செல்வம் சிறுகச் சிறுக வரும் --- ஒட்டுமொத்தமாகப் போகும்.

 

செல்வம் சிறுகச் சிறுக வரும்,

ஒருங்கே போகும்.

-----

 

     திருக்குறளில், "நிலையாமை" என்னும் ஓர் அதிகாரம்.  நிலையாமையாவது, தோற்றம் உடைய எவையும் நிலைத்து இருக்கும் தன்மை இல்லாதன. அறிவு மயங்கிய இடத்தில் பாம்பு தாம்பு போலும், மிக்க கோடையில் கானல், நீர் போலும் தோற்றம் தந்து, இல்லாமல் போவது. இவ்விதம் தோன்றுவன யாவும், அழிந்து போகும் நிலையை உடையன என்பதை உணர்ந்து, பொருள்களிடத்தில் பற்று வைத்தல் கூடாது என்பதை உணர்த்த, முதலில் நிலையாமையை எடுத்துக் கொண்டார் நாயனார்.

 

     இந்த அதிகாரத்தில் வரும் இரண்டாம் திருக்குறளில், "ஒருவனிடத்தில் பெரும் செல்வம் வந்து சேர்வது, கூத்தாடும் இடத்தில் சிறுகச் சிறுக வந்து சேரும் கூட்டத்தைப் போல்வது. அந்தப் பெரும் செல்வம் சென்று தீர்வது, கூத்தாட்டைக் காணவந்து சிறுகச் சிறுகத் திரண்ட கூட்டமானது, அது முடிந்த பின்னர் ஒருசேரக் கலைவது போன்றது" என்கின்றார் நாயனார்.

 

     ஒருவனுக்கு அளவுபடாத செல்வம் வருவது, கூத்தாடும் இடத்தில் கூத்தினைக் கா, ஒவ்வொருவராக வந்து திரள்வது போல சிறிது சிறிதாக வந்து பெருகும். அப்படி வந்த செல்வமானது ஒழிந்து போகும் காலம் வரும்போது, கூத்து முடிந்தவுடன், மக்கள் ஒருசேரப் போய்விடுவது போலப் போய் ஒழியும். பெரும் செல்வமாகிய துறக்கச் செல்வமும், ஒருவன் சிறுகச் சிறுகச் செய்து வந்த நல்வினை காரணமாக அவனை வந்து அடையும். அந்த நல்வினை ஒழிந்து, தீவினை வந்த காலத்து, அது முற்றுமாகப் போய்விடும்.

 

     கூத்தாடுகின்ற இடமாக இருந்தாலும், கூத்து நடக்க இல்லையானால் ஒருவரும் வருவதில்லை.

 

     நல்வினை இல்லையானால் செல்வம் வருவதில்லை.

 

கூத்தாட்டு அவைக் குழாத்து அற்றே பெரும்செல்வம்,

போக்கும் அது விளிந்து அற்று.

 

என்பது நாயனார் அருளிய திருக்குறள்.

 

     இத் திருக்குறளுக்கு விளக்கமா, கமலை வெள்ளியம்பலவாண முனிவர் பாடி அருளிய, "முதுமொழி மேல் வைப்பு" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...

 

அரனை அருச்சித்த விபசித்திற்கும், வேள்வி

புரியும் நகுடனுக்கும் போல ---  வருவதூஉம்

கூத்தாட்டு அவைக் குழாத்து அற்றே பெருஞ்செல்வம்,

போக்கும் அது விளிந்து அற்று.

 

இதன் பொருள் ---

 

     அரனை அருச்சித்த விபசித்திற்கும் --- சிவபெருமானை அருச்சனை புரிந்து கொண்டு இருந்த விபசித்து என்னும் ஏழை அந்தணனுக்கும். வேள்வி புரியும் நகுடனுக்கும் போல --- அசுவமேத யாகம் என்னும் பரிவேள்வியைப் புரிந்த நகுடன் என்னும் குருகுல அரசனுக்கும் வந்தது போல, பெருஞ்செல்வம் வருவதூஉம் --- பெரும் செல்வமானது வந்து சேர்வதும், கூத்தாட்டு அவைக் குழாத்து அற்றே --- கூத்தாடுகின்ற அரங்கில் மக்கள் ஒவ்வொருவராக வந்து சேர்ந்தது போல. போக்கும் அது விளிந்து அற்று --- வந்த செல்வம் போனதும், அந்தக் கூட்டமானது கலைந்து போனது போல ஆகும்.

