பொது --- 1096. இருவினைகள் ஈட்டும்

 


அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

இருவினைகள் ஈட்டும் (பொது)


முருகா! 

திருவடி அருள்வாய்.


தனதனன தாத்த தனதனன தாத்த

     தனதனன தாத்த ...... தனதான


இருவினைக ளீட்டு மிழவுபடு கூட்டை

     யெடுமெடென வீட்டி ...... லனைவோரும்


இறுதியிடு காட்டி லழுதுதலை மாட்டில்

     எரியஎரி மூட்டி ...... யிடுமாறு


கரியஇரு கோட்டு முரணெருமை மோட்டர்

     கயிறிறுக மாட்டி ...... யழையாமுன்


கனகமணி வாட்டு மருவுகழல் பூட்டு

     கழலிணைகள் காட்டி ...... யருள்வாயே


பருவமலை நாட்டு மருவுகிளி யோட்டு

     பழையகுற வாட்டி ...... மணவாளா


பகைஞர்படை வீட்டில் முதியகன லூட்டு

     பகருநுதல் நாட்ட ...... குமரேசா


அருமறைகள் கூட்டி யுரைசெய்தமிழ் பாட்டை

     அடைவடைவு கேட்ட ...... முருகோனே


அலைகடலி லீட்ட அவுணர்தமை யோட்டி

     அமரர்சிறை மீட்ட ...... பெருமாளே.


                        பதம் பிரித்தல்


இருவினைகள் ஈட்டும் இழவுபடு கூட்டை

     எடும் எடு என, வீட்டில் ...... அனைவோரும்


இறுதி இடுகாட்டில் அழுது, தலை மாட்டில்

     எரிய எரி மூட்டி ...... இடுமாறு,


கரியஇரு கோட்டு முரண் எருமை மோட்டர்

     கயிறு இறுக மாட்டி ...... அழையாமுன்,


கனகமணி வாட்டு மருவுகழல் பூட்டு

     கழல் இணைகள் காட்டி ......அருள்வாயே.


பருவமலை நாட்டு மருவு கிளி ஓட்டு

     பழைய குறவாட்டி ...... மணவாளா!


பகைஞர் படை வீட்டில் முதியகனல் ஊட்டு

     பகரு நுதல் நாட்ட! ...... குமர ஈசா!


அருமறைகள் கூட்டி உரை செய் தமிழ் பாட்டை

     அடைவு அடைவு கேட்ட ...... முருகோனே!


அலைகடலில் ஈட்ட அவுணர்தமை ஓட்டி

     அமரர் சிறை மீட்ட ...... பெருமாளே.

பதவுரை

பருவ மலைநாட்டு மருவு கிளி ஓட்டு பழைய குறவாட்டி மணவாளா --- உயர்ந்த வள்ளிமலை நாட்டில் (தினைப் புனத்தில்) இருந்த கிளிகளை ஓட்டிக் கொண்டிருந்த, (சுந்தரவல்லியாய் முன்னரே தேவரீரைக் குறித்துத் தவம் புரிந்து கொண்டிருந்த) பழைய உறவைப் பூண்டிருந்த குறமகள் ஆகிய வள்ளியநாயகியின் மணவாளரே!

பகைஞர் படைவீட்டில் முதிய கனல் ஊட்டு பகரும் நுதல் நாட்ட குமர --- தன்னோடு பகைத்தவர்களாகிய அசுரர்களின் பாசறையில் முற்றிய நெருப்பை ஊட்டுவித்த, ஒளிருகின்ற நெற்றி விழியினை உடைய சிவபரம்பொருளின் திருக்குமாரரே!

ஈசா --- எப்பொருட்கும் இறைவரே!

அருமறைகள் கூட்டி உரைசெய் தமிழ்ப் பாட்டை அடைவு அடைவு கேட்ட முருகோனே --- அருமையான வேதமொழிகளின் கருத்துக்களைக் கூட்டி உரைக்கப்பட்ட (சங்கத்) தமிழ்ப்பாடல் ய(ஆகிய திருமுருகாற்றுப்படையை) முற்ற முழுவதும் கேட்ட முருகவேளே!

அலை கடலில் ஈட்ட அவுணர் தமை ஓட்டி அமரர் சிறை மீட்ட பெருமாளே --- அலைகள் வீசும் கடலில் திரண்டு இருந்த அரக்கர்களை ஓட்டி, தேவர்களைச் சிறையினின்றும் மீட்ட பெருமையில் மிக்கவரே!

இரு வினைகள் ஈட்டும் இழவு படு கூட்டை எடும் எடும் என --- நல்வினை, தீவினை ஆகிய இருவினைகளால் உண்டாகி, உயிர் இறந்து போன கூடான இவ்வுடலை எடுங்கள் எடுங்கள் என்று ஊரில் உள்ளார் கூற,

வீட்டில் அனைவோரும் இறுதி இடு காட்டில் அழுது --- வீட்டில் இருந்தவர்கள் எல்லோரும் இறுதியாகச் சுடுகாட்டில் சென்று அழுது, 

தலைமாட்டில் எரிய எரி மூட்டி இடுமாறு --- தலைப் பக்கம் எரியுமாறு நெருப்பை மூட்டி வைக்கும்படி,

கரிய இரு கோட்டு முரண் எருமை மோட்டர் கயிறு இறுக மாட்டி அழையா முன் --- கருநிறம் கொண்டதும், இரு கொம்புகளை உடையதும், வலிமை மிக்கதுமான எருமை மீது வந்த மூர்க்கராகிய யமதூதர்கள் பாசக் கயிற்றை இறுக மாட்டி என்னை அழைப்பதற்கு முன்பாக,

கனகமணி வாட்டு மருவு கழல் பூட்டு கழல் இணைகள் காட்டி அருள்வாயே --- பொன்னையும், இரத்தினத்தையும் ஒளிமழுங்கச் செய்வதாய்ப் பொருந்தின கழல்களை அணிந்துள்ள திருவடி இணைகளைக் காட்டி அருள் புரிவீராக. 



பொழிப்புரை


உயர்ந்த வள்ளிமலை நாட்டில் (தினைப் புனத்தில்) இருந்த கிளிகளை ஓட்டிக் கொண்டிருந்த, (சுந்தரவல்லியாய் முன்னரே தேவரீரைக் குறித்துத் தவம் புரிந்து கொண்டிருந்த) பழைய உறவைப் பூண்டிருந்த குறமகள் ஆகிய வள்ளியநாயகியின் மணவாளரே!


தன்னோடு பகைத்தவர்களாகிய அசுரர்களின் பாசறையில் முற்றிய நெருப்பை ஊட்டுவித்த, ஒளிருகின்ற நெற்றி விழியினை உடைய சிவபரம்பொருளின் திருக்குமாரரே!


எப்பொருட்கும் இறைவரே!


அருமையான வேதமொழிகளின் கருத்துக்களைக் கூட்டி உரைக்கப்பட்ட (சங்கத்) தமிழ்ப்பாடல் (ஆகிய திருமுருகாற்றுப்படையை) முற்ற முழுவதும் கேட்ட முருகவேளே!


அலைகள் வீசும் கடலில் திரண்டு இருந்த அரக்கர்களை ஓட்டி, தேவர்களைச் சிறையினின்றும் மீட்ட பெருமையில் மிக்கவரே!


நல்வினை, தீவினை ஆகிய இருவினைகளால் உண்டாகி, உயிர் இறந்து போன கூடான இவ்வுடலை எடுங்கள் எடுங்கள் என்று ஊரில் உள்ளார் கூற, வீட்டில் இருந்தவர்கள் எல்லோரும் இறுதியாகச் சுடுகாட்டில் சென்று அழுது, தலைப் பக்கம் எரியுமாறு நெருப்பை மூட்டி வைக்கும்படி, கருநிறம் கொண்டதும், இரு கொம்புகளை உடையதும், வலிமை மிக்கதுமான எருமை மீது வந்த மூர்க்கராகிய யமதூதர்கள் பாசக் கயிற்றை இறுக மாட்டி என்னை அழைப்பதற்கு முன்பாக, பொன்னையும், இரத்தினத்தையும் ஒளிமழுங்கச் செய்வதாய்ப் பொருந்தின கழல்களை அணிந்துள்ள திருவடி இணைகளைக் காட்டி அருள் புரிவீராக. 


விரிவுரை


இரு வினைகள் ஈட்டும் இழவு படு கூட்டை ---


ஈட்டுதல் - கூடுதல், சம்பாதித்தல். ஈட்டம் - தேட்டம், தேடிய பொருள், சம்பாத்தியம்.


இருவினைகள் - நல்வினை, தீவினை.


"இருவினை ஊண் பசும்பை" என்றார் திருவண்ணாமலைத் திருப்புகழில். நல்வினை, தீவினை எனப்படும் இருவினைகளின் பயனான புண்ணிய பாவங்களை அனுபவிப்பதற்கு இடமாக, உயிர்களுக்கு மாயாகாரியமான உடம்பானது இறைவனால் படைத்து அளிக்கப்படுகின்றது. மூலமலமாகிய ஆணவத்தை நீக்கும் பொருட்டே உயிரோடு உடம்பு முதலியவற்றைக் கூட்டுவிக்கிறான் இறைவன். உடம்பு, தனு எனப்படும். மனம் முதலிய கருவிகள் கரணம் எனப்படும். இந்த உலகு புவனம் என்று குறிக்கப்படும். உலகிலுள்ள நுகர்ச்சிப் பொருள்கள் போகம் எனப்படும். உயிர்கள் இறையருளால் தனு கரணம் புவனம் போகம் ஆகிய இந்நான்கினோடும் பொருந்தி வாழ்வதே உலகவாழ்க்கை. உயிர்கள் தனுவாகிய உடம்பினுள் நின்று, கரணங்களின் உதவியால் அறிந்து புவனத்திடையே போக்குவரவு செய்து, போகங்களை நுகர்ந்து கொண்டு வாழ்கின்றன. தோன்றிய எதுவும் அழிவுக்கு இடமானவை. "தோற்றம் உண்டேல் மரணம் உண்டு" என்பது சுந்தரர் தேவாரம். உயிர் குடியிருப்பதற்கு இடமாகிய உடம்பு, உயிர் நீங்கிய பின்னர் உடம்பு வெறும் கூடுதான். உயிர் இல்லாத உடல் பிணம் ஆகும். அது நாறி அழியக்கூடியது. எனவே, பிணத்தை இடுகாட்டில் கொண்டு சென்று புதைப்பர். அல்லது எரிப்பர். 


இழவுபடு கூட்டை எடும் எடும் என --- 


        "குடம்பை தனித்து ஒழிய புள் பறந்து அற்றே, உடம்பொடு உயிர் இடை நட்பு" என்றார் திருவள்ளுவ நாயனார். "உடம்புக்கும் உயிர்க்கும் உள்ள நட்புத் தொடர்பானது, முட்டை ஓடு தனித்துக் கிடக்க, அதனுள் இருந்த பறவையானது, பருவம் வந்தபோது பறந்து போனது போன்றதாகும்" என்கின்றார் நாயனார்.


"குடம்பை தனித்து ஒழிய" என்றதனால், முட்டையும், அதனுள் இருந்த கருவும் ஒன்றாய்ப் பிறந்து, அது வேறு ஆகும் அளவும், கருவுக்கு ஆதாரமாக முட்டை ஓடு இருத்தல். இது உயிருக்கு ஆதாரமாக உடம்பு இருத்தலை உணர்த்தியது. முட்டைக்குள் பறவையானது வேற்றுமை இல்லாது இருந்து, பின்பு அதனுள் திரும்பவும் நுழையாமல், வேறுபட்டுப் போவதால், பறவை உயிருக்கு உவமானம் ஆயிற்று. 


நட்பு என்றது, நட்பு இல்லாது போதலை அறிவித்தது. அறிவாயும், அருவாயும், நித்தியமாயும் உள்ள உயிரானது, அறிவற்ற சடமும், நித்தியம் இல்லாததும் ஆன உடம்போடு கூடி இருப்பது, வினைவசத்தால் கூடியதே அல்லாமல், நட்பு இல்லை என்பது தெளியப்படும்.


இனி, குடம்பை என்பதற்கு, கூடு என்று பொருள் கூறுதலும் உண்டு. கூடு பறவையுடன் தோன்றாது இருப்பதனாலும், கூட்டினை விட்டுச் சென்ற பறவை, அதனுள் மறுபடியும் வந்து நுழைவது உண்டு என்பதாலும், இது பொருந்தாது என்பதை அறிக. உடம்பில் இருந்து பிரிந்த உயிர், வேறு உடம்பில் புகுவது அன்றி, மறுபடியும் அதே உடம்பில் புகுவது இல்லை.


"கறந்த பால் முலைப் புகா,

கடைந்த வெண்ணெய் மோர் புகா,

உடைந்து போன சங்கின் ஒசை,

உயிர்களும் உடல் புகா,

விரிந்த பூ, உதிர்ந்த காயும்,

மீண்டு போய் மரம் புகா,

இறந்தவர் பிழைப்பது இல்லை,

இல்லை, இல்லை, இல்லையே".


என்னும் சிவவாக்கியர் பாடல் காண்க.


"கேளாதே வந்து கிளைகளாய் இல்தோன்றி

வாளாதே போவரால் மாந்தர்கள், --- வாளாதே

சேக்கை மரன்ஒழியச் சேண்நீங்கு புள்போல

யாக்கை தமர்க்கு ஒழிய நீத்து." ---  நாலடியார்.


இதன் பொருள் ---


வாளாது சேக்கை மரன் ஒழிய - சும்மா கூடு மரத்தில் கிடக்க, சேண் நீங்கு புள்போல - அதிலிருந்து தொலைவிலே பறந்து போய்விடும் பறவைகள் போல, மாந்தர்கள் - மக்கள், கேளாதே வந்து கிளைகளாய் இல் தோன்றி - ஒருவரையும் கேளாமலே வந்து சுற்றங்களாய் ஒரு குடும்பத்தில் பிறந்து, யாக்கை தமர்க்கு ஒழிய நீத்து - பின்பு தம் உடம்பை உறவினரிடம் கிடக்கும்படி நீக்கி விட்டு, வாளாதே போவர் - பேசாமலே இறந்து போய் விடுவார்கள்.


சொல்லாமலே போய்விடுவதனால் இன்ன போது இறக்கும் நேரமென்பது தெரியாமையின், உடனே அறஞ்செய்து கொள்க என்பது கருத்து


"விடம்பயில் எயிற்று அரவு உரியும், வீநுழை

குடம்பையும் தான் எனும் கொள்கைத்தே கொலாம்,

நடம்பயில் கூத்தரின் நடிக்கும் ஐவர்வாழ்

உடம்பையும் யான் என உரைக்கற் பாலதோ."         ---  தி. வி.புராணம்.


இதன் பொருள் ---


நடம் பயில் கூத்தரின் - ஆடுகின்ற கூத்தர்களைப் போல, நடிக்கும் ஐவர் வாழ் - நடிக்கின்ற ஐம்பொறிகள் வாழா நின்ற; உடம்பையும் - உடலையும், யான் என - நான் என்று, உரைக்கற் பாலதோ - (உயிர்) கூறும் பகுதியை உடையதாமோ (அங்ஙனம் கொள்ளின் அது), விடம் பயில் - நஞ்சு தங்கிய, எயிற்று அரவு - பற்களையுடைய பாம்பு, உரியும் - தனது தோலையும், வீ - பறவை, நுழை குடம்பையும் - தான் நுழைகின்ற கூட்டையும், தான் எனும் கொள்கைத்து - தான் என்று கொள்ளும் கொள்கையை உடையதாம்.


உயிர் நீங்கி பிணமான பின்னர் நாற்றம் எடுக்கும் இந்த உடலைத் தான் பிரியமுடன் வளர்க்கின்றோம். இறைவன் திருவடியில் பிரியம் வைக்கவில்லை. பிணமானது நைந்து நாற்றம் வீசும் முன்னர், பாடையில் கிடத்தி, சுடலைக்குக் கொண்டு சென்று,தீயில் சுட்டுவிடுவார்கள். முடிவில் ஒரு பிடி சாம்பல் ஆகும். "ஒரு பிடி சாம்பரும் காணாது,மாய உடம்பு இது" என்றார் அடிகளார்.


பருவ மலைநாட்டு மருவு கிளி ஓட்டு பழைய குறவாட்டி மணவாளா ---


பருவம் - உயர்ச்சி, பெருமை. பருவமலை - உயர்ந்ததும், வள்ளிநாயகியார் அவதரித்துத் தவம் புரிந்ததுமான் பெருமை மிக்க மலை வள்ளிமலை.


தேவசேனை அம்மை முருகப் பெருமானை நோக்கி வள்ளியின் வரலாறு யாது எனக் கேட்டார். அதற்கு முருகப் பெருமான், "நீங்கள் இருவரும் திருமாலிடத்தே தோன்றியவர்கள். பன்னிரண்டு ஆண்டுக் காலமாக என்னை அடையத் தவம் செய்தீர்கள். அப்போது யாம், ஒருவர் விண்ணிலும், ஒருவர் மண்ணிலும் தோன்றுவீர்கள். தக்க காலத்தில் உங்களை மணம் புணர்வோம் என்று அருளினோம். நீ தேவர் கோனாகிய இந்திரன் மகளாய்த் தோன்றி, அவனுடைய வெள்ளை யானையாகிய ஐராவதத்தால் வளர்க்கப்பட்டாய். யாம் முன்பு கூறியவாறே முதலில் உன்னை மணந்து கொண்டோம். உனது இளையாள் ஆகிய வள்ளி, மான் வயிற்றில் உதித்து, வேடர் குலத்தில் வளர்ந்தாள். இவளைப் பின்னர் "அந்தம் இல் மாயைகள் ஆற்றிய பின்னர்" மணந்துகொண்டோம் என்றார். இதனைக் கந்தபுராணம் விளக்குகின்றது. முருகப் பெருமான், முன்பு வாக்களித்த படியே அம்மையர் இருவரையும் மணம் புரிந்துகொண்டார். எனவே, வள்ளிநாயிகியைப் "பழைய குறவாட்டி" என்றார் அருணை வள்ளலார்.


பகைஞர் படைவீட்டில் முதிய கனல் ஊட்டு பகரும் நுதல் நாட்ட குமர --- 


பகைஞர் - திரிபுரத்தவர்.


நுதல் நாட்ட குமர - நெற்றி விழியை உடைய சிவபரம்பொருளின் திருக்குமாரர்.


சிவபரம்பொருள் நெற்றிவிழியால் முப்புரம் எரித்த வரலாறு


தாரகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி என்னும் மூன்று அசுரர்கள் வாள்வலியாலும் தோள்வலியாலும் தலைசிறந்து ஒப்பாரும் மிக்காருமின்றி இருந்தனர். அவர்கள் பிரமனை நோக்கி அநேக காலம் பெருந்தவம் புரிகையில் பிரமதேவர் அவர்முன் முன்தோன்றி யாது வரம் வேண்டும் என்றார். மூவரும் “அண்ணலே! அடியேங்களுக்கு அழியாவரம் அருள வேண்டும்?"  என, மலரவன், “மைந்தர்களே! அழியாதவர்கள் உலகில் வருவரும் இல்லை. அழியாதவைகளும் உலகில் ஒன்றும் இல்லை. கற்ப காலம் கழிந்தால் நானும் இறப்பேன். எமது தந்தையாகிய திருமாலும் அப்படியே! கங்கைக் கரையில் உள்ள மணல்கள் எத்துணையோ அத்துணை இந்திரர் அழிந்தனர். ஏனைய தேவர்களைப் பற்றிக் கூறுவானேன். ஈறில்லாதவர் ஈசன் ஒருவரே. தோன்றியது மறையும். மறைந்தது தோன்றும். தோற்றமும் மறைவும் இல்லாதவர் சிவபரஞ்சுடராகிய செஞ்சடைக் கடவுள் ஒருவரே! ஆதலால் அது நீங்க வேறு ஒன்றை வேண்டினால் தருவோம்” என, தானவர்கள் மூவரும் பொன், வெள்ளி இரும்பினால் அமைந்த மதில்கள் பொருந்திய முப்புரம் பூமி, அந்தரம், சுவர்க்கம் என்னும் மூவுலகங்களிலும் வேண்டும். அவை ஆயிரம் வருடத்திற்கு ஒருமுறை விரும்பிய இடத்திற்குப் பெயரவேண்டும். மூன்றும் ஒன்றுபட்டபொழுது சிவபெருமானே ஒரு கணையால் அழித்தாலன்றி வேறொருவராலும் மாளாத வரம் வேண்டும்” என்று கேட்க திசைமுகன் அவர்கள் விரும்பியவாறு வரம் ஈந்து தனது இருக்கை சேர்ந்தனன்.


