33. கோடரிக் காம்பு குலத்துக்குக் கேடு

 



கோடாமல் பெரியவர்பால் நடப்பதன்றிக்

    குற்றமுடன் குறைசெய் தோர்கள்

ஆடாகிக் கிடந்தஇடத் ததன்மயிரும்

    கிடவாமல் அழிந்து போவார்!

வீடாநற் கதியுதவும் தண்டலையா

    ரே! சொன்னேன் மெய்யோ? பொய்யோ?

கோடாலிக் காம்பேதன் குலத்தினுக்குக்

    கோடான கொள்கை தானே!”


இதன் பொருள் —-


வீடா நற்கதி உதவும் தண்டலையாரே - வீட்டின்பம் என்னும் நல்ல நிலையை  அருளும்  திருத்தண்டலை நீள்நெறி  இறைவரே! 


சொன்னேன் மெய்யோ, பொய்யோ - நான் சொல்லுவது உஉண்மையோ, பொய்யோ?


கோடாலிக் காம்பே தன் குலத்தினுக்குக் கேடான கொள்கை  - கோடரிக்குக் காம்பு தன் குலத்துக்குக் கேடு என்று கூறும் வழக்கம் போல, 

பெரியவர்பால் கோடாமல் நடப்பது அன்றி - கல்வி அறிவு ஒழுக்கங்களால் நிறைந்த சான்றோரிடம் அவரது மனம் கோணாமல் நடந்து கொள்வதை விடுத்து, குற்றமுடன் குறை செய்தோர்கள் - குற்றமும் குறையும் செய்தவர்கள், ஆடு ஆகிக் கிடந்த இடத்து அதன் மயிரும் கிடவாமல் அழிந்தே போவார் - ஆடு வளர்ச்சியற்றுக் கிடந்த இடத்திலே, அதன் மயிரும் கிடக்காமல் அழிந்து விடுவார்.


ஆடு கிடந்த இடத்து அதன் மயிரும் கிடவாது’,  கோடரிக் காம்பு குலத்துக்கு ஈனம்' என்பவை பழமொழிகள்.


  "நெருப்பினால் சுடப்பட்டாலும் பிழைத்தல் ஆகும். ஆனால், பெரியாரிடத்தில் தவறு செய்து ஒழுகுபவர் தப்பிப் பிழைத்தல் ஆகாது" என்கின்றார் திருவள்ளுவ நாயனார். “எரியால் சுடப்படினும் உய்வு உண்டாம், உய்யார் பெரியார்ப் பிழைத்து ஒழுகுவார் என்னும் திருக்குறளைக் காண்க. காடுகளிலே உள்ள மரங்கள் ஒன்றோடொன்று உராய்ந்து, அதனால் உண்டாகும் தீயினிடத்தில் ஒருவன் அகப்பட்டுக் கொள்வானானால், அந்தத் தீயானது உடம்பினைப் பிடிக்கும் முன்னரோ அல்லது உடம்பினைப் பற்றிய பின்னரோ தப்பிச் சென்று காத்துக் கொள்ளலாம். ஆனால், நிறைமொழி மாந்தருக்கு உண்டான கோபத் தீயில் இருந்து ஒருவன் தன்னை எவ்விதத்திலும் காத்துக் கொள்ளுதல் முடியாது. அவரிடத்தில் பிழைத்தவர் அழிந்து போதல் நிச்சயம். எனவே, பெரியவரிடத்தில் பிழை செய்தல் ஆகாது.


பின்வரும் பாடல்கள் ஒப்பாக அமைந்துள்ளதை அறிக.


பெரியாரோடு யாத்த தொடர்விடுதல் இன்னா;

அரியவை செய்தும் என உரைத்தல் இன்னா;

பரியார்க்குத் தாம் உற்ற கூற்று இன்னா; இன்னா

பெரியோர்க்குத் தீய செயல்.” ---  இன்னா நாற்பது.


இதன் பொருள் ---


பெரியாரோடு யாத்த தொடர் விடுதல் இன்னா - பெரியவருடன் கொண்ட, தொடர்பை விடுவது துன்பமாம்; அரியவை செய்தும் என உரைத்தல் இன்னா - செய்தற்கரிய காரியங்களைச் செய்து முடிப்போம் என்று சொல்லுதல் துன்பமாம்; பரியார்க்கு தாம் உற்ற கூற்று இன்னா - தம்மிடத்தில் அன்பு கொள்ளாதவர்க்கு, தாம் அடைந்த துன்பங்களைக் கூறுவது துன்பமாம்; பெரியார்க்குத் தீய செயல் இன்னா - பெருமையுடையார்க்குத் தீயனவற்றைச் செய்தல் துன்பமாம். 


பெருமை உடையாரைப் பீடு அழித்தல் இன்னா;

கிழமை உடையார்க் களைந்திடுதல் இன்னா;

வளமை இலாளர் வனப்பு இன்னா; இன்னா

இளமையுள் மூப்புப் புகல்.”    --- இன்னா நாற்பது.


இதன் பொருள் ---


பெருமை உடையாரைப் பீடு அழித்தல் இன்னா - பெருமையுடையவரை, அவரது பெருமை அழியக் கூறுதல் துன்பமாம்; கிழமை உடையார் களைந்திடுதல் இன்னா - உரிமை உடையவரை நீக்கி விடுதல் துன்பமாம்; வளமை இலாளர் வனப்பு இன்னா - செல்வம் இல்லாதவருடைய அழகு துன்பமாம்; இளமையுள் மூப்புப் புகல் இன்னா - இளமைப் பருவத்தில் முதுமைக்கு உரிய தன்மைகள் உண்டாதல் துன்பம் தருவதாகும். 


ஆமாலோ என்று பெரியாரை முன்னின்று

தாமாச் சிறியார் தறுகண்மை செய்து ஒழுகல்,

போமா(று) அறியாப் புலன்மயங்கி ஊர்புக்குச்

சாமாகண் காணாத வாறு.” --- பழமொழி நானூறு.


இதன் பொருள் ---


பெரியாரை ஆமாலோ என்று - பெரியோர்களை இவர்க்கு (எம்மோடு மாறுபடல்) ஆகுமோ என்று நினைத்து, சிறியார் தாமா முன் நின்று தறுகண்மை செய்து ஒழுகல் - அறிவில் சிறியார் தாமாக முன்னின்று மாறுபட்டு வன்மை செய்து நிற்றல், சாம் மா - சாதற்குரிய விலங்குகள், போம் ஆறு அறியா - செல்லும் வழியினை அறியாதவாறு, புலன் மயங்கி - அறிவு மயங்கலால், ஊர் புக்கு கண் காணாதவாறு - ஊரினுள் புகுந்து கண்களை இழந்து வருந்தியதை ஒக்கும். (பெரியாரோடு மாறுபடுவார் இறுதியை எய்துவர்.)


எல்லாத் திறத்தும் இறப்பப் பெரியாரைக்

கல்லாத் துணையார்தாம் கைப்பித்தல் சொல்லின்,

நிறைந்து ஆர் வளையினாய்! அஃதால் எருக்கு

மறைந்து யானை பாய்ச்சி விடல்.”   --- பழமொழி நானூறு.


இதன் பொருள் ---


நிறைந்து ஆர் வளையினாய் - அழகு நிறைந்து பொருந்தி இருக்கின்ற வளையை உடையவளே! எல்லாத் திறத்தும் இறப்பப் பெரியாரை - எல்லா வகையானும் உயர்ந்த அறிஞர்களை, கல்லாத் துணையார் - கல்லாமையைத் துணையாக உடைய அறிவில்லார், தாம் கைப்பித்தல் சொல்லின் - தாம் அதனுள் மறைந்து நின்று வெறுக்கப் பண்ணுதலைச் சொல்லின், எருக்கு மறைந்து யானை பாய்ச்சிவிடல் - எருக்கம் புதரின்கண் மறைந்து ஒருவன் யானையின்மேல் அம்பு எய்தலோடு ஒக்கும். (அறிவுடையாரைக் கல்லார் துன்புறுத்துவாராயின், அவர் கெட்டொழிதல் உறுதி என்றறிதல் வேண்டும்.) 'எருக்கு மறைந்து யானை பாய்ச்சிவிடும்' என்பது பழமொழி.


