017. அழுக்காறாமை - 10. அழுக்கற்று





திருக்குறள்
அறத்துப்பால்

இல்லற இயல்

அதிகாரம் 17 - அழுக்காறாமை

     இந்த அதிகாரத்தில் வரும் பத்தாம் திருக்குறள், "பொறாமைப்படுதலைச் செய்து பெரியவர் ஆனதும் இல்லை; அது இல்லாதவர் பெருக்கத்தில் இருந்து நீங்கினதும் இல்லை" என்கின்றது.

     கேடு வருவதற்குக் காரணம் பொறாமையும், ஆக்கம் ஒருவதற்குக் காரணம் பொறாமை இன்மையும் காரணம் ஆயிற்று.

திருக்குறளைக் காண்போம்...

அழுக்கற்று அகன்றாரும் இல்லை, அஃது இல்லார்
பெருக்கத்தின் தீர்ந்தாரும் இல்.

இதற்குப் பரிமேலழகர் உரை ---

     அழுக்கற்று அகன்றாரும் இல்லை --- அழுக்காற்றைச் செய்து பெரியராயினாரும் இல்லை;

     அஃது இல்லார் பெருக்கத்தின் தீர்ந்தாரும் இல் --- அச் செயல் இலாதார் பெருக்கத்தின் நீங்கினாரும் இல்லை.
        
     இத் திருக்குறளுக்கு விளக்கமாக, கமலை வெள்ளியம்பலவாண முனிவர் அருளிய "முதுமொழி மேல் வைப்பு" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...

புத்தன் இறந்தான் பொறாமை செய்து, செய்யார்க்கு
நித்தர் அருள் உண்டாய் நிறைந்த புகழ், --- மெத்த
அழுக்கற்று அகன்றாரும் இல்லை, அஃது இல்லார்
பெருக்கத்தின் தீர்ந்தாரும் இல்.

இதன் பொருள் ---

     புத்தன் ---  புத்த நந்தி. பொறாமை செய்து --- ஆளுடைய பிள்ளையார் ஆகிய திருஞானசம்பந்தர் சின்னமும் ஊர்தியும் பெற்று வருவதைக் கண்டு பொறாமல். செய்யார்க்கு --- பொறாமை செய்யாத சிவனடியார்களுக்கு, செம்மை உடையார்க்கு எனினும் ஆம்.

         திருஞானசம்பந்தப் பெருமான் திருநள்ளாற்று இறைவரை வணங்கி,  அத்திருத்தலத்தில் சில நாள் தங்கி இருந்து, பின்னர் திருதெளிச்சேரி சேர்ந்து, போதி மங்கையை நெருங்கினார்.  போதிமங்கை, புத்தர்கள் நிறைந்த ஊர். அடியவர்களின் ஆரவாரமும், திருச்சின்ன ஓசையும், திருவைந்தெழுத்து முழக்கமும் புத்தர்களுக்கு நாராசம் போல் இருந்தன. அவர்கள் எல்லாரும் ஒருங்கு திரண்டு, புத்தநந்தியைத் தலைவனாகக் கொண்டு, அடியவர்களின் திருக்கூட்டத்தை மறித்தனர். அவர்கள், "உங்கள் வெற்றிச் சின்னங்கள் எதற்கு? எங்களை வாதில் வென்றீர்களா? வாதில் வென்று அல்லவா அவைகளை முழக்கவேண்டும்?" என்று வெகுண்டு விலக்கினார்கள். அவர்கள் செயலைக் கண்ட சிவனடியார்கள் "இத் தலைவனை மாய்த்தல் வேண்டும். இல்லையேன் இவன் தீங்கு விளைவிப்பான்" என்று கருதி, நிலைமையைப் பிள்ளையாருக்குத் தெரிவித்தார்கள்.  பிள்ளையார், "இதென்ன நன்றாய் இருக்கின்றது. புத்தநந்தியின் திறத்தை வாதத்தில் பார்ப்போம்" என்று திருவாய் மலர்ந்தருளினார். அதற்குள் நெருக்கு அதிகமாக, தேவாரத் திருமுறைகளை எழுதிவரும் அன்பர்,

'புத்தர் சமண் கழுக்கையர் பொய்கொளாச்
சித்தத்தவர்கள் தெளிந்து தேறின,
வித்தக நீறு அணிவார் வினைப் பகைக்கு
அத்திரம் ஆவன அஞ்செழுத்துமே'

என்னும் திருப்பாட்டை ஓதி முடித்தார். முடித்ததும், புத்த நந்தி மீது இடி விழுந்தது. புத்தர்கள் நிலை கலங்கி ஓடினார்கள். அந் நிகழ்ச்சியை அடியார்கள் பிள்ளையாருக்கு அறிவித்தார்கள். பிள்ளையார் அவர்களை நோக்கி, "இது விதியால் நேர்ந்தது. அரன் நாமத்தை ஓதுங்கள்" என்றார். அடியார்கள் அப்படியே செய்தார்கள்.

