சிறந்த அர்ச்சனை பாட்டே ஆகும்

 

 

சிறந்த அருச்சனை பாட்டே ஆகும்

-----

 

பூமாலை சூட்டுதல் கிரியை நெறி.

பாமாலை சூட்டுதல் ஞானநெறி.

 

     இறைவனைப் பூமாலை கொண்டும் பாமலை கொண்டும் வழிபட வேண்டும். பூக்கள் கொண்டும், பாக்கள் கொண்டும் வழிபடவேண்டும். பூக்களால் செய்யும் அருச்சனையானது, பாக்களால் செய்யும் சிறந்த அருச்சனைக்குப் பின்பே நிறைவு பெறும். விதவிதமான பூக்களால் ஆன மாலைகளை இறைவனுக்கு அணிவித்து, விதவிதமான பூக்களால் இறைவனை அருச்சனை செய்தபின், மந்திரங்களால் அமைந்த "மந்திர புஷ்பம்" இறைவனுக்குச் சாத்தப்பட்ட பின்னரும், பாமாலைகளால், இறைவனை வழிபட்ட பிறகே அருச்சனையானது நிறைவு பெறுவதைக் காணலாம்.

 

நாவழுத்தும் சொல்மலரோ? நாள்உதிக்கும் பொன்மலரோ?

 தேவை உனக்கு இன்னது என்று செப்பாய் பராபரமே

 

என்கிறார் தாயுமானார்.

 

         இவ்வாறு பூவைக் கொண்டும், நாவைக் கொண்டும் இறைவன் திருவடியை வழிபட்டு உய்தி பெறாதவர்கள், உடம்புக்கு வேண்டிய இரையைத் தேடி அலைந்து, வாழ்நாள் முடிவில், காக்கைக்கு இரையாகி அழிந்து ஒழிவர் என்கின்றார் அப்பர் பெருமான்.

 

பூக்கைக் கொண்டுஅரன் பொன்அடி போற்றிலார்,

நாக்கைக் கொண்டுஅரன் நாமம் நவில்கிலார்,

ஆக்கைக்கே இரை தேடி அலமந்து,

காக்கைக்கே இரை ஆகிக் கழிவரே.           ---  அப்பர்.

 

     நாவினால் இறைவனுடைய நாமங்களை நவில்பவர் எல்லா நலன்களையும் பெறுவர். அல்லாதவர் அவமே அழிவர் என்பது இத் தேவாரப் பாடலால் தெளிவாகும்.

 

     நாவுக்கு முதலிடம் தந்து, "கூறும் நாவே முதலாகக் கூறும் கரணம் எல்லாம் நீ" என்று மணிவாசகர் கூறுமாறும் காண்க.

 

"பலபல பைம்பொன் பதக்கம் ஆரமும்,

     அடிமை சொலும் சொல் தமிழ்ப் பனீரொடு,

     பரிமளம் மிஞ்ச, கடப்ப மாலையும் ...... அணிவோனே!"

 

என்கின்றார் அருணகிரிநாதப் பெருமான்.

 

இதன் பொருள் ---

 

     பலப்பல விதமான பசும் பொன்னால் செய்த பதக்கங்களையும், மாலைகளையும்,  அடிமையேன் சொல்லுகின்ற திருப்புகழாகிய தமிழ்ப் பன்னீரையும்,  வாசனை மிகுதியாக வீசும் அந்தக் கடப்ப மலர் மாலையையும் அணிகின்றவரே!

 

     இறைவன் திருவடியை அடியவர்களும் வானவர்களும் எப்போதும் அன்றலர்ந்த மலர் தூவி வழிபட்டுக் கொண்டு இருப்பார்கள். அந்த மலர்களில் தேன் நிறைந்து மடம் பொருந்தி இருக்கும். நாளடைவில் அவை வாடி விடும். மணம் இன்றிப் போய் வாடிவிடுகின்ற மலர்கள் அவை.

 

     வாடா நறுமலர் என்பது ஞானமலர்களைக் குறிக்கும். ஞானமலர்கள் பாமாலைகளே ஆகும். அந்த மலர்களில் எப்போதும் மணம் மாறாது இருக்கும். ஆனந்தத் தேன் சொரியும்.

