செல்வம் வந்தால் செருக்கு கூடாது

 

 

செல்வம் வந்தால் செருக்கு கூடாது

-----

 

     செல்வம், பொருள், பணம் என்னும் சொற்கள் மனிதனுடைய காதுகளில் விழுந்தாலே இன்பம் விளைகின்றது. "கேடு இல் விழுச் செல்வம் கல்வி" என்று நாயனார் அறிவுறுத்தியபடி, கல்வியும் மேலான செல்வம் என்று எண்ணுவது இல்லை. "செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம்" என்று நாயனார் அறிவுறுத்தியபடி, கேள்வியைச் செவிச்செல்வம் என்று எண்ணுவதில்லை.

 

     உண்மையான செல்வம் இறையருளே என்பதை உணர்ந்தவர்கள் அருளாளர்கள். "அருட்செல்வம் செல்வத்துள் செல்வம், பொருட்செல்வம் பூரியார் கண்ணும் உள" என்று திருவள்ளுவ நாயனார் அருளிய பாங்கில், இறைவனையே "செல்வமே" என்று கொண்டாடியவர்கள். "திருவே! என் செல்வமே! என்றார் அப்பர் பெருமான். "செல்வமே! சிவபெருமானே!" என்றார் மணிவாசகர்.

 

     செல்வம், கல்வி முதலிய நலங்கள் ஒருவனுக்கு வாய்த்தால், உள்ளம் கனிந்து, அவற்றை நல்ல வழிகளில் நன்கு பயன்படுத்த வேண்டும்.   செல்வரை ஒருவன் சார்ந்து எத்தனை காலம் இருந்தாலும், அவன் செல்வன் ஆவதில்லை. ஆனால், இறையருளால் செல்வத்தோடு கல்வி நலமும் ஒருங்கே பெற்றுள்ள அறிவாளனிடம் ஒருவன் சேர்ந்து இருந்தால், செல்வ நலமும், கல்வி நலமும் நாளடைவில் ஒருங்கே வாய்க்கும்.

 

     "நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்னும் நல்லறிவு இல்லாமல், செல்வச் செருக்கும், கல்விச் செருக்கும் கொண்டு திரிபவன், நெஞ்சத் திமிரால் நிலைகுலைந்து போவான்.

 

நான் (கற்றவன்) என்னும் செருக்கு, "அகங்காரம்" ஆகின்றது.

எனது என்னும் செல்வச் செருக்கு, "மமதை" ஆகின்றது.

 

     அகங்காரம் கொண்டுள்ளவனுக்கு, அகந்தையே மனைவி. மமதையே மகள். உலோபம் மகன். இடம்பம் பேரன் என்பர் பெரியோர்.

 

     திருமயிலையில், திருஞானசம்பந்தர்க்கு அன்பராய் வாழ்ந்திருந்த சிவநேசர் என்னும் அடியாருக்கு, குபேரனுக்கு ஒத்த செல்வம் இருந்தும், செருக்குக் கொள்ளாமல், சிவனடியார்க்கு அடியவராய் வாழ்ந்து இருந்தார். உலகம் முழுதையும் ஆளும்படியான செல்வத்தைப் படைத்து இருந்தாலும், மேலோர் அமைதியாய் இருப்பர். ஆனால், சிறிது பொருள் கிடைத்தாலும், கீழ்மக்கள் களிப்படைந்து செருக்குக் கொண்டு திரிவர். இது எப்படிப்பட்டது? என்றால், எலும்பைக் கடித்துக் கொண்டு இருந்த நாய்க்கு, சிறு மாமிசத் துண்டம் கிடைத்தது போல.

 

சக்கரச் செல்வம் பெறினும் விழுமியோர்

எக்காலுஞ் சொல்லார் மிகுதிச்சொல்; - எக்காலும்

முந்திரிமேல் காணி மிகுவதேல், கீழ்தன்னை

இந்திரனா எண்ணி விடும்.           --- நாலடியார்.

