நட்ட கல்லும் பேசும்?

 

 

நட்ட கல்லும் பேசும்?

---------

 

"நட்ட கல்லை தெய்வம் என்று நாலு புட்பம் சாத்தியே

சுற்றி வந்து மொணமொண என்று சொல்லு மந்திரம் ஏதடா?

நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள் இருக்கையில்

சுட்ட சட்டி சட்டுவம் கறிச் சுவை அறியுமோ?"

 

சிவவாக்கியர் என்னும் சித்தர் பெருமான் பாடியருளிய பல பாடல்களில் இதுவும் ஒன்று.

 

இதன் பொழிப்புரை ---

 

சுட்ட சட்டி சட்டுவம் கறிச் சுவை அறியுமோ --- சமைத்த கறியின் சுவையை அந்த சட்டியும், கிளறுவதற்கு உண்டான கரண்டியும் தெரிந்துகொள்ளுமோ? தெரிந்து கொள்ளாது. (அது போல) நாதன் உள் இருக்க --- பரம்பொருள் உனது மனத்தினுள் இருக்க, அதை விட்டு, நட்ட கல்லை --- சிற்பியினால் வடிக்கப்பட்டு நாட்டப்பட்ட (தாபிதம் செய்யப்பட்ட) தாதுப் பொருளை, தெய்வம் என்று --- உருவம், உருவம் இன்மை (அருவம்) என்னும் இரண்டு நிலைகளையும் கடந்து நிற்கும் பரம்பொருள் என்று நினைத்து, நாலு புட்பம் சாத்தியே --- நானா விதமாகிய மலர்களைச் சாத்தி, சுற்றி வந்து மொணமொண என்று சொல்லு மந்திரம் ஏது அடா --- முறைப்படி வலமாக வந்து (இதயம், கண்டம் ஆகிய ஆதாரங்களில் தன்னுடைய அறிவுக்கு மாத்திரம் அறியப்படக் கூடிய மத்திமை என்னும் வாக்கினால்) நீ சொல்லுகின்ற மந்திரம் எங்கு உள்ளது? (இப்படி இருக்கையில்) நட்ட கல்லும் பெசுமோ --- நாட்டப்பட்டு உள்ள சிலாரூபம் ஆகிய கல்லும் பேசக் கூடியதோ?

 

     இந்தப் பாடலின் உட்பொருளை அறியாதார், பொதுவாக இது கடவுளுக்கு உருவ வழிபாடு தேவை அற்றது என்று வற்புறுத்திப் பாடப்பட்டதாகச் சொல்லுவது வழக்கமாக உள்ளது என்பதை அறிவோம்.

 

     சிவவாக்கியர் ஒரு சித்தர் பெருமான். சிட்டர் என்னும் சொல்லுக்கு அறிவு நிரம்பியவர் என்று பொருள். சித்தர் என்னும் சொல்லுக்கு ஞானமுதிர்ச்சி உடையவர் என்று பொருள். ஞானமுதிர்ச்சியை உடைய ஒரு பெரியவர் இவ்வாறு சொல்வாரா? சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

 

     தான் வழிபட்டு, சீவன்முத்தி நிலையை அடைய அருள் புரிந்த பரம்பொருளை இல்லை என்று நாட்டுவதற்காகவா இத்தனை அரிய பாடல்களைப் பாடினார்? சிந்தித்துப் பாருங்கள்.

 

     இந்தப் பாடலில், "நட்ட கல்லும் பேசுமோ" என்பது தான் முதன்மையான வினா. பேசுமோ என்னும் வினாவிற்கு, பேசாது என்னும் விடையையே பெரும்பாலோர் துணிந்து கூறுவர்.

 

     மேல் நோக்காக எண்ணினால் உண்மை விளங்காது. அழுந்தி ஆராய்ந்து அறிந்து அனுபவிக்கும் அருட்பேறு வாய்த்தவர்க்கே இது போன்ற பாடல்களின் உண்மை விளங்கும்.

 

     பொதுவாகவே, சான்றோர்களும், அருளாளர்களும், ஏதேனும் ஒரு வினாவை எழுப்பி, அதற்கான பதிலையும் குறித்தே பாடல்களை இயற்றுவர்.

