பிறப்பும் இறப்பும்

 

பிறப்பும் இறப்பும்

----

        திருக்குறளில், "நிலையாமை" என்னும் ஓர் அதிகாரம். நிலையாமையாவது, தோற்றம் உடைய எவையும் நிலைத்து இருக்கும் தன்மை இல்லாதன என்பது. அறிவு மயங்கிய இடத்தில் பாம்பு தாம்பு (கயிறு) போலும், மிக்க கோடையில் கானல், நீர் போலும் தோற்றம் தந்து, இல்லாமல் போவது. இவ்விதம் தோன்றுவன யாவும், அழிந்து போகும் நிலையை உடையன என்பதை உணர்ந்து, பொருள்களிடத்தில் பற்று வைத்தல் கூடாது என்பதை உணர்த்த, முதலில் நிலையாமையை எடுத்துக் கொண்டார் நாயனார்.

 

     இந்த அதிகாரத்துள் வரும் ஒன்பதாம் திருக்குறளில், "மரணம் என்பது ஒருவன் உறங்குவதைப் போன்றது; பிறப்பு என்பது ஒருவன் உறங்கி விழிப்பதைப் போன்றது" என்கின்றார் நாயனார்.

 

     உயிர்களுக்கு உறங்குதலும், விழித்தலும், இயல்பாய் மாறி மாறி விரைவாக வருதல் போல, இறத்தலும், பிறத்தலும் இயல்பாய் விரைவாக மாறி மாறி வரும் என்பது கருத்து.

 

     உறங்கச் செல்லும் நேரம் சீராக இருந்தாலும், உறக்கம் வரும் நேரம் சீராக இருப்பதில்லை. படுக்கையில் கிடந்தவுடன் உறக்கம் வருவது இல்லை என்பது உண்மை. உறக்கம் எப்போது வரும், எப்படி வரும் என்பது எப்படி நிச்சயமாய் தெரியாதோ, அது போல மரணம் வரும் விதமும், வரும் காலமும் நமக்குத் தெரியாது.

 

     உறங்கி விழிப்பதும் ஒரே சீராக அமைவது இல்லை. எப்போது விழிப்பு வரும், எப்படி வரும் என்றெல்லாம் தெரியாது. அதுபோலவே, பிறப்பும் எப்போது, எப்படி வரும் என்பதும் நமக்குத் தெரியாது.

 

     ஆக, எதுவுமே நாம் நினைத்தபடி நடப்பது இல்லை. எதுவுமே நிலையாக நடப்பதும் இல்லை. மாறி மாறி வரும் என்றது இதுவே என்றும் கொள்ள,

 

உறங்குவது போலும் சாக்காடு, உறங்கி

விழிப்பது போலும் பிறப்பு.                         

 

என்னும் திருக்குறளை அருளிச் செய்தார் நாயனார்.

 

     இத் திருக்குளுக்கு ஒப்பாகப் பின்வரும் பாடல்கள் அமைந்துள்ளமை காண்க...

 

கல்வாய் அகிலும் கதிர் மாமணியும்

         கலந்து உந்தி வரும் நிவவின்கரைமேல்

நெல்வாயில் அரத்துறை நீடுஉறையும்

         நிலவெண்மதி சூடிய நின்மலனே!

நல்வாய்இல் செய்தார் நடந்தார் உடுத்தார்

         நரைத்தார் இறந்தார் என்று நானிலத்தில்

சொல்லாய்க் கழிகின்றது அறிந்து அடியேன்

         தொடர்ந்தேன் உய்யப் போவதுஒர் சூழல்சொல்லே.  ---  சுந்தரர் தேவாரம்.

 

இதன் பொழிப்புரை ---

 

     மலையிடத்துள்ள அகில்களையும், ஒளி பொருந்திய மாணிக்கங்களையும் ஒன்று கூட்டித் தள்ளிக்கொண்டு வருகின்ற நிவாநதியின் கரைமேல் உள்ள திருநெல்வாயில் அரத்துறை என்னும் திருத்தலத்தில் எழுந்தருளியிருக்கும், நிலவினை உடைய வெள்ளிய பிறையைச் சூடிய மாசற்றவனே! உலகியலில் நின்றோர் அனைவரும், "நல்ல துணையாகிய இல்லாளை மணந்தார்; இல்லற நெறியிலே ஒழுகினார்; நன்றாக உண்டார்; உடுத்தார்; மூப்படைந்தார்; இறந்தார்" என்று உலகத்தில் சொல்லப்படும் சொல்லை உடையவராய் நீங்குவது அன்றி, நிலையாக இருந்தவர் யாரும் இல்லை என்பதை அறிந்து உன்னை அடைந்தேன்; ஆதலின், அடியேன் (நிலையாமை என்னும்) அச்சொல்லில் இருந்து பிழைத்துப் போவதற்குரிய (நிலையான இன்பத்தைப் பெறுதற்கு உரிய)  ஒரு வழியினைச் சொல்லியருள் .

