பேதைக்குச் சொன்னாலும் உறைக்காது, தன்னாலும் விளங்காது

 

 

பேதைக்கு, சொன்னாலும் உறைக்காது

தானாகவும் விளங்காது

-----

 

     திருக்குறளில் "புல்லறிவாண்மை" என்னும் ஓர் அதிகாரம். புல்லறிவாண்மை என்பது, அறிவில் சிறுமையையே பெருமையாகக் கருதி நடந்துகொள்ளுதல் ஆகும். அதாவது, சிற்றறிவினனாக இருந்துகொண்டே, தன்னைப் பேரறிவு உடையவனாக மதித்து, உயர்ந்தோர் சொல்லும் உறுதிக் சொல்லை மனத்துள் கொள்ளாமை ஆகும்.

 

     இந்த அதிகாரத்துள் வரும் எட்டாம் திருக்குறளில், "புல்லறிவு உடையவன், தனக்கு நன்மை பயப்பனவற்றை அறிவு உடையார் சொன்னாலும் அதனை ஏற்றுச் செய்யமாட்டான்; அது அன்றியும் இன்னது செய்தல் வேண்டும் என்று தானாகவும் தேர்ந்து அறியமாட்டான். அந்த உயிரானது உடம்பில் இருந்து நீங்கும் அளவும், இந்த பூமியானது பொறுத்தற்கு அரியதாகிய ஒரு நோய் ஆகும்" என்கின்றார் நாயனார்.

 

     உயிரானது அறிவு உடைய பொருளாக இருந்தும், தனது வினைக்குத் தக்க அளவாக எடுத்து வந்த உடம்பின் தன்மையால் மயங்கிய அறிவினை உடையதாய் வேறுபட்டு நிற்கும். தான் அறிவதற்கும் அல்லாது, அறிவு உடையோர் சொல்லைக் கேட்டு நடப்பதும் இல்லாது, தனக்குத் துன்பத்தைத் தேடிக் கொள்வதுடன், பிற உயிர்க்கும் துன்பத்தைத் தரும். அது நற்கதியை அடைவதற்கு உரிய வழியைத் தேடிக் கொள்ளாது இருப்பதுடன், பிற உயிர்கள் செல்லும் நன்னெறியைத் தீநெறி என்றும், அவற்றைக் கொள்ளுதல் கூடாது என்றும் பிறருக்கு அறிவுறுத்தி, மயக்க அறிவினை உண்டுபண்ணி, தான் கெடுவதுடன், பிறரையும் கெடுப்பதால், அவ்வித அறிவு உடையவனை ஒரு நோய் என்று கூறினார். இவ்விதமான நோயுள்ள உடம்பினைப் பொறுத்தல், பெரிய மலை முதலியவற்றைத் தாங்குகின்ற பூமிக்கும் பொறுத்துக் கொள்ள முடியாததாக, துன்பத்தையே தரும் என்றார்.

 

ஏவவும் செய்கலான், தான் தேறான், அவ் உயிர்

போஒம் அளவும் ஓர் நோய்.             

 

என்பது நாயனார் அருளிய திருக்குறள்.

 

     இத் திருக்குறளுக்கு விளக்கமா, திராவிட மாபாடியக் கர்த்தரான மாதவச் சிவஞான யோகிகள் பாடி அருளிய, "சோமேசர் முதுமொழி வெண்பா" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...

 

இல்லாள் மறுப்பவும் சென்று ஏகிச் சலந்தரன்தான்

தொல்வலிபோய் மாண்டனனே, சோமேசா! - வல்லமையால்

ஏவவும் செய்கலான், தான்தேறான், அவ்வுயிர்

போஒம் அளவும்ஓர் நோய்.

 

இதன் பொருள்---

 

         சோமேசா! வல்லமையால் --- தனக்கு வன்மையுள்ளதாகக் கருதலால், ஏவவும் செய்கலான் --- புல்லறிவாளன் தனக்கு உறுதியாயவற்றை அறிவுடையார் சொல்லா நிற்கவும் செய்யான்; தான் தேறான் --- அதுவன்றித் தானாகவும் இவை செய்வன என்று அறியான்; அவ்வுயிர் போமளவும் ஓர் நோய் --- அவ்வுயிர் யாக்கையின் நீங்குமளவும் நிலத்திற்குப் பொறுத்தற்கு அரியதொரு நோயாம்.