மூவசுரர்களும் அளவில்லாத அவுணர் சேனைகளை உடையவராய், மயன் என்னும் தேவதச்சனைத் தருவித்து தங்கள் விருப்பின்படி மண்ணுலகில் இரும்பு மதிலும், அந்தரவுலகில் வெள்ளிமதிலும் விண்ணுலகில் பொன் மதிலுமாக, பல வளங்களும் பொருந்திய முப்புரங்களை உண்டாக்கிக் கொண்டு குறைவற வாழ்ந்து சிவபூஜை காலந்தவறாது புரிந்து வந்தார்கள். ஆயினும் அசுரகுலத்தின் தன்மைப்படி வைகுந்தம் முதலிய தேவ நரகங்களையும், உலகிலுள்ள பலபதிகளையும் திரிபுரத்தோடு சென்று சிதைத்து தேவர் கூட்டங்களுக்கு இடுக்கண் பல விளைத்தனர். அது கண்ட நாராயணர், இந்திரன் முதலிய இமையவர் கணங்களுடன் சென்று எதிர்த்து திரிபுரர்களிடம் தோல்வியுற்று மிகவும் களைத்து, சிவபரஞ்சுடரே கதி என்று கருதி, தேவர் குழாங்களுடன் திரும்பி மேருமலையின் வடபாலில் பலகாலம் தவம் செய்தனர். அத்தவத்திற்கு இரங்கிய விரிசடைக் கடவுள் விடையின் மேல் தோன்ற, விண்ணவர்கள் பன்முறை பணிந்து திரிபுரத்தவர் புரியும் தீமையை விண்ணப்பம் புரிய, கண்ணுதற் கடவுள், “அவர்கள் நமது அடியார். ஆதலின், அவர்களைச் அழித்தல் அடாது” என்றருளி மறைந்தனர்.


திருமால் 'தேவர்களே அஞ்சாதீர்கள்' என்று புத்த வடிவு கொண்டு, நாரத முனிவர் சீடராக உடன் வரத் திரிபுரம் அடைந்து பிடக ஆகமத்தைப் பிரசங்கித்து அவரை மருட்டிப் பவுத்தராக்கினர். அம்மாயையில் அகப்படாதார் மூவரே. ஆதலின் திருமால் ஏனையோரைப் பார்த்து “நீங்கள் அம்மூவர்களையும் பாராது ஒழியுங்கள். அவர்கள் இழிதொழில் பூண்டோர் என்று கூறி, நாரதருடன் மேருமலை அடைந்து தேவகூட்டத்துடன் சிவபிரானைச் சிந்தித்து தவத்திருந்தனர். ஆலமுண்ட அண்ணல் அது அறிந்து அருள்வடிவாகிய திருநந்தி தேவரை விளித்து “அமரற்பால் சென்று திரிபுரத்தவரைச் செயிக்க இரதம் முதலிய போர்க் கருவிகளைச் சித்தஞ் செய்யக் கட்டளையிடுக” என, நந்தி அண்ணல் மேருவரை சேர்ந்து, சிவாக்ஞையை தேவர்பால் கூறிச்சென்றனர். அதுகேட்ட அமரர் ஆனந்தமுற்று இரதம் சிங்காரித்து வந்தனர்.


நந்தியெம்பெருமான் சந்நிதியுள் சென்று, தேவர்கள் போர்க் கருவிகளுடன் வந்திருப்பதைக் கூற, இறைவர் இமவரை தரும் கருங்குயிலுடன் *இடபாரூடராய் இரதத்தை அடைந்து இமையவர் எண்ணத்தின் படி அதில் கால் ஊன்ற, அதன் அச்சு முறிந்தது.


தச்சு விடுத்தலும் தாம்அடி இட்டலும்

அச்சு முறிந்தததுஎன்றுஉந்தீபற

அழிந்தன முப்புரம் உந்தீபற                 --- திருவாசகம்.


உடனே நாராயணர் இடபமாக வடிவெடுக்க, அவ்விடபத்தின் மேல் எம்பெருமான் ஏறுதலும் திருமால் தாங்கும் சக்தியற்றுத் தரைமேல் விழ, சிவபெருமான் திருவருள்கொண்டு இறங்கி இன்னருள் புரிந்து சக்தியை நல்கினர். திருமால் திரிபுர சம்மார காலத்தில் சிவபெருமானை இடபமாய்த் தாங்கினர் என்பதை மணிவாசகப் பெருமான்,


"கடகரியும் பரிமாவும் தேரும்உகந்து ஏறாதே

இடபம்உகந்து ஏறியவாறு எனக்குஅறிய இயம்பு ஏடி,

தடமதில்கள் அவைமுன்றும் தழல்எரித்த அந்நாளில்

இடபமதாய்த் தாங்கினான் திருமால்காண் சாழலோ".


என்று பாடி அருளினார்.


விரிஞ்சன் விநாயக பூசனை புரிய, அவரருளால் இரதம் முன்போலாக, சிவபெருமான் தேவியாருடன் தேர்மேல் எழுந்தருளினார். மூத்தபிள்ளையார், இளையபிள்ளையார், நாராயணர், நான்முகன், அயிராவதன் முதலியோர் தத்தம் ஊர்திகளில் ஊர்ந்து இருமருங்கும் சூழ்ந்து வரவும், இருடிகள் எழுவரும் வாழ்த்தவும், திருநந்திதேவர் பொற்பிரம்பு தாங்கி முன்னே செல்லவும் பானுகம்பன், வாணன் சங்குகன்னன் முதலிய சிவகணநாதர்கள் வாச்சியம் இசைக்கவும், கறைமிடற்று அண்ணல் இரதாரூடராய்த் திரிபுரத்தைச் சரத்கால சந்த்ர புஷ்ய நக்ஷத்திரத்தில் சமீபித்தனர்.


அண்டர்கள் அக்காலை அரனாரைப் பணிந்து “அண்ணலே! வில்லை வளைத்துக் கணை விடவேண்டும்” என்று பிரார்த்திக்க அழலுருவாகிய சிவபெருமான் தமது திருக்கரத்து ஏந்திய மேருமலையாகிய வில்லில் பணியரசாகிய நாணை ஏற்றினர். (அதில் அம்பு பூட்டித் திரிபுரத்தை அழிப்பின், அந்தரர் அந்தமில்லா அகந்தை உறுவர் என்றும், தனக்கு ஓர் ஆயுதமேனும், படையேனும் துணை வேண்டுவதில்லை என்பதை தேவர்கள் தெரிந்து உய்தல் வேண்டுமென்றும், சங்கல்ப மாத்திரத்தாலேயே சகலமும் செய்ய வல்லான் சிவபரம்பொருள் என்பதை உலகம் உணருமாறும்) இடப்பால் வீற்றிருக்கும் இமயவல்லியைக் கடைக்கணித்துப் புன்னகை புரிந்தனர். அக்கணமே புரங்கள் மூன்றும் சாம்பராயின. பெருந்தவராயிருந்து சிவனடியே சிந்தித்துவந்த மூவரும் யாதொரு தீமையுமின்றிப் பெருமான்பால் வந்து பணிய, நீலகண்டர் அவர்களைத் துவாரபாலகராக அருளி, தேவர்களை அரவரிடத்திற்கு அனுப்பி வெள்ளிமாமலைக்கு எழுந்தருளினார். இமையவர் இடுக்கண் அகன்று இன்புற்றனர்.


"குன்றாத மாமுனிவன் சாபம் நீங்கக்

    குரைகழலால் கூற்றுவனைக் குமைத்த கோனை,

அன்றாக அவுணர்புரம் மூன்றும் வேவ

    ஆரழல்வாய் ஓட்டி அடர்வித் தானைச்

சென்றாது வேண்டிற்று ஒன்று ஈவான் தன்னைச்

    சிவனே, எம் பெருமான் என்று இருப்பார்க்க் என்றும்

நன்றாகும் நம்பியை, நள்ளாற் றானை

    நானடியேன் நினைக்கப்பெற்று உய்ந்தவாறே."   --- அப்பர்


"வளைந்தது வில்லு விளைந்தது பூசல்

   உளைந்தன முப்புரம் உந்தீபற

   ஒருங்குடன் வெந்தவாறு உந்தீபற." --- மணிவாசகர்.


"ஈர்அம்பு கண்டிலம் ஏகம்பர் தம்கையில்

   ஓர்அம்பே முப்புரம் உந்தீபற,

   ஒன்றும் பெருமிகை உந்தீபற."        --- மணிவாசகர்.


“உருவு கரியதொர் கணைகொடு பணிபதி

     இருகு தையுமுடி தமனிய தனுவுடன்

     உருளை இருசுடர் வலவனும் அயன்என   மறைபூணும்

உறுதி படுசுர ரதமிசை அடியிட

     நெறுநெ றெனமுறி தலு,நிலை பெறுதவம்

     உடைய ஒருவரும் இருவரும் அருள்பெற  ஒருகோடி

தெருவு நகரிய நிசிசரர் முடியொடு

     சடச டெனவெடி படுவன, புகைவன,

திகுதி கெனஎரி வன,அனல் நகையொடு முனிவார்தம் சிறுவ"     --- (அருவமிடை) திருப்புகழ்.


திருத்தணிகைத் திருப்புகழில், "கொடுசூரர் சினத்தையும் உடல் சங்கரித்த மலை முற்றும் சிரித்து எரி கொளுத்தும் கதிர்வேலா!" என்று பாடி உள்ளதைக் கொண்டு, முருகப் பெருமான் சூராத அவணர்களின் பாசறையைத் தனது நெற்றி விழியால் அழித்தார் என்றும் கொள்ளலாம். ஆறுமுகக் கடவுள் சூரபன்மனுடன் போர் புரிந்த காலத்து, பூமண்டலத்து உள்ள அவுணசேனைகள் முழுவதையும் கொன்றருளினார். மேலும் மேலும் அண்டங்களிலுள்ள அவுணசேனைகள் வந்து கொண்டே இருந்தன. அவைகளையும் கொல்ல உதிர வெள்ளம் ஓடிற்று. நிணமும் தசையும் உதிரமும் சேர்ந்து சேறாயின. பிணமலைகள் குவிந்தன. அதனால் தேர் செல்லத் தடைப்பட்டது. அது கண்ட பெருமான் புன்முறுவல் பூத்தனர். அம்முறுவலில் சிறு நெருப்புப் பொறி பரந்தது. அப்பொறியால் பிணமலைகளும் அசுரசேனைகளும் எரிந்து கரிந்து சாம்பர் ஆயின.


அருமறைகள் கூட்டி உரைசெய் தமிழ்ப் பாட்டை அடைவு அடைவு கேட்ட முருகோனே ---


தமிழ்ப்பாட்டு - திருமுருகாற்றுப்படை. அடைவு அடைவு - முழுதும்.


சிவபூசையில் வழுவியவரை ஒன்று கூட்டி ஆயிரம் என்ற எண்ணிக்கை ஆனவுடன் உண்ணுகின்ற ஒரு பெண் பூதம் இருந்தது. அதன் பேர் கற்கிமுகி. அப்பூதம் ஆங்காங்கு பூசையில் மனந்திரிந்து வழுவியவர்களை எல்லாம் கொண்டு போய் ஒரு பெரிய மலைக்குகையில் அடைத்து வைத்து அவர்கட்கு உணவு தந்து கொண்டிருந்தது. 999 பேர் சேர்ந்திருந்தனர். இன்னும் ஒருவர் குறைவு. அந்தப் பூதம் மற்றொருவரைத் தேடிக் கொண்டிருந்தது.


நக்கீரர் ஒரு சமயம் தலயாத்திரை மேற்கொண்டு சென்றார். ஒரு குளக் கரையில் சிவபூசை செய்து கொண்டிருந்தார். அப்பூதம் அங்கு வந்து சேர்ந்தது. ஓர் இலையை உதிர்த்தது. அந்த இலை பாதி நீரிலும் பாதி நிலத்திலுமாக வீழ்ந்தது. நீரில் வீழ்ந்த பாதி மீனாகவும், நிலத்தில் வீழுந்த பாதி பறவையாகவும் மாறியது. பறவை நிலத்துக்கும் மீன் நீருக்குமாக இழுத்துப் போர் புரிந்தன; இந்த அதிசயத்தைக் கண்ட நக்கீரர் பூசையில் மனம் பதியாது அதனையே நோக்கி நின்றார். பூசையில் வழுவிய அவரை எடுத்துக்கொண்டு போய் பூதம் குகையில் அடைத்துவிட்டது. இப்போது ஆயிரம் என்ற எண்ணிக்கை முற்றியது. இனி அவர்களை உண்ணுவதற்குப் பூதம் எண்ணியது. ஆனால் பூதம் குளித்து விட்டுத்தான் உண்ணும். குளிக்கச் சென்றது பூதம்.


அங்கு முன்னமேயே அடைபட்டிருந்தோர் அனைவரும் “பாவி! நீ அல்லவா எங்கட்கு எமனாக வந்தாயே.  நீ வராமல் இருந்தால் பூதம் எம்மை இப்போது உண்ணமாட்டாதே. பால் பழம் முதலிய உணவுகளைத் தந்து எம்மைக் கொழுக்க வைத்தது பூதம். இனி அப்பூதம் வந்து எம்மை விழுங்குமே?  இனி நாங்கள் என்ன செய்வோம்” என்று கூறி வருந்தி வாய்விட்டுப் புலம்பினார்கள். நக்கீரர் அவர்களுடைய அவல நிலையைக் கண்டு இரங்கினார். “நீவிர் அஞ்சற்க. முன் இலக்கத்தொன்பது பேர் அடைபட்ட கிரவுஞ்சம் என்ற பெருமலையை வேலால் பிளந்த எம்பெருமான் இருக்கிறான். அப் பரமனைப் பாடினால் அவன் வேல் நமக்குத் துணை புரியும்” என்று கூறி, முருகவேளை நினைத்து உருகினார். “மலையைப் பிளந்த கருணை மலையே! மன்னுயிர்களைக் காக்கும் மயிலேறிய மாணிக்கமே! இப்போது எம்மைக் காத்தருள்வாய்” என்று வேண்டினார் .


'உலகம் உவப்ப' என்று தொடங்கித் திருமுருகாற்றுப்படை என்ற இனிய பாடலைப் பாடினார். தேனும் பாலும் கற்கண்டும் ஒவ்வாத இனிய சுவையுடைய அத்திருப்பாடலைச் செவிமடுத்த செந்தமிழ்க் கடவுளாகிய எந்தைக் கந்தவேள், தமது திருக்கரத்தில் விளங்கும் வேலை விடுத்தருளினார். அவ்வேல் மலையையும், கற்கிமுகி என்ற பூதத்தையும் பிளந்து, நக்கீரரையும், அவருடன் சேர்ந்த மற்றையோரையுங் காத்தருளியது.


“அருவரை திறந்துவன் சங்க்ராம கற்கிமுகி

 அபயமிட அஞ்சலென் றங்கீரனுக் குதவி”  --- பூதவேதாள வகுப்பு


பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும்ஒரு

    கவிப்புலவன் இசைக்குஉருகி வரைக்குகையை

        இடித்துவழி காணும்  ---  வேல்வகுப்பு.



ஓராயிரம் பேரை வருடத்தில் ஒருநாளில்

     உண்கின்ற கற்கி முகிதான்

ஒன்று குறை யாகிவிடும் அன்று நக்கீரர்வர

    ஓடிப் பிடித்து அவரையும்    

காராய குன்றத்து அடைத்துஉரிய நியதிக்

    கடன் துறை முடிக்க அகலக்

கருதி "முருகாறு" அவர் உரைத்தருள நீலக்

    கலாப மயில் ஏறி அணுகிப்

பேரான குன்றந் திறந்து,இவுளி முகியைப்

    பிளந்து, நக்கீரர் தமையும்

பெரியவேல் கொண்டு, புனல் கண்டுசுனை மூழ்கி,

    பிரான் முகலி நதியின் மேவச்

சீராய திருவருள் புரிந்த கரன் ஊராளி

    சிறுதேர் உருட்டி அருளே

செய செய என அமரர் தொழ, அசுரர் மிடி சிதறு முனி

    சிறுதேர் உருட்டி அருளே.              --- திருவிரிஞ்சை முருகன் பிள்ளைத் தமிழ்.


கருத்துரை


முருகா! திருவடி அருள்வாய்.






திரு ஏகம்ப மாலை - 18

 


"கல்லார் சிவகதை, நல்லோர் தமக்குக் கனவிலும் மெய்

சொல்லார், பசித்தவர்க்கு அன்னம் கொடார், குருசொன்னபடி

நில்லார், அறத்தை நினையார், நின்நாமம் நினைவில்சற்றும்

இல்லார், இருந்துஎன்? இறந்துஎன்? புகல், கச்சிஏகம்பனே."


பொழிப்புரை : திருக்கச்சி ஏகம்பத்தில் எழுந்தருளி இருக்கும் இறைவனேக்!  சிவகதைகளைப் படிக்கமாட்டார்கள். நல்லவர்களிடத்தில் கனவிலும் உண்மை பேசமாட்டார்கள். குருவின் வார்த்தைகளை மதித்து நடக்கமாட்டார்கள். தருமத்தைச் செய்ய மனதாலும் நினைக்கமாட்டார்கள். உனது திருநாமத்தை சற்று நேரமும் நினைவில் வைக்கமாட்டார்கள். இவர்கள் உயிரோடு இருந்து என்ன பயன்.  இறந்தால் என்ன கெடுதி. சொல்வாயாக.


விளக்கம்: மேல்பாடலில் "கல்லாப் பிழை" என்று காட்டினார்.  ஒருவன் கற்க வேண்டியது, நெஞ்சை நல்வழிப்படுத்தி, நெஞ்சை உருக்கி, ஆணவமலத்தின் வலியை அடக்குகின்ற நல்ல நூல்களே. ஆகையால், பிற நூல்களை வேறு காரணம் பற்றிக் கற்றாலும், அருள் நூல்களைக் கல்லாமல் இருப்பது பிழை என்பதால், "கல்லாப் பிழை" என்று அதனைக் குறித்தார். மற்ற கதைகளைப் படித்தால் பல்விதமான உணர்வுகள் பிறக்கும். சிவகதைகளைப் படிக்கும்போது பத்தி உணர்வே மேலோங்கி நிற்கும். ஆகவே ஒருவன் கற்க வேண்டியது வெறும் அறிவு நூல்களை அல்லாமல், அருள் நூல்களே என்பதால், அவற்றைக் கல்லாதவரை, "கல்லார் சிவகதை" என்று காட்டினார். சிற்றின்ப உணர்வுகளைக் கிளர்ந்தெழச் செய்யும் நூல்கள் யாரையும் மயக்கும்.  ஆனால், அறிவு மயக்கம் தீர்க்கும் நூல்களைப் பயிலுதல் பெரும்பயன் தரும்.   


"பால் ஆழி மீன் ஆளும் பான்மைத்து, அருள் உயிர்கள்

மால் ஆழி ஆளும் மறித்து."


என்று சித்தாந்த சாத்திர நூலாகிய திருவருட்பயன் சொல்லும்.


பாற்கடலிலே பிறந்து அதனுள் வாழும் மீன்களானாலும், தமக்குக் கிடைத்திருக்கும் மிகுதியான பாலை விரும்பாது, வேறு பொருள்களையே விரும்புவது போல, சைவசமயத்தில் பிறந்தும், சிவ சரிதங்களை விரும்பிக் கற்காமல், புறச்சமய நூல்களைக் கற்று பொழுது போக்குவது மானிட இயல்பு. அருளைப் பெற வேண்டிய உயிர்கள் மருளிலேயே மயங்கும்.


தமது செல்வக் களிப்பால், பெரியவர்களிடத்துப் பொய்கூறல் முதலிய பிழைகளைச் செய்வாரானால், பெரியவர்களின் கோபத் தீயே அச் செல்வத்தைக் கணநேரத்தில் அழித்துவிடும் உணராமல் இருப்பதால், "நல்லோர் தமக்குக் கனவிலும் மெய் சொல்லார்" என்றார்.


உடம்பு நிலைபெற அதனை வளர்க்க வேண்டியது, ஓம்ப வேண்டியது அவசியமே. உடம்பை வளர்ப்பது, உயிர் உணர்வை வளர்ப்பதாக இருக்க வேண்டும். "உடம்பை வளர்த்தேன், உயிர் வளர்த்தேனே" என்றார் திருமூலர். உயிர் உணர்வு வளர வளர, எல்லா உயிர்களிடத்தும் கருணை பிறக்கும். "பசித்தோர் முகம் பார்" என்பது போல, "பகுத்து உண்டு பல் உயிர் ஓம்புதல், நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை" என்பதை உணர்ந்து, "யாவர்க்கும் ஆம் உண்ணும்போது ஒரு கைப்பிடி" என்பதை உணர்ந்து, பசித்தவர்க்கு அன்னம் கொடாதவரை இங்கு காட்டினார்.


