கல்விச் செருக்குக் கூடாது

 

 

கற்றதனால் ஆய பயன்

-----

 

     ஒளியானது சிறிது சிறிதாகக் குறைந்து வரும்போது, இருளானது சிறிது சிறிதாக வந்து மண்டும். ஒளியானது சிறிது சிறிதாக மிகுந்து வரும்போது, இருளானது கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து இல்லாமல் போகும்.

 

     அது போலவே, அறிவு சிறிதாக இருக்கும்போது, அறியாமை மிகுந்து இருக்கும். அறிவு வளர, வளர, அறியாமை நீங்கும். அறியாமை நீங்கவே, உள்ளத்தில் இயல்பாகவே, "நான் கற்றவன்" என்று கொண்டுள்ள ஆணவமானது அடியோடு நீங்கும்.

 

     செல்வத்தால் உண்டான ஆணவம் நீங்கவேண்டுமானால், தம்மினும் மெலியவரைப் பார்த்து, "இவரை விடவும் நாம் கொண்டுள்ள செல்வம் பெரிது அல்லவா?" என்று மகிழ்ச்சி கொள்ளவேண்டும். கல்வி அறிவு நிரம்ப இன்மையால், சிறிது கற்றவுடனே "நான் கற்றவன்" என்னும் செருக்கு மிகுந்து, அதானல் உண்டான அறிவு மயக்கம் அல்லது செருக்கு தீரவேண்டுமானால், நிரம்பக் கற்றவரைப் பார்த்து, "நாம் கற்றது எல்லாம், இந்தப் பெரியவருடைய கல்வியின் முன்னர் எம்மாத்திரம்?" என்று எண்ணி, தமது கல்விச் செருக்கினை விட்டுவிட வேண்டும். இதுவே, நெறியான வாழ்க்கைக்கு இன்றியமையாதது. செல்வத்தைச் சிறிது பெற்றாலும், பெற்றதைக் கொண்டு மனநிறைவு கொள்ளவேண்டும். கல்வி அறிவு பெற்றவருக்கு, மேன்மேலும் கற்றல் வேண்டும் என்னும் ஆர்வம் உண்டாகவேண்டும்.

 

"செல்வம் என்பது சிந்தையின் நிறைவே;

அல்கா நல்குரவு அவா எனப்படுமே"

 

என்பது குமரகுருபர அடிகள், "சிதம்பர மும்மணிக் கோவை" என்னும் நூலில் அருளியது.

 

தம்மின் மெலியாரை நோக்கித் தமதுஉடைமை

அம்மா பெரிதுஎன்று அகம் மகிழ்க; - தம்மினும்

கற்றாரை நோக்கிக் கருத்துஅழிக, கற்றதுஎல்லாம்

எற்றே இவர்க்குநாம் என்று.   

 

இது "நீதிநெறி விளக்கம்" என்னும் நூலில், குமரகுருபர அடிகள் அருளியது.

 

இதன் பொருள் ---

 

     தம்மின் மெலியாரை நோக்கி --- தம்மை விடச் செல்வத்தில் குறைந்திருப்பவர்களைப் பார்த்து, தமது உடைமை அம்மா பெரிது என்று அகம் மகிழ்க --- தாம் பெற்றிருக்கும் செல்வப் பொருளானது, "அம்மா! மிகுதியாகும்" என்று உள்ளம் மகிழ்ந்து கொள்க: (ஆனால்) தம்மினும் கற்றாரை நோக்கி --- தம்மை விட மிகுதியாகப் படித்திருப்பவர்களைப் பார்த்து, நாம் கற்றதெல்லாம் எற்றே இவர்க்கு என்று கருத்து அழிக --- நாம் படித்த படிப்பெல்லாம் இவர் படிப்புக்கு எம்மாத்திரம் என்று வருந்தி, கற்ற கல்வியால் உண்டான செருக்கை விடுக.

 

     கல்வி அறிவு பெறுவது நல்லது; உயர்ந்தது. ஆனால், செருக்கு பொல்லாதது. "கல்விச் செருக்கு" என்பது "வித்தியா கர்வம்" என்று வடமொழியில் வழங்கப்படும். "வித்" என்றால் "அறிதல்" என்று பொருள். "வித்தை" என்றால், "அறிவு" என்று பொருள். பொருள் சேரச் சேர மனிதனுக்கு, செல்வச் செருக்கு உண்டாகும். அறிவு சேரச் சேர, "நான் மெத்தப் படித்தவன்" என்னும் தடிப்பும், முனைப்பும் கற்றவர் உள்ளத்தில் எழுவது இயல்பு. இந்த வித்தியா கர்வம் எல்லோராலும் இகழப்படுவது. கல்விச் செருக்கு உள்ளவரிடத்தில் மெய்யறிவு விளங்காது.

