021. தீவினை அச்சம் - 07. எனைப்பகை உற்றாரும்





திருக்குறள்
அறுத்துப்பால்

இல்லற இயல்

அதிகாரம் 21 - தீவினை அச்சம்

     இந்த அதிகாரத்தில் வரும் ஏழாம் திருக்குறள், "எவ்வளவு பெரிய பகையை உடையவரும், அப் பெரிய பகையை ஒரு வழியால் தப்பிப் போகலாம். அப்படி அல்லாமல் தீவினை ஆகிய பகையானது, நீங்காமல், சென்ற இடத்தில் சென்று கொல்லும்" என்கின்றது.

     "நீங்காது புக்குழிப் புக்குக் கொல்லும்" என்பதற்கு, தீவினை செய்தால், அதனால் வந்த பாவங்கள் ஒருவன் இப்பிறவி நீங்கி, மறுபிறவியில் வேறு உடம்பில் சென்ற போதும், கூடவே வந்து பிறவிகள்தோறும் வருத்தும் என்பது கருத்து. தீவினை செய்தால், அதன் பயனைச் செய்தவனே அனுபவிக்க வேண்டும். உடம்போடு நிலையாக நின்ற உயிரும் இல்லை என்பதை அறியவேண்டும்.

திருக்குறளைக் காண்போம்...

எனைப் பகை உற்றாரும் உய்வர், வினைப் பகை
வீயாது பின் சென்று அடும்.

இதற்குப் பரிமேலழகர் உரை ---

     எனைப்பகை உற்றாரும் உய்வர் --- எத்துணைப் பெரிய பகை உடையாரும் அதனை ஒருவாற்றால் தப்புவர்,
    
     வினைப்பகை வீயாது பின் சென்று அடும் - அவ்வாறன்றித் தீவினை ஆகிய பகை நீங்காது புக்குழிப் புக்குக் கொல்லும்

      ('வீயாது உடம்பொடு நின்ற உயிரும் இல்லை.' (புறநா.363) என்புழியும் வீயாமை நீங்காமைக்கண் வந்தது.)

     இத் திருக்குறளுக்கு விளக்கமா, சிதம்பரம் ஈசானிய மடத்து இராமலிங்க சுவாமிகள் பாடியருளிய "முருகேசர் முதுநெறி வெண்பா" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...

பாவம்எனாது அரன்செய் பற்றலின் வேந்தோடுஅயர்ந்தார்
மூவர் மறையோர், முருகேசா! --- மேவ
எனைப்பகை உற்றாரும் உய்வர் வினைப்பகை
வீயாது பின்சென்று அடும்.

இதன் பதவுரை ---

     முருகேசா --- முருகப் பெருமானே, மூவர் மறையோர் --- மூன்று அந்தணர்கள்,  பாவம் எனாது --- பாவத்தை விளைக்கின்ற தீவினை என்று எண்ணாமல், அரன் செய் பற்றலின்--- சிவபிரானுக்குரிய நிலத்தைப் பற்றியபடியினால், வேந்தோடு அயர்ந்தார் --- அரசனோடு மாண்டார்கள். மேவ --- பொருந்த, எனைப்பகை உற்றாரும் உய்வர் --- எவ்வளவு கொடிய பகையை அடைந்தவர்களும் உயிர் பிழைப்பர், ஆனால், வினைப்பகை --- தீவினையாகிய பகையானது, வீயாது --- நீங்காமல், பின்சென்று அடும் --- பின்னாலேயே போய் வருத்தும்.

         மூன்று மறையவர்கள் சிவபிரானுக்குரிய பொருளைக் கைப்பற்றுதல் தீவினையை உண்டாக்கும் என்று எண்ணாமல் அரசனோடு மாண்டு ஒழிந்தார்கள். எவ்வளவு கொடிய பகையை அடைந்தவர்களும் உயிர் பிழைப்பர். ஆனால் தீவினைப் பகையோ நீங்காமல் பின்னாகவே சென்று வருத்துதலைச் செய்யும் என்பதாம்.