 

     இந்த முறைக்கு, "பிரச்னோத்தரம்" என்று பொருள். பிரச்னை --- வினா. உத்தரம் --- விடை.  தமிழில் "வினாவுத்தரம்" அல்லது "வினாவிடை" என்று சொல்லப்படும்.  இதுபோன்ற பாடல்கள் தேவார திருவாசங்களிலும், திவ்விய பிரபந்தங்களிலும், பிற அருளாளர்களின் பாடல்களிலும் விரவி இருக்கக் காணலாம்.

 

     திருவள்ளுவ நாயனாரும் தமது திருக்குறள் பாடல்களில் ஆங்காங்கே வினாவை எழுப்பி, நம்மை உய்த்து உணர வைத்திருப்பார்.

 

     மேலே குறித்த இந்தப் பாடலை உற்றுக் கவனித்தால், ஒரு உண்மை விளங்கும். இரண்டாவது அடியில் "சொல்லு மந்திரம் ஏதடா" என்று உள்ளது. "சொல்லும்" என்னும் சொல் கடைக் குறைந்து, "சொல்லு" என வந்தது. அவ்வாறே, "பேசுமோ" என்னும் சொல்லை, "பேசும் ஓம்" என்று கொள்ளவேண்டும்.

 

"போற்றியோ நமச்சிவாய புயங்கனே மயங்குகின்றேன்,

போற்றியோ நமச்சிவாய புகலிடம் பிறிது ஒன்று இல்லை,

போற்றியோ நமச்சிவாய புறம் எனைப் போக்கல் கண்டாய்,

போற்றியோ நமச்சிவாய சயசய போற்றி போற்றி"

 

என்னும் திருவாசகப் பாடலிலும், "போற்றியோ நமச்சிவாய" என்பதற்கு, "போற்றி ஓம் நமச்சிவாய" என்றே பொருள் கொள்ளல் வேண்டும் என்று பெரியோர் அறிவுறுத்தி இருத்தல் காண்க. திருக்கோயிலில் சொல்லப்படும் மந்திரங்களைக் கூர்ந்து கவனித்தால் இது விளங்கும். "ஓம் நமச்சிவாய" என்னும் சொல்லானது, "ஒ நமச்சிவாய" என்றுதான் உச்சரிக்கப்படும்.

 

     இவ்வாறு வருவதற்கு, இலக்கண ரீதியாகப் பொருள் உண்டு. அல்லாமல் பாடல்கள் உருவாக மாட்டா.

 

     இதனை எளிமையாகப் புரிந்து கொள்ள ஒரு வழி உண்டு. ஒருவர் ஆங்கலத்தில், "God is nowhere" என்று எழுதிவைத்தார் என்றால், அதனைப் படிக்க வருபவர் "God is now here" என்று படித்துக் கொள்ள இடம் உண்டு.

 

     கடவுள், எள்ளில் எண்ணெய் போல், பாலில் நெய் போல், பழத்தில் இன்சுவை போல், எங்கும் கலந்து நீக்கமற நிறைந்து இருக்கும் பரம்பொருள். எங்கும் நிறைந்து உள்ள பரம்பொருள் கல்லிலும் செம்பிலும் மட்டுமல்ல, ஒவ்வொரு உயிரிலும் நீக்கம் அற நிறைந்து இருக்கின்றான். எனவேதான், "இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான்" என்றார் மணிவாசகப் பெருமான். "நீங்காதான்" என்னும் சொல்லை ஆழ்ந்து கவனிக்கவேண்டும். அவனாகப் போகமாட்டான், அவனைப் போகச் செய்யவும் நம்மால் முடியாது. ஏனெனில், அவனுக்கு இருப்பிடம் ஒவ்வொரு உயிருமே தான். உயிர்கள் இல்லை என்றால், கடவுளுக்கு வேலை இல்லை. அவனை நினைப்போரும் இல்லை. அந்த நிலையில் அவன், இல்லாத பொருளே ஆவான்.

 

     இறைவன் ஆடுகின்ற இடம் எது? ஆடுதற்குக் கொள்ளும் உருவம் எது? என்பதற்கு விடையாக, "உண்மை விளக்கம்" என்னும் சித்தாந்த சாத்திரத்தில் பின்வருமாறு பாடல் வரும்...

