வயலூர் --- 0912. என்னால் பிறக்கவும்

 

 

அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

 

என்னால் பிறக்கவும் (வயலூர்)

 

முருகா! குருமூர்த்தியே!

அடியேனுக்கு ஒரு உரிமையும் இல்லை. 

எல்லாம் உமது உடைமை.

எல்லாம் உமது செயல்.

  

தன்னா தனத்தன தன்னா தனத்தன

     தன்னா தனத்தன ...... தந்ததான

 

என்னால் பிறக்கவும் என்னா லிறக்கவும்

     என்னால் துதிக்கவும் ...... கண்களாலே

 

என்னா லழைக்கவும் என்னால் நடக்கவும்

     என்னா லிருக்கவும் ...... பெண்டிர்வீடு

 

என்னால் சுகிக்கவும் என்னால் முசிக்கவும்

     என்னால் சலிக்கவும் ...... தொந்தநோயை

 

என்னா லெரிக்கவும் என்னால் நினைக்கவும்

     என்னால் தரிக்கவும் ...... இங்குநானார்

 

கன்னா ருரித்தஎன் மன்னா எனக்குநல்

     கர்ணா மிர்தப்பதம் ...... தந்தகோவே

 

கல்லார் மனத்துட னில்லா மனத்தவ

     கண்ணா டியிற்றடம் ...... கண்டவேலா

 

மன்னான தக்கனை முன்னாள்மு டித்தலை

     வன்வாளி யிற்கொளும் ...... தங்கரூபன்

 

மன்னா குறத்தியின் மன்னா வயற்பதி

     மன்னா முவர்க்கொரு ...... தம்பிரானே.

 

பதம் பிரித்தல்

 

 

என்னால் பிறக்கவும், என்னால் இறக்கவும்,

     என்னால் துதிக்கவும், ...... கண்களாலே

 

என்னால் அழைக்கவும், என்னால் நடக்கவும்,

     என்னால் இருக்கவும், ...... பெண்டிர்வீடு

 

என்னால் சுகிக்கவும், என்னால் முசிக்கவும்,

     என்னால் சலிக்கவும், ...... தொந்தநோயை

 

என்னால் எரிக்கவும், என்னால் நினைக்கவும்,

     என்னால் தரிக்கவும், ...... இங்குநான் ஆர்?

 

கல்நார் உரித்த என் மன்னா! எனக்கு நல்

     கர்ண அமிர்தப்பதம் ...... தந்தகோவே!

 

கல்லார் மனத்துடன் நில்லா மனத்தவ!

     கண்ணாடியில் தடம் ...... கண்டவேலா!

 

மன்ஆன தக்கனை முன்னாள் முடித் தலை

     வன் வாளியில் கொளும் ...... தங்கரூபன்

 

மன்னா! குறத்தியின் மன்னா! வயற்பதி

     மன்னா! முவர்க்கொரு ...... தம்பிரானே.

 

 

பதவுரை

 

 

         கல் நார் உரித்த என் மன்னா --- என் நெஞ்சக் கல்லிலிருந்து நார் உரிப்பது போல அன்பை வருவித்து அதனைக் கசியச் செய்த அரசே!

 

         எனக்கு நல் கர்ணாமிர்தப் பதம் தந்த கோவே --- என் செவியிலே நல்ல அமுதம் போன்ற உபதேச மொழியை அருளிச்செய்த குருநாதரே!

 

         கல்லார் மனத்துடன் நில்லா மனத்தவ --- அறிவு நூல்களைக் கல்லாதவருடைய மனத்தில் தங்காத திருவுள்ளம் உடையவரே!

 

         கண்ணாடியில் தடம் கண்ட வேலா --- கண்ணாடிபோல் தூய தண்ணீர் உடைய தடாகத்தை வேலால் உண்டாக்கியவரே!

 

         மன்னான தக்கனை முன்னாள் --- தேவர் முதலியோர்க்குத் தலைமை பெற்று விளங்கிய தக்கனை முன்னொருநாள்

 

         முடித்தலை வன்வாளியில் கொளும் தங்கரூபன் மன்னா --- அவனது மகுடம் அணிந்த தலையை கொடிய வாலினால் வெட்டிய பொன்னார் மேனியராகிய சிவபிரானுக்கும் தலைவரே!

 

         குறத்தியின் மன்னா --- குறத்தியாகி வள்ளிப் பிராட்டின் கணவரே!

 

         வயற்பதி மன்னா --- வயலூர் என்னும் திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி உள்ள தலைவரே!

 

         முவர்க்ககு ஒரு தம்பிரானே --- பிரமன், திருமால், உருத்திரன் ஆகிய மும்மூர்த்திகளுக்கும் ஒப்பற்ற தலைவரே!

 

         என்னால் பிறக்கவும் --- அடியேனால் விரும்பிய வண்ணம் பிறக்கவும்,

 

     என்னால் இறக்கவும் --- அடியேனால் நினைத்தவுடன் இறந்து போகவும்,

 

         என்னால் துதிக்கவும் --- அடியேனால் உம்மைத் துதிப்பதற்கும்,

 

         கண்களாலே என்னால் அழைக்கவும் --- அடியேன் கண்கொண்டு மற்றவரை நான் குறிப்பாக அழைப்பதற்கும்,

 

         என்னால் நடக்கவும் --- என் செயலால் என் கால்கொண்டு நான் நடப்பதற்கும்,

 

     என்னால் இருக்கவும் --- என் திறம் கொண்டு நான் ஓரிடத்தில் சும்மா இருப்பதற்கும்,

 

         பெண்டிர்,வீடு என்னால் சுகிக்கவும் --- மாதர், வீடு இவற்றை நான் இன்புற்று சுகிப்பதற்கும்,

 

         என்னால் முசிக்கவும் --- அடியேனால் அவர்கள் இளைக்கவும்,

 

         என்னால் சலிக்கவும் --- இது போதும் என அலுப்புடன் நான் சலிப்பு அடைவதற்கும்,

 

         தொந்த நோயை என்னால் எரிக்கவும் --- வினையின் வசமாக வரும் நோய்களை நான் பொசுக்குவதற்கும்,

 

         என்னால் நினைக்கவும் --- நான் இங்கு ஒன்றை நினைப்பதற்கும்,

 

         என்னால் தரிக்கவும் --- நான் ஒன்றைத் தாங்கிக் கொள்வதற்கும்,

 

         இங்கு நான் ஆர் --- இங்கே நான் யார்? (எனக்கு என்ன சுதந்திரம் உண்டு?) எல்லாம் தேவரீருடைய திருவருட்செயலே.

