கெடுவது காட்டும் குறிகள்

 

கெடுவது காட்டும் குறிகள்

----

 

நட்புப் பிரித்தல், பகைநட்டல், ஒற்று இகழ்தல்,

பக்கத்தார் யாரையும் ஐயுறுதல், - தக்கார்

நெடுமொழி கோறல், குணம்பிறிது ஆதல்,

கெடுவது காட்டும் குறி.

 

            ஒருவன், பின்னாளில் கெட்டுப் போவான் என்பதை முன்னே அறிவிக்கும் ஆறு வகையான அடையாளங்கள் பற்றி, குமரகுருபர அடிகள், "நீதிநெறி விளக்கம்" என்னும் நூலில், மேல் குறித்த பாட்டில் கூறி அருளுகின்றார்.

 

இதன் பொருள் ---

 

            (1) நட்புப் பிரித்தல் --- பழமையான நண்பரைப் பிரியும்படி செய்து, பகைவர் ஆக்கிக் கொள்ளுதல், (நண்பர்களாக இருப்பவரைப் பிரித்து, அவர்க்குள் பகைமை உண்டாக்குதல்)

 

            (2) பகை நட்டல் --- (நெடுங்காலம்) பகைவராக உள்ளவரை நண்பர் ஆக்கிக் கொள்ளுதல்,

 

            (3) ஒற்று இகழ்தல் --- (பகைவர், அயலவர், நட்பினர் ஆகிய மூவரிடத்தும் நிகழும்) நன்மை தீமைகளை அறிந்து சொல்லுகின்ற நல்லோரை இகழ்தல்.

 

            (4) பக்கத்தார் யாரையும் ஐயுறுதல் --- தன் பக்கத்தில் உள்ளவர் யாரையும் சந்தேகத்தோடு பார்த்தல், அணுகுதல்.

 

            (5) தக்கார் நெடுமொழி கோறல் --- தக்க சான்றோர் கூறும் அறிவுரைகளை இகழ்ந்து கேளாது ஒழிதல், மீறுதல், அலட்சியம் பண்ணுதல்.

 

            (6) குணம் பிறிது ஆதல் --- தனது இயல்பான நல்ல குணத்தில் மாறுபடுதல்.

 

            (ஆகிய இந்த ஆறு குணங்களும், ஒருவன்) கெடுவது காட்டும் குறி --- இனிக் கெட்டு அழியப் போவதைக் காட்டுகின்ற குறிகள் (அடையாளங்கள்) ஆகும்.

விளக்கம்

            "நட்பிடைக் குய்யம் வைத்தான்" என்று பின்னால் வரும் பாடலில் அடிகளார் குறிப்பிடுவார். நண்பர்களிடையே வஞ்சகம் கொள்ளுதல் தவறு. ஒருவருக்கொருவர் நன்மை கருதி வாழ்தல், தவறு கண்டபோது இடித்துக் கூறித் திருத்துதல், துன்பத்தில் பங்கு கொள்ளுதல் என்பவை நட்புக்கு இலக்கணம். சிரித்துப் பேசிப் பழகி, நன்மை வந்தபோதெல்லாம் உடன் இருந்து, கொஞ்சிக் குலாவி, இடுக்கண் வந்தபோது நீங்குகின்றவர் நண்பர் ஆகார். நண்பர்களாக இருப்பவரைப் பிரித்து, அவர்களுக்குள் பகைமையை உண்டாக்குதலும் கூடாது. நண்பராகப் பழகிய ஒருவரைப் பகைவர் ஆக்கிக் கொள்ளவும் கூடாது. பிடிக்கவில்லையானால், சொல்லாமல், கொள்ளாமல், ஒதுங்கிப் போய்விட வேண்டும். "நட்புப் பிரித்தல்" கூடாது. அது, கேட்டினைத் தரும் என்றார்.

