064. அமைச்சு - 02. வன்கண் குடிகாத்தல்

திருக்குறள்

பொருட்பால்

ஆ. அமைச்சியல்

அதிகாரம் 64 -- அமைச்சு


இந்த அதிகரத்துள் வரும் இரண்டாம் திருக்குறளில், "தொழிலில் அசைவு இல்லாமையும், குடிகளைக் காத்தலும், நீதிநூல்களைக் கற்று செய்வனவற்றையும், தவிர்வனவன்றறையும் அறிதலும், முயற்சியும் ஆகிய இந்த ஐந்து இயல்புகளும் ஒருங்கே அமையப் பெற்றவனே அமைச்சனாவான்" என்கின்றார் நாயனார்.


மேற்குறளில் குறித்த ஐந்து இலக்கணங்களுடன், இப்போது சொல்லும் நான்கு இலக்கணங்களும் பொருந்தியவனாக இருந்தால் அன்றி, ஒருவன் அமைச்சனாவதற்குத் தகுதி இல்லை.


இதற்குத் திருக்குறள்...


வன்கண், குடிகாத்தல், கற்று அறிதல், ஆள்வினையோடு

ஐந்துடன் மாண்டது அமைச்சு.


இதற்குப் பரிமேலழகர் உரை ---


வன்கண் --- வினை செய்தற்கண் அசைவின்மையும்; 


குடிகாத்தல் --- குடிகளைக் காத்தலும்; 


கற்று அறிதல் - நீதி நூல்களைக் கற்றுச் செய்வன தவிர்வன அறிதலும்; 


ஆள்வினையொடு --- முயற்சியும்; 


ஐந்துடன் மாண்டது அமைச்சு --- மேற்சொல்லிய அங்கங்கள் ஐந்துடனே திருந்த உடையானே அமைச்சனாவான்.


(எண்ணொடு நீண்டது. 'அவ்வைந்து' எனச் சுட்டு வருவிக்க. இந்நான்கனையும் மேற்கூறியவற்றோடு தொகுத்துக் கூறியது,. அவையும் இவற்றோடு கூடியே மாட்சிமைப்பட வேண்டுதலானும், அவற்றிற்கு ஐந்து என்னும் தொகை பெறுதற்கும். இனி, இதனை ஈண்டு எண்ணியவற்றிற்கே தொகையாக்கிக் குடிகாத்தல் என்பதனைக் குடிப்பிறப்பும் அதனை ஒழுக்கத்தால் காத்தலும் எனப் பகுப்பாரும் 'கற்று அறிதல்' என்பதனை கற்றலும் அறிதலும் எனப் பகுப்பாரும் உளர். அவர் 'உடன்' என்பதனை முற்றும்மைப் பொருட்டாக்கியும் 'குடி' என்பதனை ஆகுபெயராக்கியும் இடர்ப்படுப.)



பின்வரும் பாடல்கள், இத் திருக்குறளுக்கு ஒப்பாக உள்ளது காண்க...


குடியோம்பல் வன்கண்மை நூல்வன்மை கூடம்

மடியோம்பும் ஆற்றல் உடைமை - முடியோம்பி

நாற்றஞ் சுவைகேள்வி நல்லா ரினஞ்சேர்தல்

தேற்றானேற் றேறு மமைச்சு. ---  ஏலாதி.


இதன் பொருள் ---


குடி ஓம்பல் - குடிமக்களைப் பாதுகாத்தலும், வன்கண்மை - தொழின் முகத்தில் ஆளுகைத் தன்மையும், நூல் வன்மை - நூற்புலமையில் கலங்காத அறிவும், கூடம் மடி - கரவும் சோம்பலும், ஓம்பும் - தன்மாட்டு நிகழாதவாறு பாதுகாக்கும், ஆற்றல் உடைமை – ஆற்றலை உடைமையும் பொருந்தி, முடி ஓம்பி - அரசாட்சியைப் பாதுகாத்து, நாற்றம் - மணத்தையும், சுவை - சுவைக்கினிய உணவையும், கேள்வி - இசைக் கேள்வியையும், நல்லார் இனம் சேர்தல் - மாதர் கூட்டத்தைச் சேர்ந்து மெய்யுறுதலையும், தேற்றானேல் - நன்மை தருவனவென்று துணியானாயின், அமைச்சு - அவன் அமைச்சன் ஆதற்கு உரியான் என்று, தேறும் - தெளியப்படுவன்.



குலம் முதல் தொன்மையும், கலையின் குப்பையும்,

பல முதல் கேள்வியும், பயனும், எய்தினார் ; 

நலம் முதல் நலியினும் நடுவு நோக்குவார் ; 

சலம் முதல் அறுத்து, அருந் தருமம் தாங்கினார். --- கம்பராமாயணம், மந்திரப் படலம்.


     குலம் முதல் தொன்மையும் - குடிப்பிறப்பினது முதன்மையான பழமையும்; கலையின் குப்பையும் – நூல் அறிவுகளின் தொகுதியையும்; பல முதல் கேள்வியும் - பல சிறந்த கேள்வி அறிவையும் ;  பயனும் - அவற்றால் உளதாகும் பயனையும் ; எய்தினார் - பெற்றவர்கள்;  நலம் முதல் நலியினும் - தமக்கு வரும் நலன்கள் வேரோடு கெடுவதாயினும்; நடுவு நோக்குவார் - நடுவு நிலைமையையே காப்பவர்கள்; சலம் முதல் அறுத்து - சினத்திற்கு மூலகாரணமான அகந்தையைக் கிழங்கோடு களைந்து;

அருந்தருமம் தாங்கினார் - அரிய அறங்களைப் போற்றுபவர்கள்.


     அமைச்சர்கள் குடிப்பிறப்பு, கல்வி, கேள்விச் சிறப்பு, நடுவு நிலைமை, சினமின்மை ஆகிய பண்புகளோடு திகழ்ந்தனர் என்பது கூறப்பட்டது. குப்பை - தொகுதி, மிகுதி.தாங்குதல் - போற்றிக் காத்தல். சலம் - கோபம்; வஞ்சனையும் ஆம். முதல் - முதன்மை, சிறப்பு, வேர் என்னும் பல்வேறு பொருளில் வந்தது.                                   


064. அமைச்சு - 01. கருவியும் காலமும்

திருக்குறள்

பொருட்பால்

ஆ. அமைச்சியல்

அதிகாரம் 64 -- அமைச்சு


இந்த அதிகாரம் அமைச்சனது குணங்களையும் செயல்களையும் கூறுவது.

இந்த அதிகாரத்துள் வரும் முதல் திருக்குறளில். "தொழில் புரியும்போது அதற்கு வேண்டிய சாதனங்களும், அதற்கு ஏற்ற காலமும், தொழிலைச் செய்யும் விதமும், செய்யப்படும் அரிய தொழிலும் பொருந்த எண்ணவல்லவனே அமைச்சன் ஆவான்" என்கின்றார் நாயனார்.

இதனால் அமைச்சனின் இலக்கணம் கூறப்பட்டது.


இதற்குத் திருக்குறள்...


கருவியும், காலமும், செய்கையும், செய்யும்

அருவினையும் மாண்டது அமைச்சு.


இதற்குப் பரிமேலழகர் உரை ---


கருவியும் --- வினை செய்யுங்கால் அதற்கு வேண்டும் கருவிகளும்; 


காலமும் --- அதற்கு ஏற்ற காலமும்; 


செய்கையும் --- அது செய்யுமாறும்; 


செய்யும் அருவினையும் --- அவ்வாற்றில் செய்யப்படும் அவ்வரிய வினைதானும்; 


மாண்டது அமைச்சு --- வாய்ப்ப எண்ண வல்லவனே அமைச்சனாவான்.


(கருவிகள் - தானையும் பொருளும், காலம் - அது தொடங்குங் காலம், 'செய்கை' எனவே, அது தொடங்கும் உபாயமும், இடையூறு நீக்கி முடிவு போக்குமாறும் அடங்கின. சிறிய முயற்சியால் பெரிய பயன் தருவது என்பார், 'அருவினை' என்றார். இவை ஐந்தினையும் வடநூலார் மந்திரத்திற்கு அங்கம் என்ப.)


பின்வரும் பாடல்கள் இத் திருக்குறள் கருத்துக்கு ஒப்பாக அமைந்துள்ளதை அறியலாம்...


காலமும் இடனும் ஏற்ற

     கருவியும் தெரிந்து, கற்ற

நூல் உற நோக்கி, தெய்வம்

     நுனித்து, அறம் குணித்த மேலோர்; 

சீலமும், புகழ்க்கு வேண்டும்

     செய்கையும், தெரிந்துகொண்டு,

பால்வரும் உறுதி யாவும்

     தலைவற்குப் பயக்கும் நீரார் ;    ---  மந்திரப் படலம், கம்பராமாயணம்.


இதன் பொருள் ---


     ஏற்ற காலமும் இடனும் கருவியும் தெரிந்து - வினை செய்தற்குத் தக்க காலத்தையும் இடத்தையும், அதற்குரிய கருவிகளையும் அறிந்து; கற்ற நூல் உற நோக்கி - தாம் படித்த அரசநீதி நூல்களின் கருத்துகளோடு ஒப்பிட்டுக் கண்டு;  தெய்வம் நுனித்து - தெய்வத்தையும் தியானித்து;  அறம் குணித்த மேலோர் - அரசியல் அறத்தைப் பெருக்கிய மேலோர்கள்; சீலமும் புகழ்க்கு வேண்டும் செய்கையும் - ஒழுக்கத்தையும் புகழ் அடைவதற்குரிய செயல்களையும்;  தெரிந்து கொண்டு - ஆராய்ந்து அறிந்துகொண்டு;  பால் வரும் உறுதி யாவும் - அவ் ஆராய்ச்சிகளின் பயனாக வரும் நற்பயன்கள் யாவற்றையும் ;  தலைவற்குப் பயக்கும் நீரார் - தம் அரசனுக்குக் கொடுக்கின்ற தன்மை உடையவர்கள்.


     இதனால் அமைச்சர்கள் பணிபுரியும் வகை கூறப்பட்டது. இடன் - கடைப்போலி. நுனித்தல் - நுட்பமாக அறிதல். பால்வரும் உறுதி - அந்த அந்தப் பகுதிகளால் விளையும் நன்மை.


மூலம் 24

“கள்ளுண்டல், காணில், கணவற் பிரிந்துஉறைதல்,

வெள்குஇலள் ஆய்ப்பிறர் இல்சேறல், - உள்ளிப்

பிறர்கருமம் ஆராய்தல், தீப்பெண் கிளைமை,

திறமதுதீப் பெண்ணின் தொழில்.” -- சிறுபஞ்சமூலம்.


பெண்கள் குணத்தைப் பற்றி ஆராய்ந்து பார்க்குமிடத்து, கள் குடித்தலும், தன் கணவனைப் புணர்ச்சி வேண்டாது பிரிந்து வாழ்தலும், நாணம் அற்றவளாய்ப் பிறர் வீட்டிற்கு அடிக்கடி செல்லுதலும், பிறர் கருமத்தை நினைத்துப் பிறருடன் ஆராய்தலும், தீய பெண்களோடு நட்புப் பூண்டு ஒழுகுதலும், ஆகிய இவ் ஐந்தும் தீக்குணம் பொருந்திய பெண்களின் செய்கை ஆகும்.


கடுகம் 24

“காண்தகு மென்தோள் கணிகை வாயின் சொல்லும்,

தூண்டிலின் உட்பொதிந்த தேரையும், - மாண்டசீர்க்

காழ்த்த பகைவர் வணக்கமும், இம்மூன்றும்

ஆழ்ச்சிப் படுக்கும் அளறு.” -- திரிகடுகம்.


காணுதற்கு மெல்லிய தோள்களையுடைய வேசையின் வாயில் பிறக்கின்ற இனிய மொழியும்; தூண்டிலில் மீனுக்கு இரையாக அதன் முள்ளை மறைத்து வைக்கப்பட்ட தவளையும்; வயிரம் பற்றிய, பகைவர்களுடைய அன்பான  வணக்கமும் ஆகிய இம் மூனுறும் உயிர்களைத் தன்னுள்ளே அழுந்தப் பண்ணுகின்ற சேறு (நரகம்) போல்வது ஆகும்.


    வேசியர் பேச்சும், பகைவர் வணக்கமும், வெளிக்கு நலம்போல் இருந்து உள்ளே வஞ்சகத்தைக் கொண்டு இருத்தலால் அவை நலம் தருவன அல்ல. அவற்றை நம்புதல் தூண்டிலில் வைத்த தவளையை விழுங்கப் போய், மீன் அகப்பட்டுக் கொண்டு கெடுவது போல் கெடுதியே விளைவிக்கும்.


75. திரிகணமும் ஒன்றாதல்

“மனம்வேறு சொல்வேறு மன்னு தொழில்வேறு

வினைவேறு பட்டவர்பால் மேவும், - அனமே!

மனம்ஒன்று சொல்ஒன்று வான்பொருளும் ஒன்றே

கனம்ஒன்று மேலவர்தம் கண்.” -- நீதிவெண்பா.


அன்னம் போன்றவளே! ஒழுங்கற்ற செயலைச் செய்யும் கீழோரிடத்தில் மனமும் சொல்லும் செய்யும் செயலும் ஒன்றுபட்டு இராது.  எண்ணம், சொல், செயல் ஆகியவை வேறு வேறாக இருக்கும். ஆனால், பெருமை பொருந்திய பெரியோரிடத்தில் மனமும் சொல்லும் உயர்ந்த செயலும் ஒன்றாகவே இருக்கும்.


(மேவும் - பொருந்தியிருக்கும்.  கனம் - பெருமை.)


063. இடுக்கண் அழியாமை - 10. இன்னாமை இன்பம்

 திருக்குறள் 

பொருட்பால் 

அ. அரசியல்

அதிகாரம் 63 -- இடுக்கண் அழியாமை


இந்த அதிகாரத்துள் வரும் பத்தாம் திருக்குறளில், "ஒருவன் தொழில் செய்யுமிடத்து, முயற்சியால் வரும் துன்பத்தையே இன்பம் எனக் கொண்டானாயின், அதனால் அவனுடைய பகைவரும் அவனை மதிக்கும் உயர்வு உண்டாகும்" என்கின்றார் நாயனார்.


துன்பம் என்பது உயிர்க்கு இயல்பாகவே உள்ளதல்ல. அது மனத்தில் உண்டாகும் கோட்பாடு என்று அறிந்து, துன்பத்தை இன்பமாக எண்ணிக் கொண்டால், அதனால் சிறிதும் வருந்துதல் இல்லாமல், மிக்க மகிழ்ச்சி உண்டாகி, எடுத்த காரியத்தை சிறப்பாக முடித்துவிடக் கூடிய ஆற்றல் உண்டாகும்.


இதற்குத் திருக்குறள்...


இன்னாமை இன்பம் எனக் கொளின், ஆகும் தன்

ஒன்னார் விழையும் சிறப்பு.


இதற்குப் பரிமேலழகர் உரை ---


இன்னாமை இன்பம் எனக் கொளின் --- ஒருவன் வினை செய்யும் இடத்து முயற்சியான் வரும் துன்பந் தன்னையே தனக்கு இன்பமாகக் கற்பித்துக் கொள்வானாயின்; 

தன் ஒன்னார் விழையும் சிறப்பு ஆகும் - அதனால் தன் பகைவர் நன்கு மதித்தற்கு ஏதுவாய உயர்ச்சி உண்டாம்.

(துன்பந்தானும் உயிர்க்கு இயல்பன்றிக் கணிகமாய் மனத்திடை நிகழ்வதோர் கோட்பாடு ஆகலின், அதனை மாறுபடக் கொள்ளவே, அதற்கு அழிவு இன்றி மனமகிழ்ச்சி உடையனாய், அதனால் தொடங்கிய வினை முடித்தே விடும் ஆற்றல் உடையனாம் என்பது கருத்து. இவை நான்கு பாட்டானும் மெய்வருத்தத்தான் ஆயதற்கு அழியாமையும் அதற்கு உபாயமும் கூறப்பட்டன.)



இத் திருக்குறளுக்கு விளக்கமாக, பிறைசை சாந்தக் கவிராயர் பாடி அருளிய, நீதிசூடாமணி என்கின்ற "இரங்கேச வெண்பா" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...


விற்ற மனையாளை வெட்டுதலும் உற்றதுயர்

இற்றது மன்னற்கு, இரங்கேசா! --- அற்றுஉலகில்

இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகும்தன்

ஒன்னார் விழையும் சிறப்பு.


இதன் பொருள் ---  


இரங்கேசா - திருவரங்கநாதக் கடவுளே! மன்னற்கு - அரிச்சந்திர மன்னனுக்கு, விற்ற மனையாளை - (தான் அந்தணனுக்கு விற்று விட்ட) மனைவியை, வெட்டுதலும் - வெட்டினவுடனே, உற்ற துயர் - அதுவரையில் பொருந்தியிருந்த துன்பமானது, இற்றது - நீங்கிற்று, (ஆகையால், இது) உலகில் அற்று - உலக மாயா இன்பத்தில் ஆசையற்று, இன்னாமை - (ஒருவன் தான் தொழில் முயற்சி செய்யுமிடத்து) வரும் துன்பத்தை, இன்பம் எனக் கொளின் - இன்பமாக எண்ணிக் கொள்வானாயின், ஒன்னார் விழையும் சிறப்பு ஆகும் - (அதனால் அவனுக்குத் தன்) பகைவரும் விரும்பிப் புகழ்கின்ற மேன்மை உண்டாகும் (என்பதை விளக்குகின்றது).


