திருவருள் விளக்கம் பெற முயல்வோம்

 

 

திருவருள் விளக்கம் பெற முயல்வோம்

-----

 

     "இறைவன் எங்கே இருக்கின்றான்?" இந்தக் கேள்வியை விட, "இறைவன் இல்லாத இடம் எது?" என்று கேட்பது பயனுடையதாக இருக்கும்.

 

     ஔவைப் பாட்டி ஒரு நாள் நெடுந்தூரம் நடந்து வந்து, சற்றே இளைப்பாற ஒரு கோயிலுக்குள் நுழைந்து, சுவாமி சந்நிதிக்கு நேரே காலை நீட்டி அமர்ந்தார். அதை அங்கு இருந்த சிறுவன் ஒருவன் பார்த்தான். "பாட்டி, சுவாமி இருக்கின்றார்" என்றான். ஔவைப் பாட்டி, "அப்படியா, நான் களைப்பில் கவனிக்கவில்லை. நானோ கிழவி. மிகவும் அலுப்பாக உள்ளது. சுவாமி இல்லாத இடமாகப் பார்த்து, நீயே எனது காலைக் கொஞ்சம் திருப்பி விடு. உனக்குப் புண்ணியமாகப் போகும்" என்றார். பையன் சிந்தனையில் ஆழ்ந்தான். "சுவாமி இல்லாத இடமா?"

 

     எங்கும் நிறைந்து விளங்குவது பரம்பொருள். அது அன்பு வடிவானது. ஓர் உருவமோ, ஒரு பெயரோ இல்லை. இறைவன் அன்பு வடிவானவன் என்பதை, "அன்பு உருவாம் பரசிவமே" என்னும் வள்ளல் பெருமான் வாக்கால் அறியலாம். "நேயத்தே நின்ற நிமலன்" என்றும் "அன்பினில் விளைந்த ஆரமுதே" என்றும் மணிவாசகப் பெருமான் காட்டினார்.

 

     இறைவன் ஒரு நாமம், ஓர் உருவம் இல்லாதவன். அவன் சோதி வடிவமானவன். சோதி என்று நாம் கருதுவதுமே உருவ நிலைதான் என்கிறது மணிவாசகம். "சோதியாய்த் தோன்றும் உருவமே!, அருவாம் ஒருவனே!" எனவரும் திருவாசகத்தால் அறியலாம். அந்த சோதி என்பதும் கூட, நமது கற்பனையைக் கடந்தது என்பதால், "கற்பனை கடந்த சோதி", என்றும், அது கருணையே வடிவானது என்பதால், "கருணையே வடிவமாகி" என்றும் தெய்வச் சேக்கிழார் பெருமான் வழங்கினார்.

 

     அன்பு எங்கு உள்ளதோ, அங்கே சிவம் விளங்கும். அன்பு வேறு, சிவம் வேறு என்பவர் அறிவு இல்லாதவர். அன்பும் சிவமும் இரண்டு அல்ல என்கிறார் திருமூல நாயனார்.

 

அன்பு சிவம் இரண்டு என்பர் அறிவு இலார்,

அன்பே சிவம் ஆவது ஆரும் அறிகிலார்,

அன்பே சிவம் ஆவது ஆரும் அறிந்தபின்,

அன்பே சிவமாய் அமர்ந்து இருப்பாரே.

 

என்கிறார்.

 

     "மலர்மிசை ஏகினான் மாண் அடி சேர்ந்தார் நிலமிசை நீடு வாழ்வார்" என்றார் திருவள்ளுவ நாயனார்.

 

     "மலர்மிசை ஏகினான்" என்னும் சொற்றொடருக்கு, அன்பால் நினைவாரது உள்ளக் கமலத்தின்கண் அவர் நினைந்த வடிவோடு விரைந்து சேருதல் என்று அற்புதமான உரையை வகுத்தார் பரிமேலழகர். "சேர்தல்" என்பது "இடைவிடாது நினைத்தல்" என்றார்.

