அல்லது செய்தல் ஓம்புமின்

அல்லது செய்தல் ஓம்புமின்

-----


    மனிதன் உலகில் தான் வாழ்வதோடு மட்டுமன்றி மற்றவர்களையும் மற்றவற்றையும் வாழ வைக்கவும் பிறந்தவன். இந்த உண்மையை உணராத சிலர், தமது வாழ்வே பெரிதென எண்ணி, தம் வாழ்வு வளம்பெற எத்தகைய கொடுமையினையும் செய்யத் துணிகின்றனர். “தான் கெடினும் தக்கார் கேடு எண்ணற்க” என்று நாலடியார் கூறுகின்ற முதுமொழியை ஏட்டளவில் விட்டு, நாட்டில் செய்யத் தகாத செயல்களை எல்லாம் செய்து, தன் வாழ்வைப் வளமாக்கிக் கொள்ளுபவர்களை கண்கூடாகவே காண்கிறோம். மனிதராகப் பிறப்பு எடுத்து, மனிதப் பண்பு ஒரு சிறிதும் இல்லாத, விலங்கு மனம் படைத்தோரால் இந்த அவலம் ஏற்பட்டது.

    உருவத்தால் ஒத்து இருப்பதாலேயே மக்கள் என்று சொல்லிவிட முடியாது. மக்கள் பண்பாகிய, பகுத்தறிவு என்று சொல்லப்படும் ஆறாவது அறிவு பொருந்தி இருக்கவேண்டும். பகுத்தறிவு என்பது ஆறாவது அறிவாகிய மன அறிவைக் குறிக்கும். மன அறிவு என்பது, "நல்லதன் நன்மையும், தீயதன் தீமையும் உள்ளவாறு உணர்ந்து அறிதல்" என்று தொல்காப்பிய வியாக்கியானத்தில் சொல்லப்பட்டது.


“உறுப்பு ஒத்தல் மக்கள் ஒப்பு அன்றால், வெறுத்தக்க

பண்பு ஒத்தல் ஒப்பதாம் ஒப்பு.” -- திருக்குறள்.


    மனிதன் தனக்குள்ள விலங்குத் தன்மையில் இருந்து நீங்கவேண்டுமானால், இலங்கு நூல்களை அவன் படித்து ஒழுகவேண்டும். உள்ளத்தில் உள்ள கசடு அறும்படியாகக் கற்க வேண்டும். கற்ற வழி நிற்றல் வேண்டும்.


"விலங்கொடு மக்கள் அனையர், இலங்கு நூல்

கற்றாரோடு ஏனையவர்"             ---  திருக்குறள்.


இதன் பொருள் ---


     அறிவு துலங்கும் நூல்களைக் கற்றாரோடு, அவற்றைக் கல்லாதவரை ஒப்பு நோக்க விலங்கையும் மக்களையும் போல்வர்.


      மனித வடிவில் இருப்பதாலேயே ஒருவனை மனிதன் என்ற கொள்ள முடியாது. அவரவர்க்கு உள்ள குணங்களை வைத்து, அவர் இன்ன விலங்கு என்பதைத் தெரிந்து கொண்டு, அதற்கேற்ப அவரோடு பழக்கத்தை வைத்துக் கொள்ளலாம் என்னும் கருத்து அமைய, "குமரேச சதகம்" என்னும் நூலில் ஒரு பாடல் உள்ளது.


“தான்பிடித் ததுபிடிப் பென்றுமே லவர்புத்தி

     தள்ளிச்செய் வோர்குரங்கு;

சபையிற் குறிப்பறிய மாட்டாமல் நின்றவர்

     தாம்பயன் இலாதமரமாம்;


வீம்பினால் எளியவரை எதிர்பண்ணி நிற்குமொரு

     வெறியர்குரை ஞமலியாவர்;

மிகநாடி வருவோர் முகம்பார்த்தி டாலோபர்

     மேன்மையில் லாதகழுதை;


சோம்பலொடு பெரியோர் சபைக்குள் படுத்திடும்

     தூங்கலே சண்டிக்கடா;

சூதுடன் அடுத்தோர்க்கு இடுக்கணே செய்திடும்

     துட்டனே கொட்டுதேளாம்;


மாம்பழந் தனைவேண்டி அந்நாளில் ஈசனை

     வலமாக வந்தமுருகா!

மயிலேறி விளையாடு குகனே!புல் வயல்நீடு

     மலைமேவு குமரேசனே.”