 

 

பொழிப்புரை

 

 

         என் நெஞ்சக் கல்லிலிருந்து நார் உரிப்பது போல அன்பை வருவித்து அதனைக் கசியச் செய்த அரசே!

 

         என் செவியிலே நல்ல அமுதம் போன்ற உபதேச மொழியை அருளிச்செய்த குருநாதரே!

 

         அறிவு நூல்களைக் கல்லாதவருடைய மனத்தில் தங்காத திருவுள்ளம் உடையவரே!

 

         கண்ணாடிபோல் தூய தண்ணீர் உடைய தடாகத்தை வேலால் உண்டாக்கியவரே!

 

         தேவர் முதலியோர்க்குத் தலைமை பெற்று விளங்கிய தக்கனை முன்னொருநாள் அவனது மகுடம் அணிந்த தலையை கொடிய வாலினால் வெட்டிய பொன்னார் மேனியராகிய சிவபிரானுக்கும் தலைவரே!

 

         குறத்தியாகி வள்ளிப் பிராட்டின் கணவரே!

 

         வயலூர் என்னும் திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி உள்ள தலைவரே!

 

         பிரமன், திருமால், சிவன் ஆகிய மும்மூர்த்திகளுக்கும் ஒப்பற்ற தலைவரே!

 

         விரும்பிய வண்ணம் பிறக்கவும்,  நினைத்தவுடன் இறந்து போகவும், உம்மைத் துதிப்பதற்கும், அடியேன் கண்கொண்டு மற்றவரை நான் குறிப்பாக அழைப்பதற்கும்,  என் செயலால் என் கால்கொண்டு நான் நடப்பதற்கும், என் திறம் கொண்டு நான் ஓரிடத்தில் சும்மா இருப்பதற்கும், மாதர், வீடு இவற்றை நான் இன்புற்று சுகிப்பதற்கும், அடியேனால் அவர்கள் இளைக்கவும், இது போதும் என அலுப்புடன் நான் சலிப்பு அடைவதற்கும், வினையின் வசமாக வரும் நோய்களைப் பொசுக்குவதற்கும், இங்கு ஒன்றை நினைப்பதற்கும், ஒன்றைத் தாங்கிக் கொள்வதற்கும், இங்கே நான் யார்? (எனக்கு என்ன சுதந்திரம் உண்டு?) எல்லாம் தேவரீருடைய திருவருட்செயலே.

 

 

விரிவுரை

 

 

என்னால் பிறக்கவும் ---

 

ஆன்மாக்களின் சுதந்திரம் இன்மையை இத் திருப்புகழ்ப் பாடல் விளக்குகின்றது. எந்த எந்த உயிர்கள் என்ன என்ன வினைகளைப் புரிந்தனவோ, அந்த அந்த வினைகளுக்குத் தக்கவாறு இறைவன் பிறக்க வைக்கின்றான். நம் விருப்பம்போல் பிறவி எடுக்க இயலாது. விருப்பம்போல் உயிர்கள் தாமே பிறக்கலாம் என்னில், எல்லா உயிர்களும் அரசன் வீட்டிலும், பெருந் தனவந்தன் வீட்டிலுமே அன்றோ பிறக்க விழையும். அப்படிப் பிறக்குமானால், அரசனுக்கு நாள்தோறும் பல்லாயிரம் மக்கள் பிறக்க நேரிடும். அரசனுக்கும் தனவந்தனுக்கும் பெரும்பாலும் மக்கட்பேறு இன்மையே கண்கூடு.

 

ஒரு நாடக மேடையில் அவரவர் வாங்கிய நுழைவுச் சீட்டின் உயர்வு தாழ்வுக்கு ஏற்றவாறு நுழைந்து உயர்வும் தாழ்வுமான இடங்களில் அமர்கின்றனர். அதேபோல், உலகமாகிய நாடகமேடையில் அவரவர்கள் செய்த புண்ணிய பாவங்களுக்குத் தக்கவாறே ஆன்மாக்களை ஆண்டவன் பிறப்பித்து இன்ப துன்பங்களை நுகருமாறு புரிகின்றனன்.

 

ஆட்டுவித்தால் ஆர்ஒருவர் ஆடா தாரே;

    அடக்குவித்தால் ஆர்ஒருவர் அடங்கா தாரே;

ஓட்டுவித்தால் ஆர்ஒருவர் ஓடா தாரே;

    உருகு வித்தால் ஆர்ஒருவர் உருகா தாரே;

பாட்டுவித்தால் ஆர்ஒருவர் பாடா தாரே;

    பணிவித்தால் ஆர்ஒருவர் பணியா தாரே;

காட்டுவித்தால் ஆர்ஒருவர் காணா தாரே

    காண்பார்ஆர் கண்ணுதலாய் காட்டாக் காலே. --- அப்பர்.

 

ஊட்டுவிப்பானும், உறக்குவிப்பானும், இங்குஒன்றோடு ஒன்றை

மூட்டுவிப்பானும், முயங்குவிப்பானும், முயன்ற வினை

கூட்டுவிப்பானும், இருவினைப் பாசக் கயிற்றின்வழி

ஆட்டுவிப்பானும் ஒருவன்உண்டே தில்லை அம்பலத்தே.   ---  பட்டினத்தார்.

 

பாட்டுவித்தால் பாடுகின்றேன்; பணிவித்தால்

     பணிகின்றேன்; பதியே! நின்னைக்

கூட்டுவித்தால் கூடுகின்றேன்; குழைவித்தால்

     குழைகின்றேன்; குறித்த ஊணை

ஊட்டுவித்தால் உண்கின்றேன்; உறக்குவித்தால்

     உறங்குகின்றேன்; உறங்காது என்றும்

ஆட்டுவித்தால் ஆடுகின்றேன்; அந்தோ! இச்

     சிறியேனால் ஆவது என்னே.

 

உடுப்பவனும் உண்பவனும் நானேஎன்

     னவும்நாணம் உறுவது, எந்தாய்!