 

     மலர் என்றது, அன்பால் நினைவாரது உள்ளமாகிய தாமரை மலர். "பூவினுக்கு அருங்கலம் பொங்கு தாமரை" என்றாற் போல், பூ என்று வெறுமனே சொன்னாலே அது தாமரையைத் தான் குறிக்கும். இங்கே உள்ளமானது தாமரை எனப்பட்டது. அன்பு இருந்தால், உள்ளம் தாமரை ஆகும். அதற்கு கையானது குவிய வேண்டும். கை குவிந்தால் இதயம் தானே மலர்கின்ற தன்மையைப் பெறும். "கரமலர் மொட்டித்து இருதயம் மலர, கண் களி கூர, நுண் துளி அரும்ப, சாயா அன்பினை நாள்தொறும் தழைப்பவர்" என்பார் மணிவாசகப் பெருமான். "கைகுவித்து இரு கண்களில் நீர் பெருகி" என்பார் தாயுமானார். 

 

     இறைவனை உள்ளக் கமலத்தில் வைத்து, இடையறாது வழிபடுவது ஞானபூசை ஆகும். "இறைவன் அடி அடைவிக்கும் எழில் ஞான பூசை" என்கிறது சைவசித்தாந்தம். இந்த ஞான பூசையைச் செய்து இறைவனுடைய மாட்சிமைப்பட்ட திருவடியைச் சேர்ந்தவர் பெரியபுராணத்தில் வைத்துப் போற்றப்படுகின்ற பூசலார் நாயனார்.

 

     "அங்கு இங்கு எனாதபடி, எங்கும் ப்ரகாசமாய், ஆனந்த பூர்த்தியாகி, அருளொடு நிறைந்தது எதுவோ", "தன் அருள் வெளிக்கு உள்ளே அகிலாண்ட கோடி எல்லாம் தங்கும் படிக்கு இச்சை வைத்து, உயிர்க்கு உயிராய்த் தழைத்தது எதுவோ", "மனம் வாக்கினில் தட்டாமல் நின்றது எதுவோ" சமய கோடிகள் எல்லாம் தம் தெய்வம், எம் தெய்வம் என்று எங்கும் தொடர்ந்து எதிர் வழக்கு இடும்படியாக நின்றது எதுவோ", "எங்கணும் பெருவழக்காய் உள்ளது எதுவோ", "யாதினும் வல்ல ஒரு சித்தாகி (அறிவுப் பொருளாகி) இன்பமாய் என்றைக்கும் உள்ளது எதுவோ"  "கங்குல் பகல் அற நின்ற எல்லை உள்ளது எதுவோ" அதுவே பரம்பொருள் என்கின்றார் தாயுமான அடிகளார்.

 

     எனவே, அளவில்லாத ஆற்றலும், அளவில்லாத கருணையும் உடைய இறைவன், அவரவர் கருதுகின்ற வடிவங்களில், அவரவர் இடுகின்ற பெயரைக் கொண்டு, எழுந்தருளி அருள் பாலிக்கின்றான் என்பது தான் உண்மை.

 

     எனவே, அன்பு வடிவான சிவத்தை, அன்பு ஒன்றினால் மட்டுமே அடைய முடியும். எனவே தான், அன்பால் நினைவாரது உள்ளம் "கமலம்" எனப்பட்டது.

 

     அழுத பிள்ளையைப் போல, துன்பம் நேரும்போதும், தேவை உண்டாகும் போதும் இறைவனை நினைந்து வழிபட்டு, பிறகு அவனை மறந்து உலகியலிலேயே உழல்வது மனித இயல்பு. அவ்வாறு இல்லாமல், எப்போதும் இறைவனது திருவடியை நினைப்பதையே, சேர்தல் என்னும் சொல்லால் குறித்தார் திருவள்ளுவ நாயனார்.

 

     உருவமும் பெயரும் அற்ற, பரம்பெருளுக்கு உரியது, இந்த வடிவம்தான், இந்தப் பெயர்தான் என்று பாவித்து முழங்குவது எல்லாம் வெறும் சமயப் பூசலே.