வில்லது வளைந்தது என்றும், 

வேழம்அது உறங்கிற்று என்றும்

வல்லியம் பதுங்கிற்று என்றும் 

வளர்கடா பிந்திற்று என்றும்

புல்லர்தம் சொல்லுக்கு அஞ்சிப் 

பொறுத்தனர் பெரியோர் என்று

நல்லது என்று இருக்க வேண்டா 

நஞ்சு எனக் கருதலாமே.” விவேக சிந்தாமணி 


இதன் பதவுரை ---


(உலகத்தவர்களே! பகைவரைக் கொல்வதற்கு வளைக்கப்பட்டு இருக்கும் வில்லைப் பார்த்து) வில்லது வளைவுற்றது என்றும் - இந்த வில்லானது வளைந்து போனது (அது தீங்கு செய்யாது) என்றும்; (காலம் பார்த்துத் தனது பகையை முடிக்கக் கருதி உறங்குகின்ற யானையைப் பார்த்து) வேழம் அது உறங்கிற்று என்றும் - இந்த யானையானது உறங்கிவிட்டது (அதனால், அது தீங்கு செய்யாது) என்றும், (ஒரு விலங்கைக் கொல்வதற்குக் காலம் பார்த்துப் பதுங்கிக் கிடக்கும் புலியைப் பார்த்து) வல்லியம் பதுங்கிற்று என்றும் - இந்த புலியானது பதுங்கி விட்டது (அதனால் இது தீங்கு செய்யாது) என்றும், (தனது பகையின் மேல் பாய்வதற்காக ஓடி வந்து பின்னிடுகின்ற ஆட்டுக் கடாவைப் பார்த்து) வளர் கடா பிந்திற்று என்றும் - இந்த ஆட்டுக்கடாவானது பாய்வதை விடுத்து, பின்னே சென்று விட்டது (அதனால் இது பினும் பாய்ந்து வந்து தீங்கு செய்யாது) என்றும், (தம்மை நிந்திப்போர் தாமாகவே கெட்டுப் போவார்கள் என்பதை அறிந்து, கீழ்மக்களின் நிந்தனையைப் பொறுத்துக் கொண்டு வாளா இருக்கும்) பெரியோர்கள் புல்லர் தம் சொல்லுக்கு அஞ்சிப் பொறுத்தனர் என்றும் - இந்தப் பெரியவர்கள் கீழ்மக்களின் சொற்களுக்குப் பயந்தே பொறுத்துக் கொண்டார்கள் (எனவே, இவர்கள் ஒன்றும் செய்யமாட்டார்கள்) என்றும், எண்ணிக் கொண்டு, நல்லது என்று இருக்க வேண்டா - (இச் செய்கைகளால் வருவது) நன்மையே என்று முடிவு கட்டி இருந்துவிட வேண்டாம்; நஞ்சு எனக் கருதலாம் - (இவற்றால் வருவது) நஞ்சைப் போன்ற கேடுதான் என்று எண்ணலாம்.

98. திருமால் அவதாரங்கள்

 



"சோமுகா சுரனை முன் வதைத்துஅமரர் துயர்கெடச்

     சுருதிதந் ததுமச் சம்ஆம்;

  சுரர்தமக்கு அமுதுஈந்தது ஆமையாம்; பாய்போற்

     சுருட்டிமா நிலம்எ டுத்தே


போம்இரணி யாக்கதனை உயிர்உண்டது ஏனமாம்;

     பொல்லாத கனகன் உயிரைப்

  போக்கியது நரசிங்கம்; உலகுஅளந்து ஓங்கியது

     புனிதவா மனமூர்த் திஆம்;


ஏமுறும் இராவணனை வென்றவன் இராகவன்;

     இரவிகுலம் வேர் அறுத்தோன்

  ஏர்பர சிராமன்; வரு கண்ணனொடு பலராமன்

     இப்புவி பயந்த விர்த்தோர்


ஆம்இனிய கற்கிஇனி மேல்வருவது இவைபத்தும்

     அரிவடிவம்; அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!”


இதன் பொருள் —-

அருமை மதவேள் - அரிய மதவேள், அனுதினமும் மனதில் நினைதரு - எப்போதும் உள்ளத்தில் வழிபடுகின்ற, சதுரகிரிவளர் அறப்பளீசுர தேவனே - சதுரகிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!

முன் சோமுக அசுரனை வதைத்து அமரர் துயர் கெடச் சுருதி தந்தது மச்சம் ஆம் - முற்காலத்தில் சோமுகன் என்னும் அசுரனைக் கொன்று தேவர்கள் துன்பம் கெடும்படி செய்து மறைகளைக் கொண்டு வந்தது மீன் தோற்றம் ஆகும், 

சுரர் தமக்கு அமுது ஈந்தது ஆமை ஆம் - வானவர்க்கு அமுதத்தை அளிக்க எடுத்துக் கொண்ட தோற்றம் ஆமை ஆகும், 

மாநிலம் பாய்போற் சுருட்டி எடுத்தே போம் இரணியாக்கதனை உயிர் உண்டது ஏனம் ஆம் - பெரிய நிலத்தைப் பாயைப் போலச் சுருட்டி எடுத்துச் செல்லும் இரணியாக்கன் உயிரைப் பருகியது பன்றி ஆகும், 

பொல்லாத கனகன் உயிரைப் போக்கியது நரசிங்கம் - கொடிய இரணியன் உயிரை ஒழித்தது நரசிங்கம் ஆகும், 

உலகு அளந்து ஓங்கியது புனித வாமன மூர்த்தி ஆம் - உலகத்தை (மாவலியிடம் மூவடி மண்ணைத் தானம் பெற்று) அளக்க நெடிய உருக் கொண்டது வாமன வடிவம் ஆகும்,

இரவிகுலம் வேர் அறுத்தோன் ஏர் பரசு இராமன் - கதிரவன் மரபை அடியுடன் ஒழித்தவன் அழகிய கோடரி ஏந்திய பரசுராமன் ஆவான், 

ஏம் உறும் இராவணனை வென்றவன் இராகவன் - செருக்கு அடைந்திருந்த இராவணனை வெற்றிகொண்டவன் இரகு மரபில் பிறந்த இராமன் ஆவான், 

இப் புவி பயம் தவிர்த்தோர் வரு பலராமனொடு கண்ணன் - இவ்வுலகின் அச்சத்தை நீக்கப் பிறந்து வந்தோர் பலராமனும் கண்ணனும் ஆவர், 

இனிமேல் வருவது இனிய கற்கி ஆம் - இனிமேல் தோன்றக்கூடியது இனிய கற்கி ஆகும், 

இவை பத்தும் அரிவடிவம் - இவை பத்தும் திருமாலின் திரு அவதாரங்கள்.

82. நிலை அற்றவை - நம்பத் தகாதவை

 



கொற்றவர்கள் ராணுவமும் ஆறுநேர் ஆகிய

     குளங்களும் வேசையுறவும்

குணம்இலார் நேசமும் பாம்பொடு பழக்கமும்

     குலவுநீர் விளையாடலும்


பற்றலார் தமதிடை வருந்துவிசு வாசமும்

     பழையதா யாதிநிணறும்

பரதார மாதரது போகமும் பெருகிவரு

     பாங்கான ஆற்றுவரவும்


கற்றும்ஒரு துர்ப்புத்தி கேட்கின்ற பேருறவும்

     நல்லமத யானைநட்பும்

நாவில்நல் லுறவும்ஒரு நாள்போல் இராஇவைகள்

     நம்பப் படாதுகண்டாய்


மற்றும்ஒரு துணையில்லை நீதுணை எனப்பரவும்

     வானவர்கள் சிறைமீட்டவா!

மயிலேறி விளையாடு குகனே!புல் வயல்நீடு

     மலைமேவு குமர!ஈசனே!”


இதன் பொருள் —-

‘மற்றும் ஒரு துணையில்லை; நீ துணை' எனப் பரவும் வானவர்கள் சிறை மீட்டவா - ‘வேறு துணைவர் இல்லை; நீயே தஞ்சம்'என்று வேண்டி வழிபட்ட அமரர்களின் சிறையை நீக்கியவனே! 

மயில் ஏறி விளையாடு குகனே - மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!

புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே - திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!

கொற்றவர்கள் ராணுவமும் - அரசர்களின் படையும், ஆறுநேர் ஆகிய குளங்களும் - ஆற்றுக்கு எதிர்ப்படும் பொய்கைகளும், வேசை உறவும் - பரத்தையரின் நட்பும், குணம் இலார் நேசமும் - நற்பண்பு இல்லாதவரின் நட்பும், பாம்பொடு பழக்கமும் - அரவுடன் பழகுதலும், குலவு நீர் விளையாடலும் - மிக்க நீரிலே ஆடுதலும்; பற்றலார் தமது இடை வருந்து விசுவாசமும் - பகைவரிடம் வருந்திக் கொள்ளும் அன்பும், பழைய தாயாதி நிணறும் - பழைய பங்காளிகளின் உறவும், பரதார மாதர் அநுபோகமும் - பிறர் மனைவியரின் கூட்டுறவும், பெருகிவரு பாங்கான ஆற்று வரவும் - பெருக்கெடுத்து வரும் அழகிய ஆற்று வெள்ளமும், கற்றும் ஒரு துர்ப் புத்தி கேட்கின்ற பேர் உறவும் - நூல்களைக் கற்றிருந்தும், நயமாகப் பேசுகின்றோரின் கெடுமதியைக் கேட்டு நடக்கின்றவரின் நட்பும், நல்ல மதயானை நட்பும் - அழகிய மதயானையின் நேசமும், நாவில் நல்லுறவும் - பேச்சளவிலே உள்ள இனிய உறவும், ஒரு நாள் போல் இரா - ஒரு நாளைப்போல நிலையாக இருக்கமாட்டா,  இவைகள் நம்பப் படாது - (ஆகையால்) இவற்றை நம்புதல் கூடாது.

97. அரிதானவை, புகழ்ச்சிக்கு உரியவை

 



பருகாத அமுது,ஒருவர் பண்ணாத பூடணம்,

     பாரில்மறை யாத நிதியம்,

  பரிதிகண்டு அலராத நிலவுகண்டு உலராத

     பண்புடைய பங்கே ருகம்,


கருகாத புயல், கலைகள் அருகாத திங்கள், வெங்

     கானில் உறை யாத சீயம்;

  கருதரிய இக்குணம் அனைத்தும்உண் டானபேர்

     காசினியில் அருமை யாகும்!


தெரியவுரை செய்யின்மொழி, கீர்த்தி, வரு கல்வியொடு,

     சீரிதயம், ஈகை, வதனம்,

  திடமான வீரம், இவை யென்றறிகு வார்கள்! இச்

     செகமெலாம் கொண்டா டவே


அருள் கற்ப தருஎன்ன ஓங்கிடும் தான துரை

     ஆகும்எம தருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!”