                                    மூவர் மறையோர் கதை

         முன்னாளிலே சிங்கள நாட்டிலே பூச்சக்கர நகரத்திலே தன்மியன் என்னும் பெயருடைய ஓர் அந்தணன் இருந்தான்.  அவன் தன்னுடைய பாக நிலத்தையும் பொருளையும் அரீச்சுரம் என்னும் திருக்கோயிலுக்குத் தானம் செய்துவிட்டுத் தான் தவம் செய்யச் சென்றான். பிறகு அவனுடைய தந்தையாகிய சவிதா என்பவன் அந்நிலம் தனக்குரியது என்று வழக்கிட்டான்.  அரசனால் தன்னுடைய பக்கத்திற்கு ஏற்பத் தீர்ப்பு பெற முடியவில்லை. சிலநாள் சென்ற பிறகு வேறு அரசனிடத்திலும் அந்நிலத்தைப் பற்றி வழக்கிட்டான். அவ் அரசனாலும் இவனுக்குத் தக்க தீர்ப்பு கிடைக்கவில்லை. ஊரார்கள் சவிதாவையும் அவனுடைய மக்கள் இருவரையும் சிவத் துரோகிகள் என்று இழித்துரைத்ததோடு நாட்டை விட்டுத் துரத்திவிட்டார்கள். சவிதா தன்னுடைய மக்களோடு மகத நாட்டிற்குப் போய் அந் நாட்டரசனால் பாதுகாக்கப்பட்டு இருந்தான். அவ் அசரனுடைய வேள்வி ஆசானாகிய வீராந்தகன் என்பவன் அரசனிடம், "இவர்கள் சிவத் துரோகிகள்; இவர்களைக் காப்பாற்றினால் உணக்கும் சிவத் துரோகம் உண்டாகும்; ஆகவே, இவர்களை நீக்கிவிடுக" என்று கூறினான். அரசன் இதற்கு உடன்பட்டு அவர்களை நீக்கவில்லை. அதனால் அவ் அரசனும் சிவத் துரோகியானான். சிவத் துரோகிகளாகிய நால்வரும் கொலை செய்யப்பட்டு மாண்டொழிந்தனர்.

     பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு விளக்கமாக அமைந்திருத்தலைக் காணலாம்...
                                                     

அவ்வினைக்கு இவ்வினை ஆம்என்று சொல்லும் அஃது அறிவீர்
உய்வினை நாடாது இருப்பதும் உம்தமக்கு ஊனம் அன்றே
கைவினை செய்து எம்பிரான் கழல் போற்றுதும் நாம் அடியோம்
செய்வினை வந்து எமைத் தீண்டப் பெறா திருநீலகண்டம்.
                                                            ---  திருஞானசம்பந்தர்.

இதன் பொழிப்புரை ---

     நாம் முற்பிறவிகளில் செய்த வினைகளுக்கு ஏற்பவே, இப்பிறவியில் வினைகளைச் செய்து அவற்றாலாய பயன்களை நுகர்கிறோம்` என்று சொல்லப் பெறுவதை நீங்கள் அறிவீர்கள். இவற்றிலிருந்து விடுதிபெறும் வழியை நீவிர் தேடாதிருப்பது உமக்குக் குறையன்றோ? நாம் அனைவரும் சிவபிரானுக்கு அடியவர்கள் ஆவோம். அவ்விறைவனை நோக்கிச் சரியை, கிரியை முதலான சிவப்பணிகளைச் செய்து அவ்விறைவன் கழலைப் போற்றுவோம். அவ்வாறு செய்யின் நாம் செய்த பழவினைகள் நம்மை வந்து அணுகா. இது திருநீலகண்டத்தின் மேல் ஆணை.


