இணக்கம் அறிந்து இணங்கு

 

 

இணக்கம் அறிந்து இணங்கு

----

 

     திருக்குறளில் "சிற்றினம் சேராமை" என்னும் ஓர் அதிகாரம். சிற்றினம் சேராமையாவது, அறிவு ஒழுக்கங்களில் சிறியார் இனத்தைப் பொருந்தாமை ஆகும்.

 

     சிறிய இனமாவது, நல்வினையின் பயனாக சுகமும், தீவினையின் பயனாகத் துன்பமும் இல்லை என்று கூறுவோரும், பெண்களைப் புணர விரும்பி அலையும் காமுகர்களும், உள்ளே பகையும், உதட்டில் உறவும் வைத்து இருக்கும் தூர்த்தர்களும்ஆகிய இவரை உள்ளிட்ட கூட்டத்தார் என்பர் பெரியோர்.

 

     அறிவினை வேறுபடுத்தி, தீநெறியில் செலுத்தி, இம்மை மறுமை நலன்களையும் கெடுக்கும் இயல்பினை உடைய இவர்களை ஒருவன் பொருந்தி நின்றால், பெரியாரைத் துணைக் கொள்ளுதல் பயனில்லாது போகும் என்பதால், பெரியாரைத் துணைக் கொள்வதோடு, சிறியவர் கூட்டுறவையும் ஒழிக்கவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

 

     இந்த அதிகாரத்தில் வரும் இரண்டாம் திருக்குறளில், "நீரானது தான் சேர்ந்த நிலத்தின் இயல்பினாலே தனது தன்மை வேறுபட்டு, அந் நிலத்தினது தன்மையைச் சாரும்.  அதுபோல, மனிதரது அறிவும் தான் சேர்ந்துள்ள இனத்தினது தன்மையாலே மாறுபட்டு, அந்த இனத்தினது தன்மையை அடையும்" என்கின்றார் நாயனார்.

 

     வானில் இருந்து இழிந்த நீரானது யாதொரு நிறமும், சுவையும் இல்லாமல், தனது தன்மையோடு கூடி இருந்தும், நிலத்தில் வந்து சேர்ந்த காலத்து, எந்த எந்த நிலத்தில் சேருகின்றதோ, அந்த அந்த நிலத்தின் குணத்திற்குத் தக்க அளவாக, நிறத்தினையும், சுவையினையும் கொள்ளுவது போல, மிகப் பெரியோராக இருந்தாலும், சிற்றினத்தைச் சார்ந்து இருந்தால், தமது இயல்பாகிய குணம் கெட்டு, சார்ந்த இனத்தினது குணம் செயல் முதலியவைகளை அடைவார்கள். எனவே, உவர் நிலத்தைச் சேர்ந்த நீர், உவர்ப்புத் தன்மையை அடைவது போல, சிற்றினத்தைச் சேர்ந்து சிற்றறிவு விளங்கப் பெறாது இருத்தல் வேண்டும் என்பதை அறிவுறுத்த,

 

நிலத்து இயல்பால் நீர் திரிந்து அற்று ஆகும், மாந்தர்க்கு

இனத்து இயல்பு அது ஆகும் அறிவு.          

 

என்னும் திருக்குறளை அருளிச் செய்தார் நாயனார்.

 

     பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளமை காணலாம்...

 

பாலோடு அளாயநீர் பால் ஆகும், ல்லது

நீராய் நிறம் தெரிந்து தோன்றாதாம்; -தேரின்

சிறியார் சிறுமையும் தோன்றாதாம், நல்ல

பெரியார் பெருமையைச் சார்ந்து.    --- நாலடியார்.

 

இதன் பொருள் ---

 

     பாலோடு, அளாய நீர் பாலாகுமல்லது நீராய் நிறம் தெரிந்து தோன்றாது --- பாலோடு கலந்த நீர் பாலாகித் தோன்றுமே அல்லது நீராய்த் தன் நிறம் விளங்கித் தோன்றாது; தேரின் --- ஆராய்ந்தால், சிறியார் சிறுமையும் தோன்றாது நல்ல பெரியார் பெருமையைச் சார்ந்து --- உயர்ந்த பெரியாருடைய பெருந்தன்மையைச் சார்ந்து இருப்பதால் சிறியார் குறைபாடும் தோன்றாமல் பெருமையே ஆகும்.

