பொது - 1072. துயரம் அறும்நின்

 


அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

துயரம் அறும்நின் (பொது)

முருகா! 

இரசவாதத்தால் அறிவு மயங்காமல் காத்து அருள்வாய்.


தனன தனன தனன தனன

     தனன தனன ...... தனதான


துயர மறுநின் வறுமை தொலையு

     மொழியு மமிர்த ...... சுரபானம்


சுரபி குளிகை யெளிது பெறுக

     துவளு மெமது ...... பசிதீரத்


தயிரு மமுது மமையு மிடுக

     சவடி கடக ...... நெளிகாறை


தருக தகடொ டுருக எனுமி

     விரகு தவிர்வ ...... தொருநாளே


உயரு நிகரில் சிகரி மிடறு

     முடலு மவுணர் ...... நெடுமார்பும்


உருவ மகர முகர திமிர

     வுததி யுதர ...... மதுபீற


அயரு மமரர் சரண நிகள

     முறிய எறியு ...... மயில்வீரா


அறிவு முரமு மறமு நிறமு

     மழகு முடைய ...... பெருமாளே.


                      பதம் பிரித்தல்


துயரம் அறும், நின் வறுமை தொலையும்,

     மொழியும் அமிர்த ...... சுரபானம்,


சுரபி குளிகை எளிது பெறுக,

     துவளும் எமது ...... பசிதீர,


தயிரும் அமுதும் அமையும் இடுக,

     சவடி கடகம் ...... நெளிகாறை


தருக தகடொடு உருக எனும், இவ்

     விரகு தவிர்வது ...... ஒருநாளே?


உயரும் நிகர்இல் சிகரி மிடறும்,

     உடலுமு, அவுணர் ...... நெடுமார்பும்


உருவ, மகர முகர திமிர

     உததி உதரம் ...... அதுபீற,


அயரும் அமரர் சரண நிகளம்

     முறிய எறியும் ...... மயில்வீரா!


அறிவும் உரமும் அறமும் நிறமும்

     அழகும் உடைய ...... பெருமாளே.

பதவுரை

உயரு(ம்) நிகர் இல் சிகரி மிடறும் உடலும் அவுணர் நெடு மார்பும் உருவ --- உயர்ந்துள்ளதும், தனக்கு ஒப்பில்லாததுமான கிரவுஞ்ச மலையின் நெஞ்சும் உடலும், அசுரர்களுடைய பெரிய மார்பும் ஊடுருவும் படியாக,

மகர முகர திமிர உததி உதரம் அது பீற --- மகர மீன்களும் சங்குகளும் உலாவுன்றதும், பேரொலி செய்வதும், கரு நிறம் கொண்ட கடல் வயிறு கிழியவும்,

அயரும் அமரர் சரண நிகள(ம்) முறிய எறியும் அயில் வீரா --- சோர்வுற்று இருந்த தேவர்களின் காலில் பூட்டப்பட்ட விலங்கு முறியும்படியும் வேலை விடுத்து அருளிய வீரரே!

அறிவும் உரமும் அறமு(ம்) நிறமும் அழகும் உடைய பெருமாளே --- ஞானமும், வலிமையும், அறநெறியும், ஒளியும், அழகும் உடைய பெருமையில் மிக்கவரே!

துயரம் அறு(ம்) --- உனது துன்பம் ஒழியும், 

நின் வறுமை தொலையும் --- உனது வறுமை நீங்கும்.

மொழியும் அமிர்த சுரபானம் --- தேவர்கள் பருகுகின்ற புகழ் பெற்ற அமுதம்,

சுரபி --- காமதேனு, (ஆகியவற்றை நீ எளிதில் பெறலாம்)

குளிகை எளிது பெறுக --- மந்திர ஆற்றல் மிக்க மாத்திரை இதை நீ எளிதில் பெறுவாயாக.

துவளும் எமது பசி தீரத் தயிரும் அமுதும் அமையும் --- வாடுகின்ற எம்முடைய பசி தீரத் தயிரும் சோறும் இருந்தால் போதும்,  

இடுக --- அதை எமக்கு இடுக.

சவடி --- பொன்னால் ஆன சரடு,

நெளி --- விரலில் அணியும் வளைந்த மோதிரம்,

காறை --- கழுத்து அணிகலம், 

தருக தகடொடு உறுக --- ஆகியவற்றைத் தரவல்ல மந்திரத் தகட்டை நான் தரப் பெறுக.

எனும் --- என்று சொல்லுகின்ற, (இரசவாதிகளின்)

இவ்விரகு தவிர்வதும் ஒரு நாளே --- சூழ்ச்சியான மொழிகளிலிருந்து தப்புகின்ற ஒருநாள் அடியேனுக்கு உண்டாகுமோ?

                                                                  பொழிப்புரை

உயர்ந்துள்ளதும், தனக்கு ஒப்பில்லாததுமான கிரவுஞ்ச மலையின் நெஞ்சும் உடலும், அசுரர்களுடைய பெரிய மார்பும் ஊடுருவும் படியாக, மகர மீன்களும் சங்குகளும் உலாவுன்றதும், பேரொலி செய்வதும், கரு நிறம் கொண்ட கடல் வயிறு கிழியவும், சோர்வுற்று இருந்த தேவர்களின் காலில் பூட்டப்பட்ட விலங்கு முறியும்படியும் வேலை விடுத்து அருளிய வீரரே!

ஞானமும், வலிமையும், அறநெறியும், ஒளியும், அழகும் உடைய பெருமையில் மிக்கவரே!

உனது துன்பம் ஒழியும். உனது வறுமை நீங்கும். தேவர்கள் பருகுகின்ற புகழ் பெற்ற அமுதம், காமதேனு, ஆகியவற்றை நீ எளிதில் பெரலாம். மந்திர ஆற்றல் மிக்க மாத்திரை இதை நீ எளிதில் பெறுவாயாக. வாடுகின்ற எம்முடைய பசி தீரத் தயிரும் சோறும் இருந்தால் போதும்,  அதை எமக்கு இடுவாயாக. பொன்னால் ஆன சரடு, விரலில் அணியும் வளைந்த மோதிரம், கழுத்து அணிகலம், ஆகியவற்றைத் தரவல்ல மந்திரத் தகட்டை நான் தரப் பெறுவாயாக என்று சொல்லுகின்ற இரசவாதிகளின் சூழ்ச்சியான மொழிகளிலிருந்து தப்புகின்ற ஒருநாள் அடியேனுக்கு உண்டாகுமோ?

விரிவுரை

துயரம் அறும், நின் வறுமை தொலையும்.....விரகு தவிர்வதும் ஒரு நாளே --- 

உலகத்தில் துன்பப்படுகின்ற மனிதர்கள் இல்லாமல் இல்லை. துன்பம் என்பது அவரவர் முன்செய்த வினையின்படிக்கு இறையருளால் வந்து சேர்வது. அப்படியே, வறுமை நிலையில் உள்ளவர்களும் இல்லாமல் இல்லை. அதுவும் அவரவர் முன்செய்த வினையின்படிக்கு வந்து சேர்வது. ஆசையே பிறவிக்கு வித்து. ஆசை இருக்கின்ற வரையில் வறுமையும் துன்பமும் இருக்கத்தான் செய்யும். "செல்வம் என்பது சிந்தையின் நிறைவே, அல்கா நல்குரவு அவா எனப்படுமே" என்பது குமரகுருபர அடிகளார் அருள்வாக்கு. உள்ளது போதும் என்று மனநிறைவு கொள்ளாதவர்கள், மேலும் மேலும் செல்வத்தைப் பெருக்க வேண்டும் என்று அலைவார்கள். "வேண்டாமை அன்ன விழுச்செல்வம்" என்றார் திருவள்ளுவ நாயானார். "ஆசை படப்பட ஆய்வரும் துன்பங்கள், ஆசை விடவிட ஆனந்தம் ஆமே" என்றார் திருமூல நாயனார்.

"ஆசைக்கு ஓர் அளவு இல்லை, அகிலம் எல்லாம் கட்டி

  ஆளினும், கடல்மீதிலே

ஆணை செலவே நினைவர்; அளகேசன் நிகராக

        அம்பொன்மிக வைத்தபேரும்

நேசித்து ரசவாத வித்தைக்கு அலைந்திடுவர்;

        நெடுநாள் இருந்தபேரும்

நிலை ஆகவே இன்னுங் காயகற்பம் தேடி

        நெஞ்சு புண் ஆவர்; எல்லாம்

யோசிக்கும் வேளையில் பசிதீர உண்பதும்

        உறங்குவதும் ஆகமுடியும்;

உள்ளதே போதும்; நான் நான்எனக் குளறியே

        ஒன்றைவிட்டு ஒன்றுபற்றிப்

பாசக் கடற்கு உ(ள்)ளே வீழாமல், மனது அற்ற

        பரிசுத்த நிலையை அருள்வாய்;

பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம் அற நிறைகி்ன்ற

        பரிபூரண ஆனந்தமே."

என்கிறார் தாயுமான அடிகளார்.

ஆரா இயற்கை அவா என்பது திருவள்ளுவ நாயனார் அருள்வாக்கு. எப்போதும் நிறைவு பெறாதது ஆசையே. அதற்கு ஒரு வரம்பு இல்லை. "ஆசையை அளவு அறுத்தார் இங்கு ஆரே" என்பது ஒன்பதாம் திருமுறையில் வரும் அருள்வாக்கு. எனவே, ஆசைக்கு எங்கும் ஒரு வரம்பு என்பது இல்லை. இந்த நிலவுலகம் அனைத்தினையும் ஒரு குடைக்கீழ் ஆண்டாலும், ஆளுகின்ற வேந்தனின் எண்ணமானது, கடல் நடுவிலே காணப்படுகின்ற தீவுகள் அனைத்தையும் தனது ஆளுகையின் கீழ் கொண்டு வருவதில் இருக்கும். கடலையும் தனது ஆணைக்கீழ் கொண்டு வந்து விட்டாலும், அளகேசன் என்னும் குபேரனுக்கு நிகராக பொன்னும் பொருளும் படைத்து இருந்தாலும், மேலும் மேலும் பொருளைக் குவிக்க எண்ணி, செம்பு முதலிய பொருள்களைப் பொன்னாக மாற்றும் இரசவாதத் தொழிலுக்குக் காடும் மலையும் நாடுமாய்த் திரிந்து அலைந்து வாடுவர். இவ்வுலகில் அளவிறந்த காலம் சிற்றின்ப நுகர்ச்சியை இடையறாது அனுபவித்து வாழ்ந்தவரும் கூட  மனநிறைவு எய்தாது இன்னும் என்றும் அழியாமல் உடம்போடு நெடுங்காலம் வாழவேண்டும் என்னும் ஆசையால் காயகற்பம் என்னும் மருந்தைத் தேடி அலைந்து, மனம் புண்ணாகி வருந்துவர். எல்லாவற்றையும் எண்ணிப் பார்க்கும்போது, வயிற்றுப் பசி தீர உண்பதற்கும், காம இன்பத்தில் திளைத்து இருந்து, அதனால் உண்டான உடல் இளைப்புத் தீர அயர்ந்து உறங்குவதற்கும் ஆகவே முடியும். வினைக்கு ஈடாகவே எதுவும் கிடைக்கும் என்று எண்ணி, உள்ளதே போதும் என்று மனநிறைவு கொள்ளாமல், ஆணவ முனைப்பினால், ஒன்றை விட்டு மற்றொன்றைப் பற்றி அலைகின்ற நிலையே எஞ்சி இருக்கும். ஆசைக் கடலில் விழுந்து அல்லல் படாமல், மனம் அடங்கி நின்றால் எல்லை இல்லாத இன்பம் வந்து சேரும். இறையருளால் மட்டுமே அப்படிப்பட்ட மனநிலை வாய்க்கும்.

"அல்லல் என் செயும்? அருவினை என் செயும்?

தொல்லை வல்வினைத் தொந்தம் தான் என்செயும்?-

தில்லை மாநகர்ச் சிற்றம்பலவனார்க்கு

எல்லை இல்லது ஓர் அடிமை பூண்டேனுக்கே."

என்பது அப்பர் பெருமான் அருள்வாக்கு.

இறையடியார்களைத் துன்பமோ வறுமையோ வறுத்தாது. அருள் உள்ளம் கொண்டோர்க்கு இம்மையில் மட்டுமல்லாது, மறுமையிலும் ஒரு துன்பமும் உண்டாகாது என்பதைக் காட்ட, "அல்லல் அருள் ஆள்வார்க்கு இல்லை" என்றார் திருவள்ளுவ நாயனார்.

என்னதான் அறிவு நூல்களைப் படித்தாலும், கற்றவர்பால் கேட்டாலும், மனம் அடங்காதவர்கள் உள்ளது உலக இயல்பு. அப்படிப்பட்டவர்களின் அறிவை மயக்கி, தமது வறுமையைத் தீர்த்துக் கொள்ள எண்ணுகின்றவர்கள் இல்லாமல் இல்லை. 

தாயத்து முதலானவைகளைக் கொண்டு, இது இருந்தால் அள்ளபரிய செல்வம் சேரும், பொன்னும் பொருளும் குவிந்து கொண்டே இருக்கும் என்று சொல்லி, ஆசை வயபட்டவர்களின் அறிவை மயக்கி, வயிற்றுப் பிழைப்புக்காக அலைகின்றவர்கள் நிலையை இந்தப் பாடலில் அருணகிரிநாதர் விளக்கிக் காட்டி அருளுகின்றார்.

தேவாமிர்தம், காமதேனு, பொன் முதலியவை கிடைக்கு என்று சொல்லி குளிகையை விற்று வயிறு வளர்ப்பவர்கள், தாமே அந்தக் குளிகையை வைத்துக் கொண்டு ஏன் சுகமாக வாழமுடியாது? குளிகையை விற்றுத்தான் வயிற வளர்க்க வேண்டுமா?

        அருணகிரிநாதர் அருளிய திருவகுப்பு என்னும் தொகுப்பில், "சித்து வகுப்பு" ஒன்று. அதில், எமக்குப் பச்சிலை முதலியவைகளைக் கொண்டு இரசவாதம் செய்யத் தெரியும். உன்னிடம் இருக்கும் பழைய நகை வகைகள், பித்தளை சாமான், பணம் முதலிய எல்லாவற்றையும்  கொண்டு  வந்து என்னிடம் தருக.  நான் என் இரசவாத சக்தியால் வெகுகோடி பொன் உண்டாக்கி உனக்குத் தருவேன்.  அது கொண்டு ஏழுநிலை மாடவீடு நீ கட்டிக் கொள்ளலாம். நான் பார்வதி கலியான தினத்தன்றுதான் உணவு கொண்டேன். இப்போது எனது பசி தீர அமுது படை. நல்ல கறிகாய், நிரம்ப நெய், பொரியல், பால், தேன், கறி வகை, பழ வகை, வெற்றிலை பாக்கு இவையெலாம் எமக்குக் கொடு. நீ சுகமாய் இரு" என இரசவாதி கூறுவதாக வருகின்றது.

        பிறிதொரு திருப்புகழ்ப் பாடலில், "வரதா! மணி நீ என ஓரில் வருகாது (எது). எதுதான் அதில் வாராது, இரத ஆதிகளால் நவலோகம் இடவே கரி ஆம். இதில் ஏது" என்று அடிகளார் பாடி உள்ளதை இங்கே கருத்தில் கொள்ளுதல் நலம். எல்லா வரங்களையும் எண்ணியவாறு வழங்குகின்ற வரதராக உள்ள முருகப் பெருமானே எண்ணியவற்றைத் தருகின்ற சிந்தாமணி போன்றவர் என்று ஆராய்ந்து, அரவது திருவடியில் அன்பு செய்தால் எப்பொருள்தான் கிடைக்காது? எல்லாம் கிடைக்கும். இதனை அறியாமல், நவலோகங்களையும் நெருப்பில் இட்டு ஊதி இரசவாதம் செய்து அலைவதனால் கரிதான் மிஞ்சுமே அல்லாது, அதனால் அடையும் பயன் வேறு ஒன்றுமில்லை என்பது இப்பாடலின் கருத்து.

பொன் பொருள் மீது ஆசை வைத்து இரசவாத வித்தைகளைச் செய்து மேலும் பொன்னுனையும் பொருளையும் குவிப்பதற்காக இங்கும் அங்குமாக அலைந்து திரிந்து, இரசவாதம் செய்பவர்கள் என்று தங்களைச் சொல்லிக் கொள்ளும் பொய்யர்களை, வேடதாரிகளை நாடி, உள்ள பொருளையும் அவர்களிடத்தில் தொலைத்து வருந்துவது கூடாது. இறைவனே பெரும் சித்தன். அவனது அருட்புகழைப் பாடி வழுத்துவதன் மூலம் எல்லா நலங்களையும் பெறலாம் என்கிறார் அருணகிரிநாதர், தாம் அருளிய சித்து வகுப்பில்.....


"மிடைதரும் ப்ரவாள சடை பெரும் ப்ரவாக

விமலர் கொன்றை மாலை தருண சந்த்ர ரேகை

விரவு மணநாறு பாதார விந்த

விதரண விநோத மாதாவின் மைந்தன்,

மீன கேதனன் உருவின் மிகுந்தருள்

தான வாரிதி சரவண சம்பவன்,  

விகிர்தி வேதனன், மவுன சுகாதனன்,

அகில காரணன், அகில கலாதரன்,

விகசித சுந்தர சந்தன பாளித

ம்ருகமத குங்கும கஞ்சப யோதரி 

வேழமும் உழைகளும் ஆரும் பைம்புனம்

மேவுறு குறமகள் மேவும் திண்புயன், 

விரிகடல் துகள்எழ வெகுளி விக்ரமன்.

அரிதிரு மருமகன், அறுமு கத்தவன்,

வெட்சி கொண்ட தோளன், வெற்புஊடுஉற

விட்ட வென்றி வேல் முழுச்சேவகன்,

வெருவு நக்கீரர் சரண்என வந்துஅருள்

முருகன், நிஷ்க்ரோத முநிகுண பஞ்சரன

மேதகு புராணவேத அங்குரன்,

ஓதரிய மோன ஞானஅங்குரன், 

மிகைத்தவர் புரத்ரயம் எரித்தவர் ப்ரியப்பட

அகத்திய முநிக்குஒரு தமிழ்த்ரயம் உரைத்தவன், 

வேத மூர்த்தி, திருத்தணி வெற்புஉறை

சோதி, கார்த்திகை பெற்ற விளக்குஒளி,   

வெகுளி வென்ற வேள்வி முநிவர் சங்கம் ஏற

விரவும் இந்த்ர லோக வழி திறந்த மீளி,

மிகவிருது கூறு மேவார்கள் கண்டன்,

விகட அசுரேசர் சாமோது சண்டன்,

மேக வாகன மிகுமத வெண்கய

பாக சாதனன் நகரி புரந்தவன்,  

விபுத தாரகன், விபுத திவாகரன்,

விபுத தேசிகன், விபுத சிகாமணி, 

விபரித கஞ்ச விரிஞ்ச பராமுகன்,

அபிநவ கந்தன், அடைந்தவர் தாபரன், 

மேருவை இடிபட மோதும் சங்க்ரம

தாரகன், மகுட விபாடன், புங்கவன், 

வெயில்உமிழ் கொடியொடு வினை முகத்தினில்

மயில்மிசை வரும்ஒரு வரதன், நிர்ப்பயன்,  

வித்தகன், சுவாமி, நிர்ப்பாவகன்,

சத்தியன், ப்ரதாப வித்யாதரன், 

விரத நட்பாளர் பரியும் அசஞ்சலன்,

நிருத நிட்டூரன், நிருதர் பயங்கரன், 

வீரமத லோக வேள் காங்கெயன்,

சூர ரண சூர சூராந்தகன், 

வினைப்பகை அறுப்பவன், நினைத்தது முடிப்பவன்,

மனத்துயர் கெடுத்துஎனை வளர்த்து அருள் க்ருபைக்கடல், 

வேலன் வாய்த்த திருப்புகழ் கற்றவர்

சீலம் ஏத்திய சித்தப்ர சித்தரே. --- சித்துவகுப்பு.