தடுப்பவனும் தடைதீர்த்துக் கொடுப்பவனும்

     பிறப்பிறப்புத் தன்னை நீக்கி

எடுப்பவனும் காப்பவனும் இன்பஅனு

     பவஉருவாய் என்னுள் ஓங்கி

அடுப்பவனும் நீஎன்றால், அந்தோ! இச்

     சிறியேனால் ஆவது என்னே.                     --- திருவருட்பா.

 

என்னால் இறக்கவும் ---

 

விருப்பம் போல் பிறப்பதற்குத்தான் இயலாது. இறப்பதும் கூட ஆன்மாவின் விருப்பப்படி ஏலாது. இறப்பும் நம் வசத்தில் இல்லை. இந்த உடம்பு முகந்துகொண்ட வினைகளைத் துய்த்து முடிந்தால்தான் மரணம் எய்தும். வினையின் துய்ப்பு முடிந்து விட்டால் ஒரு கணம் கூட இவ்வுடம்பு நில்லாது. "வினைப் போகமே ஒரு தேகம் கண்டாய், வினைதான் ஒழிந்தால் தினைப் போதளவும் நில்லாது" என்பார் பட்டினத்து அடிகளார்.

 

ஒருவன் ஏதோ துன்பம் காரணமாக உயிர்விடத் துணிந்தான்.  ஒன்றிலிருந்து தப்பினால் மற்றொன்றில் மரணம் வரவேண்டும் என்று கருதினான். ஐந்து வகையான கருமங்களை மேற்கொண்டான். (1) கடற்கரை ஓரத்திலே கடல்புறமாகச் சாய்ந்துள்ள மரத்தின்மீது ஏறி கழுத்தில் சுருக்கிட்டுக் கொண்டான்;  (2) நஞ்சையும் அருந்திக் கொண்டான்;   (3) மண்ணெண்ணெயால் உடம்பை நனைத்துத் தீ வைத்துக் கொண்டான்;  (4) கைத் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டான்;  (5) ஒரு வேளை கடலில் வீழ்ந்தாலும் கடலால் மரணம் வரட்டும் என்று கருதினான். இந்த ஐந்தினின்றும் மரணம் வராமல் தப்பிக் கரையேறினான். எப்படி என்று பார்க்கலாம். கைத்துப்பாக்கியால் சுட்டுக்கொண்ட போது, நஞ்சின் வேகத்தால் சிறிது மயங்கி இருந்தபடியால் குறி தவறி சுருக்கிட்ட கயிற்றில் குண்டு பட்டது. அதனால் கயிறு அறுந்து கடலில் வீழ்ந்தான். சுருக்கிட்டு மாளக் கருதியதும், கைத் துப்பாக்கியால் மாளக் கருதியதும் நிறைவேறவில்லை. மூன்றாவது, கடலில் வீழ்ந்தபடியால், எண்ணெயால் உடம்பு எரியாமல் கடல் நீரில் அவிந்து விட்டது. நான்காவது, கடல் நீரில் அலையினால் மோதப்பட்டு உவர் நீரைப் பருகி திக்குமுக்காடி வாந்தி எடுக்க, நஞ்சு வெளிப்பட்டது. ஐந்தாவது, கடல் அலை அவனை உயிருடன் கரையில் ஒதுக்கி விட்டது. ஆதலின், இறப்பும் பிறப்பும் வினையின் விளைவினால் வருமே அன்றி, விருப்பம் போல் வாரா.

 

என்னால் துதிக்கவும் ---

 

"அவன் அருளாலே அவன் தாள் வணங்கி" என்ற திருவாக்கின்படி, இறைவனைத் துதிக்க வேண்டுமானாலும், இறைவனருள் துணை புரிதல் வேண்டும். நம் முனைப்பினால் துதிக்கவும் இயலாது.

 

ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடா தாரே,

    அடக்குவித்தால் ஆரொருவர் அடங்கா தாரே,

ஓட்டுவித்தால் ஆரொருவர் ஓடா தாரே,

    உருகு வித்தால் ஆரொருவர் உருகா தாரே,

பாட்டுவித்தால் ஆரொருவர் பாடா தாரே,

    பணிவித்தால் ஆரொருவர் பணியா தாரே,

காட்டுவித்தால் ஆரொருவர் காணா தாரே,

    காண்பாரார் கண்ணுதலாய் காட்டாக் காலே.    --- அப்பர்.

 

பாட்டுவித்தால் பாடுகின்றேன், பணிவித்தால்

    பணிகின்றேன், பதியே! நின்னைக்

கூட்டுவித்தால் கூடுகின்றேன், குழைவித்தால்

    குழைகின்றேன், குறித்த ஊணை

ஊட்டுவித்தால் உண்கின்றேன், உறக்குவித்தால்

    உறங்குகின்றேன், உறங்காது என்றும்

ஆட்டுவித்தால் ஆடுகின்றேன், அந்தோ,இச்

    சிறியேனால் ஆவது என்னே.         ---  திருவருட்பா.

 

கண்களாலே என்னால் அழைக்கவும் ---

 

ஒருவரைக் கண்களால் குறிப்புக் காட்டி அழைப்பதும் இறைவன் அருள் அன்றி நிகழாது. ஒவ்வொரு இமையும் அவன் அருளாலேயே நிகழ்கின்றது. அவன் அருள் அன்றி இமைக்கவும் இயலாது.

 

என்னால் நடக்கவும் ---

 

நடந்து செல்வதும் அவன் அருளாலேயே. நடக்கும் கால் எத்துணை பேர் கால் தடுக்கி வீழ்ந்து மாள்கின்றனர். எத்துணை பேர் வழுக்கி வீழ்ந்து வருந்துகின்றனர்.

 

என்னால் இருக்கவும் ---

 

நடக்க வேண்டாம். சும்மா ஒருபுறம் இருப்பது கூட எம்மால் ஆகாது. ஒரு செயலும் இன்றி ஒருபுறம் வாளா இருக்க வேண்டமானாலும் ஐயன் அருள் துணை புரிந்தால்தான் ஆகும்.  சும்மா இருக்க மாட்டாமல் எத்தனைபேர் தவிக்கின்றனர்.  "இருந்தபடி இருங்கோள்" என்பார் அலங்காரத்தில் அடிகளார்.  "சும்மா இருக்கின்ற திறம் அரிது" என்பார் தாயுமானார். ஆதலின், செயலின்றிக் கிடப்பதற்கும் அவனருளை நாடவேண்டும்.

