பெறுதற்கு அரியது எது?

 

பெறுதற்கு அரியது எது?

-----

 

அரியது கேட்கின், வரிவடி வேலோய்!

அரிது அரிது மானிடர் ஆதல் அரிது;

மானிடர் ஆயினும், கூன்குருடு செவிடு

பேடு நீங்கிப் பிறத்தல் அரிது;

பேடு நீங்கிப் பிறந்த காலையும்,

ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது;

ஞானமும் கல்வியும் நயந்த காலையும்

தானமும் தவமும் தான்செயல் அரிது;

தானமும் தவமும் தான்செய்வர் ஆயின்,

வானவர் நாடு வழி திறந்திடுமே.

 

ஔவைப் பிராட்டியார் அருளிய இப் பாடலின் பொருள் ---

 

     நீண்ட வேலை உடைய முருகப் பெருமானே! இந்த உலகத்தில் அரியது எது என்று வினவினால், அது மக்கள் பிறவி எடுப்பதே ஆகும். மக்கள் பிறவியை எடுத்தாலும், உடலில் கூனல், குருட்டுத் தன்மை, செவிட்டுத் தன்மை, பேடித் தன்மை ஆகியவை இல்லாமல் பிறப்பது அரிதானது ஆகும். கூன், குருடு, செவிடு, பேடு நீங்கிப் பிறந்தாலும், ஞானத்தையும், அதை அளிக்கும் கல்வியையும் விரும்புவது அரிது. ஞானத்தை விரும்பி, கல்வியைப் பயின்றாலும், (கற்ற நெறியில் நின்று, உண்மை ஞானத்தைப் பெற்று) ஈகை இயல்பும், நோன்புத் தன்மையும் மேற்கொண்டு இருத்தல் அரிது. இந்த இரண்டையும் மக்கள் மேற்கொள்வார்கள் என்றால், அவர்களை ஏற்றுக் கொள்ள விண்ணுலகமானது வழிவிடும்.

 

     எனவே, வானவர் நாடு வழி திறக்கும்படி வாழ்தலே மிகமிக அரிதானது ஆகும். அந்த அரிய செயலை மேற்கொள்வதற்கே, இந்த உயர்ந்த மனிதப் பிறவி வாய்த்தது. எனவே, இந்தப் பிறவியையும், இதனை அருளிச் செய்த இறைவனையும் மதித்தல் வேண்டும். எனவே, "வாய்த்தது நம் தமக்கு ஈது ஓர் பிறவி மதித்திடுமின்" என்றார் அப்பர் பெருமான். ஓர் பிறவி --- ஒப்பற்ற பிறவி.

 

     ஔவையார் அருளிய இந்தப் பாடல் மிகவும் எளிமையானதாகத் தோன்றும். ஆனால், ஆழ்ந்த சிந்தனைக்கு உரியது இது.

 

     அரிதான மானிடப் பிறவியை எடுத்ததில் நமது முயற்சி ஏதும் இல்லை. கூன், குருடு, செவிடு, பேடு என்னும் குறைகள் இல்லாமல் பிறந்துவிட்டோம்.  இதிலும் நமது முயற்சி ஏதும் இல்லை.

 

