பாடல் 4


“காளை வடிவுஒழிந்து, கையறவோடு, ஐயுறவாய்

நாளும் அணுகி நலியாமுன், பாளை

அவிழ்கமுகம் பூஞ்சோலை ஆரூரற்கு ஆளாய்க்

கவிழ்க முகம், கூம்புகஎன் கை.”


இதன் பொருள் ---

காளை வடிவு ஒழிந்து - காளைபோன்ற குமாரப் பருவத்தின் வடிவம் நீங்கி; கையறவோடு - முதுமை காரணமாக உண்டான செயலற்ற நிலையோடு, ஐயுறவாய் – கோழை பொருந்தி இருக்க, நாளும் அணுகி நலியா முன் - இறுதி நாளும் வந்து வருத்தும் முன்பாகவே, பாளை அவிழ் கமுகம் பூஞ்சோலை  பாளைகள் அவிழ்கின்ற பாக்கு மரங்கள் சூழ்ந்துள்ள பூஞ்சோலைகள் நெருங்கிய, ஆரூரற்கு ஆளாய்  திருவாரூரில் எழுந்தருளி உள்ள சிவபரம்பொருளுக்கு அடியவன் ஆகி,  கவிழ்க முகம் – (எனது) முகமானது கவிழ்ந்து வணங்கவேண்டும். கூம்புக என் கை – எனது கைகள் கூப்பித் தொழவேண்டும். 

 

      காளை வடிவு - காளைபோன்ற அழகு (வடிவு – அழகு). காளை என்பது மிடுக்கு உடைய குமாரப் பருவத்தைக் குறித்தது. கையறவு – செயலற்ற நிலை.  ஐயுறவு – ஐ  என்பது கோழையைக் குறிக்கும். முதுமையில் கோழையானது நீங்காமல் இருக்கும். “ஐயினால் மிடறு அடைப்புண்டு” என்பது அப்பர் வாக்கு. மற்றும் ஐ என்னும் சொல்லுக்கு ஐயம் அல்லது சந்தேகம் என்பது பொருளாகக் கொண்டால், வாழ்நாள் இன்று முடியுமோ அல்லது நாளைக்கு முடியுமோ என்று சந்தேகித்தல் என்பதாக அமையும். முகம் என்றது தலையைக் குறிக்கும். “தலையே நீ வணங்காய்” எனவும், “வாழ்த்த வாயும், நினைக்க மடநெஞ்சும், தாழ்த்த சென்னியும் தந்த தலைவனை, சூழ்த்த மாமலர் தூவித் துதியாதே, வீழ்த்தவா வினையேன நெடுங்காலமே” எனவும் வரும் அப்பர் தேவாரப் பாடல்களையும், “வணங்கத் தலை வைத்து, வார்கழல் வாய் வாழ்த்த வைத்து” எனவரும் மணிவாசகத்தையும் கருத்தில் கொள்க. கையானது இறைவனை நோக்கிக் கூம்புதல் வேண்டும். “கைகாள் கூப்பித் தொழீர்” என்றார் அப்பர் பெருமான். “கரமலர் மொட்டித்து இருதயம் மலர” என்றார் மணிவாசகப் பெருமான். கையானது மொட்டுப் போலக் கூம்பி இறைவனை வணங்கவேண்டும், இதயமானது இறைவன் மீது கொண்ட அன்பால் மலர வேண்டும். பொருளும், பிறவும் படைத்தவரைப் பார்த்துக் கைகள் கூம்புதலும், இதயம் மலர்தலும் பயனற்ற செயல்கள்.


31. தீ மகளிரின் வாக்கு நிலை

“பெண் ஒருத்தி பேசில் பெரும்பூமி தான்அதிரும்;

பெண் இருவர் பேசில்விழும் வான்மீன்கள்; - பெண்முவர்

பேசில் அலைசுவறும்; பேதையே! பெண்பலர்தாம்

பேசில்உலகு என்னாகுமோ பின்.”


பெண் ஒருத்தி பேசினால் பெரிய நிலவுலகமும் நடுங்கும்.  இருவர் பேசினால் விண்மீன்கள் உதிர்ந்து விழும்.  மூவர் பேசினால் கடலும் வறண்டு விடும்.  பெண்மக்கள் பலரும் பேசத் தொடங்கினால் பின்னர் உலகம் என்ன ஆகுமோ?

    (அதிரும் - நடுங்கும்.  சுவறும் - வற்றும்.) மேற்பாடலில் நன்மனையாளுக்கு (குலமகளுக்கு) இலக்கணம் கூறப்பட்டது. இப் பாடலில் தீய குணம் கொண்ட மகளிரின் நிலை குறித்துச் சொல்லப்பட்டது.


91. அரைக் காசுக்குப் போன அபிமானம்


"கானமரும் கவரியொரு மயிர்படினும்

     இறக்கும்! அது கழுதைக் குண்டோ?

மானமுடன் வாழ்பவனே மாபுருடன்!

     சுயோதனனை மறந்தார் உண்டோ?

ஆனகஞ்சேர் ஒலிமுழங்கும் தண்டலையா

     ரே! சொன்னேன்! அரைக்கா சுக்குப்

போனஅபி மானமினி ஆயிரம்பொன்

     கொடுத்தாலும் பொருந்தி டாதே."


இதன் பொருள் ---


ஆனகம் சேர் ஒலி முழுங்கும் தண்டலையாரே – படகம், துந்துபி கலந்த ஓசை முழங்கும் திருத் தண்டலை என்னும் திருத்தலத்தில் ‘நீள்நெறி’ என்னும் திருக்கோயிலில் எழுந்தருளி உள்ள சிவபரம்பொருளே! கான் அமரும் கவரி ஒரு மயிர் படினும் இறக்கும் - காட்டில் இருக்கும் கவரிமான் ஒரு மயிரை இழந்தாலும் இறந்து விடும்; அது கழுதைக்கு உண்டோ - அந்தப்  பண்பு  கழுதைக்கு இருக்கிறதோ?, மானமுடன் வாழ்பவனே மாபுருடன் - மானத்தோடு வாழ்கின்றவனே ஆடவரில் சிறந்தவன்; சுயோதனனை மறந்தார் உண்டோ - துரியோதனனை மறந்தார் யார்?, அரைக்காசுக்குப் போன அபிமானம் இனி ஆயிரம் பொன் கொடுத்தாலும் பொருந்திடாதே. – அரைக்காசுக்கு ஆசைப்பட்டு இழந்த பெருமையானது, பிறகு ஆயிரம் பொன்னைக் கொடுத்தாலும் திரும்பப் பெறமுடியாதே.


விளக்கம் --- ஆனகம் – படகம், துந்துபி முதலிய வாத்திய வகை. கவரி - கவரிமான். சுயோதனன் (சுய ஓதனன்) - சிறந்த போர்வீரன் (காரணப் பெயர்). ஓதனம் – போர். ஓதனன் - போர்வீரன். இவன் தன் சிற்றப்பன் மக்களான பாண்டவருக்கு அடங்கி வாழ விரும்பாமல் இறுதிவரையில் அவர்களைப் பகைத்துப் போர் செய்து உயிர் துறந்தான். பதினெட்டாம் நாட்போரிலே தனித்து நின்ற சுயோதனனைத் தருமன் பார்த்து மனமிரங்கித் தம்முடன் கூடி அவனையே உலகை ஆளும்படியும் ஒத்துப் போகும்படியும் கூறினான். அதற்கு அவன் தன்னுடன் பிறந்தார் உறவினர் நண்பரையெல்லாம் தனக்காக மடியவிட்டு, நாடு என்றவுடன் உயிருக்கும் செல்வத்திற்கும் ஆசைப்பட்டு ஒத்துப்போக முடியாதென்று கூறினான். ஆகவே, அவன் மானமுடையவனாகக் கருதப்பட்டான். ‘அரைக்காசுக்குப் போன மானம் ஆயிரம் பொன் கொடுத்தாலும் வராது' என்பது பழமொழி.


பின்வரும் வில்லிபாரதப் பாடல்களைக் காண்க...


“என்துணைவருடன் யானும் ஏவிய நின்தொழில் புரிந்து

வன்துணையாய்ச் சேவிப்ப, மடங்கல் ஆசனம் ஏறி,

இன்துணைவர் குருகுலத்தார் எனும் இசைபோய்த் திசை ஏற,

நல்துணைவா! ஆளுதியால் ஞாலம் எலாம் நின் குடைக்கீழ்.”


பதினெட்டாம் நாள் போரில் யாவரையும் இழந்து தனியனாய் வருந்தி நிற்கும் துரியோதனனைப் பார்த்து மனம் இரங்கி, தருமன் பின்வருமாறு சொல்லி, போரை விட்டுச் சமாதானமாய் வாழ்வாயாக என்று சொன்னான். “எனது தம்பியரோடு நானும் நீ ஏவிய சிறுபணிகளைச் செய்துகொண்டு, நல்ல துணையாய் நாங்கள் உனக்கு ஊழியம் செய்ய, நீ அரியணையில் வீற்றிருந்து, குருகுலத்து மன்னர்கள் ஒருவருக்கு ஒருவர் இனிய துணைவர் ஆனார் என்ற புகழ் எங்கும் போய்ப் பரவ, உலகம் முழுவதும் உனது வெண்கொற்றக் குடைக் கீழ் ஆளுவாயாக"


தருமன் எண்ணத்துக்கு உடன்படாமல், சிறிதும் தாட்சணியம் இன்றி மானமுள்ள துரியோதனன் மறுத்தான்.


“தப்பாது என்மொழி என்று தருமன் மாமதலை, முகில்

ஒப்பான திருமேனி உம்பர் பிரான் சான்று ஆக 

செப்பாத வாய்மை எல்லாம் செப்பினான், செப்பவும், அக்

கைப்பான வல்நெஞ்சக் கொடுங் கண்ணன் மறுத்தான்.”


‘நான் சொன்ன சொல் தவறாது’ என்று சிறந்த தருமன், கரிய மேகத்தை ஒத்த திருமேனி உடைய கண்ணபிரான் சாட்சியாக இதுவரையில் யாரும் சொல்லி இராத உறுதியான சொற்களை எல்லாம் சொன்னான். வெறுப்புக் கொண்ட வலிய மனத்தையும், கொடிய தன்மையையும் உடைய துரியோதனன், தருமன் எண்ணுத்துக்கு உடன்படாமல் தாட்சணியம் இன்றி மறுத்தான். (கொடுங் கண்ணன் – தீமை விளைக்கும் கண்ணை உடையவன் ஆகிய துரியோதனன்)


“எம்கிளைஞர். எம்துணைவர், எம்பொருட்டால் இறந்து ஏக,

உங்கள் அருள் பெற்று இருக்கும் உயிர் வாழ்வின் இனிது அன்றோ,

அங்கம் எலாம் வேறுபட ஆறுபடு குருதியின் வாய்,

கங்கமும் காகமும் கொட்ட களத்து அவிந்தான் எனும் பெயரே.”


“எனது உறவினரும், எனது தம்பியரும் என் பொருட்டாக மாண்டு போக, உங்கள் அருளைப் பெற்று, அதனால் நான் வாழ்கின்ற உயிர்வாழ்வைக் காட்டிலும், உடல் உறுப்பு எல்லாம் தனித்தனித் துண்டாகி விடவும், ஆறாக இரத்தம் கொட்டும் புண்களின் வாயிலே கழுகுகளும் காக்கைகளும் அலகால் கொத்தவும், போர்க்களத்தில் இறந்தான் என்ற புகழை அடைதல் சிறந்தது அன்றோ?” (கங்கம் – கழுகு)


பாடல் 3

“குந்தி, நடந்து, குனிந்து,ஒருகை கோலூன்றி,

நொந்துஇருமி, ஏங்கி, நுரைத்துஏறி வந்து,உந்தி

ஐயாறு வாயாறு பாயாமுன் நெஞ்சமே

ஐயாறு வாயால் அழை.”


இதன் பொருள் ---


நெஞ்சமே – மனமே! குந்தி நடந்து குனிந்து ஒருகைக் கோல் ஊன்றி - (உடல் வலியின்மையால்) குந்திக் குந்தி நடந்து, உடல் வளைந்து, ஒரு கையில் கோலினை ஊன்றி; நொந்து இருமி ஏங்கி நுரைத்து ஏறி வந்து உந்தி ஐ ஆறு பாயாமுன் - வருந்தி இருமி ஏங்கி நுரைகொண்டு மிக்கு வந்து வலிந்து தள்ளி கோழையானது ஆறுபோலத் தொடர்ந்து வாயின் வழியே பாய்ந்து ஒழுகாத முன்னம்; ஐயாறு வாயால் அழை – சிவபரம்பொருள் எழுந்தருளி உள்ள திருவையாற்றினை வாய் திறந்து கூறி அழைப்பாயாக.


குந்தி நடந்து - தொடர்ந்து நடக்க வலியின்மையால் அடிக்கடி குந்திக்குந்தி நடந்து; குந்துதல் - உட்காரும் நிலை; குனிந்து - உடல் வளைந்து; கூன்கொண்டு; கோல் ஊன்றி – கோலை ஊன்றி, ஊன்றுகோலின் துணை இல்லாமல் துணையில்லாமல் உடல் தாங்கி நடக்க இயலாமை; நொந்து இருமி - நெஞ்சு வருந்தி இருமல் கொண்டு; ஏங்கி - வருந்தி முயன்று; உந்தி - உட்காற்றினால் வலிந்து தள்ளப்பட்டு; ஐ - கோழை - (கபம்). கோழையானது தொண்டையில் அடைக்கும்போது, எளிதில் உமிழ வராது. வருந்தி இருமினால், உள்காற்றினால் உந்தப்பட்டு கோழையானது வழவழ என்று வாய் வழியாக வழுகும். 


“ஈளை மேலிடா, வழவழ என உமிழும் அது கொழகொழ என ஒழுகி விழ  வாடி” என்று அருணகிரிநாதர் அருளிய திருப்புகழில் சொல்லப்பட்டு உள்ளது. 


“பொய்மிகுத்த வாயராய்ப் பொறாமையோடு சொல்லுநீர்,

ஐமிகுத்த கண்டராய், அடுத்துஇரைப்ப தன்முனம்,

மைமிகுத்த மேனிவாள் அரக்கனை நெரித்தவன்

பைமிகுத்த பாம்புஅரைப் பரமர்காழி சேர்மினே.”           --திருஞானசம்பந்தர்.


இதன் பொருள் ---


மிகுதியாகப் பொய் பேசும் வாயினை உடையவராய், பொறாமையோடு பேசுகின்ற நீங்கள், (முதுமை வந்த காலத்தில்) கோழைமிகுந்த கண்டத்தினை உடையவராய், இரைப்பு அடைதற்கு முன்னரே, கரிய மேனியனாகிய இராவணனை மலையின் கீழ் நெரித்தவனும், படம் பொருந்திய பாம்பினை அரையில் கட்டிய பரமனும் ஆகிய சிவபிரான் எழுந்தருளி உள்ள சீர்காழியை அடைவீர்களாக.


“ஐயினால் மிடறு அடைப்புண்டு, ஆக்கை விட்டு

     ஆவியார் போவதுமே, அகத்தார் கூடி,

மையினால் கண் எழுதி, மாலை சூட்டி, மயானத்தில்

     இடுவதன் முன், மதியம் சூடும்

ஐயனார்க்கு ஆள் ஆகி, அன்பு மிக்கு, அகம்

     குழைந்து, மெய் அரும்பி, அடிகள் பாதம்

கையினால் தொழும் அடியார் நெஞ்சினுள்ளே

     கன்றாப்பூர் நடுதறியைக் காணல் ஆமே!.”. –அப்பர்.


இதன் பொருள் ---


கோழையினால் குரல்வளையானது அடைக்கப்பட்டு, உடம்பைவிட்டு உயிர்போன அளவிலேயே, வீட்டிலுள்ளவர்கள் ஒன்று சேர்ந்து, கண்களை மையினால் எழுதி, மாலை சூட்டி, பிணத்தைச் சுடுகாட்டில் இடுவதன் முன்பு, பிறைசூடும் பெருமானுக்கு அடியவராகி, அன்புமிக்கு மனம் குழைந்து மெய் மயிர் சிலிர்த்து, பெருமான் திருவடிகளைக் கைகளால் தொழும் அடியவர் உள்ளத்தினுள்ளே திருக் கன்றாப்பூர் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி உள்ள நடுதறி அப்பர் என வழங்கப்படும் சிவபரம்பொருளைக் காணலாமே.


“ஐயாறு வாயால் அழை” என்றது, திருவையாற்றில் எழுந்தருளி உள்ள சிவபரம்பொருளை வாயார அழைத்தல் ஒன்று. மற்றொன்று, திருத்தலத்தின் பெயரைச் சொல்லுதலும் அங்கு எழுந்தருளி உள்ள இறைவன் திருப்பெயரைச் சொல்லுதலோடு ஒக்கும் என்பது. “ஐயாறே! ஐயாறே! என்பீராகில் அல்ல் தீர்ந்து அமருலகம் ஆளலாமே” என்பது அப்பர் தேவாரம். இவ்வாறே, “திருச்சிராப்பள்ளி என்றலும் தீவினை நரிச்சு இராது நடக்கும் நடக்குமே” எனவும், “திருக் கொடுமுடி என்றலும் தீவினை கருக்கெடும், இது கைகண்ட யோகமே” எனவும் பிற திருத்தலங்கள் குறித்து அப்பர் பெருமான் பாடி உள்ளார் என்பதை அறிக.


30. இல்லாளுக்கு இருக்க வேண்டிய பண்புகள்

“அன்னை தயையும், அடியாள் பணியும்,மலர்ப்

பொன்னின் அழகும், புவிப்பொறையும், - வன்னமுலை

வேசி துயிலும், விறல்மந் திரிமதியும்,

பேசில் இவையுடையாள் பெண்.” — நீதிவெண்பா


சொல்லப் புகுமிடத்து, தாயைப் போன்ற அன்பும், வேலையாளைப் போலத் பணிபுரிதலும், தாமரையில் வீற்றிருக்கும் திருமகளைப் போல அழகும், நிலத்தைப் போல பொறுமையும், அழகிய தனங்களை உடைய விலைமாதரைப் போலத் துயிலும்முன் தரும் இன்பமும்,  திறன் மிகுந்த அமைச்சரைப் போல அறிவும் ஆகிய ஆறு பண்புகளையும் உடையவளே நன்மனையாள் என்று சொல்லத் தக்கவள் ஆவாள்.


(அடியாள் - பணிவிடை செய்பவள்.  பொன் - இலக்குமி.  புவி - பூமி.)


90. புற்றுமண்ணின் பயன்


தனமேவும் புற்றடிமண் குருந்தடிமண்

     பிரமகுண்டம் தன்னில் ஏய்மண்

மனமேவும் மணியுடனே மந்திரமும்

     தந்திரமும் மருந்தும் ஆகி,

இனமேவும் தண்டலையார் தொண்டருக்கு

     வந்தபிணி யெல்லாம் தீர்க்கும்!

அனுபோகம் தொலைந்தவுடன் சித்தியாம்

     வேறும்உள அவிழ்தந் தானே.