 

         சலந்தரன் --- சலந்தராசுரன், இல்லாள் மறுப்பவும் --- தன் மனைவியாகிய பிருந்தை தன்னைத் தடைசெய்யும் காலத்தும், சென்று ஏகி --- சென்று அடைந்து, தொல்வலி போய் மாண்டனன் --- பழமையான வலிமை தொலையப்பெற்று இறந்தொழிந்தான் ஆகலான் என்றவாறு.

 

         சலந்தராசுரன் தன் மனைவியாகிய பிருந்தை தடுத்தும் கேளாது, சிவபெருமானோடு போர் புரிய வேண்டித் திருக்கயிலை நோக்கி வரும் வழியில், சிவபெருமான் ஓர் அந்தண வடிவம் கொண்டு நின்று, "எங்குச் செல்கின்றாய்?" என்று வினவ, அவன் "சிவனோடு போர் புரிந்து வெல்லச் செல்கிறேன்" என்ன,  சிவபெருமான், "அது உனக்குக் கூடுமோ? கூடுமாயின், தரையில் நான் கீறும் சக்கரத்தை எடுப்பாய்" என்று ஒரு சக்கரம் கீற, அதை அவன் தோளின்மீது எடுக்க, அப்போது அது அவன் உடம்பைப்  பிளக்கவே அவன் இறந்தொழிந்தான். அது அறிந்த திருமால் தாம் அவன் மனைவியாகிய பிருந்தையினிடத்துத் தனக்கிருந்து மோகத்தைத் தணித்துக் கொள்ளுதற்குத் தக்க தருணம் அதுவே என நினைத்து, அச் சலந்தரன் வடிவம் தாங்கிச் சென்று எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்கையில், திருமாலின் வஞ்சனையை அறிந்த பிருந்தை உடனே தீப்புக்காள். திருமால் பிரிவாற்றாது அவள் சாம்பரில் புரண்டார். 

 

         இடுகாட்டுள் மாதர் எலும்பில் புரள்மால்,

         சுடுகாட்டுள் ஆடுவாற் சுட்டின் - ஒடுகாட்டும்

         சம்பந்தா! என்புநின் பால்தந்து ஆக்கிக்கொண்டிலன்என்

         கும்பம்தாம் என்னும் முலைக் கொம்பு.

 

என்னும் நால்வர் நான்மணி மாலைச் செய்யுளை நோக்குக.  இது இலிங்க புராணத்து உள்ளது.

 

     இராவணனுக்கு அவனது தம்பியாகிய விபீடணன் எவ்வளவோ அறிவுரைகளை எடுத்துச் சொல்கின்றான்....

 

'எந்தை நீ; யாயும் நீ; எம்முன் நீ; தவ

வந்தனைத் தெய்வம் நீ; மற்றும் முற்றும் நீ;

"இந்திரப் பெரும் பதம் இழக்கிறாய்' என

நொந்தனென் ஆதலின், நுவல்வது ஆயினேன்.

 

     எனக்குத் தந்தையும் நீயே; தாயும் நீயே; எனக்கு மூத்த தமையனும் நீயே;  தவத்தால் நான் வந்தித்து வணங்குதற்குரிய தெய்வமும் நீயே; வேறு எல்லாம் நீயே; இந்திர பதவிக்கு    நிகரான பெரிய அரசபதவியை; இழக்கப் போகிறாயே என்று மனம் வருந்தி இவை சொல்லலானேன்.

 

     என்று தொடங்கி எவ்வளவோ அறிவுரைகளை எடுத்துக் கூறுகின்றான். ஆணவம் தலைக்கு ஏறியதால், அடுத்தவன் மனைவியைச் சிறை வைத்த இராவணன் எல்லாவற்றையும் மறுத்து உரைக்கின்றான். வல்லமை மிக்க இரணியன் அழிந்த வரலாற்றையும் விபீடணன் எடுத்துக் கூறுகின்றான்.

 

'ஈது ஆகும், முன் நிகழ்ந்தது; எம்பெருமான்! என்மாற்றம்

யாதானும் ஆக நினையாது, இகழ்தியேல்,

தீது ஆய் விளைதல் நனி திண்ணம்' எனச் செப்பினான்-

மேதாவிகட்கு எல்லாம் மேலான மேன்மையான்.

