016. பொறையுடைமை - 07. திறனல்ல





திருக்குறள்
அறத்துப்பால்

இல்லற இயல்

அதிகாரம் 16 - பொறை உடைமை

     இந்த அதிகாரத்தில் வரும் ஏழாம் திருக்குறள், "செய்யத்தகாத தீய செயல்களைத் தன்னிடத்தில் ஒருவர் செய்தாராயினும், இந்தப் பாவச் செயல் காரணமாக, இவர் மறு பிறவியில் கொடுமையான நரகத் துன்பத்தை அனுபவிப்பாரே என்று வருந்தி, அவர் மீது இரக்கம் கொண்டு, அறம் அல்லாத செயல்களைத் திரும்பச் செய்யாது இருத்தல் நல்லது" என்கின்றது.

திருக்குறளைக் காண்போம்...
  
திறன் அல்ல தன்பிறர் செய்யினும், நோ நொந்து,
அறன் அல்ல செய்யாமை நன்று.

இதற்குப் பரிமேலழகர் உரை ---

     திறன் அல்ல தன் பிறர் செய்யினும் --- செய்யத்தகாத கொடியவற்றைத் தன்கண் பிறர் செய்தாராயினும்;

     நோநொந்து அறன் அல்ல செய்யாமை நன்று --- அவர்க்கு அதனால் வரும் துன்பத்திற்கு நொந்து, தான் அறனல்லாத செயல்களைச் செய்யாதிருத்தல் ஒருவனுக்கு நன்று.

       [உம்மை: சிறப்பு உம்மை. துன்பத்திற்கு நோதலாவது "உம்மை - எரிவாய் நிரயத்து வீழ்வர்கொல்" (நாலடி. 58) என்று பரிதல்.]

இத் திருக்குறளுக்கு விளக்கமாகப் பின்வரும் பாடல்கள் அமைந்திருத்தலைக் காணலாம்....

ஒறுப்பாரை யான் ஒறுப்பன், தீயார்க்கும் தீயேன்,
வெறுப்பார்க்கு நான்மடங்கே என்ப --- ஒறுத்தியேல்
ஆர்வம், மயக்கம், குரோதம் இவை மூன்றும்
ஊர்பகை நின்கண் ஒறு.              ---  அறநெறிச்சாரம்.

இதன் பதவுரை ---

     நெஞ்சே! ஒறுப்பாரை யான் ஒறுப்பன் --- என்னைத் துன்புறுத்துகின்றவர்களை நான் துன்புறுத்துவேன் எனவும், தீயார்க்கும் தீயேன் --- கொடியவர்களுக்கு நான் கொடியவன் ஆவேன் எனவும், வெறுப்பார்க்கு நான் மடங்கே என்ப --- என்னை வெறுப்பவர்களை நான்கு மடங்கு வெறுப்பேன் எனவும் உலகத்தார் கூறுவர். ஒறுத்தியேல் --- நீ இவற்றை மேற்கொண்டு பிறரை அடக்கக் கருதுவாயாயின், ஆர்வம் மயக்கம் குரோதம் இவை மூன்றும் --- ஆசை அறியாமை வெகுளி என்னும் மூன்றும், ஊர் பகை --- உன்னை மேற்கொள்ளும் பகைகளாகத் தோன்றும், நின்கண் ஓறு --- ஆதலின் உன்னிடத்து அவை உளவாகாவாறு அடக்கு.

     ''அடிக்கு அடி; குத்துக்குக் குத்து; பொய்க்குப் பொய்; கோளுக்குக் கோள்;'' என்ற உலகத்தார் பொதுவாகக் கூறுவது, மக்களிடையே பெருங் குழப்பத்தினை உண்டாக்கும். எக்காலும் பொறுமையினை மேற்கொள்ளல் மக்களுக்கு இன்றியமையாதது என்பது கருத்து.


உபகாரம் செய்ததனை ஓராதே தங்கண்
அபகாரம் ஆற்றச் செயினும் - உபகாரம்
தாம்செய்வ தல்லால் தவற்றினால் தீங்கு ஊக்கல்
வான்தோய் குடிப்பிறந்தார்க் கில்.   ---  நாலடியார்.   