 

         மக்கள் பெரியாரோடு சேர்ந்திருந்து, தம் குறை நீங்கிப் பெருமை அடைதல் வேண்டும்.

 

ஊர் அங்கணநீர் உரவுநீர் சேர்ந்தக்கால்,

பேரும் பிறிதாகித் தீர்த்தமாம்; - ஓரும்

குலமாட்சி இல்லாரும் குன்றுபோல் நிற்பர்,

நலமாட்சி நல்லாரைச் சார்ந்து.      --- நாலடியார்.

 

இதன் பொருள் ---

 

     ஊர் அங்கண் நீர் உரவு நீர் சேர்ந்தக்கால் --- ஊரில் உள்ள சாக்கடைக் கழிவு நீர் எல்லாம் பெரிய ஆற்று நீரோடு சேர்ந்துவிட்டால், பேரும் பிறிதாகித் தீர்த்தம் ஆம் - பிறகு சாக்கடை நீர் என்ற அதன் பேரும் நீங்கி, புனிதமான தீர்த்த நீர் என்று பெருமையோடு அழைக்கப்படும். அது போலவே, ஒரும் குலமாட்சி இல்லாரும் --- மதிக்கத்தக்க நற்குலப் பெருமை இல்லாத கீழ்மக்களும், குன்றுபோல் நிற்பர் நலமாட்சி நல்லாரைச் சார்ந்து --- குணப்பெருமை வாய்ந்த நல்லாரைச் சார்ந்து இருந்தால், தமது குலத் தாழ்வு நீங்கி, நல் தன்மையில் மலைபோல் உயர்ந்து நிலைத்து விளங்குவர்.

 

மண் இயல்பால் குணம் மாறுந் தண்புனல்,

கண்ணிய பொருள்மணங் கலந்து வீசும் கால்

புண்ணியர் ஆதலும் புல்லர் ஆதலும்

நண்ணும் இனத்து இயல்பு என நவிலல் உண்மையே.   ---  நீதிநூல்.

        

இதன் பொருள் ---

 

     குளிர்ச்சி பொருந்திய தண்ணீர், தான் சேர்ந்த நிலத்தின் இயல்பினால் தன்மையில் மாறுதல் அடையும். காற்று, தான் பொருந்திய பொருளின் மணத்தைக் கலந்து வீசும். அவைபோல் மக்கள் உயர்ந்தோர் ஆதலும் தாழ்ந்தோர் ஆதலும் அவரவர் சார்ந்த கூட்டத்தின் தன்மை எனக் கூறுவது உண்மையாகும்.

 

     இராவணன் கும்பகர்ணனைப் போர் செய்ய ஏவுகின்றான். போர் செய்ய நேர்ந்தமைக்கு வருந்தி, தனது தமையன் ஆன இராவணனுக்கு அறிவுரை கூறுகின்றான் கும்பகர்ணன்.  உலகைக் கல்லும் வலிமை உடையவர்களும், உலகுக்கு வேலி அமைக்கும் பெருவலி படைத்தோரும் கூட இராமனை வென்று சீதையின் மேனியைப் புல்ல  முடியாது. உனது செயல் உனது அழிவுக்குக் காரணமாக அமைந்துவிட்டது என்கின்றான். நிலத்தின் இயல்புக்கு ஏற்ப நீர் அமைவதுபோ, உனது செயலுக்கு ஏற்ப விளைவும் இருக்கும் என்கின்றான்.

 

'புலத்தியன் வழிமுதல் வந்த பொய் அறு

குலத்து இயல்பு அழிந்தது; கொற்றம் முற்றுமோ?

வலத்து இயல் அழிவதற்கு ஏது; மை அறு

நிலத்து இயல் நீர் இயல் என்னும் நீரதால். 

                                                  --- இராமாயணம், கும்பகர்ணன் வதைப்படலம்.

