018. வெஃகாமை - 01. நடுவின்றி




திருக்குறள்
அறத்துப்பால்

இல்லற இயல்

அதிகாரம் 18 - வெஃகாமை

     பிறருக்கு உரிய பொருளைக் கண்டபோது, பொறாமை கொள்ளுவதும் அல்லாமல், அதனைத் தான் அபகரிக்க எண்ணுவது குற்றம் என்பது கூறப்பட்டது. பொறைமை தோன்றிய வழி, பொருளை அபகரிக்கும் எண்ணம் உண்டாவதால், இந்த அதிகாரமானது, அழுக்காறாமையின் பின் வைக்கப்பட்டது.

     இந்த அதிகாரத்தில் வரும் முதல் திருக்குறள், "பிறர் உழைத்துப் பெற்ற நல்ல பொருளை அபகரிக்க எண்ணுதல் அறம் அல்ல. நடுவு நிலையில் இருந்து தவறி, அபகரிக்க எண்ணினால், அப்படி எண்ணுபவனது குடி அழிவதோடு அல்லாமல், பல பழிக்கும் ஆளாக நேரும்" என்கின்றது.

திருக்குறளைக் காண்போம்...

நடுவு இன்றி நன்பொருள் வெஃகின், குடி பொன்றிக்
குற்றமும் ஆங்கே தரும்.  

இதற்குப் பரிமேலழகர் உரை ---

     நடுவு இன்றி நன்பொருள் வெஃகின் --- 'பிறர்க்கு உரியன கோடல் நமக்கு அறன் அன்று' என்னும் நடுவு நிலைமை இன்றி, அவர் நன்பொருளை ஒருவன் வெஃகுமாயின்;

     குடி பொன்றிக் குற்றமும் ஆங்கே தரும் --- அவ் வெஃகுதல் அவன் குடியைக் கெடச்செய்து, பல குற்றங்களையும் அப்பொழுதே அவனுக்குக் கொடுக்கும்.
        
       (குடியை வளரச் செய்து பல நன்மையையும் பயக்கும் இயல்புபற்றி, வெஃகின் என்பார்.'நன்பொருள் வெஃகின்'என்றார், 'பொன்ற' என்பது 'பொன்றி' எனத் திரிந்து நின்றது. 'செய்து' என்பது சொல்லெச்சம்.)

     இத் திருக்குறளுக்கு விளக்கமா, திராவிட மாபாடியக் கர்த்தரான மாதவச் சிவஞான யோகிகள் பாடி அருளிய "சோமேசர் முதுமொழி வெண்பா" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்....

நின் அபிடேகப் பழத்தை நீள்மறையோர்க்கு ஈந்தஇறை
துன்னு குடியோடுஅழிந்தான், சோமேசா! --- பன்னில்
நடுவுஇன்றி நன்பொருள் வெஃகில்,குடி பொன்றிக்
குற்றமும் ஆங்கே தரும்.

         வெஃகாமையாவது பிறர்க்கு உரிய பொருளை வௌவக் கருதாமை. பிறருடைமை கண்ட வழிப் பொறாமையே அன்றி, அதனைத் தான் வௌவக் கருதுதலும் குற்றமாம்.

இதன் பதவுரை ---

         சோமேசா! பன்னில் --- ஆராய்ந்து சொல்லுமிடத்து, நடுவு இன்றி --- பிறர்க்கு உரியனவற்றைக் கொள்ளுதல் நமக்கு அறம் அன்று என்னும் நடுவு நிலைமையின்றி, நன்பொருள் --- அவர் நன்பொருளை, வெஃகின் --- (ஒருவன்) வௌவக் கருதுமாயின், குடி பொன்றி --- அச்செய்கை அவன் குடியைக் கெடச் செய்து, குற்றமும் --- பல குற்றங்களையும், ஆங்கே தரும் --- அப்பொழுதே அவனுக்குத் தந்துவிடும். 

         நின் அபிடேகப் பழத்தை --- உனது அபிடேகத்திற்கு உரியவான வாழைப் பழத்தை, நீள் மறையோர்க்கு --- மிக்க அந்தணருக்கு, ஈந்த இறை --- கொடுத்த அரசன், துன்னு குடியோடு அழிந்தான் --- பொருந்திய தனது குடியோடு அழிவடைந்தான் ஆகலான் என்றவாறு.

