85. சிறுநெருப்பு என்று இகழாதே


“அருப்பயிலும் தண்டலைவாழ் சிவனடியார்

     எக்குலத்தார் ஆனால் என்ன?

உருப்பயிலும் திருநீறும் சாதனமும்

     கண்டவுடன் உகந்து போற்றி,

இருப்பதுவே முறைமையல்லால் ஏழையென்றும்

     சிறியரென்றும் இகழ்ந்து கூறின்

நெருப்பினையே சிறிதென்று முன்றானை

     தனின்முடிய நினைந்த வாறே.”


இதன் பொருள் ---

    தண்டலைவாழ் அருப் பயிலும் சிவன் அடியார் – திருத்தண்டலை என்னும் திருத்தலத்தில் ‘நீள்நெறி’ என்னும் திருக்கோயிலில் அருவுருவமாக எழுந்தருளி உள்ள, அருவப் பொருளாகிய சிவபரம்பொருளின் தொண்டர்கள், எக்குலத்தார் ஆனால் என்ன - எந்தக் குலத்தவரானாலும் குறை இல்லை, உருப் பயிலும் திருநீறும் சாதனமும் கண்டவுடன் - வடிவிலே விளங்கும் திருநீற்றினையும் மற்றைச் சிவசின்னங்களையும் பார்த்தவுடன், உகந்து போற்றி இருப்பதுவே முறைமை அல்லால் - சிறப்பித்து வாழ்த்தி இருப்பதே தக்கது ஆகும். அல்லாமல், ஏழை என்றும் சிறியர் என்றும் இகழ்ந்து கூறின் – வறியவர் எனவும் உருவத்திலும் அறிவிலும் சிறியவர் எனவும் பழித்துப் பேசுதல் என்பது, நெருப்பினையே சிறிது என்று முன் தானை தனில் முடிய நினைந்த ஆறு - தீயின் வடிவம் சிறியது என எண்ணி முன்தானையில் முடிய நினைத்தற்குச் சமமாகும்.

      அரு : உருவமில்லாத நிலை. சாதனம் : சிவ வழிபாட்டுக்குரிய சின்னங்கள். உகப்பு - உயர்வு (சிறப்பு). ‘நெருப்பைச் சிறிதென்று நினைக்கலாமா!' என்பது பழமொழி.  திருமூலதேவ நாயனார் அருளிய திருமந்திரத்துள் ‘மகேசுர நிந்தை கூடாமை” பற்றிக் கூறப்பட்டு உள்ளதை இங்கு வைத்து எண்ணுக. “அடியார் மனம் சலிக்க எவராகிலும் பழிக்க அபராதம் வந்து கெட்ட மதிமூடி” எனவரும் அருணகிரிநாதர் திருப்புகழ்ப் பாடலின் கருத்தையும் இங்கு வைத்து எண்ணுக.


இறைவன் எங்கே இருப்பான் என்றால், எல்லா உயிர்களிலும், எல்லாப் பொருள்களிலும் அவன் நிறைந்து இருப்பான் என்பர் பெரியோர். 


"ஈறாய்,முதல் ஒன்றாய்,இரு பெண்ஆண்,குணம் மூன்றாய்,

மாறாமறை நான்காய்,வரு பூதம்அவை ஐந்தாய்,

ஆறுஆர்சுவை, ஏழ்ஓசையொடு, எட்டுத்திசை தானாய்,

வேறாய்உடன் ஆனான்இடம் வீழிம்மிழ லையே."

என்றார் திருஞானசம்பந்தப் பெருமான்.

ஊழிக் காலத்தில் அனைத்தையும் ஒடுக்குவோனாய் (ஈறாய்), ஒடுங்கிய உடலைத் தான் ஒருவனே முதற்பொருளாய் நின்று தோற்றுவிப்பவனாய் (முதல் ஒன்றாய்), சக்தி சிவம் என இருவகைப்பட்டவனாய் (இரு பெண் ஆண்), சத்துவம், இராஜசம், தாமதம் என்னும் முக்குண வடிவினனாய் (குணம் மூன்றாய்), எக்காலத்தும் மாறுபடாத நான்மறை (நான்கு வேதங்கள்) வடிவினனாய், வான், காற்று, தீ, நீர், மண் என்னும் ஐம்பெரும்பூதங்களாய், நாக்கு என்னும் பொறியைக் கவருகின்ற உப்பு, துவர்ப்பு, கார்ப்பு, கைப்பு, புளிப்பு, தித்திப்பு என்னும் ஆறுசுவைகளாய், சட்ஜம், ரிஷபம், காந்தாரம், மத்யமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம், என்று வடமொழியிலும், குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்று தமிழ் மொழியிலும் வழங்கப் பெறுகின்ற ஓசைகள் ஏழாகவும், நேர்திசைகள் நான்கு,  கோணத் திசைகள் நான்கு என எட்டுத்திசைகள் ஆகியவற்றில் நிறைந்தவனாய், கண்ணும் ஒளியும், கதிரும் சூரியனும், ஒளியும் சூடும் போல உயிர்களோடு கலந்திருக்கின்ற மூவகை நிலைகளில் உயிரோடு ஒன்றாகியும், வேறாகியும், உடனாகியும் விளங்கும் இறைவனது இடம் திருவீழிமிழலை. இது மேற்குறித்த பாடலின் பொழிப்புரை.