 

இதன் பொருள் ---

 

     புலத்தியன் வழிமுதல் வந்த --- புலத்தியனுடைய மரபிலே வந்த ; பொய்யறு குலத்து இயல்பு அழிந்தது --- தரும வழி  நீங்காத குலத்தின் தன்மை, உனது செயலால் அழிந்துவிட்டது;  வலத்து இயல் அழிவதற்கு ஏது --- அதுவே வெற்றித் தன்மை  அழிவதற்குக் காரணமாகும்; கொற்றம் முற்றுமோ --- அதனால்  உனக்கு வெற்றி கிட்டுமோ?;   மையறு நிலத்து இயல்  நீர் இயல்  என்னும் நீரதால் --- இது குற்றமற்ற நிலத்தின்  இயல்பே நீரின் இயல்பு என்ற முறைமைக்கு ஏற்ப உள்ளது.

  

அப்பு என்றும் வெண்மையது ஆயினும்,

     ஆங்கு அந் நிலத்து இயல்பாய்

தப்பு இன்றியே குண வேற்றுமை

     தான் பல சார்தலினால்,

செப்பில் அபக்குவம் பக்குவமாய்

     உள்ள சீவரிலும்

இப்படியே நிற்பன் எந்தை பிரான்,

     கச்சி ஏகம்பனே!            --- பட்டினத்தார்.

 

இதன் பொருள் ---

 

     நீரானது எப்பொழுதும் வெண்ணிறம் உடையதது. ஆனாலும், அது மேகத்தில் இருந்து வீழ்ந்த காலத்து, அப் பூமியின் தன்மையை உடையதாகி, குற்றம் இல்லாமலே, தன் இயற்கைக் குணத்தினின்றும் பல வேறுபட்ட குணங்களை அடைதலால், சொல்லுமிடத்து, திருக்கச்சி ஏகம்பத்தில் எழுந்தருளி உள்ள ஏகம்ப நாதன், அபக்குவமாயும் பக்குவமாயும் இருக்கிற சீவர்களிலும், எமது தந்தையாகிய சிவபிரான் இவ்விதமாகவே (பக்குவ அபக்குவ குணன் ஆக வேறுபாட்டை அடைந்து) நிற்பன்,

 

     "சகவாச தோஷம்" "கூடா நட்பு கேடாய் முடியும்" என்னும் முதுமொழிகளைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

 

     ஒளவைப் பிராட்டியார், "ஆத்திசூடி"யில் இன்னும் எளிதாகவும், மிகச் சுருக்கமாகவும், சிற்றினம் சேராது இருப்பதற்கு வழியாகப் பின்வருமாறு கூறி அருளியுள்ளதையும் நோக்குக.

 

----- சான்றோர் இனத்து இரு

----- இணக்கம் அறிந்து இணங்கு

----- சேரிடம் அறிந்து சேர்

----- தக்கோன் எனத் திரி

----- பெரியாரைத் துணைக் கொள்

----- மேன்மக்கள் சொல் கேள்

 

     கொன்றை வேந்தன் என்னும் நூலில், நல்லவர்கள் அல்லாதவர்களோடு சகவாசம் செய்வது (கூடி இருப்பது) துன்பத்தையே உண்டாக்கும் என்பதைக் காட்ட,

 

"நல் இணக்கம் அல்லது அல்லல் படுத்தும்"

 

என்றார் ஔவைப் பிராட்டியார்.

 

பதவுரை --- நல் இணக்கம் அல்லது --- நல்ல சகவாசம் அல்லாதது, அல்லல் படுத்தும் --- துன்பத்தையே உண்டாக்கும்.

 

     கெட்ட சகவாசம் துன்பத்தை உண்டாக்கும் என்பது கருத்து.

 

     உயிர் அறிவுப் பொருள்தான். என்றாலும், அதன் அறிவு இறைவனைப் போல முற்றறிவு அல்ல. சிற்றறிவு. அறிவித்தால் அறிந்து கொள்ளும் தன்மை உடையது. உயிரானது எந்தப் பொருளைச் சார்ந்து இருக்கின்றதோ, அந்தப் பொருளின் தன்மையை அது அடைந்து நிற்கும். அந்தப் பொருளில் இருந்து விலகினால், முன் அடைந்த தன்மையில் இருந்து மாறுபடும். "சார்ந்ததன் வண்ணம் ஆதல்" என்பதுதான் உயிருக்கு உரிய சிறப்பு இயல்பு.