குரு என்பவர், நம்மை நல்வழிப்படுத்தி நாளும் உணர்வால் வாழ்விப்பவர். இறைவனே, ஒருவருக்கு ஞானகுருவாக எழுந்தருளுவான். குரு வார்த்தைகளை மதித்து ஒருவன் நடந்தால் ஈடேறலாம். இல்லையேல், தீவினை வயப்பட்டு, நரகம் எய்துதல் கூடும்.  அதனால், "குருசொன்னபடி நில்லார்" என்றார்.


அறம் என்பது ஒருவனுக்கு இம்மை, மறுமை நலன்களையும்,  எல்லாவற்றிற்கும் மேலான வீட்டின்பத்தையும் வழங்க வல்லது.  அதை நினைக்காமல் வாழ்வோரை, "அறத்தை நினையார்" என்றார்.


"திருநாமம் அஞ்செழுத்தும் செப்பார் ஆகில்.....பெருநோய்கள் மிக நலியப் பெயர்த்தும் செத்தும் பிறப்பதற்கே தொழிலாகி இறக்கின்றார்" என்று அப்பர் பெருமான் அருளினார் என்பதால், "நின் நாமம் நினைவில் சற்றும் இல்லார்" என்றார்.


இப்படிப்பட்டவர்கள் உலகில் வாழ்ந்தும், உயிருக்கு ஆக்கமாகிய யாதொரு பயனையும் அடையாதவர்கள். ஆகையால், இவர்கள் வாழ்வதால் என்ன நன்மை. இறப்பதால் என்ன கெடுதி என்பார், "இருந்து என், இறந்து என்" என்றார்.


திரு ஏகம்ப மாலை - 17

"ஆற்றில் கரைத்த புளி ஆக்கிடாமல், என் அன்பை எல்லாம்

போற்றித் திருவுள்ளம் பற்றும் ஐயா, புரம் மூன்று எரித்துக்

கூற்றைப் பணிகொள்ளும் தாள்உடையாய், குன்றவில் உடையாய்,

ஏற்றுக்கொடி உடையாய், இறைவா! கச்சிஏகம்பனே."


பொழிப்புரை : திருக்கச்சி ஏகம்பத்தில் எழுந்தருளி இருக்கும் இறைவனே! மகாமேரு மலையாகிய வில்லை உடையவனே!  முப்புரங்களை எரித்தவனே! எமனை அடிமை கொண்டவனே! விடைக் கொடியை உடையவனே!  என் அன்பு முழுமையும் ஆற்றில் கரைத்துவிட்ட புளியைப் போல் ஆகிவிடாமல், என்னைப் பாதுகாத்து உனது திருவடியிலே சேர்த்துக்கொள்ள மனம் பற்றுவாயாக.


திரு ஏகம்ப மாலை - 16

 

"நாயாய்ப் பிறந்திடின் நல்வேட்டை ஆடி நயம்புரியும்,

தாயார் வயிற்றில் நரராய்ப் பிறந்து பின் சம்பன்னராய்,

காயா மரமும், வறளாம் குளமும், கல்ஆவும் என்ன

ஈயா மனிதரை ஏன் படைத்தாய் கச்சிஏகம்பனே."


பொழிப்புரை : திருக்கச்சி ஏகம்பத்தில் எழுந்தருளி இருக்கும் இறைவனே!  நாயாகிப் பிறந்து இருந்தாலும் நல்ல வேட்டையாடித் தன்னை வளர்ப்பவனுக்கு நன்மையைச் செய்யும். தாய் வயிற்றில் மனிதராய்ப் பிறந்து, பின் செல்வம் உள்ளவர்களாய் ஆகியும், காய்க்காத மரத்தைப் போலவும், நீர் வற்றிப் போன குளத்தைக் போலவும், கல்லால் ஆன பசுவைப் போலவும் ஒருவர்க்கும் ஒன்றைக் கொடுக்காமல், யாருக்கும் எந்தப் பயனும் இல்லாமல் இந்தப் பூமியில் வாழும் மனிதர்களை எதற்காகப் படைத்தாய்.


விளக்கம் --  உலகில் ஆறு அறிவு உள்ள மனிதனாகப் பிறந்து விட்டு, என் நல்ல செயலையும் செய்யாது, பிறர் தமக்குச் செய்த உதவியையும் நன்றி உணர்வோடு எண்ணிப் பாராது உள்ளவர்கள் மக்களாய்ப் பிறந்தாலும், கீழான நாயினும் கீழாவர் என்பதால் "நாயாயப் பிறந்திடினும் நல்வேட்டை ஆடி நயம் புரியும்" என்றார். நன்றி உணர்வு மிக்கது நாய் என்பதால், அதனைச் சிறப்பித்து, அந்த உணர்வு இல்லாத மனிதனைத் தாழ்த்தினார்.


வீட்டை அடைதற்கு உரிய மானிடப் பிறவியை எடுத்தாலும், பிறந்த பிறகு பொருள், கல்வி, அறிவு கைகூடுதலும்,  அவை கூடிய காலத்தில், பிறர்க்குப் பயன்பட வாழ்தல் வேண்டும். தனக்கென வாழாப் பிறர்க்கு உரியாளர் என்னும் தகைமையோடு வாழ வேண்டும்.  இவையெல்லாம் முன்செய்த வினைப்பயனால் நிகழ்பவை. அதனால், "தாயார் வயிற்றில் சம்பன்னராய் பிறந்து" என்றார்.


"பயன்மரம் உள்ளூர்ப் பழுத்து அற்றால், செல்வம் நயன் உடையன் கண் படின்" என்றார் திருவள்ளுவ நாயனார். ஊரில் நடுவில் இருந்தும், பழுக்காமல், பிறருக்கு எந்தப் பயனும் இல்லாமல் இருப்பதால், "காயா மரம்" என்றார்.


ஊரின் நடுவில் இருந்து ஊருணி என்று பேர் பெற்றும், அந்தக் குளமானது வறண்டு போய் இருந்தால், நீர் இன்மையால் யாருக்கும் பயன் படாதது குறித்து "வறளாம் குளமும்" என்றார்.


ஆ, பசு. பசு என்று இருந்தால் பால் தரவேண்டும். மலட்டுச் பசுவாக இருத்தல் கூடாது. பால் தருகின்ற பண்பு இல்லாமையால், கல்லால் ஆன பசு என்பார், "கல் ஆ" என்றார்.


காயாத மரமும், நீர் வற்றிய குளமும், கல் ஆவும் பிறர்க்குப் பயன்படாதது போல், ஈகைக் குணம் இல்லாத மனிதரும் பயன் அற்றவர் என்றார்.


திரு ஏகம்ப மாலை - 15

"ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப் பெற்ற

தாயாரை வைவர், சதி ஆயிரம் செய்வர், சாத்திரங்கள்

ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்யார், தமை அண்டினருக்கு ஒன்று

ஈயார், இருந்து என்ன, போய் என்ன, காண் கச்சி ஏகம்பனே."


பொழிப்புரை : திருக்கச்சி ஏகம்பத்தில் எழுந்தருளி இருக்கும் இறைவனே!  ஒழியாமல் பொய் பேசுவார்கள். நல்லவர்களைப் பழிப்பார்கள். தன்னைச் சுமந்து பெற்ற தாயையே திட்டிப் பேசுவார்கள்.  பல வஞ்சனைகளைச் செய்வார்கள். ஞான நூல்களை ஆராய மாட்டார்கள். பிறருக்கு எந்த உபகாரமும் செய்யாமாட்டார்கள்.  தன்னை நாடி வந்தவருக்கு எதையும் கொடுக்கமாட்டார்கள். இத் தன்மையானவர்கள் உலகில் இருந்தால் என்ன பயன். இறந்து ஒழிந்தால் என்ன கெடுதி.


விளக்கம்: "பொய்யாமை", "வாய்மை" என்னும் திருக்குறள் அதிகாரங்கள் காண்க.


நல்லோரை நிந்திப்பது பெரும்பாவம் என்பதால், மனுமுறை கண்ட வாசகத்திலே, முதலாக இதையே வைத்து, "நல்லோர் மனதை நடுங்கச் செய்தேனோ" என்றார் வள்ளல் பெருமான்.


"தாயில் சிறந்த கோயிலும் இல்லை", "அன்னையும் பிதாவும் முன் அறி தெய்வம்",  "தாயோடு அறுசுவை போம்" என்னும் ஆத்த வாக்கியங்களை ஓதி உணர்ந்தால், தாயாரையே வையும் கொடுமை ஒருவனது மனத்தில் நிகழாது.  


பிறருக்கு உரிய பொருளை வஞ்சித்துக் கொள்வதற்கு, அந்தப் பொருளுக்கு உரியவரது செர்வு பார்த்து இருந்து, அதற்கேற்ப வஞ்சகச் செயல்களைச் செய்வதால் "சதி ஆயிரம்" என்றார்.  


துன்பத்தில் கொண்டு சேர்க்கும் நூல்களை ஓயாமல் படிப்பர்.  ஆனால் இம்மை மறுமைப் பயனைத் தரும் நூல்களைப் படிக்கமாட்டார்கள்.  


ஈதல், இசைபட வாழ்தல்,  பகுத்துண்டு பல்உயிர் ஓம்புதல் என்பவற்றின் உண்மையை உணர்ந்து, உயிருக்கு ஆக்கம் தேடாமல், தேடிச் சென்று பிறருக்கு உபகாரம் எதையும் செய்யமாட்டார்கள்.  


தேடிச் சென்று செய்யாதவர்கள், தன்னை நாடி வந்தவருக்கும் எதையும் கொடுக்கமாட்டார்கள்.


"தோன்றில் புகழொடு தோன்றுக, அஃதுஇலார்

தோன்றலின் தோன்றாமை நன்று." ---  திருக்குறள்.


தோன்றாமை நன்று என்றதால், புகழோடு வாழாதவன் இருந்தும் பயனில்லை; இறந்தாலும் நட்டமில்லை என்பது புலனாயிற்று.


திரு ஏகம்ப மாலை - 14


"வாதுக்குச் சண்டைக்குப் போவார், வருவார், வழக்குஉரைப்பார்,

தீதுக்கு உதவியும் செய்திடுவார், தினம் தேடிஒன்று

மாதுக்கு அளித்து மயங்கிடுவார் விதி மாளும் மட்டும்,

ஏதுக்கு இவர் பிறந்தார்? இறைவா, கச்சிஏகம்பனே."


பொழிப்புரை : திருக்கச்சி ஏகம்பத்தில் எழுந்தருளி இருக்கும் இறைவன!  வீண் வாதத்துக்கும், வீண் சண்டைக்கும் போவார்கள்.  மீண்டு வருவார்கள். தமது வழக்கை மற்றவர் கேட்கச் சொல்லுவார்கள். தீய செயலுக்குத் துணையும் போவார்கள். தமது வாழ்நாள் முடியும் அளவும், பொருளை ஓடி ஓடித் தேடி, தம்மால் விரும்பப்பட்ட விலைமகளிருக்குக் கொடுத்து மயங்குவார்கள். என்ன காரணத்துக்காக இவர்கள் பிறந்தார்களோ?


விளக்கம்: தீவினையை உடையவர்கள், இம்மை மறுமை வீடு ஆகியவற்றிற்கு உரிய புகழ், அறம், ஞானத்தைத் தேடாது, தம்மைச் செய்தாரை இருளில் சேர்க்கும் பழி முதலியவற்றையே விரும்பித் தேடுவார்கள். அதற்கான செயல்களையே விரும்பிச் செய்வார்கள் என்பதால்,  "வாதுக்குச் சண்டைக்குப் போவார், வருவார், வழக்கு உரைப்பார், தீதுக்கு உதவியும் செய்திடுவார்" என்றார் அடிகளார்.


தாம் தேடிய பொருளை, பொருள் இல்லாத பிறர்க்கு ஈதலும், தாம் அனுபவித்தலும் செய்யாமல், அப் பொருளை நாள்தோறும் தாம் விரும்பிய பொதுமகளிருக்குக் கொடுத்து, அறிவு அழிந்து மயங்கிடுவார் ஆதலால், "தினம் தேடிஒன்று மாதுக்கு அளித்து மயங்கிடுவார் விதி மாளும் மட்டும்" என்றார் அடிகளார்.  


தாம் பிறந்தும், பிறப்பின் பயனையும், மறுமைக்கு உரிய பயனையும் தேடிக் கொள்ளாமல், வாழ்நாளை வீண் நாள் ஆக்கி உழல்வதால், "ஏதுக்கு இவர் பிறந்தார்" என்றார். "ஈதல், இசைபட வாழ்தல், அது அல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு" என்றார் திருவள்ளுவ நாயனார். உயிருக்கு ஊதியமாக வரும் ஈதல், புகழ் ஆகியவற்றைப் பெறுவதற்கே இந்த உடம்பு வந்தது என்பதை அறியாதவர்கள்,  "தோன்றலின் தோன்றாமை நன்று".


திரு ஏகம்ப மாலை - 13

 



"பொல்லா இருள்அகற்றும் கதிர் கூகைஎன் புள்கண்ணினுக்கு

அல்லாய் இருந்திடுமாறு ஒக்குமே, அறிவோர் உளத்தில்

வல்லார் அறிவார், அறியார் தமக்கு மயக்கம் கண்டாய்,

எல்லாம் விழிமயக்கே இறைவா, கச்சிஏகம்பனே".


பொழிப்புரை : திருக்கச்சி ஏகம்பத்தில் எழுந்தருளி இருக்கும் இறைவனே!  ஞானத்தால் விடயஞான ஆராய்ச்சியை உணர்தற்கு உரிய மனக் கிளர்ச்சியில் வல்லவர்களாகிய ஞானிகள் உண்மைப் பொருளை, உள்ளபடி தமது ஞானக் கண்ணால் காண்பார்கள். அப்படிப் பார்ப்பதற்கு உரிய ஞானக்கண், அறிவுக்கண் இல்லாதவர்க்கு, அந்த உண்மைப் பொருள் உணர்ச்சி மயக்கமே ஆகும். அது எதுபோல என்றால், கொடிய இருளை ஒழிக்கும் சூரியனுடைய ஒளியானது, கூகை என்கிற பறவையின் கண்ணுக்கு இருளாய் இருக்கும் தன்மையை ஒத்தது.  ஆதலால், எல்லாம் காட்சி மயக்கமே.

விளக்கம்: கூகை - கோட்டான். இந்தப் பறவைக்குப் பகலும் இருளாகவே தோன்றும். அதுபோல், அஞ்ஞானிகளுக்கு, எங்கும் நிறைந்த சிவஒளி புலனாகாது. "ஊமன் கண்போல ஒளியும் மிக இருளே, வாமன் கண் காணாதவை" என்பார் உமாபதி சிவாசாரியார். மக்களுக்கு இருவகைக் கண்கள் இருக்கின்றன. ஒன்று புறக்கண். மற்றொன்ரு அகக்கண். புறக்கண் ஊனக்கண் எனவும், அகக்கண் ஞானக்கண் எனவும் சொல்லப்படும். ஊனக்கண்ணுக்கு சிவம் தோன்றாது. ஞானக்கண்ணுக்கு மாயை தோன்றாது. சிவம் என்னும் பொருள் போக்கு வரவு கடந்தது. அதற்குத் தோற்றமும் இல்லை, மறைவும் இல்லை. எப்போதும் ஒரே பெற்றித்தாய் இருப்பது. அது தோன்றுவது போலவும் மறைவது போலவும் நிகழ்வது ஊனக்கண் மயக்கத்தால். இது குறித்தே அடிகளார், எல்லாம் விழி மயக்கே என்றார்.


"முகத்தில் கண்கொண்டு காண்கின்ற மூடர்காள்,

அகத்தில் கண்கொண்டு காண்பதே ஆனந்தம்,

மகட்குத் தாய்தன் மணாளோடு ஆடிய

சுகத்தைச் சொல்எனின் சொல்லுமாறு எங்ஙனே".     --- திருமந்திரம்.

பதியாகிய சிவத்தை ஊனக்கண் உணராது. ஞானக்கண்ணினில் சிந்தை நாட வேண்டும் என்பதை,  "ஊனக்கண் பாசம் உணராப் பதியை, ஞானக் கண்ணினில் சிந்தை நாடி" என்றார் மெய்கண்டார்.

கண்ஒளி உள்ளவர்களுக்குக் கதிரவன் ஒளி தோன்றும்.  கோட்டானுக்கு ஒளி தோன்றவில்லை என்பதால் கதிரவன் இல்லை என்று பொருளல்ல. கோட்டானுக்கு அதைக் காணும் திறன் இல்லை என்பதே பொருள். "அருட்கண்ணால் நோக்காதார் அல்லாதாரே" என்பார் அப்பர் பெருமான்.


"அருளால் எவையும் பார் என்றான், அத்தை

அறியாதே சுட்டி என் அறிவாலே பார்த்தேன்,

இருள்ஆன பொருள் கண்டது அல்லால், கண்ட

என்னையும் கண்டிலேன் என்னடி தோழி!"     --- தாயுமானார் சுவாமிகள்.

உயிருக்குத் தொன்றுதொட்டே உள்ள அவிச்சை என்னும் அஞ்ஞானமும்,  அந்த அஞ்ஞானம் பற்றி, நான் என மதிக்கும் அகங்காரமும், அந்த அகங்காரம் பற்றி எனக்கு இது வேண்டும் என்று தோன்றுகின்ற விருப்பும், அந்த விருப்பு பற்றி, அப் பொருளிடத்தே செல்லும் ஆசையும்,  அந்த ஆசை பற்றி, அந்தப் பொருள் கிடைக்காத போது உண்டாகும் கோபமும் உடையவர்கள், ஊனக் கண் கொண்டவர்களே. அவர்களுக்கு ஞானக் கண் இல்லையாதலால், மெய்ப்பொருளைக் காணமாட்டாமல் மயங்குவார்கள். இதனாலேயே, "அறியார் தமக்கு மயக்கம் கண்டாய், எல்லாம் விழிமயக்கே" என்றார் அடிகளார். அதற்குக் காரணம், அவர்களுக்கு உள்ள மனக்குற்றம்.

திருவள்ளுவ நாயனார் அருளிய "மெய்யுணர்தல்" என்னும் அதிகாரத்தை, மெய்யாகவே ஓதி, உணர்தல் வேண்டும்.


திரு ஏகம்ப மாலை - 12

 


"பருத்திப் பொதியினைப் போலே வயிறு பருக்கத் தங்கள்

துருத்திக்கு அறுசுவை போடுகின்றார், துறந்தோர் தமக்கு

வருத்தி அமுதுஇட மாட்டார், அவரை இம் மாநிலத்தில்

இருத்திக் கொண்டு என் இருந்தாய், இறைவா கச்சிஏகம்பனே."


பொழிப்புரை : திருக்கச்சி ஏகம்பத்தில் எழுந்தருளி இருக்கும் இறைவனே!  பருத்தி மூட்டையைப் போல வயிறு பருக்கும்படி, தங்கள் தோல் பையாகிய வயற்றினுக்கு, அறுசுவையோடு கூடிய உணவு வகைகளை நிரப்புகின்றார்கள். துறவினரை வரவழைத்து அவருக்கு உணவு அளிக்கமாட்டார்கள். அப்படிப் பட்டவர்களை இப் பெரிய பூமியில் இருக்கும்படி செய்துகொண்டு, என்ன காரணத்தால் இருந்தாய் இறைவா!


விளக்கம்: ஆன்மா உடம்போடு கூடிய வாழ்க்கையை வாழ்வதற்கு வாழ்நாள் வரையறுக்கப்பட்டு உள்ளது. "வினைப் போகமே ஒரு தேகம் கண்டாய், வினைதான் கழிந்தால் தினைப் போது அளவும் நில்லாது கண்டாய்" என்று அடிகள் பிறிதொரு பாடலில் காட்டியுள்ளார்.  இருள்சேர் இருவினைகளைக் கழித்துக் கொண்டு ஆன்மா, வினைகளில் இருந்து விடுபட்டுத் தூய்மை பெற்று, இறைவன் திருவடியை அடையவேண்டி, இந்த உடம்பு வந்தது. இந்த உடம்பு மாயா காரியத்தால் ஆனது. ஆணவம் நமது அறிவை மறைப்பதால், இந்த உடம்பை நான் என்று மயங்குகின்றோம். வினைகளை ஆற்றுகின்றோம்.  "இன்றைக்கு இருந்தாரை நாளைக்கு இருப்பர் என்று எண்ணவோ திடமுமில்லை" என்றார் தாயுமான சுவாமிகள். "நெருநல் உளன் ஒருவன் இன்று இல்லை என்னும் பெருமை உடைத்து இவ்வுலகு" என்று திருவள்ளுவ நாயனார் காட்டினார்.  