     இனிதான், நமது முயற்சி தேவைப் படுகின்றது. மனிதனாகப் பிறந்து விட்ட பிறகு, ஞானத்தையும், அதைக் கொடுக்கும் கல்வியையும் பெறுதல் அரிது என்று ஔவைப் பாட்டி சொல்லவே இல்லை. முயன்றால் பெறலாம். ஆனால், அந்த முயற்சிக்கு, உள்ளத்தில் விருப்பம் தோன்றவேண்டும். நாட்டம் இருக்கவேண்டும். "நயத்தல் அரிது" என்றார். நயத்தல் என்னும் சொல்லுக்கு, விரும்புதல் என்று மட்டுமே பொருள் உண்டு என்று எண்ணவேண்டாம். பாராட்டுதல், சிறப்பித்தல், பிரியப்படுதல், இன்பம் உறுதல், இணங்கிப் போதல், மேம்படுதல் என்றும் பொருள்கள் உண்டு. ஞானத்திலும், கல்வியிலும் விருப்பம் உண்டான பிறகு, அவை எங்கு இருந்தாலும் முதலில் மகிழ வேண்டும், நாம் விரும்பியது கிடைத்ததே என்று மகிழ்ந்து, அதை ஏற்றுக் கொள்ளும் போது, மனதில் இன்பம் உண்டாக வேண்டும். கல்வி கற்பதன் மூலம் வருவது. ஞானம் உள்ளிருந்து வருவது. உள்ளே செல்லும் கல்வி,  இயல்பாகவே உள்ளே இருக்கும் அஞ்ஞானத்தை நீக்கி, உள்ளத்தில் ஞானத்தை நிரப்ப வேண்டும். ஞானத்தைப் பெற்றோம் என்றால், பொருளில் பற்று பிறக்காது. தமக்கு உள்ள பொருளை, இல்லாதவர்க்கும் கொடுத்து உதவவேண்டும். இல்லார்க்குக் கொடுப்பதே தானம் என்னும் ஈகையாகும். தவம் என்பது, உயிர்க்கு உறுதி பயக்கும் அகப் பண்புகளை வளர்த்துக் கொள்வது. கல்வி பயிலுகின்ற எல்லோருக்கும் ஞானம் உண்டாவதில்லை. தானம் செய்யவேண்டும் என்னும் எண்ணமும் வருவது இல்லை. கற்ற கல்வியைக் கொண்டு, பொருளைத் தேடுவதில் தான் நாட்டம் அதிகாமாகச் செல்லும். அந்த நாட்டத்தை மாற்றுவதற்குத் தான் தவம் வேண்டப்படுகிறது.

 

     தானத்தைக் கூடச் செய்து விடலாம். தவத்தைச் செய்வது அவ்வளவு எளிதானதா? நம்மால் தவத்தைச் செய்ய முடியுமா? என்று எண்ணத் தோன்றும். உண்மையில் தவம் என்பது மிக எளிதானது. அதற்கு உடம்பைப் பெரிதாக வருத்திக் கொள்ள வேண்டியது இல்லை. தனக்கு வருகின்ற துன்பங்களைப் பொறுத்துக் கொள்ளுதல், பிற உயிர்க்குத் துன்பம் செய்யாது இருத்தல் ஆகிய இந்த இரண்டும் தான் தவத்துக்கு அடையாளம் என்கின்றார் திருவள்ளுவ நாயனார். "உற்ற நோய் நோன்றல், உயிர்க்கு உறுகண் செய்யாமை, அற்றே தவத்திற்கு உரு" என்னும் திருக்குறளைக் காண்க.

 

     தவத்தின் மூலமாகவே இறையருளைப் பெறலாம். அதுவும் எளிதான தவமாக இருக்கவேண்டும். எளிதான தவம் என்ன என்பதைப் பின்வரும் பாடலில் காணலாம்.

 

தடுங்கோள் மனத்தை, விடுங்கோள் வெகுளியை,

     தானம் என்றும்

இடுங்கோள், இருந்தபடி இருங்கோள்,

     எழுபாரும் உய்யக்

கொடும் கோபச் சூர்உடன் குன்றம் திறக்கத்

     தொளைக்க வைவேல்

விடும் கோன் அருள்வந்து தானே

     உமக்கு வெளிப்படுமே.

 

என்று அருணகிரிநாதப் பெருமான் கந்தர் அலங்காரத்தில் அருளிச் செய்த பாடலை ஆழ்ந்து சிந்தித்தால் உண்மை விளங்கும்.

 

இப் பாடலின் பொருள் ---

 

     அன்பர்களே! உங்கள் மனத்தைப் பொறிபுலன்களின் வழியே செல்ல விடாமல் தடைசெய்யுங்கள். சினத்தை அறவே விட்டு விடுங்கள். எப்போதும் ஏழைகளுக்குத் தானம் செய்துகொண்டு இருங்கள். இந்த வண்ணமை உள்ளத்தில் அசைவு இல்லாமல் இருங்கள். (அப்படி இருந்தீர்களானால்) ஏழு உலகங்களும் பிழைக்குமாறு, கொடிய கோபத்துடன் வந்த சூரபதுமனோடு, கிரவுஞ்ச மலையும் பிளந்து அழியும்படியாக, கூர்மை பொருந்திய வேலாயுதத்தை விடுத்து அருளிய முருகப் பெருமானது, திருவருட் கருணையானது, தானாகவே வந்து உமக்கு வெளிப்பட்டு, உம்மை ஆட்கொள்ளும்.

