017. அழுக்காறாமை - 09. அவ்விய நெஞ்சத்தான்






திருக்குறள்
அறத்துப்பால்

இல்லற இயல்

அதிகாரம் 17 - அழுக்காறாமை

     இந்த அதிகாரத்தில் வரும் ஒன்பதாம் திருக்குறள், "மனக்கோட்டம் காரணமாகப் பொறாமை கொண்டவனுக்கு உண்டாகும் செல்வப் பெருக்கும், செம்மையான மனத்தினை உடையவனது வறுமையும் ஆராயப்படும்" என்கின்றது.

     பொறாமை உடையவன்பால் செல்வமும், அது இல்லாதவனிடத்தில் வறுமையும் உண்டாவது இல்லை. இதற்குக் காரணம், அவரவரின் பழவினையே. ஏனவே, அதை நினைத்துப் பார்க்கவேண்டும் என்கின்றது.

     இந்த உண்மை சிலப்பதிகாரத்துள் அடைக்கலக் காதையில் காட்டபட்டுள்ளது.
    
     கோவலன் கவுந்தியடிகட்கு மதுரையின் சிறப்பையும் பாண்டியன் கொற்றத்தையும் கூறும்பொழுது, தலைச் செங்கானத்து மறையவனாகிய மாடலன் என்பவன், குமரியாடி மீண்டு வந்த வழிநடை வருத்தம் நீங்கக் கவுந்தி அடிகள் இருக்குமிடத்தை அடைந்தான். கோவலன் அவனைக் கண்டு வணங்க, அவன் கோவலனை நோக்கி, "மாதவியின் மகளுக்கு மணிமேகலை என்று பெயரிட்டு வாழ்த்தித் தானம் கொடுக்கும்பொழுது தானம் பெறுதற்கு வந்த முதுமறையோனை மதயானை பற்ற அதன் கையினின்றும் அவனை விடுவித்து, அதன் கையகத்தே புக்குக் கோட்டிடை ஒடுங்கிப் பிடரில் ஏறி அதனை அடக்கிய கருணை மறவனே! தான் வளர்த்ததும் தன் மகவின் உயிரைக் காத்ததுமாகிய கீரியைப் பிறழ உணர்ந்து கொன்ற குற்றத்திற்காகக் கணவனால் துறக்கப்பட்ட பார்ப்பனியின் பாவம் நீங்கத் தானம் செய்து, கணவனை அவளுடன் கூட்டி, அவர்கள் வாழ்க்கைக்கு மிக்க செல்வத்தையும் கொடுத்த செல்லாச் செல்வனே! பத்தினி ஒருத்தி அடாப்பழி எய்தப் பொய்ச் சான்று கூறிச் சதுக்கப் பூதத்தால் கொல்லப்பட்டவனுடைய தாயின் துயர் நீங்க அவன் சுற்றத்தோர்க்கும் கிளைகட்கும் பொருள் ஈந்து பல்லாண்டு புரந்த இல்லோர் செம்மலே! நான் அறிய நீ இப்பிறவியில் செய்தன எல்லாம் நல்வினையாகவே இருக்க, இம் மாணிக்கக் கொழுந்துடன் நீ இங்ஙனம் போந்தது உம்மைப் பயனோ?' "என வினவினான்.

     கோவலன் தான் கண்ட தீக்கனாவைக் கூறி, அதன் பயனான துன்பம் விரைவில் உண்டாகுமெ் என்று உரைக்க, மறையவனும் கவுந்தியும் "இவ்விடம் துறந்தோர்க்கே உரியதாகலின், நீ மதுரையிற் புகுக" என்று கூறினர். அப்பொழுது அங்கு வந்த ஆயர் முதுமகளாகிய மாதிரி கவுந்தியடிகளைக் கண்டு வணங்கினாள். கொடுமையில்லாத வாழ்க்கையையுடைய கோவலர் குடியின் முதுமகளும் செவ்வியளுமாகிய இவளிடத்துக் கண்ணகியை இருத்துதல் குற்றம் அல்ல என்று எண்ணி, கண்ணகியின் உயர்வையும் கற்பின் சிறப்பையும் கூறி, தவத்தினரது அடைக்கலத்தைப் பாதுகாத்தலால் எய்தும் பெரும்பயனுக்கு ஓர் வரலாற்றையும் காட்டி, அவளை மாதரிபால் ஒப்புவிக்க, அவள் கவுந்தியை ஏத்தி நங்கையுடன் தன் மனையை அடைந்தாள்.]