இதன்பொருள் —-


இச் செகம் எலாம் கொண்டாடவே - இவ்வுலகெங்கும் புகழும்படியாக, அருள் கற்ப தரு என்ன - அருள் மிகுந்த கற்பகத் தருவைப் போல, ஓங்கிடும் தானதுரை ஆகும் - உயர்ந்த கொடைத்தலைவன் ஆகிய, எமது அருமை மதவேள் - எம் அரிய மதவேள், அனுதினமும் மனதில் நினைதரு - எப்போதும் உள்ளத்தில் வழிபடுகின்ற, சதுரகிரிவளர் அறப்பளீசுர தேவனே - சதுரகிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே! 

பருகாத அமுது - உண்ணாத அமுதம், ஒருவர் பண்ணாத பூடணம் - ஒருவராற் செய்யப்படாத அணிகலம்; பாரில் மறையாத நிதியம் - உலகில் அழியாத செல்வம், பரிதி கண்டு அலராத, நிலவு கண்டு உலராத பண்புடைய பங்கேருகம் - ஞாயிற்றைக் கண்டு மலராததும் திங்களைக் கண்டு வாடாததும் ஆகிய தன்மையுடைய தாமரை, கருகாத புயல் - கருநிறம் பெறாது பெய்யும் முகில், கலைகள் அருகாத திங்கள் - கலைகள் குறையாத திங்கள், வெங்கானில் உறையாத சீயம் - கொடிய காட்டில் வாழாத சிங்கம், கருத அரிய இக்குணம் அனைத்தும் உண்டான பேர் காசினியில் அருமையாகும் - நினைவிற்கு எட்டாத இப்பண்புகள் யாவும் உடையவர் இவ்வுலகில் கிடைப்பது அருமையாகும், 

(எனினும், இவைகட்கு ஒப்பாக) தெரிய உரை செய்யின் - விளங்க எடுத்துக் கூறினால் (முறையே), மொழி, கீர்த்தி, வருகல்வியொடு, சீர்இதயம், ஈகை, வதனம், திடமான வீரம் இவை என்று அறிகுவார்கள் - உரையும், புகழும், வளரும் கல்வியும், சிறப்புள்ள உள்ளமும், கொடைப் பண்பும்,  அழகான முகமும், அசையாத வீரமும் ஆகிய இவையே என்று தெரிந்துகொள்வார்கள்.

82. இதனினும் இது நல்லது

 

“பஞ்சரித் தருமையறி யார்பொருளை எய்தலின்

     பலர்மனைப் பிச்சைநன்று;

பரிவாக உபசாரம் இல்லா விருந்தினிற்

     பட்டினி யிருக்கைநன்று;


தஞ்சம்ஒரு முயலைஅடு வென்றிதனில் யானையொடு

     சமர்செய்து தோற்றல்நன்று;

சரசகுணம் இல்லாத பெண்களைச் சேர்தலிற்

     சன்னியா சித்தல்நன்று;


அஞ்சலார் தங்களொடு நட்பாய் இருப்பதனில்

     அரவினொடு பழகுவ துநன்று;

அந்தணர்க் காபத்தில் உதவா திருப்பதனில்

     ஆருயிர் விடுத்தல்நன்று;


வஞ்சக ருடன்கூடி வாழ்தலில் தனியே

     வருந்திடும் சிறுமைநன்று;

மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு

     மலைமேவு குமரேசனே.


இதன் பொருள் —-

மயில் ஏறி விளையாடு குகனே - மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!

புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே - திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!

அருமை அறியார் பொருளைப் பஞ்சரித்து எய்தலின், பலர்மனைப் பிச்சை நன்று - ஈகையின் அருமையை உணராதவர்பால் சென்று பொருளை இரந்து பெறுதலினும், பலருடைய வீடுகளுக்கும் சென்று பிச்சை எடுத்து உண்ணல் நல்லது; 

பரிவாக உபசாரம் இல்லா விருந்தினில், பட்டினி இருக்கை நன்று - அன்புடன் உபசரியாத விருந்தினை உண்பதைவிடப் பட்டினியாக இருத்தல் நல்லது; 

தஞ்சம் ஒரு முயலை அடு வென்றி தனில் யானையொடு சமர்செய்து தோற்றல் நன்று - எளிய ஒரு முயலைக் கொன்ற பெற்ற வெற்றியினும், யானையோடு போர்செய்து தோற்பது நல்லது; 

சரச குணம் இல்லாத பெண்களைச் சேர்தலின், சந்நியாசித்தல் நன்று - இனிய பண்பு இல்லாத பெண்களைக் கூடுவதினும், துறவுபூணுதல் நல்லது; 

அஞ்சலார் தங்களொடு நட்பாய் இருப்பதனில் அரவினொடு பழகுவது நன்று - பகைவருடன் நட்பாய் இருப்பதினும், பாம்பொடு பழமுதல் நல்லது; 

அந்தணர்க்கு ஆபத்தில் உதவாது இருப்பதினில் ஆருயிர் விடுத்தல் நன்று - அருட்பண்பு உடையாருக்கு ஆதரவு செய்ய முடியாத நிலையினும், இறப்பது நல்லது; 

வஞ்சகருடன் கூடிவாழ்தலில், தனியே வருந்திடும் சிறுமை நன்று - கரவான எண்ணம் உடையோருடன் கூடிவாழ்வதினும்  தனியே வருந்தும் இழிநிலை நல்லது.

விளக்கம் —- அன்போடு முகம் களித்து இடுவதே விருந்து ஆகும். "முகம் குழைந்து நோக்கக் குழையும் விருந்து" என்னும் திருவள்ளுவர் வாய்மொழி இங்கு வைத்து எண்ணத் தகும். முகம் சுளித்து இடுவது விருந்து ஆகாது. "அதிதி தேவோ பவ".  விருந்தினர்களை இறைவனாகவே எண்ணி, அருச்சனை செய்து உபசரித்து விருந்து படைக்க வேண்டும். உபசாரங்கள் என்பது பதினாறு வகைப்படும். அவை, தவிசு(இருக்கை) அளித்தல், கை கழுவ நீர் அளித்தல், கால் கழுவ நீர் தரல், முக்குடி நீர் தரல், நீராட்டல், ஆடை சாத்தல், முப்புரி நூல் தரல், சந்தனக் குழம்பு தருதல், மலர் சாத்தல், மஞ்சளரிசி தூவல், நறும்புகை காட்டல், விளக்கு இடல், கருப்பூரம் ஏற்றல், அமுதம் ஏந்தல், அடைக்காய் தருதல், மந்திரமலரால் அருச்சித்தல். இது மகேசுர பூசை எனப்படும்.

பசித் தீ மிகவும் கொடியது. 'பசி வந்திடப் பத்தும் பறந்துபோம்'  என்பார் ஔவைப் பிராட்டியார். தனது பசியைத் தணித்துக் கொள்ள ஒருவனுடைய வீட்டிற்குச் சென்றார் ஔவையார். அந்த வீட்டுக்காரனுக்கு ஒரே மகிழ்ச்சி.  இந்த அன்னையை உபசரிக்கும் பேறு கிடைத்ததே என்று அவன் பெருமகிழ்வு கொண்டான். அகங்காரியாகிய அவன் மனைவி உணவு பரிமாறினாள். அவள் உணவு இட்ட முறையும், நடந்து கொண்ட தன்மையும், வெறுக்கத்தக்க விதமாகவே இருந்தது. ஒளவையார் அன்புக்கு எளியவர். ஆனால் அகம்பாவத்திற்கு அவர் என்றும் பணிந்ததில்லை. அவர் உள்ளம் கொதித்தது. சோற்றையும் அகங்காரியின் முகத்தையும் ஒரு முறை நோக்கினார். அப்படியே எழுந்து வெளியே போய்விட்டார். அந்த அப்பாவிக் கணவன் அவரின் பின்னாகத் தொடர்ந்து ஓடினான். “அம்மையே! தாங்கள் உணவு கொள்ளாமல் போவது கூடாது" என்று மிகவும் வேண்டினான்.

“ஐயா! அந்த உணவைப் பார்க்கவே என் கண்கள் கூசுகின்றன. அன்பில்லாத அவள் படைத்த அமுது அது. அதைக் கையில் எடுக்கவே என் உள்ளம் நாணுகிறது. தமிழ் பாடிப் பெருமை பெற்ற எனது வாய், அந்த உணவை ஏற்றுக் கொள்ளத் திறக்க மறுக்கிறது. என் உடலெல்லாம் வேதனையால் பற்றி எரிகின்றது. என்னால் அதனை உண்ணவே முடியாது” என்றும் கூறினார். மனைவியின் கொடுமைகளுக்குப் பழக்கப்பட்ட அவன், பிராட்டியிடம் மீண்டும் மன்றாடினான். அப்போது, அவர் வாயினின்றும் எழுந்த பாடல் இது.

"காணக்கண் கூசுதே, கையெடுக்க நாணுதே,

மாண் ஒக்க வாய்திறக்க மாட்டாதே, - வீணுக்கு என்

என்பு எல்லாம் பற்றி எரிகின்றது, ஐயோ!

அன்பு இல்லாள் இட்ட அமுது"

"ஐயையோ! அன்பில்லாத உனது மனையாள் இட்ட உணவு அது. அதனைக் காணவும் எனது கண்கள் கூசுகின்றன. எடுத்து உண்பதற்கு எனது கை வெட்கப்படுகின்றது. பெருமை நிறைந்த என் வாயும் திறக்க மாட்டேன் என்கிறது. பயனின்றி என் எலும்பெல்லாம் கொதிக்கின்றன” என்பது மேற்குறித்த பாடலின் பொருள்.

