உடன் பிறப்புக்கு இலக்கணம்

 

நம்பியும், தம்பியும் --- உடன் பிறப்புக்கு இலக்கணம்

-----

 

ஆடவரில் சிறந்தவன் "நம்பி" எனப்படுவான்.

 

பரதாழ்வாரை, "படியில் குலத்து பரத நம்பி"  என்றார் ஆழ்வார்.

 

படி இல் குலம் = ஒப்பு இல்லாத குலம்.

 

பரதனைத் தொலைவில் கண்ட குகப் பெருமாள், அவனை இன்னான் என்று அறிந்திராத போதும், அவனது தவக் கோலத்தையும், தளர்ந்த நடையையும் வைத்தே, அவன் தனது  தலைவனான இராமபிரானைப் போல் இருக்கின்றான் என்பதைக் உள்ளத்தில் உணர்ந்து, "நம்பியும் என் நாயகனை ஒக்கின்றான்"  என்றான்.

 

"நம்பி" என்றது பரதனைத் தொலைவில் கண்ட குகன் கூற்று.

 

அண்ணன் ஆளவேண்டிய அரசபோகம் தனக்கு வந்த போதும், அதைக் கொள்வது பாவம் என்று வெறுத்த உத்தமன் பரதன். "தாய் உரை கேட்டு, தாதை உதவிய தரணி தன்னை, தீவினை என்ன நீத்தவர்" பரதாழ்வார்.

 

கிடைத்ததே போதும் என்று  மகிழாமல்,  தன் முன்னவன் ஆகிய இராமனுக்கு உரிமை ஆக வேண்டியது, தனக்கு வேண்டாம் என்று மறுத்ததால், ஆடவரில் சிறந்தவர் - நம்பி ஆனார்.

 

அண்ணன் என்பவன் தந்தை, ஆசான் ஆகியோரோடு வைத்து   மதிக்கத் தக்கவன் என்று "ஆசாரக் கோவை" கூறும். இலக்குவனும் தனது தந்தை தசரதன் உயிர் நீத்த பின், தனக்குத் தந்தையும் எல்லாமுமாக இராமனைக் கொண்டு, அவன் வழி நின்று, அவனோடு மரவுரி தாங்கி, கானகம் சென்றான்.

 

"தம்பி" என்பவன், தந்தை, குருவுக்கு ஒப்பான தனது முன்னவன் வழி நிற்பவன்.

 

இராமனோடு காட்டிற்கு உற்ற துணையாக வந்தவர் இளையாழ்வார் ஆகிய இலட்சுமணப் பெருமாள்.

 

அதுபோலவே, சத்துருக்கனும் பரதனுக்கு உற்ற துணையாக  விளங்கினான்.  தவக் கோலம் பூண்டு,  பரதனுக்கு அருகில் வந்துகொண்டிருந்த சத்துருக்கனனை இன்னான் அறிந்திராத குகப் பெருமாள், "அயல் நின்றான் தம்பியையும் ஒக்கின்றான்" என்றார்.

 

பரதனுடைய அசைக்க முடியாத கருத்து, ஒப்பற்ற தலைவனாகிய இராமனுக்குப் பின் பிறந்தவர்கள், அவனைப் போலவே குற்றமற்ற குணத்தோடு விளக்குவார்கள் என்பது. எனவே, பரதனையும் அவன் தம்பியாகிய சத்துருக்கனனையும் தொலைவில் கண்டு கோபம் கொண்ட குகப் பெருமாள், அவர்களை அண்மையில் கண்டதும், தனது கருத்தை மாற்றிக் கொண்டு, பின்வருமாறு கூறுகின்றான்.

 

"நம்பியும் என் நாயகனை ஒக்கின்றான், அயல் நின்றான்,

தம்பியையும் ஒக்கின்றான், தவவேடம் தலைநின்றான்,

துன்பம் ஒரு முடிவு இல்லை, திசை நோக்கித் தொழுகின்றான்,

எம்பெருமான் பின் பிறந்தார் இழைப்பரோ பிழைப்பு என்றான்"

 

இராமன் வனவாசம் முடித்து உரிய நேரத்தில் வந்து, அரச பாரத்தை ஏற்கவில்லை என்றால், தீ மூட்டி அதில் விழுந்து உயிர் துறப்பதாக சபதம் பூண்டவன் பரதன்.

 

இராமன் திரும்பி வர, கொஞ்சம் காலம் தாழ்த்தது. அதனால், பரதனைக் காக்க, தனது வருகையை  விரைவாகச் சென்று அறிவிக்குமாறு தனது கணையாழியைக் கொடுத்து அனுமனை அனுப்பினார் இராமன்.

