016. பொறையுடைமை - 09. துறந்தாரின்





திருக்குறள்
அறத்துப்பால்

இல்லற இயல்

அதிகாரம் 16 - பொறை உடைமை

     இந்த அதிகாரத்தில் வரும் ஒன்பதாவது திருக்குறள், "அறவழியில் இருந்து பிறழ்ந்தவர் வாயில் இருந்து உண்டாகும், கொடிய சொற்களைப் பொறுத்துக் கொள்ளுபவர், இல்வாழ்க்கையில் இருந்தாலும், துறந்தவரைப் போல தூய்மையான குணத்தை உடையவர்" என்கின்றது.

திருக்குறளைக் காண்போம்...

துறந்தாரின் தூய்மை உடையர், இறந்தார் வாய்
இன்னாச்சொல் நோற்கிற்பவர்.

இதற்குப் பரிமேலழகர் உரை ---

     துறந்தாரின் தூய்மை உடையர் --- இல்வாழ்க்கைக்கண் நின்றேயும் துறந்தார் போலத் தூய்மையுடையார்;

     இறந்தார் வாய் இன்னாச் சொல் நோற்கிற்பவர் --- நெறியைக் கடந்தார் வாய் இன்னாச் சொல்லைப் பொறுப்பவர்.

         (தூய்மை : மனம் மாசு இன்மை. 'வாய்' என வேண்டாது கூறினார், 'தீய சொற்கள் பயின்றது' எனத் தாம் வேண்டியதன் இழிவு முடித்தற்கு.)

     பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு விளக்கமாக அமைந்திருத்தலைக் காணலாம்...

 நேர்த்து நிகர் அல்லார் நீர் அல்ல சொல்லியக்கால்
வேர்த்து வெகுளார் விழுமியோர், - ஓர்த்து அதனை
உள்ளத்தான் உள்ளி உரைத்து உராய் ஊர்கேட்பத்
துள்ளித்தூண் முட்டுமாம் கீழ்.       ---  நாலடியார்.

இதன் பதவுரை ---

     நேர்த்து நிகர் அல்லார் --- சமானம் இல்லாதவர்கள் தம்மைச் சமானாமாகக் கருதிக்கொண்டு, நீர் அல்ல சொல்லியக்கால் --- தகைமையல்லாத சொற்களைச் சொன்னால், வேர்த்து வெகுளார் விழுமியோர் --- சிறந்தவர்கள் மனம் புழுங்கிச் சினந்து கொள்ளமாட்டார்கள் ; ஆனால் ; கீழ் --- கீழ்மக்கள், ஓர்த்து அதனை உள்ளத்தான் உள்ளி --- ஆராய்ந்து அத் தகைமையற்ற சொல்லை மனத்தால் பலகாலும் நினைத்து, உரைத்து உராய் ஊர் கேட்ப --- ஊரிலுள்ளவர்கள் கேட்கும்படி அங்கங்கும் சொல்லித் திரிந்து, துள்ளித் தூண்முட்டும் --- அதனால் மேன்மேலும் பெருகுங் கோபத்தினால் உடம்பு துடித்து அருகிலிருக்கும் தூணில் மோதிக் கொள்வார்கள்.

         தகுதி அல்லாதவர்கள் சொல்லும் சொற்களுக்குச் சான்றோர் சினந்து கொள்ளமாட்டார்கள், தூற்றமாட்டார்கள் என்பது கருத்து.


இளையான் அடக்கம் அடக்கம், கிளைபொருள்
இல்லான் கொடையே கொடைப்பயன், - எல்லாம்
ஒறுக்கும் மதுகை உரன் உடையாளன்
பொறுக்கும் பொறையே பொறை.   ---  நாலடியார்.

இதன் பதவுரை ---

     இளையான் அடக்கம் அடக்கம் --- இளமைப் பருவம் உடையவனது புலன் அடக்கமே அடக்கம் எனப்படும், கிளைபொருள் இல்லான் கொடையே கொடைப் பயன் --- கிளைக்கும் பொருள் இல்லாதவனது ஈகையே பயன் எனப்படும் ஈகையாம் (அவை போல) எல்லாம் ஒறுக்கும் மதுகை உரன் உடையாளன் பொறுக்கும் பொறையே பொறை --- எதனையும் அழிக்க வல்ல வலிமையறிவினை உடையோன் பொறுத்துச் சினம் ஆறும் பொறுமையே பொறுமை யெனப்படும்.