 

கோடுஉயர் கோங்கு அலர் வேங்கை அலர்

         மிகஉந்தி வரும் நிவவின் கரைமேல்

நீடுஉயர் சோலை நெல்வாயில் அரத்--

         துறை நின்மலனே, நினைவார் மனத்தாய்,

ஓடுபுனல் கரையாம் இளமை,

         "உறங்கி விழித்தால் ஒக்கும் இப்பிறவி"

வாடிஇருந்து வருந்தல் செய்யாது

         அடியேன் உய்யப்போவதோர் சூழல் சொல்லே.  ---  சுந்தரர் தேவாரம்.

 

இதன் பொழிப்புரை ---

 

     கிளைகள் உயர்ந்த கோங்க மரத்தின் மலர்களையும், வேங்கை மரத்தின் மலர்களையும் மிகுதியாகத் தள்ளிக் கொண்டு வருகின்ற நிவாநதியின் கரைமேல் உள்ள, நெடியனவாக ஓங்கிய சோலைகளை உடைய திருநெல்வாயில் அரத்துறை என்னும் திருத்தலத்தில் எழுந்தருளியிருக்கின்ற மாசற்றவனே! உன்னை நினைகின்றவரது நெஞ்சத்தில் வாழ்பவனே! இப்பிறப்பு என்பது, உறங்கிய பின் விழித்தாற் போல்வது; இதன்கண் உள்ள இளமையோ, ஓடுகின்ற நீரின் கரையை ஒக்கும்; ஆதலின், `என் செய்வது` என்று மெலிவுற்று நின்று வருந்தாது, அடியேன் , இப் பிறவியிலிருந்து பிழைத்துப் போதற்குரிய ஒரு வழியினைச் சொல்லியருள்.

 

 

தனிப்பெருந் தாமே முழுது உறப் பிறப்பின்

   தளிர், இறப்பு இலை உதிர்வு என்றால்

நினைப்பரும் தம்பால் சேறல் இன்றேனும்

   நெஞ்சு இடிந்து உருகுவது என்னோ !

சுனைப்பெருங் கலங்கல் பொய்கையங் கழுநீர்ச்

   சூழல்மா ளிகைசுடர் வீசும்

எனைப்பெரு மணஞ்செய் இஞ்சிசூழ் தஞ்சை

   இராசரா சேச்சரத் திவர்க்கே.        ---   திருவிசைப்பா

 

இதன் பொழிப்புரை ---

 

     சுனையைப் போல ஆழமான, மூழ்கும் மகளிருடைய சந்தனச்சேற்றால் கலங்குதலை உடைய பொய்கைகளில் உள்ள கழுநீர்ப்பூக்கள் தம்மைச் சுற்றிலும் உள்ள ஒளிவீசும் மாளிகைகளில் எத்துணைப் பெரிய நறுமணத்தையும் பரப்பும் படியான, மதில்களால் சூழப்பட்ட தஞ்சையில் உள்ள இராசராசேச் சரத்துப் பெருமானார், தனிப் பெருந்தலைவராய் எல்லாவிடத்தும் வியாபித்து இருக்கவும், பிறப்பாகிய தளிர் இறப்பாகிய இலை உதிர் நிலையை எய்திற்றாயின் அதுபோது நினைத்தற்கும் அரிய இவர்பால் செல்லுதல் இயலாமை அறிந்தும் மனம் கலங்கி இப்பெருமான் திறத் தில் மனம் உருகுவது யாது கருதியோ? தொடக்கம் தொட்டே இறை வனை நினைந்து உருகும் உள்ளத்தோடு செயற்படவேண்டும் என்பது.

 

         பிறப்பின் தளிர் இறப்பு இலை உதிர்வு என்றால் --- உடம்பின் பிறப்பு ஆகிய தளிர், இறப்பாகிய இலை உதிர்நிலையை அடைந்ததாயின்.

 

மறக்கின்ற தன்மை இறத்தல் ஒப்பாகும்,

     மனம் அது ஒன்றில்

பிறக்கின்ற தன்மை பிறத்தல் ஒப்பாகும்,

     இப் பேய்ப்பிறவி

இருக்கின்ற எல்லைக்கு அளவில்லையே,

     இந்தச் சன்மஅல்லல்

துறக்கின்ற நாள் எந்த நாள்? பரமே நின்

     தொழும்பனுக்கே.                     --- தாயுமானார்.