         மருண்டு ஓடிய புத்தர்கள், சாரிபுத்தனைத் தலைவனாகக் கொண்டு, மீண்டும் வந்தார்கள். வந்து, "மந்திர வாதம் வேண்டாம், தருக்க வாதம் செய்யுங்கள், பார்ப்போம்" என்று அடர்த்தார்கள்.   பிள்ளையார் சிவிகையில் இருந்து இறங்கி, ஒரு மண்டபத்தில் எழுந்தருளினார். புத்தர்களை அழைத்து வருமாறு பிள்ளையார் அடியார்களுக்குக் கட்டளை இட்டார். புத்தர்களை அழைத்து வந்தார்கள். சாரிபுத்தன் பிள்ளையார் அருகே நின்றான். புத்த நந்தியை இருகூறு படுத்திய அன்பர், பிள்ளையார் முன்னிலையில் வாதத்தைத் தொடங்கினார். சாரிபுத்தனும் வாதத்தில் ஈடுபட்டான். முடிவில் சாரிபுத்தன் தோல்வி
அடைந்தான். அவன் பிள்ளையாரை வணங்கினான். மற்ற புத்தர்களும் பிள்ளையாரை வணங்கினார்கள். பிள்ளையார் எல்லாருக்கும் திருநீறு அளித்து அருள் செய்தார்.

     பொறாமை காரணமா, திருஞானசம்பந்தரை வாதிள்கு அழைத்து, புத்தர்கள் தமது ஆக்கநிலையை இழந்தார்கள்.
        
         பின்வரும் பாடல் இத் திருக்குறளுக்கு விளக்கமாக அமைந்திருத்தலைக் காணலாம்...

'ஆற்றார் ஆகின், தம்மைக் கொண்டு
     அடங்காரோ? என் ஆர் உயிர்க்குக்
கூற்றாய் நின்ற குலச் சனகி குவளை
     மலர்ந்த தாமரைக்குத்
தோற்றாய்; அதனால், அகம்கரிந்தாய்;
     மெலிந்தாய்; வெதும்பத் தொடங்கினாய்,
மாற்றார் செல்வம் கண்டு அழிந்தால்,
     வெற்றி ஆகவற்று ஆமோ?'   ---  கம்பராமாயணம், மாரீசன் வதைப்படலம்.
    
இதன் பதவுரை ---

     என் ஆர் உயிர்க்கு --- என்னுடைய இனிய உயிருக்கு; கூற்றாய் நின்ற --- எமனாய் அமைந்த; குலச் சனகி --- நற்குடிச் செல்வி சீதையின்; குவளை மலர்ந்த தாமரைக்கு --- கண்களாகிய குவளைப் பூக்கள் பூத்திருக்கும் முகமாகிய தாமரைக்கு; தோற்றாய் --- நீ தோல்வியுற்றாய்; அதனால் அகம் கரிந்தாய் --- அக்காரணத்தால் உள்ளம் கரிந்து போனாய்; மெலிந்தாய் --- உடல் தேய்ந்தாய்; வெதும்பத் தொடங்கினாய் --- மேனி வெப்பமுறவும் தொடங்கினாய்; மாற்றார் செல்வம் கண்டு அழிந்தால் ---
பிறர் வளம் கண்டு இங்ஙனம் சிதைவுற்றால்; வெற்றி ஆக வற்று ஆமோ --- வென்று உயர்தல் இயலுவதாகுமோ?; ஆற்றார் ஆகின் --- தம்மால் வெல்ல இயலாதென உணர்ந்தால்; தம்மைக் கொண்டு அடங்காரோ? --- (அறிவு மிக்கோர்) தம் நிலை உணர்ந்து கொண்டு அடங்கி விட மாட்டார்களோ? (அடங்குதல் தானே பொருத்தம்!)

    தாமரைக்குப் பகைவனான சந்திரன், சீதையின் முகத் தாமரைக்குத் தோற்றான் என்றார். மேலும் தான் மலர்விப்பதற்குரிய குவளைகளும் பகையான தாமரைகள் மலரும் முகமாகிய குளத்தில் இருத்தலால் சந்திரன் தோற்றுப் போகிறான்.

     என் ஆருயிர்க்குச் சானகியே கூற்று என்ற இராவணன் மொழி பின்வருவதை முன் உணர்த்தி நின்றது. உவமையாகு பெயராய்க் குவளை, கண்களை உணர்த்துகின்றது.                                   

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...