உண்ணுங்கள், உண்ணுங்கள் என்று அன்போடு உபசரிக்காதவருடைய வீட்டில் உண்ணாமல் இருப்பது கோடிப் பொன் பெற்றதற்கு இணையானது என்கிறார் ஔவையார்.

"உண்ணீர் உண்ணீர் என்று உபசரியார் தம்மனையில்

உண்ணாமை கோடி பெறும்."

பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான நாலடியார் இதனையே வலியுறுத்துகிறது. தனது உடம்பு பசியால் குட்டுப் போகும் என்றாலும், உண்ணத் தகதாவர் கையால் உண்ணக் கூடாது.

"தான்கெடினும் தக்கார் கேடு எண்ணற்க, தன்உடம்பின்

ஊன்கெடினும் உண்ணார் கைத்து உண்ணற்க, - வான்கவிந்த

வையகம் எல்லாம் பெறினும் உரையற்க

பொய்யோடு இடைமிடைந்த சொல்."         --- நாலடியார்.

இதன் பொருள் ---

ஒருவன் தான் கெடுவதாய் இருந்தாலும் அக் கேட்டினை நீக்கிக் கொள்ளும் பொருட்டுச் சான்றோர்க்குக் கெடுதலை எண்ணாது இருக்க வேண்டும். தனது உடம்பின் தசை பசியால் உலர்வதாயினும் உண்ணத் தகாதவரது பொருளை உண்ணாமல் இருக்க வேண்டும். வானத்தால் கவியப் பெற்றிருக்கும் உலகம் முழுமையும் பெறுவதாய் இருந்தாலும் தனது பேச்சினிடையில் பொய்யொடு கலந்த சொற்களைச் சொல்லாமல் இருக்கவேண்டும்.

காலையிலே படைத்தாலும், வேண்டாதவர்கள் வீட்டு விருந்தில் வைத்த பொரியலும், கூட்டும், வேப்பங்காயைப் போலக் கசக்கவே செய்யும். ஆனால், நேரம் கெட்ட நேரத்தில், பிற்பகலில் படைத்தது வெறும் கீரையுடன் கூடிய உணவு என்றாலும், அதை வேண்டியவர்கள் வீட்டில் இருந்து உண்டால் சுவை உடையதாக இருக்கும் என்கிறது "நாலடியார்"

"நாள்வாய்ப் பெறினும் தம் நள்ளாதார் இல்லத்து

வேளாண்மை வெங்கருனை வேம்பு ஆகும், -- கேளாய்,

அபராணப் போழ்தின்கண் அடகு இடுவரேனும்

தாமர் ஆயர் மாட்டே இனிது" --- நாலடியார்.

அமராவதி என்னும் ஊரிலே உள்ள குருக்கள் அளித்த விருந்தினை உண்டு அவனைப் புகழ்ந்து காளமேகப் புலவர் பாடிய பாடல்...

"ஆனை, குதிரை,தரும் அன்னைதனைக் கொன்றகறி,

சேனை,மன் னரைக்காய், துன்னீ அவரை --- பூநெய்யுடன்

கூட்டி அமுது இட்டான் குருக்கள் அமராபதியான்

வீட்டில் உண்டுவந்தேன் விருந்து."

இதன் பொருள் ---

அமராவதிக் குருக்கள் என்பவன் அத்திக்காய், மாங்காய், வாழைக்காய், சேனைக்கிழங்கு, நெல்லிக்காய், அவரைக்காய் ஆகியவற்றைக் கொண்டு, பொலிவு தரும் நெய்யைக் கலந்து, தின்னும் கறிகள் சமைத்து அமுது படைத்தான். அவன் வீட்டில் விருந்து உண்டு வந்தேன் (விருந்து உண்டு உவந்தேன்)

ஆனை - யானை. யானைக்கு அத்தி என்று பெயர் உண்டு. ஆனை என்னும் சொல் இங்கே அத்திக்காயைக் குறிக்கும். குதிரைக்கு 'மா' என்றும் பெயர் உண்டு. 'மா' என்பது இங்கே மாங்காயைக் குறிக்கும். அன்னை தனைக் கொன்ற கறி - வாழைக்காயைக் குறிக்கும். குலை சாய்ந்த உடனே தன்னை ஈன்ற தாயாய் இருந்த மரத்தை அழித்த வாழைக்காய் கறி என்பதை, அன்னைதனைக் கொன்ற கறி என்றார். சேனை என்பது சேனைக் கிழங்கைக் குறிக்கும். மன்னரைக் காய் - மன்+நரைக் காய். மன் = நெருக்கம். நரை - வெண்மை நிறம். நெருக்கமாகவும், வெண்மை நிறத்துடனும் காய்க்கின்ற நெல்லிக்காய். பூ நெய் - பொலிவு தருகின்ற நெய். பூவில் இருந்து கிடைக்கின்ற நெய்யாகிய தேன் என்றும் கொள்ளலாம். உண்டு வந்தேன் --- சாப்பிட்டு வந்தேன். உண்டு உவந்தேன் - உண்டு மகிழ்ந்தேன்.

"விண்நீரும் வற்றி, புரவிநீரும் வற்றி, விரும்புமழைத்

தண்ணீரும் வற்றி,புலவோர் தவிக்கின்ற காலத்திலே

உண்ணீர் உண்ணீர் என்று உபசாரம் சொல்லி உபசரித்துத்

தண்ணீரும் சோறும் தருவான் திருப்பனந்தாள் பட்டனே."

இதன் பொருள் ---

விண்ணுலகத்திலே உள்ள ஆகாயகங்கை நீரும் வற்றிப் போய், மண்ணுலகத்தில் உள்ள ஊற்று நீரும் வற்றிப் போய், எல்லோரும் விரும்புகின்ற மேகம் தருகின்ற மழை நீர் இல்லாது ஆறு, குளம் முதலியனவும் வற்றிப் போய், புலவர்கள் நீர்வேட்கை கொண்டு தவிக்கின்ற காலத்திலே, திருப்பனந்தாள் என்னும் ஊரிலே குடி இருக்கின்ற பட்டன் என்பவன், 'உண்ணுங்கள், உண்ணுங்கள்' என்று அன்போடு சொல்லி, உபசாரம் செய்து நீரும் சோறும் தருவான்.

"காட்டில் ஓடுகின்ற முயலை எய்த அம்பினை ஏந்துவதைப் பார்க்கிலும், வெளியிலே நின்ற யானையை எறிந்து தப்பிய வேலை ஏந்துதல் இனிது" என்கின்றார் திருவள்ளுவ நாயனார். “கான முயல் எய்த அம்பினில், யானை பிழைத்த வேல் ஏந்தல் இனிது” என்னும் திருக்குறள் காண்க. அம்பு தூர இலக்கில் எய்யப் பெறுவது. வேல் கைக்கு எட்டிய தூரத்தில் எறியப் பெறுவது. கானமுயல் ஆளைக் கண்டால் அஞ்சிக் காட்டுக்குள் ஓடுவது. களிறு எதிர்த்து நிற்பது.  தூர இருந்து எய்யத் தக்க களிற்றின்மேல் அணுகி எறிந்தது படைச் செருக்கு. அணுகித் துன்புறுத்தத் தக்க முயலை எய்தது படை இழிவு. ஆகவே வெற்றி தோல்விகளில் செருக்கு இல்லை.  எதிர்க்கப் பெற்ற பொருளின் உயர்வு இழிவுகளில் செருக்கு அமைந்துள்ளது. ஆதலால், யானை பிழைத்த வேல் ஏந்தல் இனிது என்று பாராட்டப் பெறுகிறது. பிறிது மொழிதலாக முயல் வலியற்ற வீரரையும், களிறு எதிர்த்துப் போரிடும் வீரரையும் காட்டிற்று.

“இசையும் எனினும் இசையாது எனினும்

வசைதீர எண்ணுவர் சான்றோர்; - விசையின்

நரிமா உளங்கிழித்த அம்பினின் தீதோ,

அரிமாப் பிழைப்பெய்த கோல்?” --- நாலடியார்.

இதன் பொருள் ---

இசையும் எனினும் இசையாது எனினும் வரை தீர எண்ணுவர் சான்றோர் --- கைகூடும் என்றாலும், கை கூடாது என்றாலும் பழித்தலில்லாத வகையில் அரிய காரியங்களையே மேன்மக்கள் எண்ணிச் செய்வர்; விசையின் நரிமா உளம் கிழித்த அம்பினின் தீதோ அரிமாப் பிழைப்புஎய்த கோல் --- விரைவோடு நரி என்னும் விலங்கின் நெஞ்சைக் கிழித்துச் சென்ற அம்பை விடப் பழிப்புடையதோ, சிங்கத்தினிடம் தவறுதலைப் பொருந்திய அம்பு?

செய்தற்கு அரிய காரியங்களையே எண்ணிச் செய்வது மேன்மக்கள் இயல்பு என்பது சொல்லப்பட்டது.

பஞ்சரித்து - இரந்து; பஞ்சம் என்ற சொல்லின் அடியாகப் பிறந்தது. தஞ்சம் - எளிமை. அஞ்சலார் - பகைவர். அந்தணர் - அருளுடையார்: அம் தண்மை உடையார் அந்தணர்; சாதியைக் குறித்ததன்று.