 

இதன் பொருள் ---

 

     ஆட்சிக்கு உரிய அளவற்ற செல்வம் பெற்றாலும் மேலோர் எந்தக் காலத்திலும் வரம்பு கடந்த சொற்களைச் சொல்ல மாட்டார்கள்.  ஆனால் முந்திரி அளவுக்கு மேல் காணி அளவாகச் செல்வம் பெற்றாலும், கீழ்மகன் தன்னை என்றும் இந்திரனாக எண்ணி இறுமாந்து திரிவான்.

 

     முந்திரி, காணி என்றது, அந்நாளில் வழக்கில் இருந்த அளவுகள். முந்திரி என்பது 320-ல் ஒரு பங்கு. காணி என்பது, 80-ல் ஒரு பங்கு.

 

வெள்எலும்பு பெற்றநாய் துண்ட விடக்கு உறின்

கொள்ளும் நனிகளி, கோடியும் வேண்டுமோ?

உள்ளதுடன் இம்மி மிகினும் உறுப கீழ்

வெள்ளத்து அனைய வியப்பு.

 

என்று பெரியோர் காட்டினார். வெள்ளை நிறத்துடன் கூடிய எலும்பைப் பெற்று இருந்த நாய்க்கு ஒரு சிறு மாமிசத் துண்டு கிடைத்துவிட்டால் மிக்க களிப்பினை அடையும். அதுபோலவே, கோடி அளவு அல்ல, சிறிதளவு செல்வம் இருந்து, அது சிறிது மிகுந்துவிட்டாலும், கீழ்மக்கள் அளவற்ற வியப்பினை அடைவார்கள்.

 

செல்வம் வந்து உற்ற காலைத்

     தெய்வமும் சிறிது பேணார்,

சொல்வன அறிந்து சொல்லார்,

     சுற்றமும் துணையும் பேணார்,

வெல்வதே கருமம் அல்லால்

     வெம்பகை வலிது என்று எண்ணார்,

வல்வினை விளைவும்ஓரார்,

     மண்ணின் மேல் வாழும் மாந்தர்.

 

என்கின்றது "விவேக சிந்தாமணி" என்னும் நூல்.

 

இதன் பொருள் ---

 

     இந்த நிலவுலகத்தில் வாழுகின்ற மனிதர்களில் அறிவற்றவர்களாக உள்ளவர்கள், தங்களுக்குப் பெருத்த செல்வம் வந்து பொருந்திய போது, தமது அறியாமை காரணமாக, தெய்வத்தையும் சிறிதும் வழிபடமாட்டர்கள்; சொல்ல வேண்டியதை அறிந்து, பிறர் மகிழும்படி சொல்லமாட்டார்கள்; உறவினர்களையும், உதவியாக உள்ள நண்பர்களையும் போற்றிக் கொள்ள மாட்டார்கள்; எப்பொழுதும் எதையும் வெல்ல வேண்டும் என்பதே கருத்தாகக் கொண்டு செயல்படுவதைத் தவி, எதிரிகள் வலிமை உடையவர்களாக இருந்தாலும், அதைச் சிறிதும் எண்ணித் துணிய மாட்டார்கள்; தாம் செய்யும் பாவச் செயல்களால் விளையப் போகும் தீமைகளையும் ஆராய்ந்து பார்க்கமாட்டார்கள்.

 

            அறிவில் சிறியவர்களே மதித்துப் போற்றுகின்ற செல்வமானது ஒருவனுக்கு வந்துவிட்டால், பிறரிடம் அன்போடு உரையாடாமையால், வாய் உள்ளவரும் ஊமையராவர்; பிறர் சொல்வதை மதித்துக் கேளாமையால், காது உள்ளவரும் செவிடராவர்; பிறரை ஏறெடுத்தும் பாராமையால், கண் உள்ளவரும் குருடராவர் என்பதை,

 

"சிறியரே மதிக்கும் இந்தச் செல்வம் வந்து உற்ற ஞான்றே

வறியன் செருக்கு மூடி, வாய்உளார் மூகர் ஆவர்;

பறிஅணி செவி உளாரும் பயில்தரு செவிடர்ஆவர்;

குறிஅணி கண்உ(ள்)ளாரும் குருடராய் முடிவர் அன்றே."