பந்தித்த பாவங்கள் எம்மையில் செய்தன இம்மை வந்து
சந்தித்த பின்னைச் சமழ்ப்பது என்னே, வந்து அமரர் முன்நாள்
முன்திச் செழுமலர் இட்டு முடிதாழ்த்து அடிவணங்கும்
நந்திக்கு முன்துற ஆட்செய்கிலா விட்ட நல் நெஞ்சமே.  --- அப்பர்.

இதன் பொழிப்புரை ---

     வந்து தேவர்கள் சந்நிதிக்கு முன் எய்திச் சிறந்த பூக்களைச் சமர்ப்பித்துத் தலையைத் தாழ்த்தித் திருவடிகளில் விழுந்து வணங்கும் சிவபெருமான் பக்கல் அடிமை செய்யாது நாளைப் பாழாக்கின நல்ல நெஞ்சமே! சென்ற பிறப்பில் செய்தனவாய் நம்மை விடாது பிணித்த பாவங்கள் இம்மையில் வந்து நமக்குப் பாவப் பயன்களை நல்கும் இந்நேரத்தில் அவை குறித்து வருந்துவதனால் பயன் யாது?

குற்றொருவரைக் கூறைகொண்டு
         கொலைகள் சூழ்ந்த களவு எலாம்
செற்று ஒருவரைச் செய்த தீமைகள்
         இம்மையே வரும் திண்ணமே;
மற்று ஒருவரைப் பற்று இலேன்,
         மறவாது எழு மடநெஞ்சமே!
புற்று அரவு உடைப் பெற்றம் ஏறி
         புறம்பயம் தொழப் போதுமே.   ---   சுந்தரர்.

இதன் பொழிப்புரை ---

     அறியாமையுடைய மனமே , பொருளைப் பறித்தல் வேண்டி அஃது உடைய ஒருவரைக் கருவியாற் குற்றி , அவர் உடையைப் பறித்து , மேலும் கொலைச் செயல்களைச் செய்யத் துணிந்த களவினால் ஆகிய பாவங்களும் , முறையில் நிற்கும் ஒருவரை முறை யின்றிப் பகைத்து , அப்பகை காரணமாக அவர்க்குத் தீங்கிழைத்த பாவங்களும் மறுமை வருங்காறும் நீட்டியாது இம்மையே வந்து வருத்தும் ; இது திண்ணம் ; ஆதலின் , அவைபோல்வன நிகழாதிருத்தற்கு உன்னையன்றிப் பிறர் ஒருவரையும் நான் துணையாகப் பற்றாது உன்னையே பற்றினேன் ; புற்றில் வாழும் பாம்புகளை அணிகளாக உடைய , இடப வாகனனது திருப்புறம்பயத்தை வணங்கச் செல்வோம் ; அவனை நினைந்து புறப்படுவாயாக.

முந்திச் செய்வினை இம்மைக் கண் நலிய
         மூர்க்கனாகிக் கழிந்தன காலம்
சிந்தித்தே மனம் வைக்கவும் மாட்டேன்
         சிறுச் சிறிதே இரப்பார்கட்கு ஒன்று ஈயேன்
அந்தி வெண்பிறை சூடும் எம்மானே
         ஆரூர் மேவிய அமரர்கள் தலைவா
எந்தை நீ எனக்கு உய்வகை அருளாய்
         இடைமருது உறை எந்தை பிரானே. --- சுந்தரர்.

இதன் பொழிப்புரை ---

     மாலைக்காலத்தில் தோன்றுகின்ற பிறையைச் சூடியவனே! திருவாரூரில் இருக்கும் தேவர் தலைவனே! என் தந்தையே! திருவிடைமருதூரில் எழுந்தருளியிருக்கின்ற எம் குலதேவனே! முற்பிறப்பிற் செய்த வினைகள் இப்பிறப்பில் வந்து துன்புறுத்துதலினால், அவற்றின் வயப்பட்டு மூர்க்கனாகி நிற்றலிலே காலமெல்லாம் போயின; நன்மை தீமைகளைச் சிந்தித்து, உலகப்பற்றை அகற்றி உன்னை மனத்தில் இருத்தவும் மாட்டாதேனாயினேன்; உலகியலிலும், இரப்பவர்கட்கு அவர் விரும்பியதொன்றை ஒரு சிறிது ஈதலும் செய்திலேன்; எனக்கு, நீ , உய்யும் நெறியை வழங்கியருளாய்.