32. சந்திரனைப் பார்த்து நாய் குரைத்தால் என்ன

 


அந்தணரை, நல்லவரை, பரமசிவன்

     அடியவரை அகந்தை யால்ஓர்

நிந்தனைசொன் னாலுமென்ன? வைதாலும்

     என்ன? அதில் நிடேதம் உண்டோ?

சுந்தரர்க்குத் தூதுசென்ற தண்டலைநீள்

     நெறியாரே! துலங்கும் பூர்ண

சந்திரனைப் பார்த்துநின்று நாய்குரைத்த

     போதில்என்ன? தாழ்ச்சி தானே?”


இதன் பொருள் —-


சுந்தரர்க்குத்  தூது சென்ற தண்டலை நீள்நெறியாரே --- சுந்தரமூர்த்தி நாயனாருக்காக பரவையாரின் ஊடலை மாற்ற அவரிடம் தூதுபோன திருத்தண்டலை நீள்நெறி இறைவரே! துலங்கும் பூர்ண சந்திரனைப் பார்த்து நின்று நாய் குரைத்த போதில் என்ன தாழ்ச்சி --- விளங்கும் முழுநிலவைப் பார்த்து ஒரு நாய் குரைப்பதனால் அந்த முழு நிலவுக்கு என்ன குறை உண்டாகும்? (ஒன்றும் இல்லை. அதைப் போலவே), அந்தணரை --- மறையவர்களை,  நல்லவரை --- நல்ல உள்ளம் கொண்டோரை, பரமசிவன் அடியவரை --- சிவபெருமானின் அடியவரை, அகந்தையால் ஓர் நிந்தனை சொன்னாலும் என்ன --- உள்ளத்தில் அகந்தை கொண்டு பழித்துக் கூறுவதால் என்ன? வைதாலும் என்ன -- இகழ்ந்தாலும் என்ன? அதில் நிடேதம் உண்டோ --- அவ்வாறு பழித்து இகழ்வதால் அவர்களுக்குப் பிறரால் விலக்கு உண்டாகுமோ? (இல்லை என்பதாம்).

          விளக்கம் --- ‘சந்திரனைப் பார்த்து நாய் குரைத்தால் போல' என்பதும் ‘மலையைப் பார்த்து நாய் குரைத்தால் போல’ என்பதும் பழமொழிகள். சந்திரனைப் பார்த்து நாய் குரைப்பது அதன் அறிவின்மையின் வெளிப்பாடு. அதனால் சந்திரனுக்கு ஒரு குறைவும் உண்டாவது இல்லை.


பொது --- 1107. அங்கதன் கண்டகன்

 


அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

அங்கதன் கண்டகன் (பொது)


தந்தனந் தந்தனந் தந்தனந் தந்தனந்

     தந்தனந் தந்தனந் ...... தனதான


அங்கதன் கண்டகன் பங்கிலன் பொங்குநெஞ்

     சன்பிலன் துன்பவன் ...... புகழ்வாரா


அஞ்சொடுங் கும்பொதும் பொன்றையென் றுஞ்சுமந்

     தங்குமிங் குந்திரிந் ...... திரைதேடுஞ்


சங்கடங் கொண்டவெஞ் சண்டிபண் டன்பெருஞ்

     சஞ்சலன் கிஞ்சுகந் ...... தருவாயார்


தந்தொழும் பன்தழும் பன்பணிந் தென்றுநின்

     தண்டையம் பங்கயம் ...... புகழ்வேனோ


கங்கையும் பொங்குநஞ் சம்பொருந் தும்புயங்

     கங்களுங் திங்களுங் ...... கழுநீருங்


கஞ்சமுந் தும்பையுங் கொன்றையுஞ் சந்ததங்

     கந்தமுந் துன்றுசெஞ் ...... சடையாளர்


பங்குதங் கும்பசுங் கொம்புதந் தின்புறும்

     பந்தவெங் குண்டர்தங் ...... குலகாலா


பண்டிதன் கந்தனென் றண்டரண் டந்தொழும்

     பண்புநண் பும்பெறும் ...... பெருமாளே.


                            பதம் பிரித்தல்



அங்கதன், கண்டகன், பங்கு இலன், பொங்கு நெஞ்சு

     அன்பு இலன், துன்பவன், ...... புகழ் வாரா


அஞ்சு ஒடுங்கும் பொதும்பு ஒன்றை, என்றும் சுமந்து,

     அங்கும் இங்கும் திரிந்து ...... இரைதேடும்


சங்கடம் கொண்ட வெம் சண்டி, பண்டன், பெரும்

     சஞ்சலன், கிஞ்சுகம் ...... தரு வாயார்


தம் தொழும்பன், தழும்பன், பணிந்து என்று நின்

     தண்டைஅம் பங்கயம் ...... புகழ்வேனோ?


கங்கையும், பொங்கு நஞ்சம் பொருந்தும்  புயங்-

     கங்களும், திங்களும், ...... கழுநீரும்,


கஞ்சமும், தும்பையும், கொன்றையும், சந்ததம்

     கந்தமும் துன்று செஞ் ...... சடையாளர்


பங்கு தங்கும் பசுங் கொம்பு தந்து, இன்புறும்

     பந்த! வெம் குண்டர் தம் ...... குலகாலா!


பண்டிதன் கந்தன் என்று அண்டர் அண்டம் தொழும்

     பண்பு நண்பும் பெறும் ...... பெருமாளே.


பதவுரை


கங்கையும் பொங்கு நஞ்சம் பொருந்தும் புயங்கங்களும் திங்களும் கழுநீரும் --- கங்கை நதியும், பொங்கி எழும் விஷம் பொருந்திய பாம்புகளும், சந்திரனும், செங்கழுநீர் மலரும், 


கஞ்சமும் தும்பையும் கொன்றையும் சந்ததம் கந்தமும் துன்று செம் சடையாளர் --- தாமரையும், தும்பையும், கொன்றையும், எப்போதும் நறுமணம் கமழும்படி அணிந்த சிவந்த திருச்சடையை உடைய சிவபெருமானது 


பங்கு தங்கும் பசும் கொம்பு தந்து இன்புறும் பந்த --- இடப் பாகத்தில் வீற்றிருக்கும் பசிய பூங்கொம்பு போன்ற பார்வதி தேவி ஞானப்பாலைக் கொடுத்ததனால் மகிழும் திருஞானசம்பந்த மூர்த்தியே!


வெம் குண்டர் தம் குலகாலா --- கொடிய சமணர்களுடைய கூட்டத்துக்குக் காலனாய்த் திகழ்ந்தவரே! 


பண்டிதன் கந்தன் என்று அண்டர் அண்டம் தொழும் பண்பு நண்பும் பெறும் பெருமாளே --- கலைவல்லவன், கந்தபிரான் என்று விண்ணுலகிலும், மண்ணுலகிலும் உள்ளவர்கள் தொழுது, நற்பண்பையும், உமது திருவருளையும் பெற்றுக் களிக்கும் பெருமையில் மிக்கவரே!


அங்கதன் --- பழிப்புரை கூறுவோன்,


கண்டகன் --- கொடியவன்,


பங்கு இலன் --- பாங்கு இல்லாதவன்,


பொங்கு நெஞ்சு அன்பிலன் --- அன்பு பொங்குகின்ற உள்ளம் இல்லாதவன்,


துன்பவன் --- துன்பத்தில் திளைத்து இருப்பவன் ஆகிய அடியேன்,


புகழ் வாரா அஞ்சு ஒடுங்கும் பொதும்பு ஒன்றை என்றும் சுமந்து --- புகழைத் தராத ஐம்புலன்கள் தங்கியுள்ள குகையாகிய இந்த உடலை எந்நாளும் சுமந்து,  


அங்கும் இங்கும் திரிந்து இரை தேடும் சங்கடம் கொண்ட வெம் சண்டி --- அங்கும் இல்குமாகத் திரிந்து உணவைத் தேடுகின்ற வேதனைத் தொழிலை மேற்கொண்ட கொடியவன், மானம் அற்றவன்,


பண்டன் -- ஆண்மை இல்லாதவன்,


பெரும் சஞ்சலன் --- மிக்க மனக் கவலை உடையவன்,


கிஞ்சுகம் தரு வாயார் தம் தொழும்பன் --- சிவந்த வாயிதழினை உடைய விலைமாதர்க்கு ஏவல் செய்பவன்,


தழும்பன் --- குற்றம் உள்ளவன், 


பணிந்து --- தேவரீரைப் பணிந்து,


என்று நின் தண்டை அம் பங்கயம் புகழ்வேனோ --- எப்போது உமது தண்டை அணிந்ததும், அழகிய தாமரை போன்றதுமான திருவடிகளைப் புகழ்ந்து போற்றுவேனோ? 


பொழிப்புரை


கங்கை நதியும், பொங்கி எழும் விஷம் பொருந்திய பாம்புகளும், சந்திரனும், செங்கழுநீர் மலரும், தாமரையும், தும்பையும், கொன்றையும், எப்போதும் நறுமணம் கமழும்படி அணிந்த சிவந்த திருச்சடையை உடைய சிவபெருமானது இடப் பாகத்தில் வீற்றிருக்கும் பசிய பூங்கொம்பு போன்ற பார்வதிதேவி ஞானப்பாலைக் கொடுத்ததனால் மகிழும் திருஞானசம்பந்த மூர்த்தியே!

கொடிய சமணர்களுடைய கூட்டத்துக்குக் காலனாய்த் திகழ்ந்தவரே! 

