019. புறங்கூறாமை - 04. கண்நின்று




திருக்குறள்
அறத்துப்பால்

இல்லற இயல்

அதிகாரம் 19 - புறங்கூறாமை

     இந்த அதிகாரத்தில் வரும் நான்காம் திருக்குறள், "ஒருவன் எதிரே நின்று தயவு தாட்சண்ணியம் இல்லாமல் பேசினாலும், அவன் தன் முன் இல்லாதபோது, பின் விளைவுகளை எண்ணிப் பாராது, இகழ்ந்து பேசாது இருக்கவேண்டும்" என்கின்றது.

     நேரில் இகழ்ந்து பேசினாலும், பின்னால் இகழ்ந்து பேசாது இருக்கவேண்டும்.

திருக்குறளைக் காண்போம்...

கண்நின்று கண்அறச் சொல்லினும் சொல்லற்க,
முன்இன்று பின் நோக்காச் சொல்.

இதற்குப் பரிமேலழகர் உரை ---

     கண் நின்று கண் அறச் சொல்லினும் --- ஒருவன் எதிரே நின்று கண்ணோட்டம் அறச் சொன்னானாயினும்;

     முன் இன்று பின் நோக்காச் சொல் சொல்லற்க --- அவன் எதிரின்றிப் பின்வரும் குற்றத்தை நோக்காத சொல்லைச் சொல்லாதொழிக.

         ('பின்' ஆகுபெயர். சொல்வான் தொழில் சொல்மேல் ஏற்றப்பட்டது. இதனால், புறங்கூற்றினது கொடுமை கூறப்பட்டது.)

     இத் திருக்குறளுக்கு விளக்கமா, சிதம்பரம் ஈசானிய மடத்து இராமலிங்க சுவாமிகள் பாடியருளிய "முருகேசர் முதுநெறி வெண்பா" என்னும் நூலில் வரும் பாடல்...

துஞ்சுமனத்தோடு உவணம் சூரன்முதலோர்த் தூற்றி
முஞ்சல்உற்றது அந்தோ? முருகேசா! - விஞ்சல்உறக்
கண்நின்று கண்அறச் சொல்லினும் சொல்லற்க
முன்இன்று பின்நோக்காச் சொல்.

இதன் பதவுரை ---

     முருகேசா --- முருகப் பெருமானே, துஞ்சு மனத்தோடு --- தளரந்த உள்ளத்துடனே, உவணம் --- கருடன், சூரன் முதலோர்த் தூற்றி --- சூரன் முதலியவர்களை இகழ்ந்து, அந்தோ --- ஐயோ, வீணே, முஞ்சல் உற்றது --- மாண்டு ஒழிந்தது, விஞ்சல் உற --- மிகுதியாக,  கண் நின்று --- கண்ணுக்கு ஏதிரோ நின்று, கண் அறச் சொல்லினும் --- அருள் இல்லாமல் பேசினாலும், முன் இன்று --- முன்னே இல்லாமல், பின் நோக்காச் சொல் --- பின் உண்டாகும் பயனைப் பாராத சொற்களை, சொல்லற்க -- சொல்லாதொழிக.

         கருடன், சூரன் முதலியவர்களை இகழ்ந்து வீணே மாண்டு ஒழிந்தது. அருளில்லாத சொற்களைச் சொன்னாலும், பின் தீமை உண்டாகக் கூடிய சொற்களைக் காணாவிடத்தே கூறாதொழிக என்பதாம். 

     துஞ்சு மனம் --- தளர்ந்த மனம். முஞ்சல் --- இறத்தல்.