இருங்கடல் உடுத்த இப் பெருங்கண் மாநிலம்
உடை இலை நடுவணது இடை பிறர்க்கு இன்றித்
தாமே ஆண்ட ஏமங் காவலர்
இடுதிரை மணலினும் பலரே; சுடுபிணக்
காடுபதி யாகப் போகி, தத்தம்
நாடு பிறர்கொளச் சென்று மாய்ந்தனரே;
அதனால், நீயும் கேண்மதி, அத்தை வீயாது
உடம்பொடு நின்ற உயிரும் இல்லை;
மடங்கல் உண்மை; மாயமோ அன்றே;
கள்ளி ஏய்ந்த முள்ளியம் புறங்காட்டு
வெள்ளில் போகிய வியலுள், ஆங்கண்
உப்பிலாஅ அவிப் புழுக்கல்
கைக்கொண்டு பிறக்கு நோக்காது,
இழிபிறப்பினோன் ஈயப் பெற்று,
நிலம் கலனாக விலங்குபலி மிசையும்
இன்னா வைகல் வாரா முன்னே,
செய்ந் நீ முன்னிய வினையே,
முந்நீர் வரைப்பகம் முழுது உடன் துறந்தே.

இதன் பதவுரை ---

     பெரிய கடலையே ஆடையாக உடுத்தி இருக்கும், பரந்த இந்த நிலவுலகத்தை, உடை மரத்தின் சிறிய இலை அளவு இடம்கூடப் பிறர்க்கு இல்லாமல், தனியாகத் தாமே முழுது ஆண்ட மன்னர்கள் கடல் மணலினும் எண்ணிறந்தவர். இப்படிப் பிறர்க்கு இடம் இன்றித் தாமே ஆண்ட மன்னர் பலரும், முடிவில் சுடுகாடே தமது வாழ்விடமாக மடிந்தனர். அவர்களுடைய நாடும் பிறருக்கு உரிமை ஆயின. எனவே, நான் சொல்வதைக் கேட்பாயாக. அழியாத உடம்போடு எந்த உயிரும் இருந்தது இல்லை. இது உலகம் உணர்ந்த உண்மை. பொய்யல்ல. இதில் மாறுபட்டுத் தடுமாற்றம் கொள்ளத் தேவையில்லை. கள்ளியும் முள்ளும் முளைத்துக் கிடக்கும் சுடுகாட்டில் உப்பு இல்லாமல் பொங்கிய வெறும் சோற்றுப் பிண்டத்தை, இழிமகன் தரப்பெற்று, பின், புறம் திரும்பிப் பார்க்காது, நிலத்தில் வைக்கும் பலிச் சோற்றை ஏற்கும் துயரம் மிக்க இறுதிக் காலம் உன்னை வந்து அடையும் முன்னே, இவ்வுலக வாழ்வைத் துறந்து நல்லறம் செய்ய நினைப்பாயாக.


வளம்பட வேண்டாதார் யார்யாரு மில்லை;
அளந்தன போகம் அவரவர் ஆற்றான் ;
விளங்காய் திரட்டினார் இல்லை, களங்கனியைக்
கார்எனச் செய்தாரும் இல்.     ---  நாலடியார்.

