018. வெஃகாமை - 04. இலமென்று





திருக்குறள்
அறத்துப்பால்

இல்லற இயல்

அதிகாரம் 18 - வெஃகாமை

     இந்த அதிகாரத்தில் வரும் நான்காம் திருக்குறள், "ஐம்புலன்களையும் வென்ற குற்றம் இல்லாத அறிவினை உடையவர், தமது வறுமையை நீக்கிக்கொள்ளுதல் பொருட்டு, பிறர் பொருளுக்கு ஆசைப்பட்டு, அதனைக் கவர்ந்து கொள்ள மாட்டார்" என்கின்றது.

     ஐம்புலன்களையும் வெல்லுதல் என்பது, அவற்றைப் பாவ வழியில் செல்ல விடாமல் அறிவால் தடுத்தல். ஐம்புலன்களை வென்றவர்க்கு, ஆசை இல்லாமையால், வறுமை இல்லை. அவ்விரண்டும் இல்லாமையால் பிறர் பொருளை விரும்புதலும் இல்லை ஆயிற்று. குற்றம் இல்லாத அறிவு என்பது, நித்திய அநித்தியங்களை உணர்ந்து தெளிந்த அறிவு ஆகும்.

திருக்குறளைக் காண்போம்...

இலம் என்று வெஃகுதல் செய்யார், புலம் வென்ற
புன்மை இல் காட்சி அவர்.

இதற்குப் பரிமேலழகர் உரை ---

     இலம் என்று வெஃகுதல் செய்யார் --- 'யாம் வறியம்' என்று கருதி, அது தீர்தற்பொருட்டுப் பிறர் பொருளை விரும்புதல் செய்யார்;

     புலம் வென்ற புன்மை இல் காட்சியவர் --- ஐம்புலன்களையும் வென்ற குற்றமில்லாத காட்சியினை உடையார்.

      (வெல்லுதல்: பாவ நெறிக்கண் செல்ல விடாமை. புலம்வென்ற புன்மை இல் காட்சியவர்க்கு வறுமை இன்மையின், வெஃகுதலும் இல்லையாயிற்று. புன்மையில் காட்சி: பொருள்களைத் திரிபு இன்றி உணர்தல்.)

     இத் திருக்குறளுக்கு விளக்கமா, கமலை வெள்ளியம்பலவாண முனிவர் பாடியருளிய "முதுமொழி மேல் வைப்பு" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்....

இரந்துண்டு வாழ்ந்தும் இறைவர், புலவர்
இரந்த பொருள் கவர்ந்து, அது ஈந்தார், --- மறந்தும்
இலம் என்று வெஃகுதல் செய்யார், புலம் வென்ற
புன்மைஇல் காட்சி அவர்.                     
        
         புலவர் என்றது சுந்தரமூர்த்தி நாயனாரை. சேரமான் பெருமாள் நாயனார் சுந்தரமூர்த்தி நாயனாருக்கு அளித்த நிதியைத் திருமுருகன்பூண்டியின் அருகில் பூதகணங்களை வேடுவராக அனுப்பி, சிவபிரான் கவர்ந்துகொண்டு, சுந்தரர் "கொடுகு வெஞ்சிலை வடுக வேடுவர்" என்ற அற்புதமான திருப்பதிகத்தைப் பாடி வேண்ட, மீண்டும் அதனை வருவித்துக் கொடுத்த செய்தியை இது புலப்படுத்தும். சிவபெருமான் இரந்து உண்டு வாழ்பவராக இருந்தும், சுந்தரமூர்த்த நாயனாருக்கு உரிய பொருளைக் காவர்ந்து தாமே அனுபவிக்கக் கருதாமல், மீண்டும் அவருக்கே கொடுத்து அருஉள் புரிந்தமை காண்க.

     பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு விளக்கமாக அமைந்திருத்தலைக் காணலாம்...

புலன்களைப் போக நீக்கிப்
     புந்தியை ஒருங்க வைத்து,
இலங்களைப் போக நின்று
     இரண்டையும் நீக்கி ஒன்றாய்
மலங்களை மாற்ற வல்லார்
     மனத்தினுள் போகம் ஆகிச்
சினங்களைக் களைவர் போலும்
     திருப்பயற் றூர னாரே.           ---  அப்பர்.