"உறங்குவது போலும் சாக்காடு, உறங்கி விழிப்பது போலும் பிறப்பு" என்றும் நாயனார் காட்டினார். நிலையாமையை நிலையாக உடையது இந்த உலகம். ஒவ்வொரு நாளும் உறக்கம் எப்போது வரும், எப்படி வரும், எப்போது உறங்கி, எப்போது, எப்படி விழிப்போம் என்பது நமக்குத் தெரியாது. அதுபோல இறப்பு எப்படி, எப்போது வரும், பிறப்பு என்பது எப்படி எப்போது வரும் என்பது தெரியாது.


இந்த உடம்பால் பெறவேண்டிய பயனைப் பெறுவதை விட்டு, உடம்பை நான் என்று மயங்கி,


"அவல வயிற்றை வளர்ப்பதற்கே

அல்லும் பகலும் அதில் நினைவாய்க்

கவலைப்படுவதன்றி, சிவக்

கனியைச் சேரக் கருதுகிலேன்,

திவலை ஒழிக்கும் திருத்தணிகைத்

திருமால் மருகன் திருத்தாட்குக்

குவளைக் குடலை எடுக்காமல்

கொழுத்த உடலை எடுத்தேனே."


என்று வள்ளல் பெருமான் பாடியதற்கு எடுத்துக் காட்டாக வாழ்வதுதான் வாடிக்கை.


உடல் கொழுக்க உண்ணுகின்றோம்.இந்த வயிறு என்னும் தூராக்குழி எந்த நாளும் நிறைந்ததில்லை. பருத்திப் பொதியைப் போல வயிறு வீங்குகிறது.   "பகுத்து உண்டு பல்உயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை" என்பார் திருவள்ளுவ நாயனார். "யாவர்க்கும் ஆம் உண்ணும்போது ஒரு கைப்பிடி" என்றார் திருமூல நாயனார். பசி, தாகம் என்பது எல்லா உயிர்க்கும் பொதுவானது. பசி, தாகம் தீரவில்லையானால், உயிர் அடம்பில் நிலைக்காது.  அதனால், "உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே" எனப்பட்டது.  


பின்வரும் திருமந்திரப் பாடல்கள் ஒரு மேலான உண்மையை நமக்குத் தெளிவாக்கும்....


"அகரம் ஆயிரம் அந்தணர்க்கு ஈயில்என்

சிகரம் ஆயிரம் செய்தே முடிக்கில் என்

பகரும் ஞானி பகல்உண் பலத்துக்கு

நிகர்இலை என்பது நிச்சயம் தானே."


பொழிப்புரை : அந்தணர் வாழும் வீதிகள் பலவற்றை அவர்கட்குத் தானம் செய்தலும், அவ்வீதிகளில் அவர்கட்கு உயர்ந்த மாடமாளிகைகள் பல கட்டித் தருதலும் ஆகிய இவற்றால் விளையும் பயன்கள் யாவும் மாகேசுரன் ஒருவனை வழிபட அவன் உண்டதனால் விளையும் பயனளவிற்கு ஒவ்வாது குறைவனவே என்பது உறுதி.


அடியார்களை, துறந்தவர்களை, ஞானிகள் என்று சொல்வோம். அவர்கள் மாகேசுரர்கள் எனப்படுவர்.  அவர்களுக்கு உணவளித்தல், மகேசுர பூசை எனப்படும்.


"ஆறிடு வேள்வி அருமறை சாலவர்

கூறிடும் அந்தணர் கோடிபேர் உண்பதில்

நீறுஇடும் தொண்டர் நினைவின் பயன்நிலை

பேறுஎனில் ஓர்பிடி பேறுஅது ஆகுமே".


பொழிப்புரை : ஆறு அங்கங்களால் தெளிய உணர்த்தப்படும் வேள்விகளைச் செய்கின்றவரும், வேதமாகிய நூலை ஓதுகின்றவரும், முப்புரிநூல் அணிபவரும் ஆகிய அந்தணர்கள் கோடிபேர் உண்டு மகிழ்வதனால் உண்டாகின்ற பயனோடு, திருநீற்றை அணிகின்ற சிவனடியார் சிலர் உண்டு மகிழும் மகிழ்ச்சியால் விளைந்து நிலைக்கின்ற பயனை வைத்து எண்ணிப் பார்க்குமிடத்து, முன்னர்க் கூறிய பயன் பின்னர்க் கூறிய உணவில் ஒரு பிடியினால் விளையும் பயனளவேயாகும்.

எனவே, முன்செய்த நல்வினைப் பயனால், கிடைத்த செல்வத்தைக் கொண்டு, மாதவர்க்கு அமுது செய்வித்துப் பெறுதற்கரிய பேற்றைப் பெற முயலுதல் வேண்டும். அங்ஙனம் செய்யாது, உடம்பை வளர்ப்பதற்கும், கள்ளுக்கும், சூதுக்கும் பொருளைச் செலவிட்டு, வாழ்நாளை வீணாகக் கழித்து, யாதொரு பயனையும் அடையாது, இந்த நிலவுலகத்திற்குப் பாரமாய் இருப்பதே அன்றி, வேறு ஒரு பயனும் இல்லாமல் வாழ்பவர்கள், பிறப்பை எடுத்தது வீண் என்பார், "துறந்தோர் தமக்கு, வருந்தி அமுது இட மாட்டார். அவரை இம்மாநிலத்தில் இருத்திக் கொண்டு என் இருந்தாய்" என்று இறைவனிடம் விண்ணப்பித்தார்.


திரு ஏகம்ப மாலை - 11

 

"பொருள்உடையோரைச் செயலிலும், வீரரைப் போர்க்களத்தும்,

தெருள்உடையோரை முகத்திலும் தேர்ந்து தெளிவதுபோல்,

அருள்உடையோரைத் தவத்தில், குணத்தில், அருளில், அன்பில்,

இருள்அறு சொல்லினும் காணத் தகும், கச்சிஏகம்பனே."


பொழிப்புரை : திருக்கச்சி ஏகம்பத்தில் எழுந்தருளி இருக்கும் இறைவனே,  பொருட்செல்வம் உடையவரை, அவரது செயலாலும், வீரரை அவர் போர்க்களத்திலே செய்யும் வீரச் செயலாலும், தெளிந்த அறிவு உடையவரை, அவருடைய முகத்தாலும் ஆராய்ந்து உணர்வது போல், உனது திருவருள் பெற்றவர்களை, அவர்கள் செய்யும் தவத்தாலும், அவரது நல்ல குணத்தாலும், அவர்களுக்குப் பிற உயிர்களிடம் உள்ள கருணையினாலும், அவர்களுக்குத் தம் தொடர்பு உடையவரகளிடம் உன்ன அன்பினாலும், கேட்பவர்களின் அறியாமை நீங்குமாறு அவர்கள் சொல்லுகின்ற சொற்களாலும் தெளிந்து கொள்ளலாம்.


விளக்கம் : ஒருவன் செல்வம் உடையவன் என்பது அவன் செய்யும் தீச் செயல்களால் தெளிய முடியாது. காரணம், தீச் செயல்களை அவன் நேர் நின்று செய்யமாட்டான். செய்பவரகளும் இன்னார் ஏவலால் செய்தோம் என்று சொல்லமாட்டார்கள். ஆனால், நற்செயல்களை நேர்  நின்று செய்வான். நேர் நிற்கவில்லையானாலும், இன்னாரால் அச் செயல் செய்யப்படுகின்றது என்பது விளங்கும். ஆக, ஒருவன் செய்யும் நற்செயலால் அந்த உண்மை விளங்கும். இது குறித்தே  திருவள்ளுவ நாயனார்,


"அற்றார் அழிபசி தீர்த்தல், அஃது ஒருவன்

பெற்றான் பொருள் வைப்பு உழி".


என்று காட்டினார். இதனால், பொருள் உடையாரைச் செயலால் அறிந்துகொள்ளலாம் என்றார் அடிகளார்.


வீரத்திலே ஒருவன் சிறந்தவன் என்பது, அவன் செய்யும் போர்த் தொழிலால் விளங்கும். போருக்குப் பயந்தவன் வீரன் அல்ல. அவன் போர்க்களத்துக்குச் செல்லவும் மாட்டான்.  சென்றாலும், பகைவருக்கு அஞ்சி ஓடி ஒளிவான். ஆனால், வீரன் ஒருவன் அஞ்சாது போர் செய்து, வெற்றி கொள்வான். அல்லது விழுப்புண் பட்டு மடிவான். இதனைத் திருவள்ளுவ நாயனார்,


"கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்,

மெய்வேல் பறியா நகும்"


என்று அற்புதமாகக் காட்டினார். இதனால், வீரரைப் போர்க்களத்துத் தெளியலாம் என்றார் அடிகளார்.


நூல்களைக் கற்று உணர்ந்தோர் தெளிந்த அறிவை உடையவர்களாகவே இருப்பர். சொல்பொருளின் சுவையை அனுபவிப்பர். அவர்களுக்குச் சென்ற இடம் எல்லாம் சிறப்பு உண்டாகும். அறம் பொருள் இன்பம் வீடு என்னும் புருஷார்த்தங்களை அடைவர். மனம் மாசு இல்லையாதலால், அவருக்கு மன வருத்தம் இல்லை. அதன் பலனாக, நரை திரை இல்லை. அவர் அவ்வாறு உள்ளவர் என்பதை அவருடைய தெளிந்த முகமே காட்டிக் கொடுக்கும் என்பதை...


"அடுத்தது காட்டும் பளிங்குபோல், நெஞ்சம்

கடுத்தது காட்டும் முகம்"


என்னும் திருவள்ளுவ நாயனாரின் அருள்வாக்கு தெளிவாக்கும்.  எனவே, தெருள் உடையோர் முகத்திலும் தெளிவது போல் என்றார் அடிகளார்.


தவம், நல்ல குணம்,  பிற உயிர்களிடத்தில் அருள், அதாவது, ஜீவகாருண்ணியம், மக்களிடத்தில் அன்பு, அதாவது, ஆன்ம நேயம், கேட்பவரின் அறியாமை நீங்கும்படியாகிய தெளிந்த சொல் ஆகியவற்றால் நிரம்பியவர்களுக்குத் தான் இறைவனது அருள் கிடைக்கும்.


தவம் என்பது,


"உற்றநோய் நோன்றல், உயிர்க்கு உறுகண் செய்யாமை,

அற்றே தவத்திற்கு உரு"


என்றும்


நல்ல குணம் என்பது,


குணம் என்னும் குன்று ஏறி நின்றார், எவ் உயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகுவார் என்னும் நாயனார் வாக்குகளாலும், அருள் என்பது, திருவள்ளுவ நாயனாரின் அருள் உடைமை என்னும் அதிகாரத்தில் வரும் திருக்குறள்களாலும் தெளியப்படும்.


திரு ஏகம்ப மாலை - 10

 



"வரிக்கோல வேல்விழியார் அநுராக மயக்கில் சென்று

சரிக்கு ஓதுவேன், அஞ்செழுத்தும் சொலேன், தமியேன் உடலம்

நரிக்கோ, கழுகு, பருந்தினுக்கோ, வெய்ய நாய்தனக்கோ,

எரிக்கோ, இரைஎதுக்கோ, இறைவா, கச்சிஏகம்பனே."

பொழிப்புரை : திருக்கச்சி ஏகம்பத்தில் எழுந்தருளி இருக்கும் இறைவனே, செவ்வரிகளை உடையதும், அழகிய வேலை ஒத்ததும் ஆகிய கண்களை உடைய பெண்களின் காம மயக்கத்தில் போய், அவருடைய நட்பு வேண்டி, அவர்களைப் புகழ்ந்து பேசுவேன். உனது மந்திரமாகிய திருவைந்தெழுத்தை ஓதமாட்டேன். ஆதலால், அடியேனது உடம்பானது, விழுந்தால், நரிக்கு உணவாகுமா? கழுக்குக்கா?, பருந்தினுக்கா?, கொடிய நாயினுக்கா? அல்லது நெருப்பில் தான் இட்டு சுடப்படுமா?   வேறு எதற்கு இரை ஆவேன்?


விளக்கம் :  அனைத்தையும் துறந்த துறவிகளையும் வேல் போல் தைத்து உருவி, அவர்களைத் தம் வயப்படுத்துவது விலைமகளிரின் கண்கள் ஆகும். அதனை வரிக்கோல வேல் விழி என்றார். அநுராகம் - காம மயக்கம். அவர்களின் அநுராகத்தில் மயக்கமுற்று, வாழ்நாளை வீணாள் ஆக்குவேன், அவர்கள் தரும் இன்பத்தை வேண்டி அவர்களைப் புகழ்ந்து உரைப்பேன் ஆதலால், சரிக்கு ஓதுவேன் என்றார்.   காமநூல்களை ஓதுவேன் என்றலும் உண்டு. விலைமகளிர் பற்றி அருணகிரிநாதப் பெருமான் திருப்புகழில் பலபடக் கூறி உள்ளார்.  

"வேல் அங்கு ஆடு தடம் கண்ணார் வலையுள் பட்டு, உன் நெறி மறந்து, மால் அங்கு ஆடி மறந்து ஒழிந்தேன்" என்று பாடினார் சுந்தரர் பெருமான்.  

"வைப்பு மாடு என்று, மாணிக்கத்து ஒளி என்று மனத்திடை உருகாதே, செப்புநேர் முலை மடவரலியர் தங்கள் திறத்திடை நைவேனை என்றும் குரவு வார் குழலார் திறத்தே நின்று குடி கெடுகின்றேனை" என்றும் மணிவாசகப் பெருமான் பாடியருளியதையும் கருத்தில் கொள்க.


"வேனில் வேள் மலர்க்கணைக்கும், வெண் நகை, செவ்வாய், கரிய

பால்நலார் கண்ணியர்க்கும் பதைத்து உருகும் பாழ் நெஞ்சே,

உன்எலாம் நின்று உருகப் புகுந்து ஆண்டான், இன்றுபோய்

வான்உளான் காணாய், நீ மாளா வாழ்கின்றாயே."


என்று மணிவாசகப் பெருமான் பாடினார்.


"சுடர்இலை நெடுவேல் கரும்கணார்க்கு உருகித்

துயர்ந்து நின்று, அலமரும் மனம், நின்

நடம்நவில் சரண பங்கயம் நினைந்து

நைந்து நைந்து உருகும் நாள் உளதோ?"


என்றும்,


"பெண்அருங்கலமே, அமுதமே, எனப் பெண்

பேதையர்ப் புகழ்ந்து அவம் திரிவேன்,

பண்உறும் தொடர்பில் பித்த என்கினும், நீ

பயன்தரல் அறிந்து, நிற் புகழேன்."


என்றும் சோணசைமாலை என்னும் நூலில் சிவப்பிரகாச சுவாமிகள் பாடியுள்ளதையும் நோக்குக.


"தத்தை அங்கு அனையார் தங்கள் மேல் வைத்த

தாயாவினை நூறு ஆயிரம் கூறு இட்டு,

அத்தில் அங்கு ஒரு கூறு உன்பால் வைத்தவருக்கு

அமர் உலகு அளிக்கும் நின் பெருமை"


என்னும் திருவிசைப்பாப் பாடல் வரிகளையும் நோக்குக.


இறைவன் திருவருளால் பெற்றது இந்த அருமையான உடம்பு. அதனைக் கொண்டு நல்வழியில் வாழ்ந்து, இறையருளைப் பெற வேண்டுமானால், இறைவன் பொருள்சேர் புகழைப் பேச வேண்டும்.  ஆனால்,  பொருள் கருதி அது உள்ளவர்களைப் புகழ்ந்து பேசியும், இன்பம் கருதி, பொருள் கொண்டு, அதைத் தரும் பொதுமகளிரைப் புகழ்ந்து கொண்டும் வாழ்நாளை வீணாள் ஆக்கி, முடிவில் பயனில்லாமல் இறப்பில் படுகிறோம். பிறகு இந்த உடம்பு என்னாகும் என்று சுவாமிகள் கவலைப் படுகின்றார். நாமும் படவேண்டும்.


திரு ஏகம்ப மாலை - 9

 


"மாயநட் போரையும், மாயா மலம்எனும் மாதரையும்,

வீயவிட்டு ஓடி, வெளியே புறப்பட்டு, மெய்அருளாம்

தாயுடன் சென்று, பின் தாதையைக் கூடி, பின்தாயை மறந்து

ஏயும் அதே நிட்டை என்றான், எழில் கச்சிஏகம்பனே."


பொழிப்புரை : திருக்கச்சி ஏகம்பத்தில் எழுந்தருளி இருக்கும் இறைவன், (குருநாதனாக எழுந்தருளி வந்து) வஞ்சகம் செய்து மயக்கும் நட்பினரையும், அழியாத மலம் என்னும் பெண்களையும், தன்னை விட்டுக் கெட்டு ஒழியத் துரத்தி, துறந்து, உண்மைத் திருவருள் எனப்படும் தாயோடு தொடர்ந்து சென்று, பிறகு தந்தையாகிய சிவத்தைச் சேர்ந்து, அதற்குமேல், தாயை மறந்து, தந்தையைப் பொருந்தி இருப்பதே நிட்டை என்று உபதேசித்து அருளினான்.

விளக்கம் : மாய நட்போரை என்றது தத்துவங்களை.   தத்துவங்களைப் பொய் என உணர்ந்து, அவற்றைக் கடந்து வரவேண்டும். சகல அவத்தை நிலை தத்துவங்களோடு கூடியிருக்கும் நிலை. மாயாமலம் என்றது, சகஜமலம் என்னும் ஆணவமலத்தை.  மாயாத மலம் - கெடாத மலம். இது ஆணவம் எனப்பட்டது. திருவருட் பயன் என்னும் சித்தாந்த சாத்திர நூலில் ஆணவத்தைப் பெண்ணிற்கு உருவகித்துக் கூறப்பட்டுள்ளது காண்க. ஆன்மா அறிவு ஏதும் விளங்காது மயங்கிக் கிடந்த கேவல அவத்தை என்னும் நிலையைக் குறித்தது. முத்தி நிலையிலும் ஆணவ மலமானது தனது வலி குன்றிக் கிடப்பதால், அது மாயாமலம் எனப்பட்டது.  

தாய் என்பது உண்மை அருள் என்று சொல்லப்படும் மெய்அருள் ஆகிய திருவருளை. "அருள் அது சத்தியாகும் அரன் தனக்கு" என்னும் சாத்திர உண்மையை உணர்க. தந்தை என்றது சிவத்தை. திருவருள் துணை இல்லாமல் சிவத்தைக் கூடுதல் இல்லை என்பது சாத்திர நூல்களின் கருத்து. திருவருள் துணையால், ஆன்மா சிவத்தைக் கண்டபின், ஆன்மா சிவத்தோடு ஒன்றிக் கிடக்கும். அப்போது திருவருளாகிய தாயை மறக்கின்ற நிலை தானே வரும்.  நிட்டை என்றால், செயல் அற்றுக் கிடப்பது. "சேவடி சேறல் செயல் அறல் தானே" என்பது திருமந்திரம்.


திரு ஏகம்ப மாலை - 8

 


"கல்லாப் பிழையும்,  கருதாப் பிழையும், கசிந்துஉருகி

நில்லாப் பிழையும், நினையாப் பிழையும், நின்அஞ்செழுத்தைச்

சொல்லாப் பிழையும், துதியாப் பிழையும், தொழாப் பிழையும்,

எல்லாப் பிழையும் பொறுத்து, அருள்வாய், கச்சிஏகம்பனே."


பொழிப்புரை : திருக்கச்சி ஏகம்பத்தில் எழுந்தருளி இருக்கும் இறைவனே, நீர் அருளிச் செய்த வேத சிவாகமங்களைக் கற்று அறிடாத பிழையும், அவைகளில் உள்ள உண்மைப் பொருளை மனக்கண்ணில் கொள்ளாத பிழையும், மனம் உருகி உணது திருவடிகளைப் பற்றி நின்று வழிபடாத பிழையும்,  எப்போதும் உனது திருவடியை நினைக்காத பிழையும், உனது மந்திரத் திருமேனியையும், உனது அருட்தன்மையையும் உணர்த்தும் மந்திரமாகிய திருவைந்தெழுத்தை வாயாரச் சொல்லிச் செபிக்காத பிழையும், உன்னைத் துதித்துப் போற்றாத பிழையும், உன்னை வணங்காத பிழையும், இவை ஒழிந்த மற்ற எல்லாப் பிழைகளையும் பொறுத்துக் கொண்டு, திருவருள் புரிவாயாக.

