எல்லாம் தெரியும் என்பது புல்லறிவு

 

 

எல்லாம் தெரியும் என்பது புல்லறிவு

----

 

     திருக்குறளில் "புல்லறிவாண்மை" என்னும் ஓர் அதிகாரம். புல்லறிவாண்மை என்பது, அறிவில் சிறுமையையே பெருமையாகக் கருதி நடந்துகொள்ளுதல் ஆகும். அதாவது, சிற்றறிவினனாக இருந்துகொண்டே, தன்னைப் பேரறிவு உடையவனாக மதித்து, உயர்ந்தோர் சொல்லும் உறுதிக் சொல்லை மனத்துள் கொள்ளாமை ஆகும்.

 

     இந்த அதிகாரத்துள் வரும் ஐந்தாம் திருக்குறளில், "புல்லறிவு உள்ள ஒருவன், தான் கல்லாத நூல்களையும், கற்றதாகச் சொல்லிக்கொண்டு நடத்தல், அவன் குற்றம் அறக் கற்றதொரு நூலிலும் பிறருக்கு ஐயத்தை உண்டாக்குவிக்கும்" என்கின்றார் நாயனார்.

 

     புல்லிய அறிவினை உடைய ஒருவன் ஒரு நூலினை ஐயம் திரிபு அறக் கற்றல் முடியாது. ஒரு வேளை கற்றாலும், அவனது மயக்க அறிவால், கல்லாத நூல்களைக் கற்றதுபோல் கூறிக் குற்றப்படுவான். தான் அறியாத நூல்களையும் அறிந்தவன் போல் நடிக்கின்றது கண்டு, அறிவு உடையோர், இவனை யாதொரு நூலையும் கற்றிருக்க முடியாது, என்று அவன் கற்றதிலும் ஐயப்படுவர்.

 

கல்லாத மேற்கொண்டு ஒழுகல், கசடு அற

வல்லதூஉம் ஐயம் தரும்.                

 

என்பது நாயனார் அருளிய திருக்குறள்.

 

     இத் திருக்குறளுக்கு விளக்கமா, கமலை வெள்ளியம்பலவாண முனிவர் பாடி அருளிய "முதுமொழி மேல் வைப்பு" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...

 

ஆதி மொழியை அறியான் அறிந்தேன் என்று

ஓதியது, மீளப் போய் ஓதியதும் ---  ஏதமாம்,

கல்லாத மேற்கொண்டு ஒழுகல், கசடு அற

வல்லதூஉம் ஐயம் தரும்.

 

இதன் பொருள் ---

 

     ஆதிமொழியை அறியான் --- வேதங்களுக்கு முதலாக உள்ள "ஓம்" என்னும் ஒருமொழிப் பொருளாகிய பிரணவ மந்திரத்துக்குப் பொருளை அறியாத பிரமதேவன், அறிந்தேன் என்று ஓதியது --- அறிந்ததாக முருகப் பெருமான் முன்பு சொல்லியது, மீளப் போய் ஓதியதும் குற்றமாம் --- அவன் நாளும் நாளும் ஓதியதும் குற்றமாகவே முடிந்தது. எனவே, இது,

 

     கல்லாத மேற்கொண்டு ஒழுகல் --- தான் அறியாத ஒன்றை அறிந்ததாகச் சொல்லுவது, கசடு அற ஒல்லதூஉம் ஐயம் தரும் --- கற்றனவற்றையும் ஐயுறச் செய்யும் (என்பதை விளக்குகின்றது)

 

இதன் வரலாறு

 