 

     விபசித்து --- கோசல தேசத்து ஓர் எளிய அந்தணன்.  சிவபக்தன். ஒரு காலத்தில் குபேரனுடைய தங்கை பொய்கையில் நீராடும்போது தன் முக்குத்தியை இழந்து விட்டாள். விபசித்து அதனைத் தேடிக் கொடுத்துக் குபேரனால் அளவற்ற திரவியம் பெற்று, அவை அனைத்தையும் சிவப் பணிக்கே செலவிட்டனன் என்பது விருத்தாசல புராணத்தில் கண்ட வரலாறு. விபசித்து என்னும் அந்தணனுக்கு நல்வழியில் வந்த செல்வம், இறைபணியில் செலவானது. செல்வம் தீர்ந்தாலும், புண்ணியத்தைத் தந்தது.

 

         நகுடன் --- குருவம்சத்து ஓர் அரசன். இவன் பல பரிவேள்விகளைச் செய்து இந்திர பதவியைப் பெற்றான்.  இந்திரன் ஆனபின், அகத்தியர் முதலிய சப்தரிஷிகள் சிவிகை தாங்க அதில் அமர்ந்து செல்லுகையில், அந்த முனிவர்களை நோக்கி 'விரைந்து செல்லுங்கள், விரைந்து செல்லுங்கள்' என்ற பொருளைத் தரும்படி 'சர்ப்ப, சர்ப்ப' என்றனன். அதனைக் கேட்டு அகத்தியர் சினம் கொண்டு, இவனைச் சர்ப்பம் ஆமாறு சபித்தனர் என்பது திருவிளையாடற் புராண வரலாறு. வில்லிபாரதம் குருகுலச் சருக்கம்,  பின்வரும் பாடல்களையும் காண்க....

 

முகுடமும், பெருஞ் சேனையும், தரணியும், முற்றும்

சகுட நீர் எனச் சத மகம் புரி அருந் தவத்தோன்,

நகுடன், நாமவேல் நராதிபன், நாகருக்கு அரசாய்

மகுடம் ஏந்திய குரிசில், ஆயுவின் திரு மைந்தன்.

 

புரந்தரன் பதம் பெற்றபின், புலோமசை முயக்கிற்கு

இரந்து, மற்று அவள் ஏவலின் யானம் உற்று ஏறி,

வரம் தரும் குறுமுனி முனி வாய்மையால் மருண்டு,

நிரந்தரம் பெரும் புயங்கம் ஆனவனும், அந் நிருபன்.

 

     நகுடன், தனது தீவினைப் பயன் காராணமாக அறிவிழந்து, தான் நீண்ட காலமாகப் புரிந்த அசுவமேத யாகத்தால் பெற்ற இந்திர பதவியை ஒரு நொடியில் இழந்து, பாம்பாக மாறினான்.

    

         கூத்தாடும் இடம் ஒரு கூட்டம் கூடி, அப்பால் கலைவதுபோல் செல்வம் நிலையற்றது என்பது இவற்றால் விளங்கும். நல்வினைப் பயன் இருந்தால், செல்வம் சிறுகச் சிறுக வந்து சேரும். தீவினைப் பயன் உண்டானபோது, மொத்தமாக நீங்கும்.

 

     பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளமை காண்க.

 

இயக்குறு திங்கள் இருட்பிழம்பு ஒக்கும்

துயக்குறு செல்வத்தைச் சொல்லவும் வேண்டா,

மயக்கற நாடுமின் வானவர் கோனை,

பெயல் கொண்டல் போலப் பெருஞ்செல்வ மாமே. --- திருமந்திரம்.