கருத்துரை --- துன்பத்தை அஞ்சாத தூயோர் இன்பத்தை அடைவர்.


விளக்கவுரை --- அரிச்சந்திர மன்னன் சத்தியம் தவறாமல் கோசிகர்க்குத் தாரை வார்த்துக் கொடுத்த பொன்னுக்காகத் தன்னுடைய கற்பில் சிறந்த மனைவியாகிய பெண்ணையும் தன் மகனையும் பார்ப்பானுக்கு விற்றுக் கொடுத்தும் தீராமல், தன்னையும் புலையனுக்கு விற்றுக் கொடுத்துக் கடன் தீர்த்தான்.  இப்படிச் சத்தியம் காத்த மன்னன் விஷயத்தில் விசுவாமித்திரர்க்குப் பொறாமை வளர்ந்தது. ஆகையால், அவனுக்கு அவர் அநேக இடுக்கண்கள் இயற்றினார். விடத்தால் மகனைக் கொல்வித்தார். காசிராஜன் மைந்தனைக் கொன்றவள் என்று, மனைவியைக் கொலைக்காரி ஆக்கினார். அந்தக் கொலைக்காரியைக் கொல்ல அம் மன்னனையே கொலையாளி ஆக்கினார். என்ன செய்தும் மன்னன்,  "இடுக்கண் வருங்கால் நகுக, அதனை அடுத்து ஊர்வது அஃது ஒப்பது இல்" என்றபடி கொஞ்சமேனும் அஞ்சாமல், வைராக்கியத்தோடு விளங்கினான்.  மனைவியைத் தன் கை வாளால் அஞ்சாமல் வெட்டினான். அது அவள் கழுத்தில் பூமாலையாய் விழுந்தது. திரிமூர்த்திகளும் பிரசன்னமானார்கள். அவர்கள் வாழ்த்தி வரம் கொடுத்து, அவர்களுடைய அடிமைத் தனத்தை நீக்கிப் பழையபடி அவர்களுக்கு நாடும் நகரமும் விசுவாமித்திரருடைய வரத்தில் பாதியும் கொடுப்பித்தார்கள். சத்தியத்தை ஒரே பிடிவாதமாகக் கொண்டு, உலகத்தில் மற்றப் பற்றற்று, சத்தியம் காத்தல் தொழிலின் முயற்சியில் வந்த துன்பங்களை இன்பங்கள் எனக் கொண்டதனால், அரிச்சந்திரன் தன்னுடைய ஒன்னார்களாகிய விசுவாமித்திரன் முதலியோரும் விரும்பிப் புகழும் பெரும் சிறப்புப் பெற்றான்.  


அடுத்து, இத் திருக்குறளுக்கு விளக்கமாக, சிதம்பரம் ஈசானிய மடத்து இராமலிங்க சுவாமிகள் பாடி அருளிய, "முருகேசர் முதுநெறி வெண்பா" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...


செற்றுச் சுயோதனன்செய் தீங்கைஇன்பில் தேர்தருமன்

முற்றும்இன்பம் துய்த்தான், முருகேசா! --- பற்றிவரும்

இன்னாமை இன்பம்எனக் கொளின் ஆகும்தன்

ஒன்னார் விழையும் சிறப்பு.


இதன் பொருள் ---


முருகேசா - முருகப் பெருமானே, செற்று - வருத்தி, சுயோதனன் செய் தீங்கை - துரியோதனன் செய்த தீமையை, இன்பில் தேர் தருமன் - இன்பமாகவே கொண்ட தருமபுத்திரன், முற்றும் இன்பம் துய்த்தான் - தான் அடைந்த எல்லாவற்றையும் இன்பமாகவே கொண்டு நகர்ந்தான். பற்றி வரும் - தொடர்ந்து வருவதாகிய, இன்னாமை - துன்பத்தை, இன்பம் எனக் கொளின் - இன்பம் என்று ஒருவன் கொண்டால், தன் ஒன்னார் விழையும் சிறப்பு ஆகும் - தன் பகைவரும் விரும்பத்தக்க சிறப்பை அடைவான்.


தருமரானவர், துரியோதனன் பகைகொண்டு செய்த தீமைகளை எல்லாம் இன்பமாகவே கொண்டு நுகர்ந்தார். துன்பத்தையே இன்பமாகக் கொண்டால் பகைவரும் விரும்பும்படியான சிறப்பு உண்டாகும் என்பதாம்.


தருமர் கதை


துரியோதனன் பாண்டவர்களிடத்திலே பகை கொண்டான்.  அவர்களுக்கு எப்பொழுதும் தீமையையே செய்துகொண்டு இருந்தான். வீமனைக் கொன்று தொலைத்து விடுவதற்குப் பலவாறு முயன்றான். ஐவருக்கும் அரக்கு மாளிகை கட்டி அதில் தீயிடச் செய்தான். தன் மாமனாகிய சகுனியைக் கொண்டு தருமரோடு சூதாடச் செய்து நாடு நகரங்களை எல்லாம் கைப்பற்றினான். திரௌபதியை அவைக்குக் கொண்டுவரச் செய்து துகில் உரிந்தான். காட்டிலே இருந்தபொழுதும் ஐவருக்கும் பலவாறு தீமை செய்ய முயன்றான். தருமர் துரியோதனன் செய்த தீமைகள் எவற்றையும் பாராட்டவில்லை. அவைகளை எல்லாம் நன்மையாகவே கொண்டு மகிழ்ந்திருந்தார். இதனால் இறுதியில் துரியோதனனையும் வென்று சிறப்படைந்தார்.


063. இடுக்கண் அழியாமை - 09. இன்பத்துள் இன்பம்

திருக்குறள் 

பொருட்பால் 

அ. அரசியல்

அதிகாரம் 63 -- இடுக்கண் அழியாமை


இந்த அதிகாரத்துள் வரும் ஒன்பதாம் திருக்குறளில், "தாம் செய்யும் தொழிலால் தமக்கு இன்பம் உண்டானபோது, அதை அனுபவித்துக் கொண்டே மனத்தால் விரும்பாதவன், துன்பம் வந்தபோதும், அத் துன்பத்தை அனுபவித்துக் கொண்டே மனத்தால் வருந்த மாட்டான்" என்கின்றார் நாயனார்.


இன்பத்தையும் துன்பத்தையும் வினைகளின் பகுதி என்று உணர்ந்த பெரியோர், எது எது எவ்விதம் வருகின்றதோ, அவ்விதமே அனுபவிக்க முயல்வர். அதற்காக மகிழ்தலையோ, வருந்துதலையோ செய்யார்.


இதற்குத் திருக்குறள்...


இன்பத்துள் இன்பம் விழையாதான், துன்பத்துள்

துன்பம் உறுதல் இலன்.


இதற்குப் பரிமேலழகர் உரை ---


இன்பத்துள் இன்பம் விழையாதான் --- வினையால் தனக்கு இன்பம் வந்துழி அதனை அனுபவியா நின்றே மனத்தான் விரும்பாதான்; 

துன்பத்துள் துன்பம் உறுதல் இலன் --- துன்பம் வந்துழியும் அதனை அனுபவியா நின்றே மனத்தான் வருந்தான்.

(துன்பம் - முயற்சியான் வரும் இடுக்கண். இரண்டையும் ஒரு தன்மையாகக் கோடலின், பயன்களும் இலவாயின.)



பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளதை அறியலாம்...


“துன்பம் வெய்யோர்க்கு இன்பம் எளிது.” --- முதுமொழிக்காஞ்சி


இதன் பொருள் ---


துன்பம் - ஒருகாரியத்தை மேற்கொண்டு முயற்சி செய்வதால் உண்டாகும் துன்பத்தை, வெய்யோர்க்கு - விரும்பிப் பொறுத்தவருக்கு, இன்பம் - அக்காரியம் நன்கு முடிதலால் உண்டாகும் இன்பம், எளிது - எளிதாம்.


ஒரு காரியத்தைச் செய்வதில் உண்டாகும் துன்பத்தை வெறுக்காதவர் அந்தக் காரியம் கடைபோகக் கண்டு இன்பம் அடைவர்.



“இன்பம் வெய்யோர்க்குத் துன்பம் எளிது"     --- முதுமொழிக்காஞ்சி


இதன் பொருள் ---


இன்பம் வெய்யோர்க்கு - ஒருகாரியத்தை மேலிட்டுக் கொண்டு முயற்சிசெய்தலால் உண்டாகும் இன்பத்தை விரும்புவாருக்கு, துன்பம் - வறுமை முதலியவற்றால் உண்டாகும் துன்பம், எளிது - எளிதாம்.


முயற்சியால் உண்டாகும் இன்பத்தை விரும்புவோருக்கு வறுமையால் உண்டாகும் துன்பம் ஒரு பொருட்டாகத் தோன்றாது.


“தன்னை வியப்பிப்பான் தற்புகழ்தல், தீச்சுடர்

நன்னீர் சொரிந்து வளர்த்து அற்றால், –  தன்னை

வியவாமை அன்றே வியப்பு ஆவது, இன்பம்

நயவாமை அன்றே நலம்.”   --- நீதிநெறி விளக்கம்.


 இதன் பொருள் ---


தன்னை வியப்பிப்பான் தற்புகழ்தல் - தன்னைப் பிறர் மதிக்கும்படி செய்வதற்காகத் தன்னைத் தானே புகழ்ந்து கொள்ளுதல், தீச்சுடர் நல்நீர் சொரிந்து வளர்த்தற்று - குளிர்ந்த நீரை விட்டுத் தீவிளக்கை வளர்த்தது போலாம்; ஆதலால், தன்னை வியவாமை அன்றே - வியப்பாவது தன்னைத்தான் புகழ்ந்து கொள்ளாமை அன்றோ நன்மதிப்பாகும்; இன்பம் நயவாமை அன்றே நலம் - இன்பத்தை விரும்பாமையன்றோ இன்பமாகும்?


தீ வளரும் என்று நீர் விட்டால் முன்னிருந்த தீயும் எப்படி வளராது அவிந்தே போகுமோ அதுபோலவே, தனக்கு மதிப்பு மிகுமென்று தன்னைத் தானே புகழ்ந்து கொண்டால் இதற்கு முன்னிருந்த மதிப்புமிகாது அழிந்தே போகும் என்பது. 



“மெய்த்திருப்பதம் மேவு' என்ற போதினும்,

'இத் திருத்துறந்து ஏகு' என்ற போதினும்,

சித்திரத்தின் அலர்ந்த செந்தாமரை

ஒத்திருக்கும் முகத்தினை உன்னுவாள்”.   --- கம்பராமாயணம்.


இதன் பொருள் ---     


மெய்த் திருப்பதம் - உண்மையான அரச பதவியை; மேவு என்ற போதினும் - அடைக என்று (மன்னவன்) கூறிய சமயத்திலும்; இத்திருத் துறந்து - இந்த அரச பதவியை விட்டு விட்டு; ஏகு என்ற போதினும் - கானகம் செல்க என்று (கைகேசி) கூறிய சமயத்திலும்; சித்திரத்தின் அலர்ந்த - சுவர் ஓவியத்திலே மலர்ந்த; செந்தாமரை ஒத்திருக்கும் - செந்தாமரையைப் போன்றிருக்கும்; முகத்தினை உன்னுவாள் - திருமுகத்தை நினைப்பாள்.

    தாமரை பகலில் மலரும். இரவில் குவியும். ஓவியத் தாமரை எப்போதும் ஒருபடித்தாக இருக்கும். ஓவியத் தாமரை போன்றது இராமன் முகம்.            


063. இடுக்கண் அழியாமை - 08. இன்பம் விழையான்

திருக்குறள் 

பொருட்பால் 

அ. அரசியல்

அதிகாரம் 63 -- இடுக்கண் அழியாமை


இந்த அதிகாரத்துள் வரும் எட்டாம் திருக்குறளில்,  "இன்பத்தை எதிர்பார்த்து விரும்பாதவனாய், எதிர்பாராத துன்பத்தை இயற்கை என்பவன், எந்நாளும் துன்பம் அடைதல் இல்லை" என்கின்றார் நாயனார்.

ஆரய்ந்து உணர்ந்தவர், தமது உடம்பிற்கு இன்பத்தை விரும்பினாலும், அதன்பொருட்டு நேரும் உழைப்பால் துன்பம் வரும் என்றும், அல்லது துன்பம் வரும் காலத்தில் துன்பம் வருதல் இயற்கை என்று எண்ணாமல், அத் துன்பம் வராதவாறு தடுக்க முயன்றாலும், அதுவும் துன்பமாகவே முடியும் என்றும் அறிவர். ஆதலால், இன்பத்தை விரும்பார், துன்பத்தையும் துறவார்.


இதற்குத் திருக்குறள்...


இன்பம் விழையான், இடும்பை இயல்பு என்பான்,

துன்பம் உறுதல் இலன்.


இதற்குப் பரிமேலழகர் உரை ---


இன்பம் விழையான் இடும்பை இயல்பு என்பான் --- தன் உடம்பிற்கு இன்பமாயவற்றை விரும்பாதே வினையால் இடும்பை எய்தல் இயல்பு என்று தெளிந்திருப்பான்; 


துன்பம் உறுதல் இலன் --- தன் முயற்சியால் துன்பமுறான்.


(இன்பத்தை விழையினும், இடும்பையை இயல்பு என்னாது காக்கக் கருதினும் துன்பம் விளைதலின், இவ்விரண்டுஞ் செய்யாதானைத் 'துன்பம் உறுதல் இலன்' என்றார்.)


"துன்பம் வெய்யோர்க்கு இன்பம் எளிது."     --- முதுமொழிக் காஞ்சி.


இதன் பொருள் ---


துன்பம் - ஒருகாரியத்தை மேற்கொண்டு முயற்சி செய்வதால் உண்டாகும் துன்பத்தை, வெய்யோர்க்கு - விரும்பிப் பொறுத்தவருக்கு, இன்பம் - அக்காரியம் நன்கு முடிதலால் உண்டாகும் இன்பம், எளிது - எளிதாம்.


ஒரு காரியத்தைச் செய்வதில் உண்டாகும் துன்பத்தை வெறுக்காதவர் அந்தக் காரியம் கடைபோகக் கண்டு இன்பமடைவர்.




063. இடுக்கண் அழியாமை - 05. அடுக்கி வரினும்

திருக்குறள் 

பொருட்பால் 

அ. அரசியல்

அதிகாரம் 63 -- இடுக்கண் அழியாமை


இந்த அதிகாரத்துள் வரும் ஐந்தாம் திருக்குறளில், "ஒருவனுடைய வாழ்வில் ஒன்றின்மேல் ஒன்றாகத் துன்பங்கள் தொடர்ந்து வந்தாலும், ஊக்கம் கெடாத அவன் முன்பு அவை நைந்து போகும்" என்கின்றார் நாயனார்.


இதற்குத் திருக்குறள்...

அடுக்கி வரினும், அழிவு இலான் உற்ற

இடுக்கண், இடுக்கண் படும்.


இதற்குப் பரிமேலழகர் உரை ---

அடுக்கி வரினும் --- இடைவிடாது மேன்மேல் வந்தனவாயினும்; 

அழிவிலான் உற்ற இடுக்கண் இடுக்கண்படும் --- தன்னுள்ளக் கோட்பாடு விடாதான் உற்ற இடுக்கண்தாம் இடுக்கணிலே பட்டுப்போம்.

(ஒன்றே பலகால் வருதலும், வேறுபட்டன விராய் வருதலும் அடங்க 'அடுக்கி வரினும்' என்றார். 'அழிவு' என்னும் காரணப்பெயர் காரியத்தின்மேல் நின்றது. இவை மூன்று பாட்டானும் தெய்வத்தான் ஆயதற்கு அழியாமை கூறப்பட்டது.)


இத் திருக்குறளுக்கு விளக்கமாக, திராவிட மாபாடியக் கர்த்தரான மாதவச் சிவஞான யோகிகள் பாடி அருளிய, "சேமேசர் முதுமொழி வெண்பா" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...


என்றும்ஒரு மீனேவந்து இன்மைமிகவும் தளரார்

துன்றுஏர் அதிபத்தர், சோமேசா! --- மன்ற

அடுக்கி வரினும் அழிவுஇலான் உற்ற

இடுக்கண் இடுக்கண் படும்.


இதன் பொருள்---


சோமேசா! மன்ற அடுக்கி வரினும் - பெரிதும் இடைவிடாது மேன்மேல் வந்தன ஆயினும், அழிவிலான் உற்ற இடுக்கண் இடுக்கண் படும் - தன் உள்ளக் கோட்பாடு விடாதான் உற்ற இடுக்கண் தாம் இடுக்கணிலே பட்டுப்போம்,

ஏர் துன்று அதிபத்தர் - அழகுமிக்க அதிபத்த நாயனார் என்பவர், என்றும் ஒரு மீனே வந்து - எந்நாளினும் (அநேக நாளினும்) ஒரு மீனே வந்து வலையில் அகப்பட, இன்மை மிகவும் - (இறைவர் கழற்கு என விடுத்து, அதனால்) வறுமை மிக்கு 'உணவு இன்றி மேனி தளர்ந்தும்', தளரார் - தன் உள்ளக் கோட்பாட்டினின்று தளராதவராயினார் ஆகலான் என்றவாறு.

துன்பம் மலைபோல வந்தாலும் பனிபோல நீங்கும் என்பதாம். 'மனம் தடுமாறேல்' - ஆத்திசூடி.