     முருகப் பெருமான் திருவிளையாடல் பல புரிந்து வெள்ளி மலையின்கண் வீற்றிருந்தருளினர். ஒரு நாள் பிரமதேவன் இந்திராதி தேவர்களுடனும், கின்னரர், கிம்புருடர், சித்தர், வித்யாதரர் முதலிய கணர்களொடும் சிவபெருமானைச் சேவிக்கும் பொருட்டு திருக்கயிலாய மலையை நண்ணினர். பிரமனை ஒழிந்த எல்லாக் கணர்களும், யான் எனது என்னும் செருக்கின்றி, சிவபெருமானை வணங்கி வழிபட்டுத் திரும்பினார்கள். ஆங்கு கோபுரவாயிலின் வடபால் இலக்கத்து ஒன்பான் வீரர்களும் புடைசூழ நவரத்தின சிங்காசனத்தில் குமரநாயகன் நூறு கோடி சூரியர்கள் திரண்டால் என்ன எழுந்தருளி இருக்கக் கண்டு, எல்லோரும் வந்து முருகப் பெருமானது திருவடிமலரைத் தொழுது தோத்திரம் புரிந்து சென்றனர்.

 

     பிரமதேவன் குமரக் கடவுளைக் கண்டு வணங்காது, “இவன் ஓர் இளைஞன் தானே” என்று நினைத்து இறுமாந்து சென்றனர். இதனைக் கண்ட முருகப் பெருமான், சிவன் வேறு தான் வேறு அல்ல; மணியும் ஒளியும்போல், சிவனும் தானும் ஒன்றே என்பதையும், முருகனாகிய தன்னை ஒழித்து சிவபெருமானை வழிபடுவோர்க்குத் திருவருள் உண்டாகாது என்பதையும் உலகினர்க்கு உணர்த்தவும், பிரமனுடைய செருக்கை நீக்கித் திருவருள் புரியவும் திருவுளம் கொண்டார்.

 

     தருக்குடன் செல்லும் சதுர்முகனை அழைத்தனர். பிரமன் கந்தவேளை அணுகி அகங்காரத்துடன் சிறிது கைகுவித்து வணங்கிடாத பாவனையாக வணங்கினன். கந்தப்பெருமான் “நீ யார்?” என்றனர். பிரமதேவன் அச்சங்கொண்டு “படைத்தல் தொழில் உடைய பிரமன்” என்றான். முருகப்பெருமான், "அங்ஙனமாயின் உனக்கு வேதம் வருமோ?” என்று வினவினர். பிரமன் “உணர்ந்திருக்கிறேன்” என்றனன்.  “நன்று! வேத உணர்ச்சி உனக்கு இருக்குமாயின், முதல் வேதமாகிய இருக்கு வேத்தைக் கூறு,” என்று குகமூர்த்தி கூறினர்.  சதுர்முகன் இருக்கு வேதத்தை "ஓம்" என்ற குடிலை மந்திரத்தைக் கூறி ஆரம்பித்தான். உடனே இளம் பூரணணாகிய எம்பெருமான் நகைத்து, திருக்கரம் அமைத்து, “பிரமனே நிறுத்து! நிறுத்து! முதலாவதாகக் கூறிய `ஓம்’ என்ற பிரணவ மந்திரத்தின் பொருளை விளக்கு" என்றனர்.

 

தாமரைத் தலை இருந்தவன் குடிலைமுன் சாற்றி

மாமறைத் தலை எடுத்தனன் பகர்தலும், வரம்பில்

காமர்பெற்று உடைக் குமரவேள், "நிற்றி, முன் கழறும்

ஓம் எனப்படு மொழிப்பொருள் இயம்புக", ன்று உரைத்தான். ---கந்தபுராணம்.