 

இதன் பொருள் ---

 

     மனமானது ஒரு பொருளைக் கண்டபின் மறக்குமானால், அதுவே அம் மனத்திற்கு இறப்பு நிலையாகும். அதுபோல் ஒரு பொருளை நினைக்குமானால், அதுவே அம் மனத்துக்குப் பிறப்பு நிலையாகும். (அதனால் மனம் அளவில்லாத முறை இறந்து பிறந்து வருதல் காணலாம்.) இவை போன்று எளியேன் பெற்றுள்ள பேய்ப் பிறவியாகும். இப் பிறவிகள் கழிந்து கழிந்து மீண்டும் மீண்டும் பெறுவதற்கும் ஓர் அளவில்லை. இத்தகைய பிறப்புத் துன்பம் எளியேனைவிட்டு நீங்கி ஒளியும் நாள் எந்நாளோ? தனி முதலே, அடியேன் நின் நீங்காத் தொண்டனாவேன்;

 

இழித்தக்க செய்து ஒருவன் ஆர உணலின்,

பழித்தக்க செய்யான் பசித்தல் தவறோ?

விழித்து இமைக்கும் மாத்திரை அன்றோ, ஒருவன்

அழித்துப் பிறக்கும் பிறப்பு.           --- நாலடியார்.

 

இதன் பொழிப்புரை ---

 

     இழிந்ததும், மானக் குறைவு உண்டாவதும் ஆன செயல்களைச் செய்து, அதனால் கிடைக்கும் ஊதியத்தைக் கொண்டு ஒருவன் வயிறார உண்டு, செழிப்பாக வாழ்வதை விட, அத்தகைய இழி செயல்களைப் புரியாமல், பட்டினி கிடந்தாலும் பரவாயில்லை என்று பசித்த வயிறோடு இருப்பது தவறில்லை. இவ்வுலகில் மனித வாழ்க்கை என்பது, கண் மூடிக், கண்ணைத் திறக்கின்ற நொடிப் பொழுது நேரமே ஆகும். இறப்பதும் பிறப்பதும் மாறி மாறி நிகழுகின்ற, இப்படிப்பட்ட நிலையில்லாத வாழ்வில், நீசத்தனமான செயல்களை ஏன் ஒருவன் நினைக்கவேண்டும்?

 

         நொடிப்பொழுதில் மாய்ந்து போய் விடுகின், இந்தப் பிறவியின் பொருட்டு மானக் குறைவான செயலைச் செய்து உயிர் பிழைத்தல் ஆகாது.

 

பிறந்தவர் சாதலும், இறந்தவர் பிறத்தலும்,

உறங்கலும் விழித்தலும் போன்றது உண்மையின்,

நல்லறம் செய்வோர் நல் உலகு அடைதலும்

அல்லறம் செய்வோர் அருநரகு அடைதலும்

உண்டு என உணர்தலின் உரவோர் களைந்தனர்....   ---  மணிமேகலை.

 

இதன் பொழிப்புரை ---

 

     உலகில் பிறந்தோர்கள் இறத்தலும், இறந்தோர்கள் மீண்டும் பிறத்தலும், உறங்குவதும் உறங்கி விழிப்பதும் போல்வதாக உள்ளதால்,  நல்ல அறங்களைச் செய்கின்றவர்கள் இன்பம் அடைதற்கு உரிய மேலுலகங்களை அடையப் பெறுதலும், தீவினைகளைச் செய்கின்றவர் பொறுத்தற்கு அரிய துன்பத்தைச் செய்யும் நரகத்தை அடைதலும் உண்மை என்று உணர்தலினால், அறிஞர்கள் தீயவற்றைத் தமது வாழ்வில் இருந்து நீக்கினர்.

 

 

முற்றியபின் கனிஉதிரும், பழுப்பு உற்றுத்

     தழை உதிரும், முழுதுமே நெய்

வற்றியபின் விளக்கு அவியும் என்ன ஓர்

     திடம் உண்டு; மக்கள் காயம்

பற்றிய அக் கருப்பத்தோ பிறக்கும்போ

     தோ, பாலப் பருவத்தோ, மூப்பு

உற்ற பின்போ வீழ்வது என நிலை இன்றேல்,

     இதன்பெருமை உரைப்பது என்னே.     ---  நீதிநூல்.

 

 இதன் பொருள் ---

 

     நெஞ்சே! பழம் முற்றிய பின்பு விழும். இலை முற்றிப் பழுத்த பிறகு உதிரும். எண்ணெய் முழுவதும் எரிந்த பின்னரே விளக்கு அணையும் என்று உறுதியாகச் சொல்லிவிடலாம். ஆனால், மக்கள் உடம்பானது கருவில் இருக்கும்போதே இறக்குமா? பிறக்கும் பொழுதே இறக்குமா?,  பிறந்து வளர்ந்து கட்டிளமைப் பருவத்தை அடைந்த போது இறிக்குமா? வயது முதிர்ந்த பின்னரோ இறக்குமா? என உறுதியாகச் சொல்லமுடியவில்லை. ஆதலின் இவ்வுடலின் பெருமையை என் சொல்வது?

 


No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...