விளக்கம் : "கல்லார் சிவகதை" என்று பின்வரும் ஒரு பாடலில் அடிகள் பாடிக் காட்டினார். ஒருவன் கற்க வேண்டியது, நெஞ்சை நல்வழிப்படுத்தி, நெஞ்சை உருக்கி, ஆணவமலத்தின் வலியை அடக்குகின்ற நல்ல நூல்களே. ஆகையால், பிற நூல்களை வேறு காரணம் பற்றிக் கற்றாலும், அருள் நூல்களைக் கல்லாமல் இருப்பது பிழை என்பதால், "கல்லாப் பிழை" என்று அதனைக் குறித்தார்.

அருள் நூல்களைக் கற்று வல்லவனாய வழியும், அக் கல்விச் செருக்கால், நான் கற்றேன் என்று தம்மை ஒத்தவரிடம் சென்று, வாதிட்டு வெற்றி பெறும் நோக்கோடு திரிந்து, வாழ்நாளை வீழ்நாள் ஆக்கியதை விட்டு, அருள்நூல்களைக் கற்று, மனக் கசடு அற்று, அந் நூல்பொருளைச் சிந்தித்தல், தெளிதல், நிட்டை கூடல் என்னும் வழியில் பழகாது இருத்தலின், "கருதாப் பிழையும்" என்றார்.

அருள்நூல்களைக் கற்று உணர்ந்த வழி, மனம், மொழி, மெய் முதிலய முக்கரணங்களும் இறை நெறியில் நிறுத்தி, தன்னை உணர்வதோடு, தனது தலைவனையும் உணர்ந்து, திருவடிப் பற்றுக் கொண்டு, மனம் உருகி நில்லாததால், "கசிந்து உருகி நில்லாப் பிழையும்" என்றார்.

அப்படி நிற்கவேண்டிய நெறியில் நின்ற வழி, இறைவன் திருவடியை என்றும் மறவாமல் நினைக்கும் நிலை வாய்க்கும்.  நினைப்பவர் மனத்தைக் கோயிலாகக் கொள்வான் இறைவன்.  எப்போதும் அவன் திருவடியை மறவாமல் நினைக்கும் நெறியில் நில்லாததால், "நினையாப் பிழையும்" என்றார்.

மகாமந்திரமாகிய திருவைந்தெழுத்தை, உபாம்சு, வாசிகம், மானதம் ஆகிய முறைகளில் செபிக்கவில்லை. ஆதலால், "அஞ்செழுத்தைச் சொல்லாப் பிழையும்" என்றார்.

"எண்ணிலேன் திருநாம அஞ்செழுத்தும் என் ஏழைமை அதனாலே" என்னும் மணிவாசகத்தின் படி, திருவைந்தெழுத்தைத் தான் ஓதக் கொடுத்து வைக்கவில்லை; அதற்கான முயற்சியும் இல்லை. என்றாலும், இறைவன் திருநாமங்களில் ஒன்றையேனும் கூறியது இல்லை என்பதால், "துதியாப் பிழையும்" என்றார்.

இவைகூட இல்லையாயினும், இறைவன் திருமேனியைக் கண்டு தொழுவதும் இல்லை என்பதால், "தொழாப் பிழையும்" என்றார்.


திரு ஏகம்ப மாலை - 7

 

"அன்ன விசாரம் அதுவே விசாரம், அது ஒழிந்தால்,

சொன்ன விசாரம் தொலையா விசாரம், நல் தோகையரைப்

பன்ன விசாரம் பலகால் விசாரம், இப் பாவி நெஞ்சுக்கு

என்ன விசாரம் வைத்தாய் இறைவா கச்சிஏகம்பனே."

பொழிப்புரை : திருக்கச்சி ஏகம்பத்தில் எழுந்தருளி இருக்கும் இறைவனே!  பொய்யாகிய உடம்பைப் போற்றி வளர்க்கும் பொருட்டு மனிதனுக்கு முதலில் எழுகின்ற கவலை உணவைப் பற்றியது. அந்தக் கவலை எவ்வகையிலாவது நீங்கினால், அடுத்து உடம்பைக் கிடத்த நல்ல படுக்கை, இருக்க வீடு, உடுத்த உடை தேவைப்படுவதால், அதற்கான பொருளைத் தேடுவது அடுத்த கவலை ஆகிறது.  இவையெல்லாம் வாய்த்துவிட்டால், அழகு மிக்க மயில் போலும் சாயலை உடைய இளம்பெண்களைப் புகழ்ந்து பேசும் இந்த விசாரம்  பலகாலத்து விசாரமாக உள்ளது.  சித்த சாந்தம் அடையாத, இந்தப் பாவியின் மனத்திற்கு  வேறு என்ன கவலையை வைத்தாய்.

விளக்கம் : மனிதன் கலியுகத்தில் அன்னத்தால் உயிர் பெற்று விளங்குவான் என்பது சரித்திரம். இதனை உயிரானது முதலாம் யுகத்தில் எலும்பிலும், இரண்டாம் யுகத்தில் தசையிலும், மூன்றாம் யுகத்தில் இரத்தத்திலும், நான்காம் அன்னம் முதலியவற்றிலும் இருக்கும் என்று பராசரஸ்மிருதி, ஆசார காண்டம், யுகதர்ம பேதத்தில் கூறியவாற்றான் உணர்க என்று திரு.வி.க. அவர்கள் காட்டியுள்ளார்.  

சோற்றுக் கவலை முதல் கவலை என்பதற்கு, நல்வழி என்னும் நூலில் ஔவைப் பிராட்டியார் காட்டுவது....

"சேவித்தும், சென்றிரந்தும், தெண்ணீர்க் கடல்கடந்தும்,

பாவித்தும், பார்ஆண்டும், பாட்டுஇசைத்தும், - போவிப்பம்,

பாழின் உடம்பை வயிற்றின் கொடுமையால்

நாழி அரிசிக்கே நாம்"

இப் பாடலின் பதவுரை...

வயிற்றின் கொடுமையால் - வயிற்றினுடைய (பசிக்) கொடுமையினாலே, சேவித்தும் - (பிறரைச்) சேவித்தும், சென்று இரந்தும் - (பலரிடத்தே) போய் யாசித்தும், தெள்நீர்க் கடல் கடந்தும் - தெளிவாகிய நீரையுடைய கடலைக் கடந்து வேறு நாடு சென்றும், பாவித்தும் - (ஒருவரைப் பெரியவராகப்) பாவித்தும், பார் ஆண்டும் - பூமியை ஆண்டும், பாட்டு இசைத்தும் - (செல்வரைப் புகழ்ந்து) பாட்டுப் பாடியும், நாம் - நாம், உடம்மை - இந்த உடம்பினை, நாழி அரிசிக்கே - நாழி யரிசிக்காகவே, பாழின் - வீணிலே, போவிப்பம் - செலுத்துகின்றேம்.

வீட்டு நெறியில் செல்லும் பொருட்டு அரிதாகக் கிடைத்த மனிதவுடம்பினை உணவு தேடுவதிலேயே கழிப்பது அறியாமையாகும் என்பது கருத்து.

சொன்ன விசாரம். சொர்ணம் என்பது சொன்னம் என்று ஆயிற்று. கர்ணன், கன்னன் ஆனது போல. சொர்ணம் என்றால் பொன். அடுத்துப் பொருள் தேடும் கவலை. இந்தக் கவலையைப் பற்றி  நீதிவெண்பா என்னும் நூலில் வரும் ஒரு பாடலைக் காண்போம்...

"இன்னல் தரும்பொருளை ஈட்டலும் துன்பமே,

பின்அதனைப் பேணுதலும் துன்பமே -- அன்னது

அழித்தலும் துன்பமே, அந்தோ, பிறர்பால்

இழத்தலும் துன்பமே ஆம்."

இதன் பொருள் ---

துன்பத்தைத் தரக்கூடிய செல்வத்தைத் தேடுதலும் துன்பம்.  தேடிய பொருளை காத்தலும் துன்பம். அதனைச் செலவழித்தலும் துன்பமே.  அந்தோ, அதனைப் பிறர் இடத்தில் கொடுத்து இழந்து போவதும் துன்பமே.


நாலடியார் கூறுவதையும் காண்போம்....

"ஈட்டலும் துன்பம், மற்று ஈட்டிய ஒண்பொருளைக்

காத்தலும் ஆங்கே கடுந்துன்பம், - காத்தல்

குறைபடில் துன்பம், கெடில்துன்பம், துன்பக்கு

உறைபதி மற்றைப் பொருள்."

பொருள் திரட்டுதலும் துன்பம்; திரட்டிய சிறந்த பொருளைப் பாதுகாத்தலும் அவ்வாறே மிக்க துன்பமாகும்;  அங்ஙனம் பாதுகாத்த முறையில் பொருள் தன் அளவில் குறைந்துபோகுமாயின் துன்பமே, இயற்கை நிகழ்ச்சிகளால் முற்றும் அழிந்து போகுமானால் பின்னும் துன்பம்; ஆதலால், பொருள் துன்பங்கள் எல்லாவற்றிற்கும் தங்கும் இடம் என்க.


அருணகரிநாதர் அருளிய திருப்புகழ்ப் பாடல் ஒன்றின் கருத்தினையும் இங்கு வைத்துச் சிந்தித்தல் நலம்.


"உடுக்கத் துகில் வேணும், நீள்பசி

     அவிக்கக் கனபானம் வேணும், நல்

          ஒளிக்குப் புனல் ஆடை வேணும், மெய் ...... உறுநோயை


ஒழிக்கப் பரிகாரம் வேணும், உள்

     இருக்கச் சிறுநாரி வேணும், ஒர்

          படுக்கத் தனிவீடு வேணும், இவ் ...... வகை யாவும்


கிடைத்துக் க்ருகவாசி ஆகிய

     மயக்கக் கடல்ஆடி, நீடிய

          கிளைக்குப் பரிபாலனாய் உயிர் ...... அவமே போம்.


க்ருபைச் சித்தமும், ஞான போதமும்

     அழைத்துத் தரவேணும், ஊழ்பவ

          கிரிக்குள் சுழல்வேனை ஆளுவது ...... ஒருநாளே.


குடக்குச் சில தூதர் தேடுக,

     வடக்குச் சில தூதர் நாடுக,

          குணக்குச் சில தூதர் தேடுக, ...... என மேவிக்


குறிப்பில் குறி காணும் மாருதி,

     இனித் தெற்கு ஒரு தூது போவது

          குறிப்பில் குறிபோன போதிலும் ...... வரலாமோ?


அடிக் குத்திர காரர் ஆகிய

     அரக்கர்க்கு இளையாத தீரனும்,

          அலைக்கு அப்புறம் மேவி, மாதுஉறு ...... வனமே சென்று,


அருள்பொன் திரு ஆழி மோதிரம்

     அளித்து உற்றவர் மேல் மனோகரம்

          அளித்துக் கதிர்காமம் மேவிய ...... பெருமாளே."

இதன் பொழிப்புரை ---

மேற்கே சில தூதர்கள் தேட வேண்டும் என்றும், வடக்கே சில தூதர்கள் தேட வேண்டும் என்றும், கிழக்கே சிலதூதர்கள் தேட வேண்டும் என்றும் அனுப்பி வைத்து, குறிப்பில் குறிப்பறிகின்ற அனுமனை இனி தெற்கே ஒரு தூதனாகப் போக வேண்டியது என்று சொல்லியனுப்பும் குறிப்பு விவரத்தின்படி குறித்த பொருள் கிடைத்தல் தவறிப் போன போதிலும் திரும்பி வீணே வரலாமோ? வருதல் நன்றல்ல (என்று சுக்ரீவன் சொல்லியனுப்ப) அடியோடு வஞ்சகர்களாகிய அரக்கர்களிடம் தோற்று இளைக்காத தீரனாய்க் கடலைக் கடந்து அப்புறம் இலங்கைக்குப் போய், சீதை இருந்த அசோகவனம் புகுந்து, இராமர் தந்த அழகிய பொன் மோதிரத்தைக் கொடுத்துத் திரும்பிய அனுமனுக்கு அன்புடன் அருள் புரிந்து கதிர்காமம் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் பெருமையில் மிக்கவரே!

உடுப்பதற்கு உடை வேண்டும்; பெரிய பசியைத் தணிப்பதற்குக் கெட்டியான பானகம் முதலிய சுவை நீர் வேண்டும்; உடல் அழுக்கு நீங்கி ஒளி பெற தூயநீரும், ஆடையும் வேண்டும்; உடலுக்கு உற்ற நோய்களை ஒழிப்பதற்கு மருந்துகள் வேண்டும்; வீட்டுக்குள் இருப்பதற்கு இளம் மனைவி வேண்டும்; படுப்பதற்கு ஒரு தனி வீடு வேண்டும்; இவ்வாறான நலன்கள் யாவும் கிடைத்துக் குடும்பத்தனாகி, அந்த வாழ்வு என்ற மயக்கக் கடலில் முழுகி, பெரிய சுற்றத்தாரைக் காப்பவனாயிருந்து, முடிவில் உயிர் வீணே அழிந்து போம்; ஆதலால் உமது கருணை உள்ளத்தையும், சிவஞான போதத்தையும் அடியேனை அழைத்துத் தந்தருளவேண்டும்; ஊழ்வினையாகிய மலைச்சூழலில் சுழலுகின்ற என்னை ஆண்டு அருளும் நாள் ஒன்று கிடைக்குமோ?



திரு ஏகம்ப மாலை - 6

 



"பிறக்கும்பொழுது கொடுவந்தது இல்லை, பிறந்து மண்மேல்

இறக்கும்பொழுது கொடுபோவது இல்லை, இடைநடுவில்

குறிக்கும்இச் செல்வம் சிவன்தந்தது என்று, கொடுக்க அறியாது

இறக்கும் குலாமருக்கு என் சொல்லுவேன், கச்சிஏகம்பனே."


பொழிப்புரை :  திருக்கச்சி ஏகம்பத்தில் எழுந்தருளி இருக்கும் இறைவனே, உலகத்தில் பிறக்கும் காலத்தில் ஒரு பொருளையும் உடன் கொண்டு வந்தது இல்லை.  பிறந்து, பிறகு இறக்கும் காலத்திலும் ஒரு பொருளையும் கொண்டு போவது இல்லை. இடைக் காலத்தில் தோன்றும் பொருட்செல்வம், நமது வினைப்பயன் காரணமாக, சிவபெருமானால் அளிக்கப் பெற்றது என்று உறுதியாக நம்பி,  அப்பொருளைக் கொண்டு உயிருக்கு உறுதி தரும் நல்வினையை, பிறவியை அறுக்கும் பெருமருந்தாகிய பதிபுண்ணியத்தை ஆற்றி வருவதே நல்வழி என்று கொண்டு,  இல்லை என்று இரப்பவருக்கு இல்லை என்னாமல் கொடுத்து உதவத் தெரியாமல், வாழ்நாளை வீழ்நாளாக்கி மாண்டுபோகும் கீழ்மக்களுக்கு என்ன சொல்வேன்.  


விளக்கம் : ஆன்மா, கன்மவயத்தால் ஒரு உடம்பை விட்டு, மற்றொரு உடம்பில் சேருமிடத்து, மண், பெண், பொன் முதலிய சகல பொருள்களையும் விட்டுப், புரியட்டகத்துடன் அடைகிறது.  எனவே, "பிறக்கும்பொழுது கொண்டு வந்தது எதுவும் இல்லை".  அங்ஙனம் பூமியில் பிறந்து, தனதானியாதிகளைத் தேடி, அனுபவித்து, இன்னும் நீண்ட நாள் இருப்போம், நாமே அனுபவிப்போம் என்னும் ஆசையால் பொருளைக் குவித்து, இறப்பு வந்தபோது, அந்த ஆன்மா தான் தேடிய பொருள்களை எல்லாம் கொள்ளாது, உடம்பை விட்டுப் போதலின், "இறக்கும்பொழுது கொடு போவது இல்லை" என்றார்.   


பிறக்கும்பொழுது, இறக்கும்பொழுது என்றதனால், பிறவிகள் தோறும் என்று கொள்ள வேண்டும். செல்வமானது இடையில், ஆன்மா பூர்வ சன்மத்தில் ஆர்ச்சித்த புண்ணிய புவத்தின் அளவு, இடையில் பட்டது. தவிர, ஆன்ம முயற்சியினாலேயே எல்லாம் வந்ததும் இல்லை.  அதனால் "இடைநடுவில் குறிக்கு இச்செல்வம்" என்றார். ஆன்மா ஈட்டிய இச் செல்வமானது, சடம் ஆதலால், தாமே குறித்த இடத்திற்குச் செல்லாது.  ஆனால், ஆன்மா ஈட்டிய கன்மமானது செல்லுமாயின், அதுவும் சிவாஞ்ஞையால் புண்ணிய பாவத்தின் அளவே ஆகும் என்பதால் "சிவன் தந்தது" என்றார்.


இறைவன் புண்ணியத்திற்கு ஈடாகத் தந்தது. ஆதலால், அச் செல்வம் தோன்றியபோது,  நாலடியார் உணர்த்துவது......


"நின்றன நின்றன நில்லா எனஉணர்ந்து,

ஒன்றின ஒன்றின வல்லே, செயின்,செய்க;

சென்றன சென்றன, வாழ்நாள், செறுத்துஉடன்

வந்தது வந்தது கூற்று." --- நாலடியார்.


இதன் பதவுரை ---


வாழ்நாள் - உடம்போடு கூடி வாழுமாறு ஏற்பட்ட நாட்கள், சென்றன சென்றன - செல்கின்றன செல்கின்றன; கூற்று - நமன், செறுத்து உடன் வந்தது வந்தது - சினந்து விரைந்து வருகின்றான் வருகின்றான். (ஆதலால்) நின்றன நின்றன - நிலைபெற்றன நிலைபெற்றன என்று நினைத்துக் கொள்ளப்பட்ட செல்வப் பொருள்கள், நில்லா என உணர்ந்து - நிலைபெறா என்று தெரிந்து, ஒன்றின ஒன்றின செயின் - இசைந்தன இசைந்தனவாகிய அறங்களைச் செய்யக் கருதுவீர்களானால்,  வல்லே செய்க - விரைந்து செய்வீர்களாக.


(கருத்து.) வாழ்நாள் கழிந்துகொண்டே யிருத்தலால் நிலையில்லாத செல்வப் பொருள்கள் கொண்டு உடனே அறம் செய்யவேண்டும்.


ஒல்லும் அளவு அறம் செய்க என்பதற்கு, ‘ஒன்றின ஒன்றின செய்க' எனவும், செய்தலின் அருமை தோன்றச் ‘செயின்' எனவும் கூறினார். ‘செல்கின்றன' என்னும் கருத்து விரைவு பற்றிச் 'சென்றன' என்றும், ‘வரும்', என்னுங் கருத்துத் துணிவு பற்றி ‘வந்தது' என்றுஞ் சொல்லப்பட்டன. முதல் இரண்டு அடுக்குகள் பன்மையும், பின் இரண்டு அடுக்குகள் அவலமும் உணர்த்தும், "கூற்று - வாழ்நாள் இடையறாது செல்லும் காலத்தினைப் பொருள் வகையாற் கூறுபடுத்தும் கடவுள் " என்னும் நச்சினார்க்கினியர் உரை இங்கே நினைவு கூரற்பாலது.


"என்ஆனும் ஒன்றுதம் கைஉறப் பெற்றக்கால்,

பின்ஆவது என்று பிடித்துஇரா, - முன்னே

கொடுத்தார் உயப்போவர், கோடுஇல்தீக் கூற்றம்

தொடுத்துஆறு செல்லும் சுரம்." --- நாலடியார்.


இதன் பதவுரை ---


என் ஆனும் ஒன்று தம் கை உற பெற்றக்கால் - யாதாயினும் ஒரு பொருளைத் தமது கையில் கிடைக்கும்படி பெறுவராயின், பின் ஆவது என்று பிடித்து இரா - மூப்புக் காலத்தில் பயன்படுவதென்று இறுகப் பிடித்துக்கொண்டு சும்மா இராமல், முன்னே கொடுத்தார் - இளமையிலேயே அறஞ்செய்தவர், கோடு இல் தீக் கூற்றம் - நடுவுநிலைமையுள்ள அருளில்லாத கூற்றுவன், தொடுத்து செல்லும் சுரம் ஆறு - கயிற்றாற் கட்டிக் கொண்டுபோகின்ற காட்டு வழியை, உய்ய போவர் - தப்பிப் புண்ணிய உலகம் புகுவார்.


(கருத்து.) இளமையிலேயே அறஞ் செய்தவர் புண்ணிய உலகம் புகுவர்.


