வயலூர் --- 0911. இலகுமுலை விலை

 

 

அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

 

இலகு முலைவிலை (வயலூர்)

 

முருகா!

விலைமாதர் உறவு தவிர அருள்

 

 

தனன தனதன தனதன தனதன

     தனன தனதன தனதன தனதன

     தனன தனதன தனதன தனதன ...... தனதான

 

 

இலகு முலைவிலை யசடிகள் கசடிகள்

     கலைகள் பலவறி தெருளிகள் மருளிகள்

     எயிறு கடிபடு முதடிகள் பதடிகள் ...... எவரோடும்

 

இனிய நயமொழி பழகிக ளழகிகள்

     மடையர் பொருள்பெற மருவிகள் சருவிகள்

     யமனு மிகையென வழிதரு முழிதரும் ......விழிவாளால்

 

உலக மிடர்செயு நடலிகள் மடலிகள்

     சிலுகு சிலரொடு புகலிக ளிகலிகள்

     உறவு சொலவல துரகிகள் விரகிகள் ...... பிறைபோலே

 

உகிர்கை குறியிடு கமுகிகள் சமுகிகள்

     பகடி யிடவல கபடிகள் முகடிகள்

     உணர்வு கெடும்வகை பருவிக ளுருவிக ......ளுறவாமோ

 

அலகை புடைபட வருவன பொருவன

     கலக கணநிரை நகுவன தகுவன

     அசுரர் தசைவழி நிமிர்வன திமிர்வன ...... பொடியாடி

 

அலரி குடதிசை யடைவன குடைவன

     தரும வநிதையு மகிழ்வன புகழ்வன

     அகில புவனமு மரகர கரவென ...... அமர்வேள்வி

 

திலக நுதலுமை பணிவரு செயமகள்

     கலையி னடமிட வெரிவிரி முடியினர்

     திரள்ப லுயிருடல் குவடுக ளெனநட ...... மயிலேறிச்

 

சிறிது பொழுதினி லயில்விடு குருபர

     அறிவு நெறியுள அறுமுக இறையவ

     திரிசிர கிரியயல் வயலியி லினிதுறை ...... பெருமாளே.

 

 

பதம் பிரித்தல்

 

 

இலகு முலைவிலை அசடிகள் கசடிகள்,

     கலைகள் பல அறி தெருளிகள் மருளிகள்,

     எயிறு கடி படும் உதடிகள் பதடிகள், ...... எவரோடும்

 

இனிய நயமொழி பழகிகள் அழகிகள்,

     மடையர் பொருள் பெற மருவிகள் சருவிகள்,

     யமனு மிகை என அழி தரும் உழிதரும் ......விழிவாளால்,

 

உலகம் இடர் செயும் நடலிகள் மடலிகள்,

     சிலுகு சிலரொடு புகலிகள் இகலிகள்,

     உறவு சொல வல துரகிகள் விரகிகள், ......பிறைபோலே

 

உகிர்கை குறி இடு கமுகிகள் சமுகிகள்,

     பகடி இடவல கபடிகள் முகடிகள்,

     உணர்வு கெடும்வகை பருவிகள் உருவிகள், ...... உறவு ஆமோ?

 

அலகை புடைபட வருவன பொருவன,

     கலக கண நிரை நகுவன தகுவன,

     அசுரர் தசைவழி நிமிர்வன திமிர்வன, ...... பொடியாடி

 

அலரி குடதிசை அடைவன குடைவன,

     தரும வநிதையும் மகிழ்வன புகழ்வன,

     அகில புவனமும் அரகர அர என, ...... அமர்வேள்வி

 

திலக நுதல் உமை பணிவரு செயமகள்,

     கலையின் நடமிட எரி விரி முடியினர்,

     திரள்பல் உயிர் உடல் குவடுகள் என,நட .....மயில் ஏறிச்

 

சிறிது பொழுதினில் அயில்விடு குருபர!

     அறிவு நெறி உள அறுமுக! இறையவ!

     திரிசிர கிரி இயல் வயலியில் இனிது உறை ......  பெருமாளே.

