மனக்கோட்டம் அறுக்கும் நூற்கல்வி

 

 

மனக்கோட்டம் அறுக்கும் நூற்கல்வி

-----

 

     கல்வியை "அறிவு மயக்கத்தைத் தருகின்ற பிறவிப் பிணியைத் தீர்க்கும் மருந்து" என்கின்றது நாலடியார்.

 

இம்மை பயக்குமால், ஈயக் குறைவு இன்றால்,

தம்மை விளக்குமால், தாம் உளராக் கேடு இன்றால்,

எம்மை உலகத்தும் யாம் காணேம், கல்விபோல்

மம்மர் அறுக்கும் மருந்து. 

                         

இதன் பொருள் ---

 

     கல்வியானது, இம்மை என்று சொல்லப்படும் இந்தப் பிறவியின் பயனாகிய உறுதிப் பொருள்களையும் தரும். செல்வத்தைப் போல் அல்லாமல், கொடுக்கக் கொடுக்கக் குறைவு படாமல் மென்மேலும் வளர்ந்துகொண்டே போகவும் செய்யும். அதனை உடைய ஒருவரைப் புகழ் என்னும் பெருமையால் நெடுந்தொலைவுக்கு விளக்கம் உறச் செய்யும் ஆற்றலும் அதற்கு உண்டு. தாம் உயிருள்ளவராக வாழும் அளவும் கல்வியானது, அழிதல் இல்லாது நிலைபெற்றுத் தம்முடன் விளங்கும். ஆதலால், கல்வியைப் போல, பிறவியைத் தருகின்ற அறியாமையாகிய நோயை ஒழிக்கின்ற ஒரு மருந்தினை நாம் எத்தன்மையான உலகத்தினும் காண்கின்றோமில்லை.

 

     உயிரிலே உள்ள பொல்லாத குற்றங்களை நீக்கி, நல்ல குணங்களைப் பெருக்கி அருளுகின்ற கல்வியைப் பெற்று இருந்தும், வீணாகச் செருக்குக் கொண்டு, தருக்கி வாழ்தல், மிகக் கீழான அறியாமை ஆகும். பிறவிப் பிணியைப் போக்குகின்ற அருமருந்து என்று உணர்ந்தும், அந்த மருந்தை அடைய முயலாமல் இருப்பது அறியாமையிலும் செறிந்த அறியாமை ஆகும்.

 

     கல்வியானது ஒருவனது அறிவை வளர்க்கின்றது. அறிவு வளர, வளர, உள்ளத்திலே மண்டிக் கிடக்கின்ற அறியாமை நீங்குகின்றது. அறியாமை நீங்கவே, மதிப்பும் மாண்பும் உண்டாகின்றது. நன்மை தீமைகளைப் பகுத்து அறிந்து, உயர்ந்த குறிக்கோள்களோடு வாழுகின்றவருக்கே இந்த நலம் வந்து வாய்க்கும்.

 

     "புத்தகம்" என்னும் சொல், அகம் உன்னும் உள்ளத்திலே இயல்பாகவே, பழமையாகவே பொருந்தி உள்ள அறியாமை என்னும் இருளை நீக்கி, புத்தொளி பெறச் செய்வது என்பதை விளக்கி நிற்கின்றது என்பதாகக் கொள்ளலாம். புத்தகத்தைத் தொகுத்து வைத்து, பயன் பெறாமல் இருத்தல் கூடாது. புத்தகம் என்னும் சொல், நாலடியாரில் கையாளப்பட்டு உள்ளது. திருவள்ளுவ நாயனார், "நூல்" என்னும் சொல்லையே கையாண்டு உள்ளார். நூல் என்பது அறநெறி நூல்களையே குறிக்கும்.

 

     புத்தகம், ஏன் நூல் எனப்படுகிறது என்பதற்கு "நன்னூல்" காட்டுவது....

 

பஞ்சிதன் சொல்லாப் பனுவல் இழையாகச்

செஞ்சொல் புலவனே சேயிழையா-எஞ்சாத

கையே வாயாகக் கதிரே மதியாக

மையிலா நூல் முடியும் ஆறு.