 

அந்த அவதரத்தைக் கூடப் பொறுக்காமல், பரதன் தீயை மூட்டி விட்டு, அதனை வலமாக வந்து, தனது தம்பி ஆகிய சத்துருக்கனை அழைத்து, அரச பாரத்தை ஏற்குமாறு பணித்தான்.

 

"இராமனுக்கு பின் சென்றவன் ஒரு தம்பி. அவனால் வந்த செல்வத்தை வேண்டாம் என்று வெறுத்த நீ ஒரு  தம்பி. இராமன் வனவாசம் முடித்து வரும் வரை காத்திராமல் அவசரப்பட்டு நீ தருவதை ஏற்க நானா? நான் மூவருக்கும் தம்பி இல்லையா?" என்று  ஒரு போடு போட்டான் சத்துருக்கனன்.

 

பரதன் தீயில் விழுவதைத் தடுக்க, அவனைத் தனது வயிற்றில் சுமக்காத உத்தமத் தாயாகிய கோசலை ஓடி வந்தாள். "மகனே! ஒரு  கோடி இராமர் உனக்கு ஒப்பாகார்" என்றாள்.

 

ஆக, தம்பிக்கு இலக்கணம் இலக்குவனும், சத்துருக்கனனும்.

 

நம்பிக்கு இலக்கணம் இராமனும், பரதனும்.

 

இன்பத்திலும் துன்பத்திலும் ஒன்றாய் இருப்பவர்கள் உடன்பிறப்புக்கள். மூத்தோனை மதிப்பவர்கள். இதற்கு எடுத்துக்காட்டு, இராமனும் அவன் தம்பியரும். தருமனும் அவன் தம்பியரும்.

 

இன்பம் வந்தால் உடனிருந்து,  துன்பத்தில் பங்கு கொள்ளாமல், உடைமையில் மட்டும் பங்கு கேட்பவன் பங்காளி.

 

"நம்பியும் தம்பியும்" குறித்து, இராமாயண நிகழ்வுகளை வைத்துப் பார்த்தோம். உடன்பிறப்பு எனப்படும் சகோதரர் தன்மைக்கு இலக்கணத்தை "அறப்பளீசுர சதகம்" வகுத்துள்ளதைக் காண்போம்...

 

கூடப் பிறந்தவர்க்கு எய்து துயர் தமது துயர்,

கொள் சுகம் தம் சுகம்எனக்

கொண்டு, தாம் தேடு பொருள் அவர் தேடு பொருள்,

அவர்கொள் கோதில் புகழ் தம் புகழ் எனத்,

 

தேடுற்ற அவர் நிந்தை தம் நிந்தை, தம் தவம்

தீதில் அவர் தவமாம் எனச்

சீவன் ஒன்று உடல் வேறு இவர்க்கு என்ன, ஐந்தலைச்

சீறுஅரவம் மணிவாய் தொறும்

 

கூடு உற்ற இரை எடுத்து ஓர்உடல் நிறைத்திடும்

கொள்கை போல், பிரிவு இன்றியே

கூடி வாழ்பவர் தம்மையே சகோதரர் எனக்

கூறுவதுவே தருமமாம்;

 

ஆடிச் சிவந்த செந்தாமரைப் பாதனே!

அண்ணல் எமது அருமை மதவேள்

அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

அறப்பளீ சுரதே வனே!

 

இதன் பொருள் ---

 

ஆடிச் சிவந்த செந்தாமரைப் பாதனே --- திருச்சிற்றம்பலத்திலே அனவரத ஆனந்தத் தாண்டவம் புரிந்து சிவந்த செந்தாமரை மலர்ப் பாதங்களை உடையவனே! அண்ணல் எமது அருமை மதவேள் அனுதினமும் மனதில் நினைதரு --- தலைவனாகிய எம் அரிய மதவேள் நாள்தோறும்  உள்ளத்தில் வழிபடுகின்ற, சதுரகிரி வளர் அறப்பளீசுர தேவனே --- சதுர கிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!