இதன் பொருள் ---


    தனம் மேவும் புற்றடிமண் குருந்தடி மண் பிரமகுண்டம் தன்னில் ஏய் மண் - செல்வம் மிக்க புற்றுமண்ணும், குருந்த மரத்தடி மண்ணும், பிரமகுண்டத்தில் உள்ள மண்ணும், மனம் மேவும் மணியுடனே மந்திரமும் தந்திரமும் மருந்தும் ஆகி - உள்ளம் விரும்பும் மணியும் மந்திரமும் ஆராய்ச்சியும் மருந்தும் என ஆகி,  இனம்  மேவும் தண்டலையார் தொண்டருக்கு வந்த பிணி எல்லாம் தீர்க்கும் - உறவாகிய திருத்தண்டலை இறைவரின் அடியவர்க்கு வந்த நோயை எல்லாம் போக்கும்; வேறும் உள அவிழ்தம் அனுபோகம் தொலைந்தவுடன் சித்திஆம் - மற்றும் உள்ள மருந்துகள் (முன்வினைப்) பயன் கழிந்த பிறகே நலந்தரும்.


      இறைவன் இருப்பிடத்தில் உள்ள மண் அடியவர் நோயை எல்லா வகையினும் எப்போதும் போக்கும். வேறு மணியும் மருந்தும் மந்திரமும் பழவினைப் பயன் நன்றாக இருந்தால் மட்டும் நோய்களை நீக்கும்; தீமையாக இருந்தால் நோய்களை நீக்கமாட்டா.


பாடல் 2



                   திருச்சிற்றம்பலம்

“கடுஅடுத்த நீர்கொடுவா, காடிதா என்று,

நடுநடுத்து, நாஅடங்கா முன்னம் பொடியடுத்த

பாழ்க்கோட்டம் சேராமுன் பன்மாடத் தென்குடந்தைக்

கீழ்க்கோட்டம் செப்பிக் கிட.”

                    திருச்சிற்றம்பலம்

இதன் பொருள் ---

கடு அடுத்த நீர் கொடுவா – கடுக்காய் இட்டுச் சுருங்கக் காய்ச்சிய நீரைக் கொண்டு வா, காடி தா – பழஞ் சோற்றுத் தண்ணீரைக் கொண்டு வந்து தருவாயாக, என்று – என்று சூழ்ந்து உள்ளவர்கள் கூறவும்,  நடுநடுத்து நா அடங்கா முன் – நடுக்கத்துடன் பேச்சுக் குழறி அடங்கும் முன்பாக,  பொடி அடுத்த பாழ்க் கோட்டம் சேரா முன் – சாம்பல் நிறைந்த சுடுகாட்டினைச் சென்று அடையாத முன்னமே, பன்மாடத் தென் குடந்தைக் கீழ்க்கோட்டம் செப்பிக் கிட – பல மாடங்களை உடைய (கும்பகோணம் என வழங்கப்படும்) தென்குடந்தை என்னும் திருத்தலத்தில், “கீழ்க்கோட்டம்” என்னும் திருக்கோயிலில் எழுந்தருளி உள்ள திருநாகேச்சுரப் பெருமானது திருநாமத்தைச் சொல்லித் துதித்துக் கிடப்பாயாக.

கடு – கடுக்காய். இது பித்தத்தைப் போக்குவது என்று சொல்லுவர் மருத்துவ நூலார். கடு அடுத்த நீர் - கடுக்காயைப் பொடி ஆக்கி, கொட்டையை நீக்கி, நீரில் இட்டுச் சுருங்க்க் காய்ச்சிய நீர். காடி – பழங்கஞ்சி, சோற்று நீர். நாக்கு வறட்சியால் நடுக்கம் எய்தி, பேச்சு அடங்கும். இது உயிர் போகும் தறுவாயில் நிகழும் குறிகளுள் ஒன்று. “பவனமாய்ச் சோடையாய் நா எழாப் பஞ்சு தோய்ச்சு அட்ட உண்டு, சிவனதாள் சிந்தியாப் பேதைமார்” என்பது திருஞானசம்பந்தர் தேவாரம். பொடி -  சாம்பல். பாழ்க் கோட்டம் – சுடுகாடு.

தென்குடந்தை என்பது, தென்னாட்டில் உள்ள கும்பகோணம் எனப்படும் ஒரு சிறந்த திருத்தலம். அதி திருத்தலத்தில், கீழ்கோட்டம் என்னும் திருக்கோயிலில் திருநாகேச்சுர சுவாமியாகச் சிவபெருமான் எழுந்தருளி உள்ளார். தென் என்னும் சொல் திசையைக் குறிப்பதோடு, ஞானம் என்னும் பொருளையும் தரும். “கீழ்க்கோட்டம்” என்பது திருமுறையில் ஈடுபாடு உள்ளவர்க்கே விளங்கும். நாகேசுவர சுவாமி கோயில் என்று கேட்டால் எளிதில் வழி சொல்லுவார்கள். 


29. ஞானியரின் சிறப்பு

“வென்றி வரி உகிரும், வெண்கவரி மான்மயிரும்,

துன்றுமத யானைச் சுடர்மருப்பும், - நின்றநிலை

வேறுபடினும் சிறப்பாம்; மெய்ஞ்ஞானி நின்றநிலை

வேறுபடினும் சிறப்பு ஆமே.” — நீதிவெண்பா


வெற்றியை உடைய புலியினது நகமும், வெண்மையான கவரிமானின் மயிரும், நிறைந்த மதத்தை உடைய யானையினது ஒளி பொருந்திய தந்தமும், தாம் நின்ற நிலையில் இருந்து வேறுபட்டாலும் அவைகளுக்குப் பெருமையே மிகும்.  அதுபோல, உண்மையான அறிவுடைய பெரியோர் தாம் இருந்த நிலையில் இருந்து வேறுபட்டாலும் அவர்களுக்குப் பெருமையே உண்டாகும்.

        (கவரி - ஒருவகை மான்.  துன்று - மிகுந்த.  மருப்பு - பல், தந்தம்.)


89. பொல்லாத சூது


“கைக்கெட்டா தொருபொருளும்! கண்டவர்க்கு

     நகை யாகும்! கனமே! யில்லை!

இக்கட்டாம் வருவதெல்லாம்! லாபமுண்டோ?

     கவறு கையில் எடுக்கலாமோ?

திக்கெட்டே றியகீர்த்தித் தண்டலையார்

     வளநாட்டிற் சீச்சீ யென்னச்

சொக்கட்டான் எடுத்தவர்க்குச் சொக்கட்டான்

     சூது பொல்லாச் சூது தானே.”


இதன் பொருள் ---


    திக்கு எட்டு ஏறிய கீர்த்தித் தண்டலையார் வளநாட்டில் - எட்டுத் திக்கினும் பரவிய புகழை உடைய திருத்தண்டலை இறைவரின் வளம்பொருந்திய நாட்டிலே, சீச்சீ என்னச் சொக்கட்டான் எடுத்தவர்க்கு - சீச்சீ என இகழும்படி சொக்கட்டானை எடுத்தவர்க்கு, ஒரு பொருளும் கைக்கு எட்டாது - எப் பொருளும் கிடைக்காது; கண்டவர்க்கு நகை ஆகும் - பார்த்தவர் இகழ்வர்; கனமே இல்லை - மதிப்பே இராது; வருவது எல்லாம் இக்கட்டாம் - வருவது முற்றும் துன்பமே ஆகும்; லாபம் உண்டோ - ஊதியமும் இல்லை; (ஆகையால்), கவறு கையில் எடுக்கலாமோ – சூதாடு கருவியைக் கையாலும் தொடலாமோ?, சொக்கட்டான் சூது பொல்லாச் சூதுதானே - சொக்கட்டான் எனும் சூதாட்டம், தீய சூதாட்டம் ஆகும்.

“இருமனப் பெண்டிரும், கள்ளும், கவறும் திரு நீக்கப்படார் தொடர்பு” எனத் திருவள்ளுவ நாயனார் அருளியது அறிக. பின்வரும் பிரமாணங்களையும் கொண்டு சூது தீது என்பதை அறிக.

      

“அடியும், ஆண்மையும், வலிமையும், சேனையும்,

     அழகும், வென்றியும், தம்தம்

குடியும், மானமும், செல்வமும், பெருமையும்,

     குலமும், இன்பமும், தேசும்,

படியும், மாமறை ஒழுக்கமும், புகழும், முன்

     பயின்ற கல்வியும் சேர

மடியுமால்; மதி உணர்ந்தவர் சூதின் மேல்

     வைப்பரோ? மனம் வையார்.”    – வில்லிபாரதம் 

இதன் பொருள் ---

      தலைமையும், பராக்கிரமமும், பலமும், சேனையும்-, அழகும் வெற்றியும், ஜயமும்,  அவரவரது  குடிப்பிறப்பின் மேன்மையும்,  மானமும், செல்வமும், பெருமையும், குலமும் இன்பமும்,  புகழும், ஒளியும், நற்குணமும், சிறந்த வேதங்களில் கூறிய விதிமுறைப்படி ஒழுகும் நல்லொழுக்கமும், முன்பு பயின்ற கல்வியும் ஆகிய இவையெல்லாம் சூதாடுவார்க்கு ஒருசேர அழியும். ஆதலால், அறிவினால் அறிய வேண்டுபவற்றை அறிந்தவர்கள், சூதின் மேல் மனத்தைச் செலுத்தமாட்டார்கள்.


“மீதெடுத்த வஞ்சராகி வெகுளி செய்தல், பிறர் பெருங்

கோதெடுத்து உரைத்த நண்பு கொண்டயிர்த்தல், கொடியவெம்

சூதெடுத்து விழைதலுற்ற சூள் பிழைத்தல் இன்னவே

தீதெடுத்த நூலின் முன்பு தீயஎன்று செப்பினார்.”    --வில்லிபாரதம்

இதன் பொருள் ---

    மீது எடுத்த வஞ்சர் ஆகி வெகுளி செய்தல் - அதிகமாகப் பொருந்திய வஞ்சனையை உடையவர்களாய்க் கோபம் கொள்ளுதலும், பிறர் பெருங்கோது எடுத்து உரைத்தல் - பிறரது பெருங்குற்றங்களை எடுத்துத் தூற்றுதலும், நண்பு கொண்டு அயிர்த்தல் - (ஒருவரை முதலில்) நட்புக்கொண்டு பிறகு சந்தேகித்தலும், கொடிய வெம் சூது எடுத்து விழைதல் - மிகக்கொடிய சூதாடுதலை மேலாகக் கொண்டு விரும்புதலும், உற்ற சூள் பிழைத்தல் - சொன்ன உறுதிமொழி தவறுதலும், இன்ன - (ஆகிய) இச்செயல்களை, முன்பு - முற்காலத்திலேயே, தீது எடுத்த நூலில் - பாவங்களை யெடுத்துக் கூறுகின்ற தருமசாத்திரங்களில், தீய என்று செப்பினார் – தீமையானவை என்று சொன்னார்கள்.

சூதாட்டத்தைத் தீதென்று இகழ்ந்து சொல்லத் தொடங்கிய தருமபுத்திரன் அதற்கு இனமாக உள்ள மற்றைச் சில குற்றமான செயல்களையும் உடன் கூறினான்.


“சூது விரும்பேல்.” ---  ஆத்திசூடி.

“சூதும் வாதும் வேதனை செய்யும்.”  --- கொன்றைவேந்தன்.


“ஓதலும், ஓதி  உணர்தலும், சான்றோரால்

மேதை எனப்படும் மேன்மையும்,-சூது

பொரும் என்னும் சொல்லினால் புல்லப் படுமேல்

இருளாம் ஒருங்கே இவை. --- அறநெறிச்சாரம்.

இதன் பொருள் ---

    சூதாடுபவன் என்னும் பழிச் சொல்லால் ஒருவன் பற்றப்படுவானாயின், அறிவு நூல்களைக் கற்றலும், கற்றவற்றை ஆராய்தலும், அறிவுடையவன் என்று பலராலும் கூறப்படும் பெருமையும் ஆகிய இவை முழுதும் அவனை விட்டு மறையும்.


பொது --- 1121. தத்துவத்துச் செயலொடு

அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

தத்துவத்துச் செயலொடு (பொது)


முருகா! 

அடியாரோடு கூட்டி அருள் புரிவாய்.


தத்தனத் தத்ததன தத்தனத் தத்ததன

     தத்தனத் தத்ததன ...... தனதான


தத்துவத் துச்செயலொ டொட்டில்பட் டக்குருகு

     சத்துவிட் டப்படிபொ ...... லடியேனுஞ்


சச்சிலுற் றுப்படியில் விட்டுவிட் டுக்குளறி

     சத்துவத் தைப்பிரிய ...... விடும்வேளை


சுத்தமுத் தப்பதவி பெற்றநற் பத்தரொடு

     தொக்குசற் றுக்கடையன் ...... மிடிதீரத்


துப்புமுத் துச்சரண பச்சைவெற் றிப்புரவி

     சுற்றவிட் டுக்கடுகி ...... வரவேணும்


வித்தகத் திப்பவள தொப்பையப் பற்கிளைய

     வெற்றிசத் திக்கரக ...... முருகோனே


வெற்புமெட் டுத்திசையும் வட்டமிட் டுச்சுழல

     விட்டபச் சைச்சரண ...... மயில்வீரா


கத்தர்நெட் டுச்சடையர் முக்கணக் கக்கடவுள்

     கச்சியப் பர்க்கருள்செய் ...... குருநாதா


கற்பதத் தைக்குருகி யுற்பதத் துக்குறவர்

     கற்பினுக் குற்றுபுணர் ...... பெருமாளே.


                       பதம் பிரித்தல்


தத்துவத்துச் செயலொடு ஒட்டில் பட்டக் குருகு

     சத்து விட்டப்படி பொல் ...... அடியேனும்,


சச்சில் உற்றுப் படியில் விட்டு விட்டுக் குளறி,

     சத்துவத்தைப் பிரிய ...... விடும்வேளை,


சுத்த முத்தப் பதவி பெற்ற நல் பத்தரொடு

     தொக்கு சற்றுக் கடையன் ...... மிடிதீர,


துப்பு முத்துச் சரண பச்சை வெற்றிப் புரவி

     சுற்ற விட்டுக் கடுகி ...... வரவேணும்.


வித்தக அத்தி, பவள தொப்பை அப்பற்கு இளைய!

     வெற்றி சத்திக் கரக ...... முருகோனே!


வெற்பும் எட்டுத் திசையும் வட்டம் இட்டுச் சுழல

     விட்ட பச்சைச் சரண ...... மயில்வீரா!


கத்தர், நெட்டுச் சடையர், முக்கண் நக்கக் கடவுள்,

     கச்சி அப்பர்க்கு அருள்செய் ...... குருநாதா!


கற்ப தத்தைக்கு உருகி, உன் பதத்துக் குறவர்

     கற்பினுக்கு உற்று புணர் ...... பெருமாளே.


பதவுரை

வித்தக அத்திப் பவள தொப்பை அப்பற்கு இளைய --- ஞானமே வடிவாகியவரும், பவள நிறம் கொண்ட யானை முகத்தினை உடையவரும், பெருவயிற்றை உடையவவரும், தலைவர் ஆகிய மூத்தபிள்ளையாருக்கு இளையவரே!


வெற்றி சத்திக் கர அக முருகோனே --- வெற்றி பொருந்திய வேலாயுதத்தைத் திருக்கையில் ஏந்திய முருகப் பெருமானே!


வெற்பு எட்டு திசையும் வட்டம் இட்டுச் சுழல விட்ட பச்சைச் சரண மயில் வீரா --- கிரெளஞ்ச மலையும், எட்டு திக்குகளும் வட்டமாகச் சுழலும்படி செய்த பச்சை நிறமுள்ள தோகையைக் கொண்ட மயில் வீரரே!


கத்தர் --- உயிர்களுக்குத் தலைவரும், 


நெட்டுச் சடையர் --- நீண்ட திருச்சடையை உடையவரும்,


முக்க(ண்) --- மூன்று திருக்கண்களை உடையவரும்,


அக்கக் கடவுள் --- அக்கமணி மாலையினை அணிந்தவரும்,


கச்சி அப்பர்க்கு அருள்செய் குருநாதா --- காஞ்சிபுரம் என்னும் திருத்தலத்தில் வீற்றிருக்கும் தந்தையாகிய சிவபெருமானுக்கு உபதேசம் செய்தருளிய குருநாதரே!


கற்ப தத்தைக்கு உருகி --- கற்பக மரம் உள்ள தேவலோகத்துக் கிளியாகிய தெய்வயானை அம்மையாரின் அன்புக்கு உருகியதோடு,


உன் பதத்துக் குறவர் கற்பினுக்கு உற்று புணர் பெருமாளே --- 

தேவரீரது திருவடியையே மனத்தில் பதித்து இருந்த குறமகள் ஆகிய வள்ளிநாயகியைத் தேடி அணைந்த பெருமையில் மிக்கவரே1


ஒட்டில் பட்டக் குருகு சத்து விட்டப்படி --- கண்ணியில் சிக்கிய பறவையானது தனது ஆற்றலை இழந்துவிட்டது போன்று,


தத்துவத்துச் செயலொடு பொல் அடியேனும் சச்சில் உற்று --- பொல்லாதவன் ஆகிய அடியேனும் தத்துவச் செயல்களால் பதர் போலப் பயனற்றவன் ஆகி, , 


படியில் விட்டு விட்டுக் குளறி --- இந்த உலகவாழ்வில் தடுமாற்றத்தினை அடைந்து,


சத்துவத்தைப் பிரிய விடும் வேளை --- உண்மைப் பொருளை விட்டு விலகிப் போகும் வேளையில்,


சுத்த முத்தப் பதவி பெற்ற நல் பத்தரொடு தொக்கு --- தூய சீவன்முத்தி நிலையை அடைந்துள்ள சிறந்த அடியவர்களோடு  கூட்டி,


சற்று கடையன் மிடி தீர --- எளிதாக அடியேனது வறுமை தொலைய,


துப்பு முத்துச் சரண பச்சை வெற்றிப் புரவி சுற்ற விட்டுக் கடுகி வரவேணும் --- பவளம், முத்து இவைகளின் நிறம் கொண்ட தோகையினை உடைய, பச்சை நிறம் உள்ளதும், வெற்றியே கொண்டதுமான குதிரையாகிய மயிலைச் சுற்ற விட்டு, விரைந்து அடியேன் முன் வந்தருள வேண்டும்


பொழிப்புரை

ஞானமே வடிவாகியவரும், பவள நிறம் கொண்ட யானை முகத்தினை உடையவரும், பெருவயிற்றை உடையவவரும், தலைவர் ஆகிய மூத்தபிள்ளையாருக்கு இளையவரே!

வெற்றி பொருந்திய வேலாயுதத்தைத் திருக்கையில் ஏந்திய முருகப் பெருமானே!

கிரெளஞ்ச மலையும், எட்டு திக்குகளும் வட்டமாகச் சுழலும்படி செய்த பச்சை நிறமுள்ள தோகையைக் கொண்ட மயில் வீரரே!