 

இதன் பொருள் ---

 

     தன் சொல் பஞ்சியாக --ஆசிரியனுடைய சொற்கள் பஞ்சாகவும், பனுவல் இழையாக --அவன் இயற்றுகின்ற செய்யுள் இழையாகவும், செஞ்சொல் புலவன் சேயிழையா சொல் திறன் மிக்க ஆசிரியன் பஞ்சில் இருந்து நூலை நூற்கின்ற பெண்ணாகவும், எஞ்சாத வாய் கையாக --குறையாத வாயானது நூற்பவளது கையாகவும், மதி கதிராக ஆசிரியனது அறிவே பஞ்சில் இருந்து நூற்கப்படும் நூலைச் சேர்த்து வைக்கும் கதிராகவும், மை இலா நூல் முடியும் ஆறு --குற்றமில்லாத கல்வி நூலாக ஆகும் வழி இதுவே ஆகும்.

    

     அழகிய பெண் ஒருத்தி தனது கையினால் பஞ்சிலிருந்து நூலை நூற்று எடுப்பது போல, ஆசிரியர் ஒருவர் தனது வாயினால் சிறந்த நூலை இயற்றுகின்றார்.

 

     பஞ்சில் இருந்து நூற்கப்பட்ட நூலானது, மரத்தின் கனத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை தீர்க்க, தச்சனுக்கு உதவுகின்றது. நூலில் மையைப் பூசி, மரத்தினை அளந்து கோடு இட்டு, தச்சன் தன் கையில் உள்ள இழைப்புளியால் மரத்தில் உள்ள கோணல்களைக் களைந்து நேர்படுத்துகின்றான்.

 

     "கோடிய மனத்தால், வாக்கினால், செயலால், கொடிய ஐம்புலன்களால் அடியேன் தேடிய பாவம் நரகமும் கொள்ளா, செய்வதம் புரியினும் தீரா" என்கின்றார் பட்டினத்து அடிகள்.

 

கோடுதல் --- வளைதல், நெறிதவறுதல், நடுவுநிலைமை தவறுதல்.

 

கோடிய மனம் --- வளைந்த மனம், நடுநிலையில் இருந்து நீங்கிய மனம். நெறி பிறழ்ந்த மனம். வயிரம் பற்றிய மனம்.

 

     கோடிய மனத்தில் இருந்து, பாவங்களே பெருகும்.  ஒருவனது மனக் கோட்டத்தை, சிதைவுகளை நீக்கி, அறிவைப் பெருக்கி, நேர்படுத்துவதற்கு, நல்லாசிரியரால் உண்டாக்கப்பட்ட நூல் பயன்படும்.

 

பருத்தி நூல், மரக் கோட்டத்தை அறுக்கும்.

அறிவு நூல், மனக் கோட்டத்தை அறுக்கும்.

 

     நல்லாசிரியரால் உண்டாக்கப் பெற்ற நூலானது, உள்ளத்தில் அறிவைப்பெருக்கி, உடலால் உண்டாக்கப்படுகின்ற தீவினைகளையும் சிதைப்பதோடு, மனிதர்களின் மனத்திலுள்ள தீய பண்புகளை நீக்குவதற்குப் பயன்படுகிறது என்கின்றது "நன்னூல்"

 

உரத்தின் வளம் பெருக்கி உள்ளிய தீமை

புரத்தின் வளம் முருக்கிப் பொல்லா-மரத்தின்

கனக்கோட்டம் தீர்க்கும்நூல் அஃதேபோல் மாந்தர்

மனக்கோட்டம் தீர்க்கும்நூல் மாண்பு.

    

இதன் பொருள் ---

 

     பொல்லா மரத்தின் கனக்கோட்டம் தீர்க்கும் நூல் --முருட்டு மரத்தின் மிகுதியான கோணல்களைப் போக்க உதவுகிறது தச்சர்கள் பயன்படுத்தும் நூல். (அதேபோல) உரத்தின் வளம் பெருக்கி --உடம்பினுள் இருக்கின்ற ஞான வளத்தைப் பெருக்குவித்து, புரத்தின் உள்ளிய தீமை வளம் உருக்கி -- உள்ளத்தால் நினைக்கப்பட்ட தீமையாகிய அஞ்ஞான வளத்தைக் கெடுத்து, மாந்தர் மனக்கோட்டம் தீர்க்கும் -- மனிதருடைய மனத்தினது கோணல்களை போக்கும், நூல் மாண்பு --கல்வி நூலினது மாட்சிமையானது. (புரம் --- உடல்)