எனவே, நம்முடைய ஆசைகளையே முதலாக வைத்து, அடியார்கள் போல் வேடம் புனைந்து கொண்டு, ஒரு துன்பமும் இல்லாமல், உழைக்காமல், எளிதாக வயிறு வளர்க்கின்றவர்களிடத்தில் ஏமாறாமல், இறைவன் அருட்புகழை ஓதியே எல்லா நலமும் பெறலாம் என்பது அடிகளார் கருத்து. சாமியார்கள் போல் வேடம் புனைந்து கொண்டு மக்களை வெருட்டிப் பணம் பறிக்கும் வேடதாரிகளிடம் மயங்காமல், அவர்களின் சூழ்ச்சி மொழிகளில் இருந்து தப்பிக்க இறைவன் திருவருளை வேண்டுகின்றார் அடிகளார்.

கருத்துரை

முருகா! இரசவாதத்தால் அறிவு மயங்காமல் காத்து அருள்வாய்.






அறிவை அறிவதே பொருள்

 

அறிவை அறிவதே பொருள்

----

உயிர் அறிவுப் பொருள். ஒன்று ஒன்றாய் அறிதல், அவ்வாறு அறியும் போதும் தொடர்ச்சியாய் அறியாது விட்டுவிட்டு அறிதல், அறிந்ததனை, உடனே மறத்தல், காலப் போக்கில் மறத்தல், தானே அறியாது அறிவிக்க அறிதல் என்பன போன்ற குறைபாடுகள் எல்லாம் உயிரறிவிற்கு உண்டு. எனவே, உயிர் சிற்றறிவு உடையது என்றனர் மேலோர். அதன் அறிவை ஆணவமாகிய அகவிருள் மறைத்து நிற்கிறது. ஐம்பொறிகள் அம்மறைப்பை நீக்கி அதன் அறிவை விளங்கச் செய்கின்றன. அவ்வாறு விளங்குகிற உயிரறிவுக்கு உலகம் நுகர்ச்சிப் பொருளாகின்றது. உயிருக்கு அறிவு இல்லையானால், உயிர் சடம் என்றால், ஆணவமலத்தின் மறைப்பினால் அதற்கு ஆவது ஏதும் இல்லை. 

குறைபாடு என்பதே இல்லாத அறிவே சித்து எனப்படும். சித்து என்பது பேரறிவு, மெய்யறிவு, உண்மையறிவு எனப்படும். இறைவன் ஒருவனே குறைபாடு ஒன்றும் இல்லாத பேரறிவினை உடையவன். ஆதலால், அவனே சித்து எனப்படுகிறான். ஆனால், உயிர் ஐம்பொறி முதலிய கருவிகளோடு கூடி அறிவு விளக்கத்தைப் பெறுகிறது. 

ஒளி,  இருள் என்ற இரண்டு பொருள்கள் உள்ளன. அவை மாறுபட்ட பொருள்கள். ஒளி உள்ள இடத்தில் இருள் இருக்காது. இருள் உள்ள இடத்தில் ஒளி இல்லை. இவ்வாறு ஒன்றை ஒன்று சாராத இருளையும், ஒளியையும் பொருந்தி நிற்கின்ற ஒரு பொருள் உண்டு.  அதுவே கண். இந்தக் கண் போன்றது உயிர். உயிர் எதனை எதனைச் சார்கிறதோ, அதனதன் தன்மையைத் தன் தன்மையாகக் கொள்ளும். உயிர் சார்தற்குரிய பொருள்கள் இரண்டே. அவை நிலைத்த பொருள், நிலையற்ற பொருள்கள். நிலைத்த பொருள் இறைவன் ஒருவனே. நிலையற்ற பொருள்கள் பிற உயிர்களும், உலகத்துப் பொருள்களும். நிலைத்த பொருளான இறைவனைச் சார்ந்து இருக்கும்போது, இறைத் தன்மையைப் பெற்று நிற்கும். "நாம் ஒழிந்து சிவம் ஆனவா பாடித் தெள்ளேணம் கொட்டாமோ" என்று மணிவாசகப் பெருமான் அருளிய திருவாசக அனுபவமொழி இதனை உணர்த்தும்.  நெருப்பைச் சார்ந்த இரும்பு, நெருப்புத் தன்மையை அடைவதைப் போலவும், காந்தத்தைச் சார்ந்த இரும்பு காந்தத் தன்மையை அடைவது போலவும், இறைவனைச் சார்கிறபோது இறைத் தன்மையைப் பெற்று இறைவனாகவே இருக்கும். அறிவுள்ளோரைச் சார்ந்து இருக்கும்போது, அறிவு விளக்கம் பெற்று இருக்கும். இது ஒளியைக் காணும் கண்ணைப் போன்றது. அறிவற்றவரைச் சார்ந்து இருக்கும்போது அறிவு விளக்கம் இல்லாமல் இருக்கும். இருளைச் சார்ந்து இருக்கும் கண்ணைப் போன்றது இது.

செல்வத்தைச் சிறுசெல்வம், பெருஞ் செல்வம் என்று வகைப்படுத்துதல் போல, அறிவையும் சிற்றறிவு, பேரறிவு என்று வகைப்படுத்தலாம். செல்வப் பெருக்கமும் அறிவுப் பெருக்கமும் ஒரே தன்மையானவை அல்ல. செல்வப் பெருக்கம் அளவைப் பொறுத்தது. குறைய வைத்திருந்தால் சிறுசெல்வம்.  நிறைய வைத்திருந்தால் பெருஞ்செல்வம். ஆனால், அறிவுப் பெருக்கத்தை அப்படிச் சொல்ல முடியாது. செய்திகளை அறிந்து வைத்து இருக்கிறவன்தான் அறிவாளி என்றால் விநாடிவினா நிகழ்ச்சிகளில் நிறைய விடை சொல்கிறவர்களைப் பேரறிவாளர்கள் என்று சொல்லிவிடலாம். அறிவு என்பது அளவைப் பொறுத்தது இல்லை.  தன்மையைப் பொறுத்தது. அறிந்து வைத்திருக்கும் செய்திகளின் எண்ணிக்கையைப் பொறுத்தது அல்ல அறிவு. அறிந்து வைத்திருப்பது எதை என்பதுதான் அறிவுக்கு அளவுகோல்.

தன்னை ஒரு மாணவனாக அறிந்து வைத்து இருந்தால், அவன் அறிவைப் பெறுவதிலேயே குறியாக இருப்பான். அறிவுக்குப் புறம்பான செயல்களில் அவன் ஒருபோதும் ஈடுபடமாட்டான். பள்ளிக்கு ஏன் வந்தோம் என்று தன்னை உணர்ந்தவன்தான், தான் எதற்காக இருக்கிறோம் என்பதை உணர்ந்தவன்தான், அதற்கான முழுப் பயனை அடையமுடியும். தனக்கு அறிவுறுத்துபவர் ஆசிரியர் என்பதையும், அவர் காட்டியபடி நடத்தல் வேண்டும் என்பதையும் மாணவனால் உணர்ந்து கொள்ள முடியும்.

ஒரு மருத்துவர் தன்னை மருத்துவராக உணர்ந்தால்தான் நோயாளியைக் குணப்படுத்த முடியும். அவர் தன்னை ஒரு மருத்துவ வியாபாரியாக எண்ணிக் கொண்டால், நோயாளியிடம் இருந்து பணத்தை மட்டுமே பறிக்க முடியும். மருத்துவர் என்ற போர்வையில் இருந்துகொண்டு, தனது கடமையை மறந்து பணத்தைப் பறிப்பவர் மருத்தவர் ஆகாமாட்டார். எனவே, தன்னை உணர்வது அவசியமாகின்றது. தன்னை உணர்வதே அறிவு ஆகின்றது. இது எல்லா நிலையினருக்கும் பொருந்தக் கூடியது. எனவேதான், நமது கருமூலம் அறுக்க வந்த திருமூல நாயனார்,

"தன்னை அறிவ(து) அறிவாம், அஃது அன்றிப்

பின்னை அறிவது பேய் அறிவு ஆகுமே"

என்று அருளினார்.

பெறத்தக்க அறிவாவது, தன்னை உள்ளவாறு அறியும் அறிவே தன்னை உள்ளவாறு அறியாமல் பிறவற்றை அறியும் அறிவுகள் எல்லாம் மருள் அறிவுகளே ஆகும்.

தன்னையே தான் அறிந்து வைத்திருக்கிற அறிவுதான் அறிவு. தன்னை அறிகிற வேலையை விட்டுவிட்டு மற்றவற்றையெல்லாம் அறிகிற அறிவு பேய் அறிவு. பேயானது நிலைகொள்ளாமல் உழலும்; அலையும்; தவிக்கும். அதைப் போல, கண்டதையெல்லாம் அறிந்து, அறிந்ததை எல்லாம் தனக்கே உரித்தாக்கிக் கொள்ள நினைத்து, அத்தனைக்கும் ஆசைப்பட்டு, அவற்றை அடைய நினைத்துப் பின்னால் ஓடி அலைந்து, கிடைத்துவிட்டால் நுகர்ந்து சலித்து, கிடைக்காவிட்டால் வருந்தி இளைத்துத் தடுமாறி நிற்பது பேய் அறிவு.

"தம்மை உணர்ந்து, தம்மை உடைய தன் உணர்வார்" என்பது சிவஞானபோதம். முதலில் ஆன்மாவாகிய தமது இயல்பை உணர்ந்து பின், தம்மை அடிமையாக உடைய இறைவனது இயல்பை உள்ளவாறு உணர்ந்த சித்தாந்த சைவர்களாகிய பெருமக்கள் என்பது இதன் பொருள்.

"தன்னை அறியவேண்டும் - அகப்பேய்!

சாராமல் சாரவேண்டும், பின்னை

அறிவதெல்லாம் அகப்பேய்!

பேய் அறிவு ஆகும் அடி

ஒப்பனை அல்லவடி - அகப்பேய்!

உன் ஆணை சொன்னேனே!

அப்புடன் உப்பு எனவே - அகப்பேய்!

ஆராய்ந்து இருப்பாயே!"

என்கிறார் அகப்பேய் சித்தர்.

"தன்னை அறிந்து இன்பம்உற, வெண்ணிலாவே! - ஒரு

தந்திரம் நீ சொல்லவேண்டும் வெண்ணிலாவே!"

என்கிறார் வள்ளல்பெருமான். தன்னை அறிந்தாலே ஒருவன் இன்பத்தை அடைய முடியும். தன்னை அறிந்தவனே தனது தலைவனை அறிவான். அப்படி அறிந்தால்தான், தானும் ஒரு தலைவனாக முடியும். எனவே, தான் யார் என்பதை ஒருவன் கண்டிப்பாக உணரவேண்டும்.

ஒருவர் தனக்கு வெளியில் உள்ள பொருட்களையெல்லாம் அறிவதைப் போலவே தன்னையும் அறிந்திருக்க வேண்டும். " நான் யார் தெரியுமா?" என்று கேட்கிறவர்கள், தன்னை இன்னான் என்று அறிந்தே சொல்லுகிறார்கள். அது நல்லதா, தீயதா என்பது வேறு. தன்னுடைய குறைநிறைகளே தனக்குத் தெரியாது என்றால் பிறரையும் அறிவதில் முழுமை இருக்காது. அறிவு என்பது முயற்சியால் விளைவது.  

தன்னை அறியும் அறிவு என்பதே ஒரு தவநிலை ஆகும். தவத்தால் எண்ணியது கைகூடும் என்பார்கள். திருமூல நாயனார் கூறுதல் காண்க.

"முன்னை அறிவினில் செய்த முதுதவம்

பின்னை அறிவினைப் பெற்றால் அறியலாம்

தன்னை அறிவது அறிவாம், அஃது அன்றிப்

பின்னை அறிவது பேய் அறிவு ஆகுமே."

தன்னை அறியும் அறிவே அறிவு. ஏனைய அறிவெல்லாம் பேய் அறிவு. அது, ஆவதைவிட்டு ஆகாதவற்றை, உதவுவதை விடுத்து உதவாதவற்றை அறிய அலையும் அறிவு.

"ஒளிதிகழ்  அறிவை அறிவது பொருள் என அருளிய பெருமாளே" என்றும், "அறிவை அறிபவர் அறியும் இன்பம்தனை" என்றும், "அறிவால் அறிந்து உன்இருதாள் இறைஞ்சும் அடியார்" என்றும், "அறிவை அறிவால் அறிந்து நிறைவாகி" என்றும் அருணகிரிநாதர் கூறிய அருள்வாக்குகளைச் சிந்திக்க உண்மை விளங்கும். பாம்பின் கால் பாம்பு அறியும் என்ற பழமொழியின்படி, இதன் அருமையை உணர்ந்த அநுபூதிமானாகிய தாயுமான அடிகளார்,

"அறிவை அறிவதுவே ஆகும் பொருள் என்று

உறுதிசொன்ன உண்மையினை ஒருநாள் எந்நாளோ?"

என்று அருணகிரிநாதர் அருள்வாக்கை அப்படியே மனதில் வாங்கி, பலகாலும் சிந்தித்து, அதன் அநுபவத்தை அவாவுகின்றனர். அழகிய கோபுரத்தில் தங்கக் கலசம் வைப்பது போல், "அறிவை அறிவது பொருள்" என்று அருணகிரிநாதரும், "அறிவை அறிவதுவே ஆகும் பொருள்" என்று தாயுமான அடிகளாரும் கூறியருளியதன் அருமை, மெய்யறிவு பெறுவதில் நாட்டம் உள்ளோர்க்குப் பெருவிருந்தாக அமையும் என்பதில் ஐயமில்லை.

"அறிவு ஒன்று அற நின்று அறிவார் அறிவில்

பிறிவு ஒன்று அற நின்ற பிரான் அலையோ?"

என்பது அருணகிரிநாதர் அருளிய கந்தர் அனுபூதி வாக்கு.

இறைவன் எங்கும் நிறைந்து நின்றவன். அவன் இல்லாத இடமே இல்லை. எல்லாப் பண்டங்களிலும், எல்லா உயிர்களிலும் கலந்து இருப்பவன் அவன். ஆனால், அவனுடைய இருப்பு விளங்கித் தோன்றுவது இல்லை. பண்டங்களை விட, உயிர்களிலும், அவற்றின் அறிவிலும் விளங்கித் தோன்றுவான். விளக்கின் ஒளியானது, அதன் திரியின் நுனியில் தங்கி அறை முழுவதும் ஒளியைத் தருவதைப் போன்று இருப்பான். உயிர்களின் அறிவில் இருப்பான் என்றாலும், அறிவு மிக்கவரிடம் கொஞ்சம் கூடுதலாக விளங்குவான். மெய்யறிவு மிக்கவர்களிடம் முழுமையாக விளங்கித் தோன்றுவான். 

"அறிவும், அறியாமையும் கடந்த அறிவு திருமேனி என்று உணர்ந்து, உன் அருண சரணாரவிந்தம் என்று பணிவேனோ?" என்று ஒரு திருப்புகழ்ப் பாடலில் அருணகிரிநாதர் கூறுகின்றார். இறைவன் மெய்யறிவு வடிவானவன். வாலறிவன் என்றார் திருவள்ளுவ நாயனார். மெய்யறிவு என்றாலும், வாலறிவு என்றாலும் ஞானம் ஏன்றே பொருள். இறைவனுடைய திருமேனி நமது உடம்பு போன்றது என்று மயங்கித் திரிபவர் பலர். வாய்க்கு வந்தவாறு பிதற்றுவர் பலர். நமது உடம்பு எலும்பு நரம்பு உதிரம் முதலிய ஏழு தாதுக்களால் ஆனது. இறைவனுடைய உருவம் இத்தன்மையது அல்ல. அது அறிவு மயமானது. அந்த அறிவும் நமக்கு உள்ள உலக அறிவு, கலையறிவு, மற்றுமுள்ள ஆராய்ச்சியறிவுகள் அல்ல.

"ஞானம்தான் உருஆகிய நாயகன் இயல்பை

யானும் நீயுமாய் இசைத்தும் என்றால், அஃது எளிதோ?

மோனம் தீர்கிலா முனிவரும் தேற்றிலர், முழுதும்

தானும் காண்கிலன் இன்னமும் தன்பெருந்தலைமை."

என்று சிங்கமுகன் கூற்றாகக் "கந்தபுராணம்" கூறுகின்றது.

அறிவைத் திருமேனியாகக் கொண்ட பரம்பொருளை வழிபடுவதனால் அறிவு நலத்தை நாம் பெற்று உய்யலாம்.

"அறிவு உடையார் எல்லாம் உடையார், அறிவு இ(ல்)லார்

என் உடையரேனும் இலர்."

என்று திருவள்ளுவ நாயனார் கூறியபடி, அறிவு எல்லா நலன்களையும் எளிதில் தரும். அறிவு நிரம்பப் பெற்றவன் அஞ்சாமையையும் அமைதியையும் பெறுவான். பின்னே வருவதை முன்னே அறிவான். ஆகவே, அறிவுதான் நமக்கு இன்றியமையாத சிறந்த செல்வம்.

அறிவே திருமேனியாக உடைய இறைவன் திருவடி மலரைச் சிந்தித்து வாழ்த்தி வந்திப்போர்,  அறிவு நலத்தையும், அதனால் ஏனைய நலங்களையும் எளிதில் பெற்று இன்புறுவர் என்பது உறுதி.

எனவே, மெய்யறிவைப் பெறுவதற்கு அடிப்படையானது, தன்னை அறியும் அறிவே ஆகும். தன்னை அறிந்தால், தனது தலைவனை அறிய முடியும். தன்னை அறிந்து, தலைவனாகிய இறைவனை உள்ளபடி அறிந்தால், அப்படி அறிந்த ஆன்மாவைத் தனது அடியவனாக இறைவன் ஏற்றுக் கொள்வான். தன்னை அறியாமல் இருப்பதே உயிருக்குக் கேட்டினைத் தருவது என்கிறார் திருமூல நாயனார்.

"தன்னை அறியத் தனக்கு ஒரு கேடுஇல்லை,

தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்,

தன்னை அறியும் அறிவை அறிந்தபின்

தன்னையே அற்சிக்கத் தான் இருந்தானே." --- திருமந்திரம்.

இதன் பொருள் ---

ஒருவன் பொருள் இயல்புகளை உள்ளவாறு அறியப் புகும்பொழுது, தன்னுடைய இயல்பை முதற்கண் உள்ளவாறு அறிவானாயின், அதன் பின்பு அவனது அறிவு பொய்யறிவாகிக் கெடாது. தானும் எந்தக் கேட்டினையும் அடையமாட்டான். ஆகவே, மனிதன் முதலில் தன்னுடைய இயல்பை அறிய முயலாமல், பிற பொருள்களின் இயல்பை அறிய முற்படுவதால், அறிவுகெட்டு அலைகின்றான். அதனால், ஒருவன் முதலில் தனது இயல்பை உள்ளவாறு அறியும் அறிவைப் பெற்றுவிடுவானாயின், அவன் தன்னையே பிறர் வழிபடும் அளவிற்கு உயர்ந்து நிற்பான்.

"தம்மை உணரார் உணரார்" என்பது மெய்கண்ட தேவ நாயனாரின் அருள்வாக்கு. தம்மை உணராதவன், மெய்ப்பொருளாகிய இறைவனை உணர்ந்து கொள்ள மாட்டான். தன்னை ஒருவன் உணர்வதற்கும் இறையருள் வேண்டும். "அவன் அருளாலே அவன் தாள் வணங்கி" என்னும் மணிவாசகம் இதனைத் தெளிவு படுத்தும். தன்னை ஒரு அறிவுப் பொருளாக உணர்ந்தல் வேண்டும்.

"அறிவு வடிவு என்று அறியாத என்னை,

அறிவு வடிவு என்று அருள்செய்தான் நந்தி;

அறிவு வடிவு என்று அருளால் அறிந்தேன்,

அறிவு வடிவு என்று அறிந்து இருந்தேனே."    --- திருமந்திரம்.