 

     தானத்தையும், தவத்தையும் செய்ய வேண்டும் என்றால், பாடுபட்டுத் தேடிய பணத்தை மனம் உவந்து பிறருக்குக் கொடுக்கவேண்டும் என்னும் எண்ணம் உண்டாகவேண்டும். தானம் செய்யும்போது "நான்" செய்கின்றேன், "எனது" பொருளைக் கொண்டு செய்கின்றேன் என்னும் அகங்காரம் என்னும் அகப்பற்றும், மமகாரம் என்னும் புறப்பற்றும் அகன்று விடுகின்றது. தவத்தைப் புரியும்போது, உடல் பற்று நீங்குகின்றது. நிலையில்லாத உடம்பைக் கொண்டு நிலையான பேற்றைத் தேடிக் கொள்ளவேண்டும் என்னும் கருத்து உண்டாகின்றது.

 

     இதை உணர்ந்த பிறகுதான், "காதற்ற ஊசியும் வாராது காண் நும் கடை வழிக்கே" என்ற வாசகத்தின் பொருளைத் தெளிந்து, ஓட்டுடன் பற்று இன்றி உலகைத் துறந்தார் பட்டினத்தார்.

 

     எனவே, மனிதப் பிறவியை எடுப்பதோ, கூன் குருடு, செவிடு, பேடு இல்லாமல் இருப்பதோ அரிதான செயல் அல்ல. வானவர் நாடு வழிதிறந்து வரவேற்குமாறு வாழ்வதே அரியதிலும் அரியது ஆகும்.

 

     ஔவைப் பிராட்டி அருளிய இந்தப் பாடல் கருத்தை, "அறப்பளீசுர சதகம்" என்னும் நூல் வேறுவிதமாக அறிவுறுத்துவதைக் காணலாம்...

 

கடல்உலகில் வாழும்உயிர் எழு பிறப்பினுள், மிக்க

     காட்சிபெறு நர சன்மமாய்க்

  கருதப் பிறத்தல்அரிது; அதினும்உயர் சாதியில்

     கற்புவழி வருதல் அரிது;

 

வடிவமுடன் அவயவம் குறையாது பிழையாது

     வருதல் அது தனினும் அரிது;

  வந்தாலும் இது புண்(ணி)யம் இதுபாவம் என்றுஎண்ணி

     மாசில்வழி நிற்றல் அரிது;

 

நெடிய தனவான் ஆதல் அரிது; அதின் இரக்கம்உ(ள்)ள

     நெஞ்சினோன் ஆதல் அரிது;

  நேசமுடன் உன்பதத்து அன்பனாய் வருதல் இந்

     நீள்நிலத்து அதினும் அரிதாம்;

 

அடியவர்க்கு அமுதமே! மோழை பூபதிபெற்ற

     அதிபன் எமது அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!

இதன் பொருள்....

     அடியவர்க்கு அமுதமே --- அடியவர்களின் துன்பத்தை நீக்கி இனபத்தை அளிப்பவனே! மோழை பூபதி பெற்ற அதிபன் எமது அருமை மதவேள் --- மோழை எனப்படும் தலைவன் ஈன்ற தலைவன் எம் அரிய மதவேள், அனுதினமும் மனதில் நினைதரு --- நாள்தோறும் உளமார நினைந்து வழிபடுகின்ற,  சதுரகிரி வளர் அறப்பளீசுர தேவனே --- சதுரகிரி என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி உள்ள அறப்பளீசுர தேவனே! 

     கடல் உலகில் வாழும் எழுபிறப்பு உயிர்களுள், மிக்க காட்சி பெறு நர சன்மமாய்க் கருதப் பிறத்தல் அரிது --- கடலால் சூழப்பட்ட இந்த நிலவுலகத்தில் வாழ்கின்ற எழுவகையாகத் தோன்றிய உயிர்கள் உள்ளும்மிகுந்த அறிவையுடைய மக்கட் பிறப்பு என்று எண்ணுமாறு பிறப்பது அருமை உடையது. 