இதன் பொருள் ---

     மாம்பழம் தனை வேண்டி அந்நாளில் ஈசனை வலமாக வந்த முருகா - முற்காலத்தில் மாம்பழத்தை விரும்பிச் சிவபெருமானை வலமாக வந்த முருகப் பெருமானே! மயில் ஏறி விளையாடு குகனே -  மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!  புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே - திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!

     தான் பிடித்தது பிடிப்பு என்று மேலவர் புத்தி தள்ளிச் செய்வோர் குரங்கு - தான் கொண்டது தான் கொள்கை எனக் கொண்டு, பெரியோர் கூறும் அறவுரைகளைப் பொருட்படுத்தாது செயல்படுவோர், மனிதர்களில் குரங்கு போன்றவர்.

     சபையில் குறிப்பு அறிய மாட்டாமல் நின்றவர் தாம் பயன் இலாத மரமாம் - பெரியோர்கள் கூடி இருக்கும் சபையில், குறிப்பை அறிந்து பேசாமல் நிற்பவர்கள் மனிதர்கள் அல்ல. அவர் பயனற்ற மரம் ஆவர்.

     வீம்பினால் எளியவரை எதிர் பண்ணி நிற்கும் ஒரு வெறியர் குறை ஞமலி ஆவர் - வேண்டுமென்றே எளியவர்களை எதிர்த்துக் கொண்டு நிற்கும் வெறித்தனம் மிக்கவர்கள், மனிதர்களில் குரைக்கும் நாய் போன்றவர்கள்.

     மிக நாடி வருவோர் முகம் பார்த்திடா லோபர் மேன்மை இல்லாத கழுதை - தங்களை மிகவும் நாடி வருவோரின் முகத்தை ஏறெடுத்தும் பார்க்காத கஞ்சத்தனம் மிக்கவர்கள், மனிதர்களில் இழிந்த கழுதை ஆவர்.

     சோம்பலொடு பெரியோர் சபைக்குள் படுத்திடும் தூங்கலே சண்டிக் கடா - சான்றோர் கூடியிருக்கும் அவையிலே சோம்பிப் படுத்து இருக்கும் தூங்குமூஞ்சியே, மனிதர்களில் சண்டித்தனம் உள்ள எருமைக்கடா ஆவான்.

      சூதுடன் அடுத்தோர்க்கு இடுக்கணே செய்திடும் துட்டனே கொட்டு தேளாம் - மனத்தில் வஞ்சகத்தை வைத்துக் கொண்டு, தன்னை நாடி வந்தவர்களுக்குத் துன்பத்தையே செய்யும் கீழ்மகன் தான் மனிதர்களில் கொட்டுகின்ற தேளைப் போன்றவன்.


     “பெறுதற்கு அரிய மானிடப் பிறவி” என்றார் திருமூல நாயனார். “பெறுதற்கு அரிய பிறவி” என்று அருணகிரிநாதரும் கூறினார். “அரிது அரிது மானிடர் ஆதல் அரிது” என்றார் ஔவைப் பிராட்டியார். அப்படி, உயிரினங்களில் சிறந்த மானுடனாய்ப் பிறந்து வாழ்கின்ற மனிதன், ஒரு சமுதாய விலங்கு எனப்படுகிறான். அவன் வாழும் சமுதாயம் வாழ்ந்தால்தான், அவனது தனிவாழ்வும் சிறக்கும் என்ற உண்மையினை மட்டும் உணர்ந்து கொள்ளவில்லை. தனிப்பட்டவர் தம் வாழ்வினை வளம்படுத்துவது எல்லாக் காலத்தும் நிலைத்து நீடிப்பது இல்லை. எவ்வளவு பொருளைக் குவித்தாலும், அவை அத்தனையையும் அனுபவிக்க முடியாமல், பாம்பின் வாய்த் தேரை போல என்றாவது ஒருநாள் காலனது வாயில் அகப்படத் தான் வேண்டும். குவித்து வைத்த பொருளை அப்படியே விட்டுத் தான் செல்லவேண்டும். கூட வருவது என்னவோ, அந்தப் பொருளைக் குவிக்க அவன் செய்த தீவினைகள் மட்டுமே.