சிறிது கிடைத்தாலும் அறம் செய்க என்பதற்கு ‘என்னாலும்' என்றார். பொருள் கிடைப்பதன் அருமை நோக்கிப் ‘பெற்றக்கால்' என்றார். கிடைப்பது அங்ஙனம் அருமையாய் இருத்தலின், கிடைத்த உடனே அறத்திற்குச் செலவிடுக என்பது கருத்து. பிடித்திருத்தல், தாமும் உண்ணாது இறுக்கம் செய்து கொண்டிருத்தல். ‘முன்னே ' என்பது முதற்காலத்திலேயே என்னுங் கருத்தில் வந்தது; அஃதாவது, பெற்ற உடனே என்பது; கோடு இல் - கோணுதல் இல்லாத, நடுவு நிலைமையுள்ள அறஞ்செய்வார் கூற்றுவனுலகுக்குச் செல்லும் வழி தப்பிப் புண்ணியவுலகுக்குப் போவர் என்பது பின் இரண்டடிகளின் பொருள்.


இவ்வாறு செய்யாதவர், "சிவன் தந்தது என்று கொடுக்க அறியாது இறக்கும்" என்றார். இறைவன் தந்த அறிவினைப் பெற்றிருந்தும், அந்த அறிவினைச் செல்வம் சேகரிக்கப் பயன்படுத்திக் கொண்டு, செல்வத்தால் பெறவேண்டிய பயனைக் கருதாது, அந்த அறிவு மட்டும் இல்லாது இருத்தலின், அவர்களைக் கீழ்மக்கள் எனக் குறிக்க, "குலாமர்" என்றார்.  


செல்வம் நிலையாமையையும், அதைக் கொண்டு அனுபவிக்கும் யாக்கை நிலையாமையையும் கண்கூடாகக் கண்டும், சுருதி, புராணங்களாலும், அருள் நூல்களாலும்,  நல்லோர் உரையாலும் அறிந்து இருந்தும், பிறர்க்குக் கொடாது முற்பிறப்பில் செய்த புண்ணியத்தை இழந்து, இனி மறுமைக்கும், வேண்டிய புண்ணியத்தைப் பெறாது, வாளா இறந்துபோகும் மனிதர்கள் மேல் இரக்கம் கொண்டு அடிகளார் "என் சொல்லுவேன்" என்றார்.


திரு ஏகம்ப மாலை - 5


"பொல்லாதவன், நெறிநில்லாதவன், ஐம்புலன்கள் தமை

வெல்லாதவன், கல்வி கல்லாதவன், மெய்அடியவர்பால்

செல்லாதவன், உண்மை சொல்லாதவன், நின் திருவடிக்குஅன்பு

இல்லாதவன் மண்ணில் ஏன் பிறந்தேன், கச்சிஏகம்பனே."


பொழிப்புரை : திருக்கச்சி ஏகம்பத்தில் எழுந்தருளி இருக்கும் இறைவனே, நான் கொடியவன், சன்மார்க்கத்தில் ஒழுகாதவன், ஐம்புலன்களை வெல்லாதவன், ஞானநூல்களைப் படித்து நிற்காதவன், உண்மை அடியவர்களிடம் சேராதவன், மெய் பேசாதவன், உனது திருவடிக்கு அன்பு இல்லாதவன்.  இத்தகைய கொடியேன் இந்த உலகில் ஏன் பிறந்தேன்.


விளக்கம் : மக்களாகப் பிறவி தாங்கியவர்கள் கடைப் பிடித்து ஒழுக வேண்டிய நல்ல நெறிகளை உணர்ந்து,  அதைத் தாங்கும் அருள் நூல்களை ஓதி அறிந்து,  அறிந்தார்பால் மேல் விளக்கம் பெற்றுத் தெளிந்து, ஞானத்தை அடைந்து, ஞான நிட்டை கூடி, இறைவன் திருவடியை அடையவேண்டும்.  ஒழுக வேண்டிய நெறிகளை எதிர்மறை முகத்தால் அடிகள் தெளிவாக்கினார்.


அப்பர் பெருமான் பாடியருளிய திருத்தாண்டகப் பாடல் ஒன்றைக் காண்போம்....


குலம்பொல்லேன் குணம்பொல்லேன் குறியும் பொல்லேன்

குற்றமே பெரிதுஉடையேன் கோல மாய

நலம்பொல்லேன் நான்பொல்லேன் ஞானி யல்லேன்

நல்லாரோடுஇசைந்திலேன் நடுவே நின்ற

விலங்கு அல்லேன் விலங்கு அல்லாது ஒழிந்தேன் அல்லேன்

வெறுப்பனவும் மிகப்பெரிதும் பேச வல்லேன்

இலம்பொல்லேன் இரப்பதே ஈய மாட்டேன்

என்செய்வான் தோன்றினேன் ஏழையேனே.

இதன் பொருள் ---

சார்ந்த கூட்டத்தால் நான் தீயேன்; குணத்தாலும் தீயேன்; குறிக்கோளாலும் தீயேன். குற்றமாகிய செயலே பெரிது உடையேன்; நலம் பயத்தற்குரிய வேடத்தாலும் தீயேன். எல்லாவற்றாலும் நான் தீயேன். ஞானியல்லேன்; நல்லாரோடு கூடிப் பழகிற்றிலேன்; மறவுணர்வு, பாவ உணர்வு உடைய மக்கட்கும், அது இல்லாத பிற உயிர்கட்கும் இடைநிற்கின்ற ஒரு சார் விலங்கும் அல்லேன்; மன உணர்வு பெற்றும் அம் மன உணர்வால் பயன் கொள்ளாமையின் விலங்கு அல்லாது ஒழிந்தேனும் அல்லேன்; வெறுக்கத்தக்க பொய் குறளை கடுஞ்சொல் பயனில் சொல் என்பனவற்றையே மிகப் பெரிதும் பேசும் ஆற்றலினேன். நல்ல குடியில் பிறந்தேன் ஆயினும், என்செயலால் அதுவும் பொல்லேனாக இகழப்பட்டேன். பிறர்பால் இரப்பதனையே மேற்கொண்டு என்பால் இரப்பவர்க்கு யாதும் ஈய மாட்டேன். இந்நிலையில் அறிவற்ற நான் என் செய்வதற்காக மனிதனாகத் தோன்றினேன்.


வள்ளற்பெருமான் பாடியருளிய திருவருட்பாப் பாடல் ஒன்றையும் இங்கே சிந்திப்போம்.....


"குலத்திடையும் கொடியன், ஒரு குடித்தனத்தும் கொடியேன்,

    குறிகளிலும் கொடியன், அன்றிக் குணங்களிலும் கொடியேன்,

மலத்திடையே புழுத்தசிறு புழுக்களிலும் கடையேன்,

    வன்மனத்துப் பெரும்பாவி வஞ்சநெஞ்சப் புலையேன்,

நலத்திடைஓர் அணுஅளவும் நண்ணுகிலேன், பொல்லா

    நாய்க்குநகை தோன்றநின்றேன், பேய்க்கும்மிக இழிந்தேன்,

நிலத்திடைநான் ஏன்பிறந்தேன், நின்கருத்தை அறியேன்,

    நிர்க்குணனே, நடராஜ நிபுணமணி விளக்கே."


இதன் பொருள் ---

குலம் குடித்தனங்களிலும் குறி குணங்களிலும் நேர்மையில்லாதவனாகிய யான் மலத்திற் புழுக்கும் சிறு புழுக்களினும் கடையவன்; வன்மையுற்ற மனத்தையுடைய பெரும்பாவி; வஞ்சம் நிறைந்த நெஞ்சினையுடைய புலைத்தன்மை கொண்டவன்; நலமாகியவற்றைச் சிறிதும் நெருங்குதல் இல்லாதவன்; பொல்லாத நாயும் கண்டு நகைக்கத்தக்க கீழ்மையுற்றுள்ளேன்; பேயினும் இழிக்கத் தக்க யான் இந்நிலவுலகத்தில் பிறந்த காரணம் தெரியேன்; பிறப்பித்த நின் திருவுள்ளம் யாதென்று அறியேன்; நிர்க்குண நடராசப் பெருமானாகிய நிபுண மணியே எனக்கு உரைத்தருள்க.


திரு ஏகம்ப மாலை - 4

 


"நல்லார் இணக்கமும், நின் பூசை நேசமும், ஞானமுமே

அல்லாது, நிற்கும் நிலை உளதோ, அகமும் பொருளும்

இல்லாளும் சுற்றமும் மைந்தரும் வாழ்வும் எழில் உடம்பும்

எல்லாம் வெளிமயக்கே, இறைவா, கச்சிஏகம்பனே."

பொழிப்புரை : திருக்கச்சி ஏகம்பத்தில் எழுந்தருளி இருக்கும் இறைவனே, நல்லவர்களுடைய சேர்க்கையும்,  உனது பூசையில் விருப்பமும், ஞானமும் அல்லாமல், உறுதி நிலை வேறு உண்டோ.  வீடும், சொத்துக்களும், மனைவியும், உறவினரும், பிள்ளைகளும், உலக வாழ்க்கையும், அழகிய உடம்பும், இவை யாவும் வெளிமயக்கத் தோற்றமே ஆவன.

விளக்கம் :  நல்லார் என்றது, சாதுக்கள் கூட்டத்தை, அடியவர்கள் கூட்டத்தை. மக்கள் அடையவேண்டிய உறுதிப் பொருள் ஞானம்.  ஞானமானது சிவபூசையால் விளங்குவது. சிவபூசை என்பது சிவபெருமானை இடையறாது தியானிப்பது. அதுதான் மேலான ஞானபூசை. அப் பூசைக்கு இன்றியமையாதது அன்பு. அந்த அன்பு நல்லார் இணக்கத்தால் நிகழும். இந்த முறைமை பற்றியே, "நல்லார் இணக்கமும், நின் பூசை நேசமும், ஞானமுமே அல்லாது நிற்கும் நிலை உளதோ" என்றார் அடிகள்.

அஞ்ஞானத்தால் நிறைந்திருக்கும் மக்கள் ஞானம் பெற முதலில் தேடவேண்டுவது, நல்லார் நட்பு. அடியார் அன்பு. இந்த உண்மை பற்றியே, "செயற்கு அரிய யாவுள நட்பின்" என்றார் திருவள்ளுவ நாயனாரும்.  திருவள்ளுவ நாயனார் நட்பைப் பற்றி அருளிச் செய்த அதிகாரங்களை நோக்க இதன் உண்மை விளங்கும்.  நட்பு, நட்பு ஆராய்தல், தீ நட்பு, கூடா நட்பு என்னும் அதிகாரங்களில் பெருமானார் தெரிவித்துள்ள செய்திகளை உன்னி ஆராய்ந்தால் நட்பு என்பது என்ன என்று தெளிவாகும். "வணங்கத் தலை வைத்து, வார்கழல் வாய் வாழ்த்த வைத்து, இணங்கத் தன் சீரடியார் கூட்டமும் வைத்து" என்று பாடினார் மணிவாசகப் பெருமான்.

இக் காலத்தில் நட்பு என்பது தன் உண்மைப் பொருளை இழந்து, எப்படி எப்படியோ கொள்ளப்படுவது கருத்தில் கொள்ளற்கு உரியது.  நட்பு என்பதற்கு இப்பொழுது தரப்படும் வியாக்கியானங்களைக் காணும்போது, கற்றறிந்தவர்களுக்கு வருத்தமே மேலிடும். நன்மை அல்லாதனவற்றை நன்மை எனக் கருதுவது அறியாமை பற்றியே. அறியாமை இருப்பதாலேயே, அறியாமையே யாரும் ஏற்றுக் கொள்வதில்லை.


கிரகச் சேர்க்கை

 

நாடி வந்த கோள் என் செய்யும்?

----

10.02.2021 அன்று ஆறு கிரகங்களும் மகர இராசியில் கூடி இருக்கும் நாள் என்று "கணித மங்கல நூலவர்" கூறினர். இதை வைத்து, சிலர் இப்படி ஆகும், அப்படி ஆகும் என்று அச்சுற்றுத்தவும் செய்தனர். கணிதநூல் என்பது சோதிடநூலைக் குறிக்கும். மங்கல நிகழ்வுகளுக்கு, கிரக நிலைகளைக் கணக்கிட்டுப் பார்த்து அறிவது என்பதால், "கணித மங்கல நூல்" என்று சோதிட சாத்திரம் கூறப்படுகின்றது. வேதங்களின் அங்கங்களாக உள்ளவை ஆறு அங்கங்கள் எனப்படும். அவற்றில் சோதிடமும் ஒன்று. வேதங்களில் விதிக்கப்பட்ட நற்செயல்களை அனுட்டிப்பதற்கு உரிய நாளைக் கணிப்பதற்கு மட்டுமே அது உரியது. ஆனால், நம்மில் சிலர் எதற்கெடுத்தாலும், சோதிடத்தை ஆராய முற்படுகின்றனர்.

ஆன்மாக்கள் அவை அவை செய்கின்ற நல்வினை, தீவினையின் பயன்களை அனுபவித்துக் கழிக்கவே வேண்டும். அந்தப் பயன்களை ஊட்டுவது இறைவன். இறைவன் ஆணைப்படி நின்று, வினைப் பயன்களை ஊட்டும் தொழிலைப் புரிபவர்கள், ஞாயிறு முதலான ஏழு கோள்களும், நிழல் கிரகம் அல்லது சாயா கிரகம் என்று சொல்லப்படும் இராகு கேது ஆகிய இரு கோள்களும்.

இன்பம் வந்து சேர்ந்தால் எதைப் பற்றியும் கவலைப் படுவது இல்லை. இது இறைவன் அருளால் வந்தது என்று எண்ணிப் போற்றுவதும் இல்லை. "எல்லாம் என்னால் தான்" என்கின்றோம். துன்பம் வந்தால், அது இன்னாரால் வந்தது, இதனால் வந்தது என்று புலம்பி, அதைத் தீர்த்துக் கொள்ள வழி தேடி, கணிதநூல் வல்லார் என்று சொல்லிக் கொள்வோரிடம் செல்கிறோம். அவர்கள் ஒவ்வொருவரும் பலப்பல விதமாக அவரவது அறிவு நிலைக்கும், அனுபவத்துக்கும் ஏற்ப பலன்களைச் சொல்லி, பரிகாரங்களையும் பரிந்துரைப்பார்கள். உண்மையில் பரிகாரம் என்பது சோதிட நூல்களில் சொல்லப்படவில்லை. மருந்துக் கடைக்குச் சென்று நாமே நமக்கு ஏற்பட்டுள்ள நோயைச் சொல்லி, மருந்து வாங்கிப் பயன்படுத்துதல் என்பது எத்தனை தவறானதோ, அதேபோல நாமாக பரிகாரத்தைச் செய்தல் என்பதும் தவறானதே. பரிகாரம் வேறு, ஜோதிடம் வேறு. ஜோதிட நூல்கள் எதுவும் பரிகாரத்தைப் பற்றிச் சொல்லாது. ஜோதிடர் என்பவர் உங்களுக்கு உண்டாகியுள்ள தோஷத்தைப் பற்றித் தெளிவாக எடுத்துரைக்க இயலும். ஆனால் அதே ஜோதிடர் பரிகாரத்தைச் சொல்வது என்பது சரியாகாது. பரிகாரத்தைச் சொல்ல வேண்டும் என்றால் அந்த ஜோதிடர், அது குறித்த அறிவினைப் பெற்றவராக இருக்க வேண்டும். பரிகாரத்தைப் பற்றி, ஜோதிட நூல்கள் அல்லாத "சாந்தி குசுமாகரம்", "சாந்தி ரத்னாகரம்" முதலான நூல்கள் தெளிவாகச் சொல்கின்றன. இந்த நூல்களையும் தர்ம சாத்திரத்தையும் கற்றறிந்த விற்பன்னர்கள் மட்டுமே சாந்தி பரிகாரங்களைச் சொல்லவும் செய்யவும் இயலும். மேலும் சாந்தி என்பது சாந்தப்படுத்துவதே ஆகும். அது தீர்வு ஆகாது.

தீர்வு என்பது, வினைகளின் பயனை யார் நமக்கு விதித்தாரோ, அவரிடம்தான் உள்ளது. வினைப்பயனை ஊட்டி, பிறவியைத் தந்தது இறைவன். அந்த இறைவனால் மட்டுமே நமது வினைகளை வேர் அறுக்கமுடியும் என்பதை அறியவேண்டும். சாந்தி எனப்படுவது, முளையைக் கிள்ளுவது போல. வேரை அறுத்தால்தான் முளைப்பது இல்லாமல் போகும் என்பதை அறிதல் வேண்டும்.

வேதாரண்யம் என்று தற்போது வழங்கப்படும் "திருமறைக்காடு" என்னும் திருத்தலத்திற்கு எழுந்தருளி இருந்தனர் திருஞானசம்பந்தரும், அப்பரும். பாண்டிய நாட்டில் இருந்து அழைப்பு வந்தது திருஞானசம்பந்தருக்கு. அவர் பாண்டிய நாட்டிற்கு எழுந்தருள உடன்பட்டபோது, அங்கே மிகுந்து இருந்த சமணர்களால் ஏற்கெனவே மிகவும் துன்புற்ற அப்பர் பெருமான், சிறுபிள்ளையாகிய திருஞானசம்பந்தர் போவது தகாது என்று உள்ளத்தில் கொண்ட அன்பு காரணமாக, அவரைத் தடுக்கவேண்டும் என்று கருதி, "பிள்ளாய்! அந்த அமண்கையர் வஞ்சனைக்கு ஓர் அவதி இல்லை, உறுகோள் தானும் தீய, எழுந்தருள உடன்படுவது ஒண்ணாது" என்று தடுக்கின்றார். "பரசுவது நம்பெருமான் கழல்கள் என்றால் பழுது அணையாது" என்று சொல்லி, "வேயுறு தோளி பங்கன்" எனத் தொடங்கும் திருப்பதிகத்தை அருளிச் செய்கின்றார். இத் திருப்பதிகம், "கோள் அறு திருப்பதிகம்" எனப்படுகின்றது.

இறைவன், தன்னை வழிபடுகின்ற அடியவர் உள்ளத்தில் எழுந்தருளி இருக்க, நாளும் கோளும் அவரை நலியாது என்ற உண்மையை இத் திருப்பதிகத்தின் மூலமாக அருளிச் செய்தார். இத் திருப்பதிகத்தின் உண்மையை அறியாமல், நம்மில் சிலர், நவக்கிரகங்களின் முன் இருந்தோ, நவக்கிரகங்களை வலம் செய்து கொண்டோ, இத் திருப்பதிகத்தைப் பாராயணம் செய்கின்றார்கள், படிக்கின்றார்கள். இது அறியாமை. இறைவன் சந்நிதியில் ஓதி வழிபடவேண்டிய திருப்பதிகம் இது. "உறு கோளும் நாளும் அடியாரை வந்து நலியாத வண்ணம் உரை செய் ஆன சொல் மாலை"யை நாளும் ஓதி வழிபடுவோர்க்கு இன்பமே வந்து சேரும். துன்பம் வந்தாலும் அதன் தாக்கம் தோன்றாது.

இந்த உண்மையை, பின்வரும் பாடல்களிலும் திருஞானசம்பந்தப் பெருமான் காட்டி உள்ளார் என்பது அறிந்துகொள்ள வேண்டியது.

"வேள்படுத்திடு கண்ணினன், மேரு வில்லாகவே

வாள் அரக்கர் புரம் எரித்தான், மங்கலக்குடி

ஆளும் ஆதிப்பிரான் அடிகள் அடைந்து ஏத்தவே,

கோளும் நாள்அவை போய்அறும் குற்றம் இல்லார்களே."

இதன் பொருள் ---

மன்மதனை அழித்த நெற்றி விழியினை உடையவனும், மேருமலையை வில்லாகக் கொண்டு வாட்படை உடைய அரக்கர்களின் முப்புரங்களை எரித்தவனும், திருமங்கலக்குடி என்னும் திருத்தலத்தில் ஆட்சி கொண்டருளும் முதற்பரம்பொருள் ஆகிய சிவபிரான் திருவடிகளை அடைந்து, அவனை வழிபடுவோர்கள்,  நாள், கோள் ஆகியவற்றால் வரும் தீமைகளை அகல்வர். குற்றங்கள் இலராவர்.


"காளமேகந் நிறக் காலனோடு, அந்தகன் கருடனும்

நீளமாய் நின்று எய்த காமனும் பட்டன நினைவுறின்,

நாளும் நாதன் அமர்கின்ற நாகேச்சரம் நண்ணுவார்,

கோளுநாளும் தீயவேனும் நன்குஆம் குறிக்கொள்மினே."