உயிர்களுக்குத் தலைவரும், நீண்ட திருச்சடையை உடையவரும், மூன்று திருக்கண்களை உடையவரும், அக்கமணி மாலையினை அணிந்தவரும், பெருந்தொண்டை நன்னாட்டில் காஞ்சிபுரம் என்னும் திருத்தலத்தில் வீற்றிருக்கும் தந்தையாகிய சிவபெருமானுக்கு உபதேசம் செய்தருளிய குருநாதரே!

கற்பகமரம் உள்ள தேவலோகத்துக் கிளியாகிய தெய்வயானை அம்மையாரின் அன்புக்கு உருகியதோடு, தேவரீரது திருவடியையே மனத்தில் பதித்து இருந்த குறமகள் ஆகிய வள்ளிநாயகியைத் தேடி அணைந்த பெருமையில் மிக்கவரே1

கண்ணியில் சிக்கிய பறவையானது தனது ஆற்றலை இழந்தது போன்று, பொல்லாதவன் ஆகிய அடியேனும் தத்துவச் செயல்களால் பதர் போலப் பயனற்றவன் ஆகி, இந்த உலகவாழ்வில் தடுமாற்றத்தினை அடைந்து, உண்மைப் பொருளை விட்டு விலகிப் போகும் வேளையில், தூய சீவன்முத்தி நிலையை அடைந்துள்ள சிறந்த அடியவர்களோடு  கூட்டி, எளிதாக அடியேனது வறுமை தொலைய, பவளம், முத்து இவைகளின் நிறம் கொண்ட தோகையினை உடைய, பச்சை நிறம் உள்ளதும், வெற்றியே கொண்டதுமான குதிரையாகிய மயிலைச் சுற்ற விட்டு, விரைந்து அடியேன் முன் வந்தருள வேண்டும்

விரிவுரை

வித்தக, அத்திப் பவள, தொப்பை அப்பற்கு இளைய --- 

வித்தகம் – அறிவு. இங்கே ஞானத்தைக் குறிக்கும்.

அத்தி --- யானை. யானை முகத்தை உடையவர் மூத்தபிள்ளையார் ஆகிய விநாயகப் பெருமான்.

 மூத்த பிள்ளையார் ஆகிய விநாயகப் பெருமானை, “பவள மதயானை” என்றார் பிறிதொரு திருப்பகழில். யானையின் நிறம் கறுப்பு. ஆனால், விநாயகப் பெருமான் திருமேனியின் நிறம் பவளம். அவரது தந்தையார் ஆகிய சிவபரம்பொருளும் "பவளம் போல் மேனியன்" ஆவார்.

 

வெற்றி சத்திக் கர அக முருகோனே --- 

வெல் என்னும்சொல்லை அடிப்படையாக உடையது வேல் என்னும் ஆயுதம். சத்தியாகிய உமையம்மை தந்ததாலும், சத்தியை உடையதாலும், அது சத்திவேல் எனப்பட்டது. 

கரக என்னும் சொல்லை, கர+அக என்று பிரித்துப் பொருள் கொள்க. 



வெற்பு எட்டு திசையும் வட்டம் இட்டுச் சுழல விட்ட பச்சைச் சரண மயில் வீரா --- 

சரணம் --- மயில் தோகை. அது தோகையினை உடைய மயிலைக் குறிக்கும். 

இங்கே குறித்துள்ள மயிலின் ஆற்றல் குறித்து, அடிகளார் மயில் விருத்தப் பாடலில் பின்வருமாறு காட்டி உள்ளார்...


“சக்ர ப்ரசண்டகிரி முட்டக் கிழிந்து வெளி

   பட்டு க்ரவுஞ்ச சயிலம்

தகர, பெருங்கனக சிகரச் சிலம்பும், எழு

   தனி வெற்பும் அம்புவியும் எண்


திக்கும் தடங்குவடும் ஒக்கக் குலுங்க வரு

   சித்ரப் பதம் பெயரவே

சேடன்முடி திண்டாட ஆடல் புரி வெம் சூரர்

   திடுக்கிட நடிக்கு மயிலாம்”


கத்தர் --- 

கர்த்தர் என்னும் சொல், கத்தர் என வந்தது. கர்த்தர் – தலைவர், கடவுள்.


நெட்டுச் சடையர் --

நீண்ட திருச்சடையை உடையவர் சிவபெருமான். “தாழ்சடை எட்டுத் திசையும் வீசி” என்றார் காரைக்கால் அம்மையார்.


முக்கணக்கக் கடவுள் --- 

சூரியன், சந்திரன், அக்கினி ஆகியவற்றைத் தனது திருக்கண்களாக உடையவர் உடையவர் சிவபெருமான். எனவே, முக்கண்ணர் எனப் போற்றபடுகிறார். “நற்பகல் சோமன் எரிதரு நாட்டத்தன்” என்று மணிவாசகப் பெருமான் திருக்கோவையாரில் அருளியமை காண்க.

முக்கண் + நக்கர் எனப் பிரித்து, மூன்று திருக்கண்களை உடைய திகம்பரர் என்று கொள்ளலாம்.

முக்கண் + அக்கர் எனப் பிரித்து, மூன்று திருக்கண்களையும், அக்கமணி மாலையையும் உடையவர் என்றும் கொள்ளலாம்.


கச்சி அப்பர்க்கு அருள்செய் குருநாதா --- 

கச்சி அப்பர் – காஞ்சிபுரம் என வழங்கபடும் திருகச்சியம்பதியில் எழுந்தருளி உள்ள சிவபரம்பொருள். அவருக்கு ஓங்காரத்தின் உட்பொருளை உபதேசித்து அருளியவர் முருகப் பெருமான்.

முருகப் பெருமான் தந்தைக்கு உபதேசித்த வரலாறு

வேதங்களுக்கு முதல் எழுத்தாக உள்ளது பிரணவம் என்னும் மந்திரம் ஆதலால், "மறை ஆதி எழுத்து என்று உகந்த பிரணவம்" என்றார் குமரகுருபர அடிகள். "ஓம் என்று மறை பயில்வார் பிரமபுரத்து உறைகின்ற காமன் தன் உடல் எரியக் கனல் சேரந்த கண்ணானே" என்பது திருஞானசம்பந்தர் தேவாரம். "எல்லையில்லா மறைமுதல்" என்பார் தெய்வச் சேக்கிழார். பிரணவம் சிவபெருமானுக்கு இருப்பிடமாகவும், வேதங்களுக்கு முதலாகவும், பிரமன் முதலிய தேவர்களுக்குப் பிறப்பிடம் ஆகவும், காசிப் பதியில் இறப்பவர்களுக்கு எம்பெருமான் உபதேசிக்கும் தாரக மந்திரமாகவும், முருகக் கடவுளின் திருமுகங்களில் ஒன்றாகவும் விளங்குவது. 

திருக்கயிலாய மலையிலே சிவபெருமான் உமாதேவியாரோடு எழுந்தருளியிருந்தார். முருகப் பெருமான் தனியாக இருந்த திருக்கோயில் ஒன்றிலே எழுந்தருளியிருந்தார். அக்கோயில் சிவபெருமானுடைய திருவோலக்க மண்டபத்திற்குச் செல்லும் வழியில் அமைந்திருந்தது. ஒருநாள் தேவர்களும் திருமாலும் இந்திரனும் நான்முகனும் சிவபிரானை வழிபடுதல் பொருட்டுத் திருக்கயிலையை அடைந்தார்கள். அத் தேவர்களுள் நான்முகன் ஒழிந்த பிற தேவர்கள் முருகக்கடவுளையும் வணங்கிச் சென்றார்கள். நான்முகன் ஒருவன் மட்டும் "இம் முருகன் சிறுவன் தானே, இவனை எதற்காக வணங்கவேண்டும்" என்னும் எண்ணம் உடையவனாய் வணங்காது ஒதுங்கிச் சென்றான்.

இறைவனை வணங்கச் சென்ற தேவர்களில் நான்முகன் ஆணவத்தோடு சென்ற தன்மையை அறுமுகப்பரமன் அறிந்து கொண்டார். நான்முகனுடைய செருக்கினை அழித்தொழிக்கத் திருவுள்ளம் கொண்டு, "தேவர்கள் வெளியே வரும் பொழுது நான்முகனைப் பிடித்துக் கொண்டுவந்து என்முன் நிறுத்துவாயாக" என்று தம்முடைய இளவலாகிய வீரவாகு தேவர்க்குக் கட்டளையிட்டருளினார். வீரவாகு தேவரும் அறுமுகப்பரமன் கட்டளைப்படி நான்முகனைப் பிடித்து வந்து திருமுன் நிறுத்தினார். இதனைக் கண்ட பிறதேவர்கள் அச்சம் கொண்டவர்களாய்த் திக்குக்கு ஒருவராக ஓடிப் போயினர்.

முருகக்கடவுள் நான்முகனைப் பார்த்து, "நீ எதனில் மிக்கவன்? வாழ்வில் மிகுந்தவன் என்றால், எந்தையாகிய சிவபிரானை நாள் தோறும் வந்து வணங்கவேண்டிய கட்டாயமில்லை. வீரத்தில் மிக்கவன் என்றால், இப்போது என் தம்பியாகிய வீரவாகுவால் பிடிபட்டு வந்ததுபோல் வந்திருக்க மாட்டாய்; எல்லாவற்றையும் நான் படைப்பேன் என்று  கூறுவாயாகில், உன்னையும் திருமாலையும் சிவகணத்தவரையும் நீ படைக்கவில்லை" என்று இப்படிப் பலவாறு கூறவும், நான்முகன் அப்பொழுதுகூட வணங்காமலும் மறுமொழி கூறாமலும் நின்றான். உடனே முருகப்பெருமான் நான்முகனுடைய தலையில் பலமாகக் குட்டிக் கடிய சிறையில் அடைத்தருளினர். பிறகு, படைப்புத் தொழிலையும் தாமே மேற்கொண்டருளினர். இவ்வாறு சிலகாலம் சென்றது. திருமால் முதலியோர் இச்செய்தியைச் சிவபிரானிடம் தெரிவித்தனர். சிவபிரான் திருமால் முதலிய தேவர்களைப் பார்த்துச், "செம்மையான ஞானசத்தியின் திருவுருவத்தினைத் தனக்குத் திருவுருவமாகக் கொண்ட தலைவனாகிய முருகன் எம்மினும் வேறுபட்டவன் அல்லன். யாமும் அவனிலிருந்து வேறாக உள்ளேம் அல்லேம். இளமை பொருந்திய வடிவினை உடைய அம்முருகனிடத்தில் அன்பு செய்தவர்கள் நம்மிடத்தில் அன்பு செய்தோர் ஆவர்.  பிழை செய்தவர்கள் நம்மிடத்திலும் பிழை செய்தவர்களாவர். மிகுந்த குற்றத்தினைச் செய்த நான்முகனுக்குக் கிடைத்த தண்டமானது தகுதியுடையதே ஆகும். அந் நான்முகனை எவ்வாறு சிறையில் இருந்து வெளிப்படுத்த முடியும்?" என்று கூறினார். தேவர்கள் நான்முகன் செய்த குற்றத்தினைப் பொறுத்தருள வேண்டும் என்று வேண்டிக் கொண்டார்கள்.

சிவபெருமான் நந்திதேவரை அழைத்து, "நீ முருகனிடம் சென்று வணங்கி, நான்முகனைச் சிறையில் இருந்து வெளிவிடுமாறு நாம் கூறியதாகக் கூறி, விடச் செய்து முருகனையும் இங்கு அழைத்துக்கொண்டு வருவாயாக" என்று திருவாய் மலர்ந்தருளினார். திரு நந்திதேவர் அறுமுகப் பரமனிடம் சென்று வணங்கிச் சிவபெருமான் கூறிய செய்தியைத் தெரிவித்தார். அவ்வளவில் முருகப்பெருமான் நான்முகனைச் சிறையிலிருந்து விடுவித்துத் தாமும் திருக்கயிலையை அடைந்தார். சிவபெருமான் முருகக்கடவுளைப் பார்த்து, "அறிவினாலே பெருந்தன்மைய உடைய பெரியவர்கள் செய்தற்கரிய பிழைகளைத் தமது மனம் அறிந்து செய்யமாட்டார்கள். சிற்றறிவு உடையவர்கள் அறிந்தோ அறியாமலோ பிழைகளைச் செய்வார்கள். பெரியோர்கள் அக்குற்றத்தினை ஒரு பொருளாக மனத்தில் கொள்ளமாட்டார்கள்.  சிறந்த அறிவு இன்மையாலே நான்முகன் உன்னை வணங்காது சென்றான். நீ அவனுடைய குற்றத்தைப் பொறுக்காமல் பெரிதாகக் கொண்டு தண்டம் செய்து வருத்திவிட்டாய். தேவர்களுடைய துன்பத்தைப் போக்கி இன்பத்தினைக் கொடுக்க வந்த நீ இவ்வாறு செய்தல் தகுதியாகுமோ?" என்று உசாவினார்.

முருகக்கடவுள் சிவபிரானைப் பார்த்து "எந்தையே! நான்முகனைச் சிறந்த அறிவில்லாதவன் என்றீர். சிறந்த அறிவில்லாதவன் பிரணவம் என்னும் அருமறையின் மெய்ப்பொருளை உணரமாட்டான். இத்தகைய நிலையில் உள்ளவனுக்குப் படைப்புத் தொழிலை ஏன் வழங்கினீர்?" என்று உசாவினார். சிவபிரான் முருகக் கடவுளைப் பார்த்து, "நீ பிரணவத்தின் பொருளை அறிவாயானால் கூறுவாயாக" என்று சொன்னார். அதற்கு முருகப்பிரான், "அதனைக் கூறவேண்டிய முறைப்படி கூற வேண்டுமே அல்லாமல் கண்டபடி சொல்லலாமோ?" என்றார். சிவபிரான் முருகக் கடவுளைப் பார்த்து, "நீ விருப்பத்தோடு தங்கியிருக்கும் தணிகைமலைக்கு அருளுரை பெறும்பொருட்டு நாம் வருகின்றோம். மாசிமகமும் வருகின்றது. அப்பொழுது கூறுவாயாக" என்றார். அவ்வாறே தணிகைமலைக்குச் சென்று வடகிழக்கு எல்லையில் ஒரு கணப்பொழுது தணிகைவேலனை எண்ணி அமர்ந்தார். குருநாதனாகிய முருகக்கடவுள் சிவபிரான் இருந்த இடத்திற்குத் தெற்குப் பக்கத்தில் வந்து அமர்ந்து தந்தையாகிய சிவபிரானுக்குப் பிரணவ மறைப்பொருளை முறையோடு உரைத்தருளினார்.

தனக்குத் தானே மகனும் குருவும் மாணவனும் ஆகிய சிவபிரான், ஓங்கார வடிவினனாகிய முருகக் கடவுளின் அறிவுரையைக் கேட்ட அளவில் பெருமுழக்கஞ் செய்து நகைத்துக் கூத்தாடினார். சிவபெருமான் அவ்வாறு பெருமுழக்கம் செய்து இன்பக் கூத்தாடியபடியால் அவ்விடம் "வீராட்டகாசம்" என்று பெயர் பெற்றது. பிரணவப் பொருளைக் கூறியபடியால் தணிகை என்னும் திருத்தலமானது, "பிரணவ அருத்த நகர்" என்னும் பெயரையும் பெற்றது. திருத்தணிகையில் ஒரு கணப்பொழுது தவம் முதலிய நல்வினைகளைச் செய்பவர்கள் பெறுதற்கரும் பயனை அடைவார்கள்.


“அருள்உரு ஆகும் ஈசன்  அயற்கு இது புகன்ற பின்னர்,

முருகவேள் முகத்தை நோக்கி  முறுவல் செய்து, அருளை நல்கி,

"வருதியால் ஐய" என்று  மலர்க்கை உய்த்து, அவனைப் பற்றித் 

திருமணிக் குறங்கின் மீது  சிறந்து வீற்றிருப்பச் செய்தான்.”


“காமரு குமரன் சென்னி  கதும்என உயிர்த்துச் செக்கர்த்

தாமரை புரையும் கையால்  தழுவியே, "அயனும் தேற்றா 

ஓம்என உரைக்கும் சொல்லின்  உறுபொருள் உனக்குப் போமோ?

போம் எனில், அதனை இன்னே  புகல்" என இறைவன் சொற்றான்.”


"முற்றுஒருங்கு உணரும் ஆதி  முதல்வ! கேள், உலகமெல்லாம்

பெற்றிடும் அவட்கு நீமுன்  பிறர் உணராத ஆற்றால்

சொற்றது ஓர்இனைய மூலத் தொல் பொருள் யாரும் கேட்ப

இற்றென இயம்பலாமோ,  மறையினால் இசைப்பது அல்லால்".


“என்றலும், நகைத்து, "மைந்த!  எமக்குஅருள் மறையின் என்னா,

தன்திருச் செவியை நல்க,  சண்முகன் குடிலை என்னும்

ஒன்றொரு பதத்தின் உண்மை  உரைத்தனன், உரைத்தல் கேளா

நன்றருள் புரிந்தான்" என்ப  ஞான நாயகனாம் அண்ணல்.”


எனவரும் கந்தபுராணப் பாடல்களைக் காண்க.


"முக்கண் பரமற்குச் சுருதியின் முற்பட்டது கற்பித்து" என வரும் அருணகிரிநாதர் வாக்கையும் காண்க. இதனால் முருகன் சுவாமிநாதன் எனப் பெற்றார்.


“நாத போற்றி என, முது தாதை கேட்க, அநுபவ

 ஞான வார்த்தை அருளிய பெருமாளே.      --- (ஆலமேற்ற) திருப்புகழ்.


“நாதா குமரா நம என்று அரனார்

 ஓதாய் என ஓதியது எப் பொருள்தான்”   --- கந்தர்அநுபூதி 


“மறிமான் உகந்த இறையோன் மகிழ்ந்து வழிபாடு

தந்த மதியாளா....” --- (விறல்மாரன்) திருப்புகழ்.


பிரணவப் பொருள் வாய்விட்டுச் சொல்ல ஒண்ணாதது. ஆதலால் ஐம்முகச் சிவனார் கல்லாலின் கீழ் நால்வருக்கும் தமது செங்கரத்தால் சின் முத்திரையைக் காட்டி உபதேசித்தார். ஆனால், அறுமுகச் சிவனார் அவ்வாறு சின் முத்திரையைக் காட்டி உணர்த்தியதோடு, வாய்விட்டும் இனிது கூறி உபதேசித்தருளினார்.


“அரவு புனிதரும் வழிபட

மழலை மொழிகொடு தெளிதர ஒளிதிகழ்

அறிவை அறிவது பொருளென அருளிய பெருமாளே.”  --- (குமரகுருபரகுணதர) திருப்புகழ்.


"சுசி மாணவ பாவம்" என்பது பாம்பன் சுவாமிகள் பாடியருளிய அட்டாட்ட விக்கிரக லீலைகளில் ஒன்று. மூவராலும் அறிய ஒண்ணாத ஆனந்த மூர்த்தியாகிய சிவபரம்பொருள், மாணவ பாவத்தை உணர்த்தி, உலகத்தை உய்விக்கும் பருட்டும், தனக்குத்தானே மகனாகி, தனக்குத் தானே உபதேசித்துக் கொண்ட ஒரு அருள் நாடகம் இது. உண்மையிலே சிவபெருமான் உணர, முருகப் பெருமான் உபதேசித்தார் என்று எண்ணுதல் கூடாது என்பதைப் பின்வரும் தணிகைப் புராணப் பாடல் இனிது விளக்கும்.


