நமது உடம்பில் உள்ள தச வாயுக்கள்

 

நமது உடம்பில் உள்ள பத்து வாயுக்கள்

----

 

     "காயமே இது பொய்யடா - வெறும் காற்றடைத்த பையடா - மாயானாராம் குயவன் செய்த மண்ணு பாண்டம் ஓடடா" என்னும் பாடல் எல்லோருக்கும் தெரியும்.

 

     "பேச அரிய காற்றில் பொதிந்த நிலையற்ற பாண்டம்" என்று பட்டினத்தார் இந்த உடலின் தன்மை குறித்துப் பேசுகின்றார். எனவேதான், இந்த உடம்பை ஒரு "துருத்தி" என்கின்றனர்.

 

     காற்று சுற்றி வரும் வரைதான் உயிர் இருக்கும். மனித உடம்பில் ஒன்பது துவராங்கள் இருப்பது போல, தச வாயுக்கள் உள்ளன. மனித உடலிற்குள் இந்த பத்து வாயுக்களும் சுற்றிச் சுற்றி வந்து இந்த உடம்பை இயக்குகின்றன. இவற்றில் உண்டாகும், ஏற்றத் தாழ்வுகள் உடலில் பல நோய்களை உண்டாக்குகின்றன. உடம்பில் சின்ன சின்ன வலிகள் பிடிப்புகள் ஏற்பட்டால் கூட வாயு பிடிப்பு என்று சொல்வது அதனால்தான்.

 

     எங்கு சென்றாலும், "துப்பார்க்குத் துப்பு ஆய துப்பு ஆக்கி, துப்பார்க்கு துப்பு" ஆன தண்ணீர் கிடைத்துக் கொண்டு இருந்தது. தண்ணீர்ப் பந்தல் என்பது வாலாயமாக எங்கும் எல்லாக் காலத்தும் காணக் கூடியதாக இருந்தது. தண்ணீர்ப் பந்தல் வைப்பதை ஒரு சடங்கு என்று மாற்றி விட்டோம். தண்ணீரை விலைக்கு வாங்கும் நிலைக்கு வந்துவிட்டோம்.

 

     மரங்களை விருப்பம் போல் வெட்டித் தீர்த்துப் பணம் பார்த்துவிட்டோம். காற்றை மாசு படுத்துவதற்கு உண்டான வழிகளை ஆராய்ந்து செய்துகொண்டு இருக்கின்றோம். அதன் விளைவு, இன்று தூய காற்று என்பது இல்லாமல் போய்விட்டது. போதாக் குறைக்கு, உணவு முறையையும் மாற்றி, வாழ்க்கை முறையும் மாறிப் போனதால், நோய் எதிர்ப்பு ஆற்றல் உடலில் இல்லாமல் போய்விட்டது. இப்போது, மிக அவசியம் என்று கருதுகின்ற காற்றை விலைக்கு வாங்க அலையும் நிலை உண்டாகிவிட்டது. பிராணன் என்பது இருந்தால்தான் உயிர் வாழ்க்கை நிலைக்கும். நமது உடலில் மற்ற வாயுக்கள் ஒழுங்காகச் செயல்படுவதற்கு, பிராணவாயு இன்றியமையாதது.

 

     நமது உடலில் உள்ள இந்த பத்து விதமான வாயுக்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.

 

1.    பிராணன் --- மூலாதரத்தில் ஆரம்பித்து மூக்கு வழியாக மூச்சு விடுவது. இது மேல் நோக்கி இயங்குவது.  குரல்வளையில் உள்ளது. பிராணவாயு என்பது இருதயத்தை வீங்கி அமுங்கச் செய்கிறது. உயிரைத் தரிக்க வைப்பதால் அதற்குப் பிராணவாயு எனப் பெயர். உயிர்ப்பு என்று தமிழில் சொல்லப்படும்.  

 

     இதை உயிர்க்காற்று என்பார்கள். இந்த உயிர்க்காற்று, இதய மண்டலத்தில் பரவி, இருந்து கொண்டு, சுவாசத்தைக் கட்டுப்படுத்தி, சுமுகமாக நடத்திச் செல்ல உதவுகிறது. மிகவும் முக்கியமான காற்று இது.

