022. ஒப்புரவு அறிதல் - 09. நயனுடையான்





திருக்குறள்
அறுத்துப்பால்

இல்லற இயல்

அதிகாரம் 22 - ஒப்புரவு அறிதல்

     இந்த அதிகாரத்தில் வரும் ஒன்பதாம் திருக்குறள், "பிறர்க்கு உபகாரம் செய்யும் நல்ல மனத்தை உடையவன், அந்த நற்செயலால் வறுமையை உடையவன் ஆவது, செய்யத்தக்க உதவிகளைச் செய்யக்கூடாமல் நெஞ்சம் அமைதி கொள்ளாமல் வருந்தி நிற்கின்ற முறைமை ஆகும்" என்கின்றது.

திருக்குறளைக் காண்போம்....

நயன்உடையான் நல்கூர்ந்தான் ஆதல், செயும் நீர
செய்யாது அமைகலா ஆறு.

இதற்குப் பரிமேலழகர் உரை ---

     நயன் உடையான் நல்கூர்ந்தான் ஆதல் --- ஒப்புரவு செய்தலை உடையான் நல்கூர்ந்தான் ஆதலாவது,

     செயும் நீர செய்யாது அமைகலா ஆறு --- தவிராது செய்யும் நீர்மையை உடைய அவ்வொப்புரவுகளைச் செய்யப்பெறாது வருந்துகின்ற இயல்பாம்.

       (தான் நுகர்வன நுகரப் பெறாமை அன்று என்பதாம்.)

     இத் திருக்குறளுக்கு விளக்கமா, திராவிட மாபாடியக் கர்த்தரான மாதவச் சிவஞான யோகிகள் பாடியருளிய "சோமேசர் முதுமொழி வெண்பா" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...

பண்டைநினைவு எண்ணி நொந்தார் பாகஞ்செய் மாறராம்
தொண்டர் மனைவியர், சோமேசா! - கண்டோம்
நயன்உடையான் நல்கூர்ந்தான் ஆதல் செயுநீர
செய்யாது அமைகலா ஆறு.

         ஒப்புரவறிதலாவது உலக நடையினை அறிந்து செய்தல்.  உலக நடை வேதநடை போல அறநூல்களுள் கூறப்படுவதன்றித் தாமே அறிந்து செய்யும் தன்மைத்தாகலின், ஒப்புரவறிதல் என்றார்.

இதன் பொருள் ---

         சோமேசா! நயன் உடையான் நல்கூர்ந்தான் ஆதல் --- ஒப்புரவு செய்தலை உடையான் வறியன் ஆதலாவது,  செயும் நீர --- தவிராது செய்யும் தன்மையவான அவ் ஒப்புரவுகளை, செய்யாது அமைகலா ஆறு --- செய்யப் பெறாது வருந்துகின்ற இயல்பாம் என்னும் உண்மையை, கண்டோம் --- அறிந்தோம்... 

         பாகம் செய் --- (வறுமை வந்த நிலையிலும் சிவனடியாரைத் திருவமுது செய்விக்கும் பொருட்டு) சமையல் செய்த,  மாறர் ஆம் தொண்டர் மனைவியார் --- இளையான்குடி மாற நாயனார் என்னும் அடியாரது மனைவியார்,  பண்டை நினைவு எண்ணி நொந்தார் --- முன்புள்ள செல்வ நிலையின் நினைவினால் இப்போதுள்ள குறையை எண்ணி வருந்தினார் ஆகலான் என்றவாறு.

         நயன் --- ஒப்புரவு செய்தல். நல்குரவு --- வறுமை. பாகம் செய்தல் --- சமைத்தல்.

         "மாது கூறுவாள் மற்றொன்றும் காண்கிலேன்
         ஏதி லாரும் இனித்தரு வாரில்லை
         போதும் வைகிற்றுப் போம்இடம் வேறிலை
         தீது செய்வினை யெற்கென் செயலென்று".

         "பண்டை நினைவினால் குறையை நேர்ந்து திருவமுது அமைத்து நின்று" (பெரியபுராணம் - இளையான்குடி மாறர் - 22) 

     பண்டை வினையினால் குறையை நேர்தலாவது, நமக்கு மிகுந்த செல்வம் இருந்த காலத்து இப்பெரியார் வரப் பெற்றிலம் என்றும்,  அப்பொழுது செய்த பாகப்படி இப்பொழுது செய்ய முடியவில்லையே என்றும் உண்டாகிய எண்ணத்தால் உளதாகிய குறையை எண்ணி வருந்தி என்றதாம். தமக்கு உணவில்லையாயினும் அதற்காக வருந்தாது, வந்த அடியாருக்கு உணவு படைக்க முடியாத நிலைக்கு வருந்தியது.

         பெருகி வந்த ஆறு விளைவித்து வற்றினதாயினும், ஊற்றுநீர் கொடுப்பது போல, ஒப்புரவாளன் மிடித்தானாயினும் அற்பமாகிலும் ஓரளவு செய்வான் என்றார் பரிதியார். பால் புளித்தலும், பகல் இருளாதலும் இல்லை. ஆதலால், நயனுடையான் ஒப்புரவுக்கு இளையான் என்பர் காளிங்கர்.