                                             கருடன் கதை

         சாகரத் தீவின் அரசனாகிய பிரபாகரனுடைய மக்கள் நால்வருள், சூரன் பதுமன் என்னும் இருவரும் அகத்திய முனிவரால் முருகக் கடவுளுடைய ஊர்தியும் கொடியுமாகிய மயில் சேவல்களின் பெருமைகளையும்,  சிங்கன் தாரகன் என்னும் இருவரும் திரணவிந்து முனிவரால் வீரமாகாளி, ஐயனார் இவர்களுடைய ஊர்திகளாகிய அரிமா, வெள்ளையானை என்பவைகளின் பெருமைகளை உணர்ந்து, அப்பதவிகளை அடைய விரும்பிச் சீசைலத்தில் தவம் புரிந்திருந்தனர். அதனை உணர்ந்த அன்னமும் கருடனும், திருக்கயிலையிலே மயிலும் சேவலும் சிங்கமும் வெள்ளையானையாகிய நான்கும் இருக்குமிடத்தை அடைந்து, அவைகளைப் பார்த்து, உங்களுடைய பதவியை அடைய விரும்பி நால்வர் தவம் செய்கின்றனர் என்று தூண்டிவிட, அவைகள் சினந்து சென்று அந் நால்வரையும் பூதகணங்களாகுமாறு வசவுரை வழங்கின. அந் நாலவரும் அவ்வாறே நெடுநாள் இருந்து சமயம் வாய்த்த ஒருநாள், மயிலும் சேவலும் இருக்கும் திருக்கயிலை மலைச் சாரலை அடைந்து அவைகளைப் பார்த்து, உங்களை வணங்காது இக் கருடனும் அன்னமும் இறுமாந்து இருத்தலைப் பார்த்தீர்களா என்று தூண்டிவிட, அவ் இரண்டும் சினந்து எழுந்து தாக்குதலால், அக்கருடனும் அன்னமும் அடிபட்டு இறந்தன.

     அடுத்து, இத் திருக்குறளுக்கு விளக்கமாக, "திருப்புல்லாணி மாலை" என்னும் நூலில் வரும் பாடல்...
                                                      --

சொற்கு இசைவு ஆம் எனக் கண்நின்று கண் அறச் சொல்லினும், சொல்
லற்க முன் இன்று பின் நோக்காச் சொல் என்பர் அறிவுடையோர்;
கற்கி உரு எடுத்தோன் புல்லை மால் கமலச்சரணம்
எற்கெனக் கூறிப் புறங்கூறிடாமல் இருப்பது என்றே.

இதன் பொழிப்புரை ---

     கல்கி அவதாரத்திற்கு உரியவரும், திருப்புல்லாணி என்னும் திவ்விய தேசத்தில் எழுந்தருளி உள்ளவரும் ஆன திருமாலின் திருவடித் தாமரைகளே எனக்குப் பற்றுக்கோடு என்று கூறி, மறந்தும் பிற தெய்வங்களைப் போற்றாமல் இருக்கவேண்டும் என்னும் சொல்லுக்குப் பொருத்தமாக, ஒருவன் எதிரில் இருந்துகொண்டு, கண்ணோட்டம் இல்லாமல் பேசினாலும், அவன் எதிரில் இல்லாதபோது, பின் விளைவை எண்ணிப் பாராமல், பழிமொழிகளைச் சொல்லாது ஒழியவேண்டும் என்றனர் அறிவு உடையோர்.

     சொற்கு இசைவாம் --- சொல்லுதற்குப் பொருத்தமாக இருக்கின்றது. கல்கி உரு --- கல்கி அவதாரம். கமலச் சரணம் --- திருவடித் தாமரை, புறங்கூறிடாமல் --- புறங்கூறாமல்.

     பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்திருத்தலைக் காணலாம்...

கணமலை நன்னாட, "கண்இன்று ஒருவர்
குணனேயும் கூறற்கு அரிதால்", –  குணன்அழுங்கக்
குற்றம் உழைநின்று கூறும் சிறியவர்கட்கு
எற்றால் இயன்றதோ நா.       --- நாலடியார்.

