021. தீவினை அச்சம் - 05. இலன் என்று




திருக்குறள்
அறுத்துப்பால்

இல்லற இயல்

அதிகாரம் 21 - தீவினை அச்சம்

     இந்த அதிகாரத்தில் வரும் ஐந்தாம் திருக்குறள், "இப்போது வறுமையில் உள்ளதாக நினைத்து, அவ் வறுமை நீங்குவதற்காக, தீய செயல்களை ஒருவன் செய்யாது இருக்கவேண்டும்; செய்வானானல் பின்னும் மாறி வறுமையை உடையவனாக ஆவான்" என்கின்றது.

     வறுமை நீங்கும் பொருட்டுப் பிறர்க்குத் தீமை புரிகின்றவன், மீண்டும் பிறவிகள் தோறும் வறுமையை உடையவன் ஆவான்.

திருக்குறளைக் காண்போம்...

இலன் என்று தீயவை செய்யற்க, செய்யின்
இலன் ஆகும் மற்றும் பெயர்த்து.

இதற்குப் பரிமேலழகர் உரை ---

     இலன் என்று தீயவை செய்யற்க --- யான் வறியன் என்று கருதி அது தீர்தற்பொருட்டுப் பிறர்க்குத் தீவினைகளை ஒருவன் செய்யாது ஒழிக,

     செய்யின் பெயர்த்தும் இலன் ஆகும் - செய்வானாயின் பெயர்த்தும் வறியன் ஆம்.

         (அத் தீவினையால் பிறவிதோறும் இலன் ஆம் என்பதாம். அன் விகுதி முன் தனித்தன்மையினும் பின் படர்க்கை ஒருமையினும் வந்தது. தனித்தன்மை 'உளனா என் உயிரை உண்டு' (கலித்.குறிஞ்சி.22) என்பதனாலும் அறிக. மற்று - அசை நிலை. 'இலம்' என்று பாடம் ஓதுவாரும் உளர். பொருளான் வறியன் எனக் கருதித் தீயவை செய்யற்க, செய்யின், அப்பொருளானே அன்றி, நற்குண நற்செய்கைகளாலும் வறியனாம், என்று உரைப்பாரும் உளர்.)

     இத் திருக்குறளுக்கு, பின்வரும் பாடல் ஒப்பாக அமைந்துள்ளது காண்க...

புத்தியொடு முத்திதரும் புண்ணியத்தால் அன்றியே,
மத்தம் மிகு பாவத்தால் வாழ்வு ஆமோ? - வித்துபயிர்
தாயாகியே வளர்க்கும் தண்புனலால் அல்லாது
தீயால் வளருமோ செப்பு.       ---  நீதிவெண்பா.

இதன் பொழிப்புரை ---

     விதைத்து உண்டாகும் நெற்பயிர், தாயைப் போலவே இருந்து தன்னை வளர்க்கும் குளிர்ந்த நீரால் விளைவது அல்லாமல், நெருப்பினால் வளருமோ? நீ சொல். அதுபோல, அறிவையும் வீடுபேற்றையும் கொடுக்கும் நல்வினையால் அல்லாமல், அறியாமை மிகுகின்ற தீவினையால் ஒருவருக்கு நல்வாழ்வு உண்டாகுமோ? உண்டாகாது. நல்வினையாலேயே உண்டாகும்.

(முத்தி --- வீடுபேறு. மத்தம் --- அறியாமை. தண்புனல் --- தண்ணீர்.)

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...