 

     இறைவனை அன்று அலர்ந்த மலர்களைக் கொண்டு வழிபடவேண்டும். அன்று அலர்ந்த மலர்கள், "நாள் மலர்கள்" எனப்படும். அன்று அலர்ந்த எட்டுவிதமான மலர்களைக் கொண்டு இறைவனை வழிபடவேண்டும் என்பது பின்வரும் அப்பர் தேவாரப் பாடலால் விளங்கும்.

    

எட்டு நாள்மலர் கொண்டுஅவன் சேவடி

மட்டு அலர்இடு வார்வினை மாயுமால்,

கட்டித் தேன்கலந்து அன்ன கெடிலவீ

ரட்ட னார்அடி சேரும் அவருக்கே.

 

இதன் பொருள் ---

 

     கன்னல் கட்டியும் தேனும் கலந்ததைப் போன்று இனிக்கும் கெடிலவீரட்டனார் சேவடி சேர்பவராய், எட்டுவகைப்பட்ட நாள் மலர்களாகிய தேன் அவிழும் மலர்களை இட்டு வழிபடுவார் வினைகள் மாயும் .

 

     நாள் மலர் என்றது அன்று அலர்ந்த மலர்களை. எட்டு நாள் மலர் என்றது அஷ்ட புஷ்பங்கள் எனப்படும் எண் வகைப் புதிய மலர்கள். அவையாவன:- புன்னை, வெள்ளெருக்கு, சண்பகம், நந்தியாவர்த்தம், பாதிரி, குவளை, அலரி, செந்தாமரை ஆகிய பூக்கள். இவை புறப்பூசைக்கு அமைந்தவை.

 

     பூசையால் "பவன்" முதலிய எட்டு நாமங்கள் சொல்லி வழிபடும் மரபு உண்டு. ஆகமங்களில் விதித்தவாறு அட்ட புட்பம் சாத்தி வழிபடுதலையே குறிப்பது இத் தேவாரம்.

 

     பூக்களைக் கொண்டு வழிபடுவது புறப்பூசை. அகத்தில் விளங்கும் நற்பண்புகளைக் கொண்டு வழிபடுவது, "அகப்பூசை" ஆகும்.

 

     அகப் பூசைக்குரிய அட்டபுட்பங்கள் - கொல்லாமை, ஐம்பொறியடக்கம், பொறை, அருள், அறிவு, வாய்மை, தவம், அன்பு என்னும் "நலம் சிறந்தார் மனத்தகத்து மலர்கள் எட்டும்" என்பார் அப்பர் பெருமான்.

 

     அருணகிரிநாதப் பெருமான் அறுமுகப் பரமனுடைய அடிமலருக்கு ஒரு மாலை தொடுத்துப் புனையக் கருதுகின்றார். "பூமாலை" வாடும் தன்மை உடையது. ஆதலின் வாடாத தன்மையும் மென்மையும் உடைய "மந்திர மலர்மாலை" சூட்டத் துணிந்தனர்.

 

     மலர்மாலைக்கு இடையே குஞ்சம் ஒன்று தொங்க வேண்டும். அதுதான் மாலையை அழகு படுத்தும். அது பெரிய ஒரு பூங்கொத்தாக அமைந்திருக்கும். அடிகளார் தொடுக்கும் மந்திர மலர்மாலைக்கு இடையே "மனம்" என்ற தாமரைப் பூவை குஞ்சமாகக் கட்டித் தொங்கவிடுகின்றனர்.

 

     மனமே பந்தத்திற்கும் முத்திக்கும் காரணமாகும். தண்ணீரே மனிதனை வாழ்விக்கின்றது. தண்ணீரே மனிதனைக் கொல்கின்றது. மனதை ஆண்டவனுடைய திருவடியில் சேர்த்து விடுவதே துன்ப நீக்கத்திற்குச் சிறந்த சாதனமாகும். அதுவே எளிய வழியுமாகும்.

 

     காற்றும் காற்றாடியும் போல் சதா இடையறாது ஓடி ஓடி உழல்வதே மனத்தின் இயல்பு. அதனால் எண்ணில்லாத இடர்கள் எய்துகின்றன. ஆதலின், அம் மனதை இறைவன் திருவடியில் சேர்த்துவிட்டால் இன்பம் பயக்கும்.

