020. பயனில சொல்லாமை - 03. நயனிலன் என்பது





திருக்குறள்
அறத்துப்பால்

இல்லற இயல்

அதிகாரம் 20 - பயனில சொல்லாமை

     இந்த அதிகாரத்தில் வரும் மூன்றாம் திருக்குறள், "பயன் இல்லாதன ஆகிய சொற்களை ஒருவன் விரித்துப் பேசுவதே, அவன் நீதி இல்லாதவன் என்பதைக் காட்டும்" என்கின்றது.

திருக்குறளைக் காண்போம்...

நயன்இலன் என்பது சொல்லும், பயன் இல
பாரித்து உரைக்கும் உரை.

இதற்குப் பரிமேலழகர் உரை ---

     பயன் இல பாரித்து உரைக்கும் உரை --- பயன் இலவாகிய பொருள்களை ஒருவன் விரித்து உரைக்கும் உரைதானே,

     நயன் இலன் என்பது சொல்லும் --- இவன் நீதி இலன் என்பதனை உரைக்கும்.
        
         (உரையால் இவன் 'நயனிலன்' என்பது அறியலாம் என்பார், அதனை உரைமேல் ஏற்றி, 'உரை சொல்லும்' என்றார்.)

     பின்வரும் பாடல் இதற்கு ஒப்பாக அமைந்து உள்ளது காணலாம்..

வடுச்சொல் நயம்இல்லார் வாய்த்தோன்றும், கற்றார்வாய்ச்
சாயினும் தோன்றா கரப்புச்சொல், --- தீய
பரப்புச்சொல் சான்றோர்வாய்த் தோன்றா, கரப்புச்சொல்
கீழ்கள்வாய்த் தோன்றி விடும்.             --- நான்மணிக்கடிகை.

இதன் பதவுரை ---

     வடுச்சொல் நயம் இல்லார் வாய் தோன்றும் --- பழிச் சொற்கள் அன்பில்லாதாரது வாயில் பிறக்கும்;

      கற்றார் வாய் கரப்புச் சொல் சாயினும் தோன்றா --- அறிவு நூல்களைக் கற்றவரது வாயில் வஞ்சனைப் பேச்சுக்கள், அவர் கெடுவதாயினும் பிறவா;

      தீய பரப்புச் சொல் சான்றோர் வாய் தோன்றா --- தீயவற்றைப் பரப்புதலாலாகும் பேச்சுக்கள் மேன்மக்கள் வாயில் தோன்றமாட்டா;

      கரப்புச்சொல் கீழ்கள் வாய் தோன்றி விடும் --- வஞ்சனைச் சொற்கள் கீழ்மக்களது வாயில் பிறந்துவிடும்.

      அன்பு இல்லாதார் வாயில் பழிச்சொற்கள் தோன்றும்; காற்றார் வாயில் வஞ்சனைச் சொற்கள் தோன்றா; சான்றோர் வாயில் தீயவற்றைப் பரப்புஞ் சொற்கள் தோன்றா; கீழ்மக்கள் வாயில் ஒளிப்புச் சொல் தோன்றிவிடும்.


No comments:

Post a Comment

பொது --- 1084. முழுமதி அனைய

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் முழுமதி அனைய (பொது) முருகா!  திருவடி அருள்வாய். தனதன தனன தனதன தனன      தனதன தனன ...... தந்ததான முழுமதி ய...