019. புறங்கூறாமை - 09. அறன்நோக்கி




திருக்குறள்
அறத்துப்பால்

இல்லற இயல்

அதிகாரம் 19 - புறங்கூறாமை

     இந்த அதிகாரத்தில் வரும் ஒன்பதாம் திருக்குறள், "ஒருவன் தன் எதிரில் இல்லாத நேரம் பார்த்து, பழித்துப் பேசுகின்றவனது உடல் பாரத்தை, இக் கொடியவனைச் சுமப்பதும் தனக்கு அறம் ஆகும் என்று எண்ணி, இந்த நிலம் சுமக்கின்றது போலும்" என்கின்றது.

     புறங்கூறுபவன் பூமி பாரம். அவனையும் சுப்பது தனது கடமை என்று எண்ணி, பூமாதேவி சுமக்கின்றாள்.

திருக்குறளைக் காண்போம்....

அறன் நோக்கி ஆற்றும் கொல் வையம், புறன் நோக்கிப்
புன்சொல் உரைப்பான் பொறை.

இதற்குப் பரிமேலழகர் உரை ---

     புறன் நோக்கிப் புன்சொல் உரைப்பான் பொறை --- பிறர் நீங்கின அளவு பார்த்து அவர் பழித்துரையை உரைப்பானது உடற்பாரத்தை;

     வையம் அறன் நோக்கி ஆற்றுங்கொல் --- நிலம் இக் கொடியது பொறுத்தலே எனக்கு அறமாவது எனக் கருதிப் பொறுக்கின்றது போலும்!

         (எல்லாவற்றையும் பொறுத்தல் இயல்பாயினும், இது பொறுத்தற்கு அரிது என்னும் கருத்தால், 'அறன் நோக்கி ஆற்றுங்கொல்' என்றார்.' இவை ஐந்து பாட்டானும் புறம் கூறுவார்க்கு எய்தும் குற்றம் கூறப்பட்டது.)

     புறங்கூறுவோனது இழிவு பின்வரும் பாடலால் காணப்படும்...

பகைஇன்று பல்லார் பழிஎடுத்து ஓதி
நகைஒன்றே நன்பயனாக் கொள்வான் பயமின்று
மெய்விதிர்ப்புக் காண்பான் கொடிறுஉடைத்துக் கொல்வான்போல்
கைவிதிர்த்து அஞ்சப் படும்.      ---  நீதிநெறி விளக்கம்.

இதன் பதவுரை ---

     பகை அன்று --- ஒரு பகையும் அல்லாமல், பல்லார் பழி எடுத்து ஓதி --- பலரிடத்திலுமுள்ள வசைகளை எடுத்துச் சொல்லி, நகை ஒன்றே --- இகழ்தலாகிய தீவினை ஒன்றையே, நன் பயனாக் கொள்வான் --- நற்பயன் என்று கொண்டு திரியும் மூடன், பயமின்று --- வேறொரு பயனுமின்றி, மெய்விதிர்ப்புக் காண்பான் --- உடலில் ஏற்படும் நடுக்கமாகிய பயன் ஒன்றையே காணக் கருதி, கொடிறு உடைத்துக் கொல்வான் போல் --- பிறருடைய கன்னத்தை உடைத்து வருத்தும் இயல்பு உடையானைப் போல், கை விதிர்த்து அஞ்சப்படும் --- (பிறரால்) கை நடுக்கத்துடன் அஞ்சப்படுவான்.

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...