 

     எமது தலைவனே! இந்த இரணியன் வரலாறு முன்பு நிகழ்ந்தது. என்னுடைய பேச்சு எதுவாயினும் உனது நன்மைக்காகச் சொல்லப்படுவது என்று  நினைக்காமல் இகழ்வாயானால்; தீமை உண்டாவது மிகவும் உறுதியாகும் என்று அறிஞர்களுக்கெல்லாம் மேம்பட்ட அறிஞன் ஆகிய வீபீடணன் கூறினான்.

 

     விபீடணன் கூறிய அத்தனை அறிவுரைகளையும் இகழ்ந்தான் இராவணன். அவனுக்குத் தானாகவும் அறிவு விளங்கவில்லை. எடுத்துச் சொன்னாலும் ஏறவில்லை. முடிவில் இவனோடு இருப்பது தகாது என்று உணர்ந்த விபீடணன், பின்வருமாறு அறுதியாகச் சொல்லி அவனை விட்டு நீங்குகின்றான்.

 

'வாழியாய் ! கேட்டியால்: வாழ்வு கைம்மிக

ஊழி காண்குறு நினது உயிரை ஓர்கிலாய்,

கீழ்மையோர் சொற்கொடு கெடுதல் நேர்தியோ ?

வாழ்மைதான், அறம் பிழைத்தவர்க்கு, வாய்க்குமோ ?

 

     அண்ணா, நீ வாழ்வாயா! நான் கூறுவதைக்

கேட்பாயாக. உனது வாழ்க்கை நாளுக்கு நாள் மேம்படக, ஊழிக்  காலத்தின் எல்லையைக் காண உள்ள உனது உயிரின் சிறப்பினை எண்ணாது இருக்கிறாய். கீழ்மக்களின் சொல்லைக்  கேட்டு, கேட்டை அடைய முற்படுகிறாயா?; அறநெறிகளை விட்டுத் தவறி நடந்தவர்க்கு நல்ல வாழ்க்கை அமையுமோ?

 

'புத்திரர், குருக்கள், நின் பொரு இல் கேண்மையர்

மித்திரர், அடைந்துளோர், மெலியர், வன்மையோர்,

இத்தனை பேரையும், இராமன் வெஞ் சரம்

சித்திரவதை செயக் கண்டு, தீர்தியோ ?

 

     உனது புத்திரர்கள்,  குருமார்களாகிய மேலோர்கள்; ஒப்பற்ற உறவினர்கள்; உனக்குரிய நண்பர்கள்;  உன்னை அடைந்து உன் ஆதரவில் வாழும் மக்கள்; வாழ்க்கையில் மெலிந்தவர்கள்,   வலிமை மிக்க வீரர்கள் என இத்தனை பேரையும்; இராமபிரானுடைய கொடிய அம்புகள் சித்திரவதை செய்வதைப் பார்த்துவிட்டு நீயும் அழியப் போகிறாயோ?

 

     இவ்வாறு பலபடவும் அறிவில் சிறந்தவன் ஆகிய விபீடணன் சொன்ன அறிவுரைகளை இராவணன் ஏற்றுக் கொள்ளவில்லை. தானாகவும் அவன் நன்மை தீமைகளைப் பகுத்து உணரவில்லை. இறுதியில், விபீடணன் சொன்னபடியே எல்லாவற்றையும், எல்லோரையும் இழந்து தானும் மடிந்து போனான்.

 

     இவ்வாறே, மகாபாரதத்ததிலும், துரியோதனன் தன்னுடன் இருந்த அத்தனை பெரியவர்கள், நல்லவர்கள் சொன்ன அறிவுரைகளையும் ஏற்று நல்வழிப்பட்டு இருக்கவேண்டும். ஆனால், துட்டன் எல்லோரையும் இகழ்ந்தான். இறுதியில் அவனுக்கு உள்ள எல்லாவற்றையும் இழந்து கெட்டான்.

 

No comments:

Post a Comment

ஆமையும் மனிதனும்

  ஆமையும் மனிதனும் ----- உடலைப் பற்றி நின்று துன்புறுத்தும் நோய் போல, உயிரைப் பற்றி நின்று துன்புறுத்துவது ஆகலின் பிறவி நோய் எனப்பட்டது. ந...