 

     ஒரு நல்ல நூலின் பயன் எதுவாக இருக்கவேண்டும் என்றும் நன்னூல் கூறுகின்றது. "அறம் பொருள் இன்பம் வீடு அடைதல் நூல் பயனே" என்று நன்னூல் கூறும். அறம் பொருள் இன்பம் வீடு என்னும் உறுதிப் பொருள்களை ஒருவன் அடைவதே அவன் கற்ற நூலின் பயன் ஆகும்.

 

     அறம், பொருள், இன்பம், வீடு என்னும் உறுதிப் பொருள்களைப் பயக்கின்ற நூல்களையும் ஆசிரியரிடத்தில் கற்கும் காலத்தில், நூல்களின் பொருளை ஒன்றை ஒன்றாக எண்ணிக் கொள்ளுகின்ற விபரீதமும், இதுவோ அதுவோ என்னும் ஐயப்பாடும் நீக்கி, உண்மைப் பொருளை உணர்ந்து, உணர்ந்த வழியில் நிற்கின்ற பலரோடும் பல காலமும் பழகி வந்தால், உள்ளத்தில் உள்ள குற்றம் அகலும்.

 

     எனவே, அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நான்கு உறுதிப் பொருள்களையும் உணர்த்தும் நூல்களை அன்றி, சிற்றின்பம் தரும் நூல்களைப் பயிலுதல் கூடாது. உயிர்கள் தமது வாழ்நாளில் சிலவே பிழைத்து இருப்பன. அவற்றுள்ளும், பல, நோய்களை அடைந்து துன்றுபுவனவாக உள்ளன. உயிர்களுக்குச் சிற்றறிவு உள்ளதால், சிற்றின்பத்தைப் பயக்கும் நூல்களின் வழி பெறுகின்ற இன்பத்தையே பெரிதாக எண்ணிக் கொள்ளும். அவ்வாறு மனம் செல்லுமாயின், கிடைத்தற்கு அரிய வாழ்நாள் பயனற்றுக் கழிந்து, பிறப்பின் பயனை அடைய முடியாமல் போகும்.

 

     கற்ற வழியில் நிற்றல் என்பது, இல்லறத்தில் வழுவாது நின்று, மனைவியோடு போகம் புசித்து, கெடுதல் இல்லாத அறங்களைச் செய்து வருதல் ஆகும். இல்லறத்தில் இருந்து நீங்கி, துறவறத்தில் நின்றவரானால், தவத்தினால் மெய்ப்பொருளை உணர்ந்து, அவா அறுத்து, சிறிதும் குற்றப்படாமல் ஒழுகுதல் வேண்டும்.

 

     கல்வி என்பதை, அறிவுக்கல்வி, தொழிற்கல்வி, ஆன்மீகக் கல்வி என்பதாக வகைப்படுத்திக் கொள்ளலாம். "இரையைத் தேடுவதோடு இறையையும் தேடு" என்னும் ஆத்தமொழியினைக் கருத்தில் கொள்ளுதல் வேண்டும். இரையைத் தேடிய பின் இறையைத் தேடு என்று சொல்லவில்லை. இரையைத் தேடுகின்றபோதே, இம்மை நல்வாழ்வுக்கும், அம்மை வீடுபேற்றிற்கும் ஏதுவான கல்வியைப் பயிலுதல் வேண்டும். இரையைத் தேடி முடித்த பின், இறையைத் தேடுகின்ற கல்வியைப் பயிலுவோம் என்றால், அது எவ்விதத்திலும் முடியாத ஒன்று ஆகும். ஐந்தில் வளைவதுதான், ஐம்பதிலும் வளையும்.