 

            "சொல்லுவார் வார்த்தை கேட்டுத் தோழமை இகழ்வோர் புல்லர்" என்கின்றது "விவேக சிந்தாமணி" என்னும் நூல். கீழோரின் துற்புத்தியைக் கேட்டு, ஆராயமல் நட்பை இகழ்பவர்கள் அற்பர்கள் ஆவர். இவர்களைக் "குண்டர்கள்" என்கின்றார் அருணகிரிநாதப் பெருமான். "தோழமை கொண்டு சலம் செய் குண்டர்கள்" என்பார் வல்லக்கோட்டைத் திருப்புகழில்.

 

            குண்டன் என்னும் சொல்லுக்கு, கணவனைப் பிழைத்து, சோர நாயகனுக்குப் பிறந்தவன் என்று பொருள். மனத்தினால் பிழைத்தவள் வயிற்றில் பிறந்தவனுக்கு நற்குணங்கள் அமையாது. ஒருவனிடம் நட்புக் கொண்டு, பழகிய பின்னர், அந்த நண்பனுக்குத் தீங்கு செய்தல் கூடாது. மித்திரத் துரோகம் மிகப் பொல்லாதது. சலம் - வஞ்சகம், துரோகம்.

            ஏதோ ஒரு காரணம் கருதி, நல்லோரைப் பகைத்துக் கொள்ளுபவர்களும் உண்டு. அது மிக்க தீமையைத் தரும். "பல்லார் பகை கொளலின் பத்து அடுத்த தீமைத்தே, நல்லார் தொடர்கை விடல்" என்று திருவள்ளுவ நாயனார் அருளியது காண்க. மேலோராகிய சான்றோரின் தொடர்பை விடுவதானது, பலருடைய பகையைக் கொள்வதைக் காட்டிலும், பத்து மடங்கு தீமையை உடையது என்கின்றார் நாயனார்.


    ஏதோ ஒரு நன்மை கருதி,  நெடுங்காலம் பகைவராக உள்ளவரை நண்பர் ஆக்கிக் கொள்ளுதலும் கூடாது. "இவ்வளவு காலம் பகைமை பாராட்டியவன், இப்பொழுது ஏன் நட்பு பாராட்டுகின்றான்" என்று எண்ணி, காலம் வரும்போது, தனது பழைய பகைமையைத் தீர்த்துக் கொள்ள அது வழிவகுக்கும். எனவே, "பகை நட்டல்" என்பது கேட்டினைத் தரும் என்றார். "பகை நட்பாம் காலம் வருங்கால், முகம் நட்டு, அகம் நட்பு ஒரீஇ விடல்" என்று திருவள்ளுவ நாயனார் அறிவுறுத்தியது காண, பகைவனாக இருந்த ஒருவன், தம்மிடம் நட்புக் கொள்ளும் சமயம் வரும்போது, முகத்தால் நேசித்து, உள்ளத்தால் கொள்ளும் நட்பினை நீக்கி விடுதல் வேண்டும் என்பது தெளிவாகும்.

    ஒற்று இகழ்தல் என்பது பெரும்பாலும் அரசர்க்குக் கூறியது ஆகும். என்றாலும்,  நம்மிடத்தில் அன்பு பூண்ட ஒருவர், நமது நலம் விரும்பியாக உள்ள ஒருவர், நமக்கு நண்பராக உள்ளவர், அயலவர், பகைவர் ஆகிய மூவரிடத்திலும் உண்டாகும் நன்மை தீமைகள் அவ்வபோது நமக்கு எடுத்துக் கூறி நல்வழிப் படுத்துகின்றவர் உண்டு. அத்தகையோர் கூறும் மொழிகளை இகழ்வதால் கேடு உண்டாகும்.

    பக்கத்தார் யாரையும் ஐயுறுதல் --- தமது பக்கத்தில் உள்ள எல்லோரையும் எல்லாக் காலத்திலும் சந்தேகிக்கக் கூடாது. "தேரான் தெளிவும், தெளிந்தான்கண் ஐயுறவும் தீரா இடும்பை தரும்" என்றார் திருவள்ளுவ நாயனார். ஆராயாமல் ஒருவனிடத்துத் தெளிவு கொள்ளுதலும், தெளிந்த ஒருவனிடத்தில் ஆராயாமல் ஐயம் கொள்ளுதலும், தீராத துன்பத்தையே தரும்.