இதன் பொருள் ---

அறிவு மயக்கத்தால், `எனது வடிவம் அறிவு` என்னும் உண்மையை அறியாது. `உடம்பே` என்று மயங்கி இருந்த என்னை, நந்திபெருமான் (குருவாகத்) தோன்றி அம்மயக்கத்தை நீக்கி, `உனது வடிவம் உடம்பு அல்ல,  அறிவு` என அருளிச்செய்து உண்மையை உணரப் பண்ணினார். அவரது திருவுள்ளக் கருணையால் அடியேனுக்கு அறிவு உதயமாயிற்று. அதனால், `உடம்பு எனது வடிவம் அல்ல` என உணர்ந்து அதனின் நீங்கி இருக்கின்றேன்.

குருவருளால் ஒருவனுக்கு அறிவு உதயம் ஆகும். அப்படிப் பெற்ற அறிவுக்கு எக்காலத்தும் அழிவு இல்லை. அறிவைப் பெறுவதற்குத் துணையாக இருந்த உடம்புதான் அழியும்.

"அறிவுக்கு அழிவு இல்லை, ஆக்கமும் இல்லை;

அறிவுக்கு அறிவு அல்லது ஆதாரம் இல்லை;

அறிவே அறிவை அறிகின்றது என்றிட்டு

அறைகின்றன மறை ஈறுகள் தாமே. --- திருமந்திரம்.

இதன் பொருள் ---

பிறப்பும் இறப்பும் உடம்புக்கே. உயிரின் அறிவுக்கு அழிவு இல்லை. அதை உண்டாக்குவாரும் இல்லை. அதன் உதயம் ஆணவத்தால் மறைந்து கிடக்கின்றது. அறிவுப் பொருளாகிய உயிருக்கு, மெய்யறிவுப் பொருளாகிய இறைவனை பற்றுக் கோடாக உள்ளவன். அறிவுப் பொருள்தான் அறிவுப் பொருளை அறிந்துகொள்ள முடியும் என்று வேதங்களின் முடிவு (மறை ஈறு) என்று சொல்லபடும் உபநிடதங்கள் அனைத்தும் கூறுகின்றன.

அறிவுக்கு அழிவு இல்லை என்பதை, "ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப்பு உடைத்து" என்று நாயனார் அருளிய திருக்குறளால் தெளியலாம். அறிவுப் பொருளாகிய இறைவனை உணர்வது சடப் பொருளாகிய உடம்பு அல்ல. சடப் பொருளில் இறையருளால் தங்கி உள்ள, சிற்றறிவுப் பொருளாகிய உயிரே அறிகின்றது. அறிவுப் பொருள் அறிவுப் பொருளோடு சார்ந்து இருத்தலே முறை என்று அறிந்து, இறைவனைச் சார்ந்து இருப்பவரே உலகத்தில் பெரியவர்கள். பொருள் படைத்தோர் யாரும் பெரியவர் அல்ல. பெரிதிலும் பெரிதாக உள்ள இறைவன், தன்னை உணர்ந்த ஆன்மாக்களைப் பெரியவன் என்று ஏன்று கொள்ளும்.

"மன்னி நின்றார் இடை வந்து அருள் மாயத்து

முன்னி நின்றானை மொழிந்தேன், முதல்வனும்

பொன்னின் வந்தான் ஒர் புகழ் திருமேனியைப்

பின்னி நின்றேன் `நீ பெரியை` என்றானே."

இதன் பொருள் ---

உலகத்தில் பலராய்க் குழுமி வாழ்கின்ற அனைத்து மக்களிடையே தானும் ஒரு மகன்போல வந்து அருள்செய்ய வேண்டும்` என்கின்ற சூழ்ச்சியைத் திருவுள்ளத்து எண்ணி, அவ்வாறு வந்து என்முன் நின்ற இறைவனை நான் `சிவன்` என்று அறிந்துகொண்டு அவனைப் போற்றினேன். பின்னும் அங்ஙனம் அவன் வந்து நின்ற திருமேனியை விடாது பற்றிக்கொண்டு திரிந்தேன். அதைக் கண்டு அவனே வியந்து,  'அப்பா! நீ மிகப் பெரியவன்` என்று கூறினான்.

எனவே, சிற்றறிவுப் பொருளாகிய ஆன்மா, பேரறிவுப் பொருளாக உள்ள இறைவனை அறிந்து கொள்வதே முறை ஆகும். அதற்கு ஆன்மா தன்னை ஒரு அறிவுப் பொருள் என்று உணர்ந்து கொள்ள வேண்டும். தன்னை உணர்ந்தால் தலைவனை உணரலாம்.


காக்கை விரும்புவது

 


காக்கை விரும்புவது வேப்பம் பழத்தையே

-----

மானுட வாழ்க்கை குறைகளை உடையது. குறைகள் இல்லாதவன் மனிதன் அல்ல. இறைவன் ஒருவனே குறைவில்லாத நிறைவாக உள்ளவன். ஆயினும் மனித வாழ்க்கையானது குறைகளே உடையதும் அல்ல. குறைகளும் உண்டு. நிறைகளும் உண்டு. குறைவிலா நிறைவுடையது பரம்பொருள் ஒன்றே. "குறைவிலா நிறைவே" என்று மணிவாசகர் போற்றுகின்றார். “நன்றுடையான் தீயதிலான்” என்று பாராட்டுகின்றார் திருஞானசம்பந்தர். குறையின் விளைவு  தீமை, துன்பம். நிறையின் விளைவு நன்மை,  இன்பம். 

குறைகளும், நிறைகளும் கலந்ததே மனித வாழ்க்கை! அதனாலேயே,  குறைகள் இயல்பானவை என்றும், சரியானவை என்றும் நியாயப்படுத்துதல் கூடாது. குறைகளில் இருந்து விடுதலை பெறவே இந்த வாழ்க்கை. அதற்கானவையே  கல்வி, கேள்வி, அறிவு, சமய வாழ்க்கை, இல்லற வாழ்க்கை, துறவற வாழ்க்கை ஆகிய அனைத்தும்.

அறிவறிந்த ஆள்வினை, பொருள் ஈட்டுதல், ஈட்டிய பொருளைத் துய்த்தல் ஆகிய அனைத்துமே மனித உயிர் வாழ்க்கை குறைகளில் இருந்து நீங்கி, நிறை பெறுவதற்குரிய நிலைகளே. ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் குறைகளும் உண்டு.  நிறைகளும் உண்டு. குறைகளையும், நிறைகளையும் சீர்தூக்கி ஆராய்ந்து மிகுதி நோக்கிப் பாராட்ட வேண்டும்; போற்ற வேண்டும்,  ஏற்றுக் கொள்ள வேண்டும்.

“குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்

மிகைநாடி மிக்க கொளல்"

என்கின்றார் திருவள்ளுவ நாயனார்.

குறைகளைத் திருத்துவதற்கு வழி,  குறைகளைத் துாற்றுதல் அல்ல. ஒருவரிடமுள்ள குறைகளை எடுத்துத் தூற்றுவது "சிறுமை" ஆகும் என்கின்றார் திருவள்ளுவ நாயனார். 

"அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்

குற்றமே கூறி விடும்” --- திருக்குறள்.

பெருமைக்கு உரிய சான்றோர், பிறரிடத்து உள்ள குறைகளை மறைத்துப் பேசுவர். சிறுமை உடைய கீழ்மக்கள்தான் பிறரிடத்து உள்ள குணங்களை மறைத்தும், குறைகளைத் தூற்றியும் திரிவர்.

"உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்

வடுக்காண வற்றாகும் கீழ்" --- திருக்குறள்.

பிறர் நன்றாக உடுப்பதையும், உண்பதையும் காண நேர்ந்தால், அத்தகையவர் மீது பொறாமை கொண்டு, குற்றம் கண்டுபிடிப்பதில் வல்லவர்கள் கீழ்மக்கள்.

அப்படியானால், பிறரது குற்றங்களை எடுத்துக் காட்டித் திருத்தாமல், அவர்களிடத்து உள்ள குற்றங்களுக்கும் உடந்தையாக இருக்கவேண்டும் என்பது கருத்து அல்ல. குற்றங்களுக்கு உடந்தையாக இருந்தால் குறை நீக்கம் உண்டாகாது. மாறாகப் பெருகவே செய்யும். பிறரை இழிவுபடுத்தும் நோக்கத்தோடு குற்றத்தை எடுத்துக் காட்டுதலும், பழிதூற்றும் எண்ணத்தோடு, குற்றத்தை எடுத்துக் கூறுதலும் தவறு.

மாறாக அவரிடமுள்ள குணங்களைப் பாராட்டி, மனம் நிறைந்த உறவினைப் பெற்று, அவர் நம் மீது கொள்ளும் நம்பிக்கையை வளர்த்துக் கொண்டு, தோழமை உணர்வில் சிறிதும் குறையாமல், சிறுகச் சிறுகக் குற்றங்களில் இருந்து விலக்கி, நிறைகளைப் பெறத் துணை செய்யவேண்டும்.

இறைவன் கூட அறியாமை நிறைந்துள்ள உயிர்களைக் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் திருத்துகின்றான். "பையவே கொடுபோந்து பாசம் என்னும் தாழ் உருவி" என்று இறைவன் திருவருளைப் போற்றுகின்றார் மணிவாசகர். "திருத்தித் திருத்தி வந்து, என் சிந்தை இடம் கொள் கயிலாயா! அருத்தித்து உன்னை அடைந்தார் விளைகள் அகல அருளாயே" என்றார் சுந்தரமூர்த்தி சுவாமிகள்.

உடலில் உண்டான கட்டி குற்றம் உடையது. துன்பம் தருவது. குற்றம் உடைய எதுவும் துன்பத்தையே தரும். ஆனாலும், உடலில் உண்டான கட்டியையும் மெல்லத் தடவிக் கொடுத்து, அது பழுத்தற்கு உரிய உபாயத்தைச் செய்து, பழுத்த பிறகு வலி இல்லாமலும், இரத்தம் சிந்தாமலும் அறுத்து அகற்றும் முறையே மருத்துவமுறை. ஈரும் பேனும் உள்ள தலையானாலும் எண்ணெய் தடவிச் சீவித்தான் அகற்ற வேண்டும். எனவே, குற்றங்களைத் திருத்தும் முறை இனிய முறையாக இருக்க, அன்பு கலந்த முறையாக இருக்கவேண்டும். அப்பொழுதுதான் உயிர்கள் மகிழ்ந்து குற்றங்களில் இருந்து எளிதில் விடுதலை பெறும். இதுவே இறைவன் உயிர்களை ஆட்கொள்ளும் முறையும் ஆகும்.

உயிர்கள் ஆணவத் தொடர்பால் அறியாமை வழிப்பட்டு வேட்கை கொள்கின்றன. இறைவன் "இது தீது",  "அது தீது"  என்று எடுத்த எடுப்பிலேயே யாருக்கும் உபதேசம் செய்வதில்லை. உயிர்களின் வேட்கையை அறிந்து பொன்னும், மெய்ப்பொருளும் தந்து, போகமும், திருவும் வழங்கி, உயிர்கள் செல்லுகின்ற வழியிலேயே தானும் சென்று, புறம் புறம் திரிந்து, துய்ப்பில் உயிருக்கு உண்டான வேட்கை தணியும் வரை காத்திருந்து, அறிவினைப் புகட்டி ஆட்கொண்டு அருளுகின்றான். சுந்தரமூர்த்தி சுவாமிகள் வலராற்றை நன்கு உணர வேண்டும்.

உயிரில் இயல்பாகவே உண்டாகியுள்ள குற்றங்களை அன்பின் வழியில் அகற்ற முயல்வோர் சான்றோர். இத்தகு சான்றோர் இன்று நாட்டில் அருகிவிட்டனர்.  பிறர் குற்றத்தைக் தூற்றுவதே தொழிலாக வளர்ந்து வருகிறது. "நீ ஏன் இந்தத் தவறு செய்தாய்" என்று கேட்டால், "இதற்கு முன் அவன் தவறு செய்யவில்லையா?" என்று கேட்பதும், தான் செய்த தவறை நியாயப்படுத்துவதும் காணப்படுகின்றது. இது நெறியும் அல்ல. முறையும் அல்ல. அடுத்தவன் ஒரு குற்றம் செய்தான் என்று அறிந்து, அந்தக் குற்றம் தன்னிடத்து நேராமல் காத்துக் கொள்வதே அறிவுடைமை. தான் செய்த குற்றத்தைப் பிறர் குற்றத்தைக் காட்டி நாயாயப்படுத்துவது முறை அல்ல. "ஏதிலார் குற்றம் போல் தன் குற்றம் காண்கின், பின் தீது உண்டோ மன்னும் உயிர்க்கு" என்னும் திருக்குறள் சொல்லளவிலேயே உள்ளது. இன்று மக்களிடையில் குற்றமே காணும் இயல்பு பெருகி வளர்கிறது. இங்கும் அங்குமாகவுள்ள குறைகளைத் தூற்றுவதையே தொழிலாகக் கொண்ட தாள்களும், மேடைகளும் வளர்ந்துவிட்டன.

ஒரு சார்பு உடையவர்கள், பகைமை உணர்ச்சி உடையவர்கள் குற்றங்களைப் பார்க்கிறார்கள். குணங்களை எடுத்துக் கொள்ளத் தவறுகிறார்கள்.  குணங்களை எடுத்துக் கொள்ள மறுக்கிறார்கள். சிலர் இகழ்வதை ஒரு பொருளாகக் கருதத் தொடங்கினால், நம்மால் வாழவே முடியாது. "பிறர் பிறர் சீர் எல்லாம் தூற்றிச் சிறுமை புறங்காத்து, யார்யார்க்கும் தாழ்ச்சி சொலல்" என்கிறார் குமரகுருபர அடிகளார். பிறரைப் பற்றிய நல்ல செய்திகளை எல்லாம் மறைக்காமல் வெளியே பரவச் செய்து, கெட்ட செய்திகளை அங்ஙனம் பரப்பாமல் காத்துக் கொள்ளும் உயர்ந்த செயல், ஒருவகையில் கடவுளுக்கு நோன்பு எடுக்கும் வணக்கச் செயலோடு ஒத்ததாகவே கருதப்படும்.

பிறர் குற்றத்தைத் தூற்றுவதாலேயே அந்தக் குற்றம் மறையப் போவது இல்லை. காக்கை வேப்பம் பழத்தையே விரும்புகிறது. அதனால் வேப்பம்பழம் இனிமை உடையதாகி விடாது. காக்கை விரும்பாத மாம்பழம் சுவையில்லாததாகவும் ஆகிவிடாது. காக்கைகளைப் போல கருமை மனம் உடையோர் ஒருவரிடத்தில் உள்ள நல்ல குணங்களைப் பார்க்க மறுப்பர். அதை எண்ணிக் கவலை கொள்ளுதல் கூடாது.

குறையே நோக்கி இகழ்பவர்களும், நிறைகளைக் கண்டு பாராட்ட மறுப்பவர்களும் மதிக்கும்படியாக வாழ்வது முடியாது. காரணம், அவர்களுக்கு இகழுதல் என்பது ஒரு தொழில் ஆகவிட்டது. பிறரிடத்தில் குற்றம் குறைகளைக் காணுகின்றவர்கள் யாருக்கும் தன்னிடத்தில் உள்ள குற்றம் குறைகள் தோன்றாமல் இருக்காது. தன்னிடத்தில் உள்ள குற்றம் குறைகளைப் பிறர் அறியாமல் இருக்கவேண்டும் என்பதற்காகவே, பிறரிடத்து உள்ள குறைகளை மட்டுமே எப்போதும் தூற்றிப் பேசிக்கொண்டு இருப்பார்கள். அவ்வாறு செய்வதால் தமது குற்றங்கள், குறைகள் மறைக்கப்படும், மறக்கப்படும் என்பதாக அவர்கள் மனப்பால் குடித்துக் கொண்டு இருப்பர். 

நம்மிடத்து உள்ள குறைகளையும், நிறைகளையும் நாமே ஆராய்வோம். குறைகளைக் களைய முயல்வோம். நிறைகளைப் பெருக்க,  வளர்க்க முயல்வோம். பிறர் தூற்றுவதற்கு அஞ்சி அல்ல. பிறர் பாராட்டுவதை விரும்பி அல்ல. நெறிமுறையான வாழ்க்கையை வாழ்ந்து,  நிறைநலம் அனைத்தும் பெறவேண்டும் என்பதற்காக.

"உண்டு குணம் இங்கு ஒருவர்க்கு எனினும், கீழ்

கொண்டு புகல்வது அவர் குற்றமே, --- வண்டு மலர்ச்

சேக்கை விரும்பும் செழும் பொழில்வாய் வேம்பு அன்றோ

காக்கை விரும்பும் கனி."

என்பது துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் அருளிய "நன்னெறி".

இதன் பொருள் ---

செழுமையாக உள்ள சோலையிலே உள்ள மலர்களிடத்திலே வண்டுகள் தேனை விரும்பிச் செல்லும். அச்சோலையில் பல நல்ல கனிகள் இருந்தாலும், காக்கையானது வேப்பம் பழத்தையே விரும்பும். அதுபோல, ஒருவனுக்குப் பல நல்ல குணங்கள் இருந்தாலும், கீழ்மக்கள் எடுத்துப் பேசுவது குற்றங்களை மட்டுமே. (குணங்களைப் பாராட்ட மாட்டார் என்பது கருத்து).

குணம் --- நல்லகுணம். கீழ் --- கீழ்மக்கள்.

தன்னிடத்தில் குற்றம் உள்ளவர், பிறரிட்டத்தில் உள்ள குற்றங்களையே பார்ப்பர், தூற்றுவர். குற்றமற்ற நல்லோர், பிறரிடத்தில் குற்றம் இருந்தாலும், தூற்றாமல், அவரிடத்தில் உள்ள நன்மைகளை எடுத்துப் பேசி, கொஞ்சம் கொஞ்சமாகத் திருத்தி நல்வழிப்படுத்துவார்கள். இவர்களையே உலகம் போற்றும்.

பிறரால் மதிக்கப்படுதல் வேண்டும் என்னும்படியாக ஒழுகுபவர்கள் இதைத்தான் செய்வார்கள் என்கின்றார் குமரகுருபர அடிகள், "நீதிநெறி விளக்கம்" என்னும் நூலில்.

"பிறரால் பெருஞ்சுட்டு வேண்டுவான் யாண்டும்

மறவாமே நோற்பது ஒன்று உண்டு, --- பிறர்பிறர்

சீர் எல்லாந் தூற்றி, சிறுமை புறங்காத்து

யார்யார்க்கும் தாழ்ச்சி சொலல்".

இதன் பொருள் ---

மற்றவர்களால் நன்கு மதிக்கப்பட வேண்டும் என்பதை விரும்பும் ஒருவன், எப்பொழுதும் மறவாமல் பின்பற்ற வேண்டுவது ஒன்று உண்டு. அது என்னவென்றால், மற்றவர்களிடத்து உள்ள பெருமைகளை எல்லாம் ஒளியாமல் வெளியில் பரவச் செய்து, அவர்களிடத்தில் உள்ள தீய ஒழுக்கங்களை எல்லாம் வெளியில் பரப்பாமல் காத்து, எல்லோரிடத்தும் பணிவான சொற்களையே பேசி வருதல் ஆகும்.


தீயவர் பெறும் ஆக்கம் அழியும்

தீயவர் பெறும் ஆக்கம் அழியும்

-----

திருக்குறளில் "கள்ளாமை" என்னும் ஓர் அதிகாரம். கள்ளாமையாவது,  பிறர் உடைமையாய் உள்ள யாதொரு பொருளையும், அவரை வஞ்சித்துக் கொள்ள நினையாமை. நினைத்தலும் செய்ததற்குச் சமானம். ஆதலால், அவ்வாறு கூறினார். 

இல்லறத்தில் உள்ளவர்கள் சுற்றத்தார் முதலியோரிடத்து, விளையாட்டு வகையாலாவது, அவரை வஞ்சனை செய்து கொள்ளுதற்குத் தக்க பொருள்களை அவ்வாறு கொள்ளலும் பொருந்தும். துறவறத்தார்க்கு அது பெரியதொரு குற்றம் ஆகும். எனவே, கள்ளாமை, துறவறத்தில் கூறப்பட்டது. கூறப்படவே, இல்லறத்தார் பிறர் பொருளைக் கவர எண்ணலாம் போலும் என்று கொள்ளக் கூடாது. விளையாட்டு வகையால் என்று கூறப்பட்டதை நினைவில் கொள்ளவேண்டும். துறவறத்தில் நின்றாருக்கு, மனமானது பொறிகளின் வழியில் புறத்தில் சென்று மடங்காமல், ஒரு முகப்பட்டு உயிரையே நோக்கி நிற்கவேண்டும். புறத்தில் செல்லுவது என்பது உடம்பின் பொருட்டாகவே அமையும். உடம்பின் பொருட்டுப் பொருளை நோக்கி, அதனை வஞ்சித்துக் கொள்ள நினைத்தல் பெரும் குற்றம் ஆகும். 