 

இதன் பொழிப்புரை ---

 

     வானத்தில் இயங்குதலைப் பொருந்திய நிலவு நிலைத்து நில்லாமல் இருட்பிழம்பு போல்வதாகிவிடுகின்ற துன்ப நிலையையே உடையது செல்வம் என்பதைச் சொல்ல வேண்டு வதில்லை. (நேற்று அரசனாய் இருந்தவன் இன்று அடியன் ஆயினமை கண்கூடாகப் பலராலும் அறியப்பட்டதே.) ஆதலின், செல்வச் செருக்கில் ஆழ்தலை விடுத்து, துறக்கச் செல்வத்தினரான தேவர்கட்கும் அச்செல்வத்தை அவர்பால் வைத்தலும், வாங்குதலும் உடைய தலைவனாகிய சிவபெருமானை நினையுங்கள். அவன் தன்னை நினைப்பவர்க்குக் கார்காலத்து மேகம் போலப் பெருஞ்செல்வத்தை ஒழியாமல் தருபவனாகின்றான்.

 

         முற்பக்கமாகிய சுக்கிலபட்சம் என்னும் நற்காலம் காரணமாக வளர்ச்சி உறுதலும், பிற்பக்கமாகிய கிருஷ்ண பட்சம் என்னும் தீக் காலம் காரணமாக அது தேய்வுற்று இருட்பிழம்பு போல் ஆவதும் ஆகிய இருதன்மையும் திங்களுக்கு உண்டு. அதுபோலவே, பொருட்செல்வமும்,  நல்லூழ் காரணமாக வளர்தலும், தீயூழ் காரணமாகக் குறைந்து மறைதலும் ஆகிய இருதன்மைகளும் கொண்டது.

 

மருவு இனிய சுற்றமும் வான்பொருளும் நல்ல

உருவும் உயர்குலமும் எல்லாம் --- திருமடந்தை

ஆம்போது அவளோடும் ஆகும், அவள்பிரிந்து

போம்போது அவளொடு போம்.           ---  மூதுரை

 

இதன் பதவுரை ---

 

     மருவு இனிய சுற்றமும் --- பொருந்தி இருக்கின்ற இனிய உறவும், வான் பொருளும் --- மேலாகிய பொருளும், நல்ல உருவும் --- நல்ல அழகும், உயர் குலமும் எல்லாம் --- உயர்வாகிய குலமும் என்னும் இவையெல்லாம், திருமடந்தை ஆம் போது --- சீதேவி வந்து கூடும்பொழுது, அவளோடும் ஆகும் --- அவளுடனே வந்து கூடும்; அவள் பிரிந்து போம்போது -- அவள் நீங்கிப் போம்பொழுது, அவளொடு போம் --- அவளுடனே நீங்கிப் போகும்.

 

         திருமடந்தை --- இலக்குமி. சுற்றமும், பொருளும், அழகும், உயர்குலமும் நிலையுடையன அல்ல.

 

.......           ......       .....  தூயோய் நின்னை,

நல்வினைப் பயன்கொல் நான்கண்டது என,

தையல், கேள்! நின் தாதையும் தாயும்

செய்த தீவினையில் செழுநகர் கேடுஉறத்

துன்புஉற விளிந்தமை கேட்டுச் சுகதன் 

அன்புகொள் அறத்திற்கு அருகனேன், ஆதலின்

மனைத்திற வாழ்க்கையை மாயம்என்று உணர்ந்து,

தினைத்தனை ஆயினும் செல்வமும் யாக்கையும்

நிலையா என்றே நிலைபெற உணர்ந்தே,

மலையா அறத்தின் மாதவம் புரிந்தேன்,

புரிந்த யான்இப் பூங்கொடிப் பெயர்ப்படூஉம்

திருந்திய நல்நகர்ச் சேர்ந்தது கேளாய்:   ---  மணிமேகலை, கச்சிமாநகர் புக்க காதை.