இதன் பொழிப்புரை ---

     திருப்பயற்றூர் என்னும் திருத்தலத்திலே எழுந்தருளி இருக்கும் சிவபரம்பொருள், சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற ஐம்புல நுகர்ச்சிகளையும் அடியோடு போக்கி, உள்ளத்தை ஒருவழிப்பட நிலைநிறுத்தி, மூலாதாரம் முதலிய ஆறு ஆதாரங்களையும் கடக்க நான், தான் என்ற இரண்டையும் நீக்கி அவனே தானே ஆகிய அந்நெறியாளராய், மாயை, கன்மம் என்ற மலங்களைச் செயற்படாதவாறு செய்ய வல்ல அடியவர் மனத்திலே இன்பவடிவினராய்ச் சினத்தை விளைக்கும் பிறவித் துன்பங்களை நீக்கி நிற்பவராவர்.

மாறி நின்று என்னை மயக்கிடும் வஞ்சப்
     புலன் ஐந்தின் வழி அடைத்து, அருதே
ஊறி நின்று, ன்னுள் எழு பரஞ்சோதி!
     உள்ளவா காண வந்து அருளாய்,
தேறலின் தெளிவே! சிவபெரு மானே!
     திருப்பெருந்துறை உறை சிவனே!
ஈறுஇலாப் பதங்கள் யாவையும் கடந்த
     இன்பமே! என்னுடை அன்பே!.       ---  திருவாசகம்.

இதன் பொழிப்புரை ---

     தேனின் தெளிவானவனே!  சிவபெருமானே!  திருப்பெருந்துறையில் உறைகின்ற சிவனே!  அளவில்லாத பதவிகள் எல்லாவற்றையும் கடந்து நின்ற ஆனந்தமே! என்னுடைய அன்பின் உருவமே!  பகைத்து நின்று என்னை மயங்கச் செய்து, வஞ்சனையைச் செய்கின்ற ஐம்புலன்களின் வாயில்களையும் அடைத்து, அமுதமே சுரந்து நின்று, என்னகத்தே தோன்றுகின்ற மேலான ஒளியே! உன்னை யான் உள்ளவாறு காணும்படி வந்து அருள்வாயாக.

வென்றிடல் ஆகும் விதிவழி தன்னையும்,
வென்றிடல் ஆகும் வினைப்பெரும் பாசத்தை,
வென்றிடல் ஆகும் விழை புலன் தன்னையும்,
வென்றிடு மங்கைதன் மெய் உணர்வோர்க்கே.---  திருமந்திரம்.

இதன் பொழிப்புரை ---

     யாவரது ஆற்றலையும், எப்பொருளது ஆற்றலையும் வெல்லும் பேராற்றலை உடையவளாகிய சிவசத்தியினது உண்மை நிலையைத் தவத்தால் உணரவல்லவர்க்கு` விதியின் வழியாகிய பிறப்பு, அப்பிறப்பிற்கு முதலாகிய வினை, எனப்படுகின்ற அந்தப் பெரியகட்டு, அதனால், வந்து சார்ந்து மயக்குகின்ற ஐம் புலன்கள் என்னும் இவ்வனைத்துத் தீமைகளையும் வெல்லுதல் கூடும்.


அஞ்சக்கரம் என்னும் கோடாலி கொண்டு இந்த ஐம்புலனாம்
வஞ்சப் புலக்கட்டை வேர் அற வெட்டி, வளங்கள் செய்து,
விஞ்சத் திருத்தி, சதாசிவம் என்கின்ற வித்தை இட்டு,
புன்செய்க் களை பறித்தேன், வளர்த்தேன் சிவபோகத்தையே.---  பட்டினத்தார்.

இதன் பொழிப்புரை ---

     ஐம்புலன்கள் ஆகின்ற வஞ்சப் புலக் காட்டை, திருவைந்தெழுத்து என்கிற கோடாரி கொண்டு வேர் ஆற வெட்டி, அவைகளின் வாதனைகளை மறத்தல் என்னும் வளங்களை உண்டாக்கி, சதாசிவம் என்னும் விதையை விதைத்து, தத்துவக் கூட்டமாகிய களைகளைப் பறித்து, சிவபோகமாகிய பயிரை வளர்த்தேன்.

     ஒருவனுக்கு திருவைந்தெழுத்தை செபிக்கும் நிலை வாய்க்குமானால், அவனது ஐம்புலச் சேட்டைகள் ஒடுங்கும். ஒடுங்கினால் மனம் நிலைபெறும். பெற்றால், அது சிவஞானத்துக்கு ஏதுவாகி, சிவபோகத்தை விளைவிக்கும்.