“தனக்குத் தானே மகனாகிய தத்துவன்,

தனக்குத் தானே ஒரு தாவரு குருவுமாய்,

தனக்குத் தானே அருள் தத்துவம் கேட்டலும்,

தனக்குத் தான் நிகரினான், தழங்கி நின்றாடினான்.”   ---  தணிகைப் புராணம்.


“மின் இடை, செம் துவர் வாய், கரும் கண், 

வெள் நகை, பண் அமர் மென் மொழியீர்!

என்னுடை ஆர் அமுது, எங்கள் அப்பன், 

எம்பெருமான், இமவான் மகட்குத்

தன்னுடைக் கேள்வன், மகன், தகப்பன், 

தமையன், எம் ஐயன தாள்கள் பாடி,

பொன்னுடைப் பூண் முலை மங்கை நல்லீர்! 

பொன் திருச் சுண்ணம் இடித்தும், நாமே!”

என்னும் திருவாசகப் பாடலாலும்,  சிவபெருமான் தனக்குத் தானே மகன் ஆகி, உபதேசம் பெறும் முறைமையை உலகோர்க்கு விளக்கியதாகக் கொள்ளலாம்.

அறிவு நோக்கத்தால் காரியபபடுவது சிவதத்துவம். பின் ஆற்றல் நோக்கத்தால் காரியப்படுவது சத்தி தத்துவம். இறைவன் சிவமும் சத்தியுமாய் நின்று உயிர்களுக்குத் தனுகரண புவன போகங்களைக் கூட்டுவிக்கிறான். ஆதலின், ‘இமவான் மகட்குக் கேள்வன்’ என்றார். அவ்வாறு கூட்டும்போது முதன்முதலில் சுத்தமாயையினின்றும், முறையே சிவம், சத்தி, சதாசிவம், மகேசுவரம், சுத்த வித்தை ஆகிய தத்துவங்கள் தோன்றுகின்றன. சத்தியினின்றும் சதாசிவம் தோன்றலால், சத்திக்குச் சிவன் மகன் என்றும், சத்தி சிவத்தினின்றும் தோன்றலால் தகப்பன் என்றும், சிவமும் சத்தியும் சுத்த மாயையினின்றும் தோன்றுவன என்னும் முறை பற்றித் தமையன் என்றும் கூறினார். இங்குக் கூறப்பட்ட சிவம் தடத்த சிவமேயன்றிச் சொரூப சிவம் அல்ல.


திருக்கோவையாரிலும்,


“தவளத்த நீறு அணியும் தடம் தோள் அண்ணல் தன் ஒருபால்

அவள் அத்தனாம், மகனாம், தில்லையான் அன்று உரித்ததுஅன்ன

கவளத்த யானை கடிந்தார் கரத்த கண் ஆர்தழையும்

துவளத் தகுவனவோ சுரும்பு ஆர்குழல் தூமொழியே.”


என வருவதும் அறிக. `சிவ தத்துவத்தினின்றும் சத்தி தத்துவம் தோன்றலின் அவள் அத்தனாம் என்றும், சத்தி தத்துவத்தினின்றும் சதாசிவ தத்துவம் தோன்றலின் மகனாம் என்றும் கூறினார்.


“வாயும் மனமும் கடந்த மனோன்மனி

பேயும் கணமும் பெரிது உடைப் பெண்பிள்ளை

ஆயும் அறிவும் கடந்த அரனுக்குத்

தாயும் மகளும் நல் தாரமும் ஆமே.” --- திருமந்திரம்.


“கனகம் ஆர் கவின்செய் மன்றில்

அனக நாடகற்கு, எம் அன்னை

மனைவி தாய் தங்கை மகள்....” --- குமரகுருபரர்.


“பூத்தவளே புவனம் பதினான்கையும், பூத்தவண்ணம்

காத்தவளே, பின் கரந்தவளே, கறைக் கண்டனுக்கு

மூத்தவளே, என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே,

மாத்தவளே உன்னை அன்றி மற்று ஓர் தெய்வம் வந்திப்பதே.”  --- அபிராமி அந்தாதி.


“தவளே இவள் எங்கள் சங்கரனார் மனை மங்கலமாம்,

அவளே அவர் தமக்கு அன்னையும் ஆயினள், ஆகையினால்

இவளே கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியும் ஆம்,

துவளேன் இனி, ஒரு தெய்வம் உண்டாக மெய்த்தொண்டு செய்தே.” --- அபிராமி அந்தாதி.


“சிவம்சத்தி தன்னை ஈன்றும், சத்திதான் சிவத்தை ஈன்றும்,

உவந்து இருவரும் புணர்ந்து, இங்கு உலகுஉயிர் எல்லாம்ஈன்றும்

பவன் பிரமசாரி ஆகும், பால்மொழி கன்னி ஆகும்,

தவம் தரு ஞானத்தோர்க்கு இத் தன்மைதான் தெரியும் அன்றே.”  --- சிவஞான சித்தியார்.


கற்ப தத்தைக்கு உருகி --- 

கற்பம் – தேவலோகத்தில் உள்ள ஐந்து மரங்களில் ஒன்றாகிய கற்பக மரத்தைக் குறிக்கும்.

தத்தை – கிளி. பெண்களைக் கொடி என்றும் கிளி என்றும் கூறுவது பாவலர் மரபு. 

தேவலோகத்தில் வளர்ந்த கிளியாகிய தெய்வயானை அம்மையாரை முருகப் பெருமான் திமணம் புணர்ந்து அவரது அன்புக்கு உளம் உருகினார்.


குறவர் கற்பினுக்கு உற்று புணர் பெருமாளே ---

குறமகள் ஆகிய வள்ளிநாயகியைத் தேடிச் சென்று அவரை ஆட்கொண்டு திருமணம் புணர்ந்தவர் முருகப் பெருமான்.


ஒட்டில் பட்டக் குருகு சத்து விட்டப்படி --- 

ஒட்டு --- பறவையைப் பிடிக்கும் கண்ணி.

குருகு – பறவை.

சத்து – வலிமை.

கண்ணியில் சிக்கிய பறவையானது தனது ஆற்றலை இழந்துவிடும்.


தத்துவத்துச் செயலொடு பொல் அடியேனும் சச்சில் உற்று --- 

பொல் – போல் என்பது பொல் என்று வந்த்தாகக் கொள்ளலாம். பொல்லாதவன் என்றும் கொள்ளலாம்.

சச்சில், சச்சு – சிறுமை, பதர். (சரசுவதி என்னும் அருமையான பெயரை, சச்சு என்று அழைப்பது எவ்வளவு கேவலம் என்று இதன் மூலம் தெரியவரும்.)

உயிரானது உண்மை அறிவைப் பெறுவதற்குத் துணை புரிபவை தத்துவங்கள். அவற்றின் மூலம் அறிவைப் பெற்று, அவற்றைக்ங கடந்து மேல் ஏறிச் சென்று உண்மை ஞானத்தைப்பெற முயலுதல் வேண்டும். ஒரு வகுப்பிலே சிலகாலம் பயின்று மேல்வகுப்புக்குச் செல்வதுபோல இது.  “தத்துவம் அனைத்தும் தனித்தனி கடந்தேம்” என்பார் வள்ளற்பெருமான். தத்துவங்களைக் கடந்து சென்று சிவத்தை அடைதல் வேண்டும். இறைநிலையை அடையவதற்குப் படிநிலைகளாக அமைந்தவை இவை. “பேணு தத்துவங்கள் என்னும் பெருகு சோபானம் ஏறி, ஆணையாம் சிவத்தைச் சார” என்பார் தெய்வச்சேக்கிழார் பெருமான். (சோபானம் – படி)


படியில் விட்டுவிட்டுக் குளறி சத்துவத்தைப் பிரிய விடும் வேளை --- 

படி – உலகம். உலகவாழ்வில் தடுமாற்றத்தை அடைதல் கூடாது.

சத்துவம் – உண்மைப்பொருள். மெய்ப்பொருள். பொருள் அல்லவற்றைப் பொருள் என்று உணரும் மருள் நிலையில், மெய்ப்பொருள் தோன்றாது.


சுத்த முத்தப் பதவி பெற்ற நல் பத்தரொடு தொக்கு --- 

ஆணவத்தால் அறியாமை அடைந்த உயிர் அந்தக்கரணங்களுடன் சேர்ந்து செயல்படும்போது பலவித நிலைகளை அடையும். அவ்வாறு அடையும் நிலைக்கு அவத்தை என்று பெயர்.

அவத்தை 1. காரணாவத்தை, 2. காரியாவத்தை என இருவகைப்படும்.

காரணாவத்தை 1. கேவல நிலை, 2. சகல நிலை, 3. சுத்த நிலை என மூவகைப்படும்.

கேவலம் – தனிமை. உயிர் ஆணவத்தோடு மட்டும் கூடித் தனிமையில் கிடக்கின்றதால் கேவல நிலை எனப் பெற்றது. அறிவுப் பொருளாகிய உயிர், அறிவே சிறிதும் இல்லாமல் தன்னையும் உணராமல் கிடக்கும். ஆணவ மலத்தில் மூழ்கிக் கிடப்பதால் கேவல நிலை எனப் பெற்றது.

ஆணவ இருளில் மூழ்கிக் கேவல நிலையில் கிடந்த உயிர்க்கு இரங்கி இறைவன் மாயையிலிருந்து உடல், கருவி, உலகம், நுகர்பொருள் ஆகியவற்றைப் படைத்துக் கொடுப்பான். இவற்றைத் தனு, கரணம், புவனம், போகம் எனக் கூறுவர். இவற்றின் துணையால் ஆணவமல மறைப்புச் சிறிதே நீங்கப் பெற்று அறிவும் செயலும் ஓரளவு விளங்கி உலக வாழ்வில் உயிர் செயல்படும். உலக வாழ்வில் முன்செய்த வினைகளுக்கேற்ப இன்ப, துன்பங்களை அனுபவித்தும் நல்வினை, தீவினைகளைச் செய்தும் மாறி மாறி இறந்தும், பிறந்தும் உயிர் சுழன்று கொண்டே இருக்கும். இந்நிலைக்குச் சகல நிலை என்று பெயர்.

உயிர் கேவலம், சகலம் ஆகிய இரண்டையும் நீங்கி இறைவனைச் சார்ந்து பேரின்பத்தை அனுபவிக்கும் நிலை சுத்தம் எனப் பெறும். கேவலம் இருள்நிலை; இரவு போன்றது. சகலம் மருள்நிலை; பகல் போன்றது. சுத்தம் தெருள்நிலை; இரவு பகலற்ற நிலை எனப்படும்.


     “இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி

      மாசறு காட்சி யவர்க்கு”        --- திருக்குறள்.


இருள் – கேவலம், மருள் – சகலம், இரண்டு நீங்கிய மாசறு காட்சியர்க்கு இன்பம் பயத்தல் – சுத்தம். இம்மூன்று அவத்தைகளும் பல பிறப்புக்களில் நடைபெறுவனவாகும்.

அவ்வாறு சுத்த நிலையை அடைந்த ஆன்மா பாசங்களில் இருந்து விடுபட்டு இருக்கும் நிலை முத்திநிலை எனப்படும்.  "முத்தி" என்றால் விடுபடுதல், வெளிப்படுதல் என்று பொருள். பாசங்களில் இருந்து விடுபடுவது "முத்தி". எனவே, "முத்தி" என்பதன் பொருள் "பாசநீக்கம்" ஆகும். உடலோடு வாழ்ந்துகொண்டு இருக்கும்போதே, பாசநீக்கம் பெற்றோர் “சீவன்முத்தர்” எனப்படுவர். அப்படி சிவன்முத்தப் பதவியைப் பெற்று உள்ள சிறந்த அடியார்களோடு கூடி ஒருவன் இருந்தால், அவனும் அந்த நிலையை அடைவான் என்பதால் அடியார்களோடு கூட்டி வைக்கத் திருவருள் துணை புரியவேண்டும்.


கடையன் மிடி தீர --- 

மிடி – வறுமை. இங்குப் பொருள் வறுமையைக் குறிக்காது. அருள் வறுமையைக் குறிக்கும்.


துப்பு முத்துச் சரண பச்சை வெற்றிப் புரவி சுற்ற விட்டுக் கடுகி வரவேணும் --- 

துப்பு – பவளம்.

சரணம் – மயில்தோகை. 

பச்சை – பச்சைமயில்.

வெற்றிப் புரவி – வேகமாகச் செல்லும் குதிரை. வேகமாகச் செல்லுவது குதிரை என்பதை நாம் அறிவோம். முருகப் பெருமான் ஏறிவரும் மயிலின் வேகத்தை நம்மால் அறியமுடியாது. எனவே, அறிந்த ஒன்றைக் காட்டி, அறியாத ஒன்றை விளக்கினார் சுவாமிகள்.

அருள் புரிதற்கு விரைந்து வருதல் வேண்டும் என்பதைக் குறிக்க, வேகமாகச் செல்லும் மயிலின் மீது வந்து அருள வேண்டும் என்றார்.


கருத்துரை

முருகா! அடியாரோடு கூட்டி அருள் புரிவாய்.







பொது --- 1120. மைச்சுனமார் மாமனைச்சி

அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

மைச்சுனமார் மாமனைச்சி (பொது)


முருகா! 

உடலை விட்டு உயிர் பிரியும் முன்னர், 

தேவரீரை உள்ளம் உருகி வழிபட்டு உய்ய அருள்வாய்.


தத்ததனா தான தத்ததனா தான

     தத்ததனா தான ...... தனதான


மைச்சுனமார் மாம னைச்சியுமா தாவு

     மக்களுமா றாத ...... துயர்கூர


மட்டிலதோர் தீயி லிக்குடில்தான் வேவ

     வைத்தவர்தா மேக ...... மதிமாய


நிச்சயமாய் நாளு மிட்டொருதூ தேவு

     நெட்டளவாம் வாதை ...... யணுகாமுன்


நெக்குருகா ஞான முற்றுனதா ளோதி

     நித்தலும்வாழ் மாறு ...... தருவாயே


நச்சணைமேல் வாழு மச்சுதனால் வேத

     னற்றவர்தா நாட ...... விடையேறி


நற்புதல்வா சூரர் பட்டிடவே லேவு

     நற்றுணைவா ஞால ...... மிகவாழப்


பச்செனுநீள் தோகை மெய்ப்பரியூர் பாக

     பத்தியதா மாறு ...... முகநாளும்


பக்ஷமுமே லாய்ஷ டக்ஷரசூழ் பாத

     பத்திசெய்வா னாடர் ...... பெருமாளே.


                     பதம் பிரித்தல்


மைச்சுனமார், மா மனைச்சியும், மாதாவும்,

     மக்களும் மாறாத ...... துயர்கூர,


மட்டு இலது ஓர் தீயில் இக் குடில்தான் வேவ

     வைத்தவர் தாம் ஏக, ...... மதிமாய,


நிச்சயமாய் நாளும் இட்டு, ஒரு தூது ஏவும்

     நெட்டு அளவாம் வாதை ...... அணுகாமுன்,


நெக்கு உருகா ஞானம் உற்று, உன தாள் ஓதி,

     நித்தலும் வாழ்மாறு ...... தருவாயே.


நச்சு அணை மேல் வாழும் அச்சுதன் நால் வேதன்,

     நல் தவர் தாம் நாட, ...... விடை ஏறி


நல் புதல்வா! சூரர் பட்டிட வேல் ஏவு

     நல் துணைவா! ஞாலம் ...... மிகவாழ,


பச்சு எனும் நீள் தோகை மெய்ப் பரி ஊர் பாக!

     பத்தி அது ஆம் ஆறு ...... முக! நாளும்


பக்ஷமும் மேலாய் ஷடக்ஷர! சூழ் பாத!

     பத்தி செய் வான் நாடர் ...... பெருமாளே.


பதவுரை


நச்சு அணை மேல் வாழும் அச்சுதன் நால் வேதன் நல் தவர் நாட விடை ஏறி நல் புதல்வா --- விடம் கொண்ட பாம்பணையின் மேல் துயில் கொள்ளும் திருமால், நான்கு வேதங்களிலும் சிறந்த பிரமன், நல்ல தவசிகள் ஆகியோர்கள் தேடி நிற்க, இடப வாகனத்தில் ஏறி விளங்கும் சிவபெருமானுடைய அருட்புதல்வரே!


சூரர் பட்டிட வேல் ஏவு நல் துணைவா --- சூரர்கள் அழியும்படி வேலை விடுத்து அருளிய நல்ல துணைவரே!


ஞாலம் மிக வாழப் பச்செனும் நீள் தோகை மெய்ப்பரி ஊர் பாக --- உலக உயிர்கள் சிறப்பாக வாழும்படி, பச்சை நிறமுள்ளதும், நீண்ட தோகையினை உடையதும் ஆகிய மயிலாகிய குதிரையாகிய மயிலைச் செலுத்தும் பாகரே!!


பத்தியது ஆம் ஆறு முக --- வரிசையாக அமைந்துள்ள ஆறுதிருமுகங்களை உடையவரே!


நாளும் பக்ஷமும் மேலாய் --- நாள்தோறும் உயிர்களிடத்து அன்புவைத்து அருள் புரிபவரே!


 ஷடாக்ஷர --- ஆறு எழுத்துக்கு உரியவரே!


சூழ் பாத பத்தி செய் வான் நாடர் பெருமாளே --- வான நாடர்கள் திருவடியை வலம் வந்து பத்தி செய்கின்ற பெருமையில் மிக்கவரே!


மைச்சுனமார் மாமனைச்சியு(ம்) மாதாவு(ம்) மக்களும் மாறாத துயர் கூர --- மைத்துனன்மார்களும், சிறந்த மனைவியும், தாயும், மக்களும் நீங்காத துயரத்தை அடைந்து,


மட்டு இலது ஓர் தீயில் இக் குடில் தான் வேவ வைத்தவர் தாம் ஏக --- குறைவில்லாமல் நன்கு எரியும் நெருப்பில் இந்த உடம்பை வேகும்படி வைத்துவிட்டு, அவரவர்களின் இருப்பிடம் செல்லுமாறு,


மதி மாய --- அடியேனது அறிவானது கலக்கம் அடைந்து இருக்க 


நிச்சயமாய் நாளும் இட்டு --- உறுதியாக ஒரு நாளை நிர்ணயித்து,


ஒரு தூது ஏவு(ம்) --- (அந்த நாளில் அடியேனது உயிரைக் கொண்டு செல்ல) எமன் தனது தூதர்களை ஏவுவான்,


நெட்டு அளவாம் வாதை அணுகா முன் --- (அந்த வேளையில்) நெடிய வேதனையானது அடியேனை அணுகுவதற்கு முன்பாகவே,


நெக்கு உருகா --- உள்ளம் நெக்கு உருகி (தேவரீருடைய திருவடிகளை வழிபட்டு)


ஞானம் உற்று --- ஞான நிலையினை அடைந்து,


உன தாள் ஓதி நித்தலும் வாழ்மாறு தருவாயே --- தேவரீருடைய திருவடியை நாள்தோறும் ஓதி வழிபட்டு வாழுமாறு திருவருள் புரிவாயாக.


