019. புறங்கூறாமை - 05. அறஞ்சொல்லும்





திருக்குறள்
அறத்துப்பால்

இல்லற இயல்

அதிகாரம் 19 - புறங்கூறாமை

     இந்த அதிகாரத்தில் வரும் ஐந்தாம் திருக்குறள், "உதட்டளவில் அறத்தைப் பற்றிப் பேசுபவன், உள்ளத்தளவில் அந்த அறம் இல்லை என்பது, அவன் பேசுகின்ற புறம் சொல்லின் கீழ்மையால், அறிவுடையோரால் அறியப்படும்" என்கின்றது.

     அறத்தை நன்று என்று சொல்லுபவன் உள்ளத்தில் அறம் இல்லாமை, அவன் புறங்கூறுவதால் அறியப்படும்.

திருக்குறளைக் காண்போம்...


அறம் சொல்லும் நெஞ்சத்தான் அன்மை, புறம் சொல்லும்
புன்மையால் காணப் படும்.

இதற்குப் பரிமேலழகர் உரை ---

     அறம் சொல்லும் நெஞ்சத்தான் அன்மை --- புறம் சொல்லுவான் ஒருவன் அறனை நன்றென்று சொல்லினும் அது தன் மனத்தானாச் சொல்லுகின்றான் அல்லன் என்பது;

     புறம் சொல்லும் புன்மையால் காணப்படும் - அவன் புறஞ் சொல்லுதற்குச் காரணமான மனப்புன்மையானே அறியப்படும்.

         (மனம் தீதாகலின், அச்சொல் கொள்ளப்படாது என்பதாம்.)

     பின் வரும் பாடல்கள் இதற்கு ஒப்புமையாக அமைந்திருத்தலைக் காணலாம்...

கொல்லான், கொலைபுரியான், பொய்யான், பிறர்மனைமேல்
செல்லான், சிறியார் இனம் சேரான், - சொல்லும்
மறையில் செவிஇலன், தீச்சொற்கண் மூங்கை,
இறையில் பெரியாற்கு இவை.       ---  ஏலாதி.

இதன் பதவுரை ---

     கொல்லான் --- ஓர் உயிரையும் கொலை செய்யான், கொலை புரியான் ---- பிறர் கொலை செய்தலையும் விரும்பான், பொய்யான் --- பொய் சொல்லான், பிறர் மனைமேல் செல்லான் --- பிறர்க்குரிய மனைவி மேல் தனக்கு உரிமை விரும்பான், சிறியார் இனம் சேரான் --- கீழ்மக்கள் கூட்டத்தில் இணங்கான், சொல்லும் மறையில் செவி இலன் --- மறைவாய்ச் சொல்லப்படுகின்ற, - மறை பொருள்களில் செவி கொடான், தீச் சொற்கண் மூங்கை --- தீய சொற்களைப் பேசுதலில் ஊமை, இவை இறையில் பெரியாற்கு --- ஆகிய இந்த நல்லியல்புகள் பெருந்தன்மையில், - பெரியவனுக்கு உரிய நற்குணங்கள்.

கொல்லான், உடன்படான், கொல்வார் இனம்சேரான்,
புல்லான் பிறர்பால், புலான்மயங்கல் - செல்லான்,
குடிப்படுத்துக் கூழ் ஈந்தான், கொல்யானை ஏறி
அடிப்படுப்பான் மண்ஆண்டு அரசு.  ---  ஏலாதி.

இதன் பதவுரை ---

     கொல்லான் --- ஓர் உயிரைக் கொல்லாமலும், உடன்படான் --- பிறர் கொல்வதற்குஉடன்படாமலும், கொல்வார் இனம் சேரான் --- கொலைத் தொழில் பயில்வார் கூட்டத்தைச் சேராமலும், பிறர் பால் புல்லான் --- அயலார் பால் இணக்கம் கொள்ளாமலும், புலால் மயங்கல் செல்லான் --- ஊன் உண்ணுதலை மேற்கொள்ளாமலும், குடி படுத்து --- தனது குடும்பத்தை நன்னிலைமையில் வைத்து, கூழ் ஈந்தான் --- பிறர்க்கும் உணவு அளிப்பவன், மண் ஆண்டு --- உலகத்தை அரசாண்டு, கொல் யானை ஏறி --- கொலைபயிலும் யானை மேலேறி, அரசு --- ஏனை அரசர்களை, அடிப்படுப்பான் --- தனக்கு அடங்கச் செய்பவனாவான்.


தெற்ற ஒருவரைத் தீது உரை கண்டக்கால்
இற்றே அவரைத் தெளியற்க, - மற்றவர்
யாவரே ஆயினும் நன்கு ஒழுகார், கைக்குமே
தேவரே தின்னினும் வேம்பு.     ---  பழமொழி நானூறு.

இதன் பதவுரை ---

     தெற்ற ஒருவரை தீது உரை கண்டக்கால் --- தெளிவாக நண்பு பூண்ட ஒருவரை, ஒருவர் பொல்லாங்கு உரைக்கும் உரையைக் கேட்டால், இற்றே --- நம்மையும் இப்பெற்றியே உரைப்பார் என்று கருதி, அவரை தெளியற்க --- அவரை நம்பாது ஒழிக, தேவரே தின்னினும் வேம்பு கைக்கும் --- உண்பவர்கள் தேவர்களேயானாலும் வேம்பு கசக்குந் தன்மையது. (அதுபோல), யாவரே ஆயினும் நன்கு ஒழுகார் --- நட்புப் பூண்பவர்கள் மிகவும் சிறந்தவர்களாயினும் அவர்களோடு நன்றாக ஒழுகுதல் இலர்.