    வாழ்வில் சிலருக்கு, பிறருக்கு உதவத் தக்க வாய்ப்பும் வசதியும் இருக்கும். சிலருக்கு அது இராது. இல்லாதவர் தமக்கு அந்த வசதி இல்லை என்பதற்காக, மற்றவர்களுக்குத் தீங்கு இழைத்தல் கூடாது. வசதியாக வாழ்வதை விட, அமைதியாக வாழ்வதே சிறந்தது. சில வசதி படைத்தவர்கள் தம்மிடம் பணம், பதவி, பட்டம் இன்ன பிற இருக்கின்ற காரணத்துக்காக, மற்றவரைச் சாடுவதும் தாழ்த்துவதும் வதைப்பதும் செய்கின்றனர். இது மிகக் கொடுமை. இவர்கள் இம்மையில் மட்டுமன்றி மறுமையிலும் நலம் காணமாட்டார்கள். தம்மிடத்துப் பொருந்தி உள்ள பணம், பட்டம், பதவி போன்றவைகளால் செருக்குக் கொண்டு, பிறரை வாட்டி வதைத்தவர்கள் முடிவில் என்ன ஆனார்கள் என்பதை வரலாறு நன்றாகவே காட்டுகிறது.


    அவர்கள் கெடுவது மட்டுமன்றி, அவர்களால் சமுதாயமும் கெடுகிறது. இவற்றையெல்லாம் எண்ணித்தான், சங்க காலத்தில் வாழ்ந்த நரிவெரூஉத்தலையார் என்ற புலவர் உயர்ந்த உபதேசத்தைச் செய்கிறார். அதைப் படித்தவர்கள் உண்டு. படிக்க வாய்ப்பு இல்லை என்றாலும், கேட்டவர்களும் உண்டு. ஆனாலும், நாம் இன்னமும் வேறுவழியிலேதான் சென்று கொண்டிருக்கிறோம். “தோற்றம் உண்டேல் மரணம் உண்டு” என்பது சுந்தரர் தேவாரம். பிறந்தவர் யாராக இருந்தாலும், எந்நிலையினராக இருந்தாலும் ஒருநாள் மறைந்து போகத்தான் வேண்டும். சின்னாள், பல்பிணி, சிற்றறிவு உடைய வாழ்க்கை இது. அந்த சிலநாள் வாழ்க்கையில் முடிந்தவரையில் பிறருக்கு நன்மையாக வாழ்வதே அறிவுடைமை ஆகும். அதுதான் நரிவெரூஉத் தலையார் காட்டுவது. உலகில் பிறந்த நீ உன்னால் முடிந்தால் நல்லது செய். அதனால் நாடு நலம் பெறும். நாடு நலம் பெற்றால் வீடும் நலம் பெறும். “நாடு எங்கும் வாழக் கேடு ஒன்றும் இல்லை” என்பது ஔவையார் வாக்கு.  

     

    "மறந்தும் பிறன்கேடு சூழற்க, சூழின் அறம் சூழும் சூழ்ந்தவன் கேடு" என்று "தீவினையச்சம்" என்னும் அதிகாரத்தில் (பொருள்: பிறருக்குத் தீமை பயக்கும் செயல்களை மறந்தும் எண்ணாது ஒழிக; எண்ணினால் எண்ணுபவனுக்கு ஒறுக்கும் வகை கெடுதி செய்ய அறக் கடவுள் எண்ணும்) என்றும், "தீயவை செய்தார் கெடுதல், நிழல் தன்னை வீயாது அடி உறைந்தற்று" என்றும் (பொருள்: தீயசெயல்கள் செய்தவர் கேட்டினை அடைவர் என்பது ஒருவனுடைய நிழல் விடாது அவனது காலடிக் கீழ்த் தங்குவது போன்றது) என்றும், அறக் கடவுள் நிழல்போல் பின்தொடர்ந்து தீயவை செய்தார்க்கு உண்டான கேட்டைச் சிந்திக்கும் என்றும் திருவள்ளுவ நாயனார் காட்டி உள்ளார்.

 

      திருவள்ளுவ நாயனார்,  "இன்னா செய்யாமை"  என்னும்  அதிகாரத்துள் வரும் ஒன்பதாம் திருக்குறளில், "பிறர்க்குத் துன்பம் தரும் செயல்களை ஒருவன் முன்னதாகச் செய்தால், தமக்குத் துன்பங்கள், பின்னதாக யாருடைய முயற்சியும் இல்லாமல் தாமாகவே வந்து சேரும்" என்று அறிவுறுத்தி விட்டார்.

 

"பிறர்க்கு இன்னா முற்பகல் செய்யின், தமக்கு இன்னா

பிற்பகல் தாமே வரும்."                 --- திருக்குறள்.