பொழிப்புரை

    விடம் கொண்ட பாம்பணையில் துயில் கொள்ளும் திருமால், நான்கு வேதங்களிலும் சிறந்த பிரமன், நல்ல தவசிகள் ஆகியோர்கள் தேடி நிற்க, இடப வாகனத்தில் ஏறி விளங்கும் சிவபெருமானுடைய அருட்புதல்வரே!

    சூரர்கள் அழியும்படி வேலை விடுத்து அருளிய நல்ல துணைவரே!

    உலக உயிர்கள் சிறப்பாக வாழும்படி, பச்சை நிறமுள்ளதும், நீண்ட தோகையினை உடையதும் ஆகிய மயிலாகிய குதிரையாகிய மயிலைச் செலுத்தும் பாகரே!

    வரிசையாக அமைந்துள்ள ஆறுதிருமுகங்களை உடையவரே!

    நாள்தோறும் உயிர்களிடத்து அன்புவைத்து அருள் புரியும் மேலோனே!

     ஆறு எழுத்துக்கு உரியவரே!

    வான நாடர்கள் திருவடியை வலம் வந்து பத்தி செய்கின்ற பெருமையில் மிக்கவரே!

    மைத்துனன்மார்களும், சிறந்த மனைவியும், தாயும், மக்களும் நீங்காத துயரத்தை அடைந்து, குறைவில்லாமல் நன்கு எரியும் நெருப்பில் இந்த உடம்பை வேகும்படி வைத்துவிட்டு, அவரவர்களின் இருப்பிடம் செல்லுமாறு, அடியேனது அறிவானது கலக்கம் அடைந்து இருக்க. உறுதியாக ஒரு நாளை நிர்ணயித்து, அந்த நாளில் அடியேனது உயிரைக் கொண்டு செல்ல) எமன் தனது தூதர்களை ஏவுவான். அந்த வேளையில் நெடிய வேதனையானது அடியேனை பற்றிக் கொள்ளும். அதற்கு முன்பாகவே, உள்ளம் நெக்கு உருகி தேவரீருடைய திருவடிகளை வழிபட்டு ஞான நிலையினை அடைந்து, தேவரீருடைய திருவடியை நாள்தோறும் ஓதி வழிபட்டு வாழுமாறு திருவருள் புரிவாயாக.


விரிவுரை


பச்செனும் நீள் தோகை மெய்ப்பரி ஊர் பாக --- 

மெய்ப்பரி – பரி – குதிரை. இங்கே வெகமாக முருகப் பெருமான் செலுத்துகின்ற மயிலைக் குறிக்கும்.

பாக – பாகரே.


பத்தியது ஆம் ஆறுமுக --- 

பத்தி – வரிசை, அழகு.

“பத்தித் திருமுகம் ஆறுடன் பன்னிரு தோள்களுமாய்த் தித்தித்து இருக்கும் அமுது கண்டேன்” என்று கந்தர் அலங்காரத்தில் பாடி உள்ளார் அடிகளார்.


நாளும் பக்ஷமும் மேலாய் --- 

பட்சம் – அன்பு. பட்சம் என்னும் தமிழ்ச் ச=சொல் வடமொழியில் “பக்ஷம்” என வழங்கப்படும்.


மைச்சுனமார் மாமனைச்சியு(ம்) மாதாவு(ம்) மக்களும் மாறாத துயர் கூர....

மைத்துனர்கள் என்னும் சொல், “மைச்சுனமார்” என வந்தது.

மா – பெருமை, அழகு. மாமனைவி – அழகும் பெருமையும் மிக்க மனைவி.


மதி மாய --- 

உயிர் பிரிகின்ற நேரத்தில் மாளாத துயரத்தால் மனைவி, மக்கள், உற்றார், உறவினர் முதலியோர் அழுது புலம்புவர். அந்த நேரத்தில் நமது அறிவு கலங்கி நிற்கும்.  “புலன் ஐந்து பொறி கலங்கி, நெறி மயங்கி, அறிவு அழிந்திட்டு.... அலமந்த போதாக" என்பார் திருஞானசம்பந்தப் பெருமான்.


நிச்சயமாய் நாளும் இட்டு --- 

“தோற்றம் உண்டேல் மரணம் உண்டு” என்பது சுந்தரர் தேவாரம்.

கரு உண்டான நாளிலேயே, உயிரின் வாழ்நாளானது வரையறுக்கப்பட்டு விடும். வினைப் போகம் உள்ளவரையில் உடம்பு இருக்கும். அது முடிந்தால், உடம்பில் உயிரானது தினைப்போது அளவும் நில்லாது. இன்ன நாளில் இன்னவகையில் உயிர் போகும் என்பது நிச்சயிக்கப்பட்ட ஒன்று.


ஒரு தூது ஏவு(ம்) ---

வாழ்நாள் முடிவில் உடம்பில் இருந்து உயிரைப் பிரித்துக் கொண்டு செல்லத் தனது தூதர்களை எமன் அனுப்புவான். 


நெட்டு அளவாம் வாதை அணுகா முன் --- 

மரணம் சம்பவிக்கும் காலத்தில் நெடிய வேதனையை உயிரானது அனுபவிக்கும். ஐம்புலன்களும் தமதுசெயலை இழ்ந்த நிலையில் தான் படும் வேதனையைச் சொல்லவும் முடியாது. சொல்ல முடியாத நிலையே மேலும் வேதனையை மிகுக்கும்.  உடம்பு எடுத்த அத்தனை பேருக்கும் உரியது இது. அந்த நேரத்தில் இறைவன் திருநாமத்தைச் சொல்லவும் வாய்வராது. நினைக்கவும் மனம் இராது.


நெக்கு உருகா, ஞானம் உற்று, உன தாள் ஓதி நித்தலும் வாழ்மாறு தருவாயே --- 

வாழுமாறு என்னும் சொல் வாழ்மாறு என வந்தது.

அரிய பெரிய தவங்களைச் செய்தும், அட்டாங்க யோகத்தைப் பயின்றுமே இறைவன் திருவடியை அடையலாம் என்பது ஒரு கடின வழி. ஆனால், மிக எளிமையாக பத்திமார்க்கத்தில் நின்றே இறைவன் திருவடியை அடையலாம். இறைவன் திருவடி ஞானத்தைப் பெறச் சிறந்த உள்ளம் உருகி வழிபடுதலே ஆகும் என்பதைப் பின்வரும் பிரமாணங்களால் அறிக.

“வீடும் ஞானமும் வேண்டுதி ரேல்விர தங்களால்

வாடில் ஞானம்என் ஆவதும், எந்தைவ லஞ்சுழி

நாடி ஞானசம் பந்தன செந்தமிழ் கொண்டுஇசை

பாடும் ஞானம்வல் லார்அடி சேர்வது ஞானமே.”        --திருஞானசம்பந்தர்.

இதன் பொருள் –

    வீடும் அதற்கு ஏதுவாய ஞானமும் பெறவிரும்பு வீராயின், விரதங்களை மேற்கொண்டு உடல் வாடுவதனால் ஞானம் வந்துறுமோ? திருவலஞ்சுழியை அடைந்து ஞானசம்பந்தர் ஓதியருளிய செந்தமிழை இசையோடு பாடும் ஞானம் வாய்க்கப் பெற்றவர்களின் திருவடிகளை வழிபடுவதொன்றே ஞானத்தைத் தருவதாகும்.

கடுமையான தவத்தைப் புரிந்தவர்க்கும் காணமுடியாத பரம்பொருள் எளிதாக வந்து தம்மை ஆட்கொண்ட தன்மையை நினைந்து உருகி, மணிவாசகப் பெருமான், தமக்கு உண்டான அருள் அனுபவத்தைப் பாடி மகிழ்கிறார்.

"வான்வந்த தேவர்களும் மால்அயனோடு இந்திரனும் 

கான்நின்று வற்றியும் புற்றுஎழுந்தும் காண்பரிய 

தான்வந்து நாயேனத் தாய்போல் தலையளித்திட்டு, 

ஊன்வந்து உரோமங்கள் உள்ளே உயிர்ப்பெய்து, 

தேன்வந்து அமுதின் தெளிவின் ஒளிவந்த 

வான்வந்த வார்கழலே பாடுதும்காண் அம்மானாய்" --திருவாசகம்.

இதன் பொருள் ---

    வானுலகத்தில் உள்ள தேவர்களும் திருமாலும் பிரமனும் இந்திரனும் காட்டில் பலகாலம் நின்று உணவில்லாமல் உடம்பு வற்றியும், சுற்றிலும் புற்று எழுந்து நிற்கத் தவம் செய்தும் காண்பதற்கு அரிய இறைவன், அடியேன் இருக்கும் இடத்துக்கு வந்து, நாய் போல இழிந்த அடியேனைத் தாயைப் போலச் சிறந்த அன்பு காட்டி, என் உடம்புக்குள் புகுந்து, என் மயிர்க்கால்களுக்கு உள்ளே உயிரைப் புகுத்தி அவை புளகம் போர்க்கச் செய்து, தேனின் சுவை வரவும், தெளிந்த அமுதத்தின் சுவையும் ஒளியும் வரவும் செய்த, தம்மைப் போற்றினவர்களுக்கு இன்பம் வரும்படி செய்யும் பெருமையை உடைய நீண்ட திருவடியை, அம்மானை ஆடும் பெண்ணே, நாம் பாடுவோமாக!".


"ஊன் வாட உண்ணாது, உயிர் காவல் இட்டு

      உடலில் பிரியாப் புலன் ஐந்தும் நொந்து,

தாம் வாட வாடத் தவம் செய்ய வேண்டா;

      தமதா இமையோர் உலகு ஆளகிற்பீர்!

கான் ஆட மஞ்ஞைக் கணம் ஆட மாடே

      கயல் ஆடு கால் நீர்ப் பழனம் புடைபோய்த்

தேன் ஆட மாடக் கொடி ஆடு தில்லைத்

      திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே! 

என்று பாடுகிறார் திருமங்கை ஆழ்வார். உடலை வருத்தித் தவம் செய்யவேண்டாம். தில்லைச் சித்திரகூடத்தைச் சென்று வழிபடுங்கள், இமையோர் உலகை ஆளலாம் என்கின்றார் ஆழ்வார்.   

யோகம் என்பது ஞானத்தை அடைவதற்கு உரிய படிநிலைகளில் ஒன்றுதான். சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற படிகளில் மூன்றாவது படியாக இருப்பது யோகம். யோகத்தின் முடிவில் ஞானம் வர வேண்டும். யோகத்தினால் உடம்பில் உண்டாகிற தடை முறியுமே ஒழிய, இறைவன் திருவருள் நேராகக் கைகூடாது. அந்த மூன்றாவது படியிலேயே அத்தகைய துன்பம் என்றால், அதற்குமேல் ஞானத்தை எப்படி அடைய முடியும்?  யோகத்தை மாத்திரம் நம்பிக் கொண்டு வாழ்ந்தால் உடம்புக்கும் உள்ளதிற்கும் கேடு. ஒரளவு அதில் வெற்றி பெற்றுவிட்டாலோ அகந்தை தலைக்கேறி விடும். 

யோகமுயற்சியினால் மட்டுமே இறைவன் இருக்கும் இடத்திற்குப் போய் அவன் திருவடியைச் சார்ந்துவிடலாம் என்று எண்ணுகிறார்கள். காலில் பலமுடைய குழந்தைகளாக எண்ணி, இந்த வேலையை ஆரம்பித்து விடுகிறார்கள். காலில் திண்மை இல்லாவிட்டாலும், மனத்தில் திண்மை இல்லாவிட்டாலும் தடுக்கி விழ நேரும். அப்போது உயிருக்கே ஆபத்து நேர்ந்துவிடலாம். குழந்தை அழும் சத்தம் கேட்டவுடனே தாய், எத்தனை வேலை இருந்தாலும், தான் எந்த இடத்தில் இருந்தாலும், வேலைகளை எல்லாம் விட்டுவிட்டுக் குழந்தை உள்ள இடத்திற்கு ஓடிவந்து வாரி அணைத்துக் கொள்வாள். அப்படி இறைவன் தன்னை நினைந்து புலம்புகிற அடியவரைக் காப்பாற்ற நிச்சயம் வருவான். குழந்தையாகி நாம் அவனை நினைந்து அழுதால், நாம் இருக்கும் இடத்திற்கே அவனை வரவழைத்துவிடலாம். அது எளிய காரியம். 

மோட்ச வீட்டில் புகுவதற்காக மிகவும் அரிய காரியத்தைச் செய்கின்ற யோகிகளைப் பார்த்து, பத்திநெறியில் நின்றால் வீட்டில் புகுதல் மிக எளிது என்கிறார். பத்திநெறியில் நிற்கவேண்டுமானால், தவிர்க்க வேண்டியது ஒன்று மட்டுமே உண்டு. முத்திநெறி அறியாத மூர்க்கரோடு முயலக் கூடாது.

"முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனைப் 

பத்திநெறி அறிவித்து, பழவினைகள் பாறும் வண்ணம்,

சித்தபலம் அறுவித்து, சிவம் ஆக்கி, என்னை ஆண்ட

அத்தன் எனக்கு அருளியவாறு ஆர் பெறுவார் அச்சோவே"

என்று மணிவாசகப் பெருமான் பாடியருளியதை உள்ளத்தில் உறுதியாகப் பற்றிக் கொள்ளவேண்டும்.

காட்டிலே வாழ்ந்திருந்த குறத்தியாகிய வள்ளியம்மை, தான் வளர்ந்த குறவர் குலத்திற்கு ஏற்ற வகையில் முருகனை உள்ளத்தில் வைத்துப் பக்தி பண்ணினாள். அவள் இந்திரிய நிக்கிரகம் செய்ய வில்லை. தவம் செய்யவில்லை. குலத்திற்கு ஏற்ற முறையில் முருகனை நினைந்து மனத்திற்குள் அன்பை வளர்த்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு யோகம் தெரியாது. தவமுறைகளைத் தெரிந்த குலத்தில் அவள் வளரவில்லை. வேட்டுவ குலத்தைச் சார்ந்து,  புன்செய்த் தானியமாகிய தினை முதலியவற்றைக் காப்பாற்றுவதற்காகக் கிளிகளை ஒட்டிக் கொண்டிருந்தாள். தன் குலத்திற்குத் தனித் தெய்வமாக இருப்பவன் முருகன் என்பதை நன்றாக உணர்ந்தும் நம்பியும் இருந்தாள். முருகனை எவ்வாறு வழிபடுவது என்னும் முறை அவளுக்குத் தெரியாது. குழந்தை தன் தாயை நினைந்திருப்பது போல எல்லாக் காலத்தும் முருகனை நினைந்திருக்க அவளுக்குத் தெரியும். கருத்தை முருகனிடத்தில் வைத்தபடி, காட்டில் குறத்தியாகத் தினைக் கொல்லையைக் காவல் செய்து வந்தாள். இறைவன் திருவருளுக்குப் பாத்திரம் ஆவதற்கு என்ன என்ன பயிற்சி வேண்டுமென்று சொல்லப்பட்டு உள்ளதோ, அவற்றில் ஒன்றுகூட எம்பிராட்டி செய்யவில்லை. அவள் ஆசனம் பயிலவில்லை. ஆனால், தனது உள்ளத்தை இறைவன் இருக்கத் தகுந்த ஆசனமாக மாற்றி இருந்தாள். 

அந்த ஒன்றையே ஆதாரமாகக் கொண்டு முருகப்பெருமான் அவளைத் தேடிக் கொண்டு ஓடி வந்தான். தன்னை உள்ளத் தாமரையில் வைத்து உண்மையாக வழிபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுடைய நிலையைப் பாராமல் தானே வலிய வந்து ஆட்கொள்வான் முருகன் என்பதைக் காட்டுவதற்காகவே அந்தத் திருவிளையாடல் நிகழ்ந்தது. "மாசு இல் அடியார்கள் வாழ்கின்ற ஊர் சென்று தேடி விளையாடியே அங்ஙனே நின்று வாழும் மயில்வீரனே" என்று முருகனின் பெருங்கருணையைப் போற்றித் திருப்புகழ் பாடினார் அருணகிரிநாதர். 

"கனவிலும் தேவர்க்கு அரியாய் போற்றி,  நனவிலும் நாயேற்கு அருளினை போற்றி" என்றார் மணிவாசகப் பெருமான். தேவர்களுக்கு எல்லாம் அரியவன் ஆக இருக்கின்ற பெருமான், அடியவர்களை எளிவந்து இரங்கி ஆட்கொண்டு அருள்புரிகின்றான். பெருங்கருணை மிகுதியினால், அடியவர்களைத் தேடி வந்து ஆட்கொள்ளுகின்ற இறைவனை, அன்பு மிகுதியால் வழிபட்டு வந்தால், எளிதில் வீட்டின்பத்தைப் பெற்று விடலாம். 

வீடு என்பது எந்த வழியில் சென்றாலும் ஒன்றுதான். அதன் உள்ளே நுழைந்தவர்களுக்குள் வேறுபாடு இல்லை. அந்த வீட்டுக்குள் நுழைவதற்குப் பல கதவுகள் இருக்கின்றன. ஒவ்வொரு வாசலிலும் கதவு உண்டு. ஆனால் ஒவ்வொரு கதவுக்கும் நேரே ஒவ்வொரு வகையான பாதை இருக்கிறது. உண்மையில் மற்ற நெறிகளை எல்லாம்விடப் பக்திநெறி, செல்லும்போதே இன்பத்தைத் தருவது. முத்தி என்று தனியே ஒர் இன்பம் இருக்கிறதென்றும், பக்தி நெறியினாலே அடைவதற்கு உரியது அது என்றும் சிலர் சொல்வார்கள். ஆனால் பத்திநெறியில் சென்றவர்கள் அப்படிச் சொல்வது இல்லை. பக்தியே முத்தி இன்பம் ஆகிவிடும் என்பது அவர்கள் கொள்கை. "இறவாத இன்ப அன்பு" என்றார் சேக்கிழார். இவ்வளவு எளிதான வழி ஒன்று இருக்கும்போது, அரியவற்றுள் எல்லாம் அரிதான யோக நெறியில் சென்று மாட்டிக் கொண்டு வாடவேண்டாம் என்பதே அருணகிரிநாதருடைய கருத்து.


"காட்டில் குறத்தி பிரான் பதத்தே கருத்தைப் புகட்டின், 

வீட்டில் புகுதல் மிக எளிதே; விழி நாசி வைத்து 

மூட்டிக் கபால மூலாதார நேர்அண்ட மூச்சை உள்ளே 

ஒட்டிப் பிடித்து, எங்கும் ஓடாமல் சாதிக்கும் யோகிகளே".     --- கந்தர் அலங்காரம்.