மடங்கிப் பசிப்பினும் மாண்புடை யாளர்
தொடங்கிப் பிறருடைமை மேவார் - குடம்பை
மடலொடு புட்கலாம் மால்கடல் சேர்ப்ப!
கடலொடு காட்(டு) ஒட்டல் இல்.     ---  பழமொழி நானூறு.

இதன் பதவுரை ---

     குடம்பை மடலொடு புள்கலாம் மால்கடல் சேர்ப்ப --- கூடு பொருந்திய மடல்களோடு பறவைகள் விரவா நின்ற பெரிய கடலையுடைய நெய்தல்நிலத் தலைவனே!, கடலோடு காடு ஒட்டல் இல் --- கடலோடு துரும்பு பொருந்துதல் இல்லை (அதுபோல), மடங்கி பசிப்பினும் --- (தமது உடம்பு) ஒடுங்கும்படி பசித்தாராயினும், மாண்புடையாளர் --- மாட்சிமை உடையார், பிறர் உடைமை தொடங்கி மேவார் --- பிறர் பொருளைத் தாம் கொள்ளத் தொடங்க விரும்பார்.

மடங்கப் பசிப்பினும் என்றது, உயிர் போகும் அளவு பணி வந்த காலத்தும் என்றது. கடல் துரும்பினைத் தன்னோடு கொள்ளாது ஒதுக்குதல்போல், பெரியோர் பிறர் பொருளை விரும்பாது நீக்குவார்கள்.  காடு - துரும்பு.

நிறைநெஞ் சுடையானை நல்குர வஞ்சும்,
அறனை நினைப்பானை அல்பொருள் அஞ்சும்,
மறவனை யெவ்வுயிரும் அஞ்சும் இம் மூன்றும்
திறவதில் தீர்ந்த பொருள்.      ---  திரிகடுகம்.

இதன் பதவுரை ---

     நிறை நெஞ்சு உடையானை நல்குரவு அஞ்சும் - புலன்கள்மேற் போகாமல் நிறுத்தப்படும் நெஞ்சுடையவனுக்கு வறுமை பயப்படும்;  அறனை நினைப்பானை அல்பொருள் அஞ்சும் --- அறத்தையே நினைக்கின்றவனுக்கு பாவம் பயப்படும்மறவனை எவ்வுயிரும் அஞ்சும் --- கொலையாளிக்கு எல்லா உயிர்களும் பயப்படும் இ மூன்றும் திறவதில் தீர்ந்த பொருள் --- இந்த மூன்றும் வன்மைகளுள் சிறப்பாக முடிந்த பொருள்களாம்.

         வறுமை நிறைநெஞ்சுடையானைச் சேரவும், மறம் அறநினைப்பாளனை அணுகவும், எவ்வுயிரும் கொலையாளியைக் காணவும் அஞ்சும் என்பது கருத்து.

பொய்ப்புலன்கள்  ஐந்துநோய் புல்லியர் பாலன்றியே
மெய்ப்புலவர் தம்பால் விளையாவாம் - துப்பிற்
சுழன்றுகொல் கல்தூணைச் சூறா வளிபோய்ச்
சுழற்றும் சிறுபுன் துரும்பு.        ---  நன்னெறி.

இதன் பொழிப்புரை ---

     சூறவளியானது சிறு துரும்பைச் சுழற்றும். கல் தூணைச் சுழற்றாது. அதுபோல, ஐம்புலன்களால் வரும் துன்பமானது புல்லறிவாளரிடத்திலே விளையும். மெய்யறிவாளருக்குத் துன்பம் நேராது.

         புல்லியர் - இழிந்தோர். மெய்ப்புலவர் - மெய்யறிவாளர்கள். துப்பு - வலிமை. புலன்கள் ஐந்தாவன: மெய், வாய், கண், மூக்குச், செவி என்பன. இவைகளால் அறியப்படுவன, ஊறு, சுவை, உருவம், நாற்றம், ஓசை ஆவனவாம். அற்பர்கள் புலன்கள் வழிப்பட்டுத் துன்பப்படுவர், உண்மையறிவு வாய்ந்தவர்கள் அவைகளால் துன்பப்படார்.

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...