 

என்கின்றது "குசேலோபாக்கியானம்" என்னும் நூல்.

 

     வினையின் காரணமாக வந்து உற்ற உடலும், பெற்ற பொருளும், முற்றவும் அழிந்து போவதை உலக அனுபவங்களால் நாளும் அறிந்து இருந்தும், தனது உயிர்க்கு வேண்டிய உறுதியை விரைந்து தேடிக் கொள்ளாமல், அஞ்ஞான இருளில் மூழ்கி இருந்து மடிந்து போவது அழகல்ல. உயிரோடு உடன் பிறந்த உடலே பிணமாய் ஒழிகின்றது. தனது உடம்பின் நிழல் கூட வெய்யிற்கு ஒதுங்க உதவுவதில்லை. அப்படி ஒழிவதை நேரில் பலமுறை கண்டு இருந்தும், தாம் சேர்த்து வைத்துள்ள நிலையில்லாத பொருளை "என்னுடையது, என்னுடையது" என்று களித்து இருப்பவர் அறிவில்லாதவர் என்கின்றார் திருமூல நாயானர்.

 

தன்னது சாயை தனக்கு உதவாது கண்டும்,

என்னது மாடு என்று இருப்பர்கள் ஏழைகள்;

உன் உயிர் போம்உடல் ஒக்கப் பிறந்தது

கண்ணது காண்ஒளி கண்டு கொ(ள்)ளீரே.  --- திருமந்திரம்.

 

இதன் பொருள் ---

 

     தமது நிழல் தம் வெயில் வெப்பத்தைத் தணித்துக் கொள்ளுதற்கு உதவாமையைக் கண்டுவைத்தும், அறிவில்லாதார், தம்முடைய செல்வமானது தமது துன்பத்தைப் போக்கிக் கொள்ளுதற்கு உதவும் என்று இறுமாந்து இருக்கின்றனர். கருதி உணரப்படுகின்ற உயிர் காணப்படும் உடம்போடே ஒன்றாய்ப் பிறந்தது. ஆயினும், அதுவே உடம்பில் என்றும் நின்று அதனைக் காவாது இடையே விட்டு ஒழிகின்றது. (அங்ஙனமாக, உடன் பிறந்து உடம்பே உயிரை விட்டு ஒழியும்போது, உடம்புக்கு வேறாய், இடையே வந்த செல்வமா நம்மோடு நிலைத்து நின்று நலம் செய்யும்?) பொருள்களைக் காணும் ஆற்றல் உங்கள் கண்ணில் உள்ளது. அதனைக் கொண்டு நீங்கள் இவற்றை நேரே கண்டு கொள்ளுங்கள். (சாயை --- நிழல். மாடு --- செல்வம்)

 

     வெய்யிலுக்கு ஒதுங்குவதற்கும் உதவாத இந்த உடம்பின் நிழல்போ, உங்கள் கையில் உள்ள பொருளும் உங்களுக்கு, நீங்கள் செல்லப் போகின்ற இறுதிப் பயணத்துக்கு உதவாது, எனவே, முருகப் பெருமானை நினைந்து, நொய்யில் பாதி அளவாவது, இல்லை என்று வந்தோருக்குக் கொடுத்து உதவுங்கள் என்கின்றார் அருணகிரிநாதப் பெருமான்.

 

வையின் கதிர் வடிவேலோனை வாழ்த்தி,

     வறிஞர்க்கு என்றும்

நொய்யின் பிளவு அளவேனும் பகிர்மின்கள்,

     நுங்கட்கு இங்ஙன்

வெய்யிற்கு ஒதுங்க உதவா உடம்பின்

     வெறுநிழல்போல்

கையில் பொருளும் உதவாது காணும்

     கடைவழிக்கே.                    --- கந்தர் அலங்காரம்.

 

     பின்வரும் பாடல்களையும் இங்கு வைத்து எண்ணி நலம் பெறலாம்...