    தக்கார் நெடுமொழி கோறல் --- கோறல் என்னும் சொல்லுக்கு, இகழ்தல், கேளாது ஒழிதல், மீறுதல், அலட்சியம் பண்ணுதல் எனப் பல பொருள் உள்ளது. தக்கார் என்றது தகுதி உள்ள சான்றோரை. சான்றோர் கூறும் அறிவுரைகளைக் கேட்டு நடப்பது போல, அவரொடு வஞ்சகமாக இருந்து, நன்மைகளைத் துய்த்துவிட்டு, அதன் பின் அவரோடு மாறுபாடு கொண்டு, பிறர் முன்னிலையில் இகழ்ந்து பேசுதல். இது இக்காலத்தில் வாலாயமாகக் காணப்படுவது. தக்கோராக இருந்தாலும், தனக்கு ஏற்றது போல், தனது கருத்துக்கு இசைவாக ஏதும் கூறாமல் மாறுபட்டால், அவரைத் தூக்கி ஏறிந்து, தூற்றுவது அனுபவத்தால் அறியப்படும். இது பெரியாரைப் பிழைத்தல் ஆகும். "எரியால் சுடப்படினும் உய்வு உண்டாம், உய்யார் பெரியார்ப் பிழைத்து ஒழுகுவார்" என்று திருவள்ளுவ நாயனார் கூறுகின்றார். நெருப்பினால் சுடப்பட்டாலும் கூட ஒருவகையில் உயிர் பிழைத்துக் கொள்ளலாம். ஆனால், பெரியார் ஒருவரிடத்தல் பிழை செய்தவன் தப்பிப் பிழைக்கமாட்டான் என்கின்றார் நாயனார்.

    குணம் பிறிது ஆதல் --- தீய எண்ணங்கள் மனதில் உதிக்க உதிக்க, தீய குணங்கள் தொற்றிக் கொள்ளும். இதுவரையில் அந்நியமாக இருந்த குணங்களைக் கொள்ளும் நிலை உண்டாகும். சூதாடுதல், கள்ளுண்ணல், துரோகம், பொறாமை, நன்றி மறத்தல், இன்ன பிற விரும்பத் தகாத குணங்களைக் கைக்கொள்ளுதல். சுருங்கச் சொன்னால், அறநெறிக்கு மாறாக நடத்தல்.

    "கேடு வரும் பின்னே, மதி கெட்டு வரும் முன்னே" என்னும் முதுமொழியை இங்கே நினைவில் கொள்ளுதல் வேண்டும்.

    மேலே குறித்த ஆறு குணங்களும் ஒருவனிடத்தில் பொருந்தி இருக்குமாயின், அவன் நிச்சயம் கெட்டுப் போவான் என்பதை, மகாபாரதத்தில் துரியோதனனைக் கொண்டு அறியலாம். அவனது செயல்கள், இந்தப் பாட்டில் அடிகளார் கூறியுள்ளதற்கு இலக்கியமாக அமைந்துள்ளன. அவன் பாண்டவரைப் பகைத்துக் கொண்டான். சகுனி முதலான தீயவரோடு நட்புப் பூண்டு இருந்தான். அசுவத்தாமன் முதலானோரை ஐயப்பட்டான். பீஷ்மர், விதுரர், கண்ணன், தருமன் முதலானோர் கூறிய உறுதிமொழிகளைக் கேளாது ஒழிந்தான். நல்லோர் யாரும் விரும்பத் தகாத தீய குணங்களில் அவன் தலை நின்றான். பாஞ்சாலியை அரசவையில் மானபங்கம் செய்தான். அவனது இச்செயல்கள் யாவும், அவனது அழிவுக்குக் காரணமாக அமைந்தன.


No comments:

Post a Comment

பொது --- 1091. கருதியே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கருதியே மெத்த (பொது) முருகா!  அடியேன் உமது திருவடிப் பெருமையையே பேசுமாறு அருள் புரிவாயாக. தனதனா தத்த தனத...