016. பொறையுடைமை - 10. உண்ணாது நோற்பர்





திருக்குறள்
அறத்துப்பால்

இல்லற இயல்

அதிகாரம் 16 - பொறை உடைமை

     இந்த அதிகாரத்தில் வரும் பத்தாம் திருக்குறள், " விரதங்களை மேற்கொண்டு, அவை காரணமாக, உணவை விட்டு, தமக்கு உண்டான பசி என்னும் துன்பத்தைப் பொறுத்துக் கொள்கின்றவர் பெரியவர் தான். அந்தப் பெரியவர், பிறர் தம்மைப் பற்றிச் சொல்லும் கடுமையான சொற்களைப் பொறுத்துக் கொள்ளுகின்றவரின் பிற்பட்டவரே ஆவார்" என்கின்றது.

திருக்குறளைக் காண்போம்...

உண்ணாது நோற்பார் பெரியர், பிறர் சொல்லும்
இன்னாச்சொல் நோற்பாரின் பின்.

இதற்குப் பரிமேலழகர் உரை ---

     உண்ணாது நோற்பார் பெரியர் --- விரதங்களான் ஊணைத் தவிர்ந்து உற்ற நோயைப் பொறுப்பார் எல்லாரினும் பெரியர்;

     பிறர் சொல்லும் இன்னாச்சொல் நோற்பாரின் பின் --- அவர் பெரியராவது, தம்மைப் பிறர் சொல்லும் இன்னாச் சொல்லைப் பொறுப்பாரின் பின்

      (பிறர் - அறிவிலாதார். நோலாமைக்கு ஏது ஆகிய இருவகைப் பற்றொடு நின்றே நோற்றலின், 'இன்னாச் சொல் நோற்பாரின் பின்' என்றார். )


எள்ளிப் பிறர் உரைக்கும் இன்னாச்சொல், தன்னெஞ்சில்
கொள்ளி வைத்தால் போல் கொடிது எனினும், --- மெள்ள
அறிவு என்னும் நீரால் அவித்து ஒழுகல் ஆற்றின்,
பிறிது ஒன்று வேண்டா தவம்.   ---  அறிநெறிச்சாரம்.

இதன் பதவுரை ---

     பிறர் எள்ளி உரைக்கும் இன்னாச் சொல் --- தன்னைப் பிறர் இகழ்ந்து கூறும் கடுஞ்சொல். கொள்ளி வைத்தாற் போல் ---நெருப்பினாற் சுட்டாற்போல், தன் நெஞ்சில் கொடிது எனினும் ---தன் மனத்தில் துன்பத்தை மிகுவிப்பதாயினும், அறிவென்னும் நீரால் --- அறிவாகிய நீரால், மெள்ள --- அமைதியாக, அவித்து ஒழுகல் ஆற்றின் --- அத் துன்பத்தைக் கெடுத்து ஒழுகுவானானால், தவம் பிறிது ஒன்றும் --- வேறு தவம் ஒன்றும், வேண்டா --- செய்ய வேண்டுவதில்லை.


தெரியாதவர் தம் திறன் இல்சொல் கேட்டால்
பரியாதார் போல இருக்க, --- பரிவுஇ ல்லா
வம்பலர் வாயை அவிப்பான் புகுவரே
அம்பலம் தாழ்க்கூட்டு வார்.    --- பழமொழி நானூறு.

இதன் பதவுரை ---

     தெரியாதவர் தம் திறன் இல் சொல் கேட்டால் --- அறிவில்லாருடைய (அவர் தம்மை இகழ்ந்து கூறும்) திறமையில்லாச் சொற்களைக் கேட்டால், பரியாதார் போல இருக்க --- துன்புறாதவர்களைப் போல் பொறுத்திருக்க, பரிவு இல்லா வம்பலர் வாயை அவிப்பான் புகுவரே --- (அங்ஙனமன்றி) அன்பில்லாத அயலார் வாயை அடக்கப் புகுவார்களோ? இல்லை, (புகுவரேல்) அம்பலம் தாழ்க் கூட்டுவார் --- பொது இடத்தைத் தாழ் இடுவாரோடு ஒப்பார்.

     அறிவில்லாதவரது வாயை அடக்குதல் முடியாது. அவரது அறியாமையை அவர் வெளிப்படுத்துகின்றார் என்று உணர்தல் வேண்டும். அவர் கூறும் சொற்களுக்காக வருந்துதல் கூடாது. பொது இடத்தினைத் தாழிட்டு அடைக்க இயலாதவாறுபோல, அவர் வாயை அடக்குதல் முடியாது.

         'அம்பலம் தாழ்க் கூட்டுவார் இல்' என்பது இச் செய்யுளில் வந்த பழமொழி.

ஆய்ந்த அறிவினர் அல்லாதார் புல்லுரைக்குக்
காய்ந்து எதிர் சொல்லுபவோ கற்றறிந்தார்? - தீந்தேன்
முசுக்குத்தி நக்கும் மலைநாட! தம்மைப்
பசுக்குத்தின் குத்துவார் இல்.   ---  பழமொழி நானூறு.