 

     உடம்பின் இயக்கத்திற்கு இன்றியமையாத இந்த, "உயிர்க்காற்று" என்னும் "பிராணவாயு" நமது உடலுக்கு, பிரபஞ்சத்தில் இருந்து, நாம் சுவாசிப்பதன் (உயிர்ப்பதன்) மூலமாக நமது உடலுக்குக் கிடைக்கின்றது. இதன் அருமையை அறியாமல், காற்றை எவ்வளவுக்கு மாசு படுத்த முடியுமோ, அவ்வளவுக்கு மாசு படுத்திக் கொண்டு இருக்கின்றோம். எல்லாம் பணம் படுத்தும் பாடு. பணத்தை நிறையப் படைக்கவேண்டும் என்று எண்ணி, தகாத செயல்களில் ஈடுபட்டு, பாவத்தை மூட்டை மூட்டையாகச் சேர்த்துக் கொள்ள முயல்பவர்கள், தமது மூச்சும் பாழ்பட்டுத் தானே போகின்றது என்பதை எண்ணிப் பார்க்க, பாவம், அவகாசம் இருப்பது இல்லை.

 

2.    அபானன் --- சுவாதிட்டானத்தில் இருந்து வெளிப்பட்டு மலத்தை கீழ் நோக்கி தள்ளும், ஆசன வாயைச் சுருக்கும். அன்னத்தை சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்க்கும். குறியில் காம வேகத்தை உண்டு பண்ணும். அபானன் என்னும் வாயு கீழே தள்ளுகிற சக்தி உடையது. மோட்டார் வண்டிக்குள் கரி போடுகிறார்கள். போடுகின்ற வாய் மேல் பக்கம் இருக்கும். கரி எரிந்து சாம்பலும், தூளுமாக விழுகின்ற இடம் கீழே இருக்கும். கரி போட்ட வழியாகவே சாம்பலைத் தள்ளமாட்டார்கள். போடுகின்ற இடம் வேறு. தள்ளுகின்ற இடம் வேறு. அப்படியே உடம்பில் உணவு போடுகின்ற இடம் வேறாகவும், கழிவுப் பொருளை வெளியேற்றுகின்ற இடம் வேறாகவும் இருக்கிறது. கழி பொருளை வெளியேற்றுவதற்கு மூலகாரணமாக இருக்கிற வாயு அபானன்.

 

     இதை மலக்காற்று என்பார்கள். இந்த காற்று கீழ்மண்டலத்திலிருந்து இயங்கி, சிறுநீர் மற்றும் மலம் போன்ற கழிவுப் பொருட்களை வெளியேற்றும் வேலைகளைக் கட்டுப்படுத்தி காரியமாற்ற உதவுகிறது.

 

3.    உதானன் --- உணவின் சாரத்தை கொண்டு செல்லும். உடலை எழுந்து நிற்க உதவும். மேல் நோக்கி இயங்கும் வாயு. நாம் பேசுகின்றோம்; பேசுகின்ற காற்றும், மூச்சு விடுகிற காற்றும் ஒன்று அல்ல. பேசுகிற காற்று உந்தியிலிருந்து வருகிறது. அந்த வாயுவுக்கு உதானன் என்று பெயர்.

 

     இதை ஒலிக்காற்று என்பார்கள். இது தொண்டைக் குழிப்பகுதியில் குடியிருந்து கொண்டு, சுவாசத்திற்காக உள்ளிழுக்கும் காற்றையும், வாய் வழியாக வருகின்ற உணவுகளையும் கட்டுப்படுத்தி,  இரண்டும் கலந்து விடாமல் காத்திடும் வண்ணம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தொண்டையில் ஏற்படுகின்ற ஒலியை உண்டாக்கும் காரியத்தையும் செய்கிறது.

 

4.    வியானன் --- தோளிலிருந்து எல்லா நரம்பிலும் அசையும் அசையாபொருளில், உறுப்புக்களை நீட்ட மடக்கவும், உணர்ச்சிகளை அறியவும் உணவின் சாரத்தை கொடுத்து உடலைக் காக்கும். நரம்பிலே இரத்தம் ஒடிக் கொண்டிருக்கிறது. இருதயத்தில் இருந்து புறப்பட்ட இரத்தம் நரம்புகளின் வழியே ஒடி, திரும்பவும் இருதயத்திற்கு வந்து சேரும் வண்ணம் இயக்கும் வாயுவுக்கு வியானன் என்று பெயர்.