 

எட்டும் இரண்டும் உருவான லிங்கத்தே

நட்டம் புதல்வா நவிலக்கேள்  சிட்டன்

சிவாயநம என்னும் திருஎழுத்து அஞ்சாலே

அவாயம் அற நின்று ஆடு வான்.        

 

இதன் பொருள் ---

 

     புதல்வா -- நன்மாணாக்கனே, எட்டும் இரண்டும் உருவான லிங்கத்தே -- "ய" என்னும் எழுத்தால் குறிக்கப்படுகிற உயிராகிய ஆதாரத்தில், நட்டம் -- சிவபிரான் செய்கின்ற திருக்கூத்தினை, நவிலக் கேள் -- யாம் சொல்லக் கேள். சிட்டன் -- மேலோனாகிய சிவபிரான், சிவாயநம என்னும் திருஎழுத்து அஞ்சால் -- சிவாயநம என்கிற திருவைந்தெழுத்துக்களையே திருமேனியாகக் கொண்டு, அவாயம் அற -- உயிர்களின் பிறவித் துன்பம் நீங்கும் படியாக, நின்று ஆடுவான் -- ஆடல் புரிவான் என அறிவாயாக.

 

         இறைவன் எங்கும் நிறைந்தவன், உருவம் இல்லாதவன். அவன் நடனம் செய்கிறான் என்றால் அதற்கு ஓர் இடம் வேண்டும் அல்லவா? அவனுக்கு உருவம் வேண்டும் அல்லவா? அவன் ஆடல் புரிவதற்குக் கொள்ளும் இடம் எது? உருவம் எது? என்ற வினாக்களுக்கு இச்செய்யுளில் விடை கூறுப்படுகின்றது. எட்டும் இரண்டும் உருவான இலிங்கத்தே என்றதனால் அவன் ஆடும் இடம் இன்னது என்பது தெளிவாக்கப்பட்டது. இலிங்கம் என்பதற்கு "அடையாளம்" அல்லது "குறி" என்பது நேர் பொருள். இங்கு அச் சொல் ஆதாரம் அல்லது இடம் என்ற பொருளில் வந்தது. எட்டும் இரண்டும் உருவான இடமே அவன் ஆடல் புரியும் இடமாகும்.  

 

     எட்டும் இரண்டும் கூடியது பத்து. பத்து என்னும் எண்ணைக் குறிக்கும் எழுத்து "ய" என்பது. திருவைந்தெழுத்தில் "ய" என்னும் எழுத்து உயிரைக் குறிக்கும். ஆகவே, எட்டும் இரண்டும் உருவான இலிங்கத்தே என்பது, பத்தின் அறிகுறியான "ய" என்னும் எழுத்தால் குறிக்கப்படும் ஆன்மாவாகிய இடத்தில் எனப் பொருள்படும். உடம்பு எங்கும் உயிர் இருப்பினும் இரண்டு இடங்களை உயிர் சிறப்பாகப் பற்றி நிற்கும். அவை இதயம், புருவநடு என்பன. உயிர் சிறப்பாகப் பொருந்தி நிற்கும் இந்த இரண்டு இடங்களிலும் இறைவனது திருநடனம் நடைபெறுகிறது. உயிரின் அறிவு நிலைத்து நிற்கும் இதயத்திலும், விளக்கம் பெற்றுத் திகழும் புருவநடுவிலும் அவ்வறிவை இடமாகக் கொண்டு, உயிரை நிலைப்பித்தும் அறிவித்தும் இறைவன் நடம் புரிகின்றான்.

        

     இறைவன் ஆடும் இடம் ஆன்ம அறிவு என்று பார்த்தோம். இனி, ஆடுதற்குக் கொள்ளும் உருவம் என்றால், "சிவாயநம" என்னும்  திருவைந்தெழுத்தைத் திருமேனியாகக் கொண்டு இறைவன் நடனம் புரிகிறான் என்பது விளங்கும். ஆன்மாவின் அறிவு தொழிற்படுதற்கு இன்றியமையாத் துணையாய் இருப்பது நாதம் ஆகும். நாதத்தில் தோன்றுவன மந்திரங்கள். அம்மந்திரங்களை இறைவன் தனக்கு வடிவமாகக் கொள்வான். அம்மந்திரங்களுள் சிறந்தது திருவைந்தெழுத்தே யாகலின் அதனையே தனக்குத் திருமேனியாகக் கொண்டு சிவபிரான் ஆன்ம அறிவினிடத்து விளங்குகிறான்.