 

     அறம் பொருள் இன்பம் வீடு என்னும் உறுதிப் பொருள்கள் நான்கனையும் தரும் நூல்களை ஒருவன் இளமையிலேயே பயிலுதல் வேண்டும் என்பது பின்வரும் பெரியபுராணப் பாடல்களால் தெளியப்படும். வாழ்வியல் கல்வியோடு, அருளியல் கல்வியையும் பயிலுதல் வேண்டும் என்பது விளங்கும்.

 

தவம்முயன்று அரிதில் பெற்ற

         தனிஇளங் குமரன், நாளும்

சிவம்முயன்று அடையும் தெய்வக்

         கலைபல திருந்த ஓதி,

கவனவாம் புரவி யானை

         தேர்படைத் தொழில்கள் கற்றுப்

பவம் முயன்றதுவும் பேறே

         எனவரும் பண்பின் மிக்கான்.

 

இதன் பொழிப்புரை ---

 

     சிவபரம்பொருளை முன்னிட்டுச் செய்யும் வழிபாடாகிய தவத்தைச் செய்து, அருமையாகப் பெற்ற மிக இளைஞனாகிய அம் மகன் (மனுநீதிச் சோழன் மகன்), நாள்தோறும் முயன்று சிவத்தை அடைதற்குக் காரணமாகிய தெய்வக் கலைகள் பலவற்றையும், தம் மனம் திருந்த ஓதியும், விரைவோடு பாய்கின்ற குதிரை ஏற்றமும், யானை ஏற்றமும், தேர் இயக்கலும், படைக்கலப் பயிற்சியும் பெற்று, வேண்டத்தகாத மானுடப் பிறவியும் இவனளவில் ஒரு பெரும் பேறே ஆயிற்று என யாவரும் சொல்லும்படியான நற்குணங்களால் மேம்பட்டு விளங்கினான்.

 

     இப் பாடலில், "சிவம் முயன்று அடையும் தெய்வக் கலை பல திருந்த ஓதி" என்னும் சொற்றொடரும், "பவம் முயன்றதுவும் பேறே" என்னும் சொற்றொடரும் ஆழ்ந்து சிந்திக்கத் தக்கவை ஆகும்.

 

     சிறுத்தொண்ட நாயனார் என்று வழங்கப்பட்ட அடியவரின் பிள்ளைத் திருநாமம் "பரஞ்சோதியார்" ஆகும். அவரைப் பற்றி, தெய்வச் சேக்கிழார் பெருமான், "ஆயுள் வேதம் என்று கூறப்படுகின்ற மருத்துவ நூற்கலையும், எல்லை இல்லாத வடநூல்களில் உள்ள பல்வேறான கலைகளும், தூய படைக்கலத் தொழிற்கலைகளும் ஆகிய இவற்றையெல்லாம், அவ்வவற்றில் எல்லை காண்பளவும் பயின்றவர். அவற்றுடன் பாய்கின்ற மதம் பொழியும் யானைகளையும் குதிரைகளையும் செலுத்தும் தன்மை பொருந்திய வீரம் செறிந்த கலையிலும், உலகத்தில் மேம்பட்டவராக விளங்கினார்" என்று தெரிவித்து, இந்தக் கலைகளை எல்லாம் பயன்றதன் விளைவாக, என்ன உணர்வு அவருக்கு இருந்தது என்பதைப் பின்வரும் பாடலால், தெய்வச் சேக்கிழார் பெருமான் காட்டுவதைப் பாருங்கள்.

 

உள்ளநிறை கலைத்துறைகள்

     ஒழிவு இன்றிப் பயின்றவற்றால்

தெள்ளிவடித்து அறிந்தபொருள்,

     சிவன்கழலில் செறிவு என்றே

கொள்ளும் உணர்வினில், முன்னே

     கூற்று உதைத்த கழற்கு அன்பு

பள்ள மடையாய் என்றும்

     பயின்றுவரும் பண்புடையார்.

 

இதன் பொழிப்புரை ---

 

      தம் உள்ளம் நிறைவு பெறச் செய்யும் கலைத் துறைகளை எல்லாம் இடைவிடாது கற்று, "அவை எல்லாவற்றாலும் தெளிவு பெற வடித்து எடுத்த பொருளாவது, சிவனடிகளில் பொருந்திய அன்புடைமையான ஒழுக்கமே ஆகும்" என்று கொள்ளும் உணர்வினால் முதன்மை பெற, இயமனை உதைத்த திருவடியிடத்தே அன்பு கொண்ட ஒழுக்கம், பள்ள மடையில் நீர் ஓடுவது போல், தடையில்லாது விரைவாக என்றும் பயின்று வரும் பண்பை உடையவரானார்.

