மதயானை வாயில் கரும்பு

 

மதயானை வாயில் கரும்பு

-----

 

     செல்வம், பொருள், பணம் என்னும் சொற்கள் மனிதனுடைய காதுகளில் விழுந்தாலே இன்பம் விளைகின்றது. "கேடு இல் விழுச் செல்வம் கல்வி" என்று நாயனார் அறிவுறுத்தியபடி, கல்வியும் மேலான செல்வம் என்று எண்ணுவது இல்லை. "செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம்" என்று நாயனார் அறிவுறுத்தியபடி, கேள்வியைச் செவிச்செல்வம் என்று எண்ணுவதில்லை.

 

     உண்மையான செல்வம் இறையருளே என்பதை உணர்ந்தவர்கள் அருளாளர்கள். "அருட்செல்வம் செல்வத்துள் செல்வம், பொருட்செல்வம் பூரியார் கண்ணும் உள" என்று திருவள்ளுவ நாயனார் அருளிய பாங்கில், இறைவனையே "செல்வமே" என்று கொண்டாடியவர்கள். "திருவே! என் செல்வமே!" என்றார் அப்பர் பெருமான். "செல்வமே! சிவபெருமானே!" என்றார் மணிவாசகர்.

 

     எனவே, பொருட்செல்வம் பெற்றவர்க்கும் உள்ளத்தில் களிப்பு உண்டாகும். கேடில்லாத மேலான கல்விச் செல்வத்தின் அருமையை உணர்ந்தவர்க்கு, அதைப் பெற்றாலும், "கற்றிலன் ஆயினும் கேட்க" எனத் திருவள்ளுவ நாயனார் கேள்விச் செல்வத்தின் அருமையை உணர்த்தியதன் பொருட்டு, தக்க மேலோரிடத்து நூற்பொருளைக் கேட்டு மகிழும் "கேள்விச் செல்வம்" கிடைத்தாலும், உள்ளத்தில் களிப்பு மிக உண்டாகும். ஆக்கம், வளம், வாழ்வு, பேறு, திரு, பொருள் என வழங்கப்படும் பெயர்களால், செல்வத்தின் நிலைகளை உணர்ந்து கொள்ள, அத்தகைய செல்வமானது பெருகி வரவர, மனிதன் உள்ளத்தில் பெருங்களிப்பு பொங்கி எழுகின்றது. உலகியல் நுகர்ச்சி அனைத்திற்கும் பொருளே காரணமாக உள்ளதால், பொருளைக் கண்டதும் பெருமகிழ்ச்சி கொள்ளுவதில் ஐயம் ஏதும் இல்லை.

 

     மகிழ்ச்சி அல்லது உவகை என்னும் சுவைக்கு உரியவை நான்கு எனத் தொல்காப்பியம் கூறுகின்றது. அவையாவன, செல்வம், அறிவு, புணர்வு, விளையாட்டு ஆகும். செல்வத்தையே பெரிது எனக் கருதிப் பேணி வருவதால், பேராசை மிகுகின்றது. இந்தப் பேராசையால், செல்வத்தைச் செய்தற்கு, கல்வி, செல்வம் முதலியவை வேண்டியதில்லை எனக் கருதுகின்ற போது, இறுமாப்பு வந்து எழுகின்றது. கல்லாமை கவர்ந்து கொள்ள, எல்லா வகையாலும் மூடத் தனமே மிகுந்து கிடக்கின்றது. அறிவில்லாதவனிடத்திலே செல்வம் சேருமானால், அவனுக்கு அப்பொழுதே, மூடத் தன்மை, உலோபம், முரண், செருக்கு ஆகிய பொல்லாத புன்மைகள் வந்து பொருந்தி விடும். அந்தப் புன்மைகளில் இருந்து ஒருவன் மீள்வது அரிது.

 

மூடத் தனம் --- மடமை. அறியாமையால் மூடி இருப்பது மூடத் தனம் ஆகும். கல்வி அறிவு இல்லாத வழி அறிவில் தெளிவு என்னும் ஒளி மழுங்கி, மூடம் மூடி உள்ளது.