இதன் பதவுரை ---

     கண மலை நல் நாட --- கூட்டமான மலைகளையுடைய உயர்ந்த நாடனே!. கண் இன்று ஒருவர் குணனேயும் கூறற்கு அரிது --- புறத்தில் ஒருவரது நல்லியல்பினையும் பேசுதற்கு அருமையாயிருக்கும் என்ப;  குணன் அழுங்கக் குற்றம் உழை நின்று கூறும் சிறியவர்கட்கு எற்றால் இயன்றதோ நா --- ஆனால் அவரது நல்லியல்பு கெடும்படி, செய்யாத குற்றங்களை அவரெதிரிலிருந்து செய்ததாகக் கூறும் மெலிந்த அறிவினார்க்கு நாக்கு எதனால் உருவானதோ, அறிகிலேம்.

        
         ஒருவரைக் காணாத இடத்தில், குறை கூறாது குணம் கூறுதல் பொருந்தும் என்றாலும்,  அதனையும் காரணம் இன்றிக் கூறச் சான்றோர் கூசுவர்; அப்படி இருக்க, காரணம் இல்லாமலேயே, அதுவும் குற்றத்தை, இல்லாத குற்றத்தை, எதிரிலேயே புனைந்து உரைத்துப் பழிப்பதாயின் அதனை என்னவென்று சொல்வது?

முன்நின்று ஒருவன் முகத்தினும் வாயினும்
கல்நின்று உருகக் கலந்து உரைத்து ---  பின்நின்று
இழித்து உரைக்கும் சான்றோரை அஞ்சியே, தேவர்
விழித்து இமையா நின்ற நிலை.        --- அறநெறிச்சாரம்.

இதன் பதவுரை ---

     தேவர் விழித்து இமையார் நின்ற நிலை --- தேவர்கள் விழித்த கண் மூடாமல் நிற்பதற்குக் காரணம், ஒருவன் முன் நின்று --- ஒருவன் எதிரில் நின்று, கல் நின்று உருக --- கல்லும் உருகுமாறு, முகத்தினும் வாயினும் கலந்து உரைத்து ---முகமலர்ந்து வாயால் இன்சொல் கூறி அவனைப் புகழ்ந்து, பின் நின்று --- அவன் அகன்ற பின்னர், இழித்துரைக்கும் --- அவனையே இகழ்ந்து கூறுகின்ற, சான்றோரை அஞ்சியே ---கயவர்களைக் கண்டு கண்களை மூடினால் தம்மையும் அவ்வாறு இகழுவார் என்று அஞ்சினமையே ஆகும்.

கேளிர் பிரிவர், நட்பினராய்க்
     கெழுமுவாரும் இலர் ஆவர்,
மூளும் வடுச்சொல் நேராக
     மொழிவர் எவரும் ஆதலினால்,
நாளும் அறத்தைக் கொன்று அனந்த
     நவைகள் சியினும் எதிர்நின்று
மாள உரை செய்யினும் செய்யேல்,
     மைந்தா! மறந்தும் புறங்கூறல்.       ---  விநாயக புராணம்.


தன்னைத்தான் போற்றாது ஒழுகுதல் நன்கு இன்னா;
முன்னை உரையார் புறமொழிக் கூற்று இன்னா;
நன்மை இலாளர் தொடர்பு இன்னா; ஆங்கு இன்னா
தொன்மை உடையார் கெடல்.   ---  இன்னா நாற்பது.

இதன் பதவுரை ---

     தன்னைத் தான் போற்றாது ஒழுகுதல் நன்கு இன்னா --- ஒருவன் மனமொழி மெய்கள் தீயவழியிற் செல்லாது அடங்கி, தன்னைத் தானே காத்துக்கொள்ளாது நடத்தல் மிகவும் துன்பமாம்; முன்னை உரையார் புறமொழிக் கூற்று இன்னா - முன்னே சொல்லாமல் புறத்தே பழித்துரைக்கும் புறங்கூற்று துன்பமாம்; நன்மை இலாளர் தொடர்பு  இன்னா --- நற்குணம் இல்லாதவரது நட்பு துன்பமாம்; ஆங்கு --- அவ்வாறே, தொன்மை உடையார் கெடல் இன்னா --- தொன்று தொட்டு மேம்பட்டு வரும் பழமையான குடியினர் செல்வம் கெடுதல் துன்பமாம்.

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...