 

 

பதவுரை

 

         அலகை புடைபட வருவன பொருவன --- பேய்கள் (போர்க்களத்தின்) எல்லாப் பக்கங்களிலும் வந்து, சில தங்களுக்குள் தாக்கிக் கொள்கின்றன,

 

     கலக கண(ம்) நிரை நகுவன தகுவன --- கலாம் இட்டுக் கொள்ளும் பேய்க்கூட்டத்தில் சில சிரிக்க, சில மேம்பட்டு விளங்குகின்றன,

 

      அசுரர் தசை வழி நிமிர்வன திமிர்வன --- அசுரர்களின் மாமிசக் குவியல் கிடைத்த போது அதைக் குனிந்து தின்று நிமிர்ந்து, விறைப்பு விடுகின்றன,

 

     பொடி ஆடி அலரி குடதிசை அடைவன குடைவன --- போர்க்களத்தில் உண்டான புழுதியில் சூரியன் குளித்துப் பின் மேற்குத் திசையில் முழுகிப் போகின்றான்,

 

      தரும வநிதையு(ம்) மகிழ்வன புகழ்வன --- தருமதேவதையானவள் உள்ளத்தில் மகிழ்ச்சி கொண்டு புகழ்கின்றாள்,

 

     அகில புவனமும் அரகர கர என --- எல்லா உலகங்களும் அரகர அரகர என்று துதித்துப் போற்றுகின்றன,

 

      அமர் வேள்வி திலக நுதல் உமை பணி வரு செயமகள் கலையின் நடமிட --- போர்க்களச் சாலையில் நெற்றிப் பொட்டணிந்த உமாதேவிக்கு பணி செய்யும் வெற்றித் திருமகள் ஆகிய துர்க்கை சாத்திரப்படி நடனம் செய்கின்றாள்,

 

         எரிவிரி முடியினர் திரள் பல் உயிர் உடல் குவடுகள் என --- நெருப்பப் போலச் சிவந்தும், விரிந்தும் உள்ள தலைமயிரோடு கூடிய அரக்கர்களின் கூட்டமானது உயிரை விட்டு, உடல்கள் மலைபோலக் குவிந்து கிடக்க,

 

     நட மயில் ஏறி சிறிது பொழுதினில் அயில் விடு குருபர ... திருநடனம் புரியும் மயில் மீது இவர்ந்து வந்து, கொஞ்ச நேரத்தில் வேலை விடுத்து அருளிய மேலான குருநாதரே!

 

      அறிவு நெறி உள அறுமுக --- ஞானநெறியில் விளங்கும் ஆறுதிருமுகங்களை உடையவரே!

 

     இறையவ --- இறைவரே!

 

     திரிசிர கிரி அயல் வயலியில் இனிது உறை பெருமாளே ---  திரிசிர மலைக்கு அருகில் உள்ள வயலூரில் இனிதாக வீற்றிருக்கும் பெருமையில் மிக்கவரே!

 

      இலகு முலை விலை அசடிகள் கசடிகள் --- விளங்குகின்ற முலைகளை விலைக்கு விற்கின்ற முட்டாள்கள், குற்றம் உள்ளவர்கள்,

 

      கலைகள் பல அறி தெருளிகள் மருளிகள் --- காமக் கலைகள் பலவற்றையும் அறிந்து, அதில் தெளிந்த அறிவை உடையவர்கள், (தானும் பொருளில் மயங்கிப் பிறரை) மயக்குபவர்கள்,

 

      எயிறு கடி படும் உதடிகள் பதடிகள் --- பற்குறிகளைக் கொண்ட உதடுகளை உடையவர்கள், பயனற்றவர்கள்,

 

     எவரோடும் இனிய நய மொழி பழகிகள் அழகிகள் --- (பொருளுடையோர்) யாரோடும் இனிமையான நயமான பேச்சுக்களைப் பேசப் பழகுகின்ற அழகிகள்,

 

      மடையர் பொருள் பெற மருவிகள் சருவிகள் --- முட்டாள்களுடைய பொருளைப் பெறுதற்கு அவர்களை விரும்பிச் சேர்ந்து, கொஞ்சிக் குலாவுபவர்கள்.

 

      யமனும் மிகை என --- எமனே தேவையில்லை எனும்படி,

 

     அழி தரும் உழி தரும் விழி வாளால் --- அழிவைத் தருவதும், இங்கும் அங்குமாகச் செயல்கின்றதும் ஆகிய கண்கள் என்னும் வாளைக் கொண்டு,

 

     உலகம் இடர் செயு(ம்) நடலிகள் மடலிகள் --- உலகவர்களைத் துன்புறுத்துகின்ற செருக்குக் கொண்டவர்கள்; ஆண்களை மடல் ஊரும்படிச் செய்பவர்கள்,

 

      சிலுகு சிலரொடு புகலிகள் இகலிகள் --- (பொருளற்றவர்கள்) சிலரோடு சண்டைப் பேச்சுப் பேசுபவர்கள். பகைமை பூண்டவர்கள்.