 

உலோபம் --- ஈயாமை. பொருள் மேல் கடும்பற்றுக் கொண்டு, உள்ளத்தில் பேராசை மண்டி உள்ளவன் உலோபி ஆவான்.

 

முரண் --- மாறுபாடு. பகைமை. தவறாக இருந்தாலும், தான் சொன்னதையே முரட்டுத் தனமாய் சாதிப்பது முரண்.

 

செருக்கு --- மனத் தடிப்பு. ஆங்காரம். எல்லாவற்றிலும் தானே சிறந்தவன் என்னும் உள்ளக் களிப்போடு நிற்பது.

 

ஆங்காரம் என்னும் மதயானை வாயில் கரும்பாய்

ஏங்காமல் எந்தை அருள் எய்தும் நாள் எந்நாளோ?

 

என்று தாயுமான அடிகளார் இறைவன் நோக்கி நொந்து கூறியுள்ளார். யானையின் வாயில் பட்ட கரும்பு போல், ஆங்காரத்தின் வசப்பட்டு, மனிதன் அழிந்து படுதல் கூடாது.

 

     அறியாமையோடு, இளமைக் களிப்பும் கூடிவிட்டால், அப்படிப்பட்டவனிடம் பொருள் சேர்ந்தால், தானே ஆடுகின்ற பேயானது, பறை அடிக்க, மேலும் பாய்ந்து ஆடுவது போல, அவன் களிப்பு மிகுந்து தருக்கித் திரிவான் என்கின்றது பின்வரும் பாடல்...

 

அறியாமை யோடு இளமை ஆவதாம்; ஆங்கே,

செறியப் பெறுவதாம் செல்வம்; - சிறிய

பிறைபெற்ற வாணுதலாய்! தானே ஆடும்பேய்,

பறைபெற்றால் ஆடாதோ, பாய்ந்து?    --- பழமொழி நானூறு.

 

     "ஆங்காரம் அற்றார் அறிவர் அணி அம்பலத்தான் ஆடல் இது" என்பது உண்மை விளக்கம்.

 

     உயிர்கள் மீது கொண்ட அளப்பரும் கருணையே காரணமாக,  அழகிய திருச்சிற்றம்பலத்தில் அனவரதமும் ஆனந்தத் திருநடனம் புரிகின்ற பெருமானின் ஆடலின் இயல்பை, யான் எனது என்னும் செருக்கு நீங்கப் பெற்றவரே அறிவர்.

 

     ஆங்காரம் அறாதவர்கள் இறைவன் திருவருளைப் பெறமாட்டாமல், பிறவியிலேயே அழுந்துவர் என்பதை உலகவர்க்கு உபதேசமாக அருணை அடிகளார், கந்தர் அலங்காரத்தில் பாடி உள்ளார்...

 

ஆங்காரமும் அடங்கார், ஒடுங்கார், பரம ஆநந்தத்தே

தேங்கார், நினைப்பு மறப்பும் அறார், தினைப்போது அளவும்

ஓங்காரத்து உள் ஒளிக்கு உள்ளே முருகன் உருவம் கண்டு

தூங்கார், தொழும்பு செய்யார், என் செய்வார் யமதூதருக்கே?

 

     எனவே,  நான் எனது" என்னும் ஆங்காரம் அடங்கவேண்டும். பொறிபுலன்கள் ஒடுங்கவேண்டும். அப்படி இருந்தால் பரமானந்த வெள்ளத்தில் முழுகி இருக்கலாம். நினைப்பும் மறப்பும் அற்ற சமாதி நிலையில் பொருந்தி இருக்கலாம். எப்போதும், ஓங்காரத்தின் உள்ளே விளங்குகின்ற முருகப் பெருமானின் அருள் திருவுருவைக் கண்டு களித்துப் பரவசம் உற்று இருக்கலாம். இதற்குத் தொண்டு நெறியும் வேண்டும்.