இதன் பவுரை ---

     வளம்பட வேண்டாதார் யார், யாரும் இல்லை --- செழுமை பெற விரும்பாதவர் உலகில் ஒருவருமில்லை, அளந்தன போகம் அவரவர் ஆற்றால் --- ஆனால் இன்பநுகர்வு அவரவர் முன்வினைப்படியே அளவு செய்யப்பட்டுள்ளன. விளங்காய் திரட்டினார் இல்லை களங்கனியைக் கார் எனச் செய்தாரும் இல் --- விளங்காயை உருண்டை வடிவினதாக அமைத்தவரும் இல்லை, களம்பழத்தைக் கரிய உருவினதாகச் செய்தவரும் இல்லையாதல் போல வென்க.

         அவ்வவற்றின் முறைப்படியே அவையவை அமைதலின், வளம் பெற விரும்புவோர் அதற்கேற்ப நல்வினை செய்தல் வேண்டும்.

உறற்பால நீக்கல் உறுவர்க்கும் ஆகா
பெறற்பால் அனையவும் அன்னவாம்; மாரி
வறப்பின் தருவாரும் இல்லை, அதனைச்
சிறப்பின் தணிப்பாரும் இல்.    --- நாலடியார்.

இதன் பதவுரை ---

     உறற்பால நீக்கல் உறுவர்க்கும் ஆகா --- உருத்து வரும் தீவினைகளை நீக்குதல் சான்றோர்க்கும் ஆகாது, பெறற்பால் அனையவும் அன்னவாம் --- அங்ஙனமே அடைந்து இன்புறற்குரிய நன்மைகளும் அப்பெரியோர்களால் தடை செய்தற்குரியன அல்லவாம், மாரி வறப்பின் தருவாரும் இல்லை, சிறப்பின் அதனைத் தணிப்பாரும் இல் --- மழை பெய்யாதொழியின் அதனைப் பெய்விப்பாரும் இல்லை ; மிகப் பெய்யின் அதனைத் தணிப்பாரும் இல்லையாதல்போல என்க.

         நல்வினை தீவினை ஆகிய இருவினைகளும் பொருந்தியே தீருமாதலின், தீவினைகளை நீக்கி நல்வினைகளைச் செய்தல் இன்றியமையாததாகும்.


ஈண்டுநீர் வையத்துள் எல்லாரும் எத்துணையும்
வேண்டார்மன் தீய ; விழைபயன் நல்லவை ;
வேண்டினும் வேண்டா விடினும் உறற்பால
தீண்டா விடுதல் அரிது.         ---  நாலடியார்.

இதன் பதவுரை ---

     ஈண்டு நீர் வையத்துள் --- மிக்க நீரையுடைய கடலாற் சூழப்பட்ட உலகத்தில், எல்லாரும் எத்துணையும் வேண்டார் தீய --- யாரும் சிறிதும் துன்பந்தருந் தீயவற்றை விரும்பமாட்டார்கள். விழை பயன் நல்லவை --- எல்லாரும் எவ்வளவும் விரும்புகின்ற பயன்கள் இன்பந்தரும் நல்லனவே, வேண்டினும் வேண்டாவிடினும் உறற்பால தீண்டாவிடுதல் அரிது --- மக்கள் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் அவர்கள்பால் வந்து பொருந்துதற்கு உரியன பொருந்தாது ஒழிதல் இல்லை.

         இன்பந் தரும் நல்லவற்றையே மக்கள் விரும்புதலால், அவற்றிற்கேற்றபடி நல்வினைகளைச் செய்து வரல்வேண்டும்.


புறப்பகை கோடியின் மிக்குஉறினும் அஞ்சார்
அகப்பகை ஒன்றுஅஞ்சிக் காப்ப அனைத்துலகும்
சொல்ஒன்றின் யாப்பார், பிரந்துஓம்பிக் காப்பவே
பல்காலும் காமப் பகை.        --- நீதிநெறிவிளக்கம்.