இதன் பொருள் ---

கரிய நிறமுடைய காலன், அந்தகன், கருடன், தூரத்தே நின்று மலர்க் கணை எய்த காமன் ஆகியோரை இறைவன் அழித்ததை நினைந்து, நாள்தோறும் சிவபிரான் உறையும் திருநாகேச்சுரத்தை நண்ணி வழிபடுபவர்க்குக் கோள்களும் நாள்களும் தீய ஆக இருந்தாலும் நல்லன ஆகும். அதனை மனத்தில் கொள்ளுங்கள்.


இக் கருத்தையே அருணகிரிநாதப் பெருமானும் வலியுறுத்தி, பின்வரும் பாடல்களில் அறிவுறுத்தியுள்ளார்.

"நாள்என் செயும், வினைதான் என்செயும், எனை நாடிவந்த

கோள்என்செயும், கொடும் கூற்று என்செயும், குமரேசர் இரு

தாளும், சிலம்பும், சதங்கையும், தண்டையும், சண்முகமும்.,

தோளும், கடம்பும், எனக்கு முன்னே வந்து தோன்றிடினே."

இந்தக் கந்தர் அலங்காரப் பாடலின் பொருள்----

நாட்கள் அடியேனை என்ன செய்யும்? வினைதான் என்ன செய்யும்? அடியேனைத் தேடிவந்த கோள் தான் என்ன செய்யும்? கொடிய இயமனால்தான் என்ன செய்யமுடியும்? குமரக்கடவுளின் இரண்டு திருவடிகளும் சிலம்புகளும் சதங்கையும், தண்டைகளும் ஆறு திருமுகங்களும் பன்னிருதோள்களும் கடப்ப மலர் மாலையும் அடியேனுக்கு முன்வந்து தோன்றிடுமே.


"சேயவன் புந்தி வனவாச மாதுடன் சேர்ந்தசெந்தில்

சேயவன் புந்தி கனிசா சராந்தக சேந்தவென்னில்

சேயவன் புந்தி பனிப்பானு வெள்ளிபொன் செங்கதிரோன்

சேயவன் புந்தி தடுமாற வேதரும் சேதம் இன்றே."

இந்தக் கந்தர் அந்தாதிப் பாடலின் பதப் பொருள் ---

சேய - அழகினை உடைய, அன்பு - இச்சையோடு, உந்தி - கான்யாறு ஓடுகின்ற, வன - காட்டில், வாச - வாசம் செய்த, மாதுடன் - வள்ளிநாயகியுடன், சேர்ந்த - கூடியிருந்த, செந்தில் - திருச்செந்தில் பதியில் வாழாநின்ற, சேய - குமாரக் கடவுளே, வன்பு - வலிமையில், உந்து - உயர்ந்த, இகல் - மாறுபாட்டை உடைய, நிசாசர அந்தக - அசுரர் குலத்திற்கு இயமனே, சேந்த - கந்தனே, என்னில் - என்று துதிப்பீராகில், சேயவன் - செவ்வாய், புந்தி - புதன், பனிப்பானு - சந்திரன், வெள்ளி - சுக்கிரன், பொன் - வியாழம், செங்கதிரோன் - சூரியன், சேயவன் - அவ் ஆதித்தன் மைந்தன் சனி ஆகிய நவக்கிரகங்களின் வக்கிரோதயத்தால், புந்தி தடுமாறவே தரும் - புத்தியைச் சலனப் படுத்துகின்ற, சேதம் இன்று - கேடு இல்லை.

அழகுடனும், மிகுந்த காதலுடனும், கானாறு பாய்கின்ற, வள்ளிக் காட்டில் வாழ்ந்த, வள்ளியுடன், காந்தர்வ மணம் புரிந்த, செந்தில் குமரக்கடவுளே! வலிமையில் மேம்பட்ட, பகைமை உடைய, இராக்கதர்களை அழித்தவனே! செந்நிறமான தெய்வமே! என்று துதித்தால், செவ்வாய், புதன், சந்திரன், சுக்கிரன், வியாழன், சூரியன், அவனுடைய பிள்ளையாகிய சனீசுவரன், (இவர்களின் வக்கிரத்தால் ஏற்படும்) நமது சித்தத்தை மாறுபடச் செய்யும், தீமை இல்லாது போகும்.

சென்னையின் ஒரு பகுதியாகிய திருவான்மியூரில் அடக்கம் பெற்று அருள் பாலிக்கும் ஞானபானுவாகிய பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் பாடி அருளிய "பஞ்சாமிர்த வண்ணம்" என்னும் திருப்பாடலிலும், இக் கருத்து விலுயுறுத்தப்பட்டு உள்ளது.


"மாதமும் தின வாரமும் திதி

யோகமும் பல நாள்களும் படர்

மாதிரம் திரி கோள்களும் கழல்

பேணும் அன்பர்கள் பால் நலம் தர

வற்சலம் அதுசெயும் அருட்குணா!

சிறந்த விற்பனர் அகக்கணா!

மற்புய அசுரரை ஒழித்தவா!

அனந்த சித்துரு எடுத்தவா!.......சிவகுரு எனும் நாதா."

இதன் பதப் பொருள் ---

மாதமும் தினம் வாரமும் திதி யோகமும் - மாதம், நாள், வாரம், திதி மற்றும் யோகம் என்று சொல்லப்படுபவைகளும், பல நாள்களும் படர் மாதிரம் திரி கோள்களும் - பல நட்சத்திரங்களும், வானத்தில் உலவுகின்ற கிரகங்களும், கழல் பேணும் அன்பர்கள் பால் நலம் தர - உன் திருவடியை வழிபடுகின்ற அன்பர்கட்கு நன்மையைச் செய்யுமாறு, வற்சலம் அது செயும் அருட்குணா - பெருங்கருணை புரியும் அருட்குணத்தை உடையவனே! சிறந்த விற்பனர் அகக் கணா - கற்றறிந்த பெரியோரின் உள்ளத்தில் உலவுகின்றவனே! மற்புய அசுரரை ஒழித்தவா - வலிமை கொண்ட தோள்களை உடைய அரக்கரை அழித்தவனே! அனந்த சித்துரு எடுத்தவா - அளவில்லா ஞானத் திருமேனிகளை எடுத்தவனே! சிவகுரு எனும் நாதா - சிகுருநாதன் என்று போற்றப்படுகின்ற தலைவரே!

அவரவர் படுகின்ற துன்பங்களுக்குக் காரணம் அவரவர் செய்து கொண்ட வினைகளே ஆகும். அதை யாரும் எண்ணிப் பார்ப்பதில்லை. அடுத்தடுத்துத் துன்பம் வருகிறபோது அவர்கள் இன்னார்தான் காரணம் என்று எண்ணி அவரைப் பழிக்கின்றார்கள். பழி தீர்க்கும் முகமாக மேலும் பாவத்தைத் தேடிக் கொள்கிறார்கள். இவர்களே நல்வினைப் பயனால் தமக்கு இன்பம் வரும்போது அவற்றை நல்லன என்று இயைந்து அனுபவிக்கிறார்கள். அப்போது அவர்கள் இறைவனை நினைப்பதில்லை. இறைவனுக்கு நன்றி சொல்வதில்லை. ஆனால், தீவினைப் பயனால் துன்பம் வரும்போது மட்டும் அவர்கள் இறைவனை நினைக்கிறார்கள். துன்பத்தை நீக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். இது முறைமை அல்ல. நல்வினையும் தீவினையும் ஆகிய இரண்டும் அவர்கள் முன் செய்து கொண்டவை தாமே. அவற்றுள் ஒன்றை மட்டும் விரும்பி ஏற்பதும், மற்றொன்றுக்கு வருந்துவதும் பேதைமை.

மருத்துவ நூல்கள் உடல் நலம் பேணும் வழிகளைக் கூறுகின்றன. இன்ன காரணங்களால் இன்ன நோய்கள் வரலாம்; அக்காரணங்களைத் தவிர்த்தால் அந்நோய்கள் இன்றி இனிது வாழலாம் என்று அறிவுறுத்துகின்றன. ஆனால், பலர் அம் மருத்துவக் குறிப்புகளைப் பின்பற்றுவதில்லை. அவற்றுக்கு மாறான வழியில் நடக்கிறார்கள். அதனால் நோய்களை வரவழைத்துக் கொள்கிறார்கள். இளமை மிடுக்கில் அந்த நோய்கள் மடங்கியிருக்கும். அப்பொழுது அந்நோய்கள் பெரிதாகத் தோன்றுவதில்லை. உடம்பில் வலிமை குறைகிற முதுமையில் அந்நோய்கள் பல்கிப் பெருகி வந்து தாக்கி வருத்தும். அப்பொழுது அவர்கள் வேறு யாரையேனும் நொந்து கொள்ள முடியுமா? நோய்க்கு யார் காரணம்? அவர்கள் தானே காரணம். மருத்துவ நூல்கள் சொன்ன நல்வழியில் நில்லாது மாறி நடந்ததனால் தமக்குத் தாமே நோயைத் தேடிக் கொண்டார்கள். அது அவர்களுடைய குற்றம்தானே.

அதுபோல, மெய்ந்நூல்கள் வினையிலிருந்து விடுபடும் வழிகளைக் கூறுகின்றன. யான் எனது என்னும் பற்றுக்களே வினைக்குக் காரணம். அப்பற்றுக்களை நீக்கினால் வினைகள் இல்லையாகும் என்று கூறுகின்றன. அப்பற்றுக்களை இறைவனிடத்து வைக்கும் பற்றினாலேயே நீக்க முடியும் என்று மெய்ந்நூல்கள் கூறுகின்றன. இறையன்பு உடையவர்க்கு அது வளர வளர, யான் எனது என்னும் பற்று மெல்ல மெல்ல நீங்கும். அவர்கள் அப்பற்றுக்களை முற்றிலும் விடுத்து எல்லாம் அவன் செயல் என இறைவன் வழியில் நிற்பர். அவர்களே பற்றின்றி இருப்பதனால் இறைவனைப் போல அவர்களும் வினையின் நீங்கியவரே ஆவர். இறைவனை மனம் மொழி மெய் என்னும் மூன்றினாலும் பற்றினால் தீவினை பற்றாது ஒழியும் என்பதை,

"முற்றா வெண்திங்கள் முதல்வன் பாதமே

பற்றா நின்றாரைப் பற்றா பாவமே"

என்று தேவாரத் திருமொழிகள் வலியுறுத்துகின்றன. இவ்வாறு உண்மை நூல்கள் வினை நீங்கும் வழியை உரைக்கின்றன. ஆயினும் மக்கள் அவ்வழியில் நடப்பதில்லை. உலகப் பற்றாகிய சேற்றில் அழுந்திக் கிடக்கின்றனர். பற்றுக்களை விடாதபோது வினைகள் வந்து வருத்தத் தான் செய்யும். அவ்வருத்தம் அவர்கள் தேடிக் கொண்டது தானே. அதற்கு இறைவனை நோவதால் பலனில்லை.  குளிர் காலத்தில் வாடையும் பனியும் உடலை வாட்டுகிறது. அருகிலேயே குளிர் காய்வதற்கேற்ற தீ கொழுந்து விட்டு எரிகிறது. அத்தீயை அணுகி அமர்ந்தால் பனியும் நடுக்கமும் பறந்தோடும். இன்பக் களிப்பை எய்தலாம். அவ்வாறு செய்யாமல் தீயை விட்டு விலகி நின்றால் வாடையும் பனியும் வருத்தத்தான் செய்யும். அவ்வருத்தத்திற்கு தீ காரணம் அல்ல. அத்தீயை விட்டு விலகி நின்றது காரணம். தீயின் மேல் யாரும் குற்றம் சொல்லார். அது தன்னை யார் அணுகினாலும் அவரது குளிர் நடுக்கத்தைப் போக்கி அவர்க்கு நலம் செய்வது. அதனை அணுகி நில்லாமல் விலகி நின்றதன் செயலேதான் படும் துன்பத்திற்குக் காரணமாகிறது.

வாடையும் பனியும் போல் உள்ளவை உலகப் பற்றுக்கள். குளிர் காயும் நெருப்புப் போல் இருப்பவன் இறைவன். பற்றுக்களாகிய பனியிலும் குளிரிலும் அகப்பட்டுத் துன்புறுகின்றன உயிர்கள். அவை படும் துன்பத்திற்கு இறைவன் மேல் குற்றம் சொல்வது பேதைமை. குளிர் காயும் நெருப்பைப் போலத் தன்னை யார் அணுகினாலும் அவரது பிறவித் துன்பத்தைப் போக்கிப் பேரின்பத்தைத் தர அவன் காத்திருக்கிறான். அவனை அணுகி நில்லாமல் உயிர்கள் விலகி நிற்பதே அவைபடும் துன்பத்திற்குக் காரணம் ஆகும்.

இறைவன் உலகப் பற்றை நீக்கித் தன்னையே புகலாக அடைந்த அன்பர்களை ஏற்று கொண்டு அவர்க்கு வரும் வினைத் துன்பத்தைப் போக்கிப் பேரின்பத்தை வழங்குவான். பற்று நீங்காத ஏனையோரை வினை வழியே செலுத்திப் பிறவித் துன்பத்தில் படுமாறு செய்வான். அவரை வினை வழியே செலுத்துவதும் அவரைப் பக்குவப்படுத்தி ஆட்கொள்ளும் பொருட்டே ஆகும். இவ்வாறு தன்னைச் சார்ந்தார், சாராதார் ஆகிய இருவரிடத்தும் இறைவன் செய்யும் செயல்கள் வெவ்வேறாய் அமைந்தாலும் அவை யாவும் கருணைச் செயல்கள் என்றே கூறப்பெறும். அன்பரிடத்துச் செய்வது அறக்கருணை எனப்படும். அல்லாதாரிடத்துச் செய்வது மறக்கருணை எனப்படும். அவன் எல்லாவுயிர்களிடத்திலும் உடனாக இருந்து அவ்வவ்வுயிர்களின் நிலைகளுக்கு ஏற்ப அவற்றை நடத்துகிறான். அவனது செயல் யாவும் அருட்செயலே. இறைவன் அருட்செயல் வடமொழியில் "அனுக்கிரகம்" எனப்படும். இது இறைவன் இயற்றும் பஞ்சகிருத்தியங்கள் அல்லது ஐந்தொழில்களில் ஒன்று. அனுக்கிரகம் செய்யும் தகுதி நவகோள்களுக்கு இல்லை என்பதை அறிதல் வேண்டும்.

ஏனவே, அவரவர் கொண்டுள்ள இட்ட தெய்வங்களை முழுமனதுடன் வழிபட்டு வந்தால், தீவினைகளின் பயன் வந்து நம்மைத் தாக்காது. தாக்கினாலும், தாங்கிக் கொள்ளுகின்ற வல்லமை இறையருளால் உண்டாகும். பின்னர் எல்லாம் நன்மையாகவே முடியும் என்பதை அறிந்து நலம் பெறுதல் வேண்டும்.


திரு ஏகம்ப மாலை - 3




"நல்நாரில் பூட்டிய சூத்திரப் பாவை, நல்நார் தப்பினால்

தன்னாலும் ஆடிச் சலித்திடுமோ, அந்தத் தன்மையைப் போல்

உன்னால் யானும் திரிவது அல்லால், மற்று, உனைப் பிரிந்தால்

என்னால் ஆவது உண்டோ, இறைவா கச்சிஏகம்பனே."

பதவுரை --- இறைவா, கச்சி எகம்பனே - திருக்கச்சி ஏகம்பத்தில் எழுந்தருளி இருக்கும் இறைவனே, நல் நாரில் பூட்டிய சூத்திரப் பாவை - நல்ல நாரினால் கட்டப்பெற்ற சூத்திரப் பதுமையானது, நல் நார் தப்பினால் - அந்த நார் அறுந்தால், தன்னாலும் ஆடிச் சலித்திடுமோ  -தானே இயங்கி ஓய்ந்து போகுமோ? இயங்காது. அந்தத் தன்மையைப் போல் - அதுபோல, உன்னால் யானும் திரிவது அல்லால் - தேவரீர் திருவருள் துணையால் அடியேன் நடமாடுவது அல்லால், மற்று உனைப் பிரிந்தால் - ஆட்டுவிக்கும்  தேவரீரைப் பிரிந்து நின்றால், என்னால் ஆவது உண்டோ - ஏளியேனால் இங்கே ஒரு செயல் நிகழ்வது உண்டோ. (நிகழாது)

விளக்கம் : ஒரு பொம்மையைக் கயிற்றினால் கட்டி, அதை ஆட்டுவிப்பர். ஆட்டுவிப்பவர் ஆட்டும் வரை பொம்மை ஆடும்.  பொம்மலாட்டம் என்பது இதுவே. ஆட்டுவிக்கின்ற கயிறு அறுந்து போனால், பொம்மை தானாக ஆடாது. அதுபோல, இருவினை என்னும் கயிற்றினால், இந்த உலக உயிர்களை இறைவன் ஆட்டுவிக்கின்றான்.   இல்லையாயின்,  உயிரின் இயக்கம் இருக்காது. உயிர் தானாக இயங்க முடியாது. ஆகவே, அவனருளையே எப்போதும் நாடியிருக்கவேண்டும்.

தாயுமான சுவாமிகள் பின் வருமாறு பாடினார்.....

"சாட்டையில் பம்பர சாலம் போல்எலாம்

ஆட்டுவான் இறை, என அறிந்து, நெஞ்சமே,

தேட்டம்ஒன்று அறஅருட் செயலில் நிற்றியேல்

வீட்டுஅறம் துறவுஅறம் இரண்டும் மேன்மையே."

இதன் பொருள் ---

(எனக்கு ஒப்பில்லாத உறுதுணையாக வேண்டிய என்) மனமே! கயிற்றினால் சுழற்றப்பட்டுக் கிறுகிறு எனச் சுற்றி நிற்கும் பம்பரக் கூட்டங்கள் போன்று உயிர்களை இயக்குபவன் இறைவனே என்றும் உனக்கு என்று ஒரு செயல் திருவருளால் வகுக்கப்படவில்லை என்றும் உணர்ந்து, உனக்கென எவ்வகைத் தேட்டம் இமில்லாமல் திருவருட் செயலின்வழி நிற்பாயானால் இல்லற வாழ்க்கையும், தனை நிகர் துறவற வாழ்க்கையும் திருவடிப் பேறு எய்துதற்கு ஒத்த மேம்பாடு உடையனவே ஆகும்.

பின்வரும் சிவஞானசித்தியார் சுபக்கப் பாடல் இதனை மேலும் தெளிவாக்கும்....

"நாடுகளில் புக்கு உழன்றும், காடுகளில் சரித்தும்,

நாகமுழை புக்குஇருந்தும், தாகமுதல் தவிர்ந்தும்,

நீடுபல காலங்கள் நித்தராய் இருந்தும்,

நின்மல ஞானத்தை இல்லார் நிகழ்ந்திடுவர் பிறப்பில்,

ஏடுதரு மலர்க்குழலார் முலைத்தலைக்கே இடைக்கே

எறிவிழியின் படுகடைக்கே கிடந்தும், இறைஞானம்

கூடும் அவர் கூட அரிய வீடும் கூடிக்

குஞ்சித்த சேவடியும் கும்பிட்டே இருப்பர்."


இதை அப்பர் பெருமான் பின்வரும் திருத்தாண்டகப் பாடலால் மேலும் தெளிவாக்கினார்....

"ஆட்டுவித்தால் ஆர்ஒருவர் ஆடா தாரே

அடக்குவித்தால் ஆர்ஒருவர் அடங்கா தாரே

ஓட்டுவித்தால் ஆர்ஒருவர் ஓடா தாரே

உருகு வித்தால் ஆர்ஒருவர் உருகா தாரே

பாட்டுவித்தால் ஆர்ஒருவர் பாடா தாரே

பணிவித்தால் ஆர்ஒருவர் பணியா தாரே

காட்டுவித்தால் ஆர்ஒருவர் காணா தாரே

காண்பார்ஆர் கண்ணுதலாய் காட்டாக் காலே."

விளக்கம் : கண்ணுதல் பரம்பொருளே! உயிர்களை அவற்றோடு இரண்டறக் கலந்துள்ள ஆணவம் காரணமாக உண்டாகும் யான், எனது என்னும் அகப்பற்று, புறப்பற்று தீருவதற்காக, அவற்றைப் பல்வேறு உடம்பாகிய பாவையில் படுத்து,  திருவருள் துணைக் கொண்டு இருவினையாகிய கயிற்றினால் கீழ், நடு, மேல் என்னும் மூவுலகங்களிலும், வினைகளை ஈட்டியும் அனுபவித்தும் வருதலாகிய கூத்தாட்டை நீ ஆட்டுவிப்பாயானால், ஆடாதவர் யார்?


"வானாகி, மண்ணாகி, வளியாகி, ஒளியாகி

உனாகி, உயிராகி, உண்மையுமாய், இன்மையுமாய்,

கோனாகி, யான் எனது என்று அவரவரைக் கூத்தாட்டு

வான் ஆகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே"

என்றார் மணிவாசகப் பெருமான்.