சாம்பிணம் இடுவனம் சாரும் துன்மணம்
பூம்பொழில் பரிமளம் பொருந்தி நாறிடும்,
தாம்பழி உளர் அலால் தகுதியோர் பிறர்
நோம்படி அவர்குறை நுவலுவார்களோ. ---  நீதிநூல்.

இதன் பொழிப்புரை ---

     செத்த பிணத்தை இடுதலும் சுடுதலும் செய்யும் காடு, தீய நாற்றமே நாறும். அழகிய தேன் நிறைந்த மலரும் தீங்கனியும் பொருந்திய சோலை, நல்ல மணத்தையே தரும். பிறர் மனம் வருந்தும்படி அவர் குறையை அவர் இல்லாத இடத்துச் சொல்லுதலாகிய புறங்கூறுதலை தக்கவர் கூறார்; கூறின், புறங்கூறுவார் மேல் பழி சுற்றும் என்னும் உண்மை உணர்தலான்.

நலத்தின் மிக்கார் சொலார் நயம்இல் சொல்லையே,
சொலத் தகாப் பழி பிறர் மீது சொல்லுவோன்
குலத்தினும் நலத்தினும் குறை உளான் எனத்
தலத்து அவன் வாய்மொழி சாட்சி ஆகுமே.  ---  நீதிநூல்.

இதன் பொழிப்புரை ---

     நன்மை மிகுந்தவர் கடுமையான சொல்லைச் சொல்லார். பிறர்பால் சொல்லக் கூடாத பழமொழிகளைப் புறங்கூறுபவன் உயர்ந்த ஒழுக்கமும் சிறந்த பண்பும் இல்லாதவன் ஆவன். இதற்கு உலகில் புறங்கூறுதலாகிய அவன் வாய்மொழியே சான்று பகரும்.

உள்ள அங்கணம் கசிந்து ஓடல் போல் ஒரு
கள்ள நெஞ்சினன் புறங் கழறல், ன்னவன்
உள்ளமார் புரையெலாம் ஒழுகி வாய்மொழி
வெள்ளமாய் வழிகின்ற விதத்தை மானுமே. ---  நீதிநூல்.
  
 இதன் பொழிப்புரை ---

     வஞ்ச நெஞ்சுடையவன் புறங்கூறுதல், அவனுடைய உள்ளத்திலுள்ள தீமைகளெல்லாம் வாய்வழியாக வழிந்தோடுவதைக் காட்டும். அது, சாக்கடை கசிந்தோடுவதை ஒக்கும்.

         அங்கணம் --- சாக்கடை. புறங்கழறல் --- புறங்கூறுதல். புரை --- தீமை. மானும் --- ஒக்கும்.
 

இன்னலே ஏதிலார்க்கு இழைக்கும் அச்சொலே
முன்னம் மெய் என்னினும் முழுப்பொய் போலுமாம்,
அன்னவர் குறையினை அறிந்தும் இன்றெனப்
பன்னுபொய் மெய்யினும் பாடு உடைத்து அரோ. ---  நீதிநூல்.

இதன் பொழிப்புரை ---

     பிறர்க்குத் துன்பம் தரக்கூடிய சொல், வாய்மையாக இருப்பினும் அது பொய்ம்மையே ஆகும். அவருடைய குற்றத்தை உணர்ந்தும், இல்லை என்று பொய் சொல்வது மெய்ம்மையாம்.


கோட்செவிக் குறளை காற்றுட னெருப்பு   ---  கொன்றை வேந்தன்

இதன் பதவுரை ---

     கோள் செவி --- கோள் கேட்குங் குணம் உடையவனது காதிலே,  குறளை --- (பிறர்மேல் ஒருவன் வந்து சொன்ன) கோளானது,  காற்றுடன் நெருப்பு --- காற்றுடன் சேர்ந்த, - நெருப்பைப் போல மூளும்.

                 
கௌவை சொல்லி னெவ்வருக்கும் பகை.   ---  கொன்றை வேந்தன்

இதன் பதவுரை ---

கௌவை சொல்லின் --- (பிறர் மேலே) பழிச் சொற்களை  (ஒருவன்) சொல்லினால், எவ்வருக்கும் பகை --- எல்லாருக்கும் (அவன்) பகையாவான்.


பேச்சொடு பேச்சுக்கு எல்லாம் பிறர்தமைப் புறமே பேசக்

கூச்சிலேன், ஆதலாலே கொடுமையை விடுமாறு ஓரேன்

நாச்சொலி நாளும் மூர்த்தி நன்மையை உணரமாட்டேன்
ஏச்சுளே நின்று மெய்யே என்செய்வான் தோன்றினேனே.  --- அப்பர்.

இதன் பொழிப்புரை ---

     பேசும்போதெல்லாம் பிறரைப் புறம் கூறும் செயலில் சிறிதும் நாணம் இல்லாதவனாக இருக்கின்றேன். அந்தக் கொடுமையை விட்டுவிட வேண்டும் என்பதேயும் அறியாதவனாய் இருக்கின்றேன். சிவபெருமானுடைய பெருமையை நாவினாலே சொல்லி அவன் செய்யும் நன்மையை உணரமாட்டாதவனாகவும் இருக்கின்றேன். இகழ்ச்சிக்கு இடமாகிய இந்த உடம்பில் இன்னும் இருந்து கொண்டுள்ளேன். ஏன் பிறந்தேன் நான்?


No comments:

Post a Comment

பொது --- 1084. முழுமதி அனைய

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் முழுமதி அனைய (பொது) முருகா!  திருவடி அருள்வாய். தனதன தனன தனதன தனன      தனதன தனன ...... தந்ததான முழுமதி ய...