இதன் பொருள் ---

கண் பார்வையை நாசியின் நுனியில் வைத்து, மூலக்கனலை மூள்வித்து, கபாலத்திற்கும் மூலாதாரத்திற்கும் நேரே பொருந்துமாறு சுவாசத்தை உள்ளிடத்தே உலாவுமாறு செய்து, அந்தப் பிராணவாயு வேறு எங்கும் ஓடிவிடாதபடி பிடித்து சாதிகம் செய்கின்ற யோகநெறியில் நின்றவர்களே! காட்டில் வாழுகின்ற வள்ளிநாயகியின் நலைவர் ஆகிய முருகப் பெருமானுடைய திருவடித் தாமரைகளில் உள்ளத்தைச் செலுத்தினால், முத்தி உலகில் செல்லுதல் மிகவும் எளிமையான காரியம் ஆகும்.


கருத்துரை


முருகா! உடலை விட்டு உயிர் பிரியும் முன்னர், தேவரீரை உள்ளம் உருகி வழிபட்டு உய்ய அருள்வாய்.









பாடல் 1

திருச்சிற்றம்பலம்

“ஓடுகின்ற நீர்மை ஒழிதலுமே உற்றாரும்

கோடுகின்றார், மூப்பும் குறுகிற்று, நாடுகின்ற

நல்லச்சிற் றம்பலமே நண்ணாமுன், நன்னெஞ்சே!

தில்லைச்சிற் றம்பலமே சேர்.”

திருச்சிற்றம்பலம்

இதன் பொருள் ---

ஓடுகின்ற நீர்மை ஒழிதலுமே உற்றாரும் கோடுகின்றார் – ஓடவும் நடக்கவும் இருந்த தன்மை (உடலில்) நீங்கியதுமே, இந்தப் பிறவியிலே அன்புடையவராய்ப் பொருந்தின மனைவி, மக்கள் சுற்றத்தார் முதலாயினார் முகமும் அகமும் திரிந்து வேறுபடுகின்றார்கள். மூப்பும் குறுகிற்று – கிழத் தன்மையும் வந்து சேர்ந்தது. நல் நெஞ்சமே – (ஆதலால்) எனது நல்ல மனமே! நாடுகின்ற நல் அச்சு இற்று அம்பலமே நண்ணாமுன் – மிகவும் விரும்பப்படுகின்றதும், வண்டியில் பாரத்தைத் தாங்குகின்ற நல்ல அச்சாணியைப் போல, உயிரானது இருந்து செயல்படுவதற்கு இடமான இந்த உடம்பு செயலற்று வீழ்ந்து இறந்து, யாவருக்கும் பொதுவான இடமாகிய சுடுகாட்டினை அடையும் முன்பாகவே, தில்லைச் சிற்றம்பலமே சேர் – திருச்சிற்றம்பலத்தில் அனவரதமும் ஆனந்தத் திருநடனம் பெருமான் எழுந்தருளி உள்ள தில்லை என்னும் திருத்தலத்தைச் சேர்வாயாக. 

ஓடுகின்ற நீர்மை – ஒடுகின்ற தன்மை. நடத்தலோடு ஓடுகின்ற தன்மையும் உள்ள உடம்பு நோயும் முதுமையும் வந்த காலத்துத் தளர்ந்து போகும். முதுமை வந்த பிறகு மூன்று கால் என்பது போல, தடி ஊன்றி நடக்க நேரிடும். பிறர் துணை இல்லாமல் இயங்கமுடியாது. மனைவி, மக்கள், உற்றார், உறவினர் யாவரும் நம்மை வெறுக்கத் தலைப்பட்டுவிட்டார் என்பது அவருடைய முகம் திரிந்த நிஙலையால் அறியலாம். அகம் திரியவே முகமும் திரிந்து விடும். எனவே, “ஓடுகின்ற நீர்மை ஒழிதலுமே உற்றாரும் கோடுகின்றார்” என்றார். உற்றாரும் என்று உம்மை கொடுத்திருப்பது, மனைவி மக்கள் முதலாயினாரையும் குறிக்கும்.


வண்டியானது இயங்குவதற்கு அச்சாணி என்கிற அச்சு அவசியம். அது போலவே, உயிர் இயங்குவதற்கு அச்சாக அமைந்துள்ளது இந்த உடம்பு. நோய், நொடி, முதுமை காரணமாக, விதிக்கப்பட்ட வாழ்நாள் முடிவில் இந்த உடம்பு இற்றுப் போகும். உயிர் பிரிந்த உடம்பை இடுகின்ற இடம் எல்லோருக்கும் பொதுவானது என்பதால் “அம்பலம்” என்றார்.


தில்லையைத் தரிசிக்க முத்தி என்பது பெரியோர் வாக்கு. தில்லையை அடைந்து, திருச்சிற்றம்பலத்தில் பெருமானை வணங்கப் பெறுவாயானால், அப்பெருமான் உன்னை இறப்பு பிறப்பு என்னும் இன்னல்களில் இருந்து நீக்கி, என்றும் இன்பம் பெருகும் நிலையில் வைத்து அருளுவார் என்பது அறிவுறுத்தப்பட்டது.


சைவர்களுக்குக் கோயில் என்று சொன்னால், அது தில்லையையே குறிக்கும். தில்லைக் கூத்தனைக் கண்ணாரக் கண்டு வணங்கும் பேறுபெற்ற பிறகுதான், தாம் எப்படிப்பட்ட அருமையான பிறவியை எடுத்து வந்துள்ளோம் என்று மகிழ்ந்தார் அப்பர் பெருமான். தில்லைக் கூத்தனை வழிபட்டு மகிழ்வதானால், இந்தப் பிறவி வேண்டத்தக்கதே என்று எண்ணி மகிழ்ந்து,

 

"குனித்த புருவமும், கொவ்வைச் செவ்வாயில் குமிண்சிரிப்பும்,

பனித்த சடையும், பவளம்போல் மேனியில் பால்வெண்ணீறும்,

இனித்தம் உடைய எடுத்த பொற்பாதமும் காணப்பெற்றால்,

மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே"

 

என்று அப்பர் பெருமான் பாடி, நமக்கு எல்லாம் ஒரு சிறந்த நல்வழியைக் காட்டி அருள் புரிந்தார். பொதுவாகவே, எல்லா அடியவர்களும் பிறவி வேண்டாம் என்றுதான் கூறிப் போந்தார்கள். ஆனால், அப்பர் பெருமான்,  இறைவனைக் கண்ணாரக் கண்டு வழிபடும் பேறு கிடைக்குமானால்,  இந்த மனிதப் பிறவியும் வேண்டத் தக்கதே என்றார்.

 

  இக் கருத்தை, "கோயில் புராணம்" வலியுறுத்துவதையும் பின்வரும் பாடல்களால் அறியலாம்..

 

“மண்ணில் இருவினைக்கு உடலாய்,

      வான் நிரயத்துக்கு உடலாய்,

எண்ணில் உடல் ஒழிய முயல்

      இருந் தவத்தால், எழில் தில்லைப்

புண்ணிய மன்றினில் ஆடும்

      போது செய்யா நடம் காண

நண்ணும் உடல் இது அன்றோ,

      நமக்கு உடலாய் நயந்த உடல்.

 

இதன் பொருள் ---

 

      மண்ணில் இருவினைக்கு உடலாய் - பூமியிலே புரியும் புண்ணிய பாவங்கள் ஆகிய இருவினைகளக்கு உடலாக வாய்த்தும், வான் நிரயத்துக்கு உடலாய் - சுவர்க்க நரகங்களிலே அனுபவிக்கின்ற, புண்ணியத்தின் பயனாகிய இன்பத்தையும், பாவத்தின் பயனாகிய துன்பத்தையும் அனுபவிக்கின்ற உடலாகவும்,  எண்ணில் உடல் ஒழிய - எடுத்து வந்த எண்ணில்லாத உடல்கள் (பிறவிகள்) ஒழியும்படியாக,  முயல்  இருந்தவத்தால் - இப்பிறவியில் முயல்கின்ற அரும்பெரும் தவத்தின் காரணமாக, எழில் தில்லைப் புண்ணிய மன்றினில்  ஆடும் - அழகு விளங்கும் தூய திருச்சிற்றம்பலத்தில் இயற்றுகின்ற, போது செய்யா நடம் காண - காலந்தோறும் ஒருதன்மைத்தாக அமைந்துள்ள திருக்கூத்தைக் கண்டு மகிழும்படியாக, நண்ணும் உடல் இது அன்றோ  நமக்கு உடலாய் நயந்த உடல் - வாய்த்த இந்த உடல் தானே நமக்கு விருப்பமாக அமைந்த உடல்.

 

      ஒரு தன்மைத்தாக அமைந்த திருக்கூத்து. இறைவன் ஆடுகின்ற திருக்கூத்து எப்போதும் ஒரு தன்மையை உடையதாகவே இருக்கும். அவரவர் பக்குவ நிலைக்கு ஏற்ப அது திருவருள் புரியும், விளக்கம் தரும். ஊன நிலையில் உள்ளவர்க்கு, ஊனத்தைப் போக்குகின்ற திருநடனம். ஊனம் நீங்கியவர்க்கு ஞானத்தை அருளுகின்ற திருநடனம். ஞானத்தைப் பெற்றோர்க்கு ஞானானந்தத்தை அருளுகின்ற திருநடனம். மெய்கண்ட சாத்திரங்களில் ஒன்றான "உண்மை விளக்கம்" என்னும் நூலில் இதன் விரிவைக் காணலாம்.

 

 

“மறந்தாலும் இனி இங்கு

      வாரோம் என்று அகல்வர் போல்

சிறந்து ஆர நடம் ஆடும்

      திருவாளன் திருவடி கண்டு,

இறந்தார்கள், பிறவாத

      இதில் என்ன பயன்? வந்து

பிறந்தாலும் இறவாத

      பேரின்பம் பெறலாம்ஆல்.”

 

இதன் பொருள் ---

 

      மறந்தாலும் இனி இங்கு வாரோம் என்று அகல்வர் போல் - இனி இந்தப் பூதலத்தில் மறந்தும் வந்து பிறக்கமாட்டோம் என்று இந்தப் பிறவியினை வெறுத்து ஒழித்துச் சென்றவர்களைப் போல, சிறந்து ஆர நடம் ஆடும் திருவாளன் திருவடி கண்டு - உயிர்களுக்குத் திருவருள் சிறக்கத் திருநடம் புரிகின்ற திருவாளன் ஆகிய பெருமானின் திருவடிகளைத் தரிசித்து, இறந்தார்கள் - இந்தப் பிறவியை நீத்து சிவபதத்தை அடைந்தவர்கள், பிறவாத இதில் என்ன பயன் - மீட்டு இங்கு வந்து வினைப் பிறவியைச் சாராத தன்மையினால் என்ன பயன் உண்டு? வந்து பிறந்தாலும் இறவாத  பேரின்பம் பெறலாம் (ஆல்-அசை) - மீண்டு வந்து இந்த பூவுலகில் பிறந்தாலும், இறைவன் திருக்கூத்தைக் கண்டு மகிழ்கின்றதால் உண்டாகும் ஒழியாத பேரின்பத்தைப் பெறலாமே.

 

      இந்த உண்மையை, தில்லையில் திருநடம் கண்டு மகிழ்ந்த சுந்தரமூர்த்தி சுவாமிகள் அனுபவித்ததாக, தெய்வச் சேக்கிழார் பெருமான் பெரியபுராணத்தில் பின்வருமாறு பாடி நம்மைத் தெளிவித்து அருளுகின்றார்.

 

“தெள்நிலா மலர்ந்த வேணியாய்! உன்றன்

    திருநடம் கும்பிடப் பெற்று

மண்ணிலே வந்த பிறவியே எனக்கு

    வாலிதாம் இன்பமாம் என்று,

கண்ணில் ஆனந்த அருவிநீர் சொரியக்

    கைம்மலர் உச்சிமேல் குவித்துப்

பண்ணினால் நீடி அறிவரும் பதிகம்

    பாடினார், பரவினார், பணிந்தார்.”

 

இதன் பொருள் ---

 

      தெள்நிலா மலர்ந்த வேணியாய் - வெண்மையான இளம்பிறை விளங்கும் திருச் சடையை உடை பெருமானே! உன்றன் திருநடம் கும்பிடப் பெற்று - உன்னுடைய ஆனந்தத் திருக்கூத்தைக் கண்டு வழிபாடு செய்யப் பெற்று, மண்ணிலே வந்த பிறவியே எனக்கு வாலிதாம் இன்பமாம் என்று - இந்நிலவுலகத்தில் வந்த மானிடப் பிறவியே எனக்கு மேலான இன்பம் என்று, கண்ணில் ஆனந்த அருவிநீர் சொரிய - கண்களில் இருந்து இன்பக் கண்ணீர் அருவியாகச் சொரிய, கைம்மலர் உச்சிமேல் குவித்து - கைகளாகிய மலர்களைத் தலைமிசை வைத்துக் குவித்து,  பண்ணினால் நீடி அறிவரும் பதிகம் பாடினார், பரவினார், பணிந்தார் - இசையோடு கூடிய அறிதற்கு அரிய திருப்பதிகத்தை இசைத்தார். போற்றினார், வணங்கினார்.


28. நிலையில் தாழாமை

“தலைமயிரும், கூர்உகிரும், வெண்பல்லும் தம்தம்

நிலையுடைய மானவரும் நிற்கும் - நிலைதவறாத்

தானத்தில் பூச்சியமே சாரும்; நிலைதவறும்

தானத்தில் பூச்சியமோ தான்.” — நீதிவெண்பா.


தலைமயிரும், கூரிய நகமும், வெண்மையான பல்லும், தமக்கு என்று ஒரு நிலையினை உடைய மானமுள்ள பெரியோரும் தாம் இருக்கின்ற நிலையில் இருந்து தவறிப் போகாத போதே நன்மதிப்பு சாரும்.  நிலை தவறும் இடத்தில் நன்மதிப்பு இல்லை.  இழிவே உண்டாகும்.


“தலையின் இழிந்த மயிர் அனையர், மாந்தர் நிலையின் இழிந்தக் கடை” என்பது திருவள்ளுவ நாயனாரின் அருள்வாக்கு.


88. பனையின் கீழ் இருந்து பால் குடித்தல்

“காலம்அறி தண்டலையார் வளநாட்டிற்

     கொலைகளவு கள்ளே காமம்

சாலவரும் குருநிந்தை செய்பவர்பால்

     மேவிஅறந் தனைச்செய் தற்கும்

சீலமுடை யோர் நினையார்! பனையடியி

     லேயிருந்து தெளிந்த ஆவின்

பாலினையே குடித்தாலும் கள்ளென்பார்!

     தள்ளென்பார்! பள்ளென் பாரே.”


இதன் பொருள் ---


    காலம் அறி தண்டலையார் வளநாட்டில் - காலம் அறிந்த திருத்தண்டலை இறைவரின் வளநாட்டிலே, கொலை களவு கள்ளே காமம் சாலவரும் குருநிந்தை செய்பவர் பால் - கொலையும் களவும் கள்குடியும் காமமும் நிறைய வரும் குருநிந்தையும் செய்பவரிடம், மேவி அறந்தனைச் செய்தற்கும் - சென்று அறத்தைக் கூறுவதற்கும்,  சீலம் உடையோர்  நினையார் - ஒழுக்கம் உள்ளோர் எண்ணமாட்டார்;  பனை அடியிலேயிருந்து - பனையின் நிழலிலே தங்கி,  தெளிந்த ஆவின் பாலினையே குடித்தாலும் - தெளிவான பசுவின் பாலையே குடித்தாலும், கள் என்பார் தள் என்பார் பள் என்பார் - (அப் பாலைக்) கள் என்றே கூறிக், ‘குடித்தவனை நீக்குக! அவன் பள்ளன் என்றும் கூறி விடுவர்.


      ஒழுக்கம் கெட்டவருக்கு அறநெறிகளைக் கூறச் சென்று, அவர்களுடன் பழகினால், சென்றவர்க்கும் ஒழுக்கம் கெட்டவர் என்ற பேரே வரும் என்பது கருத்து. ‘பனையடியிலிருந்து பாலைக் குடித்தாலும் கள் குடித்தான் என்பர்' என்பது பழமொழி. 


பொது --- 1119. சுட்டதுபோல் ஆசை விட்டு

அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

சுட்டதுபோல் ஆசை (பொது)


முருகா! 

மோன நிலையில் சும்மா இருக்கும் சுகம் அருள்வாய்.


தனதனன தானதத்த தனதனன தானதத்த

     தனதனன தானதத்த ...... தனதான


சுட்டதுபோ லாசை விட்டுலகா சார

     துக்கமிலா ஞான ...... சுகமேவிச்


சொற்கரணா தீத நிற்குணமூ டாடு

     சுத்தநிரா தார ...... வெளிகாண


மொட்டலர்வா ரீச சக்ரசடா தார

     முட்டவுமீ தேறி ...... மதிமீதாய்


முப்பதுமா றாறு முப்பதும்வே றான

     முத்திரையா மோன ...... மடைவேனோ


எட்டவொணா வேத னத்தொடுகோ கோவெ

     னப்பிரமா வோட ...... வரைசாய


எற்றியஏ ழாழி வற்றிடமா றாய

     எத்தனையோ கோடி ...... யசுரேசர்


பட்டொருசூர் மாள விக்ரமவே லேவு

     பத்திருதோள் வீர ...... தினைகாவல்


பத்தினிதோள் தோயு முத்தமம றாது

     பத்திசெய்வா னாடர் ...... பெருமாளே.


                    பதம் பிரித்தல்


சுட்டது போல் ஆசை விட்டு, உலக ஆசார

     துக்கம் இலா ஞான ...... சுகமேவி,


சொல் கரண அதீத நிற்குணம் ஊடு ஆடு

     சுத்த நிராதார ...... வெளிகாண,


மொட்டு அலர் வாரீச, சக்ர, சட ஆதாரம்

     முட்டவும் மீது ஏறி, ...... மதிமீதாய்


முப்பதும், ஆறுஆறும், முப்பதும் வேறு ஆன

     முத்திரையாம் மோனம் ...... அடைவேனோ?


எட்ட ஒணா வேதனத்தொடு, கோ கோ 

     எனப் பிரமா ஓட, ...... வரைசாய,


எற்றிய ஏழ் ஆழி வற்றிட, மாறு ஆய

     எத்தனையோ கோடி ...... அசுரஈசர்


பட்டு, ஒரு சூர் மாள, விக்ரம வேல் ஏவு

     பத்து இருதோள் வீர! ...... தினைகாவல்


பத்தினிதோள் தோயும் உத்தம! மறாது

     பத்தி செய் வான் நாடர் ...... பெருமாளே.