 

     ஆறு திருமுகங்களில் ஒரு முகம் பிரணவ மந்திரமாய் அமைந்துள்ள அறுமுகத்து அமலன் வினவுதலும், பிரமன் அக்குடிலை மந்திரத்திற்குப் பொருள் தெரியாது விழித்தான். கண்கள் சுழன்றன. சிருட்டி கர்த்தா நாம் என்று எண்ணிய ஆணவம் அகன்றது. வெட்கத்தால் தலை குனிந்தான். நாம் சிவபெருமானிடத்து வேதங்களை உணர்ந்து கொண்ட போது, இதன் பொருளை உணராமல் போனோமே? என்று ஏங்கினான்.  சிவபெருமானுக்குப் பீடமாகியும், ஏனைய தேவர்களுக்குப் பிறப்பிடமாகியும், காசியில் இறந்தார்களுக்கு சிவபெருமான் கூறுவதாகியுமுள்ள தாரகமாகிய பிரணவ மந்திரத்தின் பொருளை உணராது மருண்டு நின்றான்.

 

     குமரக்கடவுள், “ஏ சதுர்முகா! ஏதும் கூறாது நிற்பது ஏன்? விரைவில் விளம்புவாய்” என்றனர். பிரமன் “ஐயனே! இவ்வொரு மொழியின் பொருளை உணரேன்” என்றனன். அது கேட்ட குருமூர்த்தி சினந்து, இம்முதல் எழுத்திற்குப் பொருள் தெரியாத நீ சிருட்டித் தொழில் எவ்வாறு புரிய வல்லாய்? இப்படித்தான் சிருட்டியும் புரிகின்றனையோ? பேதையே! இதனால்தான் கன்னியப்பன் போன்ற அறிவிலிகளும் உண்டாகின்றனரோ?” என்று நான்கு தலைகளும் குலுங்கும்படிக் குட்டினார்.

 

சிட்டி செய்வது இத் தன்மையதோ? னச் செவ்வேள்

 குட்டினான் அயன் நான்குமா முடிகளும் குலுங்க”       ---கந்தபுராணம்.

 

........     ........     ........     "படைப்போன்

அகந்தை உரைப்ப, "மறை ஆதி எழுத்து ஒன்று

உகந்த பிரணவத்தின் உண்மை --- புகன்றிலையால்,

 

 

சிட்டித் தொழில் அதனைச் செய்வது எங்ஙன்" என்று, முன்னம்

குட்டிச் சிறை இருத்தும் கோமானே!"

 

என்பது குமரகுருபர அடிகள் அருளிய "திருச்செந்தூர்க் கந்தர் கலிவெண்பா".

 

இதன் பொருள் ---

 

     படைத்தல் தொழிலை உடைய பிரமதேவன், யாவும் படைப்பவன் நானே என்று செருக்குடன் உரையாட, அப்போது முருகக் கடவுள் அவனை நோக்கி, வேதங்களில் முதலில் கூறப் பெறும் பிரணவமாகிய ஓங்கரத்திற்குப் பொருள் யாது என்று வினவ, அப் பிரமன் அதற்குத் தக்க விடை அளிக்க இயலாது விழிக்க,  வேதத்தின் முதல் எழுத்து என்று அறிஞரால் விரும்பப் பெற்ற பிரணவத்தின் உண்மைப் பொருளை விளங்கிக் கொண்டாய் இல்லை. ஆதலால், நீ படைப்புத் தொழிலை எவ்வாறு செய்தல் கூடும் என்று கூறி, முன்னர் அவன் தலையில் குட்டி, பின்பு சிறையில் அடைத்த தலைவனே!

 

     பிரமதேவனது அகங்காரம் முழுதும் தொலைந்து புனிதனாகும்படி குமாரமூர்த்தி தமது திருவடியால் ஓர் உதை கொடுத்தனர். பிரமன் பூமியில் வீழ்ந்து அவசமாயினன். உடனே பகவான் தனது பரிசனங்களைக் கொண்டு பிரமனைக் கந்தகிரியில் சிறை இடுவித்தனர்.

 


No comments:

Post a Comment

பொது --- 1081. இசைந்த ஏறும்

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் இசைந்த ஏறும் (பொது) முருகா!  அடியேன் அயர்ந்தபோது வந்து அருள வேண்டும். தனந்த தானந் தனதன தானன ...... தனதான...