ஆத்திசூடி --- 12. ஔவியம் பேசேல்

 

 

12. ஒளவியம் பேசேல்.

 

பதவுரை --- ஒளவியம் --- அழுக்காறு, பொறாமை வார்த்தைகளை, பேசேல் - பேசாதே.

 

(பொழிப்புரை) நீ ஒருவரிடத்தும் பொறாமைகொண்டு பேசாதே.

 

     பொறாமை அல்லது அழுக்காறு, மனம் கோணுவதால் உண்டாகும். மனம் கோணுதல் பாவம். மனக் கோணல் காரணமாகப் பேசுதல், பழியையும், பாவத்தையும் விளைப்பதாக முடியும். ஆதலால், யாரிடத்தும் மனத்தால் பொறாமை கொண்டு, வாக்கால் தகாத மொழிகளைப் பேசாதே என்றார்.

 

     மேலே, ஔவைப் பாட்டியார் அருளிய வாக்கின்படிக்கு, ஐயம் இடுவாரும், ஒப்புரவு ஒழுகுவாரும், ஓதுவது ஒழியாதாரும் ஆக உலகில் உள்ள பல்லோரும் ஆக்கம் பெற்று விளங்குவர். அவரது ஆக்கம் கண்டு உள்ளத்தில் பொறாமை அல்லது அழுக்காறு கொள்ளுதல் கூடாது. காரணம், உள்ளத்தல் பொறாமை கொண்டவர் யாரும் வளமாக வாழ்ந்தது இல்லை.

 

இதனை,

 

"அழுக்கற்று அகன்றாரும் இல்லை, அஃது இல்லார்

பெருக்கத்தின் தீர்ந்தாரும் இல்"

 

(அழுக்காறு அல்லது பொறாமை கொண்டு வாழ்வு பெருகியவரும் இல்லை. அழுக்காறு இல்லாத நல்லோர் பெருவாழ்வு பெறுவதில் இருந்து நீங்கியவரும் இல்லை)

 

என்னும் திருக்குறளால் திருவள்ளுவ நாயனார் காட்டினார்.

 

மேலும்,

 

"அழுக்காறு என ஒரு பாவி, திருச்செற்றுத்

தீயுழி உயத்து விடும்"

 

(பொறாமை என்று சொல்லப்படுகின்ற ஒப்பற்ற பாவியானவன், தன்னை உடையவனது ஆக்கத்தைக் கெடுத்து, அவனைத் தீய வழியில் இயக்கிவிடும்)

 

என்றும் காட்டி, நெறிப்படுத்தினார் நாயனார்.

 

     மேலே, "ஈவது விலக்கேல்" என்று கூறி, பிறருக்கு உண்டாகும் ஆக்கத்தைக் கொண்டு, உள்ளத்தில் பொறாமை கொண்டு, கொடுப்பதை விலக்கித் தீங்கு செய்யாதே, உனக்கும் தீங்கினைத் தேடிக் கொள்ளாதே என்று அறிவுறுத்திய பாட்டியார், இங்கே, அந்தப் பொறாமை காரணமாகத் தீமை தரும் சொற்களைப் பேசாதே என்று அறிவுறுத்தும் முகத்தான், "ஔவியம் பேசேல்" என்றார்.

 

     "ஔவியம் பேசினால்" என்ன? என்று ஆத்திசூடியினைப் பயிலும் சிறுகுழந்தைகளுக்கு ஐயம் உண்டாகும். வயதானவர்களில் கூட, சிறுபிள்ளைத்தனம் மாறாத சிலருக்கும், தனக்கே அறிவு மிக உள்ளதாக எண்ணும் சிலருக்கும் இவ்வித ஐயம் தோன்றுதல் கூடும்.

 

     ஔவைப் பிராட்டியார் தாம் அருளிய "கொன்றைவேந்தன்" என்னும் நூலில் இதற்கு,

 

"ஒளவியம் பேசுதல் ஆக்கத்திற்கு அழிவு"

 

என்று விடை பகருகின்றார்.

 

இதன் பொருள் ---

 

     ஒளவியம் --- பொறாமை வார்த்தைகளை, பேசுதல் --- (ஒருவன்) பேசுதல், ஆக்கத்திற்கு --- (அவன்) செல்வத்திற்கு, அழிவு --- கேட்டைத் தருவதாகும்.

 

     ஆக்கம் என்பது உலகியல் செல்வமாகிய பொருளைக் குறிக்கும். அருளியல் செல்வம் ஆகிய மோட்சம் அல்லது வீடுபேற்றைக் குறிக்கும்.