     அதினும் உயர் சாதியில் கற்புவழி வருதல் அரிது --- அவ்வாறு பிறப்பதிலும் உயர்ந்த குணங்களை உடைய இனத்தில், கற்பு ஒழுக்கம் உடைய மரபிலே பிறத்தல் அருமை உடையது.

     அது த(ன்)னினும் வடிவமுடன் அவயவம் குறையாது பிழையாது வருதல் அரிது --- அவ்வாறு பிறந்தாலும், நல்ல அழகுடன், உறுப்புக் குறைவு ஏதும் அல்லாமலும், உறுப்புக்களில் பிழை ஏதும் இல்லாமலும் பிறப்பது அருமை உடையது.

     வந்தாலும், இது புண்(ணி)யம், இது பாவம் என்று எண்ணி மாசு இல்வழி நிற்றல் அரிது --- அவ்வாறு பிறந்து வந்தாலும், இது புண்ணியம், இது பாவம் என்று அறிந்து, உயிர்க்குக் குற்றம் இல்லாத நல்ல நெறியில் நிற்பது அதை விடவும் அருமை உடையது.

     நெடிய தனவான் ஆதல் அரிது --- இப்படி எல்லாம் அமைந்து விட்டாலும், பெரிய செல்வந்தன் ஆவது அருமை உடையது.

     அதின் இரக்கம் உ(ள்)ள நெஞ்சினோன் ஆதல் அரிது --- மிகப் பெரும் செல்வத்தை உடையவன் ஆனாலும், (செல்வத்துப் பயனே ஈதல் என்னும் ஆத்த வாக்கியத்தை அனுசரித்து) உயிர்களிடத்தில் இரக்கம் கொண்ட மனத்தினை உடையவன் ஆவது அருமை,  

     அதினும் உன் பதத்து நேசமுடன் அன்பனாய் வருதல் இந் நீள் நிலத்து அரிது ஆம் ---  இப்படி எல்லாம் அமைந்து விட்டாலும், ( இவை எல்லாம் தன் முயற்சியால் வந்தது அல்ல, இறைவன் திருவருள் துணை நிற்க வந்தது என உணர்ந்து) உனது திருவடிகளிலே அன்பு பூண்டு ஒழுகும் அடியவனாக வருதல் என்பது, இந்த நெடிய உலகத்தில் அருமையிலும் அருமையானது ஆகும்.

         மக்கள் பிறப்பாக இருப்பது சிறப்புத் தான்.  அதிலும், அறிவுடைய மக்கட் பிறப்பாகப் பிறந்து  செல்வம், ஒழுக்கம், அழகு, கடவுள் வழிபாடு ஆகிய இவைகள் உடையவராக இருப்பது பெரும் சிறப்புக்கு உரியது. இந்தப் பெரும் சிறப்பைப் பெற்ற ஒருவன் "வானோர்க்கு உயர்ந்த உலகம் புகுவான்" என்பதில் ஐயம் ஏதும் இல்லை.

"யான் எனது என்னும் செருக்கு அறுப்பான், வானோர்க்கு

உயர்ந்த உலகம் புகும்".

 

     தான் அல்லாத உடம்பை "நான்" என்றும், தன்னோடு சம்பந்தம் அல்லாத பொருள்களை "எனது" என்றும் நினைத்து, அவற்றினிடத்துப் பற்றுச் செய்வதற்குக் காரணமாகின்ற அறிவு மயக்கத்தைக் கெடுப்பவன், தேவர்களாலும் அடைதற்கு அரிதாய முத்தி உலகத்தை அடைவான்" என்கின்றார் நாயனார்.

 

     உடம்பின் மீது உண்டாகும் "நான்" என்னும் அகப்பற்று எனப்படும் அகங்காரம், அதனால் அனுபவிக்கப்படுகின்ற பொருள்கள் மீது உண்டாகும் எனது என்னும் புறப்பற்று என்னும் மமகாரம் உயிருக்குத் துன்பம் தருதலையும், அவற்றினது நிலையாமையையும் உணர்ந்து, பற்றுச் செய்தலை விட்டவர் வீட்டினை அடைவர்.

 

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...