 

      உறவு சொல வல துரகிகள் விரகிகள் --- (பொருள் உள்ளோரைக் காண்டால்) உறவு கொண்டாடுகின்ற சாமர்த்தியம் மிக்கவர்கள்,

 

     பிறை போலே உகிர் கை குறியிடு கமுகிகள் சமுகிகள் --- பிறையைப் போன்று தமது கையில் உள்ள நகத்தால் (தம்மை நாடி வந்தவர் உடலில்) குறியினை இடுகின்ற கமுக்கம் மிக்கவர்கள்,  மரியாதையாகப் பேசுபவர்கள்,

 

         பகடி இட வல கபடிகள் முகடிகள் --- பகட்டுக் காட்டுகின்ற வஞ்சகிகள், மூதேவிகள்,

 

     உணர்வு கெடும் வகை பருவிகள் உருவிகள் உறவு ஆமோ --- நல்ல அறிவு கெட்டுப் போகும்படி அரிப்பவர்கள். கையில் பொருள் உருவுகின்றவர்கள் (ஆகிய விலைமாதர்களின்) தொடர்பு நல்லதா?  (நன்மை தராது).

 

 

பொழிப்புரை

 

 

     பேய்கள் (போர்க்களத்தின்) எல்லாப் பக்கங்களிலும் வந்து, சில தங்களுக்குள் தாக்கிக் கொள்கின்றன; கலாம் இட்டுக் கொள்ளும் பேய்க்கூட்டத்தில் சில சிரிக்க, சில மேம்பட்டு விளங்குகின்றன; அசுரர்களின் மாமிசக் குவியல் கிடைத்த போது அதைக் குனிந்து தின்று நிமிர்ந்து, விறைப்பு விடுகின்றன; போர்க்களத்தில் உண்டான புழுதியில் சூரியன் குளித்துப் பின் மேற்குத் திசையில் முழுகிப் போகின்றான்; தருமதேவதையானவள் உள்ளத்தில் மகிழ்ச்சி கொண்டு புகழ்கின்றாள்; எல்லா உலகங்களும் அரகர அரகர என்று துதித்துப் போற்றுகின்றன;  போர்க்களச் சாலையில் நெற்றிப் பொட்டணிந்த உமாதேவிக்கு பணி செய்யும் வெற்றித் திருமகள் ஆகிய துர்க்கை சாத்திரப்படி நடனம் செய்கின்றாள்; நெருப்பப் போலச் சிவந்தும், விரிந்தும் உள்ள தலைமயிரோடு கூடிய அரக்கர்களின் கூட்டமானது உயிரை விட்டு, உடல்கள் மலைபோலக் குவிந்து கிடக்க, திருநடனம் புரியும் மயில் மீது இவர்ந்து வந்து, கொஞ்ச நேரத்தில் வேலை விடுத்து அருளிய மேலான குருநாதரே!

 

       ஞானநெறியில் விளங்கும் ஆறுதிருமுகங்களை உடையவரே!

 

     இறைவரே!

 

     திரிசிர மலைக்கு அருகில் உள்ள வயலூரில் இனிதாக வீற்றிருக்கும் பெருமையில் மிக்கவரே!

 

         விளங்குகின்ற முலைகளை விலைக்கு விற்கின்ற முட்டாள்கள், குற்றம் உள்ளவர்கள்; காமக் கலைகள் பலவற்றையும் அறிந்து, அதில் தெளிந்த அறிவை உடையவர்கள், (தானும் பொருளில் மயங்கிப் பிறரை) மயக்குபவர்கள்; பற்குறிகளைக் கொண்ட உதடுகளை உடையவர்கள், பயனற்றவர்கள்; பொருளுடையோர் யாரோடும் இனிமையான நயமான பேச்சுக்களைப் பேசப் பழகுகின்ற அழகிகள்; முட்டாள்களுடைய பொருளைப் பெறுதற்கு அவர்களை விரும்பிச் சேர்ந்து, கொஞ்சிக் குலாவுபவர்கள்; எமனே தேவையில்லை எனும்படி, அழிவைத் தருவதும், இங்கும் அங்குமாகச் செயல்கின்றதும் ஆகிய கண்கள் என்னும் வாளைக் கொண்டு, உலகவர்களைத் துன்புறுத்துகின்ற செருக்குக் கொண்டவர்கள்; ஆண்களை மடல் ஊரும்படிச் செய்பவர்கள்; பொருளற்றவர்கள் சிலரோடு சண்டைப் பேச்சுப் பேசுபவர்கள். பகைமை பூண்டவர்கள்; பொருள் உள்ளோரைக் காண்டால் உறவு கொண்டாடுகின்ற சாமர்த்தியம் மிக்கவர்கள்; பிறையைப் போன்று தமது கையில் உள்ள நகத்தால் (தம்மை நாடி வந்தவர் உடலில்) குறியினை இடுகின்ற கமுக்கம் மிக்கவர்கள்,  மரியாதையாகப் பேசுபவர்கள்; பகட்டுக் காட்டுகின்ற வஞ்சகிகள், மூதேவிகள்; நல்ல அறிவு கெட்டுப் போகும்படி அரிப்பவர்கள்; கையில் பொருள் உருவுகின்றவர்கள் ஆகிய விலைமாதர்களின் தொடர்பு நல்லதா?  (நன்மை தராது).