 

கூடப் பிறந்தவர்க்கு எய்து துயர் தமது துயர்; கொள் சுகம் தம் சுகம் என --- தன் உடன் பிறந்தவர்களுக்கு நேர்ந்த வருத்தம் தமது வருத்தம் என்றும், அவர்கள் அனுபவிக்கும் இன்பம் தமது இன்பம் என்றும்,

 

தாம் கொண்டு தேடு பொருள் அவர் தேடு பொருள், அவர்கொள் கோதுஇல் புகழ் தம்புகழ் என --- தாம் முயன்று சேர்க்கும் பொருள் அவர்கள் சேர்க்கும் பொருள் என்றும், அவர்கள் கொண்ட குற்றமற்ற புகழ் தம்முடைய புகழ் என்றும்,

 

அவர் தேடு உற்ற நிந்தை தம் நிந்தை, தம் தவம் தீதுஇல் அவர் தவமாம் என --- அவர்கள் மீது வந்த பழியானது தமக்கு வந்த பழி என்றும், தம்முடைய தவம் குற்றமற்ற

அவருடைய தவமாகும் என்றும்,

 

இவர்க்குச் சீவன் ஒன்று உடல்வேறு என்ன --- இவர்களுக்கு உயிர் ஒன்று, உடம்பு மட்டும் வேறு என்று எண்ணும்படியும்,

 

சீறு அரவம் மணி ஐந்தலை வாய் தொறும் கூடு உற்ற இரை எடுத்து ஓர் உடல் நிறைத்திடும் கொள்கைபோல் --- சீறுகின்ற பாம்மானது, மாணிக்கங்களையுடைய ஐந்து தலைகளிலும் உள்ள வாய்தோறும் கிடைத்த உணவை எடுத்து உண்கிறது, எந்த வாயில் உணவை எடுத்தாலும், உள்ளே சென்று ஓர் உடலையே நிறைக்கின்ற இயற்கை போலவும்,

 

பிரிவே இன்றி --- பிரிவு என்பதே  இல்லாமல்,

 

கூடி வாழ்பவர் தம்மையே சகோதரர் எனக் கூறுவதுவே தருமம் ஆம் --- (இன்பத்திலும் துன்பத்திலும், வாழ்விலும், தாழ்விலும்) ஒன்று கூடி வாழ்கின்றவர்களையே உடன் பிறந்தோர் என்று கூறுவது அறமாகும்.

 

சக + உதரர் = சகோதரர். உதரம் - வயிறு. ஒரு தாய் வயிற்றில் பிறந்தவர்களை உடன் பிறந்தோர் அல்லது சகோதரர் என்று சொல்லுவர். ஒரு தாயின் வயிற்றில் பிறந்து விட்டாலே சகோதரர் என்று கொள்ள முடியாது. மேற்குறித்த பண்புகள் அமைந்து இருக்க வேண்டும். இல்லாமல் போனால், அவரைப் "பங்காளி" என்றே சொல்லலாம். "சகோதரர்" என்று கொள்ள வேண்டாம்.

 

தனக்குச் சூட இருந்த மணிமுடியைத் தனது மாற்றாந் தாயின் மகனாக வந்த தம்பியாகிய பரதன் சூடிக் கொள்ள உள்ளான், தான் ஆளவேண்டிய நாட்டை, அவன் ஆளப் போகின்றான் என்பதைக் கைகேயி கூறக் கேட்டதும், அளவில்லாத ஆனந்தம் அடைந்து, "என் பின்னவன் பெற்ற செல்வம் அடியனேன் பெற்றது அன்றோ" என்று சொன்ன இராமபிரான் நல்ல அண்ணன்.

 

தனது மகன் முடிசூடவில்லை. கைகேயியின் மகன் பரதன் முடிசூடப் போகின்றான் என்பதை அறிந்த, இராம இலக்குமண, பரத, சத்துருக்கனர் ஆகிய நால்வரிடத்தும் குற்றம் இல்லாத அன்பைச் செலுத்துவதில் வேறுபாடு காட்டாத கோசலை, "மூன்று மடங்கு எல்லாரினும் மேம்பட்டு நிறைந்த குணத்தினை உடையவன்; உன்னையும்விட நல்லவன்;  கல்வி, இளமை, வீரம், குணம் முதலிய யாவற்றாலும் யாதொரு குறைவும் இல்லாதவன்" என்று பரதனைப் புகழ்ந்து இராமனிடம் கூறுகின்ற அற்புதமான அன்புள்ளம் கொண்ட தாய். தான் பெற்ற மகனை மேலாகப் போற்றுவது தாயின் குணம். காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சு". தான் பெற்ற மகன் முன்னரே, நான் பெறத ஒருவனைப் புகழ்ந்து பேசுவது அருள் உள்ளம் கொண்ட தாயின் பண்பு ஆகும்.