 

பெண்டிர், வீடு என்னால் சுகிக்கவும் ---

 

மனைவி மக்கள் முதலியோர் உண்டியினாலும் உடையினாலும் குறைவின்றி உண்டு உடுத்து இன்புற வேண்டுமானாலும் எம்பெருமான் கருணை முன்னின்று உதவ வேண்டும். இந்தக் குடும்பத்திற்குத் தலைவன் நான், இவர்களை எல்லாம் நான்தான் காப்பாற்றுகின்றேன், என்னால் இவர்கள் சுகப்படுகின்றார்கள் என்று எண்ணி இறுமாப்பு அடைதல் அறியாமை. வீடு என்றது வீட்டில் உள்ளாரைக் குறிக்கின்றது.

 

என்னால் முசிக்கவும் ---

 

மனைவி மக்கள் நம்மால் இன்புற முடியாது என்றால், துன்புறுவதும் முடியாது. ஒருவன் இன்னொருவனை ஆக்கவோ அழிக்கவோ முடியாது.

 

என்னால் சலிக்கவும் ---

 

சலித்தல் - வெறுத்துக் கொள்ளுதல். சோர்தல். ஒருவர் வெறுப்பு அடைதலும், அவர் மீது இவர் வெறுப்புக் கொள்ளுதலும் காரணமின்றி நிகழமாட்டா.

 

தொந்த நோயை என்னால் எரிக்கவும் ---

 

தொந்தம் --- பற்று. மரபுவழி.

 

தொந்தப்படுதல் --- பற்றுதல், ஒட்டுநோய் பற்றுதல்.

 

வாத பித்த சிலேத்துமங்கள் ஒன்றோடொன்று தொந்தப்பட்டு வரும் நோய்களை விலக்கிக் கொள்ளுதலும் இயலாது. மருந்தும் மருத்துவரும் தூல காரியங்களே. இறையருள் சூக்கும காரணமாக நின்று நோயை நீக்குகின்றது. மருந்தை ஆயத்தம் பண்ணி அனைவருக்கும் நோயை நீக்குவதாகக் கூறித் திரியும் மருத்துவரும் சில சமயத்தில் தீராப் பிணியினால் துன்புற்று மடிவதைக் காண்கின்றோம்.

 

என்னால் நினைக்கவும் ---

 

ஒரு பொருளை நினைக்கவும் நம்மால் இயலாது. நினைவுக்குள் நின்று ஐயன் அருள் துணைபுரிய வேண்டும். சில சமயங்களில் ஒன்றை நினைக்கும்போது அந் நினைவு அழிந்து அல்லல் உறுகின்றோம். ஒன்றை எண்ணும்போது இறைவன் கருத்துக்குள் நின்று துணை புரிவானானால் அந்த எண்ணம் செவ்வையாக நிறைவேறுகின்றது.

 

ஒன்றை நினைக்கின் அது ஒழிந்திட்டு, ஒன்று ஆகும்;

அன்றி அதுவரினும் வந்து எய்தும்; - ஒன்றை

நினையாத முன்வந்து நிற்பினும் நிற்கும்;

எனை ஆளும் ஈசன் செயல்.                      --- ஔவையார்.

 

செய்யும் செய்கையும் சிந்திக்கும் சிந்தையும்

ஐய! நின்னது என்று எண்ணும் அறிவுஇன்றி

வெய்ய காம வெகுள் மயக்கமாம்

பொய்யிலே சுழன்றேன் என்ன புன்மையே.    ---  தாயுமானார்.

 

என்னால் தரிக்கவும் ---

 

தரித்தல் - தாங்குதல். எல்லாவற்றையும் தாங்குபவன் இறைவனே.  உயிர்கள் தாங்குவதுபோல் தோன்றுமானால் அது வெறும் தோற்றமே. ஒரு கோபுரத்தைத் தாங்குவது அதன் கடைக்காலே. ஆனால் கோபுரந் தாங்கி அதைத் தாங்குவது போல் தோற்றமளிக்கின்றது. அதேபோல் தான், உயிர்களின் தன்மை. கண் எல்லாவற்றையும் காணுமானாலும், கதிரவன் ஒளி துணைபுரிந்தால் ஒழிய காணும் ஆற்றல் கண்ணுக்கு இல்லை.  அதுபோலத்தான், உயிர்களின் செயல். பரமகாரணமாக நின்று இறைவன் எல்லாவற்றையும் இயக்குகின்றனன். அதனால் இறைவனுக்கு "இயவுள்" என்றும், எல்லாவற்றையும் செலுத்துகின்றான் ஆதலின் "கடவுள்" என்றும் திருநாமங்கள் ஏற்பட்டன. "அவனன்றி ஓர் அணுவும் அசையாது" என்ற ஆன்றோர் மொழியையும் உன்னுக.

 

"என்செயல்ஆவது யாதுஒன்றும்இல்லை, இனித் தெய்வமே

உன்செயலே என்றுஉணரப் பெற்றேன், இந்தஊன் எடுத்த

பின்செய்த தீவினை யாதுஒன்றுஇல்லை, பிறப்பதற்கு

முன்செய்த தீவினையோ இங்ஙனே வந்து மூண்டதுவே".

 

என்பார் "ஓட்டுடன் பற்று இன்றி உலகைத் துறந்த செல்வப் பட்டினத்தார்".

 

இங்கு நான் ஆர் ---

 

மேலே கூறிய எல்லாச் செயல்களுக்கும் அடிமையாகிய எனக்கு என்ன உரிமை உள்ளது. எல்லாம் உன் செயலே. சுதந்தரம் இன்மையைக் குறித்து மணிவாசகப் பெருமான் மிகவும் நன்றாக விளக்குகின்றார்.

 

கூறும் நாவே முதலாகக் கூறும் கரணம் எல்லாம்நீ,

தேறும்வகை நீ, திகைப்புநீ, தீமைநன்மை முழுதும் நீ,

வேறுஓர் பரிசுஇங்கு இல்லை, மெய்ம்மை உன்னை விரித்துரைக்கில்,

தேறும்வகைஎன் சிவலோகா! திகைத்தால் தேற்ற வேண்டாவோ?.