இந்த அதிகாரத்துள் வரும் மூன்றாம் திருக்குறளில், "களவு செய்தலினால் உண்டாகிய பொருளானது, அளவுக்கு மீறிப் பெருகுவது போலத் தோன்றி,  முன் இருந்த செல்வத்தோடும் அழிந்து விடும்" என்கின்றார் நாயனார்.

முன் இருந்த செல்வத்தோடும் போதலாவது, தான் போகும் காலத்தில் பழியையும் பாவத்தையும் நிலைபெறச் செய்து, அவன் முன் செய்த தருமத்தையும் உடன்கொண்டு போதல். களவு செய்வதால் உண்டாகிய செல்வம் பெருகுவது போலத் தோன்றி, பாவத்தையும் பழியையும் நிறுத்தி, விரைவில் அழிந்து விடும். ஆற்றில் வெள்ளம் வந்தபோது, வந்த புதுப் புனலோடு, முன்பே இருந்த புனலும் அடித்துச் செல்லப்படுவது போல, உள்ள செல்வமும், இல்லாமல் போகும்.


"களவினால் ஆகிய ஆக்கம், அளவு இறந்து

ஆவது போலக் கெடும்." --- திருக்குறள்.


இத் திருக்குறளுக்கு விளக்கமாக, சிதம்பரம் பச்சைக் கந்தையர் மடத்து, சென்ன மல்லையர் பாடி அருளிய, "சிவசிவ வெண்பா" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...


"வில்லவன் வாதாவி கபடு ஏதாயது, மலயச்

செல்வமுனி நோக்கால், சிவசிவா! - சொல்லில்

களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து

ஆவது போலக் கெடும்."


வாதாவி தன் தம்பியைக் கொன்று அகத்தியர்க்குப் படைத்து அவரால் தானும் மாண்டான். அகத்திய முனிவர் பொதியமலைக்குப் போகும் வழியில், தொண்டை நாட்டில் வாதாவி வல்லவன் என்னும் இராக்கத சகோதரர் இருவர், முனிவரை வஞ்சித்துக் கொல்லும் தங்கள் வழக்கம்போல், அவரையும் கொல்ல எண்ணினார்கள். ஆகையால், வாதாவி ஆடாய் மேய்ந்துகொண்டு இருந்தான். வில்லவன் முனிவரை எதிர்கொண்டு அழைத்து, இருக்க வேண்டினான். அதற்கு அவர் சம்மதித்ததனால், அக் காலத்திய வழக்கம்போல் அவன் வாதாவியாகிய ஆட்டை அறுத்துக் கறி சமைத்துப் படைத்தான்.  அகத்தியர் அகத்தில் வஞ்சனையின்றி ஆட்டுக் கறியைக் கொஞ்சமேனும் விடாமல் புசித்துப் பிராமணார்த்தத்தை நிறைவேற்றினார். உடனே, வில்லவன், தன் வழக்கம் போலச் சஞ்சீவி மந்திர உச்சாடனத்தால், அவர் வயிற்றில் இருந்த ஆட்டுக் கறியாகிய வாதாவியை உயிர்ப்பித்து, வயிற்றைக் கீறிக்கொண்டு வெளியில் வரவழைத்தான். அவர் வயிற்றில் வாதாவி உயிர் பெற்றதனால் கொட கொட என்று இரைந்தான். அந்த அரவத்தால், மோசத்தை உணர்ந்த அகத்திய முனிவர், வாதாவியின் நாசத்தை எண்ணி, "வாதாவி ஜீர்ணாஹா, சுவாஹா" என்று தம் வயிற்றைத் தடவினார். அவன் அவர் வயிற்றிலேயே ஜீரணமாகி மாண்டு போனான். வில்லவனையும் அவர் கோபாக்கினியினாலே சாம்பாராக்கிச் சென்றார். இதனால் ஆற்றுவாராகிய அகத்தியர்க்கு, ஆற்றாதாராகிய வில்லவ வாதாவியர் வலிய அழைத்து, இன்னா செய்ததனால், கூற்றத்தைக் கையால் விளித்ததுபோல், அவரால் உயிர் துறந்து அழிந்தமை காண்க.

தீயதொழில்களைச் செய்வதானல் ஒருவருக்கு உண்டாகும் செல்வத்தை,  நல்ல செயல்களைச் செய்து ஒழுகும் நல்லோர் சிறிதும் விரும்பமாட்டார். காரணம், அது எப்படியாயினும் கெட்டுப் போவதற்கு உரிய பொருள் ஆகும். ஒருவரை வஞ்சித்துத் தேடிய பொருள், வளர்வது போல் தோன்றினாலும் அதிவிரைவில் அழிந்துவிடும் என்கிறார் குமரகுருபர அடிகளார்.

"இடைதெரிந்து அச்சுறுத்து வஞ்சித்து எளியார்

உடைமைகொண்டு ஏமாப்பார் செல்வம் --- மடநல்லார்

பொம்மல் முலைபோல் பருத்திடினும் மற்றுஅவர்

நுண்ணிடைபோல் தேய்ந்து விடும்."  --- நீதிநெறி விளக்கம்.   

இதன் பதவுரை ---

இடை தெரிந்து - காலத்தின் வாய்ப்பினை அறிந்து, அச்சுறுத்து - பயமுறுத்தி, வஞ்சித்து - ஏமாற்றி, எளியார் உடமை கொண்டு - எளியவர்களுடைய பொருளைக் கவர்ந்து, ஏமாப்பார் செல்வம் - இறுமாப்புக் கொள்பவர்களுடைய செல்வமானது, மடம் நல்லார் பொம்மல் முலைபோல் பருத்திடினும் - பேதைமை உடைய பெண்களின் பூரித்த முலைபோல் ஒருக்கால் மிகுந்திட்டாலும், (அவை அதிவிரைவில்), அவர் நுண்ணிடை போல் தேய்ந்து விடும் - அப்பெண்களுடைய சிறுத்த இடை போலக் குறைந்து போகும்.

"அல்லது செய்வார் அரும்பொருள் ஆக்கத்தை

நல்லது செய்வார் நயப்பவோ? - ஒல் ஒலிநீர்

பாய்வதே போலும் துறைவ! கேள் தீயன

ஆவதே போன்று கெடும்." --- பழமொழி நானூறு.

இதன் பதவுரை ---

ஒல் ஒலி நீர் பாய்வதே போலும் துறைவ! கேள் - ஒல் என்று ஒலிக்கும் நீர் கற்பாறைமீது பாய்வதே போன்று விளங்கும் கடல் துறையை உடையவனே! கேட்பாயாக, தீயன ஆவதே போன்று கெடும் - தீச் செயல்களால் உண்டாகிய செல்வம் பெருகுவதே போன்று தோற்றுவித்துத் தன் எல்லையைக் கடந்து கெட்டுப் போகும் (ஆதலால்), அல்லது செய்வார் அரும்பொருள் ஆக்கத்தை - தீவினை செய்வாரது அரிய பொருளாகிய ஈட்டத்தை,  நல்லது செய்வார் நயப்பவோ - நல்வினையைச் செய்வார் விரும்புவரோ? (விரும்பமாட்டார்)

தீயன செய்வார் பெற்ற செல்வம்,  போகும்காலம் வரும்போது, பாவத்தையும் பழியையும் நிறுத்திச் செய்த அறத்தை உடன்கொண்டு போகும். எனவே,  நல்லது செய்வார் அந்தச் செல்வத்தை விரும்பமாட்டார். புதுவெள்ளம் வந்து பழைய வெள்ளத்தையும் கொண்டு போவது போல, தீயார் செல்வம் வருவது போன்று தோன்றி,  வந்த அளவினும் மிகுந்து போகக் கூடியது. 

தீய வழியில் செல்வம் வந்து சேரும்போது, ஆனந்தமாகத்தான் இருக்கும். எவ்வளவு பெருகினாலும் தீய வழியில் வந்த செல்வம் தீயதுதான். எவ்விதத்திலும் அது நல்லது ஆகாது. முடிவில் அது துன்பத்தையே தந்து செல்லும்.

"தீய செயல் செய்வார் ஆக்கம் பெருகினும் 

தீயன தீயனவே வேறு அல்ல, - தீயன 

நல்லன ஆகாவாம், நா இன்புற நக்கிக் 

கொல்லும் கவயமாப் போல்."

என்பது "நீதிநெறி விளக்கம்" என்னும் நூலில் குமரகுருபர அடிகளார் அருளிய பாடல்.

இதன் பதவுரை ---

தீய செயல் செய்வார் - தீயன ஆகிய  செயல்களைச் செய்வோரின்,  ஆக்கம் பெருகினும் - செல்வமானது முதலில் பெருகி வளர்ந்தாலும், தீயன தேயனவே - தீய தொழில்களால் திரட்டப் பட்ட அப்பொருள்கள்  பின்னர் தீமை பயப்பனவே, வேறு அல்ல - (அல்லாமல்) நன்மை பயப்பன ஆகா. (காரணம்)  தீயன நல்லன ஆகாவாம் - தீய தொழில்களால் வரும் பொருள்கள், எக்காலத்திலும் நன்மை பயப்பன  ஆக மாட்டாவாம், (ஆதலின் இது) நா இன்புற நக்கி - நாவால் முதலில் இன்பம் உண்டாகுமாறு நக்கிக் கொடுத்து, கொல்லும் கவயமாப் போல் - (பின்னர்க்) கொன்று விடும் காட்டுப் பசுவினைப் போல்வதாகும். 

நல்ல வழிகளில் ஈட்டப்படாத செல்வமானது முதலில் ஆவது போன்று தோன்றி,  பின்னர் இல்லாது கெட்டு ஒழியும் என்பது கருத்து.

காட்டுப்பசுவானது, தான் கொல்ல விரும்பும் ஒரு விலங்கை முதலிலேயே கொல்லாமல், முதலில் நாவினல், அப்பிராணிக்குச் சுகம் தோன்றுமாறு நக்கிக் கொண்டே இருந்து, அச்சத்தில் இருந்து விடுபட்ட அந்த விலங்கு அசையாமல் இருக்கும்போது, திடீர் எனப் பாய்ந்து அதன் உயிரை வாங்கும். அதுபோல, தீய வழியில் திரட்டிய பொருளானது முதலில் சுகம் தருவது போலத் தோன்றினாலும், முடிவில் தீமையையே தரும் என்பதால், "தீயன தீயனவே, வேறு அல்ல, தீயன நல்லன ஆகாவாம்" என்றார் அடிகளார். 

"பவமும் பாவமும் பாதகமும் தீவினை." ---  பிங்கலந்தை.

"தானமும், அறமும், தருமமும், சீலமும்,

அருளும், மங்கலமும், சுபமும், சுகிர்தமும்,

புண்ணியமும், பாக்கியமும் நல்வினை ஆகும்". ---  பிங்கலந்தை.

தீயானது எந்த நேரத்தில், எந்த இடத்தில், எந்த உடம்பில் பட்டதோ, அந்த நேரத்தில், அந்த இடத்தில், அந்த உடம்பினை மட்டுமே சுடும். வேறு உடம்பில், வேறு நேரத்தில், வேறு இடத்தில் சென்று சுடுவது இல்லை. ஆனால், தீவினையானது, எந்தக் காலத்தில், எந்த இடத்தில் செய்யப்பட்டதோ, அந்த உடம்பில் உள்ள உயிரை வருத்துவது மட்டும் அல்லாமல், அந்த உயிரை விடாது பற்றிச் சென்று, மற்றொரு காலத்திலும், மற்றொரு இடத்திலும், மற்றோர் உடம்பிலும் வருத்தும்.

எனவே, தீவினையானது, தீயினை விடவும் மிகவும் அஞ்சத் தக்கது என்றார் திருவள்ளுவ நாயனார்.

"தீயவை தீய பயத்தலான், தீயவை

தீயினும் அஞ்சப் படும்." --- திருக்குறள்.

"தனக்கு இன்பம் தருதலைக் குறித்து ஒருவன் செய்யும் தீவினைகள், தொடக்கத்தில் இன்பத்தைத் தருவன போல் தோன்றி, பின்பு இன்பத்தை அழித்து, துன்பத்தையே தருதலால், தீய செயல்களைத் தீயினை விடவும் அதிகமாக அஞ்ச வேண்டும்" என்கின்றார் நாயனார்.

இத் திருக்குறளுக்கு விளக்கமாக, பிறைசை சாந்தக் கவிராயர் பாடியருளிய நீதிசூடாமணி என்கின்ற "இரங்கேச வெண்பா" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...

"காளமுனி பாண்டவர்மேல் ஏவும் கடி விழுங்க

ஏளிதம் ஆனான், இரங்கேசா! - நாளுந்தான்

தீயவை தீய பயத்தலால் தீயவை

தீயினும் அஞ்சப் படும்." 

இதன் பதவுரை ---  

இரங்கேசா - திருவரங்கநாதக் கடவுளே! காளமுனி - (துரியோதனன் வார்த்தையைக் கேட்ட) காளமுனிவன், பாண்டவர் மேல் - பஞ்ச பாண்டவரைக் கொல்லும்படி அவர்கள் மேல், ஏவும் கடி - அனுப்பின பூதமானது திரும்பி வந்து, விழுங்க - (தன்னையே எடுத்து) விழுங்கி விட, ஏளிதம் ஆனான் - இகழ்ச்சிக்கு இடமானான், (ஆகையால், இது) நாளும் - எப்போதும், தீயவை - தீவினைகள், தீய - துன்பங்களை, பயத்தலால் - கொடுப்பதனால், தீயவை - அந்தத் தீவினைகள், தீயினும் - நெருப்பைக் காட்டிலும் (அதிகமாய்ச் சுடுவதாக),  அஞ்சப்படும் - (பெரியோரால்) பயந்து நீக்கப்படும் (என்பதை விளக்குகின்றது).

கருத்துரை ---  பாவகாரியங்களைப் பயந்து நீக்கவேண்டும்.

விளக்கவுரை --- வனத்தில் இருந்த பாண்டவரைக் கொல்ல எண்ணின துரியோதனன் காளமா முனியைக் கொண்டு வாரணயாகம் செய்து, அதிலிருந்து ஒரு பூதத்தை உண்டாக்கி, அவர்களைக் கொல்ல ஏவினான். அதை, முன்னரே உணர்ந்த தரும தேவதை பாண்டவர் ஐவரையும் காக்கும் பொருட்டு, வனத்தில் ஒரு நச்சுப்பொய்கையை உண்டாக்கி, அவர்களை நெடுந்தூரம் அழைத்துக் கொண்டுபோய், அதன் நீரைக் குடிப்பித்து அவர்களுக்கு மரண மூர்ச்சை உண்டாக்கி இருந்தது. அவர்களைத் தேடி வந்த பூதம், அவர்கள் செத்துக் கிடந்ததைக் கண்டு, பிணங்களைத் தின்னவா காளமுனி நம்மை ஏவினான் என்று பெருங்கோபம் கொண்டு, திரும்பிச் சென்று அம் முனிவனையே எடுத்து விழுங்கிவிட்டுச் சென்றது. பிறகு தருமதேவதை ஐவரையும் எழுப்பிவிட்டதனால், பாண்டவர்கள் சுகமாய் வனத்தில் வாழ்ந்தார்கள். கேடு செய்த காளமாமுனி, தானே கெட்டுப் போனான்.

மரம் போல்பவர் மக்கள்

மரம் போல்பவர் மக்கள்

-----

    மனிதர்கள் தம்மை எவ்வளவு வெட்டினாலும், மரங்கள் அவர்களுக்குக் குளிர்ச்சியான நிழலைத் தந்து காக்கின்றதைப் போல, அறிவில் சிறந்த பெரியவர்கள், தாம் சாகும் அளவும் கூட ஒருவர் தமக்குத் தீங்குகளையே செய்தாரையும் தம்மால் ஆகும் அளவும் காப்பார்கள் என்று ஔவைப் பிராட்டியார் "மூதுரை" என்னும் நூலில் அறிவுறுத்தி உள்ளார்.

"சாந்தனையும் தீயனவே செய்திடினும் தாம்அவரை

ஆம்தனையும் காப்பர் அறிவுடையோர் - மாந்தர்

குறைக்கும் தனையும் குளிர்நிழலைத் தந்து

மறைக்குமாம் கண்டீர் மரம்."

இதன் பொருள் ---

மரங்களானவை, மனிதகள் தம்மை மனிதர் வெட்டுமளவும், அவருக்கும் குளிர்ச்சியாகிய நிழலைக் கொடுத்து வெயிலை மறைக்கும். அதுபோல, அறிவுடையவர், தாம் இறந்து போகுமளவும் பிறர் தமக்குத் தீங்குகளையே செய்தாராயினும்,  அவரை வெறுக்காது, அவரையும் தம்மால் முடிந்த அளவு காப்பார்கள்.

    அறிவுடையவர், தமக்குத் தீங்கு செய்வோருக்கும் நன்மையே செய்வார் என்பது கருத்து.

    ஆலமரம் பழுத்து இருந்தால் பரவேகள் தேடி வந்து பலயன்பெறுவது போல, நல்லவரிடத்திலே செல்வம் சேர்ந்து இருந்தால், நாடி வருவோர்க்கு எல்லாம் அது பயன்படும். படிக்காசுப் பலவர் பாடிய பழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்" என்னும் நூலில் ஒரு பாடல்..

"ஞாலம்உறு நல்லவர்க்குச் செல்வம் வந்தால்

    எல்லவர்க்கும் நாவ லோர்க்கும்

காலம் அறிந்து அருமையுடன் பெருமை அறிந்து

    உதவிசெய்து, கனமே செய்வார்,

மால்அறியாத் தண்டலைநீள் நெறியாரே,

    அவரிடத்தே வருவார் யாரும்,

ஆலமரம் பழுத்தவுடன், பறவையின்பால்

    சீட்டு எவரே அனுப்பு வாரே."

இதன் பொருள் ---

    திருமாலால் அறிய முடியாதவரும், திருத்தண்டலை என்னும் திருத்தலத்தில் "நீள்நெறி" என்னும் திருக்கோயிலில் எழுந்தருளி இருப்பவரும் ஆகிய சிவபெருமானே!  உலகத்திலே நல்லவர்களுக்குச் செல்வம் வந்தால், எல்லோர்க்கும், கற்றறிந்தவர்க்கும், அவருக்குத் தேவைப்படும் காலம் அறிந்தும், அவருடைய பெருமையை அறிந்தும் உதவி செய்து பெருமைப்பட வாழ்வார்கள். அப்படிப்பட்ட செல்வர்களிடத்தே எல்லாரும் வருவார்கள். எப்படி என்றால், ஆலமரம் பழுத்தவுடன், பறவைகளுக்கு யாரும் சீட்டு எழுதி அனுப்புவது இல்லையே.

    செல்வம் படைத்தவர்கள், அது இல்லாதவர்களைத் தேடி உதவுவார்கள்.

பலராலும் விரும்பப்படும் வள்ளல்கள், ஊரின் நடுவிலே சுற்றிலும் திண்ணை அல்லது மேடையோடு கூடிய காய்த்த பனைமரத்தை ஒப்பர். காய்த்த பனையானது பெண்பனை என்று சொல்லப்படும். தமக்கு செல்வம் நிறைந்துள்ளஒபோதும் ஒருவருக்கும் கொடுத்து உண்ணாத மக்கள், சுடுகாட்டில் உள்ள காய்க்காத பனைமரம் போல்வர். காய்க்காத பனையை ஆண்பனை என்பர். நாலடியார் பாடலைக் கவனியுங்கள்.

"நடுவூருள் வேதிகை சுற்றுக் கோள் புக்க

 படுபனை அன்னர் பலர்நச்ச வாழ்வார்,

 குடிகொழித்தக் கண்ணும் கொடுத்து உண்ணா மாக்கள்

 இடுகாட்டுள் ஏற்றைப் பனை."