 

     "யான் எனது என்று அற்ற இடமே திருவடி" என்கின்றார் குமரகுருபர அடிகள். நான் எனது என்னும் அகப்பற்றும், புறப்பற்றும் அற்றால்தான் இறைவன் திருவடி இன்பம் வந்து பற்றும்.

 

"யான் எனது எனச் சருவும் ஈன சமயத்து எவரும்,

     யாரும் உணர்தற்கு அரிய நேர்மைக் காரனும்,

யாதும் நிலையற்று அலையும் ஏழுபிறவிக் கடலை

    ஏறவிடும் நற்கருணை ஓடக் காரனும்,

ஏரகம், இடைக்கழி, சிராமலை, திருப்பழநி,

    ஏர் அணி செருத்தணியில் வாசக் காரனும்,......

மேவிய புனத்து இதணில் ஓவியம் எனத்திகழும்

    மேதகு குறத்தி திருவேளைக் காரனே.

 

என்று, "திருவேளைக் காரன் வகுப்பு" மூலம் முருகப் பெருமானை நமக்கு அடையாளம் காட்டினார் அருணகிரிநாதப் பெருமான். "புனத்து இதணில் ஓவியம் எனத் திகழும் மேதகு குறத்தி" என்று எம்பிராட்டியும், அகிலாண்ட நாயகியும் ஆகிய வள்ளிநாச்சியாரைக் குறித்துள்ளது ஆழ்ந்த சிந்தனைக்கு உரியது.

 

     இறைவா! உனது திருவடிக் கமலத்தை அடியேன் நாள்தோறும், நறுமணம் பொருந்திய மலர்களைத் தூவி வழிபட்டுக் கொண்டு இருக்கின்றேன். நல்ல ஆவின் பாலை, நிலவெடிப்பில் கவிழ்த்தது போல, செல்வச் செருக்கால் செவிடுபட்டு இருக்கும் காதுகளில், சுவையான இனிய தமிழ்ப் பாடல்களைப் பாடி, உன்னைப் பாடாமல் இருக்கின்ற பாவகாரிகள் பக்கம் சேராமல் இருக்கின்ற அடியவர் கூட்டத்தில் அடியேனைக் கூட்டி அருள் புரிக என்று வேண்டுகின்றார், துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள். செல்வச் செருக்கு, இறையருளையோ, அடியார் கூட்டத்தையோ அடைவிக்காது என்பதால், இவ்வாறு வேண்டினார்.

 

"நாவலர் புகழ்சிவ ஞான தேசிக!

எவ்வம் அகன்ற சைவ நாயக!

நின் அடிக் கமலம் நெஞ்சு உற இருத்தி,

நறுமலர் தூவி நாள்தொறும் பரவுதும்,

செல்வச் செருக்கில் செவிடுபட்டு இருக்கும்

காதில், தீம்பால் கமர் கவிழ்த்தாங்கு,

பாப்பல பன்முறை பாடி, நின்னைப்

பாடா மாந்தர் பக்கல்

கூடா அடியரில் கூட்டுக.."

 

     இறைவா! இந்த உடம்பானது ஆங்காரம் என்பது மிகுந்துள்ள கருவூலம். கோபம் என்பது இருக்கின்ற பண்டகசாலை. ஆணவமானது பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருக்கின்ற அரண்மனை. பொய் வைத்த கூடம். வானளவு உயர்ந்து வளர்ந்த மதிலினை உடைய காமவிலாசம். இப்படிப்பட்ட இந்த உடலானது பல துவாரங்களை உடைய கந்தல் போன்றது. இதனுள் நான் வாழ்ந்துகொண்டு, உன்னை வணங்கி, உன்னால் அருளப்படுகின்ற ஞானசித்தியை தான் எவ்வாறு பெறுவது என்கின்றார் பட்டினத்து அடிகள்.