 

"ஊக்கமும் உணர்ச்சியும், ஒளிதரும் ஆக்கையும்,

ஆக்கமும் அருளிய அருட்பெருஞ்சோதி"

 

என்று வள்ளல்பெருமான் அருளியது காண, "ஆக்கம்" என்பது உலகியல் நலத்தையும், அருளியல் நலத்தையும் குறிக்கும் என்பது தெளிவாகும்.

 

     பொறாமை காரணமாகத் தகாத வார்த்தைகளைப் பேசுவது, உலகியல் நலத்தை அழித்து, அருளியல் நலத்தையும் கெடுக்கும் என்பது கருத்து.

 

     பொறாமை என்பது அறவாழ்வினைக் கெடுக்கும் என்பதால், பிறர் பொருளை வவ்வக் கருதுல் கூடாது. மாறாக, உண்ணுகின்றபோது, சிறிதாயினும் பிர்க்குக் கொடுத்து உதவுங்கள் என்று நமது கருமூலம் அறுக்கவந்த திருமூல நாயனார் அருளுமாறு காண்க.

 

அவ்வியம் பேசி அறம் கெட நில்லன்மின்;

வெவ்வியன் ஆகிப் பிறர்பொருள் வவ்வன்மின்;

செவ்வியன் ஆகி, சிறந்து உண்ணும் போது ஒரு

தவ்வி கொடுமின் தலைப்பட்ட போதே.

 

இதன் பொருள் ---

 

     வாய்ப்பு நேரும்பொழுது அது கிடைத்துவிட்டது என்று புறங்கூறிப் பாவத்தைத் தேடிக் கொள்ளாதீர்கள். தீக்குணம் உடையாராய்ப் பிறர் பொருளைக் கவர எண்ணாதீர்கள். நற்பண்பு உடையாராய் உயர்நெறியில் நின்று ஒழுகி, நீங்கள் உண்ணும்போது ஒரு சிறிதாயினும் பிறருக்குக் கொடுத்து உண்ணுங்கள்.

 

     பொறாமை காரணமாக உண்டாகும் சொற்களை ஒருவன் பேசாமல் இருப்பது நல்லது என்கின்றது, "இனியவை நாற்பது" என்னும் பதினெண்கீழ்க்கணக்கு நூல்.

 

அவ்வித்து அழுக்காறு உரையாமை முன்இனிதே;

செவ்வியனாய்ச் செற்றுச் சினங்கடிந்து வாழ்வு இனிதே;

கவ்வித்தாம் கொண்டு தாம் கண்டது காமுற்று

வவ்வார் விடுதல் இனிது.

 

இதன் பதவுரை ---

 

     அவ்வித்து அழுக்காறு உரையாமை முன் இனிது --- மனக்கோட்டம் செய்து பொறாமைச் சொற்களைச் சொல்லாமை மிக இனிது; செவ்வியனாய் சினம் செற்று கடிந்து வாழ்வு இனிது --- மனக்கோட்டம் இல்லாதவனாய் கோபத்தைப் பகைத்து நீக்கி வாழ்வது இனிது;  கவ்விக்கொண்டு தாம் கண்டது காமுற்று வவ்வார் விடுதல் இனிது --- மனம் அழுந்தி நிற்ப, தாங்கள் கண்ட பொருளைப் பெற விரும்பி, அதற்கேற்ற சமயம் பார்த்து அபகரியரதவராய், அதனை மறந்து விடுதல் இனிது.

 

     பொறாமை உள்ளவன் கெட்டுப் போவான் என்பதற்குப் பிரமாணம்....

 

மாங்கனி வாயில் கவ்வி

     மரத்திடை இருக்கும் மந்தி

பாங்கர் நீர் நிழலை வேறோர்

         பழம் உணும் குரங்கு என்று எண்ணித்

தாங்க அரும் அவாவில் தாவிச்

         சலத்திடை இறந்தது ஒப்ப,

நீங்க அரும் பொறாமை உள்ளோர்

         நிலத்திடைக் கெடுவர் நெஞ்சே.     --- நீதிநூல்.

 

 இதன் பொருள் ---

 

     குரங்கு மாம்பழத்தை வாயில் பற்றிக்கொண்டு மரத்திடை இருந்தது. பக்கத்து நீரில் தன் நிழல் தோன்றிற்று. அதை வேறொரு குரங்கு பழம் வாயில் வைத்திருப்பதாக நினைத்தது. அதைப் பிடுங்க ஆசைகொண்டது. நீரில் பாய்ந்து இறந்தது. இதைப்போன்று பொறாமைப் படுகிறவர்கள் உலகத்தில் கேடு அடைவார்கள்.

 

     பொறாமை உள்ளவன் தனது வல்லமையாலேயே தனக்குச் சுகமாகத் தோன்றுவதைச் செய்து, துக்கத்தை அடைவான் என்பதற்குப் பிராமணம்......