சால நாள்கள்இப் படிவரத் தாம்உணவு அயர்த்துக்

கோல மேனியும் தளரவும் தந்தொழில் குறையாச்

சீலமே தலை நின்றவர் தம்திறம் தெரிந்தே

ஆலம் உண்டவர் தொண்டர்அன்பு எனும்அமுது உண்பார். --- பெரியபுராணம், அதிபத்தர்.


சோழ நாட்டிலே, நாகப்பட்டினத்திலே, நுளைப் பாடியிலே, வலைஞர் குலத்திலே அவதரித்தவர் அதிபத்த நாயனார்.  அவர் பரதவர்களுக்குத் தலைவர்.  சிவபத்தியில் சிறந்தவர்.  வலைப்படும் மீன்களில் ஒரு தலைமீனைச் சிவபெருமானுக்கு என்று கடலிலே விடுவது அவரது வழக்கம். வலையில் ஒரே மீன் படினும், அதனைச் சிவபெருமானுக்கு என்றே அவர் கடலில் விடுவார்.


சிவபெருமான் திருவருளால் நாள்தோறும் ஒவ்வொரு மீனே கிடைப்பது ஆயிற்று.  வழக்கம்போல் அதிபத்தர் அதனைக் கடலிலே விட்டு வந்தார்.  நாயனார் செல்வம் சுருங்கிற்று.  சுற்றங்கள் உணவு இன்றி வருந்தின. உணவு இன்மையால் நாயனார் திருமேனியும் மெலிந்தது. அது குறித்து அவர் வருந்துவதில்லை.  சிவபத்தியில் மட்டும் நாயனாருக்குத் தளர்ச்சி தோன்றவேயில்லை.


ஒரு நாள் வலையில் பொன்மீன் ஒன்றே அகப்பட்டது.  அதை வலைஞர்கள், நாயனார் முன்னிலையில் கொண்டு வந்தார்கள்.  நாயனார் அதைக் கண்டு, "இது என்ன பொன் மீன்? உறுப்புக்களிலும் நவமணிகள் அமைந்திருக்கின்றன. இது சிவபெருமானுக்கு ஆக" என்று அதனையும் கடலிலே விடுத்தார்.


அப்பொழுது சிவபெருமான் நாயனாருக்குக் காட்சி அளித்தார். நாயனார் அகம் குழைந்து தொழுதார்.  சிவபெருமான் அவருக்குச் சிவலோக வாழ்வு தந்து அருளினார்.



அடுத்து,இத் திருக்குறளுக்கு விளக்கமாக, சிதம்பரம் பந்நைக் கந்தையர் மடத்து சென்ன மல்லையர் பாடி அருளிய, "சிவசிவ வெண்பா" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...


இரணியன்தான் செய்த இடும்பைதனை மைந்தன்

திரணமாக் கண்டான், சிவசிவா! - மரணம்

அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற

இடுக்கண் இடுக்கண் படும்.

இரணியன் தன் மகன் பிரகலாதனுக்கு இழைத்த கடுமையான பல துன்பங்களையும் அவன் துரும்பாக மதித்து உய்ந்தான்.

பிரகலாதர் வரலாறு

பிரமதேவருடைய புதல்வர் மரீசி. மரீசியின் மைந்தர் காசிபர். காசிப முனிவர் தக்கனுடைய புதல்வியர் பதின்மூவரை மணந்து தவமே தனமாகக் கொண்டு புகையில்லாத அக்கினியைப் போல் ஒளி செய்தனர். அந்தக் காசிப முனிவருக்குத் திதி வயிற்றில் பொன்மயமான உடம்புடன் இரணியனும், பொன்மயமான கண்ணுடன் இரணியாக்கனும் பிறந்தனர். இருவரும் சிறந்த வலிமை பெற்று ஒப்பாரும் மிக்காரும் இன்றி வாழ்ந்தனர். இளையவனீகிய இரணியாக்கன் பூமியை எடுத்துக் கடலில் எறிய முயன்றபோது, திருமால் வராக அவதாரம் எடுத்து அவனை மாய்த்தனர்.

இரணியன், தன் தம்பியை நாராயணர் கொன்றதைக் கேட்டு உள்ளம் வருந்தினான். தவவலிமை இல்லாமையால் தன் தம்பி மாண்டான் எனவும் உணர்ந்தனன். தன்னையும் ஒருகால் அந்த மாயவன் மாய்ப்பான் என்று மருண்டான். மனம் வெருண்டான்.  பெரும் தவம் புரிந்து பேராற்றல் படைக்கவேண்டும் என்று உள்ளம் தெருண்டான். அப்போது அவன் மனைவி லீலாவதியின்பால் ஹிலாதன், சம்ஹிலாதன், அநுஹிலாதன் என்று மூன்று புதல்வர் பிறந்தனர். நான்காவதாக, லீலாவதி உலகம் உய்ய, பிரகலாதரை சிப்பி முத்தைக் கருவுற்றது போல், கருக் கொண்டு இருந்தனள்.

தானவேந்திரனாகிய இரணியன் கானகம் புக்கு, கனல் நடுவே நின்று, ஊசியின் மேல் ஒரு காலை ஊன்றி, புலன்களை அடக்கி, மூலக்கனலை மூட்டி, நீரையும் வாயுவையும் புசித்துக் கொண்டு நெடிது காலம் கடும் தவம் புரிந்தனன். இரணியன் தவத்தால், தங்களுக்குக் கேடு வரும் என்று அஞ்சிய இந்திரன், சேனையுடன் வந்து அவனுடைய மனைவி லீலாவதியைச் சிறைப்படுத்திக் கொண்டு சென்றனன். இடையில் நாரதர் தடுத்து, லீலாவதியை சிறை மீட்டு, தனது தவச் சாலைக்குக் கொண்டுபோய் கருப்பவதியும் கற்புநெறி கடவாதவளும் ஆகிய லீலாவதிக்குத் திருமாலின் பெருமைகளை எடுத்து உபதேசித்து வந்தனர். கணவன் வரும் வரை கருவளராமல் இருக்குமாறு லீலாவதி தன் கற்பின் திறத்தால் செய்துகொண்டாள். கருவில் உருப்பெற்று உணர்வு பெற்று இருந்த, பிரகலாதர் நாரதமுனிவர் நாள்தோறும் கூறிவரும் திருமாலின் மகிமையை அன்புடன் கேட்டு உறுதியும் அன்பும் ஞானமும் ஒருங்கே அடைந்தனர்.

இரணியனுடைய சலியாத கடும் தவத்திற்கு இரக்கமுற்று அன்ன வாகனத்தில் நான்முகக் கடவுள் தோன்றினர். அவர்பால் இரணியன் மண்ணிலும், விண்ணிலும், அல்லிலும், பகலிலும், வீட்டிலும், வெளியிலும், இருளிலும், ஒளியிலும், அத்திரத்தாலும், சத்திரத்தாலும், நரராலும், சுரராலும், நாகங்களினாலும், விலங்குகளினாலும் மரணம் அடையாத தன்மையையும், மூன்று உலகங்களையும் வெல்லும் வன்மையையும், முவுலக ஆட்சியையும், எவரினும் சிறந்த மாட்சியும் வரமாகப் பெற்று, இரணியபுரம் சேர்ந்தனன். நாரதர் லீலாவதியைக் கொணர்ந்து, உற்றதை உரைத்து, ஆறுதல் கூறி, அவன்பால் சேர்த்தனர்.  பின்னர் லீலாவதி, அன்பு மயமான பிரகலாதரைப் பெற்றனள்.  மைந்தனது எழில் நலத்தைக் கண்டு இரணியன் இன்புற்றான்.

பின்னர் ஒருநாள், தானவன் தன் தம்பியைக் கொன்ற திருமாலைக் கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும் என்று எண்ணினான். திருமாலைக் கட்டி ஈர்த்து வருமாறு தன் பரிசனங்களைப் பணித்து அனுப்பினான். காலனிலும் கொடிய அக் கொடியர் வைகுந்தத்திலும், திருப்பாற்கடலிலும் தேடி திருமாலைக் காணாது திகைத்து மீண்டனர். "அசுரேந்திரா, அரியைக் காண முடியவில்லை" என்றனர். இரணியன் சினந்து, மூவுலகிலும் தேடுமாறு பல்லாயிரம் பதகரை அனுப்பினான்.  எங்குமுள்ள இறைவனை அவர்கள் எங்கும் காணாது அயர்ந்து மீண்டு தமது மன்னனிடம் வந்து "மாயனைக் காண்கிலோம்" என்றனர். இரணியன் சிரித்து, "அரியானவன் நமக்கு அஞ்சி எங்ஙனமோ ஒளிந்து கொண்டான் போலும். பயங்கொள்ளி. அத் திருமால் சாதுக்கள் உள்ளத்திலும், ஞானிகள் சிந்தையிலும், அடியார்கள் இதயத்திலும் இருப்பன். கட்டையைக் கடைந்தால் அக் கட்டைக்குள் இருக்கும் கனல் வெளிப்படுவது போலும், பாலைக் கடைந்தால், பாலுக்குள் உள்ள நெய் வெளிப்படுவது போலும், அடியார்களையும், ஞானிகளையும், முனிவர்களையும் பிடித்துத் துன்புறுத்தினால், அவர்களுக்குள் மறைந்திருக்கும் அம் மாயவன் வெளிப்படுவன். ஆதலினால், ஆயிரம் கோடி அவுணர்கள் மூன்று உலகங்களிலும் சென்று தேவர்களையும், முனிவர்களையும், அடியார்களையும் துன்புறுத்துங்கள்" என்று கட்டளை இட்டனன். காலதூதரினும் கொடிய அப் பாதகர்கள், பூமரங்களை ஒடித்தும், முனிவர்களை அடித்தும், கோயில்களை இடித்தும், வேதாகமங்களைப் பொடித்தும், ஞானிகளைத் துன்புறுத்தியும், "இரணியாய நம" என்று எல்லோரையும் சொல்லச் சொல்லியும், அதனை எங்கும் எழுதியும், வேறு தெய்வத்தைத் தொழாவண்ணம் தடுத்தும், எங்கும் பெரும் தீமையைப் புரிந்தனர்.

தேவர்களும், முனிவர்களும், ஞானிகளும், அடியார்களும் பெரிதும் வருந்து திருமாலைத் தியானித்துத் துதித்தனர். திருமால் அவர்களுக்கு அசரீரியாக நின்று, "காலம் வரும் வரை காகம் கூகைக்கு அஞ்சி இருக்கும். ஆதலினால் நீவிர் சிறிது காலம் தாழ்த்திருங்கள். யாம் உரிய காலத்தில் வெளிப்பட்டு இரணியனை மாய்ப்போம்" என்று அருளிச் செய்தனர்.

பிரகலாதர், இடையறாது மனத்தில் திருமாலையே சிந்தித்து, தியானபரராக இருந்தனர். ஆடும்போதும், ஓடும்போதும், பாடும்போதும், வாடும்போதும், உண்ணும்போதும், உறங்கும்போதும், எழும்போதும், அழும்போதும், விழும்போதும், தொழும்போதும், இவ்வாறு எப்போதும், தைலதாரை போல் இறாவாத இன்ப அன்புடன் மறவாது கருமால் அறத் திருமாலை நினைந்து நினைந்து, உணர்ந்து உணர்ந்து, நெகிழ்ந்து, நெகிழ்ந்து, அன்பு நிறைந்து, நிறைந்து, ஊற்றெழும் கண்ணீர் அதனால் உடம்பு நனைந்து நனைந்து பக்தி புரிந்து வந்தனர்.

பிரகலாதருக்கு வயது ஐந்து எய்தியபோது, இவருடைய தன்மையைக் கண்ட சுக்கிரர், தீர்த்த யாத்திரை சென்றனர். அதனால் அவருடைய புதல்வர் சண்டாமார்க்கரிடம் தன் மகனை இரணியன் ஓதுமாறு வைத்தனன். சண்டாமார்க்கர் பிரகலாதரை நோக்கி, "இரண்யாய நம" என்று கூறுமாறு கற்பிக்கலானார்.  பிரகலாதர் செங்கரத்தால் செவியை மூடி, "முதியவரே! பிழைபடக் கூறினீர். இன்று இருந்து நாளை அழியும் ஒரு உயிரினை இறை எனக் கூறுதல் நலம் தராது" என மொழிந்து, "ஓம் நமோ நாராயணாய" என்று கூறினர்.


"ஓதப் புக்கவன் உந்தைபேர் உரைஎன லோடும்,

போதத்தன் செவித் தொளைஇரு கைகளால் பொத்தி,

மூதக்கோய், இது நல்தவம் அன்று என மொழியா

வேதத்து உச்சியின் மெய்ப்பொருள் பெயரினை விரித்தான்".


பிரகலாதர் கரமலர்களைச் சிரமலர் மேல் கூப்பி, ஆனந்தக் கண்ணீர் சொரிந்து, உரோமங்கள் சிலிர்த்து, திருமந்திரத்தைக் கூறிய வண்ணமாக இருப்பதைக் கண்ட வேதியர் நடுங்கி, "அடா, பாலகனே! அந்தோ, இந்த மந்திரத்தைக் கூறாதே. உன் தந்தை கேட்டால் எம்மையும் உன்னையும் தண்டிப்பன். இதனை இமையவரும் சொல்ல அஞ்சுவர். சிறுபிள்ளைத் தனமாக இதனை நீ கூறினை. இனி இதனைக் கூறாதே. கூறி எம்மைக் கெடுக்காதே. உன்னையும் கெடுத்துக் கொள்ளாதே" என்றனர்.


"கெடுத்து ஒழிந்தனை என்னையும், உன்னையும் கெடுவாய்

படுத்து ஒழிந்தனை, பாவி அத்தேவரும் பகர்தற்கு

அடுத்தது அன்றியே அயல்ஒன்று பகர நின் அறிவின்

எடுத்தது என்இது, என்செய்த வண்ணம் நீ என்றான்".


பிரகலாதர் குறுமுறுவல் செய்து, "ஐயனே!  இத் திருமந்திரத்தைக் கூறுவதனால், என்னையும் உய்வித்தேன். எனது பிதாவையும் உய்வித்தேன். உம்மையும் உய்வித்தேன். இந்த உலகையும் உய்வித்தேன். வேதத்தின் முதலில் மொழியும் மந்திரத்தை அடியேன் மொழிந்தேன். அப்படிக்கு இருக்க, நான் சொன்னதில் என்ன குற்றம்?” என்றார்.


"என்னை உய்வித்தேன், எந்தையை உய்வித்தேன், இனைய

உன்னை உய்வித்தேன், உலகையும் உய்விப்பான் அமைந்து,

முன்னை வேதத்தின் முதல்பெயர் வொழிவது மொழிந்தேன்

என்னை குற்றம்நான் இயம்பியது இயம்புதி என்றான்".


ஆசிரியர், "அப்பா! குழந்தாய்! நாங்கள் கூறுவதைக் கேள். இது உனது சிற்றப்பனைக் கொன்ற மாயவன் ஆகிய திருமாலின் மந்திரம். இதை ஒருவரும் கூறலாகாதென உன் தந்தையின் கட்டளை. நீ கூறுவதனால் என்னை உன் பிதா தண்டிப்பன்" என்றனர்.  பிரகலாதர், "ஐயா! இம் மந்திரமே வேதத்தின் விழுமியது. எனது இதயத்தில் எழுந்தருளி இருக்கும் எம்பிரானுடைய திருநாமத்தைக் கூறுவதிலும் சிறந்த பேறு எனக்கு இல்லை" என்றார்.


ஆசிரியர் மனம் மறுகி, இரணியன்பால் ஓடி, "எந்தையே!  உமது சிறுவன், நாங்கள் கூறிய வேத மந்திரத்தை மறுத்து, சொல்லத் தகாத சொல்லைச் சொல்லுகின்றனன்" என்றார். இரணியன், "என்ன கூறினான் கூறும்" என்று வினவினான். ஆசிரியர், "வேந்தே, அவன் கூறிய சொல்லை நாங்கள் கூறினால், எமக்கு நரகம் எய்தும். நாவும் வெந்து அழியும்" என்று நடுங்கி நவின்றனர்.


இரணியன் தன் மகனை அழைப்பித்தான். பிரகலாதர் பிதாவைத் தொழுது நின்றனர். மகனை எடுத்து உச்சி மோந்து முத்தமிட்டு, மடித்தலத்தில் வைத்து, "மகனே!  நீ என்ன கூறினாய்" என்று வினவினான் தந்தை. அறிவின் மிக்க அப் புதல்வர், "தந்தையே, எதைச் சொன்னால் உயிர்க்கு உறுதி பயக்குமோ, ஞானிகள் எதை இடைவிடாது சிந்தித்துக் கொண்டு இருக்கின்றார்களோ, எதனை வேதம் வியந்து ஓதுகின்றதோ, எது நம்மை வாழ்விக்கின்றதோ, அதனையே அடியேன் கூறினேன்" என்றார். இரணியன் உள்ளம் உவந்து, "பேஷ்! புலிக்குப் பூனையா பிறக்கும். என் கண்ணே! அது என்ன? எனக்கு எடுத்துச் சொல்" என்று கேட்டான்.


"காமம் யாவையும் தருவதும், அப்பதம் கடந்தால்

சேம வீடுஉறச் செய்வதும், செந்தழல் முகந்த

ஓம வேள்வியின் உறுபதம் உய்ப்பதும் ஒருவன்

நாமம் அன்னது கேள் நமோ நாராயணாய".