இதன் பொழிப்புரை ---

     உலகு அனைத்தும் --- உலகம் முழுமையும், சொல் ஒன்றின் --- (தமது) ஒரு வார்த்தையினாலே, யாப்பார் --- வயப்படுத்தக் கூடிய முனிவர், பல்காலும் --- பன் முறையும், காமப்பகை --- காமமாகிய உட்பகையை, பரிந்து ஓம்பி --- மிகுதியும் வருந்தி, காப்ப --- காவல் செய்வார் (அதுபோல் அறிவுடையார்), புறப்பகை --- வெளிப்பகை, கோடியின் மிக்குறினும் --- கோடிக்கு மேல் அதிகமாய் இருந்தாலும், அஞ்சார் --- (அதற்காக) அஞ்சாமல், அகப்பகை - உட்பகை ஒன்று --- ஒன்றேயானாலும், அஞ்சிக் காப்ப –-- (அதன் துன்பம் பெரிதாகையால்) அதனை அஞ்சிக் காவல்செய்வர்.

     புறப்பகைவரை விட அகப்பகைவர்க்கு அஞ்சுதல வேண்டும். அகப்பகை --- வினைப்பகை.


கற்பித்தான் நெஞ்சு அழுங்கப் பகர்ந்து உண்ணான்,விச்சைக்கண்
தப்பித்தான் பொருளேபோல், தமியவே தேயுமால்,
ஒற்கத்துள் உதவியார்க்கு உதவாதான்; மற்று அவன்
எச்சத்துள் ஆயினும், அஃது எறியாது விடாதே காண்;
கேளிர்கள் நெஞ்சு அழுங்கக் கெழுவுற்ற செல்வங்கள்
தாள் இலான் குடியே போல், தமியவே தேயுமால்,
சூள் வாய்த்த மனத்தவன் வினை பொய்ப்பின்; மற்று அவன்
வாள் வாய் நன்று ஆயினும், அஃது எறியாது விடாதே காண். ---  கலித்தொகை.

அரைசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று ஆவதூஉம்,
உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும்,
ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்பதூஉம்,
சூழ்வினைச் சிலம்பு காரணமாகச்
சிலப்பதிகாரம் என்னும் பெயரால்
நாட்டுதும் யாம்ஓர் பாட்டுடைச் செய்யுள் என... ---  சிலப்பதிகாரம், பதிகம்.
        
இதன் பதவுரை ---

     அரைசு இயல் பிழைத்தோர்க்கு --- அரசர் முறை செய்தலிற் சிறிது வழுவினும் அவர்க்கு, அறம் கூற்று ஆவதூஉம் --- அறக் கடவுளே கூற்றமாகும் என்பதுவும், உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும் --- புகழமைந்த கற்புடை மகளை மக்களே அன்றித் தேவர் முனிவர் முதலாயினாரும் ஏத்து தல் இயல்பு என்பதும், ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்பதூஉம் --- முன் செய்த தீவினை உருக்கொண்டு வந்து தன் பயனை நுகர்விக்கும் என்பதும், சூழ்வினைச் சிலம்பு காரணம் ஆக --- சிற்ப வினை பொருந்திய சிலம்பு காரணமாகத் தோன்றினவாதலின், சிலப்பதிகாரம் என்னும் பெயரால் --- சிலப்பதிகாரம் என்னும் பெயருடன், நாட்டுதும் யாம் ஓர் பாட்டுடைச் செய்யுள் என --- ஒரு காப்பியமாக நாம் அம் மூன்றுண்மை களையும் நிறுத்துதும் என்று அடிகள் சொல்ல...

ஆங்குஅவன் மனைவி அழுதனள் அரற்றி   
ஏங்கிமெய் பெயர்ப்போள் இறுவரை ஏறி               
இட்ட சாபம் கட்டியது ஆகும்  
உம்மை வினைவந்து உருத்தல்ஒழி யாதுஎனும்  
மெய்ம்மைக் கிளவி விளம்பிய பின்னும்     
சீற்றம் கொண்டு செழுநகர் சிதைத்தேன்....
                                         ---  மணிமேகலை, வஞ்சிமாநகர் புக்க காதை.