இம்மைச் செய்தன யானறி நல்வினை
உம்மைப் பயன்கொல் ஒருதனி யுழந்தித்
திருத்தகு மாமணிக் கொழுந்துடன் போந்தது
விருத்த கோபால நீ என வினவ....
        
இதன் பதவுரை ---

      விருத்த கோபால --- அறிவால் முதிர்ந்த கோவலனே!  நீ இம்மைச் செய்தன யான் அறி நல்வினை --- யான் அறிய இப் பிறப்பின்கண் நீ செய்தன யாவும் நல்வினையே யாகவும், உம்மைப் பயன்கொல் ஒரு தனி உழந்து இத் திருத்தகு மாமணிக் கொழுந்துடன் போந்தது --- ஒப்பற்ற தனிமையான் வருந்தி இத் திருவினை ஒத்த மாணிக்கத் தளிருடன் இவண் புகுந்தது முற்பிறப்பில் செய்த தீவினையின் பயனேயோ, என வினவ - என்று மாடலன் கேட்க...

     பட்டினத்தடிகளின் துறவு நிலை எல்லோரும் அறிந்த்தே. கடல் அளவு செல்வத்தைத் துறந்தவர். அவர் பல தலங்களைத் தரிசித்து, உஞ்சேனை மாகாளம் சென்று மாகாளேசுவரரை வசங்கி, ஊர்ப்புறத்தில் உள்ள ஒரு காட்டில் உள்ள வியாகர் ஆலயத்தில் சென்று நிட்டை கூடி இருந்தார். அவ்வாறு இருக்கையில், அந்த ஊரை ஆள்பவராகிய பத்திரகிரி மன்னனின் அரண்மையில் சில கள்வர் புகுந்து, விலை உயர்ந்த அணிகலன்கள் பலவற்றைக் கவர்ந்து, செல்லுகின்ற வழியில், தமது கோரிக்கை, காட்டில் உள்ள பிள்ளையாரின் கருணையால் நிறைவேறியது என்று கருதி, அவருக்கு ஒரு அணிகலனை அளிக்க வேண்டி, ஒரு இரத்தின மாலையை விநாயகர் மீது வீச்ச் சென்றனர். இரவு நேரமாகையால், அந்த அணிகலனானது அங்கே நிட்டை கூடி இருந்த, பட்டினத்தடிகளின் கழுத்தில் விழுந்தது.

     திருடர்களைத் தேடி வந்த அரண்மனைக் காவலர்கள், பட்டினத்தடிகளின் கழுத்தில் இருந்த இரத்தினமாலையைக் கண்டு, இவர் தான் திருடர் கூட்டத்தில் ஒருவராக இருக்கவேண்டும் என்று கருதி, பட்டினத்தடிகளை வருத்தி, திருடர் கூட்டத்தாரைக் காட்டுமாறு துன்புறுத்தினர். அடிகள் எல்லாவற்றிற்கும் "சிவசிவ" என்றே பதில் இறுத்து வந்தார். காவலர்களுள் ஒருவன் ஓடி, அரசனிடம் சென்று, "கள்வரின் தலைவன் காட்டுப்பிள்ளையார் கோயிலில் அகப்பட்டான்" என்றான். அரசன் ஆணைப்படி, பட்டினத்தடிகளை மன்னன் முன் கொண்டு வந்து நிறுத்தினர். பட்டினத்தடிகளைக் கழுவில் ஏற்றுமாறு மன்னன் ஆணையிட்டான். அடிகள் புன்னகையோடு கழுமரத்தின் முன் நின்று, இறைவனை நினைந்து,

"என்செயல் ஆவது  யாதொன்றும் இல்லை, இனித் தெய்வமே!

