018. வெஃகாமை - 07. வேண்டற்க





திருக்குறள்
அறத்துப்பால்

இல்லற இயல்

அதிகாரம் 18 - வெஃகாமை

     இந்த அதிகாரத்தில் வரும் ஏழாம் திருக்குறள், "பிறர் பொருளை விரும்பி, அதனைக் கவருவதால் உண்டாகும் பெருக்கத்தை விரும்புதல் வேண்டாம். அந்தப் பெருக்கத்தினைப் பின்னர் அனுபவிக்கும்போது நன்மையாய் முடிவது இல்லை" என்கின்றது.

திருக்குறளைக் காண்போம்...

வேண்டற்க வெஃகி ஆம் ஆக்கம், விளைவயின்
மாண்டற்கு அரிது ஆம் பயன். 

இதற்குப் பரிமேலழகர் உரை ---

     வெஃகி ஆம் ஆக்கம் வேண்டற்க --- பிறர் பொருளை அவாவிக்கொண்டு அதனால் ஆகின்ற ஆக்கத்தை விரும்பாது ஒழிக;

     விளைவயின் பயன் மாண்டதற்கு அரிது ஆம் --- பின் அனுபவிக்குங்கால் அவ்வாக்கத்தின் பயன் நன்றாதல் இல்லை ஆகலான்.

     பின்வரும் பாடல் இதற்கு ஒப்புமையாக அமைந்திருத்தலைக் காணலாம்...

உள்ளது ஒருவர் ஒருவர்கை வைத்தக்கால்
கொள்ளும் பொழுதே கொடுக்க தாம் - கொள்ளார்
நிலைப்பொருள் என்று அதனை நீட்டித்தல் வேண்டா,
புலைப்பொருள் தங்கா வெளி.   ---  பழமொழி நானூறு.

இதன் பதவுரை ---

     உள்ளது ஒருவர் ஒருவர் கை வைத்தக்கால் --- தன்னிடத்து உள்ளதொரு பொருளை ஒருவர் ஒருவரிடத்துக் காவல் செய்து தருமாறு கொடுத்தால், கொள்ளும் பொழுது --- அவர் வேண்டியபொழுது, தாம் கொள்ளார் கொடுக்க --- தாம் அகப்படுத்திக் கொள்ளாமல் கொடுக்கக் கடவர், நிலைப்பொருள் என்று நீட்பித்தல் வேண்டா --- நிலைமையான பொருள் என்று கருதிக் கொடாது காலம் நீட்டித்தல் வேண்டா; புலைப்பொருள் தங்கா வெளி --- புலால் நாறும் பொருள் எங்ஙனம் மறைப்பினும் மறைபடாது வெளிப்பட்டு விடும் ஆதலான்.

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...