இதன் பதவுரை ---

     ஆங்கவன் மனைவி அழுதனள் அரற்றி --- அச் சங்கமன் மனைவியாகிய நீலி என்பவள் அழுது புலம்பிக்கொண்டு, ஏங்கி மெய் பெயர்ப்போள் இறுவரை ஏறி --- ஏக்கத்துடன் பெரிய மலையின் மீதேறி விழுந்து உயிர் துறப்பவள், இட்ட சாபம் கட்டியதாகும் --- எனக்கு இம்மையில் இன்னல் புரிந்தவர் மறுமையில் இக்கதி உறுவாராக என்று கூறிய சாபமானது இப்பொழுது பந்தித்ததாகும், உம்மை வினை வந்து உருத்தல் ஒழியாது எனும் --- பழவினை வந்து பற்றுதல் நீங்காது என்கின்ற, மெய்ம்மைக் கிளவி விளம்பிய பின்னும் --- உண்மை மொழிகளை உரைத்த பின்னரும், சீற்றங்கொண்டு செழுநகர் சிதைத்தேன் --- சினங்கொண்டு அவ் வள நகரத்தினை அழித்தேன்.


"உயிர்புகும் சட்டகம் உழிதொறும் உழிதொறும்
பழவினை புகுந்த பாடகம் போல
முதிர்புயல் குளிறும் எழுமலை புக்க
கட்டு உடைச் சூர் உடல் காமம் கொண்டு
பற்றி உள் புகுந்து பசுங்கடல் கண்டு                    
மாவொடும் கொன்ற மணிநெடும் திருவேல்
சேவலங் கொடியோன்"                   ---  கல்லாடம்.

இதன் பதவுரை ---

     உயிர் புகும் சட்டகம் உழிதொறும் உழிதொறும் --- உயிர் பொருந்துதற்கு இடமாகிய உடம்பு இடந்தொறும் உடம்பு இடந்தொறும்;  பாடகம் போல பழவினை புகுந்த --- இடைவிடாது காலைப் பாடகம் சூழ்ந்து கிடந்தால் போலச் சூழ்ந்து கிடந்த பழவினை கொல்லும் விருப்பம் கொண்டு தொடர்ந்து உள் புகுந்தால் போல;  முதிர் புயல் குளிரும் எழுமலை புக்க --- சூல் முதிர்ந்த முகில் முழங்கா நின்ற ஏழு மலையினும் புகுதற்குக் காரணம் ஆன;  கட்டு உடைச் சூர் உடல் --- கட்டினை உடைய சூரபன்மனது உயிரினைப் பருகும்;  காமம் கொண்டு பற்றி உள் புகுந்து --- விருப்பம் கொண்டு அவனைத் தொடர்ந்து சென்று கடலினுள் புகுந்து;  பசுங் கடல் கண்டு --- பசிய அக் கடலிடத்தே அவனைக் கண்டு;  மாவொடும் கொன்ற --- அவன் மறைதற்கு இடமான மாமரத்தோடே கொன்ற;  மணி நெடுந் திருவேல் சேவலங் கொடியோன் --- வீரமணி கட்டிய நெடிய அழகிய வேலினையும் கோழிச் சேவற் கொடியினையும் உடையோனாகிய முருகப்பெருமான்.

'எவ் உலகங்களும் இமைப்பின் எய்துவர்,
வவ்வுவர், அவ் வழி மகிழ்ந்த யாவையும்;
வெவ் வினை வந்தென வருவர், மீள்வரால்;
அவ் அவர் உறைவிடம் அறியற்பாலதோ?  ---  கம்பராமாயணம், கலன்காண் படலம்.