 

     இதைத் தொழிற்காற்று என்பார்கள். இந்த காற்று சரீரம் முழுவதும் வியாபித்து இருப்பதால் வியானன் என்றும், இது காற்றையும் உணவையும் உடல் முழுவதும் கொண்டு செல்கின்ற ஒப்பற்ற தொழிலை செய்கின்ற காரணத்தால் தொழில் காற்று என்றும் பெயர் பெற்றிருக்கிறது. சரீரம் முழுவதும் வியாபித்து நிற்பது வியானன்

 

5.    சமானன் --- நாபியிலிருந்து கால் வரை பரவும் வாயுக்களை அதிகப்படாமல் சரி செய்யும். உண்ட உணவு செரித்தவுடன் எல்லா இடங்களுக்கும் அனுப்புகிறது. சாப்பிடுகிறோம்; நான்கு மணிநேரத்தில் ஜீரணம் ஆகி விடுகிறது. அப்படிச் செரிப்பதற்குத் துணையாக இருப்பது இந்த உஷ்ணவாயு. அதற்குச் சமானன் என்று பெயர்.

 

     இதை நிரவுக் காற்று என்பார்கள். இதை காற்று நிரப்புதல் அல்லது சரிப்படுத்துதல் என்கிற வேலையைச் செய்வதால் நிரவுக் காற்று என்றும், உடல் முழுவதும் சமப்படுத்துகின்ற தன்மையில் இயங்குவதால் சமானன் என்றும் அழைக்கப்படுகிறது. இதன் வேலையாவது, ஜீரணிக்கின்ற வேலையை துரிதப்படுத்தி, உணவை ஜீரணிக்கின்ற பணியில் உதவுகின்ற பணியில் ஈடுபட்டிருக்கிறது.

 

     பிராணன், அபானன், வியானன், உதானன், சமானன், என்ற இந்த ஐந்து வாயுக்களும் முக்கியமானவை. இவற்றைப் பஞ்சப் பிராணன் என்றும் சொல்வார்கள். இவற்றை "அறிவுக்காற்று" என்றும் சொல்வார்கள். இந்த ஐந்து வாயுக்கள் அல்லாமல், வேறு ஐந்து வாயுக்களும் மனித உடம்பில் இருக்கின்றன.

 

6.    நாகன் --- அறிவை வளர்க்கும், கண்களை திறப்பதற்கும், மயிர் சிலிர்க்க, இமை மூட வேலை செய்யும். வாந்தி எடுத்தல் துப்புதல் ஆகிய வேலை செய்யும். கை காலை நீட்டுகிறோம்; மடக்குகிறோம். அப்படிச் செய்ய உதவும் வாயுவுக்கு நாகன் என்று பெயர்.

 

     இதை ஏப்பக் காற்று என்பார்கள். இந்த காற்றானது வயிற்றிலே ஏற்படுகின்ற வாயுத் தொல்லை பிரச்சினைகளைத் தீர்க்க, வாய் வழியாக வாயுவை வெளியேற்றுகின்ற (Belching) பணியை செய்கிறது. வயிறு முட்ட சாப்பிட்டுவிட்ட பிறகு, கீழ்ப்பகுதியில் காற்றை வெளியேற்ற முடியாதபோது வாய் வழியாக எப்பம் விட்டு, சுக நிலையை எய்திட உதவுகிறது. முடக்கலும் நீட்டலும் செய்ய உதவுவது நாகன் என்னும் காற்று.

 

7.    கூர்மன் --- மனதில் கிளம்பி, கண் இமை, கொட்டாவி, வாய் மூட, கண்திறந்து மூட, கண்ணீர் வர, வேலை செய்யும். கண்ணில் பொருந்தியுள்ள நரம்புகளின் செயற்பாட்டிற்கும், அச் செயற்பாட்டினால் அமையும் கண்ணொளிக்கும் "கூர்மன்" என்னும் வாயுவே காரணம். கண்ணை மூடி மூடித் திறக்கிறோம். ஆமை தன் உறுப்புகளை வெளியே நீட்டி உள்ளே இழுத்துக் கொள்வதுபோல இந்தக் காரியம் நடைபெறுவதனால், இந்தச் செய்கைக்குத் துணையாக உள்ள வாயுவுக்குக் "கூர்மன்" என்று பெயர். கூர்மம் என்றால் ஆமை என்று பொருள்.