"அப்பா! ஓம் நமோ நாராயணாய என்ற இந்த எட்டெழுத்தே பரகதியை எட்டும் எழுத்தாம்" என்றார். தானவன் விழியில் தழல் எழுந்தது. கோபத்தால் கொதிப்புற்றான். "மகனே! முனிவரும் தேவரும் நரர்களும் அனைவரும் எங்கும் எக்காலத்தும் என்னுடைய நாமமாகிய இரணியாய நம என்றே கூறுகின்றனர். யாரடா உனக்கு இந்த கொடிய நாமத்தைச் சொல்லிக் கொடுத்தவன்?  அந்த நாராயணன் நமது குல வைரி. எலி தன் உயிர்க்குத் தீங்கு செய்த பாம்பின் நாமத்தைக் கூறுதல் நன்மையோ? அந்தப் பாவி உன் சிறிய பிதாவைக் கொன்றவன்.  அவனை நெடுங்காலமாகத் தேடுகின்றேன். எனக்குப் பயந்து எங்கோ ஒளிந்துக் கொண்டு இருக்கின்றான். கண்ணே! நீ சிறு குழந்தை. யாரோ உன்னை இப்படி மயக்கி மாறுபடக் கூறி உள்ளனர். இனி அதைக் கூறாதே. மூவுலகமும் போற்றும் என் பெயரைக் கூறு" என்று பலவும் கூறினான்.

தவசீலராகிய பிரகலாதர் தந்தையைப் பணிந்து, "ஐயனே! சிறிது அமைதியாக இருந்து கேளும். உலகங்களை எல்லாம் உண்டு உமிழ்ந்தவர் அத் திருமால். எள்ளுக்குள் எண்ணெய் போல் எங்குமாய் நிறைந்தவர். மாதவர்களுடைய மாதவப் பயனாய் விளங்குபவர். அவருடைய பெருமையை அளக்க வல்லவர் யாரும் இல்லை. கடும் சுரம் உடையானுக்குக் கற்கண்டு கசப்பது போல், விரைவில் அழியும் விநாசகாலம் உற்றாரே அந்த விமலனை வெறுப்பர். நமது குலமும் நீயும் பிறரும் ஈடேற வேண்டும் என்றால், அவரை வணங்கு. வாயார வாழ்த்து. நெஞ்சார நினை" என்றார்.

அதனைக் கேட்ட அரக்கர் வேந்தன், ஆலகால விடம் போல் சீறினான். அண்டங்கள் வெடிபட ஆர்த்தான். "இவன் என்னையும் என் குலத்தையும் கெடுக்கப் பிறந்தவன். இனி இவனைத் தாமதியாமல் ஆயுதங்களால் கொல்லுங்கள்" என்று கருணை இன்றிக் கட்டளை இட்டனன். கூற்றினும் கொடிய அரக்கர்கள், துணையிலானைத் துணையாக உடைய சிறுவரைப் பற்றிக் கொண்டு போய், வாள், வேல், மழு, தண்டு, கோடாலி, ஈட்டி முதலிய பலவேறு விஷத்தில் நனைத்த ஆயுதங்களினால் எறிந்தனர். பலகாலும் எறிந்து பிரகலாதருடைய உடம்பில் ஒரு சிறிதும் ஊனம் ஏற்படவில்லை. அவர் கண்களை மூடி, "நமோ நாராயணாய" என்று சிந்தித்தவண்ணாகவே இருந்தார்.  ஆயுதங்கள் பொடிபட்டன. அது கண்ட தீயவர்கள் ஓடி, இரணியன்பால் உற்றது உரைத்தனர்.

நிருதன் வியந்து, நெருப்பில் இடுமாறு பணித்தனன்.  விண்ணளவாக எண்ணினாலும் சுடுகின்ற பெரும் தீயை வளர்த்து, விண்ணவர் புகழும் புண்ணியரை எடுத்து தீயில் இட்டனர். தியானபரர் ஆகிய அவருக்கு அத் தீ, தண்ணிலா எனக் குளிர்ந்தது. தாமரைத் தடாகத்தில் விளையாடும் அன்னம் போல், கனலுக்கு இடையே அவர் மகிழ்ந்து இருந்தார். காவலர் ஓடி காவலன்பால் கழறினர்.

அவுணன் வெகுண்டு, அவனைச் சிறையிட்டு, "அட்ட நாகங்களை விட்டுக் கடிக்கச் செய்யுங்கள்" என்றான். அனந்தன் கார்க்கோடகன் முதலிய எட்டுப் பாம்புகளும் இரணியன் ஏவலைச் சிரமேல் கொண்டு, பிரகலாதரைக் கொடிய நச்சுப் பற்களால் பலகாலும் கடித்தன. திருமந்திரத்தை மறவாத அவர் அசைவற்று இருந்தனர். பாம்புகளின் பற்கள் ஒடிந்து, பணாமகுடம் உடைந்து, உள்ளம் மடிந்து மீண்டு சென்றன.

இதனைப் பணியாளர் கூறக் கேட்ட இரணியன் சீறி திக்கு யானைகளை அழைத்துக் கொல்லுமாறு ஏவினான். வேழங்கள் வெகுண்டு வருவதைக் கண்ட வித்தகர், முதலை வாய்ப்பட்ட கஜேந்திரனைக் காத்த கருணைத் திறத்தைச் சிந்தித்து, 'கஜேந்திர வரதா' என்று கூறினார். யானைகள் பிரகலாதரை வணங்கி நின்றன. தூதர் ஓடி, இதனை மன்னன்பால் புகன்றனர். அவன் யானைகளைக் கொல்லுமாறு பணித்தனன். அதைக் கண்ட யானைகள் அஞ்சி, தங்கள் வெண்கோட்டால் பிரகலாதரைக் குத்தின. வாழைத்தண்டு பட்டது போல், அவருக்கு மென்மையாக இருந்தது. தந்தங்கள் ஒடிந்தன. யானைகள் அயர்வுற்று அகன்றன.

ஏவலர் ஓடி, இதனைக் காவலன்பால் இயம்பினர். கனகன் சிரித்து, "அவனைக் கட்டி மலையின் உச்சியில் வைத்து உருட்டுங்கள்" என்றான். பிரகலாதரைக் கட்டமுது போல் கட்டி, ஒரு பெருமலையின் உச்சியில் இருந்து உருட்டினர். அவர் 'ஓம் நமோ நாராயணாய' என்று உருண்டார். பூமிதேவி பெண்வடிவம் தாங்கி, அக் குழந்தையைத் தன் கரமலரால் தாங்கி, உச்சி மோந்து, முத்தமிட்டு ஆதரித்தனள். பிரகலாதர் பூமிதேவியைப் போற்றி நின்றார். பூதேவி, "கண்ணே! குழந்தாய்! உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்" என்று அருள் புரிந்தனள். ஞானக்குருந்தர் ஆகிய பிரகலாதர், "அம்மா! இளம் பருவத்தில் தவழும்போதும் நடக்கும்போதும் தவறி விழுந்தால், உலகில் உள்ள குழந்தைகள் அனைவரையும் இன்று என்னைத் தாங்கிக் காத்தது போல் காத்து அருளல் வேண்டும்" என்று வரம் கேட்டனர். அவ் வரத்தைப் பெற்ற தன்னலம் கருதாத தயாசீலர் தனித்து இருந்தனர்.

இரணியன் பிரகலாதரை சூரிய வெப்பத்தில் வெதுப்பினான்.  மழையையும் இடியையும் ஏவினான். நிலவறைக்குள் அடைப்பித்தான். விஷத்தை உண்பித்தான். பெருங்கல்லிலே கட்டி கடலில் வீழ்த்தினான். சாந்தசீலராகிய அவர், “சாகர சயனா” என்று திருமாலைத் துதித்தனர். கல் தெப்பமாகிக் கடலில் மிதந்து கரை சேர்ந்தனர். இரணியன் இவ்வாறு பலப்பல தண்டனைகளை விதித்தான். ஒன்றாலும் பிரகலாதருக்கு, ஒரு சிறிதும் தீங்கு உண்டாகவில்லை. இவற்றால் அவருடைய உள்ளமும் சிறிதும் மாறுபடவில்லை. மேலும் மேலும் உறுதியாகப் பக்தி புரிந்தனர்.

ஒன்றாலும் ஊறுபடாமலும் மாறுபடாமலும் உள்ள அவருடைய பெருமையை இரணியன்பால் தூதர் கூறினர். இரணியன் அவரை அழைத்து, சிறிதும் இரக்கமின்றி வாளை ஒங்கி தானே கொல்ல ஓடினான். அவர் சிறிதும் அச்சமின்றி "ஓம் நமோ நாராயணாய" என்று சிந்தித்த வண்ணமாக நின்றார். இரணியன் அவருடைய உறுதியைக் கண்டு, இறும்பூதுற்றான். "மதிநலம் படைத்த அமைச்சர்களே! என் மகனுடைய மனக் கருத்து அறியாமல் நான் இதுகாறும் கெட்டேன். இப்போதுதான் உள்ளக் குறிப்பை உணர்ந்து உவகை உறுகின்றேன். என் தம்பியைக் கொன்ற நாராயணணை நாடி நாடி அயர்த்துப் போனேன். நமது சிறிய பிதாவைக் கொன்ற நாராயணனை எப்படியும் நாம் கண்டுபிடித்து அப்பாவிடம் காட்டிக் கொல்விக்க வேண்டும் என்று மகன் கருதினான் போலும். பகையாளியின் குடியை உறவாடிக் கெடுக்க வேண்டும். அந்த உபாயத்தை என் மகன் மேற்கொண்டு இதுகாறும் அந்த அரியை பத்தி பண்ணுவது போல் பாசாங்கு செய்து அவனை வசப்படுத்தினான். என்னிடம் காட்டிக் கொல்விக்கவே அவன் இவ்வாறு செய்தான்" என்று சொல்லி, "கண்ணே! பிரகலாதா! உனது அறிவின் திட்பத்தை மெச்சினேன். இப்படி வா, மகனே! அந்த மாயவன் எங்குளன் கூறு" என்று வினவினான்.

அன்பு வடிவாய அருந்தவச் செல்வர், "ஐயனே! மலரில் மணம்போல், எள்ளுக்குள் எண்ணெய்போல், என் ஐயன் இங்கும் அங்கும் எங்கும் உள்ளான். உன்னிலும் உள்ளான். என்னிலும் உள்ளான். அவன் இல்லாத இடமில்லை" என்றார். இரணியன், "மைந்தா! என்னிலும் உளன் என்றால் என்னைப் பிளந்து பார்ப்பது எப்படி? உன்னிலும் உளன் என்றால் உன்னைப் பிளக்க முடியவில்லை. இதோ, இந்தத் தூணில் உள்ளானோ? உரை" என்று கேட்டான்.


"சாணிலும் உளன், ஓர்தன்மை  அணுவினைச் சதகூறு இட்ட

கோணிலும் உளன், மாமேருக் குன்றிலும் உளன், இந்நின்ற

தூணிலும் உளன், முன்சொன்ன சொல்லிலும் உளன், இத்தன்மை

காணுதி விரைவின் என்றார், நன்றுஎனக் கனகன் சொன்னான்".


பிரகலாதர், "தந்தையே!  அப் பரமன் சாணிலும் உளன். அணுவை நூறு கூறு இட்ட பரமாணுவிலும் உளன். மேருவிலும் உளன். இத் தூணிலும் உளன். உளன் என்னும் சொல்லிலும் உளன்.  காணுதி" என்று அருளிச் செய்தார்.

இரணியன் சீற்றம் மிகுந்து, "பேதாய்!  நீ கூறியபடி இத் தூணில் அந்த அரி இல்லையானால், சிங்கம் யானையைக் கொன்று தின்பதுபோல் உன்னை யான் கொன்று தின்பேன்" என்றான்.  பிரகலாதர், "அப்பா என்னை உம்மால் கொல்ல முடியாது. என் ஐயன் யான் கூறிய இடங்களில் தோன்றானாயின், என் உயிரை யானே விடுவன். நான் அவன் அடியனும் அல்லன்" என்றார்.


"என்உயிர் நின்னால் கோறற்கு  எளியதுஒன்று அன்று, யான்முன்

சொன்னவன் தொட்ட தொட்ட இடம்தொறும் தோன்றானாயின்.

என்உயிர் யானே மாய்ப்பன்,  பின்னும் வாழ்வுஉகப்பல் என்னின்,

அன்னவற்கு அடியேன் அல்லேன்  என்றனன் அறிவின் மிக்கான்".


கனகன் உடனே தனது கரத்தினால் அத் தூணை அறைந்தான். அத் தூணுக்குள் நரசிங்கமாக நாதன் சிரித்தனன். பிரகலாதர் சிரமேல் கரம் கூப்பி சிந்தித்து வந்தித்து நின்றார். இரணியன், "ஆரடா சிரித்தாய், சொன்ன அரிகொலோ? அஞ்சிப் புக்க நீரடா போதாதென்று நெடுந்தறி நேடினாயோ போரடா பொருதியாயில் புறப்படு புறப்படு" என்றான். பிளந்ததது தூண். நரசிங்கத்தின் திருமேனி வளர்ந்தது அண்டமட்டும். ஆயிரம் ஆயிரம் சிரங்களும், அதற்கு இரட்டியான கரங்களும் கொண்டு, ஆயிரம் கோடி வெள்ளம் அவுணர்களையும் கரங்களால் அடித்தும், பிடித்தும், கொன்றும், தின்றும், மென்றும், எற்றியும், உதைத்தும், வதைத்து அழித்தனர்.

அதுகண்ட கனகன், அஞ்சாது வாளினை எடுத்து எதிர்த்து நின்றான். பிரகலாதர், பிதாவை வணங்கி, "தந்தையே! இப்போதாவது மாதவனை வணங்கு. உன் பிழையைப் பொறுப்பன்" என்றார். இரணியன், "பேதாய்! உன் கண் காண இந்த நரசிங்கத்தையும், உன்னையும் கொன்று, என் வீரவாளை வணங்குவன்" என்றான்.


"கேள்இது நீயும்காணக்  கிளர்ந்த கோள்அரியின் கேழல்

தோளொடு தாளும் நீக்கி, நின்னையும் துணித்துப் பின்என்

வாளினைத் தொழுவது அல்லால்  வணங்குதல், மகளிர் ஊடல்

நாளினும் உளதோ என்னா  அண்டங்கள் நடுங்க ஆர்த்தான்".


அஞ்சாது எதிர்த்துப் போராடிய இரணியனை நரசிங்கமூர்த்தி பற்றிச் சுற்றி, பகலிலும் இல்லாமல், இரவிலும் இல்லாமல், அந்தி வேளையிலே, வீட்டிலும் ல்லாமல் வெளியிலும் அல்லாமல், அவன் அரண்மனை வாசற்படியிலே, விண்ணிலும் அல்லாமல், மண்ணிலும் அல்லாமல், மடித்தலத்தில் வைத்து, எந்த ஆயுதத்திலும் அல்லாமல், தமது திருவிரல் நகத்தால் மார்பினைக் கீறி, அவனுடைய குடலை மாலையாகத் தரித்து, அண்டங்கள் நடுங்க ஆர்த்தனர். திருமகளை வேண்ட, அத் தாயார் நரசிங்கத்தை அணுகினர். நரசிங்கப் பெருமான் கருணை பூத்தனர்.  பிரகலாதர் சென்று தொழுது துதித்தனர். நரசிங்கர் பிரகலாதரை எடுத்து, உச்சிமோந்து, சிரமேல் கரமலரை வைத்து, "குழந்தாய்! உனது உறுதியான பத்தியைக் கண்டு மகிழ்கின்றேன். என்ன வரம் வேண்டும்" என்று கேட்டருளினர். 


"உந்தையை உன்முன் கொன்று, உடலைப் பிளந்து அளைய,

சிந்தை தளராது, அறம் பிழையாச் செய்கையாய்!

அந்தம் இலா அன்பு என்மேல் வைத்தாய்! அளியத்தாய்!

எந்தை! இனி இதற்குக் கைம்மாறு யாது? ‘‘ என்றான்"


பிரகலாதர், "பெருமானே, என் தந்தை உயிருக்கு நன்மையும், உன் திருவடியில் மறவாத அன்பும் வேண்டும்" என்றார். 


"முன்பு பெறப் பெற்ற பேறோ முடிவு இல்லை;

பின்பு பெறும் பேறும் உண்டோ? பெறுகுவேனேல்

என்பு பெறாத இழிபிறவி எய்திடினும்

அன்பு பெறும் பேறு அடியேற்கு அருள் “ என்றான்.


நரசிங்கமூர்த்தி மகிழ்ந்து, வானவர்க்கும் தானவர்க்கும் அரசாகி, சிரஞ்சீவியாக என்றும் என்போல் நின்று ஆரசாளுதி என்று வரமளித்து முடிசூட்டினார்.


அன்னானை நோக்கி அருள் சுரந்த நெஞ்சினன் ஆய்

"என் ஆனை வல்லன்"  என மகிழ்ந்த பேர் ஈசன்,

"முன் ஆன பூதங்கள் யாவையும் முற்றிடினும்

உன் நாள் உலவாய் நீ என்போல் உளை" என்றான்.


"நல் அறமும் மெய்ம்மையும், நான்மறையும், நல் அருளும்,

எல்லை இலா ஞானமும், ஈறு இலா எப் பொருளும்,

தொல்லை சால் எண் குணனும், நின் சொல்தொழில் செய்ய,

மல்லல் உரு ஒளியாய் ! நாளும் வளர்க, நீ !"


“என்று வரம் அருளி, "எவ் உலகும் கைகூப்ப,

முன்றில் முரசம் முழங்க, முடி சூட்ட,

நின்ற அமரர் அனைவீரும் நேர்ந்து, இவனுக்கு

ஒன்று பெருமை உரிமை புரிக !" என்றான்.”