         இளையான்குடி என்னும் ஊரில் வேளாள மரபில் பிறந்த மாற நாயனார் அடியார்களுக்கு அமுது செய்வித்து வரும் நாளில், சிவபெருமான் அவருக்கு வறுமை தர, உள்ளன விற்றும், கடன் கொண்டும் தமது திருப்பணியை விடாது செய்து வந்தார்.  ஒருநாள் ஒன்றும் பெறக்கூடாமையால் நாயனாரும் அவர் மனைவியாரும் பகல் முழுதும் உணவு இன்றிப் பசித்துப் பட்டினி விட்டு வருந்துகையில், சிவபெருமான் ஓர் அடியார் போல் இரவில் எழுந்தருள, நாயனார் அவரை அன்போடு வரவேற்று ஆசனத்து இருத்தி, தம் மனைவியாரோடு யாது செய்வது என யோசிக்க, அவர் உரைத்தபடியே அவ் இரவில் மழையில் நனைந்து இருளின் வழி நடந்து, அன்று வயலில் விதைத்த முளைகளை வாரி வந்து, விறகிற்குக் கூரையில் உள்ள வரிச்சல்களை அறுத்து வீழ்த்தி, கறிக்குப் புறக்கடையில் உள்ள குழி நிரம்பாத புன்செய்ப் பயிர்களைக் கொணர, அவற்றைக் கொண்டு அம்மையார் தம் கைவன்மையால் கறிவகைகளோடு அமுது அமைக்க, உறங்கினாற்போல நடித்த பெருமான் அருகில் சென்று நாயனார் அமுது செய்தற்கு அழைக்க, மறைந்து, சோதி வடிவாய்த் தோன்றிப் பார்வதி சமேதராய் இடபாரூடராய்க் காட்சி தந்து இருவருக்கும் சிவபதம் அருளினார்.

பின்வரும் பெரியபுராணப் பாடலைக் காண்க....


மனைவியார் கொழுநர் தந்த
         மனமகிழ் கறிகள் ஆய்ந்து
புனல்இடைக் கழுவித் தக்க
         புனிதபாத் திரத்துக் கைம்மை
வினையினால் வேறு வேறு
         கறிஅமுது ஆக்கிப் பண்டை
நினைவினால் குறையை நேர்ந்து
         திருஅமுது அமைத்து நின்று.

     பின்வரும் படால்கள் இத் திருக்குளுக்கு ஒப்பாக அமைந்திருத்தலைக் காணலாம்...
                                            
ஒருபுடை பாம்பு கொளினும் ஒருபுடை
அங்கண்மா ஞாலம் விளக்குறூஉந் - திங்கள்போல்
செல்லாமை செவ்வனேர் நிற்பினும் ஒப்புரவிற்
கொல்கார் குடிப்பிறந் தார்.     ---  நாலடியார்.

இதன் பதவுரை ---

     ஒரு புடை பாம்பு கொளினும் ஒரு புடை அங்கண்மா ஞாலம் விளங்குறூஉம் திங்கள்போல் --- ஒரு பக்கம் இராகு என்னும் பாம்பு பற்றிக் கொண்டாலும் தனது மற்றொரு பக்கத்தால் அழகிய இடமகன்ற பெரிய உலகத்தை ஒளிவிளங்கச் செய்யுந் திங்களைப் போல, செல்லாமை செவ்வன் நேர் நிற்பினும் ஒப்புரவிற்கு ஒல்கார் குடிப்பிறந்தார் --- வறுமையினால் மாட்டாமை நிலை நன்றாக முன் நிற்பினும் உயர்குடிப் பிறந்தார் பிறர்க்கு உதவி செய்யும் வகைக்குத் தளரமாட்டார்.

         பிறர்க்கு உதவும் வகையில் வறுமையிலும் குடிப்பிறந்தார் தளரார்.

தம் குறை தீர்வு உள்ளார் தளர்ந்து பிறர்க்குறூஉம்
வெங்குறை தீர்க்கிற்பார் விழுமியோர் - திங்கள்
கறைஇருளை நீக்கக் கருதாது, உலகின்
நிறையிருளை நீக்குமேல் நின்று.  ---  நன்னெறி.

இதன் பொருள் ---

     நிலவானது தன்னிடம் உள்ள களங்கத்தை நீக்கிக் கொள்ளக் கருதாமல், விண்ணில் இருந்து கொண்டு, உலகத்தில் நிறைந்துள்ள இருளைப் போக்குவதுபோல், பெரியோர்கள் தமக்கு உள்ள குறைகளைக் களையக் கருதாமல், பிறர்க்கு நேரும் கொடிய குறைகளை நீக்கி வைப்பார்கள்.

     விழுமியோர் --- மேலோர். கறையிருள் --- தன்னிடமுள்ள கறுத்த இருள். நிறையிருள் --- மிகுதியான இருள். கறை --- மாசு; களங்கம். நல்லோர் நிலாவைப்போலத் தங்கட்கு எவ்வளவு துன்பமிருந்தாலும் அதனைக் கருதாது பிறர் துன்பத்தை நீக்குவர்.



No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...