்.   ---  பழமொழி நானூறு.

 

இதன் பதவுரை ---

 

     மறுமனத்தன் அல்லாத --- குற்றமுடைய மனத்தன் அல்லாத நல்ல மனதையும், மா நலத்த --- சிறந்த வேற்றுமைத் துணை நலங்களையும் உடைய, வேந்தன் --- அரசன், உறுமனத்தன் ஆகி ஒழுகின் --- யாவரிடத்தும் பொருந்திய அன்புடைய மனத்தனாகி ஒழுகின், செறும் மனத்தார் --- வெல்லும் மனதுடைய அரசர்கள், பாயிரம் கூறி படை தொக்கால் --- வேண்டிய அளவு முகவுரை கூறிப் படையைத் திரட்டினால், என் செய்ப --- அப்படைகள் என்ன செய்யும்?, ஆயிரம் காக்கைக்கு ஓர் கல் --- ஆயிரம் காக்கைகளை ஓட்டுவதற்கு இட்ட ஒரு கல்லைப்போல, அந்த வேந்தன் ஒருவனே, தன் முன் தோன்றிய பகைவர்களைத் தோற்று ஓடச் செய்துவிடுவான்.

 

     ஆயிரம் காக்கைகள் கூடித் திரண்டு இருந்தாலும், அவைகளை விரட்டி அடிக்க, ஒரு சிறுகல் போதும். அதுபோலவே, அன்பு ஒன்றைக் கொண்டு பகைவரை வெல்லலாம்.

        

         'ஆயிரம் காக்கைக்கு ஓர் கல்' என்பது பழமொழி.

 

கைத்திட்ட மருந்தில் அக்காரம் கலந்து கூட்டி

மத்தித்து அருள் பண்டிதர் போல், மறநோய் தவிர்ப்பான்,

எத்திக்கினுங் கேட்பவர் காது, உ(ள்)ளம் இன்பம் மேவித்

தித்தித்திட ஆரியர் நன்மறை செப்புவாரே.   

 

         மருத்துவர் கசப்பான மருந்தின்மேல் இனிப்புப் பூசி உண்பித்து உடல் நோயை நீக்குவார். ஆசிரியரும் தம் இன்மொழிகளால் அறம் உரைத்து நன்னெறி ஒழுகச் செய்து உயிர்நோயாகிய பிறவியை மாற்றுவர்.

 

        

உருமினை அஞ்சியாரும் இகழுவர் அன்றி, ஆய

           ஒலி தருகின்ற காரை முனிவரோ?

தரு உறைகின்ற தீய முயிறுகள் அன்றி, ஆய

           தருவை வெகுண்டு சீறல் தகுதியோ?

அருமறம் மீதுபகை செயல் அன்றி, நாளும் அவை

           புரிகின்ற தீய அசடர்பால்

பெருமுனை கொண்டுகாய்தல் அழகு அ(ல்)ல என்று,கோதில்

           பெரியவர் என்றும் ஆள்வர் கலரையே.  --- நீதிநூல்.

 

         இடிமுழக்கம் கேட்டு எல்லோரும் நடுங்கி அவ் இடியை இகழுவர். அல்லாமல், இடிக்கு இடமாகிய மேகத்தைச் சினப்பரோ? சினவார். பெரிய மரங்களில் தங்கியிருக்கும் கடி எறும்பைச் சினப்பது அல்லாமல் அம்மரங்களைச் சினத்தல் பொருத்தம் ஆகுமோ?  ஆகாது. அதுபோலவே, பாவத்தின் மீது பகை கொள்ளலாமே ஒழி, பாவவினையைச் செய்யும் அறிவற்றவரைச் சினந்து கொள்ளுதல் சீராகுமோ?  ஆகாது. இவை எல்லாம் தக்கன ஆகா என்று குற்றமற்ற பெரியவர் உணர்ந்து, தமது அன்பினைக் கொண்டு, எந்நாளும் அத் தீயவர்களைத் திருத்தி நல்வழிப் படுத்துவர்.

 

         உரும் - இடி. தரு - மரம். முயிறு - கடிஎறும்பு. அரும் -கொடிய. மறம் - பாவம். அசடர் - மூடர். கோதில் - குற்றமில்லாத ஆள்தல் - நல்வழிப்படுத்தல். கலர் - தீயவர்.

 

     எனவே, அறச் செயலுக்கு மட்டும் அன்பு தேவைப்படுவது இல்லை. பாவச் செயலை மாற்றுவதற்கும் அன்பு தேவைப்படுகின்றது என்பதை அறியலாம்.

 


No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...