 

இராமன் கானகம் சொல்ல நேர்ந்ததைக் கேள்வி உற்ற இலக்குவன், யாராலும் மூட்டப்படாத காலாக்கினி போலக் கொதித்து எழுந்தான். அவனது சினத்தைத் தணித்து, அறத்தைப் பகர்ந்த இராமபிரானைப் பார்த்து, "எனக்கு நல்ல தந்தையும் நீ; ஒப்பற்ற தலைவனும் நீ; என்னை உனது வயிற்றில் பெறவில்லையானாலும், பெற்றெடுத்த தாயும் பிறர் யாரும் இல்லை, நீயே;  எல்லாவற்றையும் மற்றவர்களுக்குக் கொடுத்து  விடக் கற்றவனே! இன்று நான் உனக்கு அரசைப் பெற்றுத் தரப் போகின்றேன்" என்றான். இவன் நல்ல தம்பி.

 

நல் தாதையும் நீ; தனி நாயகம் நீ; வயிற்றில்

பெற்றாயும் நீயே; பிறர் இல்லை; பிறர்க்கு நல்கக்

கற்றாய்! இது காணுதி இன்று என, கைம்மறித்தான் -

முற்றா மதியம் மிலைந்தான் முனிந்தானை அன்னான்.

 

இலக்குவனை அமைதிப் படுத்தி,  கானகம் செல்லும் முன்னர், சுமித்திரையிடம் விடைபெற வேண்டி அவளிடம் வருகின்றான். "கானகமாக இருந்தாலும், அதுவும் எனக்கு அயோத்தியே" என்று சொல்லுகின்ற அண்ணன் இராமன் இருக்கின்ற இடமே உனக்கு இடம், அவனோடு செல்வாயாக என்று தனது மகன் இலக்குவனைப் பணிக்கின்றாள் சுமித்திரை. அத்தோடு நில்லாமல் மரவுரியைத் தனது மகனாகிய இலக்குவனுக்குத் தந்து மேலும் அறிவுரை கூறுகின்றாள்.

 

மகனே! அந்தக் காடு நீ செல்லத் தகாதது அல்ல. அது அயோத்தியைப் போன்றது. சிறந்த அன்பினை உடைய இராமனே இனி நமது மன்னவன். உனது அண்ணியாகிய சீதையே இனி உனக்கு உயிர்த் தாய். வனத்திற்கு நீ அவனோடு செல்வாயாக. இனிமேல் இங்கே நீ நின்று தாமதிப்பதும் குற்றம் ஆகும்" என்று சொன்னதோடு, மேலும் கூறுவாள்;  "மகனே! நீ இந்த இராமன் பின்னால் செல்வாயாக. இவன் தம்பி என்கின்ற முறையில் நடந்து கொள்ளாதே. தொண்டர்களைப் போல இருந்து இவன் இட்ட பணிகளைச் செய்;  நிலைபெற்ற அயோத்தி நகரத்துக்கு இவன் திரும்பி வருவானாயின் நீயும் வருக; இவன் அயோத்திக்கு வரமுடியாமல் போகுமானால், இவனுக்கு முன்னம் நீ  உயிரைத் துறந்துவிடு" என்று தனது கண்களில் இருந்து நீர் பெருகக் கூறினாள். இவள் நல்ல தாய். தான் பெறாதவனாகிய இராமனின் நற்பண்புகளை உணர்ந்து அவனிடத்தும் அன்பு பூண்ட நல்ல தாய் சுமித்தரை.

 

ஆகாதது அன்றால் உனக்கு -

     அவ் வனம் இவ் அயோத்தி;

மா காதல் இராமன் நம்

     மன்னவன்; வையம் ஈந்தும்

போகா உயிர்த் தாயர் நம்

     பூங்குழல் சீதை என்றே

ஏகாய்; இனி, இவ் வயின்

     நிற்றலும் ஏதம்என்றாள்.

 

பின்னும் பகர்வாள், "மகனே!

     இவன்பின் செல்; தம்பி

என்னும்படி அன்று, அடியாரினின்

     ஏவல் செய்தி;

மன்னும் நகர்க்கே இவன்

     வந்திடின், வா; அது அன்றேல்,

முன்னம் முடி" என்றனள்,

     வார் விழி சோர நின்றாள்.

 

தாயன்புக்கும், சகோதர பாசத்துக்கும் எடுத்துக் காட்டாக விளங்குகின்ற நிகழ்வுகள் இராமாயணத்தில் ஆங்காங்கே காணலாம்.

 

மக்கள் தெளிவுபெற வேண்டி, கவிச் சக்கரவர்த்தி காப்பியத்தின் ஊடு, ஆங்காங்கே காட்டிய அறிவுரைகள் அறிந்து இன்புறத் தக்கவை ஆகும்.

 

 

 

 

 

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...