கல்லெறிந்து அன்ன கயர்வாய் இன்னாச்சொல்
எல்லாரும் காணப் பொறுத்து உய்ப்பர், - ஒல்லை
இடுநீற்றால் பைஅவிந்த நாகம்போல் தத்தம்
குடிமையால் வாதிக்கப் பட்டு.  ---  நாலடியார்.

இதன் பதவுரை ---

     ஒல்லை இடு நீற்றால் பை அவிந்த நாகம் போல் --- மந்திரித்து இட்ட திருநீற்றால் உடனே படம் சுருங்கிச் சினம் ஒடுங்கிய நல்ல பாம்பைப் போல, தத்தம் குடிமையான் வாதிக்கப்பட்டு --- தங்கள் உயர்குல ஒழுக்கத்தால் தடை செய்யப்பட்டு, கல் எறிந்தன்ன கயவர் வாய் இன்னாச் சொல் --- கற்களை வீசினாற் போன்ற கீழ்மக்கள் வாயில் தோன்றிய துன்பச் சொற்களை, எல்லாரும் காணப் பொறுத்து உய்ப்பர் --- அனைவரும் அறியப் பெரியோர் பொறுத்துக் கொண்டு தமது மேற்கோளை நடத்திச் செல்வர்.

         தமது உயர்நிலை கருதிச் சான்றோர், கீழ் மக்கள் சொற்களைப் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்பது கருத்து.

தன்னை ஒருவன் இகழ்ந்து உரைப்பின், தான் அவனைப்
பின்னை உரையாப் பெருமையான் --- முன்னை
வினைப்பயனும் ஆயிற்றாம் என்று அதன்கண் மெய்ம்மை
நினைத்து ஒழிய நெஞ்சில் நோய் இல். --- அறநெறிச்சாரம்.
    
இதன் பதவுரை ---

     ஒருவன் தன்னை இகழ்ந்து உரைப்பின் --- ஒருவன் தன்னை இகழ்ந்து கூறினால், பின்னை --- பின்னர், தான் --- தானும், அவனை உரையாப் பெருமையான் --- அவனை இகழ்ந்து கூறாத பெருமையை உடையோன், முன்னை வினைப்பயனும் ஆயிற்றாம் என்று --- முற்பிறப்பில் தான் செய்த தீவினைப் பயனும் இதனால் முடிந்தது என்று, அதன்கண் மெய்ம்மை நினைத்து ஒழிய --- அதன் உண்மையை நினைத்து அதனைக் கருதாது ஒழிய, நெஞ்சில் நோய் இல் --- அவன் மனத்தில் துன்பம் இல்லையாகும்.

எள்ளிப் பிறர் உரைக்கும் இன்னாச்சொல், தன்னெஞ்சில்
கொள்ளி வைத்தால் போல் கொடிது எனினும், --- மெள்ள
அறிவு என்னும் நீரால் அவித்து ஒழுகல் ஆற்றின்,
பிறிது ஒன்று வேண்டா தவம்.   ---  அறிநெறிச்சாரம்.

இதன் பதவுரை ---

     பிறர் எள்ளி உரைக்கும் இன்னாச் சொல் --- தன்னைப் பிறர் இகழ்ந்து கூறும் கடுஞ்சொல். கொள்ளி வைத்தாற் போல் ---நெருப்பினாற் சுட்டாற்போல், தன் நெஞ்சில் கொடிது எனினும் ---தன் மனத்தில் துன்பத்தை மிகுவிப்பதாயினும், அறிவென்னும் நீரால் --- அறிவாகிய நீரால், மெள்ள --- அமைதியாக, அவித்து ஒழுகல் ஆற்றின் --- அத் துன்பத்தைக் கெடுத்து ஒழுகுவானானால், தவம் பிறிது ஒன்றும் --- வேறு தவம் ஒன்றும், வேண்டா --- செய்ய வேண்டுவதில்லை.