கலைவல்லவன், கந்தபிரான் என்று விண்ணுலகிலும், மண்ணுலகிலும் உள்ளவர்கள் தொழுது, நற்பண்பையும், உமது திருவருளையும் பெற்றுக் களிக்கும் பெருமையில் மிக்கவரே!

பழிப்புரை கூறுவோன், கொடியவன், பாங்கு இல்லாதவன், அன்பு பொங்குகின்ற உள்ளம் இல்லாதவன், துன்பத்தில் திளைத்து இருப்பவன் ஆகிய அடியேன், புகழைத் தராத ஐம்புலன்கள் தங்கியுள்ள குகையாகிய இந்த உடலை எந்நாளும் சுமந்து,  அங்கும் இல்குமாகத் திரிந்து உணவைத் தேடுகின்ற வேதனைத் தொழிலை மேற்கொண்ட கொடியவன், மானம் அற்றவன், ஆண்மை இல்லாதவன், மிக்க மனக் கவலை உடையவன், சிவந்த வாயிதழினை உடைய விலைமாதர்க்கு ஏவல் செய்பவன், குற்றம் உள்ளவன், இப்படிப்பட்ட இழிகுணத்தவன் ஆகிய அடியேன் தேவரீரைப் பணிந்து, எப்போது உமது தண்டை அணிந்ததும், அழகிய தாமரை போன்றதுமான திருவடிகளைப் புகழ்ந்து போற்றுவேனோ? 


80. இவர்க்கு இது இல்லை

 


“சார்பிலா தவருக்கு நிலையேது? முதலிலா

     தவருக் கிலாபமேது?

தயையிலா தவர்தமக் குறவேது? பணமிலா

     தார்க்கேது வேசை உறவு?


ஊர்இலா தவர்தமக் கரசேது? பசிவேளை

     உண்டிடார்க் குறுதிநிலையேது?

உண்மையில் லாதவர்க் கறமேது? முயல்விலார்க்

     குறுவதொரு செல்வமேது?


சோர்விலா தவருக்கு மற்றும்ஒரு பயம்ஏது?

     சுகம் இலார்க்காசையேது?

துர்க்குணம் இலாதவர்க் கெதிராளி யேது?இடர்செய்

     துட்டருக் கிரக்கமேது?


மார்புருவ வாலிமேல் அத்திரம் விடுத்தநெடு

     மால்மருக னானமுருகா!

மயிலேறி விளையாடு குகனே!புல் வயல்நீடு

     மலைமேவு குமர! ஈசனே!”


இதன் பொருள் —

வாலிமேல் மார்பு உருவ அத்திரம் விடுத்த நெடுமால் மருகனான முருகா - வாலியின் மார்பில் உருவும்படி அம்பு விடுத்த நீண்ட உருவமுடைய திருமாலின் மருகராகிய முருகப் பெருமானே! 

மயில் ஏறி விளையாடு குகனே - மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!

புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே - திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!

சார்பு இலாதவருக்கு நிலை ஏது? - ஆதரவாக ஒருவமையும் இல்லாதவர்க்கு நிலையான இடம் இல்லை; 

முதல் இலாதவருக்கு இலாபம் ஏது - முதற்பொருள் வாக்காதவர்கட்கு ஊதியம் இல்லை; 

தயை இலாதவர் தமக்கு உறவு ஏது - உள்ளத்தில் இரக்கம் இல்லாதவர்கட்கு உறவினர் இல்லை; 

பணம் இல்லாதவர்க்கு வேசை உறவு ஏது - பொருள் இல்லாதவர்கட்குப் பரத்தையரின் நட்பு இல்லை; 

ஊர் இலாதவர் தமக்கு அரசு ஏது - நாடு இல்லாதவர்கட்கு அரசாட்சி இல்லை; 

பசிவேளை உண்டிடார்க்கு உறுதி நிலை ஏது? - பசித்த காலத்தில் உண்ணாதவர்கட்கு நல்ல நிலையில்லை; 

உண்மை இல்லாதவர்க்கு அறம் ஏது - உண்மை பேசாதவர்க்கு அறம் இல்லை; 

முயல்வு இலாதவர்க்கு உறுவது ஒரு செல்வம் ஏது - முயற்சி இல்லாதவர்கட்குக் கிடைக்கக் கூடிய செல்வம் இல்லை; 

சோர்வு இலாதவருக்கு மற்றும் ஒரு பயம் ஏது - களைப்பு இல்லாதவர்கட்கு மேலும் வரக் கூடிய அச்சம் ஏதும் இல்லை; 

சுகம் இலார்க்கு ஆசை ஏது? - உடல்நலம் அற்றவர்க்கு எப்பொருளிலும் விருப்பம் இல்லை; 

துர்க்குணம் இலாதவர்க்கு எதிராளி ஏது? - நற்பண்பு உடையோர்க்குப் பகைவர் இல்லை; 

இடர் செய் துட்டருக்கு இரக்கம் ஏது? - (பிறர்க்குத்) துன்பம் விளைக்கும் கொடியவர்க்கு அருள் இல்லை.

96, புராணங்கள்

“தலைமைசேர் பௌடிகம், இலிங்கம், மார்க்கண்டம், எழில்

     சாரும்வா மனம், மச் சமே,

  சைவம், பெ ருங்கூர்மம், வருவரா கம், கந்த

     சரிதமே, பிரமாண் டமும்,


தலைமைசேர் இப்பத்தும் உயர்சிவ புராணம்ஆம்;

     நெடியமால் கதை;வை ணவம்

  நீதிசேர் காருடம், நாரதம், பாகவதம்,

     நீடிய புராணம் நான்காம்;


கலைவளர்சொல் பதுமமொடு, கிரமகை வர்த்தமே,

     கமலா லயன்கா தைஆம்;

  கதிரவன் காதையே சூரிய புராணமாம்;

     கனல் காதை ஆக்கி னேயம்;


அலைகொண்ட நதியும்வெண் மதியும்அறு கும்புனையும்

     அத்தனே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!”


இதன் பொருள் —

அலைகொண்ட நதியும் வெண்மதியும் அறுகும் புனையும் அத்தனே - அலை வீசும் கங்கை ஆற்றையும் வெண்திங்களையும் அறுகையும் மிலைந்த தலைவனே!  

அருமை மதவேள் - அரிய மதவேள், அனுதினமும் மனதில் நினைதரு - எப்போதும் உள்ளத்தில் வழிபடுகின்ற, சதுரகிரிவளர் அறப்பளீசுர தேவனே - சதுரகிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!

தலைமைசேர் பௌடிகம், இலிங்கம், மார்க்கண்டம், எழில்சாரும் வாமனம், மச்சம், சைவம், பெருங்கூர்மம், வருவராகம், கந்தசரிதம், பிரமாண்டமும் - நிலைமைசேர் இப்பத்தும் உயர் சிவபுராணம் ஆம் - நிலையான இவை பத்தும் உயர்ந்த சிவபுராணங்கள் ஆகும், நெடிய மால் கதை - நெடியவனான திருமாலின் கதைகள், வைணவம், நீதிசேர் காருடம், நாரதம், பாகவதம், நீடிய புராணம் நான்கு ஆம் - பெருமையுடைய புராணங்கள் நான்கும் ஆம், கலைவளர் சொல் பதுமமொடு பிரமகை வர்த்தமே கமலாலயன் காதை ஆம் - கலைவல்லார் கூறும் பதுமபுராணமும் பிரமகைவர்த்த புராணமும் தாமரை மலரவன் காதைகள் ஆகும், கதிரவன் காதையே சூரிய புராணம் ஆம் -, கனல் காதை ஆக்கினேயம் - அக்கினியின் கதை ஆக்கினேய புராணம்.

சைவபுராணம் பத்து; வைணவபுராணம் நான்கு; பிரமபுராணம் இரண்டு, கதிரவன் புராணம் ஒன்று; ஆக்கினேய புராணம் ஒன்று; ஆகப் பதினெண் புராணங்கள்.

31. பொய் சொல்லி வாழ்வது இல்லை

 


“கைசொல்லும் பனைகாட்டும் களிற்றுரியார்

     தண்டலையைக் காணார் போலப்

பொய்சொல்லும் வாயினர்க்குப் போசனமும்

     கிடையாது! பொருள்நில் லாது!

மைசொல்லும் கார் அளிசூழ் தாழைமலர்

     பொய்சொல்லி வாழ்ந்த துண்டோ?

மெய்சொல்லி வாழாதான் பொய்சொல்லி

     வாழ்வதில்லை! மெய்ம்மை தானே!”          


இதன் பொருள் —-

சொல்லும்  பனைகாட்டும்  கைகளிற்று  உரியார் தண்டலையைக் காணார் போல - புகழப்படும்  பனையைப் போலும் துதிக்கையினை உடைய  யானையின்  தோலைப் போர்த்தவரான சிவபிரான் எழுந்தருளி உள்ள திருத்தண்டலையைக் கண்டு வணங்காதவர்க்கு உணவு கிடையாததைப்போல, பொய்சொல்லும் வாயினர்க்குப் போசனமும் கிடையாது - பொய் கூறும் வாயார்க்கு உணவும் அகப்படாது,  பொருள்  நில்லாது - கைப்பொருளும் அழிந்துவிடும், மைசொல்லும் கார் அளிசூழ் தாழைமலர் பொய்சொல்லி வாழ்ந்தது உண்டோ - மேகம் சூழ்ந்ததென்று சொல்லுமாறு கரிய வண்டினம் சூழும் தாழைமலர் பொய்கூறி  வாழ்வு  பெற்றதா? (ஆகையால்) மெய் சொல்லி வாழாதான் பொய்சொல்லி வாழ்வது இல்லை - உண்மை உரைத்து வாழமுடியாதவன் பொய் உரைத்தும் வாழப் போவதில்லை, மெய்ம்மைதான் - இது உண்மையே ஆகும்.