 

 

விரிவுரை

 

     இத் திருப்புகழ்ப் பாடலில், அசடிகள், கசடிகள் என்பன போன்ற எதுகைகள் அமைந்துள்ளது காண்க.

 

கலைகள் பல அறி தெருளிகள் மருளிகள் ---

 

புணர்ச்சிக்கு உரிய கலைகளைத் தெளிந்து அறிந்தவர்கள் விலைமாதர்கள். பொருள் மயக்கம் கொண்டு, தன்பால் காம மயக்கம் கொண்டு வருவோரை மருட்டுபவர்கள்.

 

பரத்தையர்க்கு உரிய கலைகள் அறுபத்துநான்கு என்பதனை,  "பண்ணும் கிளியும் பழித்த தீஞ்சொல், எண்எண் கலையோர் இருபெரு வீதியும்,"  எனச் சிலப்பதிகாரத்தின் வேனில் காதையிலும்,  "எண்ணான்கு இரட்டி இருங்கலை பயின்ற, பண்ணியல் மடந்தையர்,"  "யாழ்முதலாக அறுபத்தொருநான்கு, ஏர் இள மகளிர்க்கு இயற்கை என்று எண்ணிக், கலையுற வகுத்த காமக் கேள்வி," என்று சிலப்பதிகாரம், அழல்படு காதையிலும் கூறியுள்ளது காண்க.

 

உணர்வு கெடும் வகை பருவிகள் உருவிகள் ---

 

பருவுதல் --- அரித்தல்.

 

உள்ளத்தை அரித்து, பொருளை உருவுகின்றவர்கள் விலைமாதர்கள்.

 

 

திரிசிர கிரி அயல் வயலியில் இனிது உறை பெருமாளே ---

 

திரிசிரகிரி --- இன்றைய நாளில் திருச்சிராப்பள்ளி என வழங்கும் திருத்தலம். வயலூர் என்னும் திருத்தலம், திருச்சிராப்பள்ளியில் இருந்து 11 கி. மீ. தொலைவில் உள்ளது. அருணகிரிநாதருக்கு முருகபெருமான் காட்சி தந்து அவருடைய நாவிலே தன்வேலினால் "ஓம்" என்று எழுதி திருப்புகழ் பாட அருளிய திருத்தலம். அக்கினிதேவன், வணங்கிய தலம்.இத்தலத்தில் வள்ளி தெய்வானை சமேதராக சுப்ரமணிய சுவாமி அருள்புரிவதால் இத்தலத்தில் திருமணம் செய்து கொள்வது சிறப்பாகும். குழந்தைகளின் தோஷங்களை நிவர்த்திக்கும் தலமாகும் சோழர் காலத்திய கல்வெட்டுகள் திருகோவிலின் பழமைக்கு சான்றாகும். முருகன் தன் வேலால் உருவாக்கப்பட்ட சக்தி தீர்த்தம் எனும் அழகு நிறைந்த திருக்குளம் திருக்கோயிலின் முன்புறம் அமைந்துள்ளது.

 

வயலூர் அருணகிரிநாதருக்கு திருவருள் கிடைத்த இடம் என்பதால், அவருக்கு எல்லையற்ற அன்பு இத் திருத்தலத்தில் உண்டு. எங்கெங்கு சென்று எம்பிரானைப் பாடினாலும், அங்கங்கே வயலூரை நினைந்து உருகுவார். வயலூரா வயலூரா என்று வாழ்த்துவார். வயலூரை ஒருபோதும் மறவார்.

 

வயலூரில் எம்பெருமான் மிகவும் வரதராக விளங்கி, வேண்டுவார் வேண்டுவன யாவும் வெறாது உதவுவார்.

 

கருத்துரை

 

முருகா! விலைமாதர் உறவு தவிர அருள்

 


No comments:

Post a Comment

ஆமையும் மனிதனும்

  ஆமையும் மனிதனும் ----- உடலைப் பற்றி நின்று துன்புறுத்தும் நோய் போல, உயிரைப் பற்றி நின்று துன்புறுத்துவது ஆகலின் பிறவி நோய் எனப்பட்டது. ந...