இதன் பதவுரை ---

     இமைப்பின் --- (அவ்வரக்கர்கள்) கண் இமைக்கும் நேரத்தில்; எவ் உலகங்களும் --- எல்லா உலகங்களையும்; எய்துவர் --- சென்று அடைவர்; அவ்வழி --- தான் சென்ற அவ்விடங்களில்; மகிழ்ந்த யாவையும் --- தாம் விரும்பிய பொருள்கள் எல்லாவற்றையும்; வவ்வுவர் --- வலிந்து கவர்ந்து கொள்வர்; வெவ்வினை வந்தென --- (செய்த செயல்களுக்கேற்பப் பயனூட்ட வரும்) கொடிய வினை வந்தது போல; வருவர் --- (வருத்த) வருவர்; மீள்வர் --- அவ்வினை, பயனை ஊட்டியபின் செல்வது போல, உயிர்களை வருத்திய பின்னர்த் திரும்பிச் செல்வர்; அவ் அவர் உறைவிடம் --- அத்தன்மையை உடைய அரக்கர்கள் வாழும் இருப்பிடம்; அறியற்பாலதோ --- நம்மால் அறியக்கூடியதோ? (அன்று).

     அரக்கர் தாம் வேண்டும் இடத்திற்கு வேண்டியபோது சென்று பிறரை வருத்தி மீளும் இயல்பினராதலின் அவர்கள் தங்குமிடம் கணித்தற்கு அரிதாகின்றது. உயிர்களை அவை செய்தவினை தொடரும்.

'நீ அயன் முதல் குலம் இதற்கு ஒருவன் நின்றாய்;
ஆயிரம் மறைப் பொருள் உணர்ந்து, அறிவு அமைந்தாய்;
தீயினை நயப்புறுதல் செய்தனை தெரிந்தாய்;
ஏயின உறத் தகைய இத்துணையவேயோ?
                                            ---  கம்பராமாயணம், இராவணன் மந்திரப் படலம்.

இதன் பதவுரை ---

     நீ அயன் முதற் குலம் இதற்கு --- அண்ணா, நீ  பிரமதேவன்   முதல்வனாக உள்ள இந்தக் குலத்தில்;  ஒருவன் நின்றாய் --- ஒப்பற்றவனாய் நிலைத்திருக்கிறாய்;  ஆயிரம் மறைப்பொருள் ---    ஆயிரமாயிரமான  வேதங்களின் பொருளை எல்லாம்;  உணர்ந்து  அறிவு  அமைந்தாய் --- தெரிந்து நல்லறிவுடையவனாய் இருக்கிறாய்; தீவினை நயப்புறுதல் செய்தனை தெரிந்தாய் --- இருந்தும் தீய செயல்களை விரும்பித் தெரிந்தே செய்தாய்; ஏயின உறத் தகைய --- விதியால் ஏவப்பட்டனவாய் நம்பால்
அடையக் கூடியவை;   இத்துணைவேயோ ---  இவ்வளவுடையன மட்டுமோ?

தானே புரிவினையால் சாரும் இருபயனும்,
தானே அனுபவித்தல் தப்பாது, - தான் நூறு
கோடிகற்பம் சென்றாலும், கோதையே! செய்தவினை
நாடிநிற்கும் என்றார் நயந்து.        ---  நீதிவெண்பா.

இதன் பொருள் ---

     பெண்ணே! எண்ண முடியாத கோடி கோடி யுகங்கள் கடந்து விட்டாலும், ஒருவனை அவன் செய்த வினைகள் விரும்பி எப்படியும் வந்து சேரும் என்று பெரியோர் கூறுவர். ஆதலால், ஒருவன் தானே செய்த இருவினையினால் வந்து சேரக் கூடிய இரண்டு பயன்களும், செய்த அவனே அடைந்து அனுபவித்தல் தவறாது.

(புரிவினை - செய்த நல்வினை தீவினை இரண்டும்.  இருபயன் - இன்பமும் துன்பமும்.  கற்பம் - ஊழி, யுகம்.)

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...