 

கண்ணார் நுதலோய் கழல்இணைகள்

         கண்டேன் கண்கள் களிகூர

எண்ணாது இரவும் பகலும் நான்

         அவையே எண்ணும் அதுஅல்லால்

மண்மேல் யாக்கை விடுமாறும்

         வந்துஉன் கழற்கே புகுமாறும்

அண்ணா, என்னக் கடவேனோ,

         அடிமை சால அழகுஉடைத்தே.      --- திருவாசகம்.

 

குற்றம் நீ! குணங்கள் நீ! கூடல் ஆலவாயிலாய்!

சுற்றம் நீ! பிரானும் நீ! தொடர்ந்து இலங்கு சோதி நீ!

கற்ற நூல் கருத்தும் நீ! அருத்தம், இன்பம், என்று இவை

முற்றும் நீ! புகழ்ந்து முன் உரைப்பது என், முக(ம்)மனே?  ---திருஞானசம்பந்தர்.

    

எனக்குஎனச் செயல் வேறுஇலை, யாவும்இங்கு ஒருநின்

தனக்குஎனத் தகும், உடல்பொருள் ஆவியும் தந்தேன்,

மனத்தகத்து உள அழுக்கு எலாம் மாற்றி, எம்பிரான் நீ

நினைத்தது எப்படி, அப்படி அருளுதல் நீதம்.

 

எனக்குஓர் சுதந்தரம் இல்லை, அப்பா, எனக்கு எய்ப்பில் வைப்பாய்

மனக்கோது அகற்றும் பரம்பொருளே, என்னை வாழ்வித்திட

நினக்கே பரம் நின்னை நீங்காத பூரண நீள்கருணை

தனக்கே பரம் இனிச் சும்மா இருக்கத் தகும் என்றுமே.

 

அவன்அன்றி ஓர்அணுவும் அசையாது எனும்பெரிய

          ஆப்தர்மொழி ஒன்றுகண்டால்,

     அறிவுஆவது ஏது? சில அறியாமை ஏது? இவை

              அறிந்தார்கள் அறியார்கள் ஆர்?

மௌனமொடு இருந்ததுஆர்? என்போல் உடம்புஎலாம்

              வாயாய்ப் பிதற்றும் அவர்ஆர்?

     மனதுஎனவும் ஒருமாயை எங்கே இருந்துவரும்?

              வன்மையொடு இரக்கம் எங்கே?

புவனம் படைப்பதுஎன்? கர்த்தவியம் எவ்விடம்?

              பூதபே தங்கள் எவ்விடம்?

     பொய்மெய், இதம் அகிதம், மேல் வருநன்மை தீமையொடு,

              பொறைபொறா மையும் எவ்விடம்?

எவர்சிறியர்? எவர்பெரியர்? எவர்உறவர்? எவர்பகைஞர்?

              யாதும் உனை அன்றிஉண்டோ?

     இகபரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிராகி

              எங்கும் நிறைகின்ற பொருளே.      

 

என்று மிகமிக நன்றாக அனுபவித்து உரைக்கின்றனர் தத்துவஞானியாகிய தாயுமானார்.

 

நான்ஆர் ஒடுங்க? நான்ஆர் வணங்க?

     நான்ஆர் மகிழ்ந்து ...... உனை ஓத?

நான்ஆர் இரங்க? நான்ஆர் உணங்க?

     நான்ஆர் நடந்து ...... விழநான்ஆர்?...   --- (ஊனேறெலும்பு) திருப்புகழ்.

 

கல் நார் உரித்த என் மன்னா ---

 

மனதைக் கல் என்று உருவகித்தனர். "திணியான மனோ சிலை"  "நெஞ்சக் கன கல்" என்பார் அனுபூதியில்.

 

கல் போன்ற மனத்தை உருக்கி அன்பு மயமாக்கி அருணகிரியாரை ஆண்டவன் ஆட்கொண்டனர். மென்மையான மண்ணில் விளைவு ஏற்படும். இளகிய தங்கத்தில் மணிகள் பதியும். அதுபோல், உருகிய உள்ளத்தில் சிவகதி விளையும். அன்பினால் இளகிய உள்ளத்தில் சுப்ரமணி பதியும். "உருகா மனமும் சிவஞானம் உணரா அறிவும்" என்பார் வரகவி மார்க்கசகாயர்.

 

"மலர்ப்பதத்தினில் உருகவும் இனி அருள் புரிவாயே" என்று "சினத்திலத்தினை" என்று தொடங்கும் திருப்புகழில் அடிகள் கூறுவார்.

 

முருகன் குமரன் குகன் என்று மொழிந்து

உருகும் செயல் தந்து உணர்வு என்று அருள்வாய்

பொருபுங்கவரும் புவியும் பரவும்

குருபுங்கவ எண்குண பஞ்சரனே

 

என்று அடிகள் அநுபூதியில் கூறுமாறு காண்க. 

 

கல்நார் உரித்து என்ன, என்னையும் தன் கருணையினால்

பொன்ஆர் கழல்பணித்து ஆண்டபிரான் புகழ்பாடி

மின்னேர் நுடங்க்இடைச் செந்துவர்வாய் வெண்நகையீர்

தென்னாதென் னாஎன்று தெள்ளேணம் கொட்டாமோ.

 

கல்போலும் நெஞ்சம் கசிந்து உருக, கருணையினால்

நிற்பானைப் போல என் நெஞ்சினுள்ளே புகுந்து அருளி,

நல்பால்படுத்து, என்னை நாடு அறியத்தான், இங்ஙன்

சொற்பாலது ஆனவா தோணோக்கம் ஆடாமோ.

 

ஆமாறுஉன் திருவடிக்கே அகம்குழையேன் அன்புஉருகேன்

பூமாலை புனைந்துஏத்தேன் புகழ்ந்துஉரையேன் புத்தேளிர்

கோமான்நின் திருக்கோயில் தூகேன்மெழுகேன் கூத்தாடேன்

சாமாறே விரைகின்றேன் சதுராலே சார்வானே.

 

உருகிப் பெருகி உளங்குளிர முகந்துகொண்டு

பருகற்கு இனிய பரங்கருணைத் தடங்கடலை

மருவித் திகழ்தென்னன் வார்கழலே நினைந்துஅடியோம்

திருவைப் பரவிநாம் தெள்ளேணம் கொட்டாமோ.