 

ஆங்காரப் பொக்கிசம், கோபக் களஞ்சியம், ஆணவத்தால்

நீங்கா அரண்மனை, பொய்வைத்த கூடம், வீண் நீடிவளர்

தேங்கார் பெருமதில் காமவிலாசம், இத்தேகம் கந்தல்,

பாங்காய் உனைப்பணிந்து எப்படி ஞானம் பலிப்பதுவே?

 

     கோடிக் கணக்கில் பொருள் கூடி இருந்தவரும், ஓடும் கையுமாய் நாடு அறிய நின்றதும் உண்டு. ஓடும் கையுமாய் நிற்பது இருவகை, ஆங்காரத்தால் அழிந்து போவது ஒருவகை. உண்மை ஞானத்தால் உயர்ந்து நிற்பது மற்றொரு வகை. பட்டினத்தடிகள் உண்மை ஞானம் பெற்று உயர்ந்து நின்றபோது, எல்லாப் பற்றையும் விடுத்து நின்றார். "ஓட்டுடன் பற்று இன்றி உலகைத் துறந்த செல்வப் பட்டினத்தார்" என்றார் தாயுமான அடிகளார். "செல்வப் பட்டினத்தார்" என்னும் சொற்கள் சிந்தனைக்கு உரியன. பொருட்செல்வத்தை அறத் துறந்து, அளவிறந்த அருட்செல்வத்துக்கு உரியவராக ஆனதால், "செல்வப் பட்டினத்தார்" என்றார். நிலையில்லாமல் அழியக் கூடிய பொருள் அழியும் முன்னர், அழியா வகையில் வழி செய்து கொள்வது விழுமிய இன்பத்தைத் தரும். அறத்தையும் புகழையும் ஈட்டி, அருளுக்கு ஆளாவதற்கு அமைந்த பொருளை, ஆங்காரம் என்னும் உள்ளச் செருக்கினால், மறத்தையும் பழியையும் ஈட்டுவதற்கு வழி கோலுவது மடமையிலும் மடமை ஆகும்.

 

     பின்வரும் பட்டினத்து அடிகள் அருளிய பாடல்களை எண்ண, உன்ன, செல்வச் செருக்கால் உண்டான ஆங்காரம் என்னும் யானையின் வாயில் பட்ட கரும்பாக நாம் துன்பத்தை அனுபவிக்க வழி இல்லாமல் போகும்.

 

"முன் தொடர்பில் செய்த முறைமையால் வந்த செல்வம்

இற்றைநாள் பெற்றோம் என்று எண்ணாது, பாழ்மனமே!

அற்றவர்க்கும் ஈயாமல், அரன் பூசை ஓராமல்,

கற்றவர்க்கும் ஈயாமல் கண் மறைந்து விட்டனையே".

 

இதன் பொருள் ---

 

     எனது பாழான நெஞ்சமே! முற்பிறவிகளில் நீ புரிந்த பண்ணியங்களின் பயனாக, இப் பிறவியில் அனுபவிக்கத் தகுந்த செல்வம் வாய்க்கப் பெற்றது என்று எண்ணி, இல்லாதவர்க்கும் ஈயாமல், இறைவன் திருவடியையும் வழபடாமல், கற்ற பெரியோர்க்கும் உதவாமல், உனது கண்ணானது ஆங்காரத்தால் மறைக்கப்பட்டு வாழ்கின்றாயே.

 

மாணிக்கம் முத்து வயிரப் பணி பூண்டு

ஆணிப்பொன் சிங்கா தனத்தில் இருந்தாலும்,

காணித்து உடலை நமன் கட்டியே கைப்பிடித்தால்,

காணிப்பொன் கூடவரக் காண்கிலமே நெஞ்சமே!

 

இதன் பொருள் ---

 

     நெஞ்சமே! இரத்தினம், முத்து, வழிரம் இவற்றால் ஆன அணிகலன்களைத் தரித்து, உயர்ந்த பொன்னால் ஆகிய சிங்காதனத்தின் மீது வீற்றிருந்தாலும், இலட்சியம் வைத்து, இந்த உடலை இயமன் ஆனவன் கயிற்றினால் இறுக்கிப் பற்றி இழுக்கின்றபோது, காசி அளவு பொன் கூட உன்னுடன் வராதே.