 

தாரணியில் எவரேனும் துயர் உறில், ன்

          தலையின் முடி தரித்தது ஒப்பாம்,

சீரணியுஞ் செல்வம் அவர் படைத்திடில் தன்

          தாய்மனைசேய் செத்தது ஒப்பாம்,

காரணமே ஒன்றும் இன்றிச் சுகதுக்கம்

          தன்வலியால் கணத்துக்கு உள்ளே

பூரணமா ஆக்கிடுவோன் பொறாமை உளோன்

          அன்றி, வர் புவியின் கண்ணே.     ---  நீதிநூல்.

        

இதன் பொருள் ---

 

     பிறர் வாழ மனம் பொறுக்காத தீயோருக்கு, உலகில் யார் துன்புற்றாலும், தமத் தலையில் முடி சூடியது ஒப்பாக மகிழ்ச்சி உண்டாகும். பிறர் செல்வம் பெற்றார்களானால் தங்கள் தாய், மனைவி மக்கள் செத்ததற்கு ஒப்பாக எண்ணித் துக்கம் அடைவர். இப்படி ஒரு காரணமும் இல்லாமல், நொடிப் பொழுதினுள் தங்கள் மனத்துள்ளே இன்ப துன்பங்களை ஆக்கிடும் வல்லமை பொறாமை உள்ளவர்க்கு அன்றி எவர்க்கு முடியும்?

 

     பொறாமை கொள்வதால் மட்டுமே, ஒருவனிடத்தில் உள்ள பொருள், பொறாமைப் படுபவனுக்கு வந்து சேராது (பாவமே வந்து சேரும்) என்பதற்குப் பிரமாணம்.

 

ஆண்டு எலாம்பிறர் ஆக்கம் நோக்கியே

மீண்டு மீண்டு நெட்டுயிர்ப்பு வீங்கினும்

தாண்டி அவர் தனம் தாழ்ந்து உன் கைமிசை

ஈண்டுச் சேருமோ? இதயமே! சொலாய்.   ---  நீதிநூல்.

        

இதன் பொழிப்புரை ---

 

     ஆண்டு முழுவதும் பிறர் வாழ்வைக் கண்டு மீண்டும் மீண்டும் பெருமூச்சு விட்டு வயிறு பொருமினாலும், அவ்வாழ்வு அவரை விட்டு விலகி, உனது கைக்கு வந்து சேராது; நெஞ்சமே இதைக் கருதிப்பார்.

 

         ஆக்கம் --- செல்வம்; வாழ்வு. நெட்டுயிர்ப்பு --- பெருமூச்சு. வீங்கினும் --- பொருமினாலும்.

 

     உள்ளத்தில் பொறாமை என்னும் தீக்குணம் இல்லாதவர்கள் போற்றி வணங்குகின்ற அருட்பெருஞ்சோதி ஆண்டவரே என்று வள்ளல்பெருமான் பாடுகின்றார்...

 

ஔவியம் ஆதி ஓர் ஆறும் தவிர்த்தபேர்,

அவ்இயல் வழுத்தும் அருட்பெருஞ்சோதி.

 

     ஔவியம் என்பது உயிருக்கு உள்ள உட்பகைகளுள் ஒன்றான மாச்சரியத்தைக் குறிக்கும். காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாச்சரியம் ஆகிய ஆறும் மக்களுக்கு உள்ள உட்பகை ஆகும். வெளிப்பகையை விட உட்பகை மிகவும் கொடியது. வெளிப்பகை வெளிப்படையாகத் தெரியும். உட்பகை அதுபோல் தெரியாது. உடன் இருந்தே கொல்லும் தன்மையை உடையது. வெளிப்படை பகிரங்க விரோதி என்றால், உட்பகை, அந்தரங்க விரோதி ஆகும்.

 

காமம் --- அவா, ஆசை.

குரோதம் --- கோபம், வெறுப்பு.

மோகம் --- பேராசை, பேரவா.

மதம் --- செருக்கு, ஆணவம்.

மாச்சரியம் --- பகைமை உணர்வு, செற்றம், பொறாமை.

 

இவற்றுள் பொறாமை என்பது பெருங்கேட்டை விளைக்கும் என்பதால், "அழுக்காறாமை" என்னும் ஓர் அதிகாரத்தைத் திருக்குறளில் வைத்து அருளினார் நாயனார்.


No comments:

Post a Comment

பொது --- 1091. கருதியே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கருதியே மெத்த (பொது) முருகா!  அடியேன் உமது திருவடிப் பெருமையையே பேசுமாறு அருள் புரிவாயாக. தனதனா தத்த தனத...