பதவுரை


எட்ட ஒணா வேதனத்தொடு கோ கோ எனப் பிரமா ஓட ---தாங்கமுடியாத வலியோடு பிரமன் கூக்குரலிட்டு ஓடவும்,


வரை சாய --- கிரெளஞ்ச மலையானது சாய்ந்து விழவும்,


எற்றிய ஏழாழி வற்றிட --- அலைகள் வீசுகின்ற ஏழு கடல்களும் வற்றிப் போகவும்,


மாறு ஆய எத்தனையோ கோடி அசுர ஈசர் பட்டு --- பகைமையோடு வந்த கோடிக்கணக்கான அசுரர்களும், அவர்களது தலைவர்களும் அழிந்து,


ஒரு சூர் மாள --- (அர்க்கர்களில்) ஒப்பற்றவன் ஆன சூரபதுமன் மாளவும்,


விக்ரம வேல் ஏவு பத்து இருதோள் வீர --- பேராற்றல் மிக்க வேலை விடுத்து அருளிய பன்னிருதோள்களை உடைய வீரரே!


தினைகாவல் பத்தினிதோள் தோயும் உத்தம --- தினைப்புனத்தைக் காவல் கொண்டு இருந்த கற்புடை நாயகி ஆகிய வள்ளியம்மையின் தோள்களைத் தழுவும் உத்தமரே!


மாறாது பத்திசெய் வான் நாடர் பெருமாளே --- நிலைத்த மனதுடன் பத்தி செய்து தேவர்கள் போற்றுகின்ற பெருமையில் மிக்கவரே! 


சுட்டதுபோல் ஆசை விட்டு --- சூடு பட்டவுடன் கையில் உள்ள பொருள் எப்படி உதறப்படுகிறதோ, அப்படி ஆசைகளை அடியேன் உதறித் தள்ளி,


உலக ஆசார துக்கமிலா ஞான சுகமேவி --- உலகியல் ஆசார சங்கற்ப விகற்பங்களால் உண்டான துக்கம் ஏதும் இல்லாத, ஞான சுகத்தினை அடியேன் அடைந்து,


சொற்கரண அதீத நிற்குணம் ஊடாடு சுத்த நிராதார வெளிகாண --- சொல்லும், மனமும் கடந்த குணங்களே இல்லாத,

தூயதான, பற்றுக்கோடு அற்றதாக விளங்கும் பரவெளியை அடியேன் காணுமாறு,


மொட்டு அலர் வாரீச சக்ர சடாதாரம் முட்டவும் மீது ஏறி --- மொட்டுக்கள் மலர்ந்துள்ள தாமரைகளாகிய சக்கரங்கள் பொருந்தி உள்ள ஆறு வகையான ஆதாரங்களையும் கடந்து மேல் சென்று,


மதிமீதாய் --- அமுதம் ஊறுகின்ற சந்திர மண்டலத்தினுக்கும் அப்புறமாய், 


முப்பதும் ஆறாறு முப்பதும் வேறு ஆன முத்திரையாம் --- தொண்ணூற்றாறு தத்துவங்களுக்கும் வேறுபட்டதற்கு அடையாளம் ஆகிய


மோனம் அடைவேனோ --- மோன நிலையை அடியேன் அடைதல் கூடுமோ?


பொழிப்புரை


தாங்கமுடியாத வலியோடு பிரமன் கூக்குரலிட்டு ஓடவும், கிரெளஞ்ச மலையானது சாய்ந்து விழவும், அலைகள் வீசுகின்ற ஏழு கடல்களும் வற்றிப் போகவும்,பகைமையோடு வந்த கோடிக்கணக்கான அசுரர்களும், அவர்களது தலைவர்களும் அழிந்து, அர்க்கர்களில் ஒப்பற்றவன் ஆக விளங்கிய சூரபதுமன் மாளவும், பேராற்றல் மிக்க வேலை விடுத்து அருளிய பன்னிருதோள்களை உடைய வீரரே!


தினைப்புனத்தைக் காவல் கொண்டு இருந்த கற்புடை நாயகி ஆகிய வள்ளியம்மையின் தோள்களைத் தழுவும் உத்தமரே!


நிலைத்த மனதுடன் பத்தி செய்து தேவர்கள் போற்றுகின்ற பெருமையில் மிக்கவரே! 


சூடு பட்டவுடன் கையில் உள்ள பொருள் எப்படி உதறப்படுகிறதோ, அப்படி ஆசைகளை அடியேன் உதறித் தள்ளி, உலகியல் ஆசார சங்கற்ப விகற்பங்களால் உண்டான துக்கம் ஏதும் இல்லாத, ஞான சுகத்தினை அடியேன் அடைந்து, சொல்லும், மனமும் கடந்த குணங்களே இல்லாத, தூயதான, பற்றுக்கோடு அற்றதாக விளங்கும் பரவெளியை அடியேன் காணுமாறு, மொட்டுக்கள் மலர்ந்துள்ள தாமரைகளாகிய சக்கரங்கள் பொருந்தி உள்ள ஆறு வகையான ஆதாரங்களையும் கடந்து மேல் சென்று, அமுதம் ஊறுகின்ற சந்திர மண்டலத்தினுக்கும் அப்புறமாய், தொண்ணூற்றாறு தத்துவங்களுக்கும் வேறுபட்டதற்கு அடையாளம் ஆகிய மோன நிலையை அடியேன் அடைதல் கூடுமோ?


விரிவுரை


எட்ட ஒணா வேதனத்தொடு கோ கோ எனப் பிரமா ஓட ---


வேதனம் – வேதனை. சூரபதுனது கொடுமைகளைத் தாங்கமுடியாத வலியோடு வேதன் ஆகிய பிரமன் வேதனையோடு அஞெசி ஓடினான்.


வரை சாய --- 


வரை – மலை. மலைப்பைத் தருவது மலை. அது இங்கே கிரவுஞ்ச மலையைக் குறித்தது. கிரவுஞ்ச மலை என்பது உயிர்களின் வினைத் தொகுதியைக் குறிக்கும். 


இலட்சத்து ஒன்பது வீரர்களையும் தாரகனுடைய மாயக் கருத்துக்கு இணங்கி, கிரவுஞ்சும் என்னும் மலை வடிவாய் இருந்த அசுரன்,  தன்னிடத்தில் மயக்கி இடர் புரிந்தான். முருகப் பெருமான் தனது திருக்கரத்தில் இருந்து வேலை விடுத்து, கிரவுஞ்ச மலையைப் பிளந்து, அதில் இருந்த அனைவரையும் விடுவித்து அருள் புரிந்தார்.


"மலை பிளவு பட மகர சலநிதி குறுகி மறுகி முறை இட முனியும் வடிவேலன்" என்றார் அடிகளார் சீர்பாத வகுப்பில். "மலை ஆறு கூறு எழ வேல் வாங்கினான்" என்பார் கந்தர் அலங்காரத்தில். "கனக் கிரவுஞ்சத்தில் சத்தியை விட்டவன்" என்றார் கச்சித் திருப்புகழில்.


"சுரர்க்கு வஞ்சம் செய் சூரன்

     இள க்ரவுஞ்சம் தனோடு

          துளக்க எழுந்து, அண்ட கோளம் ...... அளவாகத்

துரத்தி, அன்று இந்த்ர லோகம்

     அழித்தவன் பொன்றுமாறு,

          சுடப்பருஞ் சண்ட வேலை ...... விடுவோனே!"

என்றார் திருப்பரங்குன்றத் திருப்புகழில்.


கிரவுஞ்ச மலை என்பது உயிர்களின் வினைத் தொகுதியைக் குறிக்கும். முருகப் பெருமானுடைய ஞானசத்தியாகிய வேலாயுதம், கிரவுஞ்ச மலை என்னும் வினைத் தொகுதியை அழித்தது. இது உயிர்களின் வினைத் தொகுதியை அழித்து, அவைகளைக் காத்து அருள் புரிந்த செய்தி ஆகும்.


"இன்னம் ஒருகால் எனது இடும்பைக் குன்றுக்கும்

கொல்நவில் வேல்சூர் தடிந்த கொற்றவா! - முன்னம்

பனிவேய்நெடுங் குன்றம்பட்டு உருவத் தொட்ட

தனி வேலை வாங்கத் தகும்."


என்னும் திருமுருகாற்றுப்படை வெண்பாப் பாடலாலும் இனிது விளங்கும்.


"நீசர்கள் தம்மோடு எனது தீவினை எலாம் மடிய, நீடு தனி வேல் விடும் மடங்கல் வேலா" என்று பழநித் திருப்புகழில் அடிகளார் காட்டியபடி, நமது வினைகளை அறுத்து எறியும் வல்லமை முருகப் பெருமானுடைய ஞானசத்தியாகிய வேலுக்கே உண்டு என்பது தெளிவாகும். "வேலுண்டு வினை இல்லை" என்னும் ஆப்த வாக்கியமும் உண்டு. "வினை ஓட விடும் கதிர்வேல் மறவேன்" என்றார் கந்தர் அநூபூதியில்.


எற்றிய ஏழாழி வற்றிட --- 


எற்றுதல் – மோதுதல், எறிதல். ஏழ் ஆழி – ஏழுகடல். அலைகள் மோதுகின்ற ஏழகடல்களும் வற்றிப் போகுமாறு முருகப் பெருமான் வேலை விடுத்து அருளினார். “வேலை சுவறிட வேலை விட வல்ல பெருமாளே” என்பது திருப்புகழ்.


செய்த வினைகளின் காரண காரியத் தொடர்ச்சியாய் இடையீடு இன்றிப் பிறவிகள் வருதலின், பிறவியைப் பெருங்கடல் என்றனர் நம் முன்னோர். "அலைகடல் உடுத்த தலம்" என்பார் அடிகளார் பிறிதொரு திருப்புகழில். "ஆழிசூழ் உலகம்" என்பார் கம்பநாடர். "நீர் ஆரும் கடல் உடுத்த நிலமடந்தை" என்பார் மனோன்மணீயம் சுந்தரனார். "இருங் கடல் உடுத்த இப் பெருங் கண் மாநிலம்" என்பது புறநானூறு. “பிறவிப் பெருங்கடல்” என்பார் திருவள்ளுவ நாயனார். “பெரும்பிறவிப் பௌவம்” என்பார் மணிவாசகப் பெருமான். கடலில் எப்போதும் அலகளை வீசிக் கொண்டே இருக்கும். அதனை, “எவ்வத் தடம் திரை” என்றார் மணிவாசகப் பெருமான். (எவ்வம் – துன்பம்). காரண காரியத் தொடர்ச்சியாய் இடையீடு இல்லாமல் கடலில் அலைகள் சிறிதும் பெரிதுமாக வந்துகொண்டே இருக்கும். அப்படிப்பட்ட கடலால் சூழப்பட்டு உள்ளது இந்த நிலவுலகம். 


(1) கடலில் ஓயாமல் அலைகள் வீசிக்கொண்டே இருக்கின்றன. பிறவியாகிய கடலில் இன்ப துன்பங்களாகிய அலைகள் ஓயாமல் வந்துகொண்டே இருக்கின்றன.


(2)      கடலில் கப்பல்கள் மிதந்து கொண்டே இருக்கின்றன. பிறவியாகிய கடலிலும் ஆசைகளாகிய மரக்கலங்கள் மிதக்கின்றன.


(3)      கடலில் திமிங்கிலங்கள், முதலைகள் வாழ்கின்றன. பிறவியாகிய கடலிலும் நம்மை எதிர்க்கின்ற பகைவர்கள் வாழ்கின்றனர்.


(4)      கடலில் பலவகைப்பட்ட மீன்கள் உலாவி வயிறு வளர்க்கின்றன. பிறவியாகிய கடலிலும், மனைவி மக்கள் முதலியோர் உலாவி வயிறு வளர்க்கின்றனர்.


(5)      கடலுக்குள் மலைகள் இருக்கின்றன. பிறவியாகிய கடலிலும் அகங்காரமாகிய மலை பெரிதாக வளர்ந்திருக்கின்றது.


(6)      கடல் ஆழமும் கரையும் காணமாட்டாமல் பயங்கரமாக இருக்கின்றது. பிறவியாகிய கடலும் எவ்வளவு சம்பாதித்துப் போட்டாலும் போட்ட இடங்காணாது முடிவு இன்றி பயங்கரத்தை விளைவிக்கின்றது.


ஒரு சூர் மாள --- 


ஒரு - ஒப்பற்ற. சூர் – சூரபதுமன். அர்க்கர்களில் ஒப்பற்றவன் ஆக விளங்கியவன் சூரபதுமன்.


விக்ரம வேல் ஏவு பத்து இருதோள் வீர --- 


விக்ரமம் – பேராற்றல். பெருமான் திருக்கரத்தில் விளங்குகின்ற வேல் பேராற்றல் படைத்தது. பத்து இருதோள் – பன்னிரண்டு திருத்தோள்களை  உடையவர் முருகப் பெருமான்.


தினைகாவல் பத்தினிதோள் தோயும் உத்தம --- 


தினைப் புனத்தைக் காவல் புரிந்துகொண்டு இருந்த வள்ளிநாயகியைப் பத்தினி என்றார் அடிகளார். “நினைவோர் சித்தமொடு அகலாமல் புகு நிழலாள் பத்தினி மணவாளா” என்றார் சிதம்பரத் திருப்புகழில். “திருமால் அளித்தருளும் ஒரு ஞானபத்தினியைத்  திகழ்மார்பு உறத்  தழுவும் அயில்வேலா” என்றார் பிறிதொரு திருப்புகழில்.


சுட்டதுபோல் ஆசை விட்டு --- 


ஆசையே பிறவிக்குக் காரணம். அது எப்போதும் உயிரை விடாது. “ஆசைக்கு ஓர் அளவில்லை” என்பார் தாயுமான அடிகளார். “ஆசையை அளவு அறுத்தார் இங்கு ஆரே” என்பது திருவிசைப்பா. அந்த ஆசையே துன்பத்திற்கு மூலம். “ஆசை படப்பட ஆய்வரும் துன்பங்கள்” என்று அருளிய திருமூலதேவ நாயானர், ஆசையை விட்டுவிட்டால் ஆனந்தம் உண்டாகும் என்பதைக் காட்ட, “ஆசை விட விட ஆனந்தம் ஆமே” என்றார். “அவா இல்லார்க்கு இல் ஆகும் துன்பம்” என்று அருளிய திருவள்ளுவ நாயானர், அந்த ஆசை உண்டானால், துன்பமானது மேலும் மேலும் வந்துகொண்டே இருக்கும் என்பதைக் காட்ட, “அஃது உண்டேல் தவா அது மேன்மேல் வரும்” என்று அருளினார்.


ஒரு பொருளை இறுகப் பற்றிக் கொண்டு உள்ள ஒருவனது கையில் சூடுபடுமானால், அவன் தனது கையை உள்ள பொருளைப் பற்றிக் கவலை ஏதும் கொள்ளாமல் உதறிவிடுவான். கையில் உள்ள பொருள் சிதறிப் போகும். அப்படி ஆசையை விட்டுவிட வேண்டும் என்கிறார் அடிகளார்.


உலக ஆசார துக்கமிலா ஞான சுகமேவி --- 


உலகியல் என்பது வேதங்களில் விதித்தபடி ஒழுகுதலே ஆகும். “உலகியல் வேதூல் ஒழுக்கம்” என்பதைக் காட்டத் திருஞானம்பந்தப் பெருமான் திருப்பாசுரம் பாடியதாகத் தெய்வச் சேக்கிழார் பெரியபுராணத்தில் அருளினார். உலகாசாரமாகிய நடை வேதநூலின் விதித்த ஒழுக்கமே.


“வேதத்தை விட்ட அறம் இல்லை” என்று திருமூலதேவ நாயனார் அருளிபடி, அறநூல் வேதம் ஆகும். வேதங்களில் சொல்லப்பட்டு உள்ள அறங்களில் வழுவி, அவரவர் மனம் போன போக்கில் ஒழுகுவது உலக ஆசாரம் அல்லது உலகியல் என்று ஆகிவிட்டது. அதனால் துக்கமே நிறைந்து உள்ளது. அனாசாரத்தால், அஞ்ஞானத்தால் உண்டாகும் துக்கம் நீங்கி ஞானசுகத்தைப் பெற உயிர்கள் முயலவேண்டும்.


சொற்கரண அதீத நிற்குணம் ஊடாடு சுத்த நிராதார வெளிகாண ---


சொற்கரண அதீதம் – வாக்கும் மனமும் இல்லா மனோலயம். இறைவனை “மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே” என்றும், “சொல்லும் பொருளும் இறந்த சுடர்” என்றும் கூறுவார் மணிவாசகப் பெருமான்.  அப்படிப்பட்ட பரம்பொருளை அடையந்து ஆனந்தக்லகடலில் திளைத்து இருக்கவேண்டுமானால், வாக்கும் மனமும் இறந்த நிலையை நாம் அடையவேண்டும். அந்த நிலைஅலை ஓய்ந்த கடல் போல் விளங்கும். அதில் இன்பம் விளையும். அதில் உண்டாகும் இன்பம் இத் தன்மைத்து என்று சொல்லால் விளக்க ஒண்ணாது.


“போக்கும் வரவும், இரவும் பகலும், புறம்பும் உள்ளும்,

வாக்கும் வடிவும் முடிவும் இல்லாது ஒன்று, வந்து வந்து

தாக்கும், மனோலயம் தானே தரும், எனைத் தன் வசத்தே

ஆக்கும், அறுமுகவா, சொல்லொணாது இந்த ஆனந்தமே. “---  கந்தர் அலங்காரம்.


“ஆதாரத்தாலே நிராதாரத்தே சென்று மீதானத்தே செல உந்திபற, விமலற்கு இடம் அது என்று உந்திபற" என்று மெய்கண்ட சாத்திர நூல்களில் ஒன்றான “திருவுந்தியார்” கூறும். யோகப் பயிற்சி என்பது ஆதாரயோகம் என்றும் நிராதாரயோகம் என்றும் இருவகையாகச் சொல்லப்படும். இருவகை நிலையிலும் நின்றவர்கள் மிக மேலான இறைவன் திருவடியிலே சென்று கூடுவது உறுதி. இவற்றுள் ஆதார யோகம் என்பது ஞானாசிரியனால் கற்பிக்கப்பட்ட ஆறு ஆதாரங்களிலும் இறைவனது அந்தந்த இடத்துக்குரிய திருமேனிகளை உள்ளக் கிழியில் உரு எழுதி வழிபட்டுப் பயன் பெறுவதாகும். நிராதார யோகம் என்பது இவை யாவற்றிலும் உயர்ந்ததாய் மனத்தின் அசைவும் அற்றதாய்ப் பற்றுக் கோடும் இல்லாததாய் இறைவனது திருவடியைப் பொருந்துவதாய் அமைவது.


ஆறு ஆதாரங்கள் என்பன மூலாதாரம், சுவாதிட்டானம், மணி பூரகம், அநாகதம், விசுத்தி, ஆஞ்ஞை ஆகியன. இவை ஒவ்வொன்றுக்கும் அதி தெய்வங்கள் முறையே விநாயகர், பிரமன், திருமால், உருத்திரன், மகேசன், சதாசிவன் ஆவர். இந்த ஆறு ஆதாரங்களுக்கும் வடிவங்களாக மூலாதாரத்துக்கு நான்கு இதழ்த் தாமரையும் சுவாதிட்டானத்துக்கு ஆறு இதழ்த் தாமரையும், மணிபூரகத்துக்குப் பத்து இதழ்த் தாமரையும், அநாகதத்திற்குப் பன்னிரண்டு இதழ்த் தாமரையும் விசுத்திக்குப் பதினாறு இதழ்த் தாமரையும், ஆஞ்ஞைக்கு இரண்டு இதழ்த் தாமரையும் கூறப்படும்.