 

"யாதுஒரு தெய்வம் கொண்டீர்,

     அத்தெய்வம் ஆகி ஆங்கே

மாதுஒரு பாகனார்தாம்

     வருவர், மற்றத் தெய்வங்கள்

வேதனைப்படும் இறக்கும்

     பிறக்கும் மேல் வினையும் செய்யும்,

ஆதலால், இவை இலாதான்

     அறிந்து அருள் செய்வன் அன்றே.

 

என்கிறது சைவசித்தாந்தம்.

 

எச்சமயத் தெய்வமும் தான் எனநிறைந்த தெய்வம்;

எல்லாஞ்செய் வல்லதெய்வம்; எனதுகுல தெய்வம்.

 

என்கிறார் வள்ளல் பெருமான்.

 

     ஆரொருவர் உள்குவார் உள்ளத்துள்ளே, அவ்வுருவாய் நிற்கின்ற அருளும் தோன்றும்என்பது அப்பர் தேவாரம்.

 

சுருதி வானவனாம், திருநெடுமாலாம்,

     சுந்தர விசும்பின் இந்திரனாம்,

பருதி வானவனாம், படர்சடை முக்கண்

     பகவனாம், அக உயிர்க்கு அமுதாம்

எருது வானவனாம், எயில்கள் மூன்று எரித்த

     ஏறு சேவகனுமாம்,"பின்னும்

கருதுவார் கருதும் உருவமாம், கங்கை

     கொண்ட சோளேச்சரத்தானே.      ---  திருவிசைப்பா.

 

     "பின்னும் கருதுவார் கருதும் உருவமாம்" என்பதைப் பரிமேலழகர், "அவர் நினைந்த வடிவத்தோடு" என்று அழகுறக் காட்டினார்.

 

     இறைவன் தன்னை அன்போடு வழிபடுபவர் உள்ளத்தையே கோயிலாகக் கொண்டு விளங்குவான் என்பதை, "நினைப்பவர் மனம் கோயிலாக் கொண்டவன்" என்றும், "மறவாதே தன்திறமே வாழ்த்தும் தொண்டர் மனத்தகத்தே அனவரதம் மன்னி நின்ற திறலான்" என்றும் அப்பர் பெருமான் பாடிக் காட்டினார். "அகன்அமர்ந்த அன்பினர் ஆய், அறுபகை செற்று, ஐம்புலனும் அடக்கி, ஞானம் புகல் உடையோர் தம் உள்ளப் புண்டரீகத்து உள் இருக்கும் புராணர்" புறத்தே கோயில் கொண்டு எழுந்தருளி இருக்கும் இடம் திருவீழிமிழலை என்றார் திருஞானசம்பந்தப் பெருமான்.

 

     புறத்தே கோயில் மற்றும் பிற இடங்களில் நமது வேண்டுதலுக்கு ஏற்ப எழுந்தருளி அருள் புரிகின்ற, பரம்பொருளுக்கு, நிரந்தரமான இடம் உயிர்களின் உள்ளமே ஆகும்.

 

     நஞ்சத்தை உண்டதனால் இருள் ஒத்த செறிந்த அழகினை உடைய கண்டத்தை உடைய எம்பெருமானை, வானோர் உலகத்தான், தேவர் உலகத்தான் என்று சொல்பவர்கள் எல்லாம்  அவர்கள் அறிந்தவாறே சொல்லிக்கொள்ளட்டும். ஞானமே வடிவாகிய அவன் என் நெஞ்சத்தான் என்றே நான் சொல்வேன் என்கின்றார் காரைக்கால் அம்மையார்.

 

வானத்தான் என்பாரும் என்க; மற்று உம்பர்கோன்

தானத்தான் என்பாரும் தாம் என்க; - ஞானத்தான்,

முன் நஞ்சத்தால் இருண்ட மொய்ஒளிசேர் கண்டத்தான்,

என்நெஞ்சத் தான்என்பன் யான்.

 

என்பது அம்மையார் அருளிய அற்புதத் திருவந்தாதி.