         'குடி பொன்றிக் குற்றமும் ஆங்கே தரும் என்பது அப்பொருளவாய் நின்றது' என்றருளினர் மாதவச் சிவஞான யோகிகள்.

         விதாதா என்னும் அங்கநாட்டு அரசன் ஒருவன் அசித்தன் என்னும் புரோகிதன் சொற்படி நடந்து செங்கோல் செலுத்தும் நாளில், ஒரு நாள் நாரத முனிவர் அங்கு எழுந்தருளி அரசனை நோக்கி, "உன் தந்தை இந்திர பதவி பெற்று இனிது வாழ்கின்றான், உன்னை அறநெறி வழாது நடக்க வேண்டினான்" எனவும், அசித்தனை நோக்கி, "உன் தந்தை நரகில் வருந்துகின்றான். தான் தேடிய நிதியைப் புதைத்த இடம் உனக்குச் சொல்லாது இருந்தான். அது ஒரு தூணின் அடியில் உள்ளதாம். அதனை எடுத்துத் தானம் செய்யச் சொன்னான்" எனவும் கூறிப் போயினார். அவ்வாறே அரசன் பல் அறம் புரிந்து நிற்ப, அசித்தனும் அந் நிதியைத் தூண் ஒன்றின் அடியிலிருந்து எடுத்துக் கோதானம், பூதானம், சொர்ணதானம், கன்னிகாதானம் முதலிய செய்தான். அசித்தன் தந்தையும் நரகத்தின் நீங்கி சுவர்க்கம் அடைந்தான். இந்நிலையில் அரசனும் அசித்தனும் விந்தியமலை சென்றார்கள். அங்குள்ள திவ்விய நதி தீரத்தில் பிராமண போசனம் செய்விக்க ஆசை கொண்டு, பல பண்டங்களையும் வருவித்தார்கள். வாழைப்பழம் ஒன்றுமே கிடைத்திலது. பிராமணர்கள் வாழைப்பழம் இன்றி உண்ணோம் என்ன, அரசன் வீமேச்சுரத்தில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி இருக்கும் பெருமானுக்கு என விடப்பட்ட தோட்டம் ஒன்றில் வாழைக் கனிகள் வேண்டிய அளவு இருப்பதனை ஓர் அந்தணன் சொல்லக் கேட்டறிந்து, அங்குள்ள குலைகளைத் திருக்கோயில அதிகாரிகள் கருத்திற்கு மாறுபட்டுக் கொணர்ந்து பரிமாறினான். இதனால் தேவராசனாய் இருந்த அவன் தந்தை நரகம் புகுந்தான். அவனும் இறந்தபின் நரகத்து அழுந்தினான். இக்காரியத்தின் தொடர்பு உடைய யாவரும் நரகத்தில் பயிர்போல வளர்ந்தார்கள். இது உபதேச காண்டத்து உள்ளது.

     அடுத்து, இத் திருக்குறளுக்கு விளக்கமாக, பிறைசை சாந்தக் கவிராயர் பாடிய நீதி சூடாமணி என்கிற "இரங்கேச வெண்பா" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்....

முன்னோனைப் போரின் முடுக்கி, விமானத்தை
என்னோ கைக் கொண்டான், இரங்கேசா! - அன்னோ
நடுவு இன்றி நன்பொருள் வெஃகின், குடிபொன்றிக்
குற்றமும் ஆங்கே தரும்.

இதன் பதவுரை --- 

     இரங்கேசா --- திருவரங்கநாதக் கடவுளே! முன்னோனை --- தனக்கு மூத்தவனாகிய குபேரனை, போரின் முடுக்கி --- சண்டையில் வென்று, விமானத்தை --- புஷ்பக விமானத்தை, என்னோ கைக் கொண்டான் --- இராவணன் ஏனோ அபகரித்து (அடியோடு மாண்டான். ஆகையால், இது) நடுவு இன்றி --- நடுவு நிலைமை இல்லாமல்,  நன்பொருள் வெஃகின் --- (ஒருவன்) பிறனுக்கு நன்மை தரும் பொருளை இச்சித்தால், அன்னோ --- அந்தோ, குடி பொன்றி --- அவனுடைய குலம் நாசமாய், குற்றமும் ஆங்கே தரும் --- (அக் காரியம் என்றும் அழியாப்) பழியையும் விளைவிக்கும் (என்பதை விளக்குகின்றது).