 

எத்தனைபேர் கையில் முன்னம் இப்பொருள்தான்

    இருந்தது, வர் எல்லாம் தத்தம்

அத்தம் என நம்பினார், வர்களை விட்டு

    அகன்று, ன்கை அமர்ந்தது, இன்னும்

சத்தம் இன்றி உ(ன்)னை மோசம் செய்து, னந்தம்

    பேர்கரத்திர் சாரும், சொன்னேன்;

சித்தமே! அதுசெல்லும் முன் நீ சற்

    பாத்திரத்தில் செலவி டாயே.    --- நீதிநூல்.

 

         நெஞ்சமே! இப்பொழுது உன்னிடத்தில் உள்ள இப்பொருள் இதற்கு முன் எத்தனைபேர் கையில் இருந்தது? அத்தனை பேரும் இதனைத் தத்தம் பொருள் என்றே நம்பி இருந்தனர். அவர்களை விட்டு அகன்று, இப்போது உன் கையில் வந்திருக்கிறது. இது ஓசையின்றி உன் நம்பகத்தைக் கெடுத்து, பலர் கையில் சார்ந்து விடும். நான் கூறுவதை நம்பு. இப்பொருள் உன்னை விட்டு அகலும் முன் நீ நல்லவர்க்குக் கொடுக்கும் நற்செயலைச் செய்வாயாக.

 

என்பொருள் என் பொருள் என்று சீவன்விடு

    மனமே! ஒன்று இயம்பக் கேளாய்;

உன்பொருள் ஆனால் அதன்மேல் உன்நாமம்

    வரைந்து உளதோ? உன்த(ன்)னோடு

முன்பிறந்து வளர்ந்ததுகொல்? இனி உ(ன்)னைவிட்டு

    அகலாதோ? முதிர்ந்து நீ தான்

பின்பிறக்கும் போது, துவும் கூட இறந்

    திடும் கொல்லோ? பேசுவாயே.    --- நீதிநூல்.

 

     என்னுடைய பொருள், என்னுடைய பொருள் என்று உயிரை விடுகின்ற எனது நெஞ்சமே! உனக்கு ஒன்று சொல்லுகின்றேன், கேள். உன்னுடைய பொருளானால் அப்பொருளின் மேல் உனது பெயர் எழுதப்பட்டிருக்கின்றதா? நீ பிறக்கும்போது உன்னுடனேயே அது பிறந்து வளர்ந்ததா? இனிமேலும் அது உன்னைவிட்டு நீங்காதா?  நீ மூப்பு அடைந்து சாவும்பொழுது அதுவும் உன்னோடு கூடச் செத்துவிடுமா? ஆராய்ந்து சொல்வாயாக.

 

 

ஒப்பரும் நற்குணத்தவர்க்கும் கொலை காமம்

    கள் களவை உபதேசிக்கும்;

அப்பனாய் நட்பினர்க்குள் பகை விளைக்கும்;

    சத்துருவாய் அகிலத்து உற்ற

செப்பரிய துயர்க்கு எல்லாம் மாதாவாய்,

    தீவினைக்கு ஓர் செவிலி ஆய

இப்பொருளை, நற்பொருள் என்று எப்படி நீ

    ஒப்புகின்றாய், ஏழை நெஞ்சே.        --- நீதிநூல்.

 

     அறிவில்லாத நெஞ்சே! ஒப்புச்சொல்ல முடியாத சிறந்த நல்ல பண்புகளை உடையவர்க்கும் கொலை காமம் கள் களவு (பொய்) முதலிய பெருந் தீமைகள் அவர்கள் மனத்தில் அழுந்தப் போதிக்கும் தலைவனாகவும், நண்பர்களுக்குள் பகையை விளைவிக்கும் மாற்றானாகவும், சொல்லமுடியாத உலகியல் துன்பங்களுக்கு எல்லாம் தாயாகவும், கொடுஞ் செயலுக்கு எல்லாம் வளர்ப்புத் தாயாகவும் இருக்கும் இப்பொருளை, இன்பமும் துணையும் இசைவிக்கும் நல்ல பொருள் என்று, நீ எந்த முறையில் மனம் ஒப்பிக் கூறுகின்றாய்.