இதன் பொருள் ---

ஊருக்குள்ளே ஓர் உயர்ந்த இடத்தில், எல்லோரும் வந்து பயன் பெறுமாறு காய்த்துக் குலுங்கும் பயனுடைய பனைமரம் போன்றவர்கள், பலரும் தம்மை விரும்பி வந்து பயன் பெறும்படி, பிறர்க்கு உதவி புரிந்து வாழுகின்ற பெரியவர்கள். அப்படி இல்லாது, மிகப் பெரிய செல்வச் செழிப்பில் இருந்தும், பிறருக்கு உதவி வாழாதவர்கள், ஒருவருக்கும் பயன்படாது ஊருக்கு வெளியே சுடுகாட்டில் இருக்கும் வெற்றுப் பனைமரம் போன்றவர்கள்.

பிறருக்கு உதவ வேண்டும் என்னும் உள்ளம் படைத்த செல்வந்தர்கள், ஊரின் நடுவிலே பழுத்துள்ள மரத்தைப் போன்றவர்கள் என்கிறார் திருவள்ளுவ நாயனார்.

"பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்

நயன் உடையான்கண் படின்." --- திருக்குறள்.

இதன் பொருள் ---

இரக்கம், தயவு முதலிய நற்குணங்கள் பொருந்திய ஒருவனிடம் செல்வம் திரண்டு இருந்தால், அது பழங்கள் தருகின்ற பயனுள்ள மரம் ஒன்று ஊரின் உள்ளே பழுத்தால் போன்றது.

இதையே பின்வரும் பாடல்கள் வழிமொழிகின்றன. 

"அழல்மண்டு போழ்தின் அடைந்தவர்கட்கு எல்லாம்

நிழல்மரம்போல் நேர் ஒப்பத் தாங்கிப் - பழுமரம்போல்

பல்லார் பயன்துய்ப்பத் தான்வருந்தி வாழ்வதே

நல்லாண் மகற்குக் கடன்." --- நாலடியார்.

இதன் பதவுரை ---

அழல் மண்டு போழ்தின் அடைந்தவர்கட்கு எல்லாம் நிழல்மரம் போல் - வெயிலின் அழல் மிகுந்த காலத்தில் தன்னை அடைந்தவர்கட்கு எல்லாம் ஒப்ப உதவும் நிழல் மரத்தைப்போல், நேர் ஒப்பத் தாங்கி - வறுமையின் துன்பம் மிகுந்த காலத்தில் தன்னை அடைந்தவர்கட்கு எல்லாம் சமம் பொருந்தக் காத்து, பழுமரம் போல் பல்லார் பயன் துயப்ப - பழுத்துள்ள மரம் பலரும் நுகரப் பழங்கள் உதவுதல்போல் பலரும் பயன் நுகரப் பொருள் உதவி, தான் வருந்தி வாழ்வதே நல் ஆண்மகற்குக் கடன் - தான் மேன்மேலும் பொருள் ஈட்டும் முயற்சியால் உழைப்பு உடையனாய் வாழ்வதே உயர்ந்த தாளாண்மை மிக்க மகனுக்குக் கடமை ஆகும்.

‘ஊருணி நிறையவும், உதவும் மாடு உயர்

பார் கெழு பயன்மரம் பழுத்தற்று ஆகவும்,

கார் மழை பொழியவும், கழனி பாய் நதி

வார் புனல் பெருகவும், மறுக்கின்றார்கள் யார்?  ---  கம்பராமாயணம், மந்திரப் படலம்.

இதன் பதவுரை ---

ஊருணி நிறையவும் - ஊராரால் உண்ணுதற்கு உரிய நீர்நிலை நீரால்  நிறையவும்; உதவும் மாடு உயர் - பலர்க்கும் உதவத்தக்க இடத்தில்  வளர்ந்துள்ள; பார்கெழு பயன்மரம் - உலகத்தார் விழையும் பயன்படும் மரம்; பழுத்தற்று ஆகவும் - பழுத்ததாகவும்; கார்மழை பொழியவும் - மேகங்கள் காலத்தில் மழையைப் பெய்யவும்; கழனிபாய் நதி - வயல்களில் பாய்கிற ஆறு;  வார்புனல் பெருகவும் - மிக்க நீர் பெருகவும்;  மறுக்கின்றார்கள் யார் - வேண்டாம் என்று தடுப்பவர்கள் யார் உளர்? (எவரும் இலர்.).’

     இந்த எடுத்துக்காடுகளால், இராமன் பிறர்க்கு நன்மை செய்யும்  ஒப்புரவாளன் என்பது  தெரிவிக்கப்பட்டது.“ ஊருணி நீர் நிறைந்து அற்றே உலகவாம், பேரறி வாளன் திரு” என்னும் திருக்குறளில்  வரும் உவமையினை,  "ஊருணி நிறையவும்" என்றும், “பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம், நயன் உடையான்கண் படின்” என்றும், "மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம், பெருந்தகையான்கண் படின்" என்றும் வரும் திருக்குறட் பாக்களில் வரும் மரங்கள் இரண்டினையும் சுட்டும் வகையில் “பார் கெழு பயன்மரம்” என்றும் கம்பர் சுருங்கச் சொல்லி உள்ளார்.

ஊரின் நடுவிலே பயன் தரத்தக்க மரம் பழுத்து உள்ளதை, பலருக்கும் உதவும் நல்லவர்கள் எனக் காட்டியதுபோல, யாருக்கும் உதவாதவரது செல்வத்தை "நச்சுமரம்" என்கிறார் திருவள்ளுவ நாயனார்.

"நச்சப் படாதவன் செல்வம், நடு ஊருள்

நச்சு மரம் பழுத்தற்று." --- திருக்குறள்.

இதன் பொருள் --- 

நற்குணங்கள் இன்மையால் ஒரு சிறிதும் பிறரால் விரும்பப்படாதவனுடைய செல்வமானது, ஊரின் நடுவில் நஞ்சுமரம் ஒன்று பழுத்து இருத்தலைப் போன்றது.

தான் தேடிப் படைத்த செல்வத்தைக் கொண்டு தாமே "வல்லாங்கு வாழலாம்" என்று எண்ணி இராது, இல்லாதவர்க்கும் கொடுத்து உதவி, செல்வத்தால் ஆன பயனை, இறையருளாக, புண்ணியமாக மாற்றிக் கொள்வதே அறிவு உடையார் பண்பு என்பது தெளியப்படும். இப்படிப்பட்டவர்களை, "உத்தம புருடர்" என்றும் "உத்தமர்" என்றும் சொல்வார்கள். 

உத்தமம் என்னும் சொல்லுக்கு, எல்லாவற்றுள்ளும் சிறந்தது, முதன்மை, மேன்மை, உயர்வு, நன்மை என்று பொருள் உண்டு. உத்தமபுருடர் அல்லது உத்தமர் என்னும் சொல்லுக்கு, உயர்ந்த குறிக்கோள்களை உடையவர், நன்னெறியில் ஒழுகுபவர், நற்குணம் உடையவர் என்று பொருள்.

பிறர்க்கு உதவி வாழுகின்ற நல்லோரையும், உத்தமர், மத்திமர், அதமர் என்று பிரித்து வகைப்படுத்தி, மரங்களோடு ஒப்புக் கூறுகின்றது "நீதிவெண்பா" என்னும் நூல். 

"உத்தமர்தாம் ஈயும்இடத்து ஓங்குபனை போல்வரே,

மத்திமர்தாம் தெங்குதனை மானுவரே, - முத்துஅலரும்

ஆம்கமுகு போல்வர் அதமர், அவர்களே

தேம்கதலியும் போல்வார் தேர்ந்து."

இதன் பொருள் ---

தமது செல்வத்தைப் பிறருக்கு, அவரது குறிப்பினை அறிந்து கொடுத்தலில், தலையாயவர் ஓங்கி வளரும் பனைமரத்துக்கு ஒப்பாவார்கள். இடைப்பட்டவர்கள், தென்னை மரத்துக்கு ஒப்பாவார்கள். கடைப்பட்டவர் முத்துப் போலப் பூக்கும் பாக்குமரத்துக்கும், இன்சுவை மிக்க பழங்களைத் தரும் வாழைமரத்துக்கும் ஒப்பாவார்கள்.

(உத்தமர் - தலையாயவர், மேலானவர். மத்திமர் - இடைப்பட்டவர். தெங்கு - தென்னை. மானுவர் - ஒப்பர். அலர்தல் - விரிதல், பூத்தல். கமுகு - பாக்கு. அதமர் - கடைப்பட்டவர், கீழோர். அவர்கள் - கடைப்பட்டவர்கள் எனப்படுவோர். தேம் - இனிமை. கதலி - வாழை. தேர்ந்து - ஆராய்ந்து, குறிப்பறிந்து.)

பனைமரம் நீர் ஊற்றிக் காக்காமலே வளர்வது. பனங்கிழங்கு, பனஞ்சாறு, பனையோலை, பனங்காய், பனம்பழம், வயிரமுள்ள பனங்கட்டை முதலிய எல்லா உறுப்புக்களாலும் எல்லோருக்கும் பயன்படுவது.

தென்னைமரம், நீர் ஊற்றிக் காவல் காத்து வளர்த்துக் காத்த பின்னரே பயன்படக் கூடியது.

பாக்குமரம் நெடுங்காலம் காத்து வளர்த்தால் தான் பயன் தரக் கூடியது. சிறிய பயனையே தரவல்லது.

வாழைமரம் ஒருமுறைக்கு மேல் மறுமுறை குலை ஈன்று பயன் தராது. இதற்குக் காவலும் நீரும் வேண்டும்.

தலையாயவர், முன்னால் தமக்கு எந்தவிதமான உதவியும் செய்யாதவர்க்கும் போதுமான அளவு கொடுத்துப் பேருதவி செய்வர்.

இடைப்பட்டவர், முன் உதவி செய்யாதவர் கேட்ட பின்பு சிறிது கொடுத்து உதவுபவர்.

கடைப்பட்டவர் சிறிதே உதவி செய்வர். கைம்மாற்றை எதிர் நோக்குவர். ஒருமுறைக்கு மேல் மறுமுறை எவ்வளவு வருந்திக் கேட்டாலும் கொடுக்கமாட்டார்.








பொது --- 1071. குருதி ஒழுகி

அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

குருதி ஒழுகி (பொது)


முருகா! 

காம உணர்வை நீக்கி, 

அடியேனுக்கு நல்லுணர்வைத் தந்து அருள்வாய்.


தனன தனன தனன தனன

     தனன தனன ...... தனதான


குருதி ஒழுகி அழுகும் அவல

     குடிலை இனிது ...... புகலாலே


குலவும் இனிய கலவி மகளிர்

     கொடிய கடிய ...... விழியாலே


கருதும் எனது விரகம் முழுது

     கலக மறலி ...... அழியாமுன்


கனக மயிலி னழகு பொழிய

     கருணை மருவி ...... வரவேணும்


பரிதி சுழல மருவு கிரியை

     பகிர எறிசெய் ...... பணிவேலா


பணில வுததி யதனி லசுரர்

     பதியை முடுக ...... வரும்வீரா


இரதி பதியை யெரிசெய் தருளு

     மிறைவர் குமர ...... முருகோனே


இலகு கமல முகமு மழகு

     மெழுத வரிய ...... பெருமாளே.


                  பதம் பிரித்தல்


குருதி ஒழுகி அழுகும் அவல

     குடிலை இனிது ...... புகலாலே,


குலவும் இனிய கலவி மகளிர்

     கொடிய கடிய ...... விழியாலே,


கருதும் எனது விரகம் முழுது

     கலக மறலி ...... அழியாமுன்,


கனக மயிலின் அழகு பொழிய

     கருணை மருவி ...... வரவேணும்.


பரிதி சுழல மருவு கிரியை

     பகிர எறிசெய் ...... பணிவேலா!


பணில உததி அதனில் அசுரர்

     பதியை முடுக ...... வரும்வீரா!


இரதி பதியை எரி செய்து அருளும்

     இறைவர் குமர! ...... முருகோனே!


இலகு கமல முகமும் அழகும்

     எழுத அரிய ...... பெருமாளே.


பதவுரை


பரிதி சுழல மருவு கிரியை பகிர எறிசெய் பணி வேலா --- சூரியன் சுழற்சி அடையும்படி, கிரவுஞ்ச மலை பிளவுபடுமாறு அழகிய வேலை விடுத்து அருளியவரே!

பணில உததி அதனில் அசுரர் பதியை முடுக வரும் வீரா ---சங்குகள் உள்ள கடலில் அசுரர்கள் தலைவனான சூரபதுனை ஓட்டி விரட்ட வந்தருளிய வீரரே! 

இரதி பதியை எரிசெய்து அருளும் இறைவர் குமர --- இரதி தேவியின் கணவனாகிய மன்மதனை எரித்தருளிய இறைவராகிய சிவபெருமானுடைய திருக்குமாரரே!

  முருகோனே --- முருகப் பெருமானே! 

இலகு கமல முகமும் அழகும் எழுத அரிய பெருமாளே ---விளங்கும் தாமரை போன்ற திருமுகங்களையும், திருமேனி அழகையும் எழுதுதற்கு அரிதான னபெருமையில் மிக்கவரே!

குருதி ஒழுகி அழுகும் அவல குடிலை இனிது புகலாலே --- இரத்தம் ஒழுகி அழுகிப் போகின்றதும், துன்பத்துக்கு இடமானதுமான குடிசையாகிய இந்த உடலை இனிமையானது எனக் கொண்டு, 

குலவும் இனிய கலவி மகளிர் கொடிய கடிய விழியாலே கருதும் --- கொஞ்சிக் குலாவி, இனிய கலவி இன்பத்தைத் தருகின்ற தரும் விலைமாதருடைய கொடுமையானதும் கடுமையானதுமான கண்களையே கருதுகின்ற

எனது விரகம் முழுதும் --- என்னுடைய காம இச்சையை முற்றிலுமாக, 

கலக மறலி அழியா முன் --- என்னுடன் போருக்கு எழும் இயமன் அழிற்றதற்கு முன்பாக,

கனக மயிலின் அழகு பொலிய கருணை மருவி வரவேணும் --- பொன்மயமான மயிலின் அழகு பொலியுமாறு கருணையோடு எழுந்தருளி வந்து அருள வேண்டும்.


பொழிப்புரை

சூரியன் சுழற்சி அடையும்படி, கிரவுஞ்ச மலை பிளவுபடுமாறு அழகிய வேலை விடுத்து அருளியவரே!

சங்குகள் உள்ள கடலில் அசுரர்கள் தலைவனான சூரபதுனை ஓட்டி விரட்ட வந்தருளிய வீரரே! 

இரதி தேவியின் கணவனாகிய மன்மதனை எரித்தருளிய இறைவராகிய சிவபெருமானுடைய திருக்குமாரரே!

  முருகப் பெருமானே! 

விளங்கும் தாமரை போன்ற திருமுகங்களையும், திருமேனி அழகையும் எழுதுதற்கு அரிதான னபெருமையில் மிக்கவரே!

இரத்தம் ஒழுகி அழுகிப் போகின்றதும், துன்பத்துக்கு இடமானதுமான குடிசையாகிய இந்த உடலை இனிமையானது எனக் கொண்டு, கொஞ்சிக் குலாவி, இனிய கலவி இன்பத்தைத் தருகின்ற தரும் விலைமாதருடைய கொடுமையானதும் கடுமையானதுமான கண்களையே கருதுகின்ற என்னுடைய காம இச்சையை முற்றிலுமாக, என்னுடன் போருக்கு எழும் இயமன் அழிற்றதற்கு முன்பாக, பொன்மயமான மயிலின் அழகு பொலியுமாறு கருணையோடு எழுந்தருளி வந்து அருள வேண்டும்.

விரிவுரை


குருதி ஒழுகி அழுகும் அவல குடிலை ---

ஒரு சிற கீரல் உண்டானால் கூட இரத்தமானது ஒழுகி, புண்ணாகி, அழுகிப் போகின்ற அவல நிலையை உடையதும், குடிசே போன்றதுமானது இந்த உடல். 

குலவும் இனிய கலவி மகளிர் கொடிய கடிய விழியாலே --- 

பொருள் ஒன்றையே கருதுகின்றவர் விலைமகளிர். பொருளுக்கு விலையாகத் தமது உடலை விற்பவர்கள். பொருள் உள்ளவரைக் கண்டால், நெடுநாள் பழகியவரைப் போலக் கொஞ்சிக் குலாவுவர்.  தமது கண் வலையை வீசியும், சொல் வலையை வீசியும் காமுகரைத் தன்வசப் படுத்துவார்கள். விலைமாதரின் மேனி மினுக்கு ஆடவரின் உள்ளத்தை மயக்கும். அவர் தரும் இன்பத்திற்காக உள்ளமானது ஏங்கி வருந்தும். இது இறுதியில் துன்பத்திற்கே ஏதுவாகும். இந்த மயக்கத்தினால் வரும் துன்பமானது தீர ஒரே வழி, இறையருள் பெற்ற அடியார்களின் திருக்கூட்டத்தில் இருப்பது தான். பெண்மயலானது எப்பேர்ப் பட்டவரையும் விட்டு வைத்தது இல்லை.

உலகப் பற்றுக்களை நீத்து, இறைவனது திருவடியைச் சார, பெருந்தவம் புரியும் முனிவரும் விலைமாதரின் அழகைக் கண்டு மனம் திகைப்பு எய்தி, அவர் தரும் இன்பத்தை நாடி வருகின்ற மான் போன்றவர்கள் விலைமாதர்கள். விலைமாதரின் மான் போலும் மருண்ட பார்வையானது துறந்தோர் உள்ளத்தையும் மயக்கும். துறவிகளுடைய உள்ளமும் நினைந்து நினைந்து உருகி வருந்துமாறு, பொதுமகளிர் நகைத்து கண்பார்வையால் வளைத்துப் பிடிப்பர்.

"கிளைத்துப் புறப்பட்ட சூர் மார்பு உடன் கிரி ஊடுருவத்

தொளைத்துப் புறப்பட்ட வேல் கந்தனே! துறந்தோர் உளத்தை

வளைத்துப் பிடித்து, பதைக்கப் பதைக்க வதைக்கும் கண்ணார்க்கு

இளைத்து, தவிக்கின்ற என்னை எந்நாள் வந்து  இரட்சிப்பையே? "         ---  கந்தர் அலங்காரம்.


"வேனில்வேள் மலர்க்கணைக்கும், வெண்ணகைச் செவ்வாய், கரிய

பானலார் கண்ணியர்க்கும் பதைத்து உருகும் பாழ்நெஞ்சே!

ஊன்எலாம் நின்று உருகப் புகுந்து ஆண்டான், இன்றுபோய்

வானுளான் காணாய், நீ மாளா வாழ்கின்றாயே."    ---  திருவாசகம்.


"அரிசன வாடைச் சேர்வை குளித்து,

     பலவித கோலச் சேலை உடுத்திட்டு,

     அலர்குழல் ஓதிக் கோதி முடித்துச் ...... சுருளோடே 

அமர்பொரு காதுக்கு ஓலை திருத்தி,

     திருநுதல் நீவி, பாளித பொட்டு இட்டு,

     அகில் புழுகு ஆரச் சேறு தனத்துஇட்டு, ...... அலர்வேளின்


சுரத விநோதப் பார்வை மை இட்டு,

     தருண கலாரத் தோடை தரித்து,

     தொழில்இடு தோளுக்கு ஏற வரித்திட்டு,.....இளைஞோர்மார், 

துறவினர் சோரச் சோர நகைத்து,

     பொருள்கவர் மாதர்க்கு ஆசை அளித்தல்

     துயர் அறவே, பொன் பாதம் எனக்குத் ...... தருவாயே."   --- திருப்புகழ்.