 

"குறை குடம் கூத்தாடும்; நிறைகுடம் நீர் தளும்பாது"

 

     மதுரைம்பதியில், செக்கநாதப் பெருமானோடு எதிர்த்து வாதாடிய பெரும்புலவர் ஆகிய நக்கீரர், தாம் பெருமானோடு வாதாடிய தமது புன்மையை உணர்ந்து தெளிந்ததை, இந்தப் பழமொழியோடு புணர்த்தி, "சிறிய கேள்வியர் கழியவும் செருக்குவர்" என்று திருவிளையாடல் புராணம் பின்வருமாறு கூறும்.

 

மறையின் அந்தமும் தொடாத தாள் நிலம் தொட வந்த

நிறை பரஞ்சுடர், நிராமய நிருத்தற்குப் பிழைத்தேன்;

"சிறிய கேள்வியோர் கழியவும் செருக்கு உடையோர்"என்று

அறிஞர் கூறிய பழஞ்சொல் என் அளவிற்றே அம்ம.

 

இதன் பொருள் ---

 

     வேதங்களின் முடிபாகிய உபநிடதங்களாலும் அறிதற்கு அரிய திருவடிகள், நிலமகள் நீண்டுமாறு நடந்து வந்த, எங்கும் நிறைந்த பரஞ்சோதியும், பாசங்கள் அற்றவனும் ஆகிய சோமசுந்தரப் பெருமானுக்குப் பிழை செய்தேன். ஆதலினால், "நிரம்பாத கல்வியை உடைவயர், மிகவும் இறுமாப்பினை உடையவராய் இருப்பார்" என்று அறிவுடையோர் கூறிய பழமொழி என் அளவில் இருப்பது ஆயிற்று, ஐயோ?

 

     ஆன்ம நலனை அடைவதே கல்வியின் மேன்மையான பலன் ஆகும் என்பதை உணர்ந்து, கல்வியால் செருக்குக் கொள்ளமால், மேலும் கற்கவேண்டிய நூல்களைக் கற்று, மெய்யறிவு பெறுதல் வேண்டும்.

 

     கிணறு தோண்டத் தோண்ட, தண்ணீர் நிறைய ஊறும். அதுபோலவே, நூல்களைக் கற்கக் கற்ற, அறிவானது உள்ளத்தில் ஊறும்.

 

"தொட்ட அனைத்து ஊறும் மணல்கேணி, மாந்தர்க்குக்

கற்ற அனைத்து ஊறும் அறிவு"

 

என்றார் திருவள்ளுவ நாயனார்.

 

     "கற்றும் எனக்கு அறிவு விளங்கவில்லையே, எனது கர்மத்தை என்னவென்று சொல்லுவேன். கல்லாத பேர்களே நல்லவர்கள் போலும்!" என்று நமக்காக நொந்துகொள்ளுகின்றார் தாயுமான அடிகளார்.

 

கல்லாத பேர்களே நல்லவர்கள், நல்லவர்கள்;

        கற்றும் அறிவில்லாத என்

கர்மத்தை என்சொல்கேன்; மதியை என் சொல்லுகேன்;

        கைவல்ய ஞானநீதி

நல்லோர் உரைக்கிலோ, கர்மம் முக்கியம் என்று

        நாட்டுவேன்; கர்மம் ஒருவன்

நாட்டினாலோ, பழைய ஞானம் முக்கியம் என்று

        நவிலுவேன்; வடமொழியிலே

வல்லான் ஒருத்தன் வரவும், திராவிடத்திலே

        வந்ததா விவகரிப்பேன்;

வல்லதமிழ் அறிஞர் வரின், அங்ஙனே வடமொழியின்

        வசனங்கள் சிறிது புகல்வேன்;

வெல்லாமல் எவரையும் மருட்டிவிட வகைவந்த

        வித்தை என் முத்தி தருமோ?

வேதாந்த சித்தாந்த சமரசநன் னிலைபெற்ற

        வித்தகச் சித்தர்கணமே.

 

இதன் பொருள் ---

 