         கருத்துரை --- பிறர் பொருளை இச்சித்து அபகரித்தவன் பெரிதும் நாசமாவான்.

         விளக்கவுரை --- இராவணன் தனக்குத் தமையன் முறையான குபேரனைக் கொஞ்சமேனும் கண்ணோட்டமின்றிச் சண்டையிட்டுத் துரத்தி, அவனுடைய புஷ்பக விமானம் முதலிய உயர் பொருள்களைக் கொள்ளையிட்டுக் கொண்டுபோய் இலங்கையில் சேர்த்து வாழ்ந்து வந்தான். ஆனாலும் அவன் வாழ்வு நெடுநாள் நிலைத்திருக்கவில்லை. இப்படிப் பற்பல அநீதிகள் செய்துவந்தான். அவன் இராமாயணப் போரில், ஸ்ரீராமன் கை அம்பால் கிளையோடு மாண்டான். மாண்டும், பாவி என்ற நாமம் படைத்துத் தன் குலத்திற்கே பெரும் பழி தேடிக் கொண்டான். 

     அடுத்து, இத் திருக்குறளுக்கு விளக்கமாக, சிதம்பரம் ஈசானிய மடத்து, இராமலிங்க சுவாமிகள் பாடிய "முருகேசர் முதுநெறி வெண்பா" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...

மாண்டு நகரோடு அளறு வாய்ந்தான் பராந்தகக் கோன்
மூண்டு அரன் பூ வெஃகி, முருகேசா! - வேண்டும்
நடுவு இன்றி நன்பொருள் வெஃகின், குடிபொன்றிக்
குற்றமும் ஆங்கே தரும்.  

இதன் பதவுரை ---

     முருகேசா --- முருகப் பெருமானே, பராந்தகக் கோன் --- பாரந்தகன் என்னும் சோழ மன்னன், அரன் பூ மூண்டு வெஃகி --- சிவபெருமானுக்குரிய செவ்வந்தி மலர்களை மிகுதியாக விரும்பி, அதனால், நகரோடு மாண்டு அளறு வாய்ந்தான் --- நகரில் உள்ளவர்களோடு இறந்து நிரயத்தை அடைந்தான்.  வேண்டும் --- விரும்பப் படுவதாகிய, நடுவு இன்றி --- நடுவு நிலைமை இல்லாமல், நன்பொருள் வெஃகில் --- பிறருக்குரிய நல்ல பொருளை விரும்பினால், குடி பொன்றி --- குடியானது கெட்டு, குற்றமும் ஆங்கே தரும் --- குற்றத்தையும் அப்பொழுதே கொடுக்கும்.

         சிவபெருமானுக்குரிய மலரை விரும்பிய படியினால் பராந்தகச் சோழன் தன்னுடைய நகரத்தார்களோடு மாண்டு நிரயத்தை அடைந்தான். நடுவு நிலைமை இல்லாமல் பிறருக்குரிய பொருளை விரும்பினால் விரும்பியோருடைய குடி கெடுவதல்லாது, அப்பொழுதே குற்றமும் உண்டாகும் என்பதாம்.

                                    பராந்தகச் சோழன் கதை

         சாரமா முனிவர் என்பவர் சிவபிரானைத் திரிசிரா மலையிலே போற்றி வழிபட்டுக் கொண்டு இருந்தார். ஒரு காலத்தில் பாதலத்தில் இருந்து நாக கன்னிகைகள் செவ்வந்தி மலரைக் கொண்டு வந்து அம்மலரால் இறைவனை வழிபட்டார்கள். அம்மலரின் நறுமணம் முதலிய சிறப்புணர்ந்த முனிவர் தாமும் அப்பெண்களோடு பாதலம் சென்று, செவ்வந்திச் செடியை வாங்கிவந்து பயிரிட்டு, அதன் மலரைக் கொண்டு இறைவனைப் பூசித்து வழிபட்டார். அக்காலத்தில் உறையூரில்
அரசு புரிந்திருந்த சோழன் செவ்வந்தி மலர்களின் சிறப்பை உணர்ந்து அவைகளைக் களவு செய்து கொண்டுவரச் செய்து தான் அணிந்து மகிழ்ந்தான். இதனை உணர்ந்த சாரமா முனிவர் மண்மாரி பெய்து உறையூர் அழியுமாறு செய்தார். நகர் அழிந்து ஒழிந்ததும் அரசனும் இறந்து தொலைந்து இறைவனுக்குரிய மலரை விரும்பிய தீவினையால் நிரயத்தை அடைந்தான்.

     பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு விளக்கமாக அமைந்திருத்தலைக் காணலாம்...
அவ்வித்து அழுக்காறு உரையாமை முன்இனிதே;
செவ்வியனாய்ச் செற்றுச் சினங்கடிந்து வாழ்வு இனிதே;
கவ்வித்தாம் கொண்டு தாம் கண்டது காமுற்று
வவ்வார் விடுதல் இனிது.  ---  இனியவை நாற்பது.

இதன் பதவுரை ---

     அவ்வித்து அழுக்காறு உரையாமை முன் இனிது --- மனக்கோட்டஞ் செய்து, பொறாமைச் சொற்களைச் சொல்லாமை மிக இனிது; செவ்வியனாய் சினம் செற்று கடிந்து வாழ்வு இனிது --- மனக்கோட்டம் இல்லாதலனாய் கோபத்தைப் பகைத்து நீக்கி வாழ்வது இனிது; கவ்விக்கொண்டு தாம் கண்டது காமுற்று வவ்வார் விடுதல் இனிது --- மனம் அழுந்தி நிற்ப, தாங்கள் கண்ட பொருளைப் பெற விரும்பி, சமயங்கண்ட அபகரியரதவராய், - அதனை மறந்து விடுதல்,இனிது -.

நன்றிப் பயன் தூக்கா நாண் இலியும், சான்றோர்முன்
மன்றில் கொடும்பாடு உரைப்பானும், - நன்றின்றி
வைத்த அடைக்கலம் கொள்வானும், இம்மூவர்
எச்சம் இழந்து வாழ்வார்.       ---  திரிகடுகம்.

இதன் பதவுரை ---

     நன்றிப் பயன் தூக்கா நாண் இலியும் --- ஒருவன் தனக்குச் செய்த நன்றியின் பயனை அளந்து அறியாத நாணம் இல்லாதவனும்; சான்றோர் முன் மன்றில் கொடும்பாடு உரைப்பானும் ---- பெரியவர் முன்னே,  அறமன்றத்தில் பொய்ச் சொல்லைச் சொல்லுகின்றவனும்; நன்று இன்றி வைத்த அடைக்கலம் கொள்வானும் --- நற்செய்கை இல்லாதவனாய், ஒருவன் தன்னிடத்து வைத்த அடைக்கலப் பொருளைக் கைப்பற்றிக் கொள்பவனும்; இ மூவர் எச்சம் இழந்து வாழ்வார் --- ஆகிய இந்த மூவரும் தம் மக்களை இழந்து வருந்தி உயிர் வாழ்வார்.

எஃகு எறி செருமுகத்து ஏற்ற தெவ்வருக்கு
ஒஃகினன், உயிர் வளர்த்து உண்ணும் ஆசையான்,
அஃகல் இல் அறநெறி ஆக்கியோன் பொருள்
வெஃகிய மன்னன், வீழ் நரகின் வீழ்க, யான்.   ---  கம்பராமாயணம், பள்ளிபடை படலம்.

இதன் பதவுரை ---

     எஃகு எறி செருமுகத்து --- ஆயுதங்களை வீசிப் போர்செய்யும் போர்க்களத்து,  ஏற்ற தெவ்வருக்கு ஒஃகினன் --- எதிர்த்துப் போர் புரியும் பகைவர்களுக்கு எதிரே (தானும்போர் செய்யாமல் உயிராசையால்) வணங்கியவன்; உயிர் வளர்த்து உண்ணும் ஆசையால் --- உயிரை உடலில் நிலைபெறச் செய்து நெடுநாள் வாழ்ந்து அனுபவிக்க வேண்டும் என்கின்ற ஆசையாலே; அஃகம் இல் அறநெறி ஆக்கியோன் பொருள் வெஃகிய மன்னன் --- சுருங்குதல் இல்லாத பெரிய அறவழியில் பொருள் சேர்த்தவனது பொருளைப் (பேராசைப்பட்டு) கைப்பற்றிக் கொண்ட அரசன்; வீழ் நரகின் யான் வீழ்க --- விழுகின்ற நரகத்தில் யானும் வீழ்வேனாக.

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...