ஆத்திசூடி --- 07. எண் எழுத்து இகழேல்

 

 

                                         ஆத்திசூடி --- 7. எண் எழுத்து இகழேல்.

 

இதன் பொருள் ---

 

எண் --- கணித நூலையும், எழுத்து --- இலக்கண நூலையும், இகழேல் - இகழ்ந்து தள்ளாமல், நன்றாகக் கற்றுக்கொள்.

 

கணிதம் --- கணிக்கப் படுவது. கணிக்கப் படுவதாகிய சோதிடத்தையும் குறிப்பதாகக் கொள்ளவும் இடம் உண்டு. சோதிடத்தில் வல்லவர்களை, "கணித மங்கல நூல் வல்லார்" என்று தெய்வச் சேக்கிழார் பெருமான் அருளி உள்ளது, இக் கருத்துக்கு இடம் தருகின்றது.

 

     மேலே, அறச் செயல்களைச் செய்வதற்கு வேண்டிய ஊக்கத்தைக் கைவிடல் ஆகாது (ஊக்கமது கைவிடேல்) என்று அறிவுறுத்திய ஔவைப் பிராட்டியார், அறச் செயல்களின் பகுதியாக விளங்கும், ஈகை, ஒப்புரவு ஆகியவற்றை மேற்கொள்ளும் பொழுது, நன்மை தீமைகளை அறிந்து செயல்படவேண்டும் என்பதால், அதற்குரிய அறிவினைப் புகட்டும் நூல்களை ஒருவன் ஓதி, உணர்ந்த தெளிய வேண்டும்.  அவற்றில் சொல்லப்பட்டுள்ள அறிவுரைகளை, தனது அறியாமையால், இகழ்ந்து போக்கி விடாமல், அவற்றைப் போற்றிக் கற்றுக் கொள்ளவேண்டும் என்று அறிவுறுத்தினார்.

 

     "ஈதல் அறம்" என்று சொல்லப்பட்டதாயினும், "ஆற்றின் அளவு அறிந்து ஈக" என்று திருவள்ளுவ நாயனார் அறிவுறுத்தி உள்ளதை அறிந்து, அறச் செயல்களை ஆற்றவேண்டிய பாங்கினை உணர்வதற்கு இலக்கணம் என்று சொல்லப்படும் எழுத்து அறிவும், அளவு அறிந்து கொடுத்தற்கு, எண்ணும் அறிந்து இருக்கவேண்டியது அவசியம் ஆகின்றது.

 

     இதனை உணர்த்தற்கு,

 

"எண் என்ப, ஏனை எழுத்து என்ப, இவ்விரண்டும்

கண் என்ப வாழும் உயிர்க்கு".

 

என்று அருளினார் திருவள்ளுவ நாயனார். கணக்கு முதலிய கலைகள், பிறவகை நூல்கள் என்பன ஆகிய இந்த இரண்டும், மங்கல நிலையில் உயிர் வாழ்கின்ற மக்களுக்குக் கண்களைப் போன்றவை எனச் சொல்வர் என்று உலகத்தார் கூற்றாகவே, நமது ஐயன் திருவள்ளுவர் அறிவுறுத்தினார் என்பதை அறிக.

 

     "திரிகடுகம்" என்னும் நூலில் சொல்லப்பட்டுள்ள பின்வரும் பாடல் இதற்குச் சிறந்ததோர் விளக்கமாக அமைந்திருத்தல் காணலாம்.

 

ஈதற்குச் செய்க பொருளை, அறநெறி

சேர்தற்குச் செய்க பெருநூலை, - யாதும்

அருள் புரிந்து சொல்லுக சொல்லை,இம் மூன்றும்

இருள் உலகம் சேராத ஆறு.        

 

இதன் பொருள் ---

 

     பொருளை ஈதற்குச் செய்க --- செல்வத்தைப் பிறருக்குக் கொடுக்கும் பொருட்டுத் தேடுவாயாக. அறநெறி சேர்தற்குப் பெருநூலைச் செய்க --- அறத்தின் வழியில் ஒழுகுவதற்கு பெருமை தருவதாகிய நூற்பொருளைக் கற்றுத் தேர்வாயாக. (அவ்வாறு பொருளையும் தேடி, அறநூல்களையும் கற்றுத் தேர்ந்த பின்னர்) யாதும் சொல்லை அருள் புரிந்து சொல்லுக --- எத்தன்மையது ஆகிய சொல்லையும் இறையருளைப் பெறுதலை விரும்பிச் சொல்லுவாயாக. இம் மூன்றும் இருள் உலகம் சேராத ஆறு - (மேலே சொல்லப்பட்ட) இம் மூன்றுமே, துன்பத்தை விளைப்பதாகிய நரக உலகைச் சேராமல் காத்துக் கொள்வதற்குக் காரணமாகிய வழிகள் ஆகும்.

 

     பொருளைத் தேடும் வழிகளையும், சேர்த்த பொருளைக் காத்தலும், பிறருக்குக் கொடுத்தலும், பிறரிடம் இருந்து தான் கொள்ளுதலும் ஆகிய வழிகளை அறியாமல், சோர்வு உண்டாகுமானால், பொருள் சேர்வது தடைப்பட்டுப் போக நேரும். மேலும், செயற்கரிய செயல்களைச் செய்ய வேண்டும் என்னும் ஆர்வம் மிகுதியால் உள்ள பொருளை இழ்ந்து போதலும் நேரும் என்பதை அறியவேண்டும்.

 

     தமது நிலைமையை, வல்லமையை அறியாது, ஊக்கம் மிகுதியால் செயல்களைச் செய்து, இடையில் தமது மன எழுச்சியாகிய ஊக்கம் குன்றி, செயல் ஒடிந்த போனவர் பலர் என்பதை அறியவேண்டும் என்பதற்காக, "உடைத்தம் வலி அறியார், ஊக்கத்தின் ஊக்கி, இடைக்கண் முறிந்தார் பலர்" என்று திருவள்ளுவ நாயனார் அருளி உள்ளார்.

 

     மேலும், தமக்கு உள்ள பொருளின் அளவை எண்ணிப் பார்க்காது உதவுகின்ற தன்மை இருந்தால், பொருள் வளத்தின் எல்லையானது விரைவில் அழிந்து போகும் என்பதை அறிவிக்க, "உளவரை தூக்காத ஒப்புரவு ஆண்மை, வளவரை வல்லைக் கெடும்" என்றும் நாயனார் அருளி உள்ளதையும் எண்ணிப் பார்த்தால், ஒருவன், "எண்ணையும், எழுத்தையும் இகழாமல் கற்றுத் தெளிய வேண்டும்" என்று ஔவைப் பாட்டி அறிவுறுத்தியதன் அருமை விளங்கும்.


No comments:

Post a Comment

ஆமையும் மனிதனும்

  ஆமையும் மனிதனும் ----- உடலைப் பற்றி நின்று துன்புறுத்தும் நோய் போல, உயிரைப் பற்றி நின்று துன்புறுத்துவது ஆகலின் பிறவி நோய் எனப்பட்டது. ந...