016. பொறையுடைமை - 05. ஒறுத்தாரை





திருக்குறள்
அறத்துப்பால்

இல்லற இயல்

அதிகாரம் 16 - பொறை உடைமை

     இந்த அதிகாரத்தில் வரும் ஐந்தாம் திருக்குறள், "பிறன் ஒருவன் தனக்குச் செய்த தீமைக்கு, அப்பொழுதே அவனைத் தண்டித்தவர்களை அறிவு உடையவர் ஒரு பொருளாக மனத்தில் கொள்ளார். அந்தத் தீமையைப் பொறுத்துக் கொண்டவர்களைத் தம்முடைய மனத்தில் பொன்னைப்போலப் பொதிந்து வைத்துக் கொள்வர்" என்கின்றது.

     பொதிந்து வைத்தலாவது, அவருக்குள்ள நற்குணங்களைப் பற்றி, தம்மைத் தண்டித்தவரைத் தண்டிக்காமல், பொறுத்துக் கொண்ட பொறுமையை எப்போதும் நினைந்து இருப்பர். பொன்னைப் படைத்தவன், அப் பொன்னையே எப்போதும் மனத்தில் நினைந்து இருப்பது போல என்றார்.

திருக்குறளைக் காண்போம்....

ஒறுத்தாரை ஒன்றாக வையாரே, வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போல் பொதிந்து.

இதற்குப் பரிமேலழகர் உரை ---

     ஒறுத்தாரை ஒன்றாக வையார் --- பிறன் தமக்குத் தீங்கு செய்தவழிப் பொறாது அவனை ஒறுத்தாரை அறிவுடையார் ஒரு பொருளாக மனத்துக் கொள்ளார்;

     பொறுத்தாரைப் பொன்போல் பொதிந்து வைப்பர் --- அதனைப் பொறுத்தாரைப் பொன்போல் பொதிந்து கொள்வர்.

      (ஒறுத்தவர் தாமும் அத் தீங்கு செய்தவனோடு ஒத்தலின், 'ஒன்றாகவையார்' என்றார். 'பொதிந்து வைத்தல்', சால்புடைமை பற்றி இடைவிடாது நினைத்தல்.)

     இத் திருக்குறளுக்கு விளக்கமா, சிதம்பரம் பச்சைக் கந்தையர் மடத்து சென்ன மல்லையர் பாடிய "சிவசிவ வெண்பா" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்....

ஐவரினும் முன்னோன் அரசவையிலே பொறுத்த
செய்கை பெரிது அன்றோ? சிவசிவா! - வையத்து
ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போல் பொதிந்து.

     ஐவர் - பாண்டு மைந்தர் ஐவர். முன்னோன் - தருமன்.

     பாண்டவர்களுக்கு அத்தினாபுரத்தின் அரசவையிலே இழைக்கப்பட்ட அநீதியை, தம்பியர் நால்வரும் இகழ்ந்து சூள் உரைத்த போதும், அவர்களுள் முன்னவன் ஆகிய தருமன், எல்லாவற்றையும் பொறுத்து அமைதி காத்து இருந்தான். பொறுத்ததனால் அவன் இறுதியில் பூமியை ஆண்டான். பொறுக்கெனக் கொதித்தவர்கள் அனைவரும் பொன்றி அழிந்தனர்.  இன்று வரையிலும் கூட, தருமனை நினைந்து போற்றுகின்றது உலகம். தருமராஜனுக்குத் திருக்கோயில் அமைத்து வழிபட்டு வருகின்றது.  கௌரவர்களை நினைத்தாலும், அவர்களை இன்று வரையில் பழிக்கின்றோமே அல்லாமல், போற்றுவது இல்லை.

     அடுத்து, இத் திருக்குளுக்கு விளக்கமாக, "திருப்புல்லாணி மாலை" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...
                                                                                

ஆவிக்கொடியவராய் ஒறுத்தாரை ஒன்றாக வையா- 
ரே, வைப்பரே பொறுத்தாரைப் பொன் போல் பொதிந்து எ,புல்லைத்
தேவப் பொறையினன் தெவ்வை யாது இங்கு ஒருபொருளாய்ப்
பூவில்பொன் போல்பொதிந்தே வைப்பன் வாழப் பொறை மின்னையே.