நல்லோரைச் சார்ந்து இருந்தால் நல்லறிவு பெறும். தீயோரைச் சார்ந்து இருந்தால் நல்லறிவு விளங்காது. எனவே, இருவகைப்பட்ட தன்மைகளை அடையக் கூடிய தன்மையை உடையது ஆன்மா.

    

     இருவகைப்பட்ட தன்மைகளை அடைகின்ற பொருள்கள் உலகில் பல உண்டு. எடுத்துக்காட்டாகக் கண், பளிங்கு, வானம் ஆகிய பொருள்களைக் குறிப்பிடலாம். கண் இரவு நேரத்தில் இருளைச் சார்ந்து இருளாய் நிற்கும். ஒளி வந்த காலத்தில் அவ்வொளியைப் பெற்று ஒளியாய் நிற்கும். அவ்வாறே பளிங்கு இரவில் இருளைக் கவர்ந்து இருள் வடிவாகவே இருக்கும். பகலில் சூரியவொளியைக் கவர்ந்து ஒளிவடிவாய்த் திகழும். அதுபோல வானம் இரவு நேரத்தில் கரிய இருள் சூழ்ந்து இருளாய் விளங்கும். பகலில் சூரியனின் பொன்னொளியைப் பெற்று ஒளிமயமாய் விளங்கும். இப்படிக் கண் முதலிய பல பொருள்கள் இருளில் இருளாகியும் ஒளியில் ஒளியாகியும் இரு மாறுபட்ட தன்மைகளை உடையனவாய் நிற்பதை அனுபவமாகக் பார்க்கிறோம். அவற்றைப் போல உயிரும் தம்முள் மாறுபட்ட சத்தையும் அசத்தையும் சார்ந்து அவ்விரண்டன் தன்மைகளையும் அடையக் கூடியதாய் உள்ளது.

 

         சத்து என்பது உயர்ந்தது. அசத்து என்பது இழிந்தது. உயிரானது மிக உயர்ந்ததும் அல்ல. மிகத் தாழ்ந்ததும் அல்ல. எனவே, உயிர் "சதசத்து" எனப்படும். எனவே, உயிர் அவ்விரண்டிற்கும் இடைப்பட்ட பொருளாகும். இடைப்பட்டதாய் நிற்பதால் அவ்விரண்டையும் சார்ந்து, அவ்விரண்டின் தன்மையையும் பெறுவதாகின்றது. சார்ந்த தன் வண்ணமாய் நிற்பது.

 

     எனவே, நல்லோரைச் சார்ந்து நல்லறிவு பெற்று விளங்கவேண்டும். நல்லரைச் சார்ந்து இருப்பது துன்பமாக முதலில் தோன்றும். அது நாளடைவில் இன்பத்தைத் தந்துகொண்டே இருக்கும். ஆனால், தீயோரைச் சார்ந்து இருப்பது முதலில் இன்பமாகத் தோன்றும் என்பதால், உடனடியாக, தான் விரும்புவதையே அடையத் துடிக்கின்ற உயிரானது, சிற்றினத்தையே விரும்பும். அது நன்மை தராது என்பதை அறிவுறுத்த, இறைவன் அருளாளர்களை அதிட்டித்து, நீதி நூல்களையும், அருள் நூல்களையும் அருளிச் செய்தான். எனவே, மெய்யறிவு நூல்களை முயன்று படித்து, மெய்யறிவு பெற்றவரோடு கூடி இருந்து, மெய்யறிவு பெற்று உயரவேண்டும் என்பதற்காக, சிறியவர் இனத்தில் சேராமல் காத்துக் கொள்ளவேண்டும் என்பதால், நாயனார், "சிற்றினம் சேராமை" என்னும் அதிகாரத்தை வைத்து அருளினார்.

 

 


No comments:

Post a Comment

பொது --- 1030. விட்ட புழுகுபனி

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்   விட்ட புழுகுபனி (பொது)   முருகா!  விலைமாதர் கூட்டுறவால் எனது அறிவு மயங்காமல் காத்து அருள்.            ...