"மாயா சொரூப முழுச் சமத்திகள்,

     ஓயா உபாய மனப் பசப்பிகள்,

      வாழ்நாளை ஈரும் விழிக் கடைச்சிகள், ......முநிவோரும்  

மால்ஆகி வாட நகைத்து உருக்கிகள்,

     ஏகாசம் மீது தனத் திறப்பிகள்,

     'வாரீர் இரீர்' என் முழுப் புரட்டிகள், ...... வெகுமோகம்


ஆயாத ஆசை எழுப்பும் எத்திகள்,

     ஈயாத போதில் அறப் பிணக்கிகள்,

     ஆவேச நீர் உண் மதப் பொறிச்சிகள், ...... பழிபாவம்

ஆமாறு எணாத திருட்டு மட்டைகள்,

     கோமாளம் ஆன குறிக் கழுத்திகள்,

     ஆசார ஈன விலைத் தனத்தியர், ...... உறவுஆமோ? "  --- திருப்புகழ்.


"பெண்ஆகி வந்து, ஒரு மாயப் பிசாசம் பிடுத்திட்டு, என்னை

கண்ணால் வெருட்டி, முலையால் மயக்கி, கடிதடத்துப்

புண்ஆம் குழியிடைத் தள்ளி, என் போதப் பொருள் பறிக்க,

எண்ணாது உனை மறந்தேன் இறைவா! கச்சி ஏகம்பனே!"  --- பட்டினத்தார்.


"சீறும் வினை அது பெண் உருவாகி, திரண்டு உருண்டு

கூறும் முலையும் இறைச்சியும் ஆகி, கொடுமையினால்,

பீறு மலமும், உதிரமும் சாயும் பெருங்குழி விட்டு

ஏறும் கரை கண்டிலேன், இறைவா! கச்சி ஏகம்பனே!"    --- பட்டினத்தார்.


"பால்என்பது மொழி, பஞ்சு என்பது பதம், பாவையர்கண்

சேல் என்பதாகத் திரிகின்ற நீ, செந்திலோன் திருக்கை

வேல்என்கிலை, கொற்றமயூரம் என்கிலை, வெட்சித்தண்டைக்

கால் என்கிலை, நெஞ்சமே! எங்ஙனே முத்தி காண்பதுவே?"  ---  கந்தர் அலங்காரம்.


"மண்காட்டிப் பொன்காட்டி மாயஇருள் காட்டிச்

செங்காட்டில் ஆடுகின்ற தேசிகனைப் போற்றாமல்,

கண்காட்டும் வேசியர் தம் கண்வலையில் சிக்கி,மிக

அங்காடி நாய்போல் அலைந்தனையே நெஞ்சமே. "  --- பட்டினத்தார்.


"மாதர் யமனாம், அவர்தம் மைவிழியே வன்பாசம்,

பீதிதரும் அல்குல் பெருநகரம், - ஓதில்அதில்

வீழ்ந்தோர்க்கும் ஏற விரகுஇல்லை, போரூரைத்

தாழ்ந்தோர்க்கும் இல்லை தவறு. "       --- திருப்போரூர்ச் சந்நிதிமுறை.                                           


விசுவாமித்திரர் மேனகையைக் கண்டு மயங்கினார். பல காலம் செய்த தவம் அழிந்து குன்றினார். காசிபர் மாயையைக் கண்டு மருண்டார். 

ஆனால், இவை சிவனருள் இன்றி நிற்கும் முனிவருக்கு உரியவை. காமனை எரித்த கண்ணுதற் கடவுளைக் கருத்தில் இருத்திய நற்றவரைப் பொது மகளிர் மயக்க இயலாது.

திருப்பூம்புகலூரில் உழவாரத் தொண்டு செய்து கொண்டிருந்தார் அப்பர் பெருமான். அப்போது அரம்பை முதலிய வான மாதர்கள் வந்து அவர் முன்னே,

"ஆடுவார் பாடுவார் அலர்மாரி மேற்பொழிவார்

கூடுவார் போன்று அணைவார் குழல் அவிழ இடைநுடங்க

ஓடுவார் மாரவே ளுடன்மீள்வர்; ஒளிபெருக

நீடுவார் துகில் அசைய நிற்பாரும் ஆயினார்."    ---  பெரியபுராணம்.

இந்த சாகச வித்தைகளைக் கண்ட அப்பர் பெருமானுடைய மனம் ஒருசிறிதும் சலனம் அடையவில்லை. “உமக்கு இங்கு என்ன வேலை? போமின்” என்று அருளிச் செய்தார். சிவனடியார்கள் காதலால் மயங்க மாட்டார்கள். 

பணில உததி அதனில் அசுரர் பதியை முடுக வரும் வீரா ---

பணிலம் - சங்கு.

முந்திய திருப்புகழ்ப் பாடலில், "கூர் வேலாலே அசுர ஈசர் குலைய, மாக்கடல் அதனில் ஓட்டிய கோவே" என்று அடிகளார் பாடி உள்ளது காண்க.

இரதி பதியை எரிசெய்து அருளும் இறைவர் குமர --- 

இரதிபதி -  இரதிதேவியின் கணவனாகிய மன்மதன்.

மன்மதனை எரித்த வரலாறு

ஒரு சமயம், இந்திரன் முதலிய தேவர்கள் பின்தொடர்ந்து வர, பிரமதேவர் வைகுந்தம் சென்று, திருமாலின் திருப்பாத கமலங்களை வணங்கி நின்றார். திருமால், நான்முகனிடம், "உனது படைப்புத் தொழில் இடையூறு இல்லாமல் நடைபெறுகின்றதா" என வினவினார்.

"எந்தாய்! அறிவில் சிறந்த அருந்தவர்களாகிய சனகாதி முனிவர்கள் என் மனத்தில் தோன்றினார்கள். அவர்களை நான் பார்த்து,  மைந்தர்களே! இந்த படைப்புத் தொழிலைச் செய்துகொண்டு இங்கே இருங்கள் என்றேன். அவர்கள் அது கேட்டு, நாங்கள் பாசமாகிய சிறையில் இருந்து கொண்டு படைப்புத் தொழிலைப் புரிய விரும்பவில்லை. சிவபெருமான் திருவடியைப் பணிந்து இன்புற்று இருக்கவே விரும்புகின்றோம் என்று கூறி, பெருந்தவத்தைச் செய்தனர்.  அவர்களுடைய தவத்திற்கு இரங்கி, ஆலமுண்ட அண்ணல் தோன்றி, 'உங்கள் விருப்பம் என்ன' என்று கேட்க, வேத உண்மையை விளக்கி அருளுமாறு வேண்டினார்கள்.

சிவபெருமான் திருக்கயிலாயத்தின் தென்பால், ஓர் ஆலமரத்தின் கீழ் அமர்ந்து, நால்வர்க்கும் நான்கு வேதங்களின் பொருளை அருளினார். அதனால் சனகாதி நால்வர்க்கும் மனம் ஒருமை அடையாமையால், மீண்டும் அவர்கள் கடுமையான தவத்தினை மேற்கொண்டு, திருக்கயிலையை அடைந்து, மனம் அடங்குமாறு உபதேசிக்க வேண்டினர். அவர்களது பரிபக்குவத்தை உணர்ந்த பரம்பொருள், ஆகமத்தின் உட்கருத்துக்கள் ஆகிய சரியை,  கிரியை,  யோகம் என்னும் முத்திறத்தையும் உபதேசித்து, சொல்லால் விளக்க முடியாத ஞானபாதத்தை விளக்க சின்முத்திரையைக் காட்டி, மோன நிலையை உணர்த்தி,  தானும் மோன நிலையில் இருப்பார் ஆயினார். அதுகண்ட அருந்தவரும் செயலற்று சிவயோகத்தில் அமர்ந்தனர். சிவபெருமான் ஒரு கணம் யோகத்தில் அமர்ந்துள்ள காலம் எமக்கும் ஏனையோருக்கும் பலப்பல யுகங்கள் ஆயின. உயிர்கள் இச்சை இன்றி, ஆண்பெண் சேர்க்கை இன்றி வருந்துகின்றன. அதனால் அடியேனுடைய படைப்புத் தொழில் அழிந்தது. இதுவும் அல்லாமல், சிவபரம்பொருளிடம் பலப்பல வரங்களைப் பெற்றுத் தருக்கிய சூராதி அவுணர்கள் நாளும் ஏவலைத் தந்து பொன்னுலகத்திற்கும் துன்பத்தை விளைவித்தனர். இந்திரன் மகனையும், பிற தேவர்களையும், தேவமாதர்களையும் சிறையிட்டுத் துன்புறுத்துகின்றனர். சூரபதுமன் தேவர்களை ஏவல் கொண்டு ஒப்பாரும் மிக்காரும் இன்றி அண்டங்கள் ஆயிரத்தெட்டையும் ஆளுகின்றான். இவைகளை எல்லாம் அறிந்தும் அறியாதவர் போல், சிவபரம்பொருள், சிவயோகத்தில் அமர்ந்துள்ளார்.  இனிச் செய்ய வேண்டியதொரு உபாயத்தை எமக்கு நீர் தான் அருள வேண்டும்" என்று கூறி நின்றார்.

இதைக் கேட்ட திருமகள் நாயகன், "பிரமனே! எல்லா உயிர்களுக்கும் உயிர்க்கு உயிராய்,  அருவமும், உருவமும்,  உருவருவமும் ஆகிய எல்லா உயிர்கட்கும், எல்லா உலகங்கட்கும் மூலகாரணமாய் நின்ற, மூவர் முதல்வன் ஆகிய முக்கண்பெருமான் மோன நிலையைக் காட்டி இருந்தார் என்றால், உலகில் எவர்தான் இச்சையுற்று மாதர் தோள்களைத் தழுவுவர்?"

"ஆவிகள் அனைத்தும் ஆகி, அருவமாய் உருவமாகி

மூவகை இயற்கைத்து ஆன மூலகாரணம் ஆது ஆகும்

தேவர்கள் தேவன் யோகின் செயல்முறை காட்டும் என்னில்,

ஏவர்கள் காமம் கன்றித் தொன்மை போல் இருக்கும்நீரார்."     ---  கந்தபுராணம்.

"சிவமூர்த்தியின் பால் பலப்பல நலன்களைப் பெற்ற தக்கன், ஊழ்வினை வயப்பட்டு, செய்ந்நன்றி மறந்து, சிவமூர்த்தியை நிந்தித்து ஒரு பெரும் வேள்வி செய்ய, அந்தச் சிவ அபராதி ஆகிய தக்கனிடம் சேர்ந்து இருந்ததால் நமக்கு ஏற்பட்ட தீவினையைத் தீர்த்து, இன்பத்தை நல்க எம்பெருமான் திருவுள்ளம் கொண்டார். சூரபதுமனுக்கு அளவில்லாத ஆற்றலை அளித்ததும், தேவர்கள் அணுகமுடியாத அரிய நிலையில் சனகாதி முனிவர்களுக்கு சிவயோக நிலையைக் காட்டி, உயிர்களுக்கு இன்னலை விளைவித்ததும் ஏன் என்று ஆராய்ந்து பார்த்தால்,  சிவபெருமானுடைய  பேரருள் பெருக்கு விளங்கும். வேறு ஏதும் இல்லை. சிவபெருமான் முனிவர்க்கு உணர்வு காட்டும் மோனத்தில் இருந்து நீங்கி, எம்பெருமாட்டியை மணந்து கொண்டால், படைத்தல் தொழில் இனிது நடைபெறும். உமாமகேசுவரன்பால் ஓரு குமரன் தோன்றினால், சூராதி அவுணர்கள் அழிந்து இன்பம் உண்டாகும். உலகம் எல்லாம் தொன்மை போல் நன்மை பெற்று உய்யும். பிரமதேவரே! இவைகள் எல்லாம் நிகழ வேண்டும் என்றால்,

        உலகத்தில் யாராக இருந்தாலும் காம வயப்படுமாறு மலர்க்கணைகளை ஏவும் மன்மதனை விட்டு, ஈசன் மேல் மலர் அம்புகளைப் பொழியச் செய்தால், சிவபெருமான் யோக நிலையில் இருந்து நீங்கி, அகிலாண்ட நாயகியை மணந்து, சூராதி அவுணர்களை அழிக்க ஒரு புத்திரனைத் தந்து அருள்வார்.  இதுவே செய்யத்தக்கது" என்றார்.

அது கேட்ட பிரமதேவர், "அண்ணலே! நன்று நன்று. இது செய்தால் நாம் எண்ணிய கருமம் கைகூடும். சமயத்திற்குத் தக்க உதவியைக் கூறினீர்" என்றார். திருமால், "பிரமதேவரே! நீர் உடனே மன்மதனை அழைத்து, சிவபெருமானிடம் அனுப்பும்" என்றார். பிரமதேவர் மீண்டு, தமது மனோவதி நகரை அடைந்து, மன்மதனை வருமாறு நினைந்தார். மாயவானகிய திருமாலின் மகனாகிய மன்மதன் உடனே தனது பரிவாரங்களுடன் வந்து பிரமதேவரை வணங்கி, "அடியேனை நினைத்த காரணம் என்ன. அருள் புரிவீர்" என்று வேண்டி  நின்றான். "மன்மதா! சிவயோகத்தில் இருந்து நீங்கி, சிவபெருமான் மகேசுவரியை உணந்து கொள்ளுமாறு, உனது மலர்க்கணைகளை அவர் மீது ஏவுவாய். எமது பொருட்டாக இந்தக் காரியத்தை நீ தாமதியாது செய்தல் வேண்டும்" என்றார்.

"கங்கையை மிலைச்சிய கண்ணுதல், வெற்பின்

மங்கையை மேவ, நின் வாளிகள் தூவி,

அங்கு உறை மோனம் அகற்றினை, இன்னே

எங்கள் பொருட்டினால் ஏகுதி என்றான்.".    --- கந்தபுராணம்.

பிரமதேவர் கூறிய கொடுமையானதும், நஞ்சுக்கு நிகரானதும் ஆகிய தீச்சொல் மன்மதனுடைய செவிகள் வழிச் சென்று அவனுடைய உள்ளத்தைச் சுட்டுவிட்டது. சிவபெருனாது யோக நிலையை அகற்றவேண்டும் என்ற சொல்லே மன்மதனுடைய உள்ளத்தைச் சுட்டுவிட்டது என்றால், பெருமான் அவனுடைய உடம்பை எரிப்பது ஓர் அற்புதமா? மன்மதன் தனது இருசெவிகளையும் தனது இருகைகளால் பொத்தி,  திருவைந்தெழுத்தை மனத்தில் நினைந்து, வாடிய முகத்துடன் பின்வருமாறு கூறுவானானான்.

"அண்ணலே! தீயவர்கள் ஆயினும் தம்மிடம் வந்து அடுத்தால், பெரியோர்கள் உய்யும் வகையாகிய நன்மையைப் புகல்வார்கள். அறிவிலே மிக்க உம்மை வந்து அடுத்த என்னிடம் எக்காரணத்தாலும் உய்ய முடியாத இந்தத் தீய சொற்களைச் சொன்னீர். என்னிடம் உமக்கு அருள் சிறிதும் இல்லையா? என்னுடைய மலர்க்கணைகளுக்கு மயங்காதவர் உலகில் ஒருவரும் இல்லை. பூதேவியையும், பூவில் வைகும் சீதேவியையும், ஏனைய மாதர்களையும் புணர்ந்து போகத்தில் அழுந்துமாறு என்னுடைய தந்தையாகிய நாராயணரையே மலர்க்கணைகளால் மயங்கச் செய்தேன். வெண்தாமரையில் வீற்றிருக்கும் நாமகளைப் புணருமாறும், திலோத்தமையைக் கண்டு உள்ளத்தால் புணருமாறும், உம்மை எனது மலர்க்கணைகளால் வென்றேன். திருமகளை நாராயணர் தமது திருமார்பில் வைக்கவும், கலைமகளைத் தங்கள் நாவில் வைக்கவும் செய்தேன். அகலிகையைக் கண்டு காமுறச் செய்து, இந்திரனுடைய உடல் முழுவதும் கண்களாகச் செய்தது என்னுடைய மலர்க்கணைகளின் வல்லபமே. தனது பாகனாகிய அருணன் பெண்ணுருவத்தை அடைந்த போது, அவளைக் கண்டு மயங்கச் செய்து, சூரியனைப் புணருமாறு செய்ததும் எனது மலர்க்கணைகளே. சந்திரன் குருவின் பத்தினியாகிய தாரையைப் புணர்ந்து, புதன் என்னும் புதல்வனைப் பெறுமாறு செய்தேன். வேதங்களின் நுட்பங்களை உணர்ந்த நல்லறிவுடைய தேவர்கள் யாவரையும் எனது அம்புகளால் மயக்கி, மாதர்களுக்குக் குற்றேவல் புரியுமாறு செய்தேன். மறை முழுது உணர்ந்த அகத்தியர், அத்திரி, கோதமன், அறிவில் சிறந்த காசிபர், வசிட்டர், மரீசி முதலிய முனிவர்களின் தவ வலியை, இமைப்பொழுதில் நீக்கி, என் வசப்பட்டுத் தவிக்கச் செய்தேன். நால்வகை வருணத்தாராகிய மனிதர்களைப் பெண்மயல் கொள்ளுமாறு செய்தேன். என் மலர்க்கணைகளை வென்றவர் மூவுலகில் யாரும் இல்லை. ஆயினும், சிவபெருமானை வெல்லும் ஆற்றல் எனக்கு இல்லை. மாற்றம் மனம் கழிய நின்ற மகேசுவரனை மயக்கவேண்டும் என்று மனத்தால் நினைதாலும் உய்ய முடியாது. பெருமானுடைய திருக்கரத்தில் அக்கினி. சிரிப்பில் அக்கினி. கண்ணில் அக்கினி. நடையில் அக்கினி. அனல் பிழம்பு ஆகிய அமலனிடம் நான் சென்றால் எப்படி ஈடேறுவேன்? அவரை மயக்க யாராலும் முடியாது. பிற தேவர்களைப் போல அவரையும் எண்ணுவது கூடாது. சண்ட மாருதத்தை எதிர்த்து ஒரு பூளைப்பூ வெற்றி பெறுமே ஆகில்,  வெண்ணீறு அணிந்த விடையூர்தியை நான் வெல்லுதல் கூடும். சிவபரம்பொருளை எதிர்த்து அழியாமல், உய்ந்தவர் யாரும் இல்லை".

"திரிபுர சங்கார காலத்தில், திருமால் முதலிய தேவர்கள் யாவரும் குற்றேவல் புரிய, முக்கண்பெருமான் தனது புன்னகையாலேயே முப்புரங்களையும் ஒரு கணப் பொழுதில் எரித்ததை மறந்தீரோ?" "தன்னையே துதித்து வழிபாடு செய்த மார்க்கண்டேயரைப் பற்ற வந்த கூற்றுவனை, பெருமான் தனது இடது திருவடியால் உதைத்து, மார்க்கண்டேயரைக் காத்ததைத் தாங்கள் அறியவில்லையா?" "முன் ஒரு நாள்,  தாங்களும், நாராயண மூர்த்தியும்  'பரம்பொருள் நானே' என்று வாதிட்ட போது, அங்கு வந்த சிவபரம்பொருளைத் தாங்கள் மதியாது இருக்க, உமது ஐந்து தலைகளில் ஒன்றைத் தமது திருவிரல் நகத்தால் சிவபெருமான் கிள்ளி எறிந்தது மறந்து போயிற்றா? சலந்தரன் ஆதி அரக்கர்கள் சங்கரனைப் பகைத்து மாண்டதை அறியாதவர் யார்?"

"உமது மகனாகிய தக்கன் புரிந்த வேள்விச் சாலையில் இருந்த யாவரும், பெருமான்பால் தோன்றிய வீரபத்திரரால் தண்டிக்கப்பட்டு வருந்தியதை நீர் பார்க்கவில்லையா? திருப்பாற்கடலில் தோன்றிய ஆலகால விடத்தை உண்டு, நம்மை எல்லாம் காத்து அருளியதும் மறந்து போயிற்றா? உலகத்தை எல்லாம் அழிக்குமாறு பாய்ந்த கங்காதேவியைத் தனது திருச்சடையில் பெருமான் தாங்கியது சிவபெருமான் தானே! தாருகா வனத்தில், இருடிகள் அபிசார வேள்வியைப் புரிந்து அனுப்பிய யனை, புலி, மான்,முயலகன், பாம்பு முதலியவைகளைக் கண்ணுதல் கடவுள் உரியாகவும், போர்வையாகவும், ஆபரணமாகவும் அணிந்து உள்ளதை நீர் பார்க்கவில்லையா? சர்வ சங்கார காலத்தில், சிவனார் தமது நெற்றிக்கண்ணில் இருந்து விழும் ஒரு சிறு பொறியால் உலகங்கள் எல்லாம் சாம்பலாகி அழிவதை நீர் அறிந்திருந்தும் மறந்தீரோ? இத்தகைய பேராற்றலை உடைய பெருமானை, நாயினும் கடைப்பட்ட அடியேன் எனது கரும்பு வில்லைக் கொண்டு, மலர்க்கணை ஏவி ஒருபோதும் போர் புரிய மாட்டேன்."