உனை ஒருவர் இகழ்ந்தனரேல் ஏதுக்கா
             இகழ்ந்தனர் என்று உன்னி, உன்பால்
தினைஅளவு தப்பு உளதேல், தை நீக்காய்;
            தப்பு இன்றேல் சினம் உறாதே;
கனைகழையை வேம்பு என்னில், கழைக்கும் ஓர்
            குறை உண்டோ? கல்லின் மோதித்
தனை உடைப்போர்க்கு உணவுதரும் தேங்காய்போல், 
            எவர்க்கும் நன்மை தனைச் செய் நெஞ்சே.---  நீதிநூல்.

இதன் பொழிப்புரை ---

     நெஞ்சே! உன்னை ஒருவர் இகழ்ந்தாரானால், அவர் எதன்பொருட்டு இகழ்ந்தார் என்று நீ உன்னிடமே நினைத்துப் பார். உன்பால் குற்றம் தினை அளவு இருப்பினும் அதை வருந்தியும் நீக்கிவிடு. குற்றம் இல்லையானாலும் இகழ்ந்ததற்காகச் சினம் கொள்ளாதே. செறிந்த கரும்பினை வேம்பு என்று சொல்லுவதால் கரும்புக்கு ஏதாவது குறை உண்டாகுமா? கல்லின்மேல் அடித்து உடைத்தாலும் தேங்காய் உண்ணும் பருப்பினைத் தருதல்போல் இகழ்ந்தவர்கட்கு நன்மையே செய்.                


தீது ஒருவர் செய்தனர் என்று, தற்கு எதிராய்
            நீ அவர்க்கு ஓர் தீங்கு செய்யின்,
சாது நீ, அவர் தீயர் என்பதற்குக்
            கரி என்ன? சக்கு இலாதார்
ஓதவிடம் உண்ணின், விழி உடையாரும்
            உண்ணுவரோ? உலப்பில் செந்நெல்
சேதம் உற அவைத்திடுவோர்க்கு உணவு ஆதல்
            போல் நலமே செய்வாய் நெஞ்சே.     ---  நீதிநூல்.
        
இதன் பொழிப்புரை ---

நெஞ்சே! உனக்கு ஒருவர் தீங்குசெய்தார் என்று நீ அவர்க்கு ஒரு தீங்கு செய்தால், நீ நல்லவன் என்றும் அவர் தீயவர் என்றும் வேறுபடுத்துக் கூறுவதற்குச் சான்று என்ன இருக்கின்றது? கண்ணில்லாதவர் சாவினைத் தரும் நஞ்சினை உண்டார்களானால், கண் உடையவர்களும் உண்பார்களோ? கெடாத செந்நெல்லை உமி நீங்குதலாகிய கேடெய்தும்படி குற்றுவோர்க்கு அந்நெல் உணவாகி நன்மை செய்வதுபோன்று தீங்கு செய்வார்க்கும் நன்மையே செய்.

         சாது --- நல்லவன். கரி --- சான்று. சக்கு --- கண். ஓதம் --- குளிர்; சாவு. அவைத்திடுவோருக்கு --- குற்றுவோருக்கு.
        

அருளினை நெஞ்சத்து அடைகொடா தானும்,
பொருளினைத் துவ்வான் புதைத்து வைப்பானும்,
இறந்து இன்னா சொல்லகிற்பானும், ம் மூவர்
பிறந்தும் பிறந்திலாதார்.         ---  திரிகடுகம்.

இதன் பதவுரை ---

     அருளினை நெஞ்சத்து அடை கொடாதானும் --- அருள் உணர்வை மனத்தில் நிறைத்து வையாதவனும்; பொருளினை துவ்வான் புதைத்து வைப்பானும் --- செல்வத்தைத் தானும் நுகராது,  பிறர்க்கும் கொடாமல் பூமியில் மறைத்து வைக்கின்றவனும், இறந்து இன்னா சொல்லகிற்பானும் --- தன்னிலை கடந்து பிறர்க்குத் துன்பம் தரும் சொற்களை சொல்லவல்லவனும்; இ மூவர் பிறந்தும் பிறந்து இலதார் --- ஆகிய இம் மூவரும், மக்கள் பிறப்பில் பிறந்திருந்தும், மக்கள் பிறப்பு இல்லாதவராகவே கருதப்படுவார்.

     ஆறாவது அறிவு அமையப் பெறாத மற்ற இனமாகவே கருதப்படுவர்.


No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...