 

     "உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற மெய்யா!" என்பார் மணிவாசகப் பெருமான். ஓங்காரப் பொருளாக உள்ளத்தில் நின்றவன் இறைவன். எனவே, வெளியில் நாம் காணும் பொருள்களில் இறைவன் உள்ளான் என்றால், உள்ளத்திலும் உள்ளான் என்பது விளங்கும்.

 

"உள்ளத்தும் உள்ளன் புறத்து உள்ளன் என்பார்க்கு

உள்ளத்தும் உள்ளன் புறத்து உள்ளன் எம்இறை;

உள்ளத்தும் இல்லை புறத்து இல்லை என்பார்க்கு

உள்ளத்தும் இல்லை புறத்து இல்லை தானே"

 

என்று, நமது கருமூலம் அறுக்க வந்த திருமூல நாயனார் அருளிய திருமந்திரப் பாடலால் அற்புதமாக விளங்கும்.

 

     ஆக, உள்ளத்தில் குடிகொண்டு உள்ள நாதன் தான், நாம் வழிபடும் பொருளிலும் விளங்குகின்றான் என்ற உண்மையை உள்ளத்தில் நிறுத்தி வழிபட்டால், நட்ட கல்லிலும் ஒம் (ஓங்கார வடிவாகிய) நாதன் உள்ளிருந்து பேசுவான் என்பதே உண்மை.

 

     இதனைக் கடவுள் மறுப்பாகக் கொள்ளுவது பேதைமை.

 

     எல்லாப் பொருள்களிலும் இறைவன் நிறைந்து இருக்கின்றான் என்று சொல்லி, அவனை வழிபடுவதற்கு ஒரு குறியை அமைத்து, பாடி ஆடி வழிபடுகின்றோம். அல்லாமல், அவனது இருப்பு இதுதான் என நாம் தெளிவ்வாக அறிந்துகொள்ளும்படியாக, அவனைக் கண்டு அறிந்தவர்கள் சொல்ல நாம் கேட்டது இல்லை. "கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்". இதுதான் உண்மை என்பதை,

 

"பூதங்கள் தோறும் நின்றாய் எனின் அல்லால்,

போக்கு இலன் வரவு இலன் என, நினைப் புலவோர்

கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்,

கேட்டு அறியோம் உனைக் கண்டு அறிவாரை"

 

என்றார் மணிவாசகப் பெருமான் திருவாசகத்தில்.

 

     திருமால், திருப்பாற்கடலில் பாம்பு அணையில் அறிதுயில் கொண்டு இருக்கின்றார் என்பது பெரியோர் வாக்கு. திருப்பாற்கடல் எப்படி இருக்கும்? பாம்பு அணை எப்படி இருக்கும்? அறிதுயில் என்பது என்ன? இதை எல்லாம் அறிந்தவர் யாரும் இல்லை. அவரவர் கற்பனையில் எப்படி எப்படித் தோன்றியதோ அப்படி, வடிவமைத்துக் காட்டினர். ஒரு படத்தில் உள்ளது போல் மற்றொரு படத்தில் இல்லை. எது உண்மை. அறிவார் இல்லை.

 

     அந்தத் திருமாலை உருவ வடிவில், திருவேங்கடம் முதலான திவ்விய தேசங்களில் கண்டு மகிழலாம். அவன் எங்கே தான் இருக்கின்றான் என்னும் வினாவிற்கு விடையாக, நினைப்பவர் உள்ளத்தில் இருக்கின்றான் என்று ஆழ்வார் ஒரு செய்தியைப் பாடல் வடிவில் தந்தருளினார்.

 

"உளன் கண்டாய், நன்னெஞ்சே! உத்தமன் என்றும்

உளன் கண்டாய், உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்,

வெள்ளத்தில் உள்ளானும் வேங்கடத்து மேயானும்

உள்ளத்தில் உள்ளான் என்று ஓர்".