 

     ஆக, சமயசமரசம் என்பது, ஆதியிலேயே சைவத்தால் நிலைநாட்டப்பட்ட ஒன்று. இதை அறியாதவர்கள், அவரவர் ஒரு தெய்வத்தைக் கற்பித்துக் கொண்டு, அதை வழிபட்டால் அடையும் நன்மை, கதி இன்னது என்று பலவாறாகச் சொல்லிக் கொண்டு திரிகின்றார்கள். இவர்கள், நூல்களைப் பயின்றார்களே, அல்லாமல், நூலில் சொல்லப்பட்டுள்ள கருதுக்களைத் தெளிந்து, நல்லறிவு எனும் உண்மை ஞானத்தைப் பெற்றவர்கள் அல்லர். உண்மை ஞானம் பெறாதார்க்கு, திருவருள் விளக்கம் இருக்காது.

 

     திருவருள் விளக்கம் பெறுவதை, "திருப்பள்ளி எழுச்சி" என்னும் ஒரு நிகழ்வால் நமது பெரியவர்கள் வகுத்துக் காட்டினார்கள். அதன் உண்மையையும் தெளிந்துகொள்ளுதல் வேண்டும்.

 

     அஞ்ஞான இருள் நீங்கி மெய்ஞ்ஞானம் எனும் ஒளி துலங்க வேண்டி இறைவனை அடியார்கள் துயில் எழுப்புவதே "திருப்பள்ளியெழுச்சி". இறைவனின் மறைப்புச் சக்தி (திரோதானம்) நீங்கி, அருட்சக்தி உயிர்களை உய்விக்கவேண்டும் என்பதே திருப்பள்ளியெழுச்சியின் தத்துவம். அஞ்ஞான இருளில் செயல் அற்றுக் கிடந்து துன்புற்ற உயிர்கள், ஞான விளக்கம் பெற்று இன்பத்தில் ஆழ்ந்து இருப்பது "திருப்பள்ளி எழுச்சி".

 

     "நீறு அணிந்தார் அகத்து இருளும், நிறைகங்குல் புறத்து இருளும் மாற வரும் திருப்பள்ளி எழுச்சி" என்பது தெய்வச் சேக்கிழார் பெருமான் அருளிய பெரியபுராணம்.

 

     புறத்து இருள் --- வெளியே கண்ணொளியை மறைப்பது. இரவு இருளாகிய புற இருள்.

 

     அகத்து இருள் --- உண்மை அறிவு விளங்கவொட்டாமல், உயிர் அறிவை மறைத்து இருப்பது, அஞ்ஞானம் என்னும் அகத்து இருள்.

 

     இறையருள் வெளிப்பாட்டினால் உள்ளத்து இருளும், ஞாயிறு வெளிப்பாட்டினால், உலகில் சூழ்ந்துள்ள இருளும் நீங்கும் நிகழ்ச்சியே "திருப்பள்ளி எழுச்சி" ஆகும் என்பதை அறிந்து உணர்தல் வேண்டும்.

 

     "சுப்ரபாதம்" என்றால் சுகமான விடியல் என்று பொருள். அஞ்ஞான இருள் நீங்கி, ஞானம் பெறுவது சுகம். துன்ப இருள் நீங்கி, இன்பம் பெறுவது சுகம்.

 

     இறைவன் நம்மைப் போல் பஞ்சபூத யாக்கை பெற்றவன் அல்ல. அவனுக்கு அவத்தை என்பது இல்லை. எனவே, அவனுக்கு உறக்கமும், விழிப்பும் இல்லை; பிறப்பும் இறப்பும் இல்லை. ஆன்மாக்களாகிய நமக்குத் தான், நனவு, கனவு, உறக்கம், பேருறக்கம், உயிர்ப்பு அடக்கம் என்னும் ஐந்து அவத்தைகள் உண்டு. எனவே, உறங்குவதும், விழிப்பதும் நாம்தான். பிறப்பதும் இறப்பதும் நாம்தான்.