 

     மக்கள் பிறப்பு சில்நாள், பல்பிணி, சிற்றறிவு உடையவை என்பதால், அவர் எவ்வாறு கற்றல் வேண்டும் என்பது, பின்வரும் நாலடியார் பாடல்களால் தெளியப்படும். நீர் நீங்கப் பாலை உண்ணும் அன்னப் பறவையைப் போல, அறிஞர்கள் பொருத்தமுடைய நூல்களைத் தெரிந்து அவற்றைத் தெளிவுகொள்ள ஆராய்ந்து கற்பார்கள் என்றும் கூறுகின்ற நாலடியார், கற்கவேண்டிய நூல்கள் எவை என்று காட்டும்.

 

அலகுசால் கற்பின் அறிவுநூல் கல்லாது,

உலகநூல் ஓதுவது எல்லாம், - கலகல

கூஉந் துணை அல்லால், கொண்டு தடுமாற்றம்

போஒந் துணை அறிவார் இல்.

 

இதன் பொருள் ---

 

     ஆய்ந்து அறிந்து நல்ல அறிவு நூல்களைக் கால்லாது, இவ்வுலக வாழ்க்கைக்குத் தேவையான நூல்களை மட்டுமே படிப்பது எல்லாம், இவ்வுலகில் கலகல எனக் கூவித் திரியும் ஆரவார வாழ்க்கைக்கு உதவுமே அல்லாது, அந்த உலக நூற்கள் பிறவித் துயரில் இருந்து தடுமாறும் துன்பத்தில் இருந்து விடுபடத் துணையாக மாட்டா.

 

     "இற்றைநாள் கற்றதும் கேட்டதும் போக்கிலே போகவிட்டுப் பொய் உலகன் ஆயினேன், நாயினும் கடையான புன்மையேன்" என்றும்,  "ஆடித் திரிந்து நான் கற்றதும் கேட்டதும் அவலமாய்ப் போதல் நன்றோ?" என்றும் இரங்கிய தாயுமான அடிகளார் பாடி அருளிய பாடல்களின் கருத்தினை உள்ளத்து இருத்துதல் வேண்டும். கற்றவழி நிற்றலின் பயன் பின்வரும் தாயுமான அடிகளார் பாடல்களால் கூறப்பட்டது.

     கற்ற கல்வியைக் கொண்டு, நான் என்னும் செருக்கு மிகுந்து, ஆரவாரம் மிகுந்து, பல மேடைகளைக் கண்டு, பிறர் வியக்குமாறு "கடபட" என்று முழுக்கி, உலகியல் வாழ்க்கையில் உழலுவது கூடாது. உயிர்க்குற்றம் அறுதல் வேண்டும்.

 

கற்றதும் கேட்டதும் தானே ஏதுக்கு ஆக?

     கடபடம் என்று உருட்டுதற்கோ? கல்லால் எம்மான்

குற்றம் அறக் கைகாட்டும் கருத்தைக் கண்டு

     குணம் குறி அற்று இன்பநிட்டை கூட அன்றோ?

 

இதன் பொருள் ---

 

     மெய்யுணர்வு நூல்களாகிய ஞான நூல்களைக் கற்றலும் நல்லார் வாயிலாகத் தெளியக் கேட்டலும் எதன் பொருட்டு என்று நன்கு ஆராய்ந்தால், ஆருயிர்களின் உய்வின் பொருட்டே ஆகும் என்பது தெளிவாகும். பிறரொடு சொற்போர் புரிந்து, கடம், படம் என்று உருட்டும் தர்க்கம் புரிவதற்கு அல்ல. கல்லாலின் நீழலில் எழுந்தருளும் எம்மான், ஆணவமலக் குற்றமும், அதனால் வரும் இருவினையும், வினையால் ஏற்படும் பிறப்பும், பிறப்பின் நிலைக்களமாகிய மாயையும் அறவே நீங்கும் பொருட்டு அறிவடையாளம் எனப்படும் சின்முத்திரை வடிவமாகத் திருக்கை காட்டி அருளினான். திருவருளால் அத் திருக்குறிப்பினை உணர்ந்து மாயாகாரியக் குணங்குறிகள் நீங்கிய சிவத்தொடுங் கூடி, ஒடுங்கும் சிவயோக நிட்டையினைப் பெற்று இன்புறுதற்கு அன்றோ, மெய்ஞ்ஞான நூல்களைக் கற்பதும் கேட்பதும்.