இதன் பதவுரை ---

     உபகாரம் செய்ததனை ஓராது --- தாம் முன்பு உதவி செய்ததை நினையாமல், தம் கண் அபகாரம் ஆற்றச் செயினும் ---பிறர் தம்மிடம் தீமைகளை மிகுதியாகச் செய்தாலும், உபகாரம் தாம் செய்வது அல்லால் --- அவருக்குத் தாம் திரும்பவும் உதவி செய்வது அல்லாமல், தவற்றினால் தீங்கு ஊக்கல் --- அவர் குற்றங் காரணமாக அவருக்குத் தீங்கு செய்ய முயலுதல், வான் தோய் குடிப்பிறந்தார்க்கு இல் --- உயர்குலத்தில் தோன்றிய மேலோர்களுக்கு இல்லை.

         தாம் நன்மை செய்தும் தமக்குத் தீமை செய்வோர்க்கு மேலுமேலும் நன்மை செய்வதல்லாமல், தீங்கு செய்ய முயலார் சான்றோர் என்பது கருத்து.

         பிறர்பால் உண்டாகும் தீய நினைவை, அவருக்கு நன்மை செய்து செய்தே மாற்றுதல் இயலும் என்பதனாலும், தமக்கும் அம் மனப்பான்மை மேன்மேலும் ஞான விளக்கத்துக்கு இடம் செய்யும் என்பதனாலும் இங்ஙனம் கூறப்பட்டது.

நேர் அல்லார் நீர் அல்ல சொல்லியக்கால் மற்று அது
தாரித்து இருத்தல் தகுதி, மற்று --- ஓரும்
புகழ்மையாக் கொள்ளாது பொங்குநீர் ஞாலம்,
சமழ்மையாக் கொண்டு விடும்.              ---  நாலடியார்.

இதன் பொருள் ---

     கீழோர் தகாத வார்த்தைகளால் தம்மைத் திட்டினாலும், அதைத் தாங்கிக் கொள்வதே பெரியோருக்கு அழகு ஆகும். அப்படி இல்லாமல், அவர்களும் கீழோர் மீது இழிசொல் வீசினால், கடலால் சூழப்பட்ட இந்த உலகம், அத்தகைய பெரியோர் புகழைப் போற்றாமல், அவர்களையும் இழிந்த கீழோராகவே கருதி விடும்.

அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல, தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை.

திறன் அல்ல தன் பிறர் செய்யினும், நோ நொந்து,
அறன் அல்ல செய்யாமை நன்று.

என்பது முதலாக வரும் "பொறையுடைமை" அதிகாரத் திருக்குறள் கருத்துக்களை இங்கு வைத்து எண்ணிக் கொள்ளுக.


இன்னல் எமக்கு இழைத்ததனால், வீடு இழந்து
             நரகு ஆழ்வார் என நினைந்து,
பன்னரிய பெரியர் பிழை பொறுப்பர், பொறார்
             தம் பிழையைப் பரமன் ஆற்றான்,
முன்ஒருவன் செய்தனன் என்று அவற்கு இறப்பச்
             செயும் இடர், ம் முறையிலான் சேய்
பன்னி தமரையும் சேரும் அவர் நமக்கு எப்
             பிழைசெய்தார் பகராய் நெஞ்சே.  ---  நீதிநூல்.
        
         அறியாமல் தீங்கிழைத்தவர் அத்தீவினைப் பயத்தால் பேரின்பப் பெருவாழ்வை இழந்து மீளா நரகத்தில் ஆழ்ந்து விடுவாரே என்று வருந்தி அப்பிழையைப் பெரியவர் பொறுப்பர். பிழையைப் பொறாதவர்கள் செய்யும் குற்றத்தை ஆண்டவனும் பொறுத்தருளான். தனக்கு முன்பொருவர் குற்றம் செய்தனர் என்று அவர்க்குத் தாமும் ஒரு குற்றம், சாவினைத் தரும் பேரிடரைச் செய்யின், அவ் இடரால் அவருடைய மக்கள், மனைவியர், உறவினர் முதலானவர்கள் துன்புறுவர். அவர்கள் இடர் எய்தும்படி என்ன பிழை செய்தார்கள் மனமே! சொல்லுவாயாக.



No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...