     பண்பாடு இல்லாமல், நூலை மட்டும் கற்றவர்களை விட, கல்லாதவர்களே மிகவும் நல்லவர்களாவர். நூல்களைக் கற்றும், கற்றபடி ஒழுகும் அறிவில்லாத எனது ஊழ்வினைப் பயனை என்ன என்று சொல்லுவேன். வினைவழியே ஒழுகுகின்ற எனது அறிவினை என்னவென்று சொல்லுவேன். வீடுபேற்றினை அளிக்கும் மெய்யுணர்வு நூல்களைத் திருவருள் கைவந்த நல்லார்கள் சொல்லுவார்களானால், (நீர் சொல்லுகின்ற) இந்த மெய்யுணர்வினை விட, சிறந்தது செய்யும் வினையே முதன்மையானது என்று வலியுறுத்திக் கூறுவேன். (ஞானம் முக்கியம் என்றால், கர்மம் முக்கியம் என்பேன்) வேறு ஒருத்தன் வந்து, வினைதான் முக்கியமானது என்று பலவாறு கூறி நாட்டுவானானால், தொன்மையாகத் தொடர்ந்து வருகின்ற மெய்யுணர்வே முதன்மையானது என்று சொல்லுவேன். (கேவல ஞானம் முக்கியம் என்றால், கர்மம் தான் முக்கியம் என்பேன்) (இது மட்டுமா?) வடமொழியில் வல்லவன் ஒருவன் வந்து சொற்போர் புரிந்தால், திராவிடம் எனப்படும் சிறந்த தமிழ்மொழியிலே, அது சொல்லப்பட்டு உள்ளது என்று நானும் சொற்போர் புரிவேன். தமிழறிவு படைத்த அறிஞர் ஒருவர் வந்து (தமிழ் மொயிழிலே உள்ள நூல் கருத்துக்களைச்) சொன்னால், அவரை வாயடிக்க, வடமொழியில் உள்ள சில சொற்களைக் கூறுவேன். இப்படி, எப்படியாவது, பிறரை வாயடைத்துப் போகச் செய்து, வெருட்டி, மருட்டி, வெல்லுவதையே குறிக்கோளாகக் கொண்டு நான் கற்ற கல்வி அறிவானது, எனக்கு வீடுபேறு (மோட்சம்) தருமா? (தராது).

    

     வாதங்களால் வெற்றி கொள்ள முடியாத போது, வெருட்டி, மருட்டி விடுவதுதான், கல்வி அறிவு பயன்படுமானால், அது முத்தி நெறிக்கு உதவாது. முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயலவைக்கும்.

 

     "இற்றைநாள் கற்றதும் கேட்டதும் போக்கிலே போகவிட்டு, பொய் உலகன் ஆயினேன், நாயினும் கடையான புன்மையேன்" என்று தாயுமான அடிகளார் காட்டியபடி, கற்றதும் கேட்டதும் வீணாகப் போதல் கூடாது. பொய் உலக வாழ்க்கையில் உழலுதலும் கூடாது.

 

கற்றும், பலபல கேள்விகள் கேட்டும், கறங்கு எனவே

சுற்றும் தொழில்கற்று, சிற்றின்பத்து ஊடு சுழலின்என்னாம்,

குற்றம் குறைந்து குணம் மேலிடும் அன்பர் கூட்டத்தையே

முற்றும் துணை என நம்பு கண்டாய் சுத்த மூடநெஞ்சே.

 

என்கின்றார் தாயுமான அடிகளார்.

 

     நூல்களைக் கற்றதோடு நில்லாமல், கற்றவரைத் தேடிச் சென்று நூல்பொருளைக் கேட்டது, இங்கும் அங்குமாக ஓடி ஓடி, பணம் பண்ணி, சிற்றின்ப வாழ்க்கையில் சுழலுவதற்காக அல்ல. உயிருக்கு உள்ள காமாதி குற்றங்கள் குறைந்து, நல்ல குணம் மேலிடுவதற்காகவே. எனவே, கற்றதன் வழி நிற்கவேண்டுமானால், குற்றம் குறைந்து குணம் நிறைந்து உள்ள மெய்யன்பர் கூட்டத்தையே தமக்கு உற்ற துணை என்று கருதவேண்டும்.

 

     கல்வி அறிவால் உயர்ந்தவர் என்றுமே உயர்வர். கல்வியால் ஆன பயனைத் தாம் பெற்று மகிழ்வதோடு, பிறரையும் மகிழப் பண்ணி, அவரை, இறைவனைத் தியானிக்கும் நல்நிலைக்கு உயர்த்துவர். நூல்களைக் கற்று வைத்தும், அறிவால் தாழ்ந்தவர், ஆணவம் மிகுந்து இருப்பர். உலக வாழ்க்கையையே விரும்பி, அதனை அனுபவித்துக் கொண்டிருந்து, மீண்டும் மீண்டும் பிறவியில் விழுவார்கள்.

 

வல்லவர்பால் கல்வி மதம் ஆணவம்போக்கும்,

அல்லவர்பால் கல்வி அவைஆக்கும், - நல்லிடத்தில்

யோகம் பயில்வார் உயர்ந்தோர், இழிந்தோர்கள்

போகம் பயில்வோர் புரிந்து.