 

ஒன்றி ஒன்றி நின்றும் நின்றும் என்னை என்னை

     உன்னி உன்னும் பொருள் அலைநீ, உன்பால் அன்பால்

நின்ற தன்மைக்கு இரங்கும் வயிராக்கியன் அல்லேன்,

     நிவர்த்தி அவை வேண்டும் இந்த நீலனுக்கே

என்றும் என்றும் இந்நெறியோர் குணமும் இல்லை,

     இடுக்குவார் கைப்பிள்ளை, ஏதோ ஏதோ

கன்றுமனத்துடன் ஆடு தழைதின்றாற்போல்

     கல்வியும் கேள்வியும் ஆகிக் கலக்குற்றேனே.

 

இதன் பொருள் ---

 

     உலகியலில் காணப்படும் நூல்களில் ஒவ்வொரு நூலிலும் அழுந்தி அழுந்தி, அதன்படி ஒழுகி நிற்பதாலும் கண்டபயன் ஏதுமில்லை. அடியேன் என்னை மறவாது என்னை நினைந்து கொண்டே உன்னையும் நினையும் பொருளாக நீ யாண்டும் காணப்படும் பொருளாக உள்ளவன் அல்லை. உன்பால் நாயன்மார் போன்று மிக்க பத்தியினால் அடியேன் உறைத்து நின்று ஒழுகி அத் தன்மையைக் கண்டவர் கனிந்து இரங்கும் படிக்கு உள்ள அவாவற்ற நிலைமையுடைய வைராக்கியனும் அல்லேன்.

 

          அடியேன், உலகியல் வழிகளில் நின்றும் விடுதலை பெறுதல் வேண்டும். ஆனால், இந்த முழுப் பொய்யனாகிய இந் நீலனுக்கே. எந்தக் காலத்திலும் இவ்வுலகியல் நெறியால் அடையும் நன்மைக் குணம் ஒருசிறிதும் இல்லை. மிக்க அன்பும் அமைதியும் உள்ள கைக் குழந்தைகளைக் கண்டவர் அனைவரும் மிக்க விருப்பம் கொண்டு எடுத்து ஒக்கலில் வைப்பர். அத்தகைய, இடுக்குவார் கைப்பிள்ளையாக இருக்கும் அன்புத் தன்மையும் அடியேன்பால் அமையவில்லை. வருந்திய மனத்துடன் ஆடு தழை தின்னும் தன்மைபோல் ஒருவரிடத்தே முற்றும் கற்கும் நிலைமையன் அல்லனாய், அரைகுறையாகக் கற்றலும், செவிச் செல்வமாகிய அரும்பெருங் கேள்வியினைக் கேட்டல் இல்லாமையுமாகிய குறைபாடுடையனாய் மனக் கலக்கத்தை அடைந்தேன்.

 

     "ஆடு ஒரு செடியிலே தழை நிறைந்து இருந்தாலும் வயிறு நிறைய மேயாது; செடிதோறும் போய் மேய்தல்" அதன் இயல்பு. இது கடை மாணாக்கர்க்கு ஒப்பு.

 

          அன்னம் ஆவே மண்ணொடு கிளியே

          இல்லிக் குடம் ஆடு எருமை நெய்யரி

          அன்னர் தலையிடை கடைமாணாக்கர்.

 

என்னும் நன்னூல் சூத்திரம் காண்க.

 

    பெரும் பொய்யினைச் சிறிதும் அஞ்சாது கூறி அதனை நிலைநாட்டி நிற்கும் பெண்ணை நீலியென உலகில் வழங்குவர். அம்முறையில் உள்ள ஆண்பாலைக் குறிக்க "நீலன்" என்னும் சொல் அடிகளாரால் குறிக்கப்பட்டது.