 

     இந்த உண்மைகளை எல்லாம் தெளிந்து உணராமல், இந்த உலகத்தில் மக்கள் பல வகையான தெய்வங்களைக் கற்பித்து வழிபட்டு வருகிறார்கள். அந்தத் தெய்வங்களை வழிபட்டு அவரவர் அடைகின்ற தெய்வீகப் பேறுகள் என்று சொல்லப்படுபவையும் பலப்பலவாக இருக்கின்றன. கடவுள் உண்மையை உணர்த்தாத புறக் கவர்ச்சிகள் மிகுந்த கற்பனை உருவங்களையே கடவுளாக அமைத்து வழிபட்டு வருகிறார்கள். சமய, மதவாதிகளின் கற்பனைகளிலேயே மனதை பரிபூரணமாகப் பறி கொடுத்து, அவைகளையே மக்கள் பாராட்டுகிறார்கள். இவர்கள் எல்லாம் உண்மையான திருவருள் விளக்கத்தை அறிந்து கொள்ளாதவர்களாக இருக்கிறார்கள். திருவருளால் ஏற்படும் விளைவுகள் என்ன என்பதை எண்ணிப் பாராது காலத்தைக் கழித்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் அறிவைத் தூண்டி, தங்கள் திருவருளால் இவர்களையும் ஆட்கொண்டு இவர்கள் அடைந்து வரும் துன்பங்களை எல்லாம் ஒழித்து அருள வேண்டும். அடியேன் உள்ளத்தில் பரவி இருந்த அஞ்ஞான இருளில் இருந்து நீக்கி எடுத்து, அருளி ஒளியை எனது உள்ளத்துள் நிரப்பி, அழிவில்லாத இன்பத்தை எனக்குத் தந்து, "திருப்பள்ளி எழுச்சி" என்னும் அற்புத நிகழ்வை எனக்குள் நிகழ்த்தி அருளிய இறைவா! இவ்வுலகில் உள்ள ஒவ்வொருவரும் என்னைப் போலவே திருப்பள்ளியில் இருந்து எழுந்திருந்து, உண்மையான திருவருள் விளக்கதைப் பெற்று. பேரின்பப் பெருவாழ்வில் வாழ அருள்புரிய வேண்டும் என்று, தமது அளவற்ற அன்பால் இறைவனிடம் விண்ணப்பித்துக் கொள்கின்றார் வள்ளலார் என்னும் இராமலிங்க சுவாமிகள்.

 

"தெய்வங்கள் பலபல சிந்தை செய்வாரும்;

     சேர்கதி பலபல செப்புகின்றாரும்;

பொய்வந்த கலைபல புகன்றிடுவாரும்;

     பொய்ச் சமயாதியை மெச்சுகின்றாரும்;

மெய்வந்த திருவருள் விளக்கம் ஒன்றில்லார்;

     மேல்விளைவு அறிகிலர், வீண்கழிக்கின்றார்;

எய்வந்த துன்பு ஒழித்து அவர்க்கு அறிவு அருள்வீர்!

     எனைப்பள்ளி எழுப்பி மெய் இன்பம் தந்தீரே.

 

என்பது அடிகளார் அருளிய திருவருட்பா.

 

     எனவே, "ஒன்றே குலம், ஒருவனே தேவன்" என்று உணர்ந்து, தான் விரும்பி வழிபடும் கடவுள் உருவத்ததைத் தவிர மற்றவற்றை இகழ்வதும், "இந்தக் கடவுள் இதைத் தரும், அந்தக் கடவுள் அதைத் தரும்" என்று கற்பிப்பதும், அவரவர் சார்ந்து உள்ள சமய உண்மைகளைத் தெளிந்து கொள்ளாமல், பிற சமயத்தை இகழ்வதும் ஒழித்து, சமரச உணர்வோடு இறைவழிபாட்டை மேற்கொண்டு, திருவருள் விளக்கத்தைப் பெறுவோமாக.


No comments:

Post a Comment

நாயோட்டு மந்திரம்

  நாயோட்டு மந்திரம் -----         ‘ நமச்சிவாய வாழ்க ;  நாதன்தாள் வாழ்க ’  என்று தொடங்கும் திருவாசகத்தில் முதன்முதலாக வருகின்ற "சிவபுராண...