 

     மந்திர மலர்களைத் தொடுப்பதற்கு நூல் வேண்டும். "அன்பு" என்ற நூலினால் அழகுற மந்திர மலர்களைத் தொடுக்க வேண்டும். அன்பு, ஒன்றுடன் ஒன்றை இணைத்து வைக்கும் இயல்பு உடையது. இறைவனுடன் ஆன்மாவை ஒன்றுபடுத்துவதும் அன்பே ஆகும். சகாதேவன் கண்ணபிரானை அன்பு என்ற கயிற்றினால் உள்ளமாகிய மண்டபத்தில் உறுதியாகிய தூணில் கட்டினான்.

 

     அத்தகு சிறந்த திருமாலையைக் கட்டுவதற்குரிய இடம் எது. அதற்குரிய சிறந்த இடம் "நாவே" ஆகும். வேறு எந்த உயிர்களுக்கும் அமையாத சிறப்பு மனிதனுடைய நாவுக்கு அமைந்துள்ளது. நன்கு பேசும் தகைமையுடன் கூடிய நாவை இறைவர் நமக்குத் தந்துள்ளார். அந்த நாவிலே பரமனுடைய திருநாமங்களை அன்புடன் நவில வேண்டும். "கற்றுக் கொள்வன வாய்உள நாஉள" என்பார் அப்பரடிகள். "நாமேல் நடவீர் நடவீர் இனியே" என்று அநுபூதியில் அருணகிரிநாதரும் கூறுமாறு காண்க.

 

     இம் மந்திர பூமாலையில் ஒப்பற்ற மெய்ஞ்ஞானமாகிய நறுமணம் கமழ்கின்றது. மற்ற மணம் சில நேரமே கமழும்.  ஞானமணம் எப்போதும் இடையறாது கமழும். மணம் கண்களுக்குத் தோன்றாது. மென்மையாக வீசும் இயல்பு உடையது. ஞானம் அத்தகையது. ஞானம் மிகவும் நுண்மையானது. "கூர்த்த மெய்ஞ்ஞானம்" என்பது மணிவாசகம்.  ஞானவாசனை எவ்வுலகினும் பரிமளிக்கத் தக்கது.

 

     ஞானமணம் கமழும் இம் மந்திர மலர்மாலையில் துளிக்கும் அருள் தேனைப் பருக, "புத்தி" என்ற வண்டு வந்து மொய்த்து, இனிய நாதத்துடன் ஒலிக்கின்றது. மலரிலே உள்ள மதுவைப் பிரித்து எடுத்து அருந்தும் ஆற்றலும் அறிவும் வண்டுகளுக்கே உண்டு. வண்டினாலேயே இனிய தேன் கிடைக்கின்றது. புத்திக்கு வண்டு உவமை ஆனது. புத்தியே எல்லா நூல்களிலிருந்தும் உயர்ந்த தத்துவங்களாகிய தேனைப் பிடித்து உணரும். "புத்திமான் பலவான் ஆவான்" என்ற பழமொழியும் கருதத் தக்கது. புத்திமான் எங்கும் எச் சபையிலும் நடுநாயகமாக வீற்றிருப்பான். புத்திகாரகன் புத பகவான். ஏழு நாள்களின் தலைவர்களாகிய ஏழு கிரகங்களின் நடுவில் புதன் அமைந்திருப்பதை உன்னுக.

 

     இறைவனும் புத்தியில் உறைகின்றான் என்று அருணகிரியார் முதல் பாடலில் கூறுகின்றனர். "கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ". இங்கே புத்தி என்று கூறியது அந்தக் கரணங்களுள் ஒன்றான புத்தி அல்ல. நல்லறிவைக் குறித்தது.

 

     உடம்புக்குள் ஆறு ஆதாரங்கள் உள்ளன. மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை என்ற ஆதாரங்கள் ஆறுக்குள் அகரமுதலாக க்ஷகரம் இறுதியாக ஐம்பத்தொரு அக்ஷரங்கள் அடங்கி இருக்கின்றன. இந்த அக்ஷரங்களுக்கு "மாத்ருகா மந்திரம்" என்றும், "மாலாமந்திரம்" என்றும் கூறுவர். இம் மாத்கருகா மந்திரமே எல்லா மந்திரங்களினும் உயர்ந்தது. அம் மந்திரத்தின் பெருமை அளவிடற்கரியது.