 

எனவரும் மணிவாசகப் பாடல்களையும் எண்ணுக.

 

எனக்கு நல் கர்ணாமிர்தப் பதம் தந்த கோவே ---

 

கர்ணம் --- செவி.

 

அருணகிரிநாதருக்கு ஆறுமுகப் பெருமான் குருமூர்த்தியாக எழுந்தருளி வந்து வாக்கிறந்த வான்பொருளை அவருடைய செவியில் தெள்ளமுதமாக உபதேசித்தருளினார்.

 

எட்டிரண்டும் அறியாத என் செவியில்

எட்டிரண்டும் இதுவாம் இலிங்கம்என

எட்டிரண்டும் வெளியா மொழிந்தகுரு முருகோனே”

                                                              --- (கட்டி முண்ட) திருப்புகழ்.

 

மருளும் அறிவினன் அடிமுடி அறிகிலன்

     அருணை நகர்மிசை கருணையொடு அருளிய

     மவுன வசனமும் இருபெரு சரணமும் ...... மறவேனே

                                                               ---  (முருகுசெறி) திருப்புகழ்.

 

தேன்என்று பாகுஎன்று உவமிக்க ஒணாமொழித் தெய்வவள்ளி

கோன்அன்று எனக்கு உபதேசித்தது ஒன்றுஉண்டு, கூறவற்றோ

வான்அன்று, கால்அன்று, தீஅன்று, நீர்அன்று, மண்ணும்அன்று,

தான்அன்று நான்அன்று அசிரீரி அன்று சரீரிஅன்றே.   ---  கந்தர் அலங்காரம்.

 

என்று இவ்வண்ணம் மெய்ஞ்ஞான பண்டிதன் தனக்கு உபதேசித்த அருள் திறத்தினைப் பலப்பல இடங்களில் அடிகள் பாராட்டுகின்றனர்.

  

கல்லார் மனத்துடன் நில்லா மனத்தவ ---

 

அறிவு நூல்களைக் கல்லாதவர் உள்ளத்தில் இறைவன் இருப்பதில்லை என்றால், யாண்டும் நீக்கமற நிறைந்தவன் என்ற பரிபூரணத்துவம் எவ்வாறு பொருந்தும்?  

 

இறைவன் எங்கும் நிறைந்தவன். எனினும், கற்றவர் உள்ளத்தில் தயிரில் வெண்ணெய் போல் விளங்கித் தோன்றுவான். கல்லாதார் உள்ளத்தில் பாலில் நெய் போல் மறைந்து இருப்பான்.

 

கல்லா நெஞ்சின் நில்லான் ஈசன்,

சொல்லாதாரோடு அல்லோம்நாமே.  --- திருஞானசம்பந்தர்.

 

கல்லாதார் காட்சிக்கு அரியாய் போற்றி,

கற்றார் இடும்பை களைவாய் போற்றி.    ---  அப்பர்.

 

கல்லாதார் மனத்துஅணுகாக் கடவுள் தன்னைக்

         கற்றார்கள் உற்றுஓரும் காத லானைப்

பொல்லாத நெறிஉகந்தார் புரங்கள் மூன்றும்

         பொன்றிவிழ அன்றுபொரு சரம்தொட் டானை

நில்லாத நிணக்குரம்பைப் பிணக்கம் நீங்க

         நிறைதவத்தை அடியேற்கு நிறைவித்து என்றும்

செல்லாத செந்நெறிக்கே செல்விப் பானைச்

         செங்காட்டங் குடிஅதனிற் கண்டேன் நானே. --- அப்பர்.

 

கற்றவர் விழுங்கும் கற்பகக் கனியை     ---  திருவிசைப்பா.

 

கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ..--- (கைத்தல) திருப்புகழ்.

 

வில்லார் நுதலாய் மகளே! நீ

    மேலை நாட்செய் தவம்எதுவோ?

கல்லார் உள்ளம் கலவாதார்;

    காமன் எரியக் கண்விழித்தார்;

வில்லார் விசையற்கு அருள்புரிந்தார்;

    விளங்கும் ஒற்றி மேவிநின்றார்;

கொல்லா நெறியார் அவர்தம்மைக்

     கூடி உடலம் குளிர்ந்தனையே.       ---  திருவருட்பா.

 

அதனால், அறிவு நூல்களைக் கற்று, அதன் வண்ணம் நின்று ஒழுகுதல் வேண்டும். கல்லாது இருத்தல் ஒரு பெரும் பிழை என்பார் பட்டினத்தடிகள். பிழைகளுக்கெல்லாம் அது முதல் பிழை எனக் குறிப்பிடுவாராகி....

 

கல்லாப் பிழையும், கருதாப் பிழையும், கசிந்துஉருகி

நில்லாப் பிழையும், நினையாப் பிழையும், நின்அஞ்செழுத்தை

சொல்லாப் பிழையும், துதியாப் பிழையும், தொழாப் பிழையும்

எல்லாப் பிழையும் பொறுத்துஅருள்வாய் கச்சி ஏகம்பனே.

 

என்பார் பட்டினத்தடிகள்.

 

கண்ணாடியில் தடம் கண்ட வேலா ---

 

முருகப் பெருமான் சிவபெருமானை வழிபடும் பொருட்டு வயலூரில் தமது திருக்கையில் விளங்கும் வேலாயுதத்தினால் ஒரு தடாகத்தை உண்டாக்கினார். அந்தத் தீர்த்த்திற்குச் சத்தி தீர்த்தம் என்று பெயர். இன்றும் அது மிகவும் அழகாக விளங்குகின்றது. அத் தீர்த்தம் பளிங்கு போல் மிகவும் பரிசுத்தமானது.

 

திருமுருகன்பூண்டியிலும் முருகவேள் சிவபிரானைப் பூசிக்கும் பொருட்டு, திருக்குளம் ஒன்றை வேலாயுதத்தினால் ஊண்டாக்கி அருளினார்.

 

மன்னான தக்கனை.......  தங்கரூபன் ---

 

தங்கரூபன் --- பொன்னார் மேனியன் ஆகிய சிவபெருமான்.

 

எல்லாம் சிவன் செயல் என்பதனை மறந்தவன் தக்கன். எல்லாம் தன் செயலே என்று தருக்கினான். சிவனை மறந்தான். அருள் துறந்தான்.