பனைமரத்தைக் கண்டாற்போலக் காணப்படும் துதிக்கை என்பதால், "பனைகாட்டும் கை" என்றார். 

    ஒரு காலத்தில் பிரமனும் திருமாலும் தங்களில் யார் பெரியவர் என்று வாக்குவாதம் செய்தனர். இதைப் பார்த்த சிவபரம்பொருள் அவர்கள் முன் ஓர் நெருப்புப் பிழம்பாய் காட்சி அளித்தார். ‘நானே கடவுள்’ ‘நானே கடவுள்’என்று வாதுப் போர் புரிந்த பிரமனும் திருமாலும் அச்சோதிப் பிழம்பைப் பார்த்து முதலில் திகைத்தனர். தாம் இருவரும் அறியாத வேறு ஒரு பொருள்  இருக்கிறதே என வியந்தனர். பின்னர் அவர்கள் இருவரில் அச் சோதிப்பிழம்பின் அடியையோ முடியையோ முதலில் காண்பவர் யாரோ அவரே அவர்களில் பெரியவர் என்று தமக்குள் ஒப்பந்தம் செய்து கொண்டனர்.

"பிரமன் அரி என்ற இருவரும் தம் பேதைமையால்

பரமம் யாம் பரமம் என்ற அவர்கள் பதைப்பு ஒடுங்க,

அரனார் அழல் உருவாய் அங்கே அளவிறந்து

பரமாகி நின்றவா தோணோக்கம் ஆடாமோ"         ---  திருவாசகம்.

திருமால் பன்றி உருவெடுத்து நிலத்தைப் பிளந்து சென்று பாதாளத்தில் தேடியும் அந்த சோதிப் பிழம்பின் அடியைக் காணமுடியவில்லை. திருமால் தன் தோல்வியை ஒப்புக்கொண்டார்.

பிரமனோ, கல்வியில் மிகுந்தவன் அல்லவா? அன்னப்பறவை உருவெடுத்து, முடியைக் காணவேண்டும் என்ற ஒரே நோக்கில் பறந்து கொண்டே இருந்தார். எனினும் முடியைக் காணமுடியவில்லை. முடியைக் காணாதவர் தன் தோல்வியை ஒப்புக் கொண்டிருக்கலாம். அதற்கு அவர் மனம் இசையவில்லை. காரணம் கல்விச் செருக்கு. திருமாலை வென்றுவிடவேண்டும் என்ற ஆசை அவரைப் பொய் பேசவைத்தது. தான் சோதிப் பிழம்பின் முடியைக் கண்டதாக  பிரமனே பொய் சொன்னார். தான் முடியைக் கண்டதற்கு தாழம்பூவைப் பொய்சாட்சி சொல்ல வைத்தார்.

"அடிமுடி காண்பார் அயன்மால் இருவர்

படி கண்டிலர், மீண்டும் பார்மிசைக் கூடி,

அடி கண்டிலேன் என்று அச்சுதன் சொல்ல,

முடிகண்டேன் என்று அயன் பொய் மொழிந்தானே"    --- திருமந்திரம்.

அவர்களின் செயலைப் பார்த்திருந்த பரம்பொருளாகிய சிவம், அத் தீயிலிருந்து வெளிப்பட்டு, பிரமாவுக்கு எங்கேயும் கோயில் இல்லாது சபித்தார்.  பொய்சாட்சி சொன்ன தாழம்பூவை பூசைக்கு உதவாத மலராக்கினார். பிரமனும், திருமாலும் பதைபதைத்து அஞ்சி மன்னிப்புக் கேட்டனர். அடிமுடி இல்லாமல் சோதி வடிவாக நின்ற இறைவன், இருவரின் வேண்டுகோளுக்கு இரங்கி சோதிலிங்கம் ஆனார்.

                    மால் அயன் அடிமுடி தேடிய வரலாறு. அதன் உட்பொருள்.

(1)     கீழ் நோக்குவது தாமத குணம். மேல் நோக்குவது ராஜச குணம். இந்த இரு குணங்களாலும் இறைவனைக் காணமுடியாது. சத்துவ குணமே இறைவனைக் காண்பதற்குச் சாதனமாக அமைகின்றது. "குணம் ஒரு மூன்றும் திருந்து சாத்துவிகமே ஆக" என்பார் தெய்வச் சேக்கிழார் சுவாமிகள்.

(2)     அடி - தாமரை. முடி - சடைக்காடு. தாமரையில் வாழ்வது அன்னம். காட்டில் வாழ்வது பன்றி. கானகத்தில் வாழும் பன்றி பாதமாகிய தாமரையையும், தாமரையில் வாழும் அன்னம் முடியாகிய சடைக் காட்டையும் தேடி, இயற்கைக்கு மாறாக முயன்றதால், அடிமுடி காணப்படவில்லை.  இறைவன் இயற்கை வடிவினன். இயற்கை நெறியாலேயே காணப்படவேண்டும்.

(3)     திருமால் செல்வமாகிய இலக்குமிக்கு நாயகன். பிரமன் கல்வியாகிய வாணிதேவிக்கு நாயகன். இருவரும் தேடிக் கண்டிலர்.  இறைவனைப் பணத்தின் பெருக்கினாலும், படிப்பின் முறுக்கினாலும் காணமுடியாது. பத்தி ஒன்றாலேயே காணலாம்.

(4)     "நான்" என்னும் ஆகங்காரம் ஆகிய அகப்பற்றினாலும், "எனது" என்னும் மமகாரம் ஆகிய புறப்பற்றினாலும் காண முடியாது. யான் எனது அற்ற இடத்திலே இறைவன் வெளிப்படுவான். "தானே உமக்கு வெளிப்படுமே" என்றார் அருணை அடிகள்.

(5)     "நான் காண்பேன்" என்ற முனைப்புடன் ஆராய்ச்சி செய்வார்க்கு இறைவனது தோற்றம் காணப்பட மாட்டாது.  தன் முனைப்பு நீங்கிய இடத்தே தானே வெளிப்படும். ஆன்மபோதம் என்னும் தற்போதம் செத்துப் போகவேண்டும் என்பதை உணர்த்துவது திருவாசகத்தில் "செத்திலாப்பத்து".

(6)     புறத்தே தேடுகின்ற வரையிலும் இறைவனைக் காண இயலாது. அகத்துக்குள்ளே பார்வையைத் திருப்பி அன்பு என்னும் வலை வீசி அகக் கண்ணால் பார்ப்பவர்க்கு இறைவன் அகப்படுவான். "அகத்தில் கண்கொண்டு காண்பதே ஆனந்தம்" என்றார் திருமூலர்.

(7)     பிரமன் - வாக்கு.  திருமால் - மனம். வாக்கு மனம் என்ற இரண்டினாலும் இறைவனை அறியமுடியாது. "மாற்றம் மனம் கழிய நின்ற மறையோன்" அவன்.

(8)   பிரமன் - நினைப்பு. திருமால் - மறப்பு. இந்த நினைப்பு மறப்பு என்ற சகல கேவலங்களாகிய பகல் இரவு இல்லாத இடத்தில் இறைவனுடைய காட்சி தோன்றும். "அந்தி பகல் அற்ற இடம் அருள்வாயே”.


      உரையாடுவதற்கும்  உண்பதற்கும்  உரிய  வாயைக் கொண்டு,  பொய்ம் மொழி உரைத்தால்  உணவும்  பொய்யாவது  இயற்கை  என்பதை அறிவுறுத்த, ‘பொய் உரைக்கும் வாயினர்க்குப் போசனமும் கிடையாது!' என்றார். ‘பொய் சொன்ன வாய்க்குப் போசனம் கிட்டாது' என்பது பழமொழி.


79. துன்பம் வந்தாலும் பயன் தருபவை

 


“ஆறுதண் ணீர்வற்றி விட்டாலும் ஊற்றுநீர்

     அமுதபா னம்கொடுக்கும்

ஆதவனை ஒருபாதி கட்செவி மறைத்தாலும்

     அப்போதும் உதவிசெய்வன்


கூறுமதி தேய்பிறைய தாகவே குறையினும்

     குவலயத் திருள்சிதைக்கும்

கொல்லைதான் சாவிபோய் விட்டாலும் அங்குவரு

     குருவிக்கு மேய்ச்சலுண்டு


வீறுடன் உதாரிதான் மிடியான போதினிலும்

     மிகநாடி வருபவர்க்கு

வேறுவகை இல்லையென் றுரையா தியன்றன

     வியந்துளம் மகிழ்ந்துதவுவான்


மாறுபடு சூரசங் காரகம் பீரனே!

     வடிவேல் அணிந்தமுருகா!

மயிலேறி விளையாடு குகனே!புல் வயல்நீடு

     மலைமேவு குமர! ஈசனே!"


இதன் பொருள் ---


        மாறுபடு சூரசங்கார கம்பீரனே - பகைத்த சூரனைக் கொன்ற வீரனே!

வடிவேல் அணிந்த முருகா - கூரிய வேலை ஏந்திய முருகனே!

மயில் ஏறி விளையாடு குகனே - மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!

புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே - திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!