 

இதன் பதவுரை ---

 

     தூயோய் நின்னை நான் கண்டது என் நல்வினைப் பயன் கொல் என --- தூய குணம் செய்கைகளை உடையாய்!  நின்னை யான் காணப்பெற்றது எனது நல்வினைப் பயனாகும் என்று மாசாத்துவான் கூறி, மேலும் கூறலுற்று, தையல் கேள், நின் தாதையும் தாயும் செய்த தீவினையில் செழுநகர் கேடுறத் துன்புற விளிந்துமை கேட்டு --- நங்காய் கேட்பாயாக, உனது தந்தையும் தாயும் முற்பிறப்பில் செய்த தீவினையினாலே வளம் மிகுந்த மதுரை மாநகர் தீக்கிரையாகிக் கேடு எய்துமாறு துன்புற்று இறந்தமை கேட்டு, சுகதன் அன்புகொள் அறத்திற்கு அருகனேன் ஆகலின் --- புத்த தேவனின் அருள் அறத்தினைப் புரியும் தகுதியுடையேன், கலின், மனைத்திற வாழ்க்கையை மாயம் என்று உணர்ந்து --- இல்வாழ்க்கையைப் பொய்யென அறிந்து, செல்வமும் யாக்கையும் தினைத்தனை ஆயினும் நிலையா என்றே நிலைபெற உணர்ந்தே --- பொருளும் உடலும் தினையளவேனும் நிலைபெறாதன என்பதனைத் தெளிவாக உணர்ந்து, மலையா அறத்தின் மாதவம் புரிந்தேன் --- மாறுபடாத நல்லறத்தினை உடைய பெருந்தவம் செய்யலானேன்; புரிந்த யான், இப்பூங்கொடிப் பெயர்ப்படூஉம் திருந்திய நன்னகர் சேர்ந்தது கேளாய் --- அங்ஙனம் தவமேற்கொண்ட யான் அழகிய வஞ்கொடியின் பெயரினையுடைய இவ்வழகு மிக்க நகரத்தினை அடைந்த காரணத்தைக் கேட்பாயாக;

 

     முற்பிறப்பில் செய்த தீவினைப் பயனாக இப்பிறப்பில் மதுரையில் கோவலனும் கண்ணகியும் துன்புற்றார் என்பதை, "செய்த தீவினையின் துன்புற" என்றும், அவர் துன்புறுங் காலம் மதுரை தீக்கிரையாதற்கு உரிய சாபம் பயன் விளைக்குங் காலமாதலின், "செழுநகர் கேடுற" என்றும் கூறினார்.

 

செல்வர்யாம் என்றுதாம் செல்வுழி எண்ணாத

புல்லறி வாளர் பெருஞ்செல்வம் - எல்லில்

கருங்கொண்மூ வாய்திறந்த மின்னுப்போல் தோன்றி

மருங்கறக் கெட்டு விடும்.            ---  நாலடியார்.

 

இதன் பதவுரை ---

 

     செல்வர் யாம் என்று --- இன்று நாம் பெரும்செல்வம் உடையவராக இருக்கின்றோம் என்று இறுமாந்து, தாம் செல் உழி எண்ணாத --- தாம் இனிச் செல்ல இருக்கும் மறுமை உலகத்தை நினையாத, புல் அறிவாளர் பெரு செல்வம் --- புன்மையான அறிவினை உடையவரது மிக்க செல்வமானது, எல்லில் கரு கொண்மூ வாய்திறந்த மின்னுப்போல் தோன்றி --- இரவில், கரியமேகம் வாய் திறந்ததனால் உண்டான மின்னலைப் போலச் சிறிதுகாலம் தோன்றி நின்று, மருங்கு அற கெட்டுவிடும் --- இருந்த இடமும் தோன்றாமல் அழிந்துபோகும்.

 

         மறுமை உலகத்தை எண்ணி வாழாதவர்களுடைய செல்வம், மின்னலைப்போல தோன்றி அழியும்.

 

         செல்வம் இயல்பாகவே நிலையாமை உடையதாயினும் அது மின்னலைப் போல் அத்தனை விரைவில் அழிந்து போதற்குக் காரணம், ‘செல்வர் யாம் ' என்னும் செருக்கும், அச்செருக்கினால் மறுமையைப் பொருள் செய்து வாழாத தாறுமாறான வாழ்க்கை நிலையும் முதலாயின.

 

சுழல் சகடக் கால்போலும்,

     தோன்றியே அழிமின் போலும்,

அழன்மன வேசை போலும்,

     அருநிதி மேவிநீங்கும்;

பழமைபோல் அதனைநம்பிப்

     பழியுறச் செருக்கல்,மேக

நிழலினை நம்பிக் கைக்கொள்

     நெடுங்குடை நீத்தல் ஒப்பே.    ---  நீதிநூல்.