 

     இந்த மாத்ருகா மந்திரங்கள் ஐம்பத்தொன்றின் பரிணாமமே "கந்தர் அநுபூதி". ஐம்பத்தொரு பாடல்களாக அது அமைந்திருப்பதை ஓர்க. "செஞ்சொல் புனைமாலை சிறந்திடவே" என்று காப்புச் செய்யுளில் அடிகள் கூறுகின்றனர்.

 

ஆசைகூர் பத்தனேன் மனோ பத்மம்

     ஆன பூ வைத்து, ...... நடுவே அன்பு

ஆன நூல் இட்டு, நாவிலே சித்ரம்

     ஆகவே கட்டி, ...... ஒரு ஞான

 

வாசம் வீசி, ப்ரகாசியா நிற்ப,

     மாசு இல் ஓர் புத்தி ...... அளிபாட,

மாத்ருகா புஷ்ப மாலை கோல ப்ர-

     வாள பாதத்தில் ...... அணிவேனோ? 

 

என்பது அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்.

 

"வீண்பொழுது போக்காமலே

நேயமுட னேதெளிந்து அன்பொடுஉன் பாதத்தில்

     நினைவுவைத்து இருபோ தினும்

  நீர்கொண்டு மலர்கொண்டு பரிவுகொண்டு அர்ச்சிக்க

     நிமலனே! அருள் புரிகுவாய்.

                                                                                   

என்கின்றது அறப்பளீசுர சதகம்.

 

பூமாலை சூட்டுதல் கிரியை நெறி.

பாமாலை சூட்டுதல் ஞானநெறி.

 

     நம்பியாரூரைத் தமிழால் தன்னைப் பலவகையிலும் பாடுமாறு பணித்தார், பனிமதிச்சடை அண்ணல் ஆகிய சிவபரம்பொருள் என்பதைப் பெரியபுராணத்தின் வாயிலாக அறியலாம்.

 

"மற்று நீ வன்மை பேசி வன் தொண்டன் என்னும் நாமம்

பெற்றனை; நமக்கும் அன்பில் பெருகிய சிறப்பின் மிக்க

அர்ச்சனை பாட்டே ஆகும்; ஆதலால் மண் மேல் நம்மைச்

சொல் தமிழ் பாடுக" என்றார் தூமறை பாடும் வாயார்.

 

            இப் பாடலில், இறைவனுக்கு "அன்பில் பெருகிய சிறப்பின் மிக்க அர்ச்சனை பாட்டே ஆகும்" என்று அருளி உள்ளதைக் கூர்ந்து கவனித்தல் வேண்டும்

 

     "முத்தமிழால் வைதாரையும் வாழ வைப்பவன்" முருகப் பெருமான் என்கின்றார் அருணகிரிநாதப் பெருமான்.

 

     மூடர்களாகிய உலோபிகளை, “தந்தையே! தாயே! தெய்வமே! ஆதரிக்கின்ற வள்ளலே! ஆண்மை நிறைந்த அருச்சுனனே! என்று, என்ன என்ன விதமாகப் புகழ்ந்து பாடினாலும் மனம் இரங்கி, அரைக் காசும் உதவமாட்டார்கள். செந்தமிழ்த் தெய்வமாகிய முருகப்பெருமானை இலக்கண இலக்கிய கற்பனை நயங்களோடு ஒன்றும் அழகாகப் பாடவேண்டாம். பித்தன் பெற்ற பிள்ளை; நீலிமகன்; தகப்பன் சாமி; பெருவயிற்றான் தம்பி; பேய் முலையுண்ட கள்வன் மருமகன்; குறத்தி கணவன்என்று ஏசினாலும் இன்னருள் புரிவான். அத்துணைக் கருணைத் தெய்வம்.