தண்ணீர் வற்றிவிட்டாலும் ஆறு, ஊற்று நீர் அமுதபானம் கொடுக்கும் - தண்ணீர் வறண்டு போயினும் ஆறு தன் ஊற்றினாலே இனிய குடிநீரைத் தரும்; 

ஆதவனை ஒருபாதி கட்செவி மறைத்தாலும், அப்போதும் உதவி செய்வன் - கதிரவனுடைய அரைப் பகுதியைப் பாம்பு மறைத்தாலும் அந்நிலையிலும் கதிரவன் ஒளி தருவான்; 

கூறும் மதி தேய்பிறையதாகவே குறையினும், குவலயத்து இருள் சிதைக்கும் - சொல்லப்பட்ட திங்கள் தேய்பிறையாகக் குறைந்தாலும் உலகிலுள்ள இருளை ஓட்டும்; 

கொல்லைதான் சாவி போய்விட்டாலும், அங்கு வரு குருவிக்கு மேய்ச்சல் உண்டு - புன்செய் நிலம் விளைவின்றிப் பட்டுப்போனாலும் அந்நிலத்திற்கு வரும் குருவிகளுக்குத் தீனி கிடைக்கும்; 

    (அது போலவே)

வீறுடன் உதாரிதான் மிடியான போதினிலும் - சிறப்புடன் கொடுப்போன் வறுமையுற்றாலும், மிகநாடி வருபவர்க்கு - சாலவுந் தேடிவருவோர்களுக்கு, இல்லையென்று உரையாது வேறுவகை இயன்றன வியந்து உளம் மகிழ்ந்து உதவுவான் - இல்லை என்று கூறாமல் வேறு வகையிலே முடிந்த பொருள்களை வியப்புறும்படி மனம் மகிழ்ந்து கொடுப்பான்.


     கதிவரனை இராகு எனும் பாம்பு மறைப்பதாகக் கூறுவது புராணக்கதை. கட்செவி - பாம்பு (கண்ணே செவியாகவும் உடையது). கொல்லை என்பது முல்லை நிலம்: இக்காலத்திற் புன்செய் எனப்படும்.  காடும் காடுசார்ந்த இடமும் முல்லை. உதாரி (வட) - கொடையாளி. உதாரம் - கொடை. மிடி - வறுமை. ‘வியந்து' என்பதற்கு ‘வியக்க' எனப் பொருள் கூறல் வேண்டும். கம்பீரம் (வட). வீரத் தோற்றம். 

“இலன் என்னும் எவ்வம் உரையாமை ஈதல், குலன் உடையான் கண்ணே உள' என்பது திருவள்ளுவ நாயனார் அருளிய பொய்யாமொழி. “ஈதல், இசைபட வா.்தல், அது அல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு” என்னும் திருக்குறளின் வாய்மையை உணர்ந்த, கொடைப் பண்பு உடையோர் தம் உயிரையும் விடுவரே ஒழிய இல்லை என்று இயம்பார்.  “இன்மையால் சென்று இரந்தோர்க்கு இல்லை என்னாது ஈந்து உவக்கும் தன்மையார்” என்பது திருஞானசம்பந்தர் தேவாரம்.

95. இல்லற மாண்பு

 


“தந்தைதாய் சற்குருவை இட்டதெய் வங்களைச்

     சன்மார்க்கம் உளமனை வியைத்

  தவறாத சுற்றத்தை ஏவாத மக்களைத்

     தனைநம்பி வருவோர் களைச்


சிந்தைமகிழ்வு எய்தவே பணிவிடைசெய் வோர்களைத்

     தென்புலத் தோர் வறிஞரைத்

  தீதிலா அதிதியைப் பரிவுடைய துணைவரைத்

     தேனுவைப் பூசுரர் தமைச்


சந்ததம் செய்கடனை என்றும்இவை பிழையாது

     தான்புரிந் திடல்இல் லறம்;

  சாருநலம் உடையராம் துறவறத் தோரும்இவர்

     தம்முடன் சரியா யிடார்!


அந்தரி உயிர்க்கெலாந் தாய்தனினும் நல்லவட்

     கன்பனே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!”


இதன் பொருள் —-

அந்தரி உயிர்க்கு எலாம் தாய் தனினும் நல்லவட்கு அன்பனே - பார்வதிதேவியும், உநிர்க்கு எல்லாம் தாயியினும் நல்லவளுமான உமையம்மைக்குக் காதலனே!

அருமை மதவேள் - அரிய மதவேள், அனுதினமும் மனதில் நினைதரு - எப்போதும் உள்ளத்தில் வழிபடுகின்ற, சதுரகிரிவளர் அறப்பளீசுர தேவனே - சதுரகிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!

தந்தைதாய் சற்குருவை - தந்தை தாயரையும் நல்லாசிரியனையும், இட்ட தெய்வங்களை - வழிபாடு தெய்வங்களையும், சன்மார்க்கம் உள மனைவியை - நல்லொழுக்கமுடைய இல்லாளையும், தவறாத சுற்றத்தை - நீங்காத உறவினரையும், ஏவாத மக்களை - குறிப்பறிந்து செய்யும் பிள்ளைகளையும், தனை நம்பி வருவோர்களை - தன்னை நம்பிப் புகலாக அடைந்தோர்களையும், சிந்தை மகிழ்வு எய்தவே பணிவிடை செய்வோர்களை - மனம் மகிழத் தொண்டு புரிவோர்களையும், தென்புலத்தோர் வறிஞரை - தென்புலத்தாரையும் ஏழைகளையும், தீது இலா அதிதியை - குற்றமற்ற விருந்தினரையும், பரிவு உடைய துணைவரை - அன்புமிக்க உடன்பிறப்பாளர்களையும், தேனுவை - பசுக்களையும், பூசுரர் தமை - அந்தணர்களையும், (ஆதரித்தலும்) சந்ததம் செய் கடனை - எப்போதும் செய்யும் கடமைகளையும், இவை - (ஆகிய) இவற்றை, சந்ததம் பிழையாது - எப்போதும் தவறாமல், தான் புரிந்திடல் இல்லறம் - ஒருவன் இயற்றுவது இல்லறம் எனப்படும், சாரும் நலம் உடையர் ஆம் துறவறத்தோரும் இவர் தம்முடன் சரிஆயிடார் - பொருந்திய நன்மையை உடையராகிய துறவு நெறியிலே தவறாது நிற்போரும் இவர்களுடன் ஒப்பாகமாட்டார்.

      “அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை, அஃதும் பிறன் பழிப்பது இல்லாயின் நன்று” என்னும் திருவள்ளுவ நாயனார் வாய்மொழியையும், “இல்லறம் அல்லது நல்லறம் அன்று” என்னும் ஔவையின் அருள்மொழியையும் கருத்தில் கொள்க.

30. தான் ஒன்று நினைக்கத் தெய்வம் ஒன்று நினைக்கும்

“மானொன்று வடிவெடுத்து மாரீசன்

      போய்மடிந்தான்! மானே என்று

தேன்ஒன்று மொழிபேசிச் சீதைதனைச்

      சிறையிருக்கத் திருடிச் சென்றோன்

வானொன்றும் அரசிழந்தான்! தண்டலையார்

      திருவுளத்தின் மகிமை காணீர்!

தானொன்று நினைக்கையிலே தெய்வம்ஒன்று

      நினைப்பதுவும் சகசந் தானே.”


இதன் பொருள் —-

தண்டலையார் திருவுளத்தின் மகிமை காணீர் - திருத்தண்டலை என்னும் திருத்தலத்தில் திருக் கோயில் கொண்டு விளங்கும் இறைவருடைய  திருவுள்ளப் பெருமையைப் பாருங்கள்!, மான்  ஒன்று  வடிவு எடுத்துப்போய் மாரீசன் மடிந்தான் - மானைப்போல்  ஒன்றிய  வடிவை எடுத்துச் சென்று (இராமனை ஏமாற்றச் சென்ற) மாரீசன் இறந்தான், மானே என்று தேன் ஒன்றும்  மொழிபேசிச்  சீதைதனைச்  சிறையிருக்கத் திருடிச் சென்றோன் - மானே எனக் கூப்பிட்டுத் தேனைப்போல இனிக்கும் மொழிகளை மொழிந்து, சீதையைத்  திருடிச்  சிறைக்குக்  கொண்டு சென்ற இராவணன், வான் ஒன்றும் அரசு இழந்தான் - (நிலத்துடன்) வானையும் சேர்த்த தன் ஆட்சியைப் பறிகொடுத்தான், (ஆகையால்) தான் ஒன்று நினைக்கையிலே தெய்வம் ஒன்று நினைப்பதுவும் சகசம் தான் - (உலகில் ஒருவன்) தான் ஒரு வேலையை எண்ணும்போது, தெய்வம் மற்றொன்று எண்ணுவது இயல்பே!

       ‘தானொன்று நினைக்கத் தெய்வம் ஒன்று நினைத்தது' என்பது பழமொழி. தீவினை நினைத்தல் கூடாது. அது  இறைவன் திருவுள்ளச் சம்மதம் ஆனது அல்ல. அவ்வாறு தீவினை செய்தால் அதன் பயன் நன்றாக இராது.  நல்ல முயற்சியையும் அதன் பயனையும் இச் செய்யுள் குறை கூறவில்லை என்று அறிக.

பொது --- 1126. பட்டாடைக்கே

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் பட்டு ஆடைக்கே (பொது) முருகா!  திருவடியில் அணுக வரம் அருள்வாயே தத்தா தத்தா தத்தா தத்தா      தத்தா தத்தத் .....