    “முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்” என்கிறது ‘கொன்றைவேந்தன்’ முற்பகல் பிற்பகல் என்று சொன்னது விரைவில் உண்டாகும் என்பதைக் காட்டுதற்கு. தீமை செய்வதற்கு அஞ்சுதல் வேண்டும் என்பதற்காக இவ்வாறு  சொல்லப்பட்டது.  முற்பகலில் ஒருவனுக்குச் செய்த தீமையின் பலன்,  செய்தவனுக்குப் பிற்பகலில் விளையும் என்றால், முற்பகலில் செய்த நன்மையும் பிற்பகலில் விளையும் என்பது சொல்லாமலே விளங்கும். எனவே, நன்மை தீமை இரண்டுக்கும் பொதுவாகச் சொன்னதாகக் கொள்ளலாம். 


    எனவே, பிறருக்கு நன்மை செய்ய முடியாவிட்டாலோ, செய்ய முடிந்த காலத்தும் மனம் இல்லாமல் போனாலோ, கொடுமைகளை மட்டுமாவது செய்யாது இருத்தல் நல்லது. நல்லது செய்யாவிட்டால் இவன் இருந்தும் பயனில்லை என்பதோடு போய்விடும். அல்லது செய்தால், பாவம் வந்து சேர்வதோடு, என்றென்றும் பழியும் நிலைத்து இருக்கும். இம்மையிலும் மறுமையிலும் வாழ்வு சிறக்காது. 


புறநானூற்றுப் பாடல் ஒன்றில் காணப்படும் அருமையான வாசகம், “அல்லது செய்தல் ஓம்புமின்” என்பதாகும். வயதால் முதியோராக இருந்தும் தமது அறிவையும் ஆற்றலையும் நல்ல வழியில் பயன்படுத்தாத சிலரை நல்வழிப்படுத்த நரிவெரூஉத்தலையார் என்னும் புலவர் இவ்வாறு கூறுகின்றார்.


“பல் சான்றீரே! பல் சான்றீரே!

கயல்முள் அன்ன நரைமுதிர் திரை கவுள்

பயன்இல் மூப்பின் பல் சான்றீரே!

கணிச்சிக் கூர்ம்படைக் கடுந்திறல் ஒருவன்

பிணிக்கும் காலை இரங்குவிர் மாதோ,

நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்,

அல்லது செய்தல் ஓம்புமின், அதுதான்

எல்லாரும் உவப்பது, அன்றியும்

நல் ஆற்றுப்படூஉம் நெறியுமார் அதுவே.


இதன் பொருள் -– 


    பல நல்ல தன்மைகளை உடைய சான்றோர்களே! பல நல்ல தன்மைகளை உடைய சான்றோர்களே! கெண்டை மீனின் முள் போன்ற நரை முடியுடனும், முதுமையால் ஏற்படும் தோல் சுருக்கம் கொண்ட கன்னத்துடனும், பயன் இல்லாத முதுமையை அடைந்த பல நல்ல தன்மைகளை உடைய சான்றோர்களே! கூர்மையான கோடரி என்னும் படைக்கலன் கொண்டு, மிகுதியான வலிமை கொண்ட காலன், கயிற்றால் பிணைத்து இழுத்துச் செல்லும் நேரத்தில் நீங்கள் வருந்துவீர்கள். அந்தக் காலத்தில் உங்களால் நல்ல செயல்களைச் செய்ய எண்ணினாலும், அது முடியாமல் வருந்துவீர்கள். வாழ்வில் நீங்கள் நல்ல செயல்களை செய்யவில்லையானாலும்,  தீய செயல்களைச் செய்வதைத் தவிர்த்து விடுங்கள். அது தான் எல்லாருக்கும் மகிழ்ச்சி அளிப்பது. அதுதான் உங்களை நல்ல வழியில் செலுத்தும்.


    எனவே, நன்மை செய்து வாழ்வது நல்லது. நன்மை செய்ய வாய்ப்பு இல்லை என்றாலும், நன்மையை மனத்தால் விழையலாம். நன்மை செய்ய மனம் இல்லாவிட்டாலும், தீமையாவது செய்யாமல் வாழப் பழகிக் கொள்வது நன்மையைத் தரும். அதுவே அறம் கூறும் ஆக்கம் தரும்.



No comments:

25. தீயவர் ஒழுக்கத்தைப் போற்றாதே

"ஞானம்ஆ சாரம் நயவார் இடைப் புகழும் ஏனைநால் வேதம் இருக்குநெறி - தான்மொழியில், பாவநிறை சண்டாளர் பாண்டத்துக் கங்கைநீர் மேவுநெறி என்றே விடு...