 

     யாரும் கண்டு அறியாத திருப்பாற்கடலிலே அருவ நிலையில் விளங்குபவனும், திருவேங்கடத்தில் உருவ நிலையில் விளங்குபவனும் ஆகிய திருமால், அவனை நினைப்பவர் உள்ளத்தில் விளங்குகின்றான் என்று தமது நெஞ்சுக்கு அறிவுறுத்துகின்றார்

 

     இதனை நிறுவுவதற்கு, இன்னொரு மேற்கோளையும் இங்குக் காட்டலாம்.

 

     நமது கருமூலம் அறுக்க வந்த திருமூல நாயனார் அருளியது திருமந்திரம் என்பது அறிந்ததே. அதில், சிவபெருமான் முப்புரங்களை எரித்த செய்தியை விளக்க வரும்போது, பின்வருமாறு பாடி உள்ளார்.

 

"அப்பு அணி செஞ்சடை ஆதி புராதனன்

முப்புரம் எய்தனன் என்பர்கள் மூடர்கள்"

 

     சிவபெருமான் திரிபர தகனம் செய்து அருளினான் என்று சொல்லுபவர்கள் மூடர்கள் என்கின்றார். அப்படியானால், திரிபுர தகனம் நிகழ்ந்தது என்பது மூடர்களின் கொள்கையா? என்னும் வினா எழும். இவ்வாறு எதிர்மறையாக, பாடலின் முற்பகுதியில் கூறிய நாயனார், பாடலின் பிற்பகுதியில் உடன்பாடாகப் பின்வருமாறு கூறுகின்றார்.

 

"முப்புரம் ஆவது மும்மல காரியம்,

அப்புரம் எய்தமை யார் அறிவாரே"

 

     முப்புரங்களைப் பெருமான் எரித்தார் என்பது, உயிர்களுக்கு உள்ள ஆணவம் ,மாயை, கன்மம் என்னும் மும்மலங்களின் வலியை அழித்து, உயிர்களைக் கட்டில் இருந்து விடுவித்தான் என்பதே பொருள்.

 

     கட்டு என்பது பெத்த நிலை எனப்படும் அஞ்ஞான நிலை. விடுதலை என்பது, முத்தி எனப்படும் அஞ்ஞானம் நீங்கிய நிலை.

 

     ஆகவே, அந்தப் புரங்களை எய்தமையின் உண்மைப் பொருளை "யார் அறிவாரே" என்னும் வினாவினை எழுப்பி, "மெய்ப்பொருளை உணர்ந்தோர் அறிவார்" என்னும் விடையைத் தந்து அருளினார்.

 

     இன்னொரு செய்தியும் உண்டு. சிவபெருமான் ஆலகால விடத்தை உண்டதானல், அவனது கண்டம் கறுத்தது. அதனால் நீலகண்டன் என்னும் பெயர் உண்டாயிற்று.

 

     திருமூலர் இந்தச் செய்தியையும் எதிர்மறையாகவும் உடன்பாடாகவும் வைத்துப் பின்வருமாறு பாடினார்.

 

"அண்டமொடு எண்திசை தாங்கும் அதோமுகம்

கண்டம் கறுத்த கருத்து அறிவார் இல்லை,

உண்டது நஞ்சு என்று உரைப்பர் உணர்வு இலோர்

வெண் தலை மாலை விரிசடை யோற்கே".

 

     பெருமான் நஞ்சை உண்டான் என்பவர் உணர்வு இல்லாதவர். அவனது கண்டம் கறுத்த கருத்து ஒன்று உள்ளது. அதை அறிவார் இல்லை என்கின்றார்.

 

     அருளாளர்கள் பாடல்களில் இவ்வாறு பற்பல அற்புத உண்மைகள் பொதிந்து உள்ளதை அறிந்து கொள்வது நலம். மேலெழுந்த வாரியா, சொற்களுக்குப் பொருளை மட்டுமே கற்பித்துக் கொண்டால், அறியாமைதான் மிஞ்சும்.


No comments:

Post a Comment

தொடர்ந்து வருவது அருளே - பொருள் அல்ல

தொடர்ந்து வருவது அருளே - பொருள் அல்ல. -----        உலகத்தில் வாழத் தெரியாதவர்கள் யார் ?  வாழத் தெரிந்தவர்கள் யார் ?  என்று கேட்டால் ,  பணத்த...