மூலம் 23

“வடிவு, இளமை, வாய்த்த வனப்பு, வணங்காக்

குடி, குலம் என்று ஐந்தும் குறித்து - முடியா

துளங்கா நிலைகாணார் தொக்குஈர் பசுவால்

இளங்கால் துறவா தவர்.” -- சிறுபஞ்சமூலம்.


உருவம், இளம்பருவம், பெற்ற அழகு, தாழ்வில்லாத குடி,  தாழாத குலம் என்று சொல்லப்பட்ட இவ்வைந்ததும், ஒருவரும் தாம் எண்ணிய அளவுக்கு நுகர்ந்து முடித்தற்கு ஏதுவாக அழியாத நிலையைக் காணமாட்டார். வாழ்நாள் வரையறுக்கப்பட்டது. (ஆதலால்) இளம் பருவத்திலேயே, பற்றுக்களைத் துறந்து தவம் செய்யாதவர், பாரத்தை இழுத்துச் செல்கின்ற எருதுக்கு ஒப்பு ஆவர். 


கடுகம் 23

“தானம் கொடுக்கும் தகைமையும், மானத்தார்

குற்றம் கடிந்த ஒழுக்கமும், - தெற்றெனப்

பல்பொருள் நீங்கிய சிந்தையும், இம்மூன்றும்

நல்வினை ஆர்க்கும் கயிறு.” -- திரிகடுகம்.


அறநெறியில் வந்த பொருளைத் தக்கார்க்கு மனம் உவந்து கொடுத்தலாகிய தானத்தைப் புரிகின்ற பெருஞ் செய்கையும்; பழிக்கு நாணுதலை உடையாரது குற்றத்தினின்று நீங்கிய நல்லொழுக்கமும்; தெளிவாகப் பல பொருள்கள் மேலும் செல்லுகின்ற சிந்தையை ஒழித்தலும் ஆகிய இம் மூன்று நற்பண்புகளும் அறத்தின் பயனை நீங்காது கட்டுகின்ற கயிறு ஆகும்.


74. தீயவருக்கு இடம் கொடுத்தல் கூடாது.

“நன்றுஅறியாத் தீயோர்க்கு இடம் அளித்த நல்லோர்க்கும்

துன்று கிளைக்கும் துயர்சேரும், - குன்றுஇடத்தில்

பின்இரவில் வந்த கரும் பிள்ளைக்கு இடம்கொடுத்த

அன்னம் முதல் பட்டது போலாம்.” -- நீதிவெண்பா.


முன்னொரு காலத்து மலையில், இரவில் வந்த காக்கைக்குத் தங்க இடம் கொடுத்த அன்னப் பறவை பின்பு துன்பப்பட்டது போல, செய்த நன்மையைத் தெரிந்துகொள்ள மாட்டாத தீயவர்களுக்குத் தமது இடத்தைக் கொடுக்கும் நல்லவர்களுக்கும், அவர்களைச் சேர்ந்த உறவினர்களுக்கும் துன்பம் வந்து சேரும்.


இதில் அமைந்த கதை ----  ஒரு மலையில் ஓர் அன்னம் தன் இனத்தோடு வசித்து வந்தது. ஒருநாள் இரவில் மழை கடுமையாகப் பெய்தது. அம் மழையில் நனைந்த காக்கை ஒன்று அன்னத்திடம் வந்து இரவு தங்க இடம் கேட்டது. அன்னமும் தங்க இடம் கொடுத்தது.  காக்கை தங்கிய இடத்தில் எச்சம் இட்டுவிட்டது. அந்த எச்சத்தில் இருந்து ஒர் ஆலம் வித்து முளைத்துப் பெரிய மரமாகி விழுதுகள் விட்டுத் தொங்கின. அவ் விழுதுகளைப் பிடித்துக் கொண்டு மலை மீது பலர் ஏறி வந்து, அந்த அன்னத்தையும், அதனோடு சேர்ந்த பிற அன்னப் பறவைகளையும் பிடித்துச் சென்றனர். தாழ்ந்த காக்கைக்கு இடம் கொடுத்ததனால் அன்னத்திற்குக் கேடு வந்தது.


063. இடுக்கண் அழியாமை - 04. மடுத்தவாய் எல்லாம்

 திருக்குறள் 

பொருட்பால் 

அ. அரசியல்

அதிகாரம் 63 -- இடுக்கண் அழியாமை


இந்த அதிகாரத்துள் வரும் நான்காம் திருக்குறளில், "பாரம் சுமக்கையில் அழுந்திய இடம் எல்லாம் தளர்ச்சி அடையாமல் முன்னேறிச் செல்லும் எருதைப் போன்றவன் பெற்ற துன்பமானது துன்பப்படும்” என்கிறார் நாயனார்.

வண்டியில் பூட்டப்பட்ட எருதுகள், வண்டியை இழுக்கும் காலத்து, சேற்று நிலம், மணல் நிலம் வந்துவிடுமாயின், பக்கங்களில் உராய்ந்தும், நிலத்தில் மூக்கை ஊன்றியும், கால்களை மடக்கித் தவழ்ந்தும், மிக வருத்தத்துடன் எப்படி வண்டியை இருத்துச் செல்லுகின்றனவோ, அதுபோல உடல் வருத்தம் பாராது, எவ்வித துன்பம் வருகின்றதோ, அதற்குத் தக்க அளவாக முயலுவானானல், அவன் எதிர்ப்பட்ட துன்பமானது துன்பப்பட்டுப் போகும்.


இதற்குத் திருக்குறள்...


மடுத்தவாய் எல்லாம் பகடு அன்னான் உற்ற

இடுக்கண், இடர்ப்பாடு உடைத்து.


இதற்குப் பரிமேலழகர் உரை ---


மடுத்த வாய் எல்லாம் பகடு அன்னான் --- விலங்கிய இடங்கள் எல்லாவற்றினும், சகடம் ஈர்க்கும் பகடு போல வினையை எடுத்துக் கொண்டு உய்க்க வல்லானை; 

உற்ற இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து --- வந்துற்ற இடுக்கண் தானே இடர்ப்படுதலை உடைத்து.

('மடுத்தவாய் எல்லாம்' என்பது பொதுப்பட நின்றமையின், சகடத்திற்கு அளற்று நிலம் முதலியவாகவும், வினைக்கு இடையூறுகளாகவும் கொள்க. 'பகடு மருங்கு ஒற்றியும் மூக்கு ஊன்றியும் தாள் தவழ்ந்தும்' (சீவக.முத்தி,186) அரிதின் உய்க்குமாறு போலத் தன் மெய் வருத்தம் நோக்காது முயன்று உய்ப்பான் என்பார் 'பகடு அன்னான்' என்றார்.)


இத் திருக்குறளுக்கு விளக்கமாக, பெரியபுராணத்தில் வரும் குங்குலியக் கலய நாயனார் வரலாற்றை வைத்து, குமார பாரதி என்பார் பாடி அருளிய "திருத்தொண்டர் மாலை" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...


தலைஅன்பி னால்வளைந்தார் தம்மைநிமிர்த் திட்டான்

கலையன்பின் காண்இடுக்கம் காணான் - மலைவுஇல்

மடுத்தவாய் எல்லாம் பகடுஅன்னான் உற்ற

இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து.


இதன் பொருள் ---


சோழ நாட்டிலே விளங்கும் திருப்பனந்தாள் என்பது ஒரு சிவத்தலம். அது "தாடகையீச்சரம்" என்று திருப்பதிகத்தில் பேசப்படும். ஒரு திருவிளையாட்டின் நிமித்தம் தாடகை என்னும் பெண்ணுக்குச் சிவலிங்கப் பெருமான் திருமேனி சாய்ந்து அருளினர். அதனை முன்போல நிமிர்க்கும் பொருட்டு அரசன் பல முயற்சிகள் செய்தும் பலிக்கவில்லை. அதனால் வருந்திய மன்னன் வருத்ததினை நீக்கும்பொருட்டுத் தமது கழுத்திலே கயிறு பூட்டி, அன்பு மேலீட்டால் இழுத்துச் சிவலிங்கத்தை நிமிர்த்திய கலய நாயனார், குங்குலிய தூபப் பணிக்கு முட்டுப்பாடு வர, தனது மனைவியார் தந்த மங்கலியத்தையும் விற்றுக் குங்குலியப் பணியை மாறாமல் செய்து, இம்மையில் குறைவற்ற செல்வமும் பெற்றார். பிறவித் துன்பமும் நீங்கினார்.  குங்குலியக் கலயர் என்ற பெயரையும் பெற்றார்.  


இதனை, விலங்கிய இடங்கள் எல்லாவற்றினும் சகடம் ஈர்க்கும் பகடுபோல வினையை எடுத்துக்கொண்டு உய்க்க வல்லானை வந்து உற்ற உடுக்கண் தானே இடர்ப்படுதலை உடைத்து எனத் திருவள்ளுவ நாயனார் கூறினர். தன் மெய்வருத்தம் நோக்காது முயன்று செய்வோர் இன்புறுவர் என்றபடி. இடுக்கம், இடுக்கண் - துன்பம்.


முந்நீர் நாப்பண் திமில்சுடர் போலச்

செம்மீன் இமைக்கும் மாக விசும்பின்

உச்சி நின்ற உவவுமதி கண்டு,

கட்சி மஞ்ஞையின் சுரமுதல் சேர்ந்த

சில்வளை விறலியும் யானும் வல்விரைந்து

தொழுதனம் அல்லமோ, பலவே கானல்

கழிஉப்பு முகந்து கல்நாடு மடுக்கும்

ஆரைச் சாகாட்டு ஆழ்ச்சி போக்கும்

உரன் உடை நோன் பகட்டு அன்ன எங்கோன்

வலன் இரங்கு முரசின் வாய்வாள் வளவன்

வெயின்மறைக் கொண்ட உருகெழு சிறப்பின்

மாலை வெண்குடை ஒக்குமால் எனவே.  --- புறநானூறு.


குடை மங்கலம். சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந் திருமாவளவனை உறையூர் மருத்துவன் தாமோதரனார் பாடியது.


கடல் நடுவே உள்ள படகில் ஏற்றி வைத்த விளக்கைப் போல, செவ்வாய் மீன் (திருவாதிரை நட்சத்திரம்) மின்னுகின்ற வானத்தின் உச்சியிலே தோன்றுகின்ற முழுநிலவை, காட்டு மயில்கள் கண்டு, களித்து ஆடுவதைப் போல, காட்டு வழியே வந்துகொண்டிருந்து நானும், வளையல்களை அணிந்த விறலியும் கண்டு பலமுறை தொழுதோம். கடற்கரைக் கழிமுகத்தில் விளைந்து உப்பை முகந்து கொண்டு, மலைநாடு நோக்கிச் செல்லும் ஆரக்கால் உடைய வண்டி, பள்ளத்தில் அழுந்திக் கொள்ளாதவாறு இழுத்துச் செல்லும் வலிமை மிக்க, பாரம் பொறுக்கும் எருதினை ஒத்தவன் என் தலைவன் சோழன் திருமாவளவன். வெற்றி முழங்கும் முரசினையும், வீரம் விளைக்கத் தவறாத வாளினையும் உடைய எமது சோழ வளவன், வெயில் மறைக்க எடுத்த பகைவர் கண்டு அஞ்சும், புகழ்மாலை மூண்ட, வெண்கொள்ளக் குடை போல இருந்தது என்று எண்ணி, முழு நிலவைத் தொழுத எங்களுக்கு இன்று அவன் குடையினையே கண்டு தொழுவதற்குச் சொல்லவும் வேண்டுமோ? (வேண்டாம் என்றபடி).



உடைவளை கடுப்ப மலர்ந்த காந்தள்

அடைமல்கு குளவியொடு கமழுஞ் சாரல்

மறப்புலி உடலின் மான்கணம் உளவோ?

மருளின விசும்பின் மாதிரத்து ஈண்டிய

இருளும் உண்டோ? ஞாயிறு சினவின்

அச்சொடு தாக்கிப் பார் உற்று இயங்கிய

பண்டச் சாகாட்டு ஆழ்ச்சி சொலிய

அரிமணன் ஞெமரக் கல்பக நடக்கும்

பெருமிதப் பகட்டுக்குத் துறையும் உண்டோ?

எழுமரங் கடுக்குந் தாள்தோய் தடக்கை

வழுவில் வன்கை மழவர் பெரும!

இருநில மண்கொண்டு சிலைக்கும்

பொருநரும் உளரோ நீகளம் புகினே.  ---  புறநானூறு.


ஔவையார் அதியமான் பேராற்றலை வியந்து பாடியது.

    முரிந்த வளையலை ஒப்ப மலர்ந்த வெண்காந்தள் பூவும், இலையோடு மலர்ந்த மலைமல்லிகை மலர்களும் கலந்து மணம் கமழும் மலைச் சரிவில், வலிமை மிக்க புலி ஒன்று சீறி எழுந்தால், அதை எதிர்த்து நிற்கும் வலிமை உடைய மான் கூட்டம் எங்காவது உள்ளதா? சூரியன் சுடர் பரப்பி எழுந்துவிட்டால், மேகம் மறைத்து இருக்கும் வானத்திலும், திசைமுகத்திலும், இருட்டு என்பது இருக்குமா? பாரம் மிகுதியால் அச்சு முறிய ஏற்றிய பண்டங்கள் நிறைந்து வழியச் செல்லும் வண்டியின் பாரத்தைச் சுமக்கும், நிர் ஓடிக் கழிந்த வரிமணல் பரக்கவும், காலின் கீழ்ப்படும் கற்கள் தூளாகவும் நடக்க வல்ல, வலிமை மிக்க மாட்டிற்குச் செல்ல முடியாத வழியும் உண்டா? அதைப்போல, கணை மரத்தைப் போன்ற வலிமை மிக்க, வெற்றி கொள்ளத் தவறாத தோள்களை உடைய விரர்களுக்குத் தலைவனே! நீ போர் செய்யப் புறப்பட்டால், உன்னை எதிர்க்க வல்ல வீரர்களும் இந்த மண்ணில் இருக்கின்றனரா?


போர் என்று வந்தால் உண்டாகும் தீமைகள் எண்ணித் தயங்கிய அதியமானுக்கு, "நீ போர் செய்யவேண்டாம். போர்க்களத்தில் உன்னைக் கண்டாலே போதும், பகைவர்கள் பயந்து ஓடி விடுவார்கள்" என்னும் கருத்து அமைய, ஔவையார் பாடிய பாடல் இது.


063. இடுக்கண் அழியாமை - 02. வெள்ளத்து அனைய

 திருக்குறள் 

பொருட்பால் 

அ. அரசியல்

அதிகாரம் 63 -- இடுக்கண் அழியாமை


இந்த அதிகாரத்துள் வரும் இரண்டாம் திருக்குறளில், "வெள்ளத்தைப் போல வருகின்ற பெரும் துன்பமானது, அறிவு உடைய ஒருவன் உள்ளத்தால் தீருமாறு அழுந்தி நினைக்க அழிந்துவிடும்" என்கின்றார் நாயனார்.

துன்பம் என்பது ஒருவன் தனது மனத்தில் கொள்ளும் நிலையே அல்லாமல் வேறு ஒன்றும் இல்லை. அத் துன்பத்தை ஒருவன் இன்பமாக எண்ணுகின்ற அறிவு உடையவனாக இருப்பானாயின், அந்த அறிவுடைமையானது, எல்லாத் துன்பங்களும் தன்னிடத்தே வராவண்ணம் செய்துவிடும். இவ்வித உபாயமானது, உண்மை அறிவு உள்ளவர்க்கே முடியும்.


இதற்குத் திருக்குறள்...


வெள்ளத்து அனைய இடும்பை, அறிவு உடையான்

உள்ளத்தின் உள்ளக் கெடும்.


இதற்குப் பரிமேலழகர் உரை ---


வெள்ளத்து அனைய இடும்பை --- வெள்ளம்போலக் கரையிலவாய இடும்பைகள் எல்லாம்; 


அறிவுடையான் உள்ளத்தின் உள்ளக் கெடும் --- அறிவுடையவன் தன் உள்ளத்தான் ஒன்றனை நினைக்க, அத்துணையானே கெடும்.


(இடும்பையாவது உள்ளத்து ஒரு கோட்பாடேயன்றிப் பிறிதில்லை என்பதூஉம், அது மாறுபடக் கொள்ள நீங்கும் என்பதூஉம் அறிதல் வேண்டுதலின், 'அறிவுடையான்' என்றும், அவ்வுபாயத்தது எண்மை தோன்ற 'உள்ளத்தின் உள்ள' என்றும் கூறினார். ஊழினான் ஆய இடுக்கணால் அழியாமைக்கு உபாயம் கூறப்பட்டது.)


இத் திருக்குறளுக்கு விளக்கமாக, பெரியபுராணத்தில் வரும் சுந்தரமூர்த்தி சுவாமிகள் வரலாற்று நிகழ்வை வைத்து, குமார பாரதி என்பார் பாடி அருளிய, "திருத்தொண்டர் மாலை" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...


ஆறாறு கட்டாரை ஆறுஅணையா வாறுபெருகு

ஆறுஆறு காட்டநடந்து ஆரூரர் - பேறானார்,

வெள்ளத்து அனைய இடும்பை அறிவுடையான்

உள்ளத்தின் உள்ளக் கெடும்.