 

     "நீதிவெண்பா" எனும் நூலில் சொல்லப்பட்டுள்ள இப் பாடலின் பொருள் ---

 

         உயர்ந்தவரிடத்தில் உண்டான கல்வியானது, அறியாமையையும் ஆணவத்தையும் ஒழிக்கும். அக் கல்வியில் சிறந்தோர் நல்ல இடங்களில் இருந்து இறைவனை வணங்குவர்.  நல்லவர் அல்லாத தாழ்ந்தோர் இடத்து உள்ள கல்வியானது, அறியாமையையும், ஆணவத்தையும் மிகுவிக்கும். ஆதலால், அக் கீழோர் கீழான உலக வாழ்க்கையினை விரும்பி அதனை அனுபவித்துக் கொண்டு இருப்பார்கள்.

 

     அருணகிரிநாதர் பாடியது போ, "மதியால் வித்தகன் ஆகவேண்டும். மனதால் உத்தமன் ஆகவேண்டும்".

 

     எனவே, கற்ற கல்வியைக் கொண்டு செருக்குக் கொள்வது கூடாது. மெய்யறிவைப் பெற முயலவேண்டும். "கற்றதனால் ஆய பயன் என்கொல்? வால் அறிவன் நல்தாள் தொழார் எனின்?" என்றார் திருவள்ளுவ நாயனார்.

 

     கற்ற பெரியோர்களொடு கூடி இருந்தால், கல்வி கற்கும் நெறி இன்னது என்று விளங்கும். குற்றம் குறைந்து குணம் மேலிடும்.

 

"கற்ற மேலவரொடும் கூடி நில்லேன்; கல்வி

                        கற்கும் நெறி தேர்ந்து கல்லேன்;

            கனிவுகொண்டு உனது திருவடியை ஒருகனவிலும்

                        கருதிலேன்; நல்லன் அல்லேன்;

குற்றமே செய்வது என்குணம் ஆகும்; அப்பெரும்

                        குற்றம் எல்லாம் குணம் எனக்

            கொள்ளுவது நின் அருட்குணம் ஆகும்; என்னில், என்

                        குறை தவிர்த்து அருள் புரிகுவாய்!

பெற்றம் மேல் வரும் ஒரு பெருந்தகையின் அருள்உருப்

                        பெற்று எழுந்து ஓங்கு சுடரே!

            பிரணவ ஆகார! சின்மய! விமல சொரூபமே!

                        பேதம்இல் பரப் பிரமமே!

தன்தகைய சென்னையில் கந்தகோட்டத்துள் வளர்

                        தலம் ஓங்கு கந்தவேளே!

            தண்முகத் துய்யமணி! உள்முகச் சைவமணி!

                        சண்முகத் தெய்வமணியே!   

 

என்பது வள்ளல்பெருமான் அருளிய திருவருட்பா.

 

இதன் பொருள் ---

 

     தன்னளவில் அழகு பொருந், சென்னையில் கந்தகோட்டம் என்னும் திருக்கோயிலில் எழுந்தருளி இருக்கும் கந்தக் கடவுளே! குளிர்ந்த ஒளியினை உடைய தூயமணியே! உள்ளத்தில் போற்றப்படவேண்டிய சைவநெறியினை விளக்கும் மணியைப் போன்றவரே! ஆறுதிருமுகங்களை உடைய தெய்வமே! எருதின் மேல் இவர்ந்து வரும் ஒப்பற்ற பெருமானான சிவனுடைய அருள் உருவைப் பெற்று விளங்கும் சுடரே! ஓங்கார வடிவமானவரே! ஞானத் திரளாய் உள்ள பெருமானே! மலம் இல்லாத தூய்மை உருவமே! மேலான பிரமப் பொருளே!

 

     கல்வியை கற்கும் நெறியினை அறிந்து நான் கற்கவில்லை. கற்று உணர்ந்த மேன்மக்களோடு கூடி, அவர் வழி நின்றதும் இல்லை. உள்ளம் உருகி உனது திருவடியைக் கனவிலும் நினைக்கவில்லை. நான் நல்லவனும் இல்லை. நல்லொழுக்கம் இல்லாமையால், என்னிடத்தில் நல்ல பண்புகள் விளங்கவில்லை. நல்ல பண்புகள் இல்லாமையால், குற்றச் செயல்களைச் செய்வதே எனக்குக் குணமாக உள்ளது. உயிர்கள் செய்யும் குற்றங்களை எல்லாம் குணமாகக் கொண்டு அருள் புரிவது, உனது அருட்குணம். ஆதலால், எனது குற்றங்களைப் போக்கி அருள் புரிய வேண்டுகின்றேன்.

 

     முறையற்ற கல்வியும் கனிவில்லாத மனமும் உடைமையால் வந்த குற்றங்களை நீக்கிக் குறை தவிர்த்து அருள, இறைவனை வேண்டிக் கொள்ளவேண்டும். கல்வியின் பயன் இதுவே ஆகும்.


No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...