 

பிரமதேவருடைய மகன் தக்கன். சிவபெருமானை வேண்டி மாபெரும் தவம் செய்து அளவற்ற திருவும் தலைமையும் பெற்றான். ஆனால், வாழ்வில் மயங்கினான். சிவபெருமானை நிந்தித்தான். சிவபரம் பொருளை மதியாது வேள்வியைச் செய்யலானான். வேதங்களும் ததீசி முனிவர் முதலியோரும் கூறிய அருள்மொழிகளையும் கேட்டு உய்ந்தானில்லை. அதனால், வீரபத்திர தேவரால் அழிந்தனன். சிவபெருமானா பரம்பொருள் என்று தலையை ஆட்டினான். 

 

தக்கன் தவம் செய்து, உமையை மகளாகப் பெற்றுச் சிவபிரானுக்குக் கொடுத்துப் பின்பு செருக்கினால், அப்பெருமானை இகழ்ந்து ஒரு வேள்வி இயற்றினான். அதற்கு அவரைத் தவிரப் பிற தேவர்களை அழைத்தான். தாட்சாயணியாகிய தன் மகளையும் அழைத்தான் இல்லை. எனினும், தந்தை செய்யும் வேள்விக்குப் போக வேண்டும் என்று வந்த தேவியை அலட்சியம் செய்தான். சிவபிரான் வெகுண்டு வீரபத்திரரை ஏவி, சந்திரன் முதலிய தேவர்களை ஒறுத்து, தக்கனது தலையைக் கொய்வித்தான். தக்கன் செய்த பெருவேள்வி தீமையாய் முடிந்தது

 

சந்திரனைத் தேய்த்து அருளி, தக்கன்தன் வேள்வியினில்,

இந்திரனைத் தோள்நெரித்திட்டு, எச்சன் தலைஅரிந்து,

அந்தரமே செல்லும் அலர்கதிரோன் பல்தகர்த்து,

சிந்தித் திசைதிசையே தேவர்களை ஓட்டுகந்த

செந்தார்ப் பொழில்புடைசூழ் தென்னன் பெருந்துறையான்

மந்தார மாலையே பாடுதுங்காண் அம்மானாய். --- திருவாசகம்.

 

சாடிய வேள்வி சரிந்திடத் தேவர்கள்

ஓடிய வாபாடி உந்தீபற

உருந்திர நாதனுக்கு உந்தீபற.

 

ஆவா திருமால் அவிப்பாகங் கொண்டு, அன்று

சாவாது இருந்தான் என்று உந்தீபற

சதுர்முகன் தாதை என்று உந்தீபற.

 

வெய்யவன் அங்கி விழுங்கத் திரட்டிய

கையைத் தறித்தான் என்று உந்தீபற

கலங்கிற்று வேள்வி என்று உந்தீபற.

 

பார்ப்பதியைப் பகை சாற்றிய தக்கனைப்

பார்ப்பது என்னே, ஏடி, உந்தீபற

பணைமுலை பாகனுக்கு உந்தீபற.

 

புரந்தரனார் ஒரு பூங்குயில் ஆகி

மரந்தனில் ஏறினார் உந்தீபற

வானவர் கோன் என்றே உந்தீபற.

 

வெஞ்சின வேள்வி வியாத்திர னார்தலை

துஞ்சின வாபாடி உந்தீபற

தொடர்ந்த பிறப்பு அற உந்தீபற.

 

ஆட்டின் தலையை விதிக்குத் தலையாகக்

கூட்டிய வாபாடி உந்தீபற

கொங்கை குலுங்க நின்று உந்தீபற.

 

உண்ணப் புகுந்த பகன் ஒளித்து ஓடாமே

கண்ணைப் பறித்தவாறு உந்தீபற

கருக்கெட நாம் எல்லாம் உந்தீபற.

 

நாமகள் நாசி சிரம் பிரமன்படச்

சோமன் முகம் நெரித்து உந்தீபற

தொல்லை வினைகெட உந்தீபற.

 

நான்மறை யோனும் மகத்து இயமான் படப்

போம்வழி தேடுமாறு உந்தீபற

புரந்தரன் வேள்வியில் உந்தீபற.

 

சூரிய னார்தொண்டை வாயினில் பற்களை

வாரி நெரித்தவாறு உந்தீபற

மயங்கிற்று வேள்வி என்று உந்தீபற.

 

தக்கனார் அன்றே தலை இழந்தார், தக்கன்

மக்களைச் சூழ நின்று உந்தீபற

மடிந்தது வேள்வி என்று உந்தீபற.          --- திருவாசகம்.

 

பண்டுஓர் நாள்இகழ் வான்பழித் தக்கனார்

கொண்ட வேள்விக் குமண்டை அதுகெடத்

தண்ட மாவிதா தாவின் தலைகொண்ட

செண்டர் போல்திரு நாகேச் சரவரே.       ---  அப்பர்.

 

தக்கனது பெருவேள்விச் சந்திரன்இந்

         திரன்எச்சன் அருக்கன் அங்கி

மிக்க விதா தாவினொடும் விதிவழியே

         தண்டித்த விமலர்கோயில்

கொக்குஇனிய கொழும்வருக்கை கதலிகமுகு

         உயர்தெங்கின் குலைகொள்சோலை

முக்கனியின் சாறுஒழுகிச் சேறுஉலரா

         நீள்வயல்சூழ் முதுகுன்றமே. ---  திருஞானசம்பந்தர்.

 

மலைமகள் தனைஇகழ்வு அதுசெய்த

         மதிஅறு சிறுமன வனதுயர்

தலையினொடு அழல்உரு வனகரம்

         அறமுனி வுசெய்தவன் உறைபதி

கலைநில வியபுல வர்கள்இடர்

         களைதரு கொடைபயில் பவர்மிகு

சிலைமலி மதிள்புடை தழுவிய

         திகழ்பொழில் வளர்திரு மிழலையே. ---  திருஞானசம்பந்தர்.

 

கொண்டாடுதல் புரியாவரு தக்கன்பெரு வேள்வி

செண்டுஆடுதல் புரிந்தான்திருச் சுழியல்பெரு மானைக்

குண்டுஆடிய சமண்ஆதர்கள் குடைச்சாக்கியர் அறியா

மிண்டுஆடிய அதுசெய்தது ஆனால்வரு விதியே. ---  சுந்தரர்.