இதன் பொருள் ---


தத்துவங்கள் முப்பத்தாறனையும் தலை எடுக்கவொட்டாமல் அடக்கிய பெருமையை உடையவர் சுந்தரமூர்த்தி சுவாமிகள். சேரமான் பெருமாளும் சுவாமிகளும் திருவையாற்றைத் தரிசிக்க விரும்பிச் சென்றனர். காவிரி வெள்ளம் கரைபுரண்டு சென்றது. காவிரி நீர் விலகி வழிகொடுக்குமாறு, "ஐயாறு உடைய அடிகளோ" எனத் திருப்பதிகம் பாடி விண்ணப்பித்தார் சுவாமிகள். சிவபெருமான் நீரை விலகும்படி பணித்தார். சுவாமிகள் சேரர்பெருமானுடன் ஐயாறப்பரைத் தரிசித்துப் பேரானந்தம் பெற்றார்.  

வெள்ளம் போலக் கரை இலவாய இடும்பைகள் எல்லாம் அறிவுடையவன் தன் உள்ளத்தான் ஒன்றினை நினைக்க, அத்துணையானே கெடும் எனத் திருவள்ளுவ நாயனார் அருளிச் செய்தமை காண்க.

ஆறுஆறு - முப்பத்தாறு. பெருகு ஆறு - நீர் பெருகிய ஆறு.  ஆறு காட்ட - வழிகாட்ட. இடும்பை - துன்பம்.   உள்ள - நினைக்க.



063. இடுக்கண் அழியாமை - 01. இடுக்கண் வருங்கால்

 திருக்குறள் 

பொருட்பால் 

அ. அரசியல்

அதிகாரம் 63 -- இடுக்கண் அழியாமை


அதாவது, ஒரு தொழிலை முயல்பவன், ஊழ்வினை காரணமாகவாவது, பொருள் இன்மை காரணமாகவாவது, உடம்பு வருத்தம் காரணமாகாவது இன்னல் நேர்ந்த போது, உள்ளத் தளர்ச்சி அடையாமையைக் குறித்தது.

இந்த அதிகாரத்துள் வரும் முதல் திருக்குறளில், "ஒருவனுக்குத் துன்பமானது தொழிலால் தனக்கு வரும்போது, அதற்கு உள்ளம் தளராமல், மேலும் கிளர்ச்சி கொள்ளவேண்டும். அதனை எதிர்த்துக் கடப்பது அந்தக் கிளர்ச்சியைப் போன்று வேறு இல்லை" என்கின்றார் நாயனார்.

ஒருவன் எடுத்துக் கொண்ட தொழில் முடியும்போது அவனுக்கு மகிழ்ச்சி உண்டாகும். அந்த மகிழ்ச்சியையே தனக்குத் துன்பம் வந்தகாலத்தும் கொள்வானானால், எடுத்த தொழிலை விடாது முடிக்கும் வல்லமை உண்டாகும்.


இதற்குத் திருக்குறள் --


இடுக்கண் வரும்கால் நகுக, அதனை

அடுத்து ஊர்வது அஃது ஒப்பது இல்.


இதற்குப் பரிமேலழகர் உரை ---

இடுக்கண் வருங்கால் நகுக --- ஒருவன் வினையால் தனக்கு இடுக்கண் வருமிடத்து, அதற்கு அழியாது உளமகிழ்க; 

அதனை அடுத்து ஊர்வது அஃது ஒப்பது இல் --- அவ்விடுக்கணை மேன்மேல் அடர வல்லது அம் மகிழ்ச்சி போல்வது பிறிதில்லையாகலான்.

(வினை இனிது முடிந்துழி நிகழற்பாலதாய மகிழ்ச்சியை, அதற்கு இடையே இடுக்கண் வருவழிச் செய்யவே, அவன் அழிவின்றி, மன எழுச்சியான், 'அதனைத் தள்ளி அக்குறை முடிக்கும் ஆற்றலுடையனாம்' ஆகலின், 'அடுத்து ஊர்வது அஃது ஒப்பது இல்' என்றார்.)


இத் திருக்குறளுக்கு விளக்கமாக, கமலை வெள்ளியம்பலவாண முடிவர் பாடியருளிய, "முதுமொழி மேல் வைப்பு" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்....


நக்கர் சிறிது நகைத்தலும், முப்புரமும்

அக்கணமே வெந்து விழும், ஆதலால் ---  மிக்க

இடுக்கண் வரும்கால் நகுக, அதனை

அடுத்து ஊர்வது அஃது ஒப்பது இல்.


இதன் பொருள் ---


நக்கர் - நிர்வாணர். சிவபிரான் என்றபடி. சிவபெருமான் முப்புரங்களை எரித்தமை, சிரித்தும், விழித்தும், அம்பு எய்தும் எரித்தார் என்று மூன்று விதமாக வழங்கும்.  துன்பம் வருங்காலத்தும் பொறுமையுடன் இருக்கவேண்டும்.


பின்வரும் பாடல் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளதை காண்க...


தூயசொல் ஆட்டும், துணிவு அறிவும், துன்பங்கள்

தோயக் கலங்காத் துணைவலியும், --- பூயல்

படுக்குந் திருவத்த னாரே பறிப்பர்

அடுக்கு மடிச்சேரா வாறு.  --- இன்னிலை.


இதன் பொருள் ---


தூய சொல் ஆட்டும் - தூய்மையான சொற்களைப் பேசுவதும்; துணிவு அறிவும் - (அறிஞர் உண்டு என்று ஆய்ந்து) துணிந்த பொருளை அறிவதும், துன்பங்கள் தோய கலங்கா துணை வலியும் - கவலைகள் வந்து பொருந்தியபோது மனம் கலங்காத உள்ள வலிமை பெற்றிருப்பதும், பூயல் படுக்கும் திருவத்தனாரே - (ஆகிய இவற்றை) பொருந்தச் சேர்க்கும் செல்வத்தினை உடையவரே, அடுக்கும் மடி சேராவாறு பறிப்பர் - அடுக்கி வருகின்ற பிறவியில் சேராதவாறு அதனைக் களைவர்.


தூயசொல் பேசுதலும், செம்பொருள் துணிவும், துன்பத்திற்குக் கலங்காத மனவலிமையும் உடையவன் பிறவியை நீக்குவான்.


தூயசொல் என்பது பொய், புறங்கூறல், கடுஞ்சொல், பயனில்சொல் என்ற நான்கினையும் நீக்கிப் பேசும் சொல்லை உணர்த்தியது. வாய்மையும் இன்சொல்லும் எனக் கொள்க. துணிவு அறிவு என்பது துணிவினை அறியும் அறிவு எனப் பொருள்படும். கடவுள் உண்டு, இம்மை, மறுமை, நல்வினை, தீவினை, முத்தி, நரகம் இவையுண்டு என்று சான்றோர் துணிந்தவற்றைத் தானும் அறிந்து கொள்ளல். "உலகத்தார் உண்டு என்பது இல் என்பான் வையத்து அலகையா வைக்கப்படும்" என்று திருவள்ளுவ நாயனார் கூறியபடி உலகத்தார் உண்டு என்பதை இல்லை என்பவன் மனிதன் அல்லன். அவன் ஒரு பேய்; ஆதலால், அறிஞர் உண்டு என்பதை உண்டு என்று துணிபவனே மக்களில் ஒருவனாக மதிக்கப்படுவான். "இடுக்கண் வருங்கால் நகுக, அதனை அடுத்து ஊர்வது அஃது ஒப்பது இல்" என்று திருவள்ளுவ நாயனார் கூறியவாறு மனமகிழ்வுடன் நகை முகங்கொண்டு துன்பத்தைப் போக்க வேண்டுமேயன்றிக் கலங்குதல் கூடாது. கலங்குவோன் தான் செய்யும் வினையைக் காலமறிந்து செய்யாமல் கைவிடுவான். அதனால் கலங்காத அறிவும் வேண்டும் என்பது கருத்து. இம்மூன்றும் உடையவன் எவனோ அவன் பிறவியைக் களைந்து முத்தியடைவன் என்பது சொல்லப்பட்டது.


மூலம் 22

“பூத்தாலும் காயா மரமும்உள, நன்றுஅறியார்

மூத்தாலும் மூவார்,  நூல்தேற்றாதார் - பாத்திப்

புதைத்தாலும் நாறாத வித்துஉள, பேதைக்கு

உரைத்தாலும் செல்லாது உணர்வு.” -- சிறுபஞ்சமூலம்.


பூத்து இருந்தாலும் காய்க்காத மரங்களும் உண்டு. (அதுபோல) நன்மையை அறியாதவர் வயதால் முதிர்ந்தாலும் அறிவினால் முதிர்வதில்லை. அறிவு நூல்களைக் கற்றுத் தெளியாதவர் தன்மை இது ஆகும். பாத்தி கட்டிப் புதைத்தாலும் முளைக்காத வித்தும் உண்டு. (அது போல) அறிவில்லாதவனுக்கு நன்மையை எடுத்துக் கூறினாலும் அறிவு தோன்றாது.


கடுகம் 22

 “பற்று என்னும் பாசத் தளையும், பலவழியும்

பற்று அறாது ஓடும் அவாத் தேரும், - தெற்றெனப்

பொய்த்துரை என்னும் பகை இருளும், இம்மூன்றும்

வித்து அற வீடும் பிறப்பு.” -- திரிகடுகம்.


பற்று என்று சொல்லப்படுகின்ற கயிற்று விலங்கும், பல பொருள்களிலும் பிடிப்பு நீங்காமல் ஓடுகின்ற அவா என்னும் தேரும், தெளிவாகப் பிறருக்குப் பொய்யாக ஒழுகுதல் என்று சொல்லப்படும் அறிவுக்குப் பகையாகிய அஞ்ஞான இருளும் ஆகிய இம் மூன்றும் தனக்குக் காரணமாகிய அவிச்சை கெட்டால் பிறப்பு இல்லாது ஆகும்.

ஒன்றின்மேல் பற்று இருந்தால் அதை ஒழித்து வேறு எங்கும் மனம் செல்லாது. எனவே, பாசத்தைத் தளை என்றார். ஆசை மேலே மேலே ஓடிக்கொண்டிருத்தலால் அவாவைத் தேர் என்றார். "எல்லா விளக்கும் விளக்கு அல்ல, சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு" எனத் திருவள்ளுவ நாயனார் அருளி இருக்கிறார். எனவே, பொய்யாமை விளக்கு என்பதால், பொய்யுரை இருள் எனப்பட்டது. பற்று - அகப்பற்று புறப்பற்று என்று இருவகைப்படும். நான் என்னும் உணர்ச்சி அகப்பற்று. எனது என்னும் உணர்ச்சி புறப்பற்று.  வித்து - விதை, முளை. "அவா என்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும், தவாஅப் பிறப்பு ஈனும் வித்து" என்றார் திருவள்ளுவ நாயனார். இதற்கு உடம்பு நீங்கிப்போங் காலத்து அடுத்த வினையும், அது காட்டும் கதி நிமித்தங்களும், அக் கதிக்கண் அவாவும் உயிரின்கண் முறையே வந்துதிப்ப, அறிவை மோகம் மறைப்ப, அவ் வுயிரை அவ்வவா அக் கதிக்கண் கொண்டு செல்லுமாதலால், அதனைப் பிறப்பீனும் வித்து என்று பரிமேலழகர் உரை காட்டி இருப்பது அறிக.


73. இவர்களுக்கு இவையில்லை

“போற்று குருகிளைஞர் பொன் நசையோர்க்கு இல்லை,

தோற்று பசிக்குஇல்லை சுவைபாகம், - தேற்றுகல்வி

நேசர்க்கு இல்லைசுகமும் நித்திரையும், காமுகர்தம்

ஆசைக்குஇல்லை பயம் மானம்.” -- நீதிவெண்பா.


புகழுக்குரிய ஆசிரியரும் சுற்றத்தாரும் பணத்தாசை கொண்டவர்களுக்கு இல்லை. உண்டாகும் மிக்க பசிக்கு நல்ல சுவையும் நல்ல சமையலும் இல்லை (பசிக்கு எது கிடைத்தாலும் உண்பர்). அறிவைத் தெளிய வைக்கும் கல்வியில் விருப்பம் உடையவருக்கு இன்பமும் உறக்கமும் இல்லை. காமம் கொண்டவர்களின் ஆசைக்கு பயமும் அவமானமும் இல்லை. (அச்சமோ, அவமானத்தைப் பற்றிய கவலையோ இல்லை.)


(குரு - ஆசிரியர்.  கிளைஞர் - உறவினர்.  சுவை பாகம் - சுவையும் சமையலும்.  நித்திரை - உறக்கம்.)


பொது --- 1136. ஆனாத ஞான

அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

ஆனாத ஞான (பொது)


முருகா!

அடியேனுக்குச் செய்த திருவருளை ஒருபோதும் மறவேன்.


தானான தான தத்த தத்த தத்தன

     தானான தான தத்த தத்த தத்தன

          தானான தான தத்த தத்த தத்தன ...... தனதான


ஆனாத ஞான புத்தி யைக்கொ டுத்ததும்

     ஆராயு நூல்க ளிற்க ருத்த ளித்ததும்

          ஆதேச வாழ்வி னிற்ப்ர மித்தி ளைத்துயி ......ரழியாதே


ஆசாப யோதி யைக்க டக்க விட்டதும்

     வாசாம கோச ரத்தி ருத்து வித்ததும்

          ஆபாத னேன்மி கப்ர சித்தி பெற்றினி ...... துலகேழும்


யானாக நாம அற்பு தத்தி ருப்புகழ்

     தேனூற வோதி யெத்தி சைப்பு றத்தினும்

          ஏடேவு ராஜ தத்தி னைப்ப ணித்ததும் ...... இடராழி


ஏறாத மாம லத்ர யக்கு ணத்ரய

     நானாவி கார புற்பு தப்பி றப்பற

          ஏதேம மாயெ னக்க நுக்ர கித்ததும் ...... மறவேனே


மாநாக நாண்வ லுப்பு றத்து வக்கியொர்

     மாமேரு பூத ரத்த னுப்பி டித்தொரு

          மாலாய வாளி யைத்தொ டுத்த ரக்கரி ......லொருமூவர்


மாளாது பாத கப்பு ரத்ர யத்தவர்

     தூளாக வேமு தற்சி ரித்த வித்தகர்

          வாழ்வேவ லாரி பெற்றெ டுத்த கற்பக ...... வனமேவும்


தேநாய காஎ னத்து தித்த வுத்தம

     வானாடர் வாழ விக்ர மத்தி ருக்கழல்

          சேராத சூர னைத்து ணித்த டக்கிய ...... வரைமோதிச்


சேறாய சோரி புக்க ளக்கர் திட்டெழ

     மாறாநி சாச ரக்கு லத்தை யிப்படி

          சீராவி னால றுத்த றுத்தொ துக்கிய ...... பெருமாளே.


                             பதம் பிரித்தல்


ஆனாத ஞான புத்தியைக் கொடுத்ததும்,

     ஆராயு நூல்களில் கருத்து அளித்ததும்,

          ஆதேச வாழ்வினில் ப்ரமித்து, இளைத்து, உயிர்..அழியாதே,


ஆசா பயோதியைக் கடக்க விட்டதும்,

     வாசாம கோசரத்து இருத்துவித்ததும்,

          ஆபாதனேன் மிக ப்ரசித்தி பெற்று, இனிது, ...... உலகு ஏழும்


யான் ஆக நாம அற்புதத் திருப்புகழ்

     தேன் ஊற ஓதி, எத்திசைப் புறத்தினும்

          ஏடு ஏவு ராஜதத்தினைப் பணித்ததும், ...... இடர்ஆழி


ஏறாத மா மலத்ரய, குண த்ரய,

     நானா விகார புற்புதப் பிறப்பு அற,

          ஏது ஏமமாய் எனக்கு அநுக்ரகித்ததும் ...... மறவேனே.


மாநாக நாண் வலுப்புறத் துவக்கி ஒர்

     மாமேரு பூதரத் தனுப் பிடித்து, ஒரு

          மால் ஆய வாளியைத் தொடுத்து, அரக்கரில் ......ஒரு மூவர்


மாளாது, பாதகப் புர த்ரயத்தவர்

     தூளாகவே, முதல் சிரித்த வித்தகர்

          வாழ்வே! வலாரி பெற்று எடுத்த கற்பக ...... வனமேவும்


தே நாயகா! எனத் துதித்த உத்தம,

     வான்நாடர் வாழ, விக்ரமத் திருக்கழல்

          சேராத, சூரனைத் துணித்து அடக்கிய ...... வரைமோதிச்


சேறு ஆய சோரி புக்கு அளக்கர் திட்டு எழ,

     மாறா நிசாசரக் குலத்தை இப்படி

          சீராவினால் அறுத்து அறுத்து ஒதுக்கிய ......பெருமாளே.


பதவுரை


மா நாகம் நாண் வலுப்புறத் துவக்கி --- பெரிய நாகமாகிய வாசுகியை நாணாம வலிமை பெறக்கட்டி,


ஒர் மா மேரு பூதரத் தனுப் பிடித்து --- ஒப்பற்ற பெரிய மேருமலையை வில்லாகப் பிடித்து, 


ஒரு மால் ஆய வாளியைத் தொடுத்து --- ஒப்பற்ற திருமாலைக் கணையாகத் தொடுத்து, 


அரக்கரில் ஒரு மூவர் மாளாது பாதகம் புரத்ரயத்தவர் தூளாகவே --- அங்கிருந்த அசுரர்களில் சிறந்த தலைவர்களாகிய மூன்று பேர் மட்டும் இறந்து போகாமல் பிழைக்கவும், பாவங்களைப் புரிந்த முப்புரத்தில் உள்ளார் வெந்து பொடியாகவும்,


நுதல் சிரித்த வித்தகர் வாழ்வே --- புன்முறுவல் புரிந்த ஞானவடிவினர் ஆகிய சிவபெருமான் அருளிய திருப்புதல்வரே!