 

     இதை இமைக் காற்று என்று அழைப்பாார்கள். விழிகளுக்குள் துாசி மற்றும் வெளிப்புறப் பொருட்கள் நுழைந்து விடாமலும்,  அதிகமான ஒளி கண்ணுக்குள் புகுந்துவிடாமலும் இமைகளை மூடச் செய்து, கண்களைக் காக்கின்ற கடுமையான காரியத்தை செய்கிறது. நினைக்கும் முன்பே கண்களை மூடவைத்துக் காக்கின்ற கடமையை கூர்மன் செய்துவிடுகிறது.

 

8.    கிருகரன் --- நாக்கில் கசிவு, மூக்கில் கசிவு உண்டுபண்ணும். பசியை வரவைக்கும். செயல் புரிய, தும்மல் இருமலை உண்டு பண்ண வைக்கும். கோபம் வருகிறது. ஓடினால் இரைக்கிறது. தும்முகிறோம். இந்தச் செய்கைகளுக்கு மூலமாக இருக்கும் வாயுவுக்குக் கிருகரன் என்று பெயர்.

 

     இதை தும்மல் காற்று என்பார். கிருகரன் என்னும் இந்தக் காற்றானது, சுவாசப் பாதைக்குள், அதாவது மூச்சுக் குழலுக்குள் ஏதாவது வெளிப்பொருள் புகுந்துவிட்டால், அல்லது தொண்டைப் பகுதிக்கு வந்து விட்டால், அதனை உடனடியாக வெளியேற்ற ஒரு தும்மலையோ அல்லது இருமலையோ ஏற்படுத்திவிடுகிற வேலையை வெகுவேகமாக செய்து காப்பாற்றி விடுகிறது

 

9.    தேவதத்தன் --- சோம்பல், தூங்கி எழுகையில் அயர்ச்சி, தாக்குதல், கண்களை அசைத்தல், சண்டையிடுதல், தர்க்கம் பேசல். வியர்த்தல். இதற்குக் காரணமாக இருக்கும் வாயுவுக்குத் தேவதத்தன் என்று பெயர்.

 

     கொட்டாவிக் காற்று என்று இந்தக் காற்றைக் கூறுவார்கள். உடல் களைத்துப் போகிற போது, உயிர்க்காற்று அதிகம் தேவைப்படும் நேரத்தில், கொட்டாவியை உண்டாக்கிக், அதிக உயிர்க்காற்றை உடம்பு பெறச் செய்ய உதவுகிறது. கொட்டாவி விடுகிறபோது வாயை அதிகமாகப் பிளந்து நிறைய காற்றை சுவாசிக்கிறோம். அப்போதுதான் உடல், நிறைய பிராண வாயுவைப் பெற்று, களைப்பிலிருந்து உடனே விடுதலை பெற்றுவிட முடிகிறது. ஒட்டமும் களைப்பும் வியர்த்தலும் விளைவிப்பது தேவதத்தன்

 

10.   தனஞ்செயன் --- மூக்கிலிருந்து உடல் முழுதும் வீக்கம் பண்ணும், காதில் கடல் அலை போல் இரைத்தல் இதனால் உண்டாகின்றது.  இறந்த மூன்றாம் நாள் தலை வழியாக வெழியே செல்லும். வாயுக்களில் பிராணனே சிறந்தது. அல்லாமல் தனஞ்சயன் என்ற வயுவும் சிறந்ததே. எவ்வாறு என்றால், பிராணனுக்கும் இயக்கத்தைத் தருவது தனஞ்சயன். ஆதலின் அது சிறந்தது. மூர்ச்சையில் பிராணன் இயங்காது நின்றுவிடுகின்ற போது, மீள அதனை இயங்கச் செய்வது இத் தனஞ்சயன் என்னும் வாயு ஆகும். இது பற்றியே,  இது இறப்புக் காலத்தில் பிராணனை உள்ளிட்ட ஒன்பது வாயுக்களும் நீங்கிய பின்பு, தலைக்குள் இருந்து தலை ஓட்டை உடைத்துக்கொண்டு செல்லும் என்கின்றனர்.

 

     சிறப்புடைய இந்த உடம்பானது, "தனஞ்சயன்" என்ற ஒரு காற்று இல்லையானால் அழிந்துவிடும். பலவகை நோய்களும், உறுப்புக் குறைகளும் தனஞ்சயன் என்னும் வாயுவானது,  அதன் அளவில் செம்மையாக இல்லாமையால் உண்டாகின்றன. கண்களில் உண்டாகும் நோய்களுக்கு தனஞ்சயனது செம்மையின்மை காரணமாகும்.