 

கற்கட்டும் மோதிரம், நல்கடுக்கன், அரைஞாண் பூண்டு,

திக்கு எட்டும் போற்றத் திசைக்கு ஒருத்தர் ஆனாலும்,

பல்கிட்ட எமன் உயிர் பந்தாடும் வேளையிலே

கைச்சட்டம் கூடவரக் காண்கிலமே நெஞ்சமே!

 

இதன் பொருள் ---

 

     ஏ மனமே! கற்களால் இழைக்கப்பட்ட மோதிரங்களும், உயர்ந்த கடுக்கன்களும், அரைஞாணும் தரித்து, எட்டுத் திக்கில் உள்ளோரும் புகழும்படியாக, எத்திசையில் உள்ளோர்க்கும் மேம்பட்டவனாக நீ இருந்தாலும்,மரண காலத்தில் உனது பல் கிட்டிக் கொள்ளும் சமயத்தில், உனது உயிரினை இயமன் என்பவன் ஒரு பந்தினைப் போலக் கொண்டு செல்லும் வேளையில், நீ ஓர் ஓலையைக் கூட உன்னுடன் கொண்டு செல்ல முடியாதே.

 

     இந்த உண்மைகளை எல்லாம் கற்று உணராமல், கற்றவர்பால் கேட்டு அறியாமல், யாரையும் சதமாக எண்ணாமல், சற்குருவின் பாதகமலமே நமது பாதக மலத்தை அறுக்கும் என்று சற்குருவைப் போற்றி வழிபடாமல், கண் அற்ற குருடன் போல வாழ்க்கையைக் கழித்தல் கூடாது.

 

முன்னம் நீ செய்த தவம் முப்பாலும் சேரும் அன்றிப்

பொன்னும் பணிதிகழும் பூவையும் அங்கேவருமோ?

தன்னைச் சதமாகச் சற்குருவைப் போற்றாமல்

கண்ணற்ற அந்தகன்போல் காட்சியுற்றாய் நெஞ்சமே!

 

இதன் பொருள் ---

 

     மனமே! முற்பிறவிகளில் நீ புரிந்த தவமே உன்னை இனிவரும் பிறவிகளிலும் சேரும். அல்லாமல், நீ தேடிய பொன்னும், அணிகலன்களும், மாதர்களும் அவற்றைப் பூணுவதற்கு உன்னிடத்தில் வாய்த்த மாதர்களும், நீ செல்லுகின்ற அந்த இடத்திற்கு உன்னோடு வந்திடுமோ? (வராது.) அவற்றை நிலையுடைய பொருளாக எண்ணி, உனக்கு வாய்த்த உண்மைக் குருவைப் போற்றாமல், கண் கெட்ட குருடனைப் போல, அறிவுக் குருடனாக நீ ஆனாயே.

 

பை அரவம் பூண்ட பரமர் திருப் பொன்தாளைத்

துய்ய மலர் பறித்துத் தொழுது வணங்காமல்,

கையில் அணிவளையும், காலில் இடும் பாடகமும்

மெய் என்று இறுமாந்து விட்டனையே நெஞ்சமே!

 

இதன் பொருள் ---

 

     ஏ னமே! நச்சுப் பையுடன் கூடிய பாம்பினைப் பூண்டுள்ள நாகாபரணன் ஆகிய பரம்பொருளின் அழகிய பொன்னார் திருவடிகளை, தூய நறுமலர்களைப் பறித்துத் தூவி, அருச்சனை புரிந்து, பாடிப் பரவாமல், கைகளில் அணிந்துள்ள வளையல்களையும், கால்களிலே அணிந்துள்ள சிலம்புகளையும் உடைய மாதரை நிலை என்று எண்ணி, கர்வத்தோடு இருந்தாயே.

 

 

 

 

 

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...