வலாரி பெற்றெடுத்த கற்பக வனம் மேவும் தே நாயகா --- வலன் என்ற அரக்கனைக் கொன்ற தேவேந்திரன் வளர்த்த, கற்பக வனத்தை உடைய தேசத்திற்குத் தலைவரே!


எனத் துதித்த உத்தம வான் நாடர் வாழ --- என்று துதித்த உத்தமர்களாகிய தேவர்கள் இனிது வாழும்பொருட்டு, 


விக்ரமத் திருக் கழல் சேராத சூரனைத் துணித்து --- வல்லமை பொருந்திய திருவடியை அணுகாதவனாகிய சூரபதுமனைப் பிளந்தும்,


அடக்கிய வரை மோதி --- பூத வெள்ளங்களை அடங்கச் செய்த கிரவுஞ்ச மலையைத் தகர்த்தும்,


சேறு ஆய சோரி புக்கு அளக்கர் திட்டு எழ --- உதிரச் சேறு சென்று கடலில் திட்டு உண்டாகவும்,


மாறா நிசாசர குலத்தை --- மாறுபட்ட அசுரர் குலத்தை இவ்வாறு,  


சீராவினால் அறுத்து அறுத்து ஒதுக்கிய பெருமாளே --- 

உடைவாளினால் அறுத்துத் அறுத்துத் தள்ளிய பெருமையில் மிக்கவரே!


ஆனாத ஞான புத்தியைக் கொடுத்ததும் --- நீங்காத ஞானத்துடன் கூடிய அறிவைக் தந்ததையும், 


ஆராயும் நூல்களில் கருத்து அளித்ததும் --- ஆராய்வதற்கு உரிய அறிவு நூல்களின் உட்கருத்துக்களைக் கொடுத்ததையும், 


ஆதேச வாழ்வினில் ப்ரமித்து இளைத்து உயிர் அழியாதே --- திரிபு உடைய வாழ்க்கையினை மெய்யென்று மயங்கி, இளைத்து ஆவியானது அழிந்து போகா வண்ணம்


ஆசா பய உததியைக் கடக்க விட்டதும் --- ஆசை என்கின்ற நீர்க் கடலைக் கடக்கும் ஆற்றலைத் தந்ததையும், 


வாசா மகோசரத்து இருத்து வித்ததும் --- வாக்கும் மனமும் கடந்த அதீத நிலையில் அடியேனை இருக்க வைத்ததையும், 


ஆபாதனேன் மிக ப்ரசத்தி பெற்று --- அசுத்தனாகிய சிறியேன் மிக்க புகழினால் எங்கும் வெளிப்படும் தன்மையைப் பெற்று, எய்தி 


இனிது உலகேழும் யான் ஆக --- இனிமையுடன் ஏழு உலகும் யானாக விளங்க,


நாம அற்புதத் திருப்புகழ் தேன் ஊற ஓதி --- புகழும் அற்புதமும் நிறைந்த தேவரீரது திருப்புகழை, இன்பத் தேன் ஊறுமாறு பாடி,


எத்திசைப் புறத்தினும் ஏடு ஏவு ராஜதத்தினை பணித்ததும் --- எல்லா திசைகளிலும் அத் திருப்புகழ் ஏட்டினை அனுப்பும் ஆளுகையை எனக்குப் பணித்து அருளியதையும்,


இடர் ஆழி ஏறாத மா மலத்ரய குணத்ரய --- துன்பக் கடலினின்றும் கரை ஏற முடியாமல் செய்வதாகிய பெரிய மலங்களாகிய ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்றும், சத்துவம், இராசதம், தாமதம் என்ற மூவகைக் குணங்களும்,


நானா விகார புற்புத பிறப்பு அற --- நாலா வகையான வேற்றுமைகளுடன் கூடிய, நீர்க்குமிழி போல் தோன்றி மறைவதுமான பிறவிகளும் நீங்க, 


ஏது ஏமமாய் எனக்கு அநுக்ரகித்ததும் மறவேனே --- பரம காரணமாகிய பாதுகாவலுடன் அடியேனுக்கு அருள் புரிந்ததையும் ஒருபோதும் மறக்க மாட்டேன். 


பொழிப்புரை


பெரிய நாகமாகிய வாசுகியை நாணாக வலிமை பெறக் கட்டி,ஒப்பற்ற பெரிய மேருமலையை வில்லாகப் பிடித்து,  ஒப்பற்ற திருமாலைக் கணையாகத் தொடுத்து, அங்கிருந்த அசுரர்களில் சிறந்த தலைவர்களாகிய மூன்று பேர் மட்டும் இறந்து போகாமல் பிழைக்கவும், பாவங்களைப் புரிந்த முப்புரத்தில் உள்ளார் வெந்து பொடியாகவும், புன்முறுவல் புரிந்த ஞானவடிவினர் ஆகிய சிவபெருமான் அருளிய  திருப்புதல்வரே! வலன் என்ற அரக்கனைக் கொன்ற தேவேந்திரன் வளர்த்த, கற்பக வனத்தை உடைய தேசத்திற்குத் தலைவரே! என்று துதித்த உத்தமர்களாகிய தேவர்கள் இனிது வாழும்பொருட்டு, வல்லமை பொருந்திய திருவடியை அணுகாதவனாகிய சூரபதுமனைப் பிளந்தும், பூத வெள்ளங்களை அடங்கச் செய்த கிரவுஞ்ச மலையைத் தகர்த்தும், உதிரச் சேறு சென்று கடலில் திட்டு உண்டாகவும்,மாறுபட்ட அசுரர் குலத்தை இவ்வாறு, உடைவாளினால் அறுத்துத் அறுத்துத் தள்ளிய பெருமையில் மிக்கவரே!

நீங்காத ஞானத்துடன் கூடிய அறிவைக் தந்ததையும்,  ஆராய்வதற்கு உரிய அறிவு நூல்களின் உட்கருத்துக்களைக் கொடுத்ததையும்,  திரிபு உடைய வாழ்க்கையினை மெய்யென்று மயங்கி, இளைத்து ஆவியானது அழிந்து போகாவண்ணம் ஆசை என்கின்ற நீர்க் கடலைக் கடக்கும் ஆற்றலைத் தந்ததையும், வாக்கும் மனமும் கடந்த அதீத நிலையில் அடியேனை இருக்க வைத்ததையும், அசுத்தனாகிய சிறியேன் மிக்க புகழினால் எங்கும் வெளிப்படும் தன்மையைப் பெற்று, இனிமையுடன் ஏழு உலகும் யானாக விளங்க, புகழும் அற்புதமும் நிறைந்த தேவரீரது திருப்புகழை, இன்பத் தேன் ஊறுமாறு பாடி, எல்லா திசைகளிலும் அத் திருப்புகழ் ஏட்டினை அனுப்பும் ஆளுகையை அடியேனுக்குப் பணித்து அருளியதையும், துன்பக் கடலினின்றும் கரை ஏற முடியாமல் செய்வதாகிய பெரிய மலங்களாகிய ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்றும், சத்துவம், இராசதம், தாமதம் என்ற மூவகைக் குணங்களும், நாலாவகையான வேற்றுமைகளுடன் கூடிய, நீர்க்குமிழிபோல் தோன்றி மறைவதுமான பிறவிகளும் நீங்க,பரம காரணமாகிய பாதுகாவலுடன் அடியேனுக்கு அருள் புரிந்ததையும் ஒருபோதும் மறக்க மாட்டேன். 


விரிவுரை


முருகப் பெருமானது இன்னருளினை இனிது பெற்ற அருளாளர் அருணகிரிநாதர். தாம் பெற்ற அருள் திறத்தை அகில உலகமும் உணர ஓதுகின்ற திருப்புகழ் இது. அதனை உணர்ந்து, உலகினரை அவ்வருளைப் பெறுதற்கு ஊக்கம் உள்ளவராகச் செய்யும்கருணைத் திறம் ஆகும்.


ஆனாத ஞான புத்தி ---


ஆனாமை -- கெடாமை. குறையாமை, நீங்காமை. "ஆனா அமுதே, அயில் வேல் அரசே" என்பது கந்தர் அனுபூதி.


ஆன்மா சித்துப் பொருள். சித்து - அறிவு அவ்வறிவு அறிவிக்க அறிகின்ற அறிவு. அது குறைபாடு உடையதும், காமக் குரோதங்களால் நீங்குவதுமாய் உள்ளது.  


இறைவர் அறிவு வடிவானவர். அறிவும் அறியாமையும் கடந்த அறிவு அவரது திருமேனி. அத்தகைய பரம்பொருளாகிய முருகவேள் அருணகிரிநாதருக்கு, தமது அறிவு நிறைந்த அறிவை அருள் புரிந்தனர். 


யாம்ஓதிய கல்வியும் எம் அறிவும்

தாமே பெற வேலவர் தந்தனால்,

பூமேல் மயல் போய் அறமெய்ப் புணர்வீர்,

நாமேல் நடவீர் நடவீர் இனியே. ---கந்தர் அநுபூதி.


இங்கே புத்தி என்றது அந்தக்கரணங்களுள் ஒன்றான புத்தி அல்ல.. ஞானபுத்தி என்றது அறிவின் சிகரமான மெய்யறிவு ஆகும்.


ஆராயும் நூல்களில் கருத்து அளித்ததும் ---


நூல் - அறிவைத் தருகின்ற நூல்கள். 


மரவேலை புரிவோன் முதலில் மரத்தில் நூல் தட்டியே தொழிலைத் தொடங்குவான். மரத்தின் கோணலை நூலால் அகற்றுவான். அதுபோல் நூலால் மனத்தில் உள்ள கோணலை அகற்றவேண்டும். நூல் தட்டி கோணலை நீக்கிய மரம் சிறப்பாக நிழலில் பெரிய பெரிய கட்டிடங்களில் அமைந்து விளங்குகின்றது.  நூல் தட்டிக் கோணல் நீங்காத மரம் விறகுத் தொட்டியில் வெய்யிலில் காய்ந்தும் மழையில் நனைந்தும் எரிக்கப்படுகின்றது. 


அதுபோல், அறிவு நூல்களைக் கற்றவன், மற்றவர்களால் மதிக்கப்படுவான். கல்லாதவன், மற்ற எல்லாம் இருந்தும், மற்ற எல்லோராலும் இகழப்படுகின்றான். 


உரத்தின் வளம் பெருக்கி உள்ளிய தீமை

புரத்தின் வளம் முருக்கிப் பொல்லா-மரத்தின்

கனக்கோட்டம் தீர்க்கும்நூல், அஃதேபோல் மாந்தர்

மனக்கோட்டம் தீர்க்கும்நூல் மாண்பு. --- நன்னூல்


நூல் எனப்படுவது நுவலும் காலை

முதலும் முடிவும் மாறுகோள் இன்றி

தொகையினும் வகையினும் பொருண்மை காட்டி

உள் நின்று அகன்ற உரையொடு புணர்ந்து

நுண்ணிதின் விளக்கல் அது அதன் பண்பே.  --- தொல்காப்பியம்.


அறம் பொருள் இன்பம் வீடு அடைதல் நூல்பயனே --- நன்னூல்.


ஆன்றோர்கள் ஆராய்கின்ற அறிவு நூல்களின் உட்கருத்துக்களை முருகப் பெருமான் அருணகிரிநாதருக்கு உணர்த்தி அருளினார்.


“அறிவும்அறி தத்துவமும் அபரிமித வித்தைகளும்

அறி என இமைப்பொழுதின் வாழ்வித்த வேதியனும்” ---  வேடிச்சிகாவலன் வகுப்பு.


ஆதேச வாழ்வினில் ப்ரமித்து இளைத்து உயிர் அழியாதே ---


ஆதேசம் -- திரிபு.  "ஆதேச வாழ்வனை" என்றார் சிதம்பரம் திருப்புகழில். ஐம்பெரும் பூதங்களின் பரிணாமத்தால் ஆகியது இந்த உலகம். உலக வாழ்வு இன்பம்போல் தோன்றித் துன்பத்தைச் செய்வது.  துன்பத்தைச் செய்யும். ஒரு விளக்கை ஒரு கனி என விரும்பி வீழ்ந்து வேதனை அடையும் விட்டில் பூச்சியைப் போல்,உயிர்த்தொகைகள் துன்பத்தை இன்பமாக எண்ணி மயங்குகின்றன.


தவநெறியை விடுத்து, அவநெறியை அடுத்து, அதில் உழைத்து உழைத்து, உடலும் உயிரும் இளைப்பு அடைகின்றன. இறுதியில் அழிந்து ஒழிகின்றன. 


ஆசா பய உததியைக் கடக்க விட்டதும் ---


பயம் – நீர். உததி – கடல். ஆசை ஒரு கடல் போன்றது. கடல் கங்கு கரை அற்றது. அதன் ஆழத்தையும் அகலத்தையும் நீளத்தையும் அறிந்தார் இல்லை. ஆசையே எல்லா இடர்களுக்கும் பரமகாரணம். ஆசையைக் கடல் என்று தாயுமானாரும் அருளிச்செய்கின்றார்.


“ஆசைக் கடல் சுழலில் ஆழாமல் ஐயாநின்

நேசப் புணைத்தாள் நிறுத்தினால் ஆகாதோ.”


மண்ணுலகம் முற்றும் ஆளுகின்றதோடு அமையாது, கடல் மீதும் தமது ஆணையைச் செலுத்த எண்ணி அமர் தொடுக்கின்றனர்.  குபேரனுக்கு நிகராகச் செல்வம் படைத்தவர்களும் இரசவாதம் செய்து பொருள் ஈட்ட முயல்கின்றனர்.  கன்னம், களவு, சூது, வாது, வஞ்சனைகள் செய்து மேலும் மேலும் பொருள் ஈட்ட முயல்கின்றனர்.   நீண்ட நாள் வாழ்ந்தோரும், நான்கு பேருக்குச் சுமையான இவ்வுடம்பை சுமந்து அலைய எண்ணி காயகல்பம் தேடி அலைந்து திரிகின்றார்கள்.  ஆனால் எல்லாவற்றையும் ஆராய்ந்து பார்க்கும்கால், பசிதீர உண்பதும் உறங்குவதும் தவிர வேறு இல்லை. ஒருவனுக்கு எத்தனை மாடமாளிகைகள் இருப்பினும் அவன் படுக்கும் இடம் ஐந்தரை அடிநீளம் தான். எத்தனை ஏக்கர் நிலம் இருந்தாலும் அவன் உண்பது கால்படி அரிசி தான். எத்தனை நூல்-துணி ஆலைகள் இருந்தாலும் அவன் உடுப்பது நான்கு முழம் தான்.


“தெண் கடல் வளாகம் பொதுமை இன்றி

வெண் குடை நிழற்றிய ஒருமையோர்க்கும்,

நடு நாள் யாமத்தும் பகலும் துஞ்சான்

கடு மாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்,

உண்பது நாழி; உடுப்பவை இரண்டே;                  

பிறவும் எல்லாம் ஓர் ஒக்குமே;

செல்வத்துப் பயனே ஈதல்;

துய்ப்பேம் எனினே, தப்புந பலவே.” ---  புறநானூறு.


“உண்பது நாழி உடுப்பது நான்குமுழம்

எண்பது கோடிநினைந்து எண்ணுவன-கண்புதைந்த

மாந்தர் குடிவாழ்க்கை மண்ணின் கலம்போலச்

சாந்துணையுஞ் சஞ்சலமே தான்.” ---நல்வழி.


“ஆசைக்கு ஓர் அளவில்லை; அகிலம் எல்லாம் கட்டி

        ஆளினும், கடல்மீதிலே

  ஆணை செலவே நினைவர்; அளகேசன் நிகராக

        அம்பொன்மிக வைத்தபேரும்

நேசித்து ரசவாத வித்தைக்கு அலைந்திடுவர்;

        நெடுநாள் இருந்தபேரும்

  நிலையாகவே இ(ன்)னும் காயகற் பந்தேடி

        நெஞ்சுபுண் ஆவர்; எல்லாம்

யோசிக்கும் வேளையில் பசிதீர உண்பதும்

        உறங்குவதும் ஆகமுடியும்;

  உள்ளதே போதும், நான் நான்எனக் குளறியே

        ஒன்றைவிட்டு ஒன்று பற்றிப்

பாசக் கடற்கு(ள்)ளே வீழாமல், மனது அற்ற

        பரிசுத்த நிலையை அருள்வாய்!

  பார்க்கும் இடம் எங்கு ஒரு நீக்கம்அற நிறைகி்ன்ற

        பரிபூரண ஆனந்தமே.” ---- தாயுமானார்.


ஆசையாகிய பெரும் காற்றில் மனமானது ஒரு இலவம்பஞ்சு போல் அகப்பட்டு அலைந்து அல்லல் படுகின்றது.  அதனால் அழிந்தவர் அநந்தம். நிராசை இல்லையானால் தெய்வமும் இல்லை. ஆதலின் ஆசையை மெல்லமெல்ல அகற்ற முயலுதல் வேண்டும்.   


“ஆசையெனும் பெருங்காற்றுஊடு இலவம்பஞ்சு

        எனவும், மனது அலையும் காலம்

மோசம் வரும், இதனாலே கற்றதும், கேட்-

        டதும் தூர்ந்து, முத்திக்கு ஆன    

நேசமும், நல் வாசமும் போய்ப் புலனாய், இல்

        கொடுமை பற்றி நிற்பர், அந்தோ,

தேசுபழுத்து அருள்பழுத்த பராபரமே!