இவ்வாறு மன்மதன் மறுத்துக் கூறியதும், நான்முகன் உள்ளம் வருந்தி, சிறிது நேரம் ஆராய்ந்து, பெரு மூச்சு விட்டு, மன்மதனைப் பார்த்து, "மன்மதனே! ஒருவராலும் வெல்லுதற்கு அரிய சிவபெருமானது அருட்குணங்களை வெள்ளறிவு உடைய விண்ணவரிடம் விளம்புவதைப் போல் என்னிடம் விளம்பினை. நீ உரைத்தது எல்லாம் உண்மையே. தனக்கு உவமை இல்லாத திருக்கயிலை நாயகனை வெல்லுதல் யாருக்கும் எளியது அல்ல. ஆயினும் தன்னை அடைந்தோர் தாபத்தைத் தீர்க்கும் தயாநிதியாகிய சிவபெருமானின் நல்லருளால் இது முடிவு பெறும். அவனருளைப் பெறாதாரால் இது முடியாது. உன்னால் மட்டுமே முடியும். எல்லாருடைய செயலும் அவன் செயலே. நீ இப்போது கண்ணுதலை மயக்கச் செல்வதும் அவன் அருட்செயலே ஆகும். ஆதலால், நீ கரும்பு வில்லை வளைத்து, பூங்கணைகளை ஏவுவாயாக. இதுவும் அவன் அருளே. இது உண்மை. இதுவும் அல்லாமல், ஆற்ற ஒணாத் துயரம் கொண்டு யாராவது  ஒருவர் உதவி செய் என்று வேண்டினால் அவருடைய துன்பத்திற்கு இரங்கி, அவருடைய துன்பத்தைக் களையாது, தன் உயிரைப் பெரிது என்று எண்ணி உயிருடன் இருத்தல் தருமம் ஆகுமோ? ஒருவனுக்குத் துன்பம் நேர்ந்தால், அத் துன்பத்தைத் தன்னால் நீக்க முடியுமானால், அவன் சொல்லா முன்னம் தானே வலிய வந்து துன்பத்தை நீக்குதல் உத்தமம். சொன்ன பின் நீக்குதல் மத்திமம். பல நாள் வேண்டிக் கொள்ள மறுத்து, பின்னர் நீக்குதல் அதமம். யாராவது இடர் உற்றால், அவரது இடரை அகற்றுதல் பொருட்டு தன் உயிரை விடுதலும் தருமமே. அவ்வாறு செய்யாமல் இருந்தால், பாவம் மட்டும் அல்ல, அகலாத பழியும் வந்து சேரும்.

"ஏவர் எனினும் இடர் உற்றனர் ஆகில்,

ஓவில் குறை ஒன்று உளரேல், அது முடித்தற்கு

ஆவி விடினும் அறனே, மறுத்து உளரேல்

பாவம் அலது பழியும் ஒழியாதே." --- கந்தபுராணம்.

பிறர்க்கு உதவி செய்யாது கழித்தோன் வாழ்நாள் வீணாகும். திருமாலிடம் வாது புரிந்த ததீசி முனிவரை இந்திரன் குறை இரப்ப, விருத்தாசுரனை வதைக்கும் பொருட்டு, தனது முதுகெலும்பைத் தந்து ததீசி முனிவன் உயிர் இழந்ததை நீ கேட்டது இல்லையோ? பாற்கடலில் எழுந்த வடவாமுக அக்கினியை ஒத்த விடத்தினைக் கண்டு நாம் பயந்தபோது, திருமால் நம்மைக் காத்தல் பொருட்டு அஞ்சேல் எனக் கூறி, அவ்விடத்தின் எதிரில் ஒரு கணப் பொழுது நின்று, தமது வெண்ணிறம் பொருந்திய திருமேனி கருமை நிறம் அடைந்ததை நீ பார்த்தது இல்லையோ? பிறர் பொருட்டுத் தம் உயிரை மிகச் சிறிய பொருளாக எண்ணுவோர் உலகில் பெரும் புகழ் பெற்று வாழ்வார்கள். நாம் சூரபதுமனால் மிகவும் வருந்தினோம். அந்த வருத்தம் தீரும்படி கண்ணுதல் பெருமான் ஒரு புதல்வனைத் தோற்றுவிக்கும் பொருட்டு, நீ பஞ்ச பாணங்களுடன் செல்லவேண்டும். எமது வேண்டுகோளை மறுத்தல் தகுதி அல்ல" என்று பலவாக பிரமதேவர் கூறினார்.

அது கேட்ட மன்மதன் உள்ளம் மிக வருந்தி, "ஆதிநாயகன் ஆன சிவபெருமானிடம் மாறுகொண்டு எதிர்த்துப் போர் புரியேன். இது தவிர வேறு எந்தச் செயலைக் கட்டளை இட்டாலும் இமைப் பொழுதில் செய்வேன்" என்றான். பிரமதேவர் அது கேட்டு வெகுண்டு, "அறிவிலியே! என்னுடைய இன்னுரைகளை நீ மறுத்தாய். நான் சொன்னபடி செய்தால் நீ பிழைத்தாய். இல்லையானால் உனக்குச் சாபம் தருவேன். இரண்டில் எது உனக்கு உடன்பாடு.  ஆராய்ந்து சொல்" என்றார்.

மனமதன் அது கேட்டு உள்ளம் மிக வருந்தி, என்ன செய்யலாம் என்று சிந்தித்து, ஒருவாறு தெளிந்து, பிரமதேவரைப் பார்த்து, "நாமகள் நாயகனே! சிவமூர்த்தியினை எதிர்த்துச் சென்றால், அந்தப் பரம்பொருளின் நெற்றி விழியால் அழிந்தாலும், பின்னர் நான் உய்தி பெறுவேன். உனது சாபத்தால் எனக்கு உய்தி இல்லை. எனவே, நீர் சொல்லியபடியே செய்வேன், சினம் கொள்ள வேண்டாம்" என்றான். பிரமதேவர் மனம் மகிழ்ந்து, "நல்லது. நல்லது. மகாதேவனிடத்தில் உன்னைத் தனியாக அனுப்பு மாட்டோம்.  யாமும் பின்தொடர்ந்து வருவோம்" என்று அறுப்பினார்.

மன்மதன், பிரமதேவரிடம் விடைபெற்றுச் சென்று,  நிகழ்ந்தவற்றைத் தனது பத்தினியாகிய இரதிதேவியிடம் கூற, அவள் போகவேண்டாம் என்று தடுக்க, மன்மதன் அவளைத் தேற்றி, மலர்க்கணைகள் நிறைந்த அம்புக் கூட்டினை தோள் புறத்தே கட்டி, கரும்பு வில்லை எடுத்து, குளிர்ந்த மாந்தளிர் ஆகிய வாளை இடையில் கட்டி, குயில், கடல் முதலியவை முரசு வாத்தியங்களாய் முழங்க, மீனக் கொடியுடன் கூடியதும், கிளிகளைப் பூட்டியதும், சந்திரனைக் குடையாக உடையதும் ஆகிய தென்றல் தேரின்மேல் ஊர்ந்து இரதிதேவியுடன் புறப்பட்டு, எம்பெருமான் எழுந்தருளி இருக்கும் திருக்கயிலை மலையைக் கண்டு, கரம் கூப்பித் தொழுது,  தேரை விட்டு இறங்கி, தன்னுடன் வந்த பரிசனங்களை அவ்விடத்திலேயே விட்டுவிட்டு, இரதிதேவியுடன் வில்லும் அம்பும் கொண்டு, பெரும் புலியை நித்திரை விட்டு எழுப்ப ஒரு சிறுமான் வந்தது போல் திருக்கயிலை மேல் ஏறினான். கரும்பு வில்லை வளைத்து, மலர்கணைகளைப் பூட்டி அங்குள்ள பறவைகள் மீதும்,  விலங்குகள் மீதும் காம இச்சை உண்டாகுமாறு செலுத்தினான். கோபுர முகப்பில் இருந்த நந்தியம்பெருமான் அது கண்டு பெரும் சினம் கொண்டு, இது மன்மதனுடைய செய்கை என்று தெளிந்து, 'உம்' என்று ரீங்காரம் செய்தனர். அவ்வொலியைக் கேட்ட மன்மதனுடைய பாணங்கள் பறவைகள் மீதும், விலங்குகள் மீதும் செல்லாது ஆகாயத்தில் நின்றன. அதனைக் கண்ட மதனன் உள்ளம் வருந்தி, திருநந்தி தேவர் முன் சென்று பலமுறை வாழ்த்தி வணங்கி நின்றான். மன்மதன் வந்த காரணத்தைக் கேட்ட நந்தியம்பெருமான், 'பிரமாதி தேவர்கள் தமது துன்பத்தை நீக்க இவனை இங்கு விடுத்துள்ளார்கள். சிவபெருமான் மோன நிலையில் அமரும்பொழுது, யார் வந்தாலும் உள்ளே விடவேண்டாம். மன்மதன் ஒருவனை மட்டும் விடுவாய் என்று அருளினார். மந்திர சத்தியால் பசுவைத் தடிந்து, வேள்வி புரிந்து, மீளவும் அப்பசுவை எழுப்புதல் போல், மன்மதனை எரித்து, மலைமகளை மணந்து, பின்னர் இவனை எழுப்புமாறு திருவுள்ளம் கொண்டார் போலும்' என்று நினைத்து, "மாரனே! சிவபெருமான்பால் செல்லுதல் வேண்டுமோ?" என்று கேட்க, மன்மதன், "எந்தையே! என் உயிர்க்கு இறுதி வந்தாலும் சிவபெருமானிடம் சேர எண்ணி வந்தேன். அந்த எண்ணத்தை நிறைவேற்றவேண்டும்" என்றான். மேலைக் கோபுர வாயில் வழியாகச் செல்லுமாறு திருநந்தி தேவர் விடை கொடுத்தார்.

மன்மதன் திருநந்தி தேவரை வணங்கி, மேலை வாயிலின் உள் சென்று, சோதிமாமலை போல் வீற்றிருக்கும் சூலபாணி முன் சென்று, ஒப்பற்ற சரபத்தைக் கண்ட சிங்கக்குட்டி போல் வெருவுற்று, உள் நடுங்கி, உடம்பு வியர்த்து, கையில் பற்றிய வில்லுடன் மயங்கி விழுந்தான். உடனே இரதிதேவி தேற்றினாள். மன்மதன் மயக்கம் தெளிந்து எழுந்து, "ஐயோ! என்ன காரியம் செய்யத் துணிந்தேன். நகையால் முப்புரம் எரித்த நம்பனை நோக்கிப் போர் புரியுமாறு பிரமதேவர் என்னை இங்கு அனுப்பினார். இன்றே எனக்கு அழிவு வந்துவிட்டது என்பதில் சிறிதும் ஐயமில்லை. பெருமானைப் பார்த்த உடனேயே இப்படி ஆயினேனே, எதிர்த்துப் போர் புரிந்தால் என்ன ஆவேன்? இன்னும் சிறிது நேரத்தில் அழியப் போகின்றேன். விதியை யாரால் கடக்க முடியும்? இதுவும் பெருமான் பெருங்கருணை போலும்? இறைவன் திருவருள் வழியே ஆகட்டும்.  இனி நான் வந்த காரியத்தை முடிப்பேன்" என்று பலவாறு நினைந்து, கரும்பு வில்லை வளைத்து, சுரும்பு நாண் ஏற்றி, அரும்புக் கணைகளைப் பூட்டி, சிவபெருமான் முன்பு சென்று நின்றான்.

இது நிற்க, மனோவதி நகரில் பிரமதேவரை இந்திரன் இறைஞ்சி, "மன்மதனுடைய போர்த் திறத்தினைக் காண நாமும் போவோம்" என்று வேண்டினான்.  எல்லோரும் திருக்கயிலை சென்று, சிவபெருமானை மனத்தால் துதித்து நின்றனர். மன்மதன் விடுத்த மலர்க்கணைகள் சிவபெருமான்மேல் படுதலும், பெருமான் தனது நெற்றிக் கண்ணைச் சிறிது திறந்து மன்மதனை நோக்க, நெற்றிக் கண்ணில் இருந்து தோன்றிய சிறு தீப்பொறியானது மன்மதனை எரித்தது. அதனால் உண்டாகிய புகை திருக்கயிலை முழுதும் சூழ்ந்தது. 


இலகு கமல முகமும் அழகும் எழுத அரிய பெருமாளே ---

ஒரு நாமம் ஓர் உருவம் இல்லாத பரம்பொருளை, இன்ன வடிவம், இன்ன நிறம் என்று கண்டு சொல்லால் வடிக்கவோ, ஓவியமாகத் தீட்டவோ முடியாது.

"மைப்படிந்த கண்ணாளும் தானும் கச்சி

மயானத்தான் வார்சடையான் எண்ணின் அல்லால்,

ஒப்பு உடையன் அல்லன், ஒருவன் அல்லன்,

     ஓர்ஊரன் அல்லன், ஓர்உவமன் இல்லி,

அப்படியும் அந்நிறமும் அவ் வண்ணமும்

     அவனருளே கண்ணாகக் காணின் அல்லால்,

இப்படியன் இந்நிறத்தன் இவ் வண்ணத்தன்

     இவன் இறைவன் என்றெழுதிக் காட்டொணாதே”--- அப்பர்.

முருகன் என்றாலே "அழகன்" என்று பொருள். "என்றும் இளையாய் அழகியாய்" என்று அவனைப் பாடினர். அரக்கன் ஆகிய சூரபதுமன் கூட முருகனின் திருமேனி அழகைக் கண்டு வியந்ததாகக் கந்தபுராணம் கூறும்.

"ஆயிரம் கோடி காமர் அழகு எல்லாம் திரண்டு ஒன்றாகி 

மேயின எனினும்,செவ்வேள் விமலமாம் சரணம் தன்னில் 

தூயநல் எழிலுக்கு ஆற்றாது, என்றிடின் இனைய தொல்லோன் 

மாஇரு வடிவிற்கு எல்லாம் உவமை யார்  வகுக்க வல்லார்"

     இராமபிரானது வடிவழகைத் தனது மனக் கண்ணால் கண்ட கம்பர், அந்த அழகை வார்த்தைகளால் வடிக்க முயன்று, முடியாமல் 'ஐயோ' என்றார். "ஐயோ, இவன் வடிவு என்பது ஒர் அழியா அழகு உடையான்" என்று பாடினார்.

     திருவிளையாடல் புராணம், திருமணப் படலத்தில் ஒரு செய்தியினைப் பரஞ்சோதி முனிவர் உணர்த்துகிறார். மதுரையம்பதியில் சொக்கநாதப் பெருமான் திருவுலா வருகிறான். அவன் திருமேனி அழகைக் கண்டு மயங்கிய ஒருத்தி, அவன் தன்னைப் பார்க்காமலேயே போகின்றானே என்று ஏங்கினாள். அவனது திருமேனியை எப்போதும் கண்டு மகிழவேண்டும் என்று அவள் எண்ணியபோது, ஓவியக் கலையில் வித்தகன் ஒருவனைக் கண்டாள். 'இவனை ஓவியமாக வடித்துத் தந்தால், உனக்கு வேண்டிய பொருளைத் தருகின்றேன்' என்றாள். ஓவியனோ, 'அவனை யாரால் எழுத முடியும்' என்றான். அதைக் கேட்டதுமே அவள் உயிர் சோர்ந்து போய்விட்டது. 

"கவனமால் விடையான் தன்னைக்

     கடைக்கணித் திலன் என்று அங்கு ஓர்

சுவணவான் கொடி ஓர் ஓவத்

தொழில்வல்லான் குறுக நோக்கி,

இவனை நீ எழுதித் தந்தால்

     வேண்டுவ ஈவன் என்றாள்;

அவனை யார் எழுத வல்லார்

     என்றனன்; ஆவி சோர்ந்தாள்".   --- திருவிளையாடல் புராணம்.

இதன் பொருள் ---

     சிறந்த பொற்கொடி போன்ற ஒரு நங்கை, விரைந்து செல்லுகின்ற திருமாலாகிய இடபத்தை உடைய இறைவன், தன்னைக் கடைக்கணிக்காது செல்கின்றான் என்று கருதினாள். அவ்விடம் ஓவியத் துறையில் கை தேர்ந்த ஒருவன் வர, அவனைப் பார்த்து,  'இதோ இந்த அழகனை நீ எழுதித் தந்தாயானால்,  நீ வேண்டுவனவற்றைக் கொடுப்பேன்' என்றாள். 'அவனை யாரால் எழுத முடியும்? எழுத வல்லவர் ஒருவரும் இல்லை' என்று அவன் கூறினான். அது கேட்டு, அவள் உயிர் சோர்ந்தாள்.


     பெரியபுராணத்தில் மற்றுமொரு காட்சி. எலும்பைப் பெண்ணாக்கிய அற்புதத்தைத் திருஞானசம்பந்தப் பெருமான் திருமயிலையில் திருவருளால் நிகழ்த்தினார். திருஞானசம்பந்தப் பெருமானாரால் திருவுருக் கொண்டு எழுந்த பூம்பாவையின் அழகு அதி அற்புதமானது. பூம்பாவையைத் திருஞானசம்பந்தர் எவ்வாறு கண்டார் என்பதைக் கூறவந்த சேக்கிழார் பெருமான் ஒரு புராண நிகழ்வைக் கூறுகிறார்.

     திருச்செங்கோட்டு வேலனுடைய அழகுத் திருக்கோலத்தைக் கண்டவுடன் அருணகிரிநாதருக்கு எல்லை இல்லாத ஆனந்தம் உண்டாயிற்று. அந்த கொள்ளை அழகினைக் காண, தமக்கு இரண்டு கண்கள் தானே இருக்கின்றன. பிரமன் தமக்கு நாலாயிரம் கண்களைப் படைத்திருந்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றியது.

     ஒரு பெண்ணுக்கு அவளது காதலன் கடிதம் எழுதுகிறான். அந்தக் கடிதத்தை அவள் காணும்போது அடைகிற உணர்ச்சி வேறு. அதையே வெறும் காகிதமாகக் கடைக்காரன் வாங்கிச் செல்லும்போது அவன் அதைக் காணுகிற நிலை வேறு. இரண்டு பேருக்கும் காகிதமும், எழுத்தும் ஒன்றுதான். ஆனாலும், எழுதினவனுடைய நினைவும், அவன் மீது அவள் கொண்ட அன்பும் அந்தப் பெண்ணுக்குக் காதல் உணர்ச்சியை மிகுதி ஆக்குகின்றன.  


"எழுதரிய அறுமுகமும், மணிநுதலும், வயிரம்இடை

     இட்டுச் சமைந்தசெஞ் சுட்டிக் கலன்களும், ...... துங்கநீள்பன்

னிருகருணை விழிமலரும், இலகுபதி னிருகுழையும்,

     ரத்னக் குதம்பையும்ன, பத்மக் கரங்களும், ...... செம்பொனூலும்.


மொழிபுகழும் உடைமணியும், அரைவடமும், அடியிணையும்,

     முத்தச் சதங்கையும், சித்ரச் சிகண்டியும், ...... செங்கைவேலும்,

முழுதும் அழகிய குமர! கிரிகுமரி உடன்உருகு

     முக்கட் சிவன்பெரும் சற்புத்ர! உம்பர்தம் ...... தம்பிரானே."


கருத்துரை

முருகா! காம உணர்வை நீக்கி, அடியேனுக்கு நல்லுணர்வைத் தந்து அருள்வாய்.


