உயிர்களுக்கு களைப்புத் தோன்றாதவாறு, இளைப்பாறும்படி நீ அடங்கச் செய்வாயானால்,  அடங்காதவர் யார்? ஆட்டுவிக்கின்ற உன்னை உணராதபடி, உயிர்கள் உலகப் பொருள்களின் போகத்திலேயே திளைத்திருக்கும்படி, திரோபவம் என்னும் மறைப்பத் தொழிலை நீ செய்யவில்லை என்றால், நீ ஓட்டுவிப்பாயானால் , உலக மாயையிலே உழலச் செய்வாயானால் ,  ஓடாதவர் யார்?

அப்படி உலக இன்பங்களிலேயே ஓடி ஓடி உழன்று, பயன் ஒன்றும் காணாது, உலக இன்ப துன்பங்களிலே உவர்ப்பினை அடைந்து, தன்னை உணருமாறு செய்து, பின் உன்னை உணர்ந்து, உனது பேரருளை எண்ணி, எண்ணி, மனம் உருகி வழிபாடு செய்து, உனதருளைப் பெறுமாறு, உயிர்கட்கு உள்ளிருந்து உணர்த்தி, உருகச் செய்வாய் என்றால், உருகாதவர் யார்?

மன உருக்கம் தோன்றிய வழி, உநது அருட்புகழை, பொருள்சேர் புகழை, அருட்பாடல்களைக் கொண்டு பாடுவிப்பாயானால், பாடாதவர் யார்?

அன்புமிக்கு மெய் உருகி, அகம் குழைந்து பாடும் அடியவர்களின் தன்முனைப்பு முற்றிலும் நீங்கி,  உன்னடியையே பணிந்து உருகும்படி நீ செய்வாயானால், பணியாதவர் யார்?

உயிர்கள் தன்முனைப்பால் உன்னைக் காணமுடியாத போது, தன்முனைப்பையும் விட்டு, உன் அருளிலேயே திளைத்திருக்கும்படி செய்து, அறிவும், அறியாமையும் கடந்த அறிவு உனது திருமேனி என்று ஞானத்தால் உணர்ந்து, ஞானத்தால் தொழுமாறு, உனது சொரூப நிலையை நீ காட்டுவாயானால்,  காணாதவர் யார்?

நீ காட்டுவியாத பொழுது, உயிர்கள் தாமே தமது சிற்றறிவின் துணைக் கொண்டு உன்னைக் காணக் கூடிய வல்லமை அற்றவை.  உயிர்களின் தன்மைக்கு இரங்கி, நீ காட்டினால் ஒழிய அவை உன்னைக் காணமுடியாது.  நீயாக வந்து காட்டினால், காணாதவர் யார்?

        இதையே, நேர்மறையாக ஒரு பாடலில் காட்டினார் வள்ளற்பெருமான்...

"பாட்டுவித்தால் பாடுகின்றேன், பணிவித்தால்

பணிகின்றேன், பதியே, நின்னைக்

கூட்டுவித்தால் கூடுகின்றேன், குழைவித்தால்

     குழைகின்றேன், குறித்த ஊணை

ஊட்டுவித்தால் உண்கின்றேன், உறக்குவித்தால்

     உறங்குகின்றேன், உறங்காது என்றும்

ஆட்டுவித்தால் ஆடுகின்றேன், அந்தோ, இச்

     சிறியேனால் ஆவது என்னே."

     சிவபரம்பொருளே, நினது திருவருள் என்னைப் பாடச் செய்தலால் பாடுகின்றேன்; பணியச் செய்தலால் பணிகின்றேன்; நின் திருவடி நினைவில் சேர்த்தலால் யான் அதனைக் கூடுகின்றேன்; மனம் உருகச் செய்தலால் உருகுகின்றேன்; குறித்த உணவை உண்பித்தால் உண்கின்றேன்; உறங்கச் செய்தலால் உறங்குகின்றேன்; உறங்காமல் உலக வாழ்வில் ஆடச் செய்தலால் ஆடுகின்றேன்; ஐயோ, சிறியவனாகிய என்னால் தனிநிலையில் ஆவக் கூடியது ஒன்றுமில்லை.


வரம் வேண்டுவதிலும் ஒரு தந்திரம்

 


வரம் வேண்டுவதிலும் ஒரு தந்திரம்

-----

தென்தமிழகத்தில், தாமிரவருணி நதியின் வடகரையில் திருவைகுண்டம் என்று வழங்கும் திருப்பதியில் பரம்பரையாகத் தமிழ்ப்புலமையும் முருகக் கடவுளது பக்தியும் வாய்ந்த சைவவேளாள குலத்தில் சண்முகசிகாமணிக் கவிராயர் என்ற ஒருவர் வாழ்ந்திருந்தார். அவர் தம் மனைவியார் சிவகாமசுந்தரியம்மை. அவ்விருவருக்கும் ஓர் ஆண் குழந்தை உதித்தது. அதற்குக் "குமரகுருபரன்" என்னும் பெயர் சூட்டி அவர்கள் வளர்த்து வந்தனர்.

குமரகுருபரர் ஐந்தாண்டு வரையில் பேச்சின்றி ஊமை போல இருந்து வந்தது கண்டு நடுங்கிய பெற்றோர்கள், அவரைத் திருச்செந்தூருக்கு எடுத்துச் சென்று செந்திலாண்டவர் சந்நிதியிலே வளர்த்திவிட்டுத் தாமும் பாடு கிடந்தனர். முருகவேள் திருவருளால் குமரகுருபரர் பேசும் ஆற்றல் பெற்றுக் கல்வியிலும் சிறப்புப் பெற்றார். செயந்திநாதர் திருவருளால் வாக்குப்பெற்ற இவர். அப்பெருமான் மீது "கந்தர் கலிவெண்பா" என்ற பிரபந்தத்தைப் பாடினார். 

குமரகுருபரர் தமிழ் இலக்கண இலக்கியங்களையும் ஞான சாத்திரங்களையும் திருவருளால் விரைவில் கற்றுத் தேர்ந்தார். மலருக்கு மணம் வாய்த்தது போன்று, பக்திஞான வைராக்கியங்கள் இவரிடத்தே உண்டாகி வளரத் தொடங்கின. பல திருத்தலங்களுக்கும் சென்று சிவதரிசனம் செய்யத் தொடங்கினர். மதுரையிலே சிலகாலம் தங்கியிருந்தார். மீனாட்சியம்மையின் மீது, ஒரு பிள்ளைத்தமிழ் பாடி, அக்காலத்தில் மதுரையில் அரசாண்டிருந்த திருமலை நாயக்கர் முன்னிலையில் அரங்கேற்றினார். அதனை அரங்கேற்றுகையில் மீனாட்சியம்மையே குழந்தை வடிவில் எழுந்தருளி வந்து கேட்டு மகிழ்ந்து, குமரகுருபரர் முத்தப் பருவத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கையில் தம் திருக்கழுத்திலிருந்த முத்துமாலை ஒன்றை எடுத்து, இவருக்கு அணிவித்துவிட்டு மறைந்தார். 

    சிவஞான உபதேசம் பெறவேண்டுமென்ற கருத்து இவருக்கு வரவர அதிகமாயிற்று. தமக்கு உரிய ஞானாசிரியரைத் தேடித் தேர்ந்து சரண்புக வேண்டும் என்று இவர் மனம் ஆவலுற்று நின்றது. அக்காலத்தில் திருக்கயிலாய பரம்பரைத் தருமபுர ஆதீனத்தில் நான்காம் பட்டத்தில் குருமூர்த்தியாக விளங்கிய மாசிலாமணி தேசிகர் சிவஞானச் செல்வராக இருப்பதை அறிந்து அவரிடம் சென்றார். அங்கே உண்டான சில குறிப்புக்களால் அப்பெரியாரே தமக்குரிய ஆசிரியர் என்பதை இவர் தேர்ந்தனர். தமக்கு துறவுநிலை அருள வேண்டுமென்று அத் தேசிகர்பால் குமரகுருபரர் வேண்டினர். அங்ஙனம் செய்வதற்குமுன் திருத்தல யாத்திரை செய்து வரும்படி பணிப்பது  என்னும் ஆதீன மரபின்படிக்கு, காசியாத்திரை செய்து வரும்படி கட்டளையிட்டருளினார். காசிக்குச் சென்று வருவதில் நெடுங்காலம் செல்லுமே என்று கவலை உற்ற குமரகுருபரரை, சிலகாலம் சிதம்பரவாசமேனும் செய்யும்படி பணித்தனர்.

    ஞானாசிரியர் கட்டளைப்படியே சிதம்பரத்துக்குச் செல்லுகையில், இடையே வைத்தீசுவரன் கோயிலில் தங்கித் தரிசனம் செய்துகொண்டு, அங்கே கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் முருகப் பெருமான் மீது, "முத்துக்குமாரசுவாமி பிள்ளைத் தமிழ்" பாடினார். பிறகு சிதம்பரம் சென்று நடராசப் பெருமானைத் தரிசனம் செய்துகொண்டு பலநாள் தங்கினர். ஆனந்தக் கூத்தன் அருள் பெற்று ஆனந்த பரவசர் ஆயினார். மும்மல மாசு நீங்கி, மாசிலாமணியாய் விளங்கினார். அஞ்ஞான சம்பந்தம் அற்று, மெய்ஞ்ஞானசம்பந்தர் ஆயினார். பவானந்தம் வேண்டாத சிவானந்தராக விளங்கினார்.

தில்லைக் கூத்தனின் திருவருள் பெற்று இன்புற்று இருந்த, குமரகுருபர அடிகளார், முடிவில்லாத அருள் நிலையைப் பெற்று இருந்தும், மண்ணுலகில் வாழுகின்ற நமக்கு எல்லாம், அந்தப் பேரானந்தப் பெருநிலை இல்லாத குறையைத் தமதாக ஏற்றிக் கொண்டு, நமக்காக, தில்லைக் கூத்தனிடத்தில், தந்திரமாக ஒரு பெருவரத்தை வேண்டுகின்றார்.

"புலியூர்க் கிழவனே! உனது பொன்னான திருவடிகளுக்கு வணக்கம். எனது விருப்பத்தைக் கொஞ்சம் திருச்செவி சார்த்தி அருளவேண்டும். சுவாமீ! நீ எப்போது தோன்றினாயோ அப்போதே நானும் தோன்றியவன். எனக்கும் உனக்கும் காலத்தால் முன் பின் என்பது இல்லை. உனக்கு இல்லாத சிறப்பு ஒன்று எனக்கு உள்ளது. நீயோ ஒரு பிறவியையும் எடுக்காமல் அநாதியாக உள்ளாய். நானோ பிறப்பை அடைவதில் அநாதியாக உள்ளவன். நீ தோன்றியபோது தோன்றிய நான், அன்று முதல் இன்றுவரை, பிறவிச் சுழலில் அகப்பட்டுச் சுழன்றுகொண்டே இருக்கின்றேன். இருந்தாலும் நான் அச்சம் அடைந்தது இல்லை. பிறவி என்பது அச்சத்தைத் தருவது என்பர். ஆனாலும், பலமுறை பழகிவிட்டதால், அச்சம் என்பது என்னிடத்தில் அணு அளவும் இல்லை. எத்தனையோ பிறவிகளை எடுத்து, அளவில்லாத துன்பங்களை அடைந்து இருக்கின்றேன். ஆனாலும், புதியதாக ஒரு துன்பத்தை அனுபவிக்கும்போது, பழைய துன்பம் மறந்து போகின்றது. எடுக்கின்ற பிறவியால் உண்டாகும் அச்சம் மட்டுமே நினைவில் நிற்கின்றது. அவ்வப்பொழுது அனுபவிக்கும் துன்பம்தான் நினைவில் இருக்கும். பழையது மறந்து போகும்.

"எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்" என்பது மணிவாசகரின் கருத்து. ஆனால், எனக்கு அது இல்லை. எத்தனை முறை பிறந்தும், இளைத்துப் போனதாக எனக்குத் தோன்றவில்லை. இதுவரையில் நான் எடுத்த பிறவிகள் ஒரு கடலைப் போன்றன. இனி எடுக்கப் போகும் பிறப்புக்களோ, சிறு சிறு உப்பங்கழி போல்வன. கடலைத் தாண்டியவன் உப்பங்கழியை நீந்துவதற்கா அஞ்சுவான்? இன்னும் எத்தனை பிறவிகள் வந்தாலும், அத்தனைக்கும் நான் அஞ்சமாட்டேன்.

"தில்லையைத் தரிசிக்க முத்தி" என்று ஓர் ஆத்தமொழி உள்ளது. நானும் இதோ,  தில்லையம்பலத்தில் உனது சந்நதியில் வழிபட்டுக் கொண்டு இருக்கின்றேன். உனது சந்நிதியில் நின்று, கண் இமைக்காமல், உச்சிமேல் கைகளைக் குவித்து வணங்கிக் கொண்டு இருக்கும் தேவர்களுள் சிலர் என்னையும் பார்க்கின்றனர். அவர்களுக்கு எனக்குப் பரிபக்குவம் இல்லை என்பது தெரியாது போல் இருக்கின்றது. தில்லையை எத்தனை முறை சென்று வணங்கினாலும், பரிபக்குவம் அடையாத பிறவிகள் இந்த மண்ணுலகத்தில் பல உள்ளன என்பதை தேவர்கள் அறியாதவர் போலும். தில்லையை வணங்கினால் முத்தி என்பது மட்டுமே அவர்கள் அறிந்து உள்ளது.

'வேதாகமங்களில், தில்லைச் சிதம்பரத் திருக்கூத்தைத் தரிசிப்பவர்க்கு இனி என்றும் பிறப்பு இல்லை" என்று உறுதியாகச் சொல்லப்பட்டு உள்ளது. இவனோ, தில்லையைத் தரிசித்துப் பிறவி தீர்ந்தவனாக இல்லையே. அப்படியானால், தில்லையைத் தரிசிக்க முத்தி என்று வேதாகமங்கள் கூறுவது பொய்மொழியாக இருக்குமோ' என்று தேவர்கள் அச்சப்படுகின்றார்கள். தேவர்களுக்கு இப்படிப்பட்ட அச்சம் உண்டாவது தகுமோ? தேவர்கள் அச்சப்பட்டாலும் கூடப் பரவாயில்லை, தில்லைக் கூத்தனே! உனது திருக்கூத்தைக் கண்டு வழிபட்டவன் பிறந்தும் இறந்தும் உழல்வான் என்னும் அவச்சொல், வேதாகமங்களின் தலையில் ஏறக் கூடாது. தேவர்களுக்கும் வீணான அச்சம் உண்டாகக் கூடாது. எனவே, உனது திருக்கூத்தைக் கண்டு வழிபட்ட எனக்குச் சிவகதியை அருளவேண்டும்"

வரம் வேண்டுவதில் இப்படியும் ஒரு தந்திர உத்தியை, "சிதம்பர மும்மணிக்கோவை" என்னும் நூலில் குமரகுருபர அடிகளார் நமக்குக் காட்டி உள்ளார். அதில் உள்ள தந்திரத்தை நன்கு உணர்ந்து, நாமும் தில்லைக் கூத்தனை வழிபட்டு, இல்லை பிறப்பு என்னும் பேரானந்தப் பெருநிலையை அடைய வேண்டும்.

"வலன்உயர் சிறப்பில் புலியூர்க் கிழவ! நின்

பொன்னடிக்கு ஒன்று இது பன்னுவன், கேண்மதி,

என்று நீ உளை, மற்று அன்றே யான் உளேன்;

அன்றுதொட்டு இன்றுகாறு அலமரு பிறப்பிற்கு

வெருவரல் உற்றிலன் அன்றே! ஒருதுயர்

உற்றுழி உற்றுழி உணர்வதை அல்லதை

முற்று நோக்க முதுக்குறைவு இன்மையின்,

முந்நீர் நீந்திப் போந்தவன் பின்னர்ச்

சின்னீர்க் கழிநீத்து அஞ்சான், இன்னும்

எத்துணைச் சனனம் எய்தினும் எய்துக,

அத்த! மற்று அதனுக்கு அஞ்சலன் யானே,

இமையாது விழித்த அமரரில் சிலர், என்

பரிபாகம் இன்மை நோக்கார், கோலத்

திருநடங் கும்பிட்ட ஒருவன் உய்ந்திலனால்,

சுருதியும் உண்மை சொல்லா கொல் என,

வறிதே அஞ்சுவர், அஞ்சாது 

சிறியேற்கு அருளுதி செல்கதிச் செலவே".

இதன் பொருள் ---

வலன் உயர் புலியூர்க் கிழவ - வெற்றி பொருந்திய புலியூர்க்கு (புலிக்கால் முனிவர் ஆகிய வியாக்கிரபாதர் வழிபட்டதால், சிதம்பரத்துக்குப் புலியூர் என்று பெயர் உண்டானது) உரியவனே!  நின் பொன்னடிக்கு ஒன்று இது பன்னுவன் - உனது பொன்னார் திருவடிக்கு ஒரு விண்ணப்பத்தை நான் திரும்பத் திரும்பச் சொல்லுவேன், கேண்மதி - கேட்டு அருள்வாயாக. என்று நீ உளை, மற்று அன்றே யான் உளேன் - நீ எப்போது உண்டானாயோ அப்போதே நானும் உண்டானவன்; அன்றுதொட்டு இன்றுகாறு - அக்காலம் முதல் இன்று வரை, அலமரு பிறப்பிற்கு வெருவரல் உற்றிலன் - துன்பத்தைத் தருகின்ற பிறப்புக்கு நான் அச்சம் கொண்டது இல்லை. ஒரு துயர் உற்றுழி உற்றுழி உணர்வதை அல்லதை - ஒவ்வொரு துயரம் உண்டாகும் போதெல்லாம், அதனை உணர்ந்து கொள்வது அல்லாது, முற்று நோக்க முதுக்குறைவு இன்மையின் - அவற்றில் உண்டான துன்பங்களை எல்லாம் முழுவதும் அறிந்து வருந்துதற்கு உரிய அறிவு என்னிடத்தில் இல்லை. முந்நீர் நீந்திப் போந்தவன் - கடலை நீந்தியவன், பின்னர்ச் சின்னீர்க் கழிநீத்து அஞ்சான் - அதன் பின்னர் உண்டாகும் ஒரு சிறு உப்பங்கழியை நீந்துவதற்கு அஞ்சுவது இல்லை. (அதுபோல) இன்னும்  எத்துணைச் சனனம் எய்தினும் எய்துக - இன்னமும் எத்தனை பிறவிகள் வந்தாலும் வரட்டும், அத்த - எனது அப்பனே! மற்று அதனுக்கு அஞ்சலன் யானே - அப் பிறவிகளுக்கு நான் அஞ்சப் போவது இல்லை; இமையாது விழித்த அமரரில் சிலர் - தில்லையில் உன்னைக் கண்டு கண் இமைக்காது வழிப்படிருந்து தேவர்களில் சிலர், என் பரிபாகம் இன்மை நோக்கார் - (உன்னைக் கண்டு வழிபட்டுக் கொண்டு இருக்கும்) எனது பக்குவம் இன்மையை அறியமாட்டார்கள். கோலத்  திருநடம் கும்பிட்ட ஒருவன் உய்ந்திலனால் - அழகான திருநடத்தைக் கும்பிட்ட இவன் உய்தி பெறவில்லை என்பதை நோக்க, சுருதியும் உண்மை சொல்லா கொல் என - வேதங்களும் உண்மையைச் சொல்லமாட்டாவோ என, வறிதே அஞ்சுவர் - (வேத வாக்கியங்களில் வீணான அச்சத்தைக் கொள்ளுவர். அஞ்சாது - தேவர்கள் அப்படி அச்சம் கொள்ளாத வண்ணம்,  சிறியேற்கு அருளுதி செல்கதிச் செலவே - அறிவில் சிறியவன் ஆன எனக்குத் திருவடிப் பேற்றை அருளுவாயாக. 

இதில் உள்ள தந்திரத்தை நன்கு உணர்தல் வேண்டும். "பதியினைப் போல, பசுபாசம் அநாதி" என்பது திருமந்திரம். இறைவன் அநாதி. உயிர்களும் அநாதி. இது கருதியே, தாயுமான அடிகளார், "என்று நீ, அன்று நான். உன் அடிமை அல்லவோ?" என்று அருளினார்.




திருத் தில்லை - 14

  "ஆற்றோடு தும்பை அணிந்துஆடும் அம்பலவாணர் தமைப் போற்றாதவர்க்கு அடையாளம் உண்டே இந்தப் பூதலத்தில், சோற்றுஆவி அற்று, சுகமற்று, சுற்றத் துண...