இதன் பொருள் ---

     உயிருக்குக் கொடிய தீங்கு இழைத்தவரைத் தண்டித்தவரை, உலகத்தவர் ஒரு பொருளாக மதிக்கமாட்டார்கள்; பொறுத்துக் கொண்டவர்களைத் தமது உள்ளத்தில் பொன்னைப் போலப் பொதிந்து வைத்துப் போற்றுவர் என்று (திருவள்ளுவ நாயானாரால்) சொல்லப்பட்டு உள்ளதால், திருப்புல்லாணியில் எழுந்தருளி இருக்கும் திருமால் மீது பகை கொண்டவர்களை எண்ணாது, எல்லாவற்றையும் பொறுத்து இருந்த பூமாதேவியை, தாமரையில் எழுந்தருளி உள்ள திருமகளைப் போல் எனது உள்ளத்தில் பொன் போலப் பொதிந்து வைத்துப் போற்றுவேன்.

     தெவ்வை - பகைவர்களை.  பூவில் பொன்போல் - தாமரை மலரில் எழுந்தருளி உள்ள திருமகளைப் போல். பொறைமின் - பொறுமையாகிய பெண்.

பிழைஇலான் கடவுள், ன்றி மக்களில்தப்பு
     இல்லாதார் பிறரும் உண்டோ?
மழையினுமே அசனியுண்டு, மதிக்கும் ஓர்
         மறுவுண்டு, மலர்க்கு முள்ளாம்,
கழையினுமே சக்கை உண்டு, கனியினுந் தோல்
         கொட்டை உண்டு, கதிக்குங் காம
விழைவினான் மறம்புரிதல் நரர்க்கு இயல்பு
         தலின் அவரை வெறுக்க ஒண்ணாதே. ---  நீதிநூல்.
        
இதன் பொருள் ---

     கடவுள் ஒருவரே குற்றம் இல்லாதவர். மக்களில் குற்றம் இல்லாதவர் இலர். மழைக்கு இடியாகிய குற்றமுண்டு. திங்கட்கு மறு இருக்கின்றது. மலருக்கு முள்ளிருக்கின்றது. கரும்புக்குச் சக்கை இருக்கின்றது. இனிய தீம்பழத்துக்கும் தோலும் கொட்டையும் உண்டு. மிகுந்த இன்ப ஆசையால் தீமைசெய்தல் மக்கட்கு இயல்பு. ஆதலால் அவரைத் தீயோர் என்று வெறுத்தல் ஆகாது.
        
         அசனி --- இடி. கழை --- கரும்பு. கதிக்கும் --- மிகும். காமம் --- இன்பம். மறம் --- தீமை. நரர் --- மக்கள். வெறுப்பு ---விருப்பமின்மை.
        
நாவையே கடித்தது எனப் பல்தகர்க்கும்
            பேர் உளரோ? நடக்கும் வேளை
பூவையே பொருவுகழல் சருக்கியது என்று
            அதைக் களைவோர் புவியில் உண்டோ?
காவைஆர் உலகமெனும் பேருடலின்
            அவயவம் போல்கலந்த சீவர்
தாவையே செய்யினும் மிக்க உறிவுடையோர்
            கமைசெய்தல் தகுதியாமால். ---  நீதிநூல்
        
இதன் பொருள் ---

     பல் நாக்கைக் கடித்துவிட்டது என்று அதனை உடைப்பவர் இல்லை. பூப்போன்ற கழல் அணிந்த அடி நடக்கும்போது வழுவிவிட்டது என்று அதனை வெட்டுவார் இலர். சோலைகள் சூழ்ந்த உலகமாகிய பெரிய உடம்பினுக்கு உறுப்புப்போல் கூடி உறையும் மக்கள் குற்றம் செய்யினும் சிறந்த அறிவுடையார் பொறுத்தல் முறைமையாகும்.

         தகர்த்தல்-உடைத்தல். சருக்கல்-வழுவுதல். கா-சோலை. கமை-பொறுமை. வேளை-பொழுது.


இளையான் அடக்கம் அடக்கம், கிளைபொருள்
இல்லான் கொடையே கொடைப்பயன், - எல்லாம்
ஒறுக்கும் மதுகை உரன் உடையாளன்
பொறுக்கும் பொறையே பொறை.        ---- நாலடியார்.

இதன் பதவுரை ---

     இளையான் அடக்கம் அடக்கம் --- இளமைப் பருவம் உடையவனது புலனடக்கமே அடக்கம் எனப்படும், கிளைபொருள் இல்லான் கொடையே கொடைப்பயன் --- கிளைக்கும் பொருள் இல்லாதவனது ஈகையே பயன் எனப்படும் ஈகையாம் (அவைபோல) எல்லாம் ஒறுக்கும் மதுகை உரனுடையாளன் பொறுக்கும் பொறையே பொறை --- எதனையும் அழிக்க வல்ல வலிமை அறிவினை உடையோன் பொறுத்துச் சினம் ஆறும் பொறுமையே பொறுமை யெனப்படும்.


No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...