 

     உயிர் போனபிறகும், பிணத்தைக் கொளுத்தும் போதும் சில செயல்கள் நிகழ்கின்றன. கை, கால்கள் விறைக்கும்; தலைவெடிக்கும். கடைசியாகத் தலைவெடித்து வெளியேறும் வாயுக்குத் தனஞ்சயன் என்று பெயர்.

 

     இதை வீங்கல் காற்று என்று கூறுவார்கள். மேலே கூறிய ஒன்பது காற்றுகளும் உடலுடன் உயிர் ஒட்டி உறவாடி உலவுகிற வரை உடம்பிற்குள்ளே இருந்து உறுதொழில் புரிந்து, உற்ற துணையாக செயல்பட்டு வரும். உடலை விட்டு பிராணன் என்கிற காற்று பிரிந்து விட்டால், உடல் பிணம் ஆகிவிடுகிறது. பிணம் ஆன பிறகும் கூட, உடலுக்கு உள்ளே இந்த தனஞ்செயன் காற்று தங்கியிருக்கும். இந்தக் காற்று உடலில் தங்கியிருக்கும் வரை, உடலானது வீங்காது. நாற்றம் அடிக்காது. உடலின் தன்மையும் மாறாமல், எடை கூடாமல் இருக்கும். எல்லாம் நமது நன்மை கருதியே. பிணமானது உடனடியாக நாறுமானால் என்ன ஆகும்? இவ்வாறு காலம் தாழ்த்தி உள்ளே இருக்கிற தனஞ்செயன் காற்று தேகத்தைவிட்டு வெளியேறுகிற போது, பிணத்தையும் துள்ளத் துடிக்கச் செய்து விட்டுத்தான் வெளியேறும். இந்த நேரத்தில், பிணத்தின் அருகில் இருப்போர், அதன் துடிப்பைப் பார்த்துவிட்டு, உயிர் வந்து விட்டது என்று மகிழ்ச்சிக் குரல் எழுப்புவதும் சகஜமாக நடப்பது தான்.

 

     மேலே சொல்லப்பட்ட பத்து வாயுக்களும் நமடது உடலில் சரிவர இயங்கினால்தான் நம் உடல் ஆரோக்கியமாகச் செயல்படும். உடலின் கழிவுகள் ஒழுங்காக வெளியேறவில்லை என்றால் இந்த வாயுக்கள் தத்தம் நிலையில் மாறுபடும். இதனால் நம் உடலின் ஆற்றல் குறைந்து, நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து நோய் வாய்ப்படும்.

 

     மூச்சுக் காற்று இல்லாமல் போனால் இவ்வுடல் இயங்காது. அதற்கு சுவாசித்தல் தேவை. சுவாசித்தால் தான், நுரையீரலும் இருதயமும் பணிபுரியும். இருதயம் பணிபுரிந்தால் தான் இரத்த ஓட்டம் நடைபெறும். இரத்த ஓட்டம் சீராக நடந்தால் தான் உடலை இயக்க முடியும்.

 

     தசவாயுக்கள் நம் உடலில் பல்வேறு செயல்களை தன்னிச்சையாக செய்கின்றன. ஆனாலும், உயிர்க் காற்று அல்லது உயிர்ப்பு என்று சொல்லப்படும் பிராண வாயு இல்லாமல், ஏனைய ஒன்பது வாயுக்களும் செயல்பட முடியாது.

 

     முறையான உணவுப் பழக்கத்தினாலும், ஒழுக்க நெறிகளாலும், இந்த உடலைப் பாதுக்காத்திடல் வேண்டும். அதற்கு மூச்சுக் காற்று முறையாக இயங்குதல் வேண்டும். நமக்கு உள்ள படபடப்பு, பதைபதைப்பு ஆகியவற்றாலும், தாறுமாறான உணவுப் பழக்கத்தினாலும், நெறி பிறழ்ந்த வாழ்க்கை முறையாலும், சுவாசம் தாறுமாறாகிறது. போதாக் குறைக்கு, தாறுமாறாகச் சுவாசிக்கின்ற காற்றும் மாசு பட்டுப் போய் உள்ளது.

 

 

 

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...