இதன் பதவுரை ---

     தீம் தேன் முசு குத்தி நக்கும் மலைநாட! --- இனிய தேன் கூட்டை ஆண்குரங்கு கிழித்து (ஒழுகும் தேனை) நக்குகின்ற மலைநாடனே!, பசு குத்தின் குத்துவார் இல் --- பசு தம்மை முட்டினால் (சினந்து தாமும்) முட்டுவார் இல்லை, (ஆதலால்) ஆய்ந்த அறிவினர் அல்லாதார் புல்லுரைக்கு --- ஆராய்ந்த அறிவினை உடையரல்லாதவர்கள் சொல்லும் பொருளற்ற சொற்களுக்கு, கற்றறிந்தார் காய்ந்து எதிர் சொல்லுபவோ --- நூல்களைக் கற்று ஆராய்ந்து அறிந்தவர்கள் சினந்து எதிராகப் பொருளற்ற சொற்களைக் கூறுவரோ?கூறார்.

     ஆராய்ச்சி அறிவு இன்மையால் கூறுகின்றார்கள் என்று அறிவதல்லது இயல்பாகக் கூறுகின்றார்கள் என்று அறிதல் கூடாது. ‘நாய் கவ்வின் மாறாகக் கவ்வினார் இல்லை' என்று அறிவு ஆராய்ச்சி அறிவு இல்லார்களுக்கு உவமை கூறப்படும்.

     இது அறிவு உடையவர்களுக்குக் கூறப்பட்டது.  'பசுக் குத்தின்' என்றமையால் நூல்களைக் கற்றவர்; ஆனால் ஆராய்ச்சியில்லார் என்று கொள்ளல் வேண்டும். பிழை செய்யினும் அவர் பிழையன்று என்று கருதுதல் வேண்டும்.


தீமொழி கேட்டுச் செவி அகம் புதைத்துக்
காதலன் முன்னர்க் கண்ணகி நடுங்க,
எள்ளுநர் போலும் இவர் என்பூங் கோதையை,
முள்ளுடைக் காட்டின் முதுநரி யாக எனக்
கவுந்தி இட்ட தவந்தரு சாபம்
கட்டியது ஆகலின் பட்டதை அறியார்,

குறுநரி நெடுங்குரல் கூவிளி கேட்டு
நறுமலர்க் கோதையும் நம்பியும் நடுங்கி,
நெறியின் நீங்கியோர் நீர் அல கூறினும்
அறியாமை என்று அறியல் வேண்டும்,
செய் தவத்தீர்! நும் திருமுன் பிழைத்தோர்க்கு
ய்திக் காலம் உரையீரோ என....   --- சிலப்பதிகாரம். நாடுகாண் காதை.
        
இதன் பதவுரை ---

     தீ மொழி கேட்டுச் செவியகம் புதைத்துக் காதலன் முன்னர்க் கண்ணகி நடுங்க --- இன்னணம் இவர் இகழ்ந்த கொடு மொழியினைக் கேட்டு இரு செவிகளையும் பொத்தித் தன் கணவன் முன்னர்க் கண்ணகி நடுங்கி நிற்ப, எள்ளுநர் போலும் இவர் என் பூங்கோதையை --- எனது பூங்கோதை போல்வாளை இவர் இகழ்ந்தனர் ஆயினார், முள்ளுடைக் காட்டின் முதுநரி ஆகென --- ஆகலான், முட்கள் நிறைந்த காட்டின்கண் இவர் ஓரியாக என்று உள்ளத்து எண்ணி, கவுந்தி இட்ட தவந்தரு சாபம் --- கவுந்தியடிகள் இட்ட தவத்தினால் விளைந்த சாபம், கட்டியது ஆதலின் --- இவரைப் பூண்டது ஆகலான், பட்டதை அறியார் குறுநரி நெடுங்குரல் கூவிளி கேட்டு நறுமலர்க் கோதையும் நம்பியும் நடுங்கி --- நறுவிய மலரணிந்த கண்ணகியும் கோவலனும் விளைந்ததனை அறியாராய்க் குறிய நரியினது நெடிய குரலாகக் கூவும் விளியைக் கேட்டு நடுங்கி, நெறியின் நீங்கியோர் நீரல கூறினும் அறியாமை என்று அறிதல் வேண்டும் --- நல்லொழுக்க நெறியினின்றும் விலகிய அறிவிலார் நீர்மை அல்லாதனவற்றைச் சொல்லினும் அது அறியாமையால் கூறியதாகும் எனப் பெரியோர் உணர்தல் வேண்டும், செய் தவத்தீர் நும் திருமுன் பிழைத்தோர்க்கு உய்திக் காலம் உரையீரோ என --- செய்த தவத்தினையுடையீர், உம்முடைய திரு முன்பு தவறு செய்த இவர்க்கு உய்தலுடைத்தாங் காலத்தை மொழிந்தருளுவீர் என்று கூற ;


எள்ளாது இருப்ப இழிஞர் போற்றற்கு உரியர்
விள்ளா அறிஞர் அது வேண்டாரே, --- தள்ளாக்
கரைகாப்பு உளது நீர் கட்டுகுளம், அன்றிக்
கரைகாப்பு உளதோ கடல்.        ---  நன்னெறி.

இதன் பொருள் ---

     தேக்கி வைக்கப்பட்ட நீரை உடைய குளமே கட்டப்பட்ட கரையைக் காப்பாக கொண்டு உள்ளது. பெரிய கடலானதோ கரையின்றியே நிலைபெற்று உள்ளது. அதுபோல, அறிவில்லாதவர் பிறர் தம்மை இழித்துக் கூறாமல் காக்க வேண்டும். நீங்காத அறிவினை உடையோர் அவ்வாறு காத்துக் கொள்வதை விரும்பார்.



No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...