எல்லாம் வல்ல தனமையன் ஆன இறைவன் எங்கே விளக்கம் பெறுவான் என்றால், "நினைப்பவர் மனம் கோயிலாக் கொண்டவன்" தில்லைக் கூத்தன் என்றார் அப்பர் பெருமான். "மறவாதே தன் திறமே வாழ்த்தும் தொண்டர் மனத்தகத்தே அனவரதம் மன்னி நின்ற திறலான்" ஆகிய இறைவன் திருமுதுகுன்றம் என்று இன்றைக்கு வழங்கப் பெறும் விருத்தாசலத்தில் திருக்கோயில் கொண்டு உள்ளான் என்றும் அப்பர் பெருமான் பாடிக் காட்டினார். “தில்லை மூதூர் ஆடிய திருவடி பல் உயிர் எல்லாம் பயின்றனன் ஆகி” என்றார் மணிவாசகப் பெருமான். தில்லையிலே திருநடனம் புரிகின்ற பெருமான் எல்லா உயிர்களிலும் விளங்குகின்றான். "இறைவரோ தொண்டருள் ஒடுக்கம், தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே" என்றார் ஔவைப் பிராட்டியார். இக் கருத்தை வலியுறுத்தி, இறைவன் எங்கே விளக்கம் பெறுவான் என்பதற்கு விடை பகருகின்றது "நீதி வெண்பா" என்னும் நூலில் வரும் பாடல்....


"இந்து இரவி நீள்கிரணம் எங்கும் நிறைந்தாலும்

இந்து இரவி காந்தத்து இலங்குமே --- இந்து இரவி

நேத்திரத்தோன் எங்கும் நிறைந்தாலும், நித்தன்அருள்

நேத்திரத்தோர் பாலே நிறைவு."

இதன் பொருள் ---

திங்கள், ஞாயிறு என்பவைகளின் நீண்ட ஒளிகள் உலகம் முழுவதும் நிறைந்து இருந்தாலும், அந்தத் திங்கள், ஞாயிறு ஒளிகள் காந்தக் கல்லினிடத்து மிகுதியாகத் தோன்றும்.  அதுபோல, திங்கள் ஞாயிறு என்னும் இரண்டையுமே தன் இரண்டு கண்களாக உடைய இறைவன் உலகம் முழுவதும் நிறைந்து இருந்தாலும், அக் கடவுளின் விளக்கம், அருள் பார்வை உடைய அடியவர்களித்தே தான் மிகுதியாக உண்டு.

    (இந்து - சந்திரன். இரவி - சூரியன். கிரணம் - ஒளி. நேத்திரம் - கண். நித்தன் - என்றும் நிலைத்து இருக்கும் இறைவன்.  நேத்திரத்தோர் - அடியவர்.)

அடியவர்கள் என்றும் எளிய தோற்றத்துடனேயே இருப்பார்கள். அவர்களிடத்தில் பகட்டு இருக்காது. இறையருளைப் பெறுவதற்கான சாதனங்கள் இருக்கும். அவர்களது தோற்றத்தைக் கண்டதுமே, இறைவனைக் கண்டதாகவே எண்ணி வணங்கி வாழ்தல் வேண்டும். இதை,


"எவரேனும் தாமாக இலாடத்து இட்ட

    திருநீறும் சாதனமும் கண்டால், உள்கி

உவராதே அவரவரைக் கண்ட போதே

    உகந்து அடிமைத் திறம்நினைந்து, அங்கு உவந்து நோக்கி,

இவர்தேவர், அவர்தேவர் என்று சொல்லி

    இரண்டு ஆட்டாது ஒழிந்து, ஈசன் திறமே பேணிக்

கவராதே தொழும் அடியார் நெஞ்சின் உள்ளே

    கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே."

என்னும் திருத்தாண்டகத்தால் காட்டி அருளினார் அப்பர் பெருமான்.

யாவராக இருந்தாலும், நெற்றியில் திருநீறு அணிந்து, உருத்திராக்கம் பூண்டு இருப்பவரைக் கண்டால், திருவேடத்தின் பெருமையை நினைத்து, வெறுப்பில்லாமல், அவர்களைக் கண்ட போதே விரும்பி அடிமைத் திறத்தை நினைத்து, விரும்பி நோக்கி `இவர்கள் நம்மால் வழிபடத்தக்க தேவரா என உள்ளத்தை இருவகையாகச் செலுத்தாமல் இறைவனிடத்துச் செய்யும் செயல்களையே அடியவரிடத்தும் விரும்பிச் செய்து, அங்ஙனம் செய்யும்பொழுது மனத்தில் இருதிறக் கருத்து நிகழாத வகையில் இறைவனையும் அடியவரையும் ஒரே நிலையில் மனத்துக்கொண்டு தொழும், அடியவர் உள்ளத்தில் கன்றாப்பூர் நடுதறியைக் காணலாம்.


No comments:

25. தீயவர் ஒழுக்கத்தைப் போற்றாதே

"ஞானம்ஆ சாரம் நயவார் இடைப் புகழும் ஏனைநால் வேதம் இருக்குநெறி - தான்மொழியில், பாவநிறை சண்டாளர் பாண்டத்துக் கங்கைநீர் மேவுநெறி என்றே விடு...