ஆஞ்ஞை என்பது புருவ நடுவில் நிலைபெறுவதாகக் கொள்ளுவர். மீதானம் என்ற நிலை நிராதாரம் எனப்படும். இது உச்சிக்கு மேல் பன்னிரண்டு அங்குல உயரத்தில் ஆயிரம் இதழ்த் தாமரை வடிவாக அமைந்தது என்பர். இது பிரமரந்திரம் என்றும் கூறப்படும். இவ்விடத்தில் சிவசத்தியுடன் பிரியாது நின்ற சிவபெருமானை வழிபடுதல் வேண்டும். ஆதார யோகம் பயிற்சி முறை என்றும் நிராதார யோகம் பயிற்சியின் பயன் எனவும் கொள்ளப்படும்.


மொட்டு அலர் வாரீச சக்ர சடாதாரம் முட்டவும் மீது ஏறி ---


மொட்டு அலர் வாரீசம் – மொட்டு மலர்ந்த தாமரை.


சக்ர சடாதாரம் – சக்கரங்கள் பொருந்தி உள்ள ஆறு ஆதாரங்கள்.


சடாதாரம் – ஆறு ஆதாரம். 


ஆறு ஆதாரங்கள் என்பன மூலாதாரம். சுவாதிட்டானம், மணி பூரகம், அநாகதம், விசுத்தி, ஆஞ்ஞை ஆகியன. இவை ஒவ்வொன்றுக்கும் அதி தெய்வங்கள் முறையே விநாயகர், பிரமன், திருமால், உருத்திரன், மகேசன், சதாசிவன் ஆவர். இந்த ஆறு ஆதாரங்களுக்கும் வடிவங்களாக மூலாதாரத்துக்கு நான்கு இதழ்த் தாமரையும் சுவாதிட்டானத்துக்கு ஆறு இதழ்த் தாமரையும், மணிபூரகத்துக்குப் பத்து இதழ்த் தாமரையும், அநாகதத்திற்குப் பன்னிரண்டு இதழ்த் தாமரையும் விசுத்திக்குப் பதினாறு இதழ்த் தாமரையும், ஆஞ்ஞைக்கு இரண்டு இதழ்த் தாமரையும் கூறப்படும்.


மூலாதாரம் -  இது குதத்திற்கும் குறிக்கும் நடுவில் இருப்பது,  முக்கோண வடிவுள் நான்கு இதழ்த் தாமரை, மாணிக்க நிறமாய் உள்ளது. கணபதி, குண்டலினி சத்தி, 'ஓம்' என்ற ஓரெழுத்து,  இவற்றைப் பெற்று விளங்குவது.


“ஆதார மூலத்து அடியில் கணபதியைப்

பாதார விந்தம் பணிந்து நிற்பது எக்காலம்.”


முக்கோண வடிவமாகிய மூலாதாரத்தின் மத்தியில் எழுந்தருளி இருக்கும் கணபதியின் திருவடித் தாமரைகளைப் பணிவது எப்போது.

---  பத்திரகிரியார் மெய்ஞ்ஞானப்புலம்பல்.


“மூலத்து உதித்து எழுந்தமுக்கோணச் சதுரத்துள்

வாலைதனைப் போற்றாமல் மதிமறந்தேன் பூரணமே.”


எங்கும் நிறைந்த பொருளே, மூலாதாரத்தில் உதித்த திரிகோண வடிவமாய் உள்ள  யந்திரத்தின் கண்ணே எழுந்தருளி இருக்கும் வாலாம்பிகைத் தாயை வணங்காமல் அறிவிழந்தேன்.

                        ---     பட்டினத்தார் பூரணம்.


சுவாதிட்டானம் - இது குறிக்கும் நாபிக்கும் நடுவில் இருப்பது,  நால்சதுர வடிவுள் ஆறு இதழ்த் தாமரை,  செம்பொன் நிறமாய் உள்ளது,  பிரமன் - சரசுவதி,  'ந' கரம் என்ற எழுத்து, இவற்றைப் பெற்று விளங்குவது.


“மண்வளைந்த நற்கீற்றில் வளைந்து இருந்த வேதாவைக்

கண்வளைந்து பார்த்து உள்ளே கண்டு இருப்பது எக்காலம்.”


நாற்கோண வடிவத்தோடும் கூடிய சுவாதிட்டான மத்தியில் எழுந்தருளி இருக்கும் பிரமாவை, உள்ளே கண்டு தரிசித்தும் மனம் மகிழ்ந்து இருப்பது எப்போது?

                                --- பத்திரகிரியார் மெய்ஞ்ஞானப்புலம்பல்.


“உந்திக் கமலத்து உதித்து நின்ற பிரமாவைச்

சந்தித்துக் காணாமல் தட்டழிந்தேன் பூரணமே.”


எங்கும் நிறைந்த பொருளே,  சுவாதிடாடானத்தில், அதாவது உந்தியாகிய கமத்தில் விளங்கும் நான்முகனை நெருங்கித் தரிசியாமல் நிலைகுலைந்தேன்.    -- பட்டினத்தார் பூரணம்


மணிபூரகம் - இது நாபிக் கமலத்தில் இருப்பது,  மூன்றாம் பிறை வடிவுள் பத்து இதழ்த் தாமரை, மரகத நிறமாய் உள்ளது.  விஷ்ணு - இலட்சுமி, 'ம' கரம் என்ற எழுத்து, இவற்றைப் பெற்று விளங்குவது.


“அப்புப் பிறைநடுவே அமர்ந்து இருந்த விட்டுணுவை

உப்புக் குடுக்கை உள்ளே உணரந்து அறிவது எக்காலம்.”


மூன்றாம் பிறைபோன்ற மணிபூரகத்தின் மத்தியில் எழுந்தருளி இருக்கும் விட்டுணுவை, உப்புக் குடுக்கை போன்ற தேகத்தின் உள்ளே தெரிந்து கொள்வது எப்போது?

                                                            --- பத்திரகிரியார் மெய்ஞ்ஞானப்புலம்பல்.


“நாவிக் கமலநடு நெடுமால் காணாமல்

ஆவிகெட்டு யானும் அறிவுஅழிந்தேன் பூரணமே.”


எங்கும் நிறைந்த பொருளே, மணிபூரகத்தில் விளங்குகின்ற விண்டுவைத் தரிசியாமல் உயிர் இழந்து புத்தி கெட்டேன்.                                        -- பட்டினத்தார் பூரணம்


அநாகதம் -  இது இருதய கமலத்தில் இருப்பது. முக்கோண வடிவுள் பன்னிரண்டு இதழ்த் தாமரை, படிக நிறமாய் உள்ளது.  உருத்திரன் - பார்வதி.  'சி' கரம் என்ற எழுத்து, இவற்றைப் பெற்று விளங்குவது.


“மூன்று வளையம் இட்டு முளைத்து எழுந்த கோணத்தில்

தோன்றும் உருத்திரனைத் தொழுது நிற்பது எக்காலம்.”


முக்கோண வடிவமாகிய அனாகதத்தின் நடுவில் எழுந்தருளி இருக்கும் உருத்திர மூர்த்தியைத் தொழுவது எப்போது?        --- பத்திரகிரியார் மெய்ஞ்ஞானப்புலம்பல்.


“உருத்திரனை இருதயத்தில் உண்மையுடன் பாராமல்

கருத்து அழிந்து நானும் கலங்கினேன் பூரணமே.”


எங்கும் நிறைந்த பொருளே, அநாகதத்தில், அதாவது இருதயத்தில் உருத்திர மூர்த்தியைத் தரிசியாமல் மனம் கெட்டுச் சஞ்சலம் உற்றேன். -- பட்டினத்தார் பூரணம்


விசுத்தி - இது கண்டத்தில் இருப்பது.  ஆறு கோண வடிவுள் பதினாறு இதழ்த் தாமரை.  மேக நிறமாய் உள்ளது.  மகேசுவரன் - மகேசுவரி. 'வ' கரம் என்ற எழுத்து,  இவற்றைப் பெற்று விளங்குவது.


“வாயுஅறு கோணம்அதில் வாழும் மகேச்சுரனைத்

தோயும் வகை கோட்கத் தொடங்குவதும் எக்காலம்.”


அறுகோண வடிவாய் உள்ள விசுத்தியின் மத்தியில் எழுந்தருளி இருக்கும் மகேச்சுரனைத் தரிசித்து  அவனுடன் இரண்டறக் கலக்கும் வழியை  ஆராய்ந்து தொடங்குவது எப்போது?

                                                                           --- பத்திரகிரியார் மெய்ஞ்ஞானப் புலம்பல்.

“விசுத்தி மகேசுரனை விழிதிறந்து பாராமல்

பசித்து உருகி நெஞ்சம் பதறினேன் பூரணமே.”


எங்கும் நிறைந்த பொருளே,  விசுத்தியில் அதாவது கண்டத்தில் விளங்கும் மகேசுரனை நோக்கி விழித்துக் கொண்டு இருந்து தரிசியாமல், பசியால் வருந்தி மனம் கலங்கினேன்.

                                            --- பட்டினத்தார் பூரணம்.


ஆஞ்ஞை - இது புருவ மத்தியில் இருப்பது, வட்ட வடிவமான, மூன்ற இதழ்த் தாமரை. படிக நிறமாய் உள்ளது. சதாசிவன்- மனோன்மணி. 'ய' கரம் என்ற எழுத்து இவற்றைப் பெற்று விளங்குவது.


“வட்ட வழிக்கு உள்ளே மருவும் சதாசிவத்தைக்

கிட்ட வழிதேடக் கிருபை செய்வது எக்காலம்.”


வட்ட வடிவமாகிய ஆஞ்ஞையின் நடுவில் எழுந்தருளி இருக்கும் சதாசிவத்தினைத் தேடிக் கிருபை அடைவது எப்போது?                                 ---  பத்திரகிரியார் மெய்ஞ்ஞானப்புலம்பல்.


“நெற்றி விழி உடைய நிர்மல சதாசிவத்தைப்

புத்தியுடன் பாராமல் பொறி அழிந்தேன் பூரணமே.”


எங்கும் நிறைந்த பொருளே,  விசுத்தியில் விளங்குகின்ற முக்கண் வாய்ந்த சதாசிவத்தினை அதாவது, நெற்றியின்கண்ணே நேத்திரத்தினை உடைய மலரகிதமாய் உள்ள சதாசிவத்தினைத் அறிவுடன் தரிசியாமல், ஐம்பொறியில் சிக்கி ஞானத்தை இழந்தேன்.        ---   பட்டினத்தார் பூரணம்.


துவாதசாந்தம் - இது பிரமரந்திரத்திற்கு (உச்சிக்குழிக்கு) மேல் இருப்பது. ஆயிரத்து எட்டு இதழ்த் தாமரை. சோதி வடிவாய் இருப்பது. பரசிவம் - பராசத்தி. சிவ சிவ இவற்றைப் பெற்று விளங்குவதாகத் தியானிப்பது.


“உச்சிக் கிடைநடுவே ஓங்கு குருபதத்தை

நிச்சயித்துக் கொண்டு இருந்து நேர்வது இனி எக்காலம்.”


ஆறு ஆதாரங்களுக்கும் மேற்பட்டு இருக்கின்ற உச்சியில் விளங்கும் குருவின் திருவடியை மனத்தில் தியானித்துக் கொண்டு இருந்து பொருந்துவது எப்போது.


“ஆறுஆதாரம் கடந்த ஆனந்தப் பேரொளியை

பேறாகக் கண்டு நான் பெற்றிருப்பது எக்காலம்.”


ஆறு ஆதாரங்களையும் கடந்த சிவானந்த சொரூபமாய் உள்ள  அருட்பெருஞ் சோதியை யான் அடையக் கூடிய பாக்கியமாகத் தரிசித்து, அதனை அடையப் பெறுவது எப்போது?

                                                                    –   பத்திரகிரியார் மெய்ஞ்ஞானப்புலம்பல்.


“உச்சி வெளியை உறுதியுடன் பாராமல்

அச்சமுடன்  நானும் அறிவுஅழிந்தேன் பூரணமே.”


எங்கும் நிறைந்த பொருளே, உச்சியிலே இருக்கும் சிதாகாசத்தை நிலையாகத் தரிசிக்காமல், பயத்துடனே புத்தி கெட்டேன்.                            –   பட்டினத்தார் பூரணம்.


ஆறு ஆதாரங்களிலும் ஞானாசிரியன் கற்பித்த நெறியிலே இறைவனை வழிபட்டு அதனதனுக்குரிய திருவடிவத்தை உள்ளத்துள் பதித்து தியானம் செய்து அதிலேயே நெடுநாள் நிலைத்திருந்தால், தன் முனைப்புக் கெட்டுச் சிவபரம் பொருள் ஒன்றே முதிர்ந்து உயிரில் ஒங்கித் தோன்றும். வழிபடுவானும் வழிபடப் பெறும் பொருளும் வழிபடுகிறேன் என்ற உணர்வும் நெகிழ்ந்து போக, ஒன்றேயாகிய சிவபரம் பொருள் இவனோடு பிரிப்பின்றி நிற்கும் நிலை ஆதார யோகமாகும்.


மதிமீதாய், முப்பதும் ஆறாறு முப்பதும் வேறு ஆன முத்திரையாம் மோனம் அடைவேனோ --- 


மதி மீதாய் – சந்திர மண்டலத்தையும் கடந்து.


முப்பதும் – முப்பதும், ஆறாறு – முப்பத்தாறு, முப்பதும் – முப்பதும் முப்பதாறும் கூட்டி, தொண்ணூற்றாறு தத்துவங்கள். இவைகளையும் கடக்க வேண்டும். “தத்துவம் அனைத்தும் தனித்தனி கடந்தேம்” என்பார் வள்ளற்பெருமான். தத்துவங்களைக் கடந்து சென்று சிவத்தை அடைதல் வேண்டும். இறைநிலையை அடையவதற்குப் படிநிலைகளாக அமைந்தவை இவை. “பேணு தத்துவங்கள் என்னும் பெருகு சோபானம் ஏறி, ஆணையாம் சிவத்தைச் சார” என்பார் தெய்வச்சேக்கிழார் பெருமான்.


ஆறு ஆதாரங்களும் மூன்று மண்டலங்களாய் வகுத்துச் சொல்லப்பட்டன. மூலாதாரமும் சுவாதிட்டானமும் அக்கினி மண்டலம். மணிபூரகமும் அனாகதமும் சூரியமண்டலம். விசுத்தியும் ஆக்கினையும் சந்தர மண்டலம். இந்த மூன்று மண்டலங்களையும் ஊடுருவிச் சென்று மேல் ஏற வேண்டும்.


“மூளும்வினை சேர, மேல்கொண்டிடா, ஐந்து

     பூதவெகு வாய மாயங்கள் தான் நெஞ்சில்

     மூடி, நெறி நீதி ஏதும் செயா. வஞ்சி ...... அதிபார


மோக நினைவான போகம் செய்வேன், அண்டர்

     தேட அரிது ஆய ஞேயங்களாய் நின்ற,

     மூல பரயோக மேல் கொண்டிடா நின்றது ......உளதாகி


நாளும் அதிவேக கால்கொண்டு தீமண்ட,

     வாசி அனல்ஊடு போய்ஒன்றி வானின்கண்

     நாம மதி மீதில் ஊறும் கலா இன்ப .....அமுது ஊறல்


நாடி, அதன் மீது போய் நின்ற ஆநந்த

     மேலை வெளி ஏறி, நீஇன்றி நான்இன்றி,

     நாடிஇனும் வேறு தான்இன்றி வாழ்கின்றது .....ஒருநாளே”


என்று இந்த யோகநிலையை அடிகளார் பிறிதொரு திருப்புகழில் காட்டுவார்.


மோனநிலை – சொல்லும் செயலும் அற்றுச் சும்மா இருக்கும் நிலை. இதுவே முடிந்த நிலை ஆகும். “சும்மா இருக்கும் சுகம்” என்று இதனைக் கூறவர். “மோனம் என்பது ஞானவரம்பு” என்பது ஔவையின் அருள்மொழி. சும்மா இருப்பதை "மோனநிலை" என்று சொல்லப்படும். உடல் அசையாமல் இருப்பது "காஷ்டமெளனம்".  வாக்குப் பேசாமல் இருப்பது "வாய்மெளனம்". மனம் சிந்திக்காமல் இருப்பது "மனோமெளனம்". இந்த மூன்று வகையான மெளனங்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையன. மனம் ஓடாமல் நிற்கிற போதுதான் பேச்சு நிற்கும்.உடம்பு அசையாமல் இருக்கும்.

 

ஒருவன் கட்டை போலப் படுத்து உறங்கினான் என்றால் அது மெளனம் ஆகாது. ஒருவன் உண்பதற்கு எதுவும் இல்லை என்பதனால் பட்டினி கிடக்கிறான். மற்றவன் உண்பதற்கு மிகுதியான பொருள்கள் இருந்தும், ஏகாதசி என்பதனால் ஒன்றையும் உண்ணாது பட்டினி கிடக்கிறான். சாப்பிடுவதற்குப் பொருள் இருந்தும் எதையும் புசிக்காமல் இருப்பதே விரதம். அதைப்போல உடம்பில் உணர்ச்சி இருக்கும் பொழுது, தூண்டுதல் பல இருந்தாலும் விழிப்பு நிலையில் எதுவும் செய்யாமல் எதுவும் பேசாமல், எதுவும் சிந்திக்காமல் உடம்பு, வாக்கு, மனம் முதலியவற்றால்,உடம்பு அசையாமல் இருக்கப் பழகலாம். இது மோன நிலைக்கு முதற்படி. உடம்பும் வாக்கும் எப்பொழுது செயலற்று இருக்கும்? மனம் பலபல பொருள்களைப் பற்றிச் சிந்திக்காமல் ஏதேனும் ஒன்றைப் பற்றியே சிந்தித்தால்தான் இருக்கும். அதற்குத்தான் தியானம் என்று பேர். ஏதேனும் ஓர் உருவத்தை மனத்தில் இருத்திக்கொண்டு தியானம் செய்ய ஆரம்பித்தால் மனம் அடங்கி,மனோலயம் உண்டாகும்.

 

"சொல்லும் பொருளும்அற்றுச் சும்மா இருப்பதற்கே

அல்லும் பகலும் எனக்கு ஆசை பராபரமே".

 

"சும்மா இருப்பதுவே சுட்டு அற்ற பூரணம் என்று

எம்மால் அறிதற்கு எளிதோ பராபரமே".    --தாயுமானார்.


கருத்துரை


முருகா! மோன நிலையில் சும்மா இருக்கும் சுகம் அருள்வாய்.

 






பாடல் 4

“காளை வடிவுஒழிந்து, கையறவோடு, ஐயுறவாய் நாளும் அணுகி நலியாமுன், பாளை அவிழ்கமுகம் பூஞ்சோலை ஆரூரற்கு ஆளாய்க் கவிழ்க முகம், கூம்புகஎன் கை.” இதன்...