உடம்பின் பயனை அடைந்தார் உயிர் விட அஞ்சார்

 

உடம்பின் பயன் அடைந்தார் உயிர் விட அஞ்சார்

-----

திருக்குறளில், துறவு என்னும் அதிகாரத்துள் வரும் ஐந்தாம் திருக்குறளில், "பிறவியை நீக்கும் தவமுயற்சியை மேற்கொண்டார்க்கு, அதற்கு உதவியாக உள்ள உடலும் மிகை ஆகும் என்று ஆன பின்னர், அதற்கும் மேலே சம்பந்தம் இல்லாத பொருள்கள் தொடர்புப் படுதல் என்ன ஆகும்" என்கின்றார் நாயனார்.

பிறப்பினை ஒழித்தலே தகுதி எனத் துறவு வாழ்க்கையை மேற்கொண்ட ஒருவனுக்கு, அவ்விதம் ஒழித்தற்குக் கருவியாகிய உடம்பும் எதற்கு என்று வெறுக்கின்ற காலம் வந்தபோது, அதற்கு உரியன ஆகிய பொருள்கள் மீது எதற்குப் பற்று வைத்தல் வேண்டும் என்பதால், துறவு கொண்டவன் இருவிதப் பற்றும் அறுத்தல் வேண்டும் என்று அறியப்படும். அதாவது, 'அரு உடம்பு' ஆகிய மனமும், 'உரு உடம்பு' ஆகிய உடலும் ஆகிய இரண்டின் இடத்தும், நிலையாமையை உணர்ந்தும், அவற்றின் இடத்தே பற்றைச் செலுத்தி, அவைகளால் வரும் துன்பத்தையும், இடையூறுகளையும் அடையாது, வீடு பேற்றினை விரைந்து அடைய ஆசை கொள்வார்க்கு, இந்த உடம்புகள் பயனற்றவை ஆகும்.

"மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல், பிறப்பு அறுக்கல்

உற்றார்க்கு உடம்பும் மிகை." 

என்பது நாயனார் அருளிய திருக்குறள்.

'உடம்பு' என்ற பொதுமையால் உருவுடம்பும் அருவுடம்பும் கொள்ளப்படும். அவற்றுள் அருவுடம்பாவது பத்து வகை இந்திரிய உணர்வோடும் ஐவகை வாயுக்களோடும் காமவினை விளைவுகளோடும் கூடிய மனம், இது நுண்ணுடம்பு எனவும் சொல்லப்படும். இதன்கண் பற்று நிலையாமை உணர்ந்த துணையான் விடாமையின், விடுதற்கு உபாயம் முன்னர்க் கூறுப. இவ்வுடம்புகளால் துன்பம் இடையறாது வருதலை உணர்ந்து இவற்றான் ஆய கட்டினை இறைப்பொழுதும் பொறாது வீட்டின்கண்ணே விரைதலின், 'உடம்பும் மிகை' என்றார். இன்பத் துன்பங்களான் உயிரோடு ஒற்றுமை எய்துதலின், இவ்வுடம்புகளும் 'யான்' எனப்படும். இதனான், அகப்பற்று விடுதல் கூறப்பட்டது" என்பது இத் திருக்குறளுக்குப் பரிமேலழகர் கூறிய விளக்கம்.

பரிமேலழகரால் குறிப்படப்படும் பத்து வகை இந்திரிய உணர்வு:-- மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐந்து ஞானேந்திரியங்கள். வாக்கு, பாதம், பாணி, பாயுரு, உபத்தம் என்னும் ஐவகைக் கன்மேந்திரியங்கள்.

ஐவகை வாயுக்களாவன:-- பிராணன, அபானன், வியானன், உதானன், சமானன் என்பவை. வாயுக்கள் பத்து என்று சைவசித்தாந்தம் கூறும்.

காமவினை விளைவு எனப்படுவது:-- பொருள்களை விரும்புவதாகிய காமமும், நல்வினை தீவினை வாயிலாக வரும் சுகதுக்கங்களும்.

கட்டு எனப்படுவது, முத்திநெறியில் செல்லவொட்டாது தடுத்து, மனைவி மக்கள் முதலியவரிடத்துப் பற்று உண்டாகச் செய்து, ஆன்மாவை முத்தி அடையாமல் கட்டுவது.

இந்த உடம்பை, "புன்புலால் யாக்கை"  என்றும், "சினம் என்னும் கள் வைத்த தோல்பை"  என்றும், "கள்ளப் புலக் குரம்பை" என்றும், அருளாளர்கள் கூறுவார்கள். உடம்பின் அசுத்தம் இதனால் தெளிவாக விளங்கும். ஆதலினால், அறிஞர்கள் விரைவில் ஞானத்தைப் பெற்று இவ் ஊனுடம்பை உதறித் தள்ளுவர்.  இவ் ஊனுடம்புடன் என்றும் வாழ்வதற்கு ஒருப்படார். உடம்பினால் ஆன பயனைப் பெற்ற பின், உடம்பு வேண்டப்படாத பொருள் ஆகிவிடும்.  வாழை இலையின் பயன் உணவு உண்பது. உணவு உண்ட பின் அது எச்சில் இலை.  அதை விரும்புவார் யாரும் இல்லை.  எச்சில் இலையை எடுத்துப் புறங்கடையில் எறிய வேண்டியது தான். அதுபோல், ஆன்ம இலாபம் ஆகிய இறையின்பத்தை அனுபவித்தார்க்கு, இவ் உடம்பு மிகையே. நாலுபேர் சுமக்கும் மூட்டையாகிய இவ் உடம்பை ஒருவன் சுமந்து அலைவது என்றால் அது துன்பம் தான். சுமையை இறக்குவதற்குத்தான் யாரும் விரும்புவர். இந்த உடம்பை "நரம்பால் பொதிந்த பொதி" என்கிறார் அருணகிரிநாதர். பொதியினை நீண்ட நேரம் சுமந்து இருக்க யாருமே விரும்பமாட்டார்கள். இறக்கி வைத்து இளைப்பாறும் நேரத்தை எண்ணி இருப்பார்கள்.

ஒரு வகுப்பில் பயிலும்போது, அதற்கு உரிய புத்தகம் தொலைந்து விட்டால், மாணவனுக்கு வருத்தம் தோன்றும். வேறு புத்தகத்தை வாங்கிக் கொள்வான். அதுபோல, பிறந்த இந்தப் பிறவியில் உடம்பின் மீது பற்றுக் கொண்டவனுக்கு அதை விட மனம் வராது. அவன் மீண்டும் மீண்டும் பிறந்து வேதனைப்படுவான். புத்தகத்தைப் படித்துத் தேறிவிட்ட மாணவன் அடுத்த வகுப்புக்குச் செல்வான். அந்த நிலையில் அவன் ஏற்கெனவே படித்த புத்தகத்தைச் சிறுதும் விரும்பமாட்டான். காரணம், அந்தப் புத்தகத்தின் பயனை அவன் பெற்றுவிட்டான். அதுபோல, உடம்பினால் ஆன பயனைப் பெற்று விட்டவர்கள், உடம்பை ஒரு சுமையாகவே கருதுவார்கள். உடம்பை விடுவது பற்றிக் கவலை கொள்ள மாட்டார்கள். இந்த உடம்போடு இருப்பது அவர்களுக்கு அவருப்பையே தரும்.

"மானார் விழியைக் கடந்து ஏறி வந்தனன், வாழ்குருவும்

கோனாகி என்னைக் குடிஏற்றிக் கொண்டனன், குற்றமில்லை,

போனாலும் பேறு, இருந்தாலும் நற்பேறு, இது பொய் அன்றுகாண்,

ஆனாலும் இந்த உடம்போடு இருப்பது அருவருப்பே!"

என்கிறார்   பட்டினத்து அடிகளார்.

இதன் பொருள் ---

மான் போலும் விழிகளை உடைய மாதரின் கண்வலையில் இருந்து தப்பி, சற்குரு நாதரின் அருள் பார்வையைப் பெற்று விட்டேன். அதனால் முத்தி பெறுவது நிச்சயம். குற்றம் இல்லை. இந்த உடம்பு போனாலும் இனி நான் அடைவது திருவடிப் பேற்றைத்தான். அழியாது இருந்தாலும் அடைவது திருவடிப் பேற்றினால் உண்டாகும் இன்பத்தையே. இருந்தாலும், இந்த உடம்போடு இருப்பது வெறுப்புக்கு இடமானதே ஆகும்.

இந்த உடம்பு நாமாகப் பெற்றது இல்லை. நாமாகப் பெறுகின்ற சுதந்திரம் இருக்குமானால், குருடனாகவோ, முடவனாகவோ பிறப்பதற்கு யாரும் விரும்பமாட்டார்கள். இந்த உடம்பு நாம் செய்துள்ள வினைகளின் பயனாக, வினைகளின் பயனை அனுபவித்துக் கழிப்பதற்கு ஏதுவாக இறைவனால் படைத்து அளிக்கப் பெற்றது. நாமாகக் கொண்டு வந்தது இல்லை. எனவே, இந்த உடம்பு படைத்து அளிக்கப் பெற்றதன் பயனை அடைந்து விட்டால், பின்னர் உடம்பு தேவைப் படாது. 

பள்ளிப் படிப்பை நல்லவிதமாக முடித்துக் கொண்டவன், பள்ளியை விட்டுக் கல்லூரியைத் தேடுவான். பள்ளியிலேயே இருக்க விரும்பினாலும் அது ஈடேறாது. படித்துப் பயன் பெறுவதற்கே பள்ளி. பள்ளியானது மாணவனுக்குச் சொந்தமானது அல்ல. அதுபோலவே, இந்த உடம்பும் நமக்குச் சொந்தமானது அல்ல. வாழ்நாள் முடிவில், படைத்தவனே எடுத்துக் கொள்வான். நாம் விரும்பினாலும் அது திரும்பக் கிடைக்காது.

இந்த உடம்பினால் ஆன உண்மைப் பயனை அடைந்தவர்கள், உடம்பை ஒரு சுமையாகவே கருதுவார்கள். சுமையை இறக்கவே யாரும் விரும்புவார்கள். இதனை, ஒரு பாடலால் அறுவுறுத்துகின்றார் குமரகுருபர அடிகளார்.

"புழு நெளிந்து புண் அழுகி யோசனை நாறும் 

கழிமுடை நாற்றத்த வேனும் - விழலர் 

விளிவு உன்னி வெய்து உயிர்ப்பர்; மெய்ப்பயன் கொண்டார் 

சுளியார் சுமைபோடு தற்கு."               --- நீதிநெறி விளக்கம்

இதன் பொருள் ---

புழு நெளிந்து - புழுக்கள் நெளியப் பெற்று, புண் அழுகி - புண்கள் அழுகி, யோசனை நாறும் - நெடுந் தூரத்துக்கு நாறுகின்ற, கழி முடை நாற்றத்த ஏனும் - மிகுந்த கெட்ட நாற்றத்தை உடையதாய் இருந்தாலும், விழலர் - (உடம்பினால் ஆன பயனை உணராத) வீணர், விளிவு உன்னி - இறந்து விடுவோமே என நினைத்து நினைத்து, வெய்து உயிர்ப்பர் - பெருமூச்சு விட்டுக் கவலை உறுவர்.  மெய்ப் பயன் கொண்டார் - உடம்பினால் பெறவேண்டிய பயன் இன்னது என்று அறிந்து, அதனைப் பெற்றுக்  கொண்ட அறிஞர், சுமை போடுதற்குச் சுளியார் - இந்த உடம்பு ஆகிய சுமையைத் தூக்கிப் போடுவதற்கு வெறுப்புக் கொள்ள மாட்டார். உயிரை விடுவதற்கு மகிழ்வர்.

உடம்பின் பயனைப் பெற்ற பிறகு, மாதம் முழுதும் வேலை செய்த வேலைக்காான் தனக்கு எஜமானன் சம்பளம் கொடுக்கும் நாளை எதிர்பார்ப்பது போலத் தன் தேகநாச காலத்தை எதிர்பார்த்து இருக்கவேண்டும். சுமை சுமைக்கின்ற ஒருவன் சுமைப்பாரம் தாங்காது அதைக் கொண்டு இறக்குமிடம் வரும் வரையில் வருந்தி நடந்து, இடம் கண்டவுடன் மகிழ்ச்சியால் தன் தலைமீது இருக்குஞ் சுமையை இறக்கி மனம் மகிழ்தல்போல், உடம்பு எடுத்த பயனை அடைந்த அறிஞர், அவ்வுடம்பாகிய சுமையைச் சுமந்து திரிய வருத்தம் அடைந்து, அச் சுமையைப் போடும் காலம் கண்டால் மகிழ்ச்சி கொள்வார். ஆகையால் சுமை போடுதற்குச் சுளியார்" என்றார் அடிகளார்.

"அரும்பெறல் யாக்கையைப் பெற்ற பயத்தால்,

பெரும்பயனும் ஆற்றவே கொள்க - கரும்பு ஊர்ந்த 

சாறுபோல் சாலவும் பின் உதவி, மற்று அதன் 

கோதுபோல் போகும் உடம்பு."        --- நாலடியார்.

பெறுதற்கு அரிய இந்த மானுட உடம்பைப் பெற்றதன் பயன் பற்றிக் கூறுகிறது இந்தப் பாடல். "அறன் வலியுறுத்தல்" என்னும் அதிகாரத்தில் வந்ததால்,  உடம்பின் பயன் அறவாழ்வு வாழ்தலே என்கிறது. 

இதன் பொருள் ---

பெறுவதற்கு அருமையானது இந்த மானுடப் பிறவி. இந்த அரிய பிறவியைப் பெற்றதன் பயனை அடைந்து விடுதல் வேண்டும். இல்லையானால், இந்த உடல் வலுவிழந்து, ஒருநாள் சாறு பிழிந்த கரும்புச் சக்கைபோல் ஆகிவிடும்.

கரும்பினைப் பெற்றவன் அது உலர்ந்து போவதற்குள் சாறு பிழிந்து, அதனால் ஆன பயனைப் பெற்றுக் கொள்ளவேண்டும். கரும்பு உலர்ந்து வாடிப் போனால் பயன் இல்லை. கரும்பினை ஆட்டிச் சாறு பிழிந்து, அதனை கட்டிவெல்லம் ஆக்கிக் கொண்டவர்கள், சக்கை தீப்பிடித்து எரிந்தால் வருந்தமாட்டார்கள் என்பதைக் காட்டி, ஒரு பாடல்...

"கரும்பு ஆட்டிக் கட்டி சிறுகாலைக் கொண்டார்,

துரும்பு எழுந்து வேம்கால் துயர் ஆண்டு உழவார்;

வருந்தி உடம்பின் பயன்கொண்டார் கூற்றம்

வருங்கால் பரிவது இலர்." --- நாலடியார்.

இதன் பொருள் ---

கரும்பை ஆலையில் இட்டு ஆட்டிச் சாறு பிழிந்து காய்ச்சி வெல்லக் கட்டி ஆக்கிக் கொண்டவர்கள், சாறு பிழிந்த கரும்புச் சக்கையை அடுப்பு எரிக்க ஆலைத் தீயில் போடும்போது, இது வெல்லத்தைத் தந்த கரும்பின் சக்கை ஆயிற்றே என்று எண்ணிக் கவலை கொள்ளமாட்டார்கள். அதுபோலத்தான், வாழ்நாளில் உடம்பின் பயனை அடைந்து விட்டவர்கள், ஒருநாள் வரப்போகின்ற சாவை எண்ணி வருந்தமாட்டார்கள்.

உடம்பின் பயன் என்ன என்றால், உயிர்க்கு உறுதியைத் தருகின்ற இறைவனை நாடி இருப்பதே ஆகும். "உயிர்க்கு உறுதி எல்லாம் உடம்பின் பயனே, அயிர்ப்பு இன்றி ஆதியை நாடு" என்கிறார் ஔவைப் பிராட்டியார்.

"படிறு ஆயின சொல்லிப் பாழ்உடல்

    ஓம்பி, பலகடைச் சென்று,

இடறாது ஒழிதும், எழு நெஞ்சமே!

    எரி ஆடி எம்மான்

கடல் தாயின நஞ்சம் உண்ட

    பிரான்கழல் சேர்தல்கண்டாய்,

உடல்தான் உளபயன் ஆவசொன்

    னேன் இவ் வுலகின் உள்ளே."

என்பது சேரமான் பெருமாள் நாயனார் அருளிய பொன்வண்ணத்து அந்தாதியில் வரும் ஒரு பாடல்,

இதன் பொருள் ---

செல்வம் மிகுந்து, உலோப குணமும் மிகுந்து உள்ளவர்களைத் தேடிச் சென்று, பாரியே, வள்ளலே என்று அவர்களைப் புகழ்ந்து, பல பொய்களைக் கூறி, அவர் தரும் அற்பப் பொருளை இரந்து சென்று, பிறிது ஒன்றுக்கும் பயன்படாத உடலைப் பாதுகாத்தலை மேற்கொண்டு, பல இல்லங்களின் வாயிற்படிகளில் ஏறி இடறுதல் நேராதபடி, அதில் இருந்து விடுபடுவோம். நெஞ்சமே! புறப்படு. (எதற்கு என்றால்) அனலைத் திருக்கையிலே ஏந்தி ஆடுபவனும், கடலில் தோன்றிய விடத்தை உண்டு அருளியவனும் ஆன சிவபரம்பொருளினது திருவடிகளைச் சார்வதே, இந்த உலகத்தில் கிடைத்ததாகிய இந்த உடலால் பெறப்படும் பயன் ஆகும். இதனை நான் உனக்குச் சொல்லிவிட்டேன்.

"எல்லாப் படியாலும் எண்ணினால் இவ்வுடம்பு

பொல்லாப் புழுமலி நோய்ப் புன்குரம்பை-நல்லார்

அறிந்து இருப்பார், ஆதலினால் ஆம்கமல நீர்போல்

பிறிந்து இருப்பார் பேசார் பிறர்க்கு."

என்கின்றார் "நல்வழி" என்னும் நூலில் ஔவைப் பிராட்டியார்.

இதன் பொருள் ---

எல்லா வகையாலும் சிந்தித்துப் பார்த்தால், இந்த உடம்பானது கொடிய புழுக்களும் நிறைந்த நோய்களும் நிலைத்து இருக்கும் சிறு குடிசை போல இருக்கின்றது. நல்ல அறிவினை உடையவர்கள் இதன் இயல்பினை அறிந்து இருப்பர். ஆகையால், தாமரை இலையில் தண்ணீர் போல இவ்வுடம்புடன் கூடி இருந்தாலும் பற்று இல்லாமலே இருப்பர். ஆனால், அதனைப் பற்றிப் பிறரிடம் பேசமாட்டார்.

விழல் என்னும் சொல்லுக்கு, விழுதல், பயன் இன்மை என்று பொருள். "விழல்" என்பது பசு முதலிய விலங்குகளுக்கும் பயன்படாத ஒருவகைப் புல். அது போன்று ஒன்றுக்கும் பயன்படாதவரை "விழலர்" என்று கூறினார்.

பிறந்தவர் யாரும் இறக்கத்தான் வேண்டும். நிலையாக இவ்வுலகில் இருந்துவிட முடியாது. மரணத்திற்கு அஞ்சாதவர்கள் யாரும் இல்லை. ஆனால், உடம்பைக் கொண்டு பெறவேண்டிய நற்பயனைப் பெற்று விட்டவர்கள் உடம்பினை விடுவதற்கு அச்சம் கொள்ளமாட்டார்கள். அவர்களுக்கு இந்த உடம்பு ஒரு சுமையாகத் தோன்றும். "பிறப்பு அறுக்கல் உற்றார்க்கு உடம்பு மிகை" என்று திருவள்ளுவ நாயனாரும், "மெய்ப்பயன் கொண்டார் சுளியார் சுமை போடுதற்கு" என்று குமரகுருபர அடிகளாரும் கூறியதை மனதில் வைத்து, பயனுற வாழ்தல் வேண்டும்.


மூலம் 16

“கதம் நன்று, சான்றாண்மை தீது, கழிய மதம் நன்று, மாண்பில்லார் முன்னர், - விதம்நன்றால் கோய்வாயில் கீழ்உயிர்க்கு, ஈது உற்றுக் குரைத்தெழுந்த நாய்...