        நிராசை இன்றேல் தெய்வம் உண்டோ.” ---தாயுமானார்.


“ஆசைக் கடலில் அகப்பட்டு, அருளற்ற அந்தகன் கைப் 

பாசத்தில் அல்லல்பட இருந்தேனை, நின் பாதம் என்னும் 

வாசக் கமலம் தலைமேல் வலியவைத்து, ஆண்டு கொண்ட 

நேசத்தை என் சொல்லுவேன்? ஈசர்பாகத்து நேரிழையே.” ---  அபிராமி அந்தாதி.


வாசா மகோசரத்து இருத்துவித்ததும் ---


வாசா மகோசரம் --- வாக்குக்கும் மனத்துக்கும் எட்டாதது. மனமும் வாக்கும் அற்ற இடத்திலே நிலைத்து நிற்பதுவே சமாதி நிலை.


பகரொ ணாதது சேரவொ ணாதது

     நினையொ ணாதது வானத யாபர

     பதிய தானச மாதிம னோலயம் ...... வந்துதாராய்... --- (தறையின்) திருப்புகழ்.


“வாக்கால் மனத்தால் மதிப்பரியாய் நின்அருளை

நோக்காமல் நோக்கி நிற்கும் நுண்ணறிவைக் காண்பேனோ.” ---  தாயுமானார்.


இந்த அரிய பெரிய நிலையானது கேவலம் கல்வி அறிவால் உண்டாவதல்ல. இறையருள் துணைபுரியத் தவ வலிமையால் உண்டாகும்.


“வாக்கால் மனத்தால் மதிப்பரியாய் நின்னருளை

நோக்கும் மவுனம் இந்த நூல்அறிவால் உண்டாமோ.”  --- தாயுமானார்.


ஆபாதனேன் மிக ப்ரசத்தி பெற்று ---


ஆபாதன் - அசுத்தன். "ஆபாதனேனும் நாளும் நினைவது பெறவேணும்" என்பார் விராலிமலைத் திருப்புகழில். உலகமெல்லாம் புகழும் மிகப்பெரிய தகுதியை அடிகளாருக்கு அருள் புரிந்தனர் அறுமுகக் கடவுள்.


உலகு ஏழும் யான் ஆக ---


இந்த சொற்றொடர் மிகவும் அருமையானது. இனிமையானது.  ஆழமும் அகலமும் உள்ளது. ஏழு உலகங்களிலும் உள்ள அசையும் பொருள்கள், அசையாத பொருள்கள் யாவும் தானாகக்  கண்டு, எனது யான் என்ற எண்ணங்கள் நீங்கி அகண்டாகாரமாய் நிற்கும் நிலை. இந்நிலை நின்றார்க்கு, இன்பம் துன்பம், விருப்பு வெறுப்பு, நன்மை தீமை, உறவு பகை முதலியன இல்லை.


“யான் எனது என்னும் செருக்கறுப்பான் வானோர்க்கு

உயர்ந்த உலகம் புகும்.” ---  திருக்குறள்.


இந்த யான் எனது ஆகிய இரு பற்றுக்களும் நீங்கினால் பார்க்கும் இடம் எங்கும் கடவுள் இருக்கும் கருவறையாகத் தெரியுமாம் என்கிறார் தாயுமான சுவாமிகள்.


“என்னது யான் என்னல் அற்றோர் எங்கிருந்து பார்க்கினும் நின்

சன்னதியாம் நீ பெரிய சாமி பராபரமே.”


“எமனை மோதி யாகாச கமன மாம னோபாவ

     மெளிது சால மேலாக ...... வுரையாடும்

எனதி யானும் வேறாகி எவரும் யாதும் யானாகும்

     இதய பாவ னாதீதம் ...... அருள்வாயே”  --- (அமலவாயு) திருப்புகழ். 

 

நாம ---


நாமம் – புகழ்.  முருகப் பெருமானின் அருட்புகழை அமுது ஊறுவது போல் கூறுவது அருணகிரிநாதப் பெருமான் அருளிய திருப்புகழ்.


 இனி, நாமம் என்னும் சொல்லுக்கு அச்சம் என்றும் பொருள் உண்டு. அவ்வாறு கொண்டால், மலையின் அடியில் இருந்து கண்டார் அச்சம் அடைவது போல், திருப்புகழின்   ஆழத்தையும்  சந்தபேதங்களையும் கண்டு தமிழ்ப்புலவர்கள் அஞ்சுவர் என்று ஆகும்.


அற்புதத் திருப்புகழ் ---


நடை அழகு. தொடை அழகு. பொருளழகு. சொல்லழகு, ஓசை அழகு முதலிய எல்லா அழகுகளையும்  உடையதாய்,வேதாகம புராண இதிகாச சாரமாய், யோகஞான உட்பொருளை உடையதாய் திருப்புகழ் விளங்குவதால், "அற்புதம் அற்புதம்" என்று அறிஞர்கள் விம்மிதம் உறுகின்றார்கள்.


“பத்தர்க ணப்ரிய நிர்த்தந டித்திடு

     பட்சிந டத்திய ...... குகபூர்வ

பச்சிம தட்சிண வுத்தர திக்குள

     பத்தர்க ளற்புத ...... மெனவோதுஞ்


சித்ரக வித்துவ சத்தமி குத்ததி

     ருப்புக ழைச்சிறி ...... தடியேனுஞ்

செப்பென வைத்துல கிற்பர வத்தெரி

     சித்தவ நுக்ரக ...... மறவேனே” --- திருப்புகழ்.


"மனது குழைந்து உருகும் தொண்டத் தொகையின் உடன் கூடித் தொனிக்க இனிக்கும் திருப்புகழைச் சொல்லித் துதிக்க, நல் இயலாம் தொலையா வாழ்வு' என்பது திருமலை முருகன் பிள்ளைத்தமிழ்.      


தேன் ஊற ஓதி ---


திருப்புகழ் சந்தச் செறிவுடன், சிந்தைக்கு இனிமை பயப்பதாய், தேனினும் இனியதாய் தித்திப்பது. அதன் இனிமையை அடியில் வரும் கவிராஜ பண்டாரத்தையா பாடி அருளிய திருமலை முருகன் பிள்ளைத்தமிழில் அறிக.


“உதிரும் கனியை நறும்பாகில் 

உடைத்துக் கலந்து தேனைவடித்து

ஊற்றி அமுதினுடன் கூட்டி

ஒக்கக் குழைந்த ருசி பிறந்த

மதுரம் கனிந்த திருப்புகழ்”


புற்புதப் பிறப்பு அற ---


புற்புதம் – நீர்க்குமிழி. 


"படுமழை மொக்குளின் பல்காலும் தோன்றிக்

கெடும் இது ஓர் யாக்கை என்று எண்ணி, - தடுமாற்றம்

தீர்ப்பேம் யாம் என்று உணரும் திண் அறிவாளரை

நேர்ப்பார் யார்? நீள் நிலத்தின் மேல்".  – நாலடியார்.


பெய்கின்ற பெருமழை நீரில் பலகாலும் தோன்றி மறைகின்ற நீர்க்குமிழிகளைப் போல், மனித உடலானது பலமுறையும் பிறந்து பிறந்து இறக்கும் தன்மை உடையது. இதை உணர்ந்து, இந்த உலகில் பிறந்து பிறந்து தடுமாற்றத்தை அடைகின்ற நிலையை ஒழிக்கவேண்டும் என்னும் உறுதியான அறிவு உள்ள பெரியோருக்கு நிகரானவர்கள் இந்த உலகில் யாரும் இல்லை.


நீரிலே தோன்றுகின்ற குமிழானது மிகவும் அழகாக இருக்கும். ஆனால், எப்போது அது அழியும்,எப்படி அழியும் என்று தெரியாது. அதுபோலவே, இந்த உடம்பானது தொடக்கத்தில் மிகமிக வனப்பாகவே இருக்கும். ஆனால், நாளாக நாளாக, நம்மை அறியாமலே முதுமை வந்துகொண்டே இருக்கும். அது எப்போது அழியும் என்பதும் தெரியாது.  எப்போதும் இருக்கும் என்று கருதியே, அதை அழகு செய்வதும், உண்டி முதலியவற்றால் அதை வலிமை பெறச் செய்வதுமாகவே இருக்கின்றோம். 


     "நீரில் குமிழி, நீர் மேல் எழுத்து" என்பார் பட்டினத்தடிகள். "நீர்க்குமிழிக்கு நிகர் என்பர் யாக்கை, நில்லாது செல்வம்" என்பது கந்தர் அலங்காரம்.


“நீர்க்குமிழி பூண்அமைத்து நின்றாலும் நில்லா, மெய்

பார்க்கும் இடத்து இதன்மேல் பற்று அறுவது எந்நாளோ?” --- தாயுமானார்.


“ஐந்துவகை ஆகின்ற பூத பேதத்தினால் ஆகின்ற ஆக்கை, 

நீர்மேல் அமர்கின்ற குமிழி என நிற்கின்றது”.      --- தாயுமானார்.


“விண்ணு நீர் மொக்குகளின் விளியும் யாக்கையை

எண்ணி, நீ அழுங்குதல் இழுதைப்பாலதால்”  --- கம்பராமாயணம்.



எனக்கு அநுக்ரகித்ததும் மறவேனே ---


அநுக்கிரகம் – அருள். முருகப் பெருமான் தனக்கு அருள் புரிந்த திறத்தை ஒருபோதும் மறவேன் என்று அடிகள் பல இடங்களில் கூறி மகிழ்கின்றனர்.


“சித்ரக வித்துவ சத்தமி குத்ததி

     ருப்புக ழைச்சிறி ...... தடியேனுஞ்

செப்பென வைத்துல கிற்பர வத்தெரி

     சித்தவ நுக்ரக ...... மறவேனே”   --- (பத்தர்கண) திருப்புகழ்.


மாநாக நாண் வலுப்புறத் துவக்கி.........சிரித்த வித்தகர் ---


கமலாட்சன், விட்யுன்மாலி, தாராகாட்சன் என்ற மூன்று அசுர வேந்தர்கள் சிறந்த சிவனடியார்கள்.  இவர்கள் இரும்பு, வெள்ளி, பொன் என்ற உலோகங்களாலாய மூன்று புரங்களில் வாழ்ந்தார்கள்.  இமையவருக்கு இடுக்கண் புரிந்தார்கள்.


திரிபுர வாசிகளின் சிவபக்தி குலையுமாறு திருமால் புத்தாவதாரம் எடுத்து, நாரதரைச் சீடராகப் பாடச் செய்து திரிபுர நகர்களில் தெய்வம் இல்லை என்று பிரசாரம் புரிந்தார்.  திரிபுரத் தலைவர்கள் மூவர் மட்டும் உறுதிகுலையாது சிவபக்தியில் சிறந்து இருந்தார்கள்.  திரிபுர வாசிகள் சிவபக்தி குலைந்தார்கள்.  தேவர்கள் சிவபெருமானிடம் திரிபுரத்தை அழிக்குமாறு முறையிட்டார்கள்.


அப்போது, இந்தப் பூமியே தேராகவும், கீழே உள்ள எழு உலகங்கள் கீழ்த் தட்டுக்களாகவும், மேலே உள்ள எழு உலகங்கள் மேல் தட்டுக்களாகவும், எண்திசைப் பாலகர்கள் தூண்களாகவும், மேருகிரி வில்லாகவும், வாசுகி நாணாகவும், பிரமன் சாரதியாகவும், வேதங்கள் குதிரைகளாகவும், திருமால் பாணமாகவும், அதற்கு அக்கினி வாயாகவும், வாயு அம்பின் குதையாகவும் இவ்வாறு தேவர்கள் கூட்டமே தேராக அமைத்துத் தந்தார்கள்.  கரிய உருவுடைய திருமால் அம்பாக ஆனார்.


"மாலாய வாளியைத் தொடுத்து அரக்கர்களின் ஒரு மூவர்

மாளாது பாதகப் புரத்ரயத்தவர்

தூளாகவே முதல் சிரித்த வித்தகர்"   ---  (ஆனாத) திருப்புகழ்.


"கல்லால்நிழல் கீழாய்இடர் காவாய்என, வானோர்

எல்லாம்ஒரு தேராய், அயன் மறைபூட்டிநின்று உய்ப்ப,

வல்லாய்எரி, காற்று ஈர்க்கு,அரி கோல்,வாசுகி நாண், கல்

வில்லால் எயில் எய்தான்இடம் வீழிம்மிழ லையே.”    ---  திருஞானசம்பந்தர்.


“வரிஅரவே நாண்ஆக, மால்வரையே வில்லாக,

எரிகணையால் முப்புரங்கள் எய்துஉகந்த எம்பெருமான்,

பொரிசுடலை ஈமப் புறங்காட்டான், போர்த்ததுஓர்

கரிஉரியான், மேவி உறை கோயில் கைச்சினமே.”     ---  திருஞானசம்பந்தர்.


"குன்ற வார்சிலை நாண் அராஅரி

         வாளி கூர்எரி காற்றின் மும்மதில்

வென்றவாறு எங்ஙனே? விடைஏறும் வேதியனே!

தென்ற லார்மணி மாட மாளிகை

         சூளி கைக்குஎதிர் நீண்ட பெண்ணைமேல்

அன்றில் வந்துஅணையும் ஆமாத்தூர் அம்மானே."     ---  திருஞானசம்பந்தர்.


“கையில்உண் உடுழல்வாரும் சாக்கியரும்

         கல்லாத வன்மூடர்க்கு அல்லா தானைப்

பொய்இலா தவர்க்குஎன்றும் பொய்இ லானைப்

         பூண்நாகம் நாணாகப் பொருப்பு வில்லாக்

கையினார் அம்புஎரிகால் ஈர்க்குக் கோலாக்

         கடுந்தவத்தோர் நெடும்புரங்கள் கனல்வாய் வீழ்த்த

செய்யின்ஆர் தென்பரம்பைக் குடியின் மேய

         திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே.”     ---  அப்பர்.


“நிற்பானும் கமலத்தில் இருப்பானும் முதலா

நிறைந்து அமரர் குறைந்து இரப்ப நினைந்துஅருளி அவர்க்காய்

வெற்புஆர்வில் அரவுநாண் எரிஅம்பால் விரவார்

புரமூன்றும் எரிவித்த விகிர்தன் ஊர் வினவில்,

சொற்பால பொருட்பால சுருதிஒரு நான்கும்

தோத்திரமும் பலசொல்லித் துதித்து இறைதன் திறத்தே

கற்பாரும் கேட்பாரு மாய் எங்கும் நன்குஆர்

கலைபயில்அந் தணர்வாழும் கலயநல்லூர் காணே.”    ---  சுந்தரர்.

முப்புரமும் பொடிபட்டுச் சாம்பரானது. அதன் தலைவர்களும், சிவபூசையினின்றும் திறம்பாதவர்களும், சிவசிந்தையுடன் வாழ்ந்தவருளும் ஆகிய தாரகாக்ஷன், கமலாக்ஷன், வித்யுன்மாலி என்ற மூன்று அரக்கர்கள் மட்டும் எரியாமல் உய்வு பெற்றார்கள். ஏனோர்கள் எரிந்து ஒழிந்தார்கள். இந்தக் கருத்தை, "பற்றலர்க்குப் பொற்பதத் துய்ப்பைப் புணர்த்துப் பித்தன்" என்று திருக்கச்சித் திருப்புகழில் அடிகளார் குறிப்பிடுகின்றார்.

“மூவெயில் செற்ற ஞான்று உய்ந்த மூவரில்

         இருவர் நின்திருக் கோயிலின் வாய்தல்

காவ லாளர்என்று ஏவிய பின்னை

         ஒருவன் நீகரி காடு அரங் காக

மானை நோக்கிஓர் மாநடம் மகிழ

         மணிமு ழாமுழக் க அருள் செய்த

தேவ தேவநின் திருவடி அடைந்தேன்

         செழும்பொ ழில்திருப் புன்கூர் உளானே.”       ---  சுந்தரர்.



வலாரி பெற்ற தே நாயக ---


தேசம் என்பது தேம் என்று குறுகியது. வலன் என்ற அசுரனைக் கொன்றதால் இந்திரன் வலாரி எனப்பெற்றான். அந்த இந்திரன் வளர்த்த கற்பக வனத்துடன் கூடிய அமரலோகத்திற்குத் தலைவர் முருகக் கடவுள்.


சீரா --- 


சீரா - உடைவாள். அடியில் வரும் கந்தர் அலங்காரப் பாடலாலும் அறிக.


“தாராகணம் எனும் தாய்மார் அறுவர் தரும் முலைப்பால்

ஆராது, உமைமுலைப் பால்உண்ட பாலன் அரையில்கட்டும்

சீராவும் கையில் சிறுவாளும், வேலும் என் சிந்தையவே,

வாராது அகல் அந்தகா, வந்தபோது உயிர் வாங்குவனே.”


கருத்துரை


முருகா! அடியேனுக்குச் செய்த திருவருளை ஒருபோதும் மறவேன்.


064. அமைச்சு - 04. தெரிதலும் தேர்ந்து

திருக்குறள் பொருட்பால் ஆ. அமைச்சியல் அதிகாரம் 64 -- அமைச்சு இந்த அதிகாரத்துள் வரும் நான்காம் திருக்குறளில், "ஒரு காரியத்தைச் செய்தல் ...