        

இதன் பொருள் ---

 

     உருளும் வண்டியின் உருளையின் கால்போலவும், தோன்றி மறையும் மின்னைப் போலவும், நச்சு உள்ளமுடைய பொதுமகள் போலவும், செல்வம் பொருந்தி நீங்கும். அச் செல்வத்தை அழியாது இருக்கும் என்று நம்பி, வசை பெருகும்படி தற்பெருமை கொள்ளுதல், மேகத்தின் நிழலை நம்பிக் கையிலுள்ள பெரிய குடையை நீக்கிவிடுவதை ஒக்கும்.

 

புலைமேலும் செலற்கு ஒத்துப் பொது நின்ற

     செல்வத்தின் பன்மைத் தன்மை

நிலைமேலும் இனி உண்டே? 'நீர் மேலைக்

     கோலம்' எனும் நீர்மைத்து அன்றே,

தலைமேலும் தோள்மேலும் தடமுதுகின்

     படர்புறத்தும் தாவி ஏறி,

மலைமேல் நின்று ஆடுவபோல் ஆடினவால்

     வானரங்கள், வரம்பு இலாத.

              ---  கம்பராமாயணம், இராவணன் வதைப் படலம்.

 

இதன் பதவுரை ---

 

     வரம்பிலாத வானரங்கள் --- அளவற்ற குரங்குகள்; மலை மேல் நின்று ஆடுவபோல் --- மலை ஒன்றின் மேல் நின்று (மகிழ்ச்சிக்) கூத்து ஆடுவதுபோல;  தலைமேலும் தோள்மேலும் தட முதுகின் படர் புறத்தும் --- இராவணேசுவரனுடைய தலைகள் மேலும், தோள்கள் மேலும்,  அகன்ற முதுகின் விசாலப் பரப்பின் மீதும்;  தாவி ஏறி --- தாவிக் குதித்து ஏறி;

ஆடின --- நடனம் ஆடின; புலை மேலும் செலற்கு ஒத்து --- இழிந்த புலைத் தன்மை உடையாரிடத்தும் (கூசாது) செல்வதற்கு ஒருப்படும்;  பொது நின்ற செல்வத்தின் --- (உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்றில்லாது எல்லோரிடத்தும்) பொதுவாகச் செல்லும் தன்மையுடைய செல்வத்தினுடைய; புன்மைத் தன்மை --- இழிந்த தன்மையை விளக்க; நிலை மேலும் இனி உண்டோ? --- இராவணன் வீழ்ச்சிக்குப் பிறகும் வேறு உவமை தேடும் நிலை இனி உலகில் உண்டாகுமோ? நீர் மேலைக் கோலம் எனும் நீர்மைத்து  அன்றே --- (இழிந்தோர் செல்வ வாழ்வு) நீர் மேல் குமிழியின் (நிலையிலாக்) கோலம் என்னும் இயல்பினது அன்றோ?

 

     முக்கோடி வாழ்நாளும், முயன்று உடைய பெருந்தவமும், முதல்வன் முன் நாள், எக்கோடியாராலும் வெல்லப்படாய்  எனக் கொடுத்த வரமும், ஏனைத் திக்கோடும் உலகு அனைத்தும் செரு கடந்த புய வலியும் கொண்டிருந்த இராவணன், எல்லாம் தொலைந்து வீழ்ந்து கிடக்கின்றான். அவனது உடல் மீது வானரங்கள் தாவிக் குதித்து நடனம் ஆடுகின்றன. செல்வத்தின் நிலையாமைக்கு உவமை இதுவே என்பது குறித்து, கவிச்சக்கவர்த்தி, தனது கூற்றாக இப்படிக் கூறி உள்ளார்.

No comments:

Post a Comment

பொது --- 1084. முழுமதி அனைய

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் முழுமதி அனைய (பொது) முருகா!  திருவடி அருள்வாய். தனதன தனன தனதன தனன      தனதன தனன ...... தந்ததான முழுமதி ய...