 

அத்தன்நீ, எமதுஅருமை அன்னைநீ, தெய்வம்நீ,

    ஆபத்து அகற்றி அன்பாய்

ஆதரிக்கும் கருணை வள்ளல்நீ, மாரன்நீ,

    ஆண்மைஉள விசயன்நீ, என்று

எத்தனை விதஞ்சொலி உலோபரைத் தண்தமிழ்

    இயற்றினும் இரக்கஞ் செயார்,

இலக்கண இலக்கியக் கற்பனைக் கல்வியால்

    இறைஞ்சிஎனை ஏத்த வேண்டாம்,

பித்தனொடு நீலியும் பெறுதகப்பன் சாமி!

    பெருவயிற்றான் தம்பி,அப்

பேய்ச்சிமுலை உண்டகள் வன்மருகன், வேடுவப்

    பெண்மணவன், என்றுஏசினும்,

சித்தமகிழ் அருள் செய்யும் என்றே முழக்கல்போல்

    சிறுபறை முழக்கி அருளே!

செம்பொன் நகருக்கு இனிய கம்பைநகருக்கு இறைவ,

    சிறுபறை முழக்கி அருளே!        ---  கம்பை முருகன் பிள்ளைத் தமிழ்

 

     பெறுதற்கு அரிய பிறவியாகிய இந்த மனிதப் பிறவியைப் பெற்றதன் பயன் இறைவனை, கையினால் பூக்களைக் கொண்டும், நாவினால் பாக்களைக் கொண்டும் வழிபடுவது ஒன்றே பேரின்ப வீட்டிற்குச் செல்லும் வழியாகும். இந்தப் பேரின்ப வீடுகூட வேண்டாம். இறைவனைத் தமிழ்ப் பாமாலைகளால் பாடி வழிபடுகின்ற பிறவியே வேண்டும் என்னும் பொருளில், உலகினில் பிறவாமையை வேண்டுவார் அவ்வாறே வேண்டிக் கொள்ளட்டும். ஆனால் நான் பிறவியையே வேண்டுவேன். எப்படிப்பட்ட பிறவி?  இனிமை நிறைந்த தமிழ்ச் சொற்களால் ஆன மலர்களை உனக்கு அணிகின்ற பிறவியே அடியேனுக்கு வேண்டும் என்றார் கற்பனைக் களஞ்சியம் சிவப்பிரகாச சுவாமிகள்.

 

            அண்ணாமலையாரை மீது பாடப்பட்ட அருமையான, "சோணசைல மாலை" என்னும் நூலில் வரும் பாடலைக் காண்போமாக..

 

விரைவிடை இவரும் நினை, பிறவாமை

      வேண்டுநர் வேண்டுக, மதுரம்

பெருகுறு தமிழ்ச்சொல் மலர் நினக்கு அணியும்

      பிறவியே வேண்டுவன் தமியேன்;

இருசுடர்களும் மேல் கீழ்வரை பொருந்த

     இடையுறல் மணிக்குடக் காவைத்

தரையிடை இருத்தி நிற்றல் நேர் சோண

     சைலனே கைலைநா யகனே.

 

இதன் பொருள் ----         

 

     சூரியன் சந்திரன் ஆகிய இரு சுடர்களும் மேல்மலை, கீழ்மலை ஆகியவற்றில் விளங்க, இடையில் மலைவடிவமாக நிற்பதாவது, இருபுறத்தும் குடங்களைக் கொண்ட காவடியைத் தரையில் வைத்து நிற்பவரைப் போலத் தோன்றும் சோணசைலப் பெருமானே! திருக்கயிலையின் நாயகனே!  விரைந்து செல்லும் இடபவாகனராகிய தேவரீரிடத்தில் பிறவாமை வேண்டுவோர் வேண்டிக் கொள்ளட்டும். இனிய தமிழ்ச் சொற்களால் ஆன பாமாலையை தேவரீருக்கு அணிவிக்கக் கூடிய மனிதப் பிறவியையே அடியேன் வேண்டுகின்றேன்.

 


No comments:

Post a Comment

பொது --- 1084. முழுமதி அனைய

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் முழுமதி அனைய (பொது) முருகா!  திருவடி அருள்வாய். தனதன தனன தனதன தனன      தனதன தனன ...... தந்ததான முழுமதி ய...