 

     எனவே, "கற்றதும் கேள்வி கேட்டதும் நின்னைக் கண்டிடும் பொருட்டு அன்றோ?" என்று தாயுமான அடிகளார் இரங்குகின்றார்.

 

     உலக நூல்களைக் கற்பதால் உண்டாகும் கேடுகளையும், உலகநடை எவ்வாறு அமைந்துள்ளது என்பதையும் தாயுமான அடிகளார் பாடுவதைப் பாருங்கள்...

 

எத்தனை விதங்கள்தான் கற்கினும் கேட்கினும்என்

                 இதயமும் ஒடுங்கவில்லை;

      யான்எனும் அகந்தைதான் எள்ளளவும் மாறவி(ல்)லை;

                 யாதினும் அபிமானம் என்

சித்தமிசை குடிகொண்டது; கையொடு இரக்கம் என்

                 சென்மத்தும் நான் அறிகிலேன்;

      சீலமொடு தவவிரதம் ஒருகனவில் ஆயினுந்

                 தெரிசனம் கண்டும் அறியேன்;

பொய்த்தமொழி அல்லால், மருந்துக்கும் மெய்ம்மொழி

                 புகன்றிடேன்; பிறர் கேட்கவே

      போதிப்பது அல்லாது, சும்மா இருந்து அருள்

                 பொருந்திடாப் பேதை நானே.

அத்தனை குணக்கேடர் கண்டதாக் கேட்டதா

                 அவனிமிசை உண்டோ சொ(ல்)லாய்,

      அண்டபகி ரண்டமும் அடங்கவொரு நிறைவாகி

                 ஆனந்த மானபரமே.

 

இதன் பொருள் ---

 

     அருள் நூல்கள் அல்லாமல், உலக நூல்களை எந்த வகையாகக் கற்றாலும், எவ்வளவுதான் பிறரிடத்தில் கேட்டாலும் எளியேன் உள்ளமானது ஒடுங்கும் நிலைமையில் இல்லை. மனம் அடங்காமல் போகவே, நான் எனது என்னும் செருக்கு எள்ளளவும் மாறவில்லை.  கண்டபொருள் எதுவாக இருந்தாலும், ஆய்வின்றி உள்ளம் அதன்பால் சென்று நீங்காது இருக்கின்றது. கடும்பற்றுக் குடிகொண்டு இருப்பதால், பிறப்பின் பயனாகிய ஈகைக் குணமும், அதற்கு வேண்டும் வித்தாகிய இரக்கத்தினையும், எளியேன் பிறந்தநாள் தொட்டு இதுகாறும் அறியாதவனாக உள்ளேன். நன்னெறியில் குறிக்கப்படும் நற் செய்கையும், நடைமுறை ஒழுக்கமாகிய சீலத்தையும், அதனால் பெறப்படும் நோன்பு, தவம் முதலிய நல்லொழுக்கங்களையும், எளியேன் செய்ததாகக் கனாக் கண்டதும் இல்லை. பிறர்க்கும் பிறவுயிர்கட்கும் துன்பமே விளைக்கும் பொய்ம் மொழிகளையே பொருந்தச் சொல்லும் புன்மையல்லாது, அருமையாக மருந்துக்கும் கூட ஒரு மெய்ம்மொழி புகன்று அறியேன். பிறர் மெச்சிக் கேட்கும்படி வியப்புற விரித்து விரித்துப் போதிப்பது அல்லாமல், அப் போதனை வழி நின்று மனம் அடங்கி, முனைப்புச் செயலற்றுச் சும்மா இருந்து, உன்னுடைய திருவருளினைப் பொருந்தும் புண்ணியப் பேறு இல்லாத அறிவில்லாத ஒருவன் நானே ஆவேன். எளியேனைப் போன்ற அத்துணைக் குணக்கேடர் ஒருவரை இந்த உலகத்தில் கண்டதாகவோ அல்லது கண்டேன் என ஒருவர் சொலக் கேட்டதாகவோ எங்கேனும் உண்டோ சொல்லி அருள்வாய்? (இல்லை என்றபடி.)