 

இனி, பின்வரும் திருப்புகழில், சுவாமிகள் ஓர் உண்மையை உறைக்கின்றார். ஐம்முகச் சிவனும், ஆறுமுகனும் வேறு இல்லை. அதனால், தக்கனது வேள்வியை அழித்தவர் முருகப் பெருமான் என்கின்றார்.

 

வேகம் உண்டாகி உமை சாற்றும் அளவினில்

     மாமகம் கூரும் அது தீர்க்க, வடிவு உடை

     வீரன் என்பான் ஒரு பராக்ரன் என வர,......அன்றுசோமன்

மேனியும் தேய, கதிர் தோற்ற எயிறு உக,

     ஆன் உகும் தீ கை அற, சேட்ட விதிதலை

     வீழ, நல் பாரதியும் மூக்கு நழுவிட, ...... வந்த மாயன்

 

ஏக, நின்று ஆகி அமர் தோற்று வதறிட,

     வேக உங்காரமொடு ஆர்க்க, அலகைகள்

     ஏறி வென்று ஆடுகளம் நீக்கி, முநிவரர் .....வந்துசேய்என்று

ஈச நண்பான புருஷார்த்த தெரிசனை

     தா எனும் கேள்வி நெறி கீர்த்தி மருவிய

     ராசகெம்பீர வளநாட்டு மலைவளர் ...... தம்பிரானே.

 

வயல் பதி ---

 

வயலூர் என்னும் திருத்தலம், திருச்சிராப்பள்ளியில் இருந்து 11 கி. மீ. தொலைவில் உள்ளது. அருணகிரிநாதருக்கு முருகபெருமான் காட்சி தந்து அவருடைய நாவிலே தன் வேலினால் "ஓம்" என்று எழுதி, திருப்புகழ் பாட அருளிய திருத்தலம். அக்கினிதேவன், வணங்கிய தலம்.இத்தலத்தில் வள்ளி தெய்வானை சமேதராக சுப்ரமணிய சுவாமி அருள்புரிவதால் இத்தலத்தில் திருமணம் செய்து கொள்வது சிறப்பாகும். குழந்தைகளின் தோஷங்களை நிவர்த்திக்கும் தலமாகும் சோழர் காலத்திய கல்வெட்டுகள் திருகோவிலின் பழமைக்கு சான்றாகும். முருகன் தன் வேலால் உருவாக்கப்பட்ட சக்தி தீர்த்தம் எனும் அழகு நிறைந்த திருக்குளம் திருக்கோயிலின் முன்புறம் அமைந்துள்ளது.

 

வயலூர் அருணகிரிநாதருக்கு திருவருள் கிடைத்த இடம் என்பதால், அவருக்கு எல்லையற்ற அன்பு இத் திருத்தலத்தில் உண்டு. எங்கெங்கு சென்று எம்பிரானைப் பாடினாலும், அங்கங்கே வயலூரை நினைந்து உருகுவார். வயலூரா வயலூரா என்று வாழ்த்துவார். வயலூரை ஒருபோதும் மறவார்.

 

வயலூரில் எம்பெருமான் மிகவும் வரதராக விளங்கி, வேண்டுவார் வேண்டுவன யாவும் வெறாது உதவுவார்.

 

மூவர்க்கு ஒரு தம்பிரானே ---

 

முருகனே மூவர்க்கும் தலைவராம் முழுமுதல். மூவருக்கும் முத்தொழிலும் தந்து அவர்கள் அச்சத்தை அகற்றி ஆளும் அண்ணலும் அவரே.

 

படைத்துஅளித்து அழிக்கும் த்ரிமூர்த்திகள் தம்பிரானே”  --- (கனைத்த) திருப்புகழ்.

 

படைக்கப் பங்கயன் துடைக்கச் சங்கரன்

      புரக்கக் கஞ்சைமன் பணியாகப்

   பணித்துத் தம்பயந் தணித்துச் சந்ததம்

      பரத்தைக் கொண்டிடுந் தனிவேலா”   --- (தடக்கைப்) திருப்புகழ்.

 

அரிபிரம புரந்தராதியர்    தம்பிரானே. ---  (கடல்பரவு) திருப்புகழ்.

 

சிலைமகள் நாயன், கலைமகள் நாயன்,

     திருமகள் நாயன் ...... தொழும் வேலா!  --- (கலைமடவார்) திருப்புகழ்.

 

திருத்தணிகையில் அயன் அரி அரன் என்ற மும்மூர்த்திகளும் முருகவேளை வழிபட்டார்கள்.

 

திருத்தணிகையில் சிவபெருமான் முருகரைத் தியானித்து உபதேசம் பெற்றனர். அந்த “வீராட்டகாசர்” ஆலயம் தணிகைக்கு அருகில் ஓடும் நந்தியாற்றுக்கு வடகரையில் உள்ளது. உபதேசித்த சாமிநாதர் ஆலயம் நந்தியின் தென்கரையில் உள்ளது.

 

திருமால் முருகரை வழபட்டுத் தாரகாசுரனால் கவரப்பட்ட சக்கராயுதத்தைப் பெற்றார். விஷ்ணு தீர்த்தம் திருக்கோயிலுக்கு மேற்கே, அர்ச்சகர்களின் வீடுகளின் எதிரில் உளது.

 

பிரமதேவர் முருகரை வழிபட்டு சிருட்டித் தொழிலின் வன்மையைப் பெற்றனர். மலைமீது ஏறப்போகும் வழியில் பாதி தொலைவில், பிரமசுனையும் பிரமேசர் ஆலயமும் உள்ளன.

 

கருத்துரை

 

முருகா! குருமூர்த்தியே, அடியேனுக்கு ஒரு உரிமையும் இல்லை.  எல்லாம் உமது உடைமை. எல்லாம் உமது செயல்.


1 comment:

  1. அருமையான விளக்கம். எல்லாம் முருகன் அருள். தங்களின் இந்த முயற்சிக்குக் கோடான கோடி நன்றி.

    ReplyDelete

பொது --- 1091. கருதியே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கருதியே மெத்த (பொது) முருகா!  அடியேன் உமது திருவடிப் பெருமையையே பேசுமாறு அருள் புரிவாயாக. தனதனா தத்த தனத...