 

நோக்கு இருந்தும் அந்தகரா, காது இருந்தும்

    செவிடரா, நோய் இல்லாத

வாக்கு இருந்தும் மூகையரா, மதியிருந்தும்

    இல்லாரா, வளரும் கைகால்

போக்கு இருந்தும் முடவரா, உயிர் இருந்தும்

    இல்லாத பூட்சி யாரா

ஆக்கும் இந்தத் தனம், அதனை ஆக்கம் என

    நினைத்தனை நீ அகக் குரங்கே.      --- நீதிநூல்.

 

     எனது நெஞ்சமாகிய வஞ்சகக் குரங்கே! நீ கண்ணிருந்தும் குருடராய், காதிருந்தும் செவிடராய், குற்றமற்றவாய் இருந்தும் ஊமையராய், அறிவிருந்தும் மூடராய், நீண்ட கைகால்கள் இருந்தும் முடவராய், உயிர் இருந்தும் அது இல்லாத வெற்று உடலினராய்ப் பயனிழக்கச் செய்யும், இந்தத் தீப்பொருளை, வளரும் செல்வமாம் வாழ்வு என நினைக்கின்றாய்.

 

நிறைசெல்வம் உடையாரை நோய்துன்பம்

    அணுகாவோ? நினைத்தது எல்லாம்

குறை இன்றிப் பெறுவரோ? புவிக்கு அரசு

    செலுத்துவரோ? குறித்த ஆயுள்

பிறை என்ன வளருமோ? இயமன் வர

    அஞ்சுவனோ? பேரின்பத்துக்கு

உறையுளோ? அவர்கிரகம், இவையெ(ல்)லாம்

    மனமே! நீ உன்னுவாயே.              --- நீதிநூல்.

 

         நெஞ்சே! நிறைந்த செல்வம் உடையாரைப் பசிநோய், உடல்நோய், துன்பம் முதலியன அணுகாவோ? நினைத்தது எல்லாம் குறைவில்லாமல் பெறுவாரோ? உலகுக்கு மன்னராய் ஆள்வரோ? வரையறுக்கப்பட்ட வாழ்நாளானது பிறைபோன்று வளர்ச்சி உறுமோ? இவரிடம் கூற்றுவன் வர நடுங்குவனோ? இவர் தங்குமிடம் அழியா இன்பத்துக்கு உறையுளோ? இவை அனைத்தையும் கருதிப் பார்ப்பாயாக.

 

     எல்லார்க்கும் நல்லது செய்யவே இறைவன் நம்மை செல்வர் ஆக்கி வைத்தான். எல்லோரிடமும் தாழ்மையாய் நடந்து வந்தால், வாழ்வு வளம் பெறும். நிலைமை இதனை உணராமல் செருக்குக் கொண்டு இருந்தால், விரைந்து அழிந்து போக நேரும்.

 

     செல்வம் பெருகிச் சிறப்புடன் வாழவேண்டுமானால், செருக்கு முதலிய சிறுமைகள் இல்லாமல் வாழவேண்டும்.

 

"செருக்கும் சினமும் சிறுமையும் இல்லார்

பெருக்கம், பெருமித நீர்த்து"

 

என்று நாயனார் அருளிய திருக்குறளை உணரவேண்டும்.

 

     பிறக்கும் போது கொண்டு வந்தது இல்லை. இறக்கும் போதும் கொண்டு செல்வது இல்லை. வாழ்நாளில், உடம்பு உள்ளபோதே அறம் செய்து, அருள் உடையராய் ஆகுங்கள்.

 

 


No comments:

Post a Comment

தொடர்ந்து வருவது அருளே - பொருள் அல்ல

தொடர்ந்து வருவது அருளே - பொருள் அல்ல. -----        உலகத்தில் வாழத் தெரியாதவர்கள் யார் ?  வாழத் தெரிந்தவர்கள் யார் ?  என்று கேட்டால் ,  பணத்த...