 

     நூல்களைக் கற்றும், அறிவும் பண்பும் இல்லாமல், தான் கற்றவன் என்பதை வெளிக்கட்டிக் கொண்டு, உலகியல் நலங்களையே விரும்பி அலையும் புன்மை உண்டானதற்கு மூலகாரணமே, கற்ற மேலவரொடும் கூடி நில்லாததும், கல்வியைக் கற்கும் நெறி இன்னது என்று தேர்ந்து கல்லாமையுமே ஆகும். கற்ற பெரியோர்களொடு கூடி இருந்தால், கல்வி கற்கும் நெறி இன்னது என்று விளங்கும். குற்றம் குறைந்து குணம் மேலிடும்.

 

"கற்ற மேலவரொடும் கூடி நில்லேன்; கல்வி

                        கற்கும் நெறி தேர்ந்து கல்லேன்;

            கனிவுகொண்டு உனது திருவடியை ஒருகனவிலும்

                        கருதிலேன்; நல்லன் அல்லேன்;

குற்றமே செய்வது என்குணம் ஆகும்; அப்பெரும்

                        குற்றம் எல்லாம் குணம் எனக்

            கொள்ளுவது நின் அருட்குணம் ஆகும்; என்னில், என்

                        குறை தவிர்த்து அருள் புரிகுவாய்!

பெற்றம் மேல் வரும் ஒரு பெருந்தகையின் அருள்உருப்

                        பெற்று எழுந்து ஓங்கு சுடரே!

            பிரணவ ஆகார! சின்மய! விமல சொரூபமே!

                        பேதம்இல் பரப் பிரமமே!

தன்தகைய சென்னையில் கந்தகோட்டத்துள் வளர்

                        தலம் ஓங்கு கந்தவேளே!

            தண்முகத் துய்யமணி! உள்முகச் சைவமணி!

                        சண்முகத் தெய்வமணியே!  

 

என்பது வள்ளல்பெருமான் அருளிய திருவருட்பா.

 

இதன் பொருள் ---

 

     தன்னளவில் அழகு பொருந், சென்னையில் கந்தகோட்டம் என்னும் திருக்கோயிலில் எழுந்தருளி இருக்கும் கந்தக் கடவுளே! குளிர்ந்த ஒளியினை உடைய தூயமணியே! உள்ளத்தில் போற்றப்படவேண்டிய சைவநெறியினை விளக்கும் மணியைப் போன்றவரே! ஆறுதிருமுகங்களை உடைய தெய்வமே! எருதின் மேல் இவர்ந்து வரும் ஒப்பற்ற பெருமானான சிவனுடைய அருள் உருவைப் பெற்று விளங்கும் சுடரே! ஓங்கார வடிவமானவரே! ஞானத் திரளாய் உள்ள பெருமானே! மலம் இல்லாத தூய்மை உருவமே! மேலான பிரமப் பொருளே!

 

     கல்வியை கற்கும் நெறியினை அறிந்து நான் கற்கவில்லை. கற்று உணர்ந்த மேன்மக்களோடு கூடி, அவர் வழி நின்றதும் இல்லை. உள்ளம் உருகி உனது திருவடியைக் கனவிலும் நினைக்கவில்லை. நான் நல்லவனும் இல்லை. நல்லொழுக்கம் இல்லாமையால், என்னிடத்தில் நல்ல பண்புகள் விளங்கவில்லை. நல்ல பண்புகள் இல்லாமையால், குற்றச் செயல்களைச் செய்வதே எனக்குக் குணமாக உள்ளது. உயிர்கள் செய்யும் குற்றங்களை எல்லாம் குணமாகக் கொண்டு அருள் புரிவது, உனது அருட்குணம். ஆதலால், எனது குற்றங்களைப் போக்கி அருள் புரிய வேண்டுகின்றேன்.

 

     முறையற்ற கல்வியும் கனிவில்லாத மனமும் உடைமையால் வந்த குற்றங்களை நீக்கிக் குறை தவிர்த்து அருள, இறைவனை வேண்டிக் கொள்ளவேண்டும். கல்வியின் சிறப்பும் பயனும் இதுவே ஆகும்.


No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...