உன்செயலே என்று உணரப் பெற்றேன், இந்த ஊன் எடுத்த

பின் செய்த தீவினை யாதொன்றும் இல்லை, பிறப்பதற்கு

முன்செய்த தீவினையோ இங்ஙனே வந்து மூண்டதுவே"


என்று பாடினார். உடனேகழுமரம் தீப் பற்றி எரிந்தது. இதனை அறிந்த மன்னன் ஓடோடி வந்து, கழுமரத்தின் அருகில் இருக்கும் தவக் கொழுந்தாகிய பட்டினத்தடிகளைப் பணிந்து அவரத் சீடன் ஆனான்.

     இந்த உண்மைகளால், பொறாமைக் குணம் உடைவன் செல்வன் ஆவதும், நல்ல மனம் உடையவன் வறியவன் ஆவதும், முன் வினைப் பயனே என்று தெளிதல் வேண்டும் என்பது வறுபுறுத்தப்பட்டது அறிக.

திருக்குறளைக் காண்போம்...

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும், செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்.

இதற்குப் பரிமேலழகர் உரை ---

     அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் --- கோட்டத்தினைப் பொருந்திய மனத்தை உடையவனது ஆக்கமும்,

     செவ்வியான் கேடும் நினைக்கப்படும் --- ஏனைச் செம்மையுடையவனது கேடும் உளவாயின், அவை ஆராயப்படும்.

      (கோட்டம்: ஈண்டு அழுக்காறு. 'உளவாயின்' என்பது எஞ்சி நின்றது. ஆக்கக் கேடுகள் கோட்டமும் செம்மையும் ஏதுவாக வருதல் கூடாமையின், அறிவுடையரால், 'இதற்கு ஏது ஆகிய பழவினை யாது?' என்று ஆராயப்படுதலின்'  'நினைக்கப்படும்' என்றார். "இம்மைச் செய்தன யான் அறி நல்வினை; உம்மைப் பயன்கொல்ஒருதனி உழந்து இத் திருத்தகு மாமணிக் கொழுந்துடன் போந்தது" (சிலப். 15: 91-93) என நினைக்கப்பட்டவாறு அறிக.)

     பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு விளக்கமாக அமைந்திருத்தலைக் காணலாம்...

அவ்விய நெஞ்சத்து அறிவு இல்லாத் துர்ச்சனரைச்
செவ்வியர் ஆக்கும் செயல் உண்டோ? --- திவ்வியநல்
கந்தம் பலவும் கலந்தாலும் உள்ளியது
கந்தம் கெடுமோ கரை.          ---  நீதிவெண்பா.

இதன் பொழிப்புரை ---

     மேலான நல்ல மணப்பொருள்கள் பலவற்றையும் சேர்த்துக் கலந்தாலும் வெள்ளைப் பூண்டின் நாற்றம் மாறுமோ. அதுபோல, பொறாமை நெஞ்சம் கொண்ட அறிவற்ற தீயோரை நல்லவர் ஆக்கும் செயல் ஏதும் உண்டா. இல்லை.

(அவ்வியம் - பொறாமை.  திவ்விய – மேலான. கந்தம் - மணப்பண்டங்கள்.  உள்ளி - வெள்ளைப் பூண்டு. கந்தம் - ஈண்டு தீநாற்றம்.  கரை - சொல்லு.)


நிறையு நீர்க்கு அசைவு இல்லை, நீள்நிலத்து
அரையும் கல்வியில் அறிவின் மேன்மையில்
குறை உளார்க்கு அலால் கோது இல் மாண்பினார்க்கு
இறையும் அவ்வியம் இல்லை இல்லையே.   ---  நீதிநூல்.
        
இதன் பொழிப்புரை ---

     கலம் நிறைய நீர் இருப்பின் அந்நீர் அசைந்து ஓசை இடாது. உலகத்துக் கல்வி அறிவினால் மேன்மையுற்றோர் பொறாமை கொள்